KVK-8

KVK-8

 சக்தியின் வீட்டில் தரகரிடம் போனில் பேசிக்கொண்டிருந்தார் ஜானகி.
“ஒரு நல்ல வரன் வந்திருக்கும்மா, பையன் அமெரிக்கால வேலை பாத்துட்டு இப்போ இங்க புதுசா கம்பெனி தொடங்கி இருக்கான். நல்ல குடும்பம். அம்மாவும் மாமாவும் தான் இருக்காங்க. அவங்க குடும்பம் நல்லா இருந்தா போதும்ன்னு சொல்றாங்க. உங்க பொண்ணோட நல்ல குணத்துக்கு தான் ஆண்டவன் இப்படியொரு நல்ல இடத்தைக் காட்டியிருக்கான். ஐயா கிட்ட சொல்லுங்க. உங்களுக்குச் சரின்னா நான் நாளைக்கு போட்டோவும் ஜாதகமும் கொண்டு வரேன். ” தரகர் சொல்ல, 
“நான் ஐயா கிட்ட பேசிட்டு சொல்றேன்” இணைப்பைத் துண்டித்தார்.
ஸ்ரீநிவாசன் வந்ததும் அவரிடம் சொல்லக் காத்திருந்தார்.

ஆனைமலையின் அழகை ரசித்துக்கொண்டே அந்தக் கார் சென்று கொண்டிருந்தது. வழி எங்கும் பச்சைப் பசேலெனப் புல் வெளியும், வரிசையாக நடப்பட்ட மரங்களும் , நெடுந்துயர்ந்த தென்னை மரங்களும் பனை மரங்களும், தூரத்தில் தெரியும் மலைகளும் அந்தக் கிராமத்தின் அழகை மிகைப்படுத்தியது. இதமான காற்றில் அந்த வயல்கள் அசைந்தாடும் காட்சி அவர்களை நோக்கிக் கை அசைப்பது போல் இருந்தது. இத்தனை சுத்தமான காற்று கிராமங்களுக்கே உரிய சொத்து என்றே கூறலாம்.
டிரைவர் காரை ஓட்டிச்செல்ல அனைவரும் உறங்கிக்கொண்டே சென்றனர். மனோகர் மட்டும் விழித்திருந்தார். அவர் மனம் அந்த மண்ணில் அவரின் இளமைக் காலங்களை நினைவு படுத்தியது. இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத அவரது கடந்த காலம். அவருடைய தவறை எண்ணி இது நாள்வரை மன நிம்மதியின்றி தவிக்கிறார். என்றாவது ஒரு நாள் அதற்குத் தீர்வு வருமா என்பது கூட நிச்சயமில்லை.

அவர் மனமறிந்து எந்தத் தவறும் அவர் செய்ய வில்லை. ஆனாலும் அவரின் வாழ்வு ஒரு முழுமையான வாழ்வாக அவருக்குத் தோன்றவில்லை. நிறைய காரணங்கள் இருந்தது. அவற்றை நினைத்துப் பார்த்து அமர்ந்திருந்தார். கண்களில் நீர் துளிர்த்தது.
வர்ஷினி தூக்கத்தில் அழத் துவங்கினாள். பார்வதியின் மடியில் உறங்கிக்கொண்டிருந்தாள். அதானால் பார்வதி விழித்துக் கொண்டார். குழந்தையைச் சமாதானம் செய்து விட்டுத் தங்கள் ஊர் வந்ததை கவனித்தார்.
“நம்ம ஊரு வந்ததும் எழுப்பக் கூடாதாங்க?” கேட்டுக்கொண்டே மனோகரைப் பார்க்க அவர் கண்களில் நீர் கண்டு திடுக்கிட்டார்.
“ஏன் கண் கலங்கி இருக்குங்க ? மாமா நினைவு வந்துடுச்சா ? ” வருத்தமாகவே கேட்க
“இல்லை பார்வதி பழைய ஞாபகம்” உணர்ச்சியற்ற குரலில் சொன்னார்.
பார்வதிக்கு எதுவும் புரியவில்லை. அவ்வப்போது அவர் இப்படி பழைய ஞாபகம் என்று தனிமையை தேடுவதுண்டு. அப்பொழுதெல்லாம் பார்வதி அவரைத் தொந்தரவு செய்யமாட்டார்.
ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் மட்டுமே அறிந்த சில விஷயங்கள் உண்டு அதை யாரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை. அந்த நினைவுகளை அசைபோட நிச்சயம் தனிமை வேண்டும். அது கணவன் மனைவியாக இருந்தாலும் ஒரு தனிப்பட்ட இடம் அவரவர்களுக்கு நிச்சயம் தேவை. அதை மற்றவர் புரிந்து கொள்ளுதல் மிக முக்கியம். பார்வதி மனோகரை தெளிவாகப் புரிந்து வைத்திருந்தார். தனக்கு தெரியாமல் அவர் வாழ்வில் ஒரு ரகசியம் உண்டு என்பதையும் அறிவார். ஆனால் அதைப் பற்றிக் கேட்டு ஒரு நாளும் தன் கணவரை வருத்தியது இல்லை. இப்பொழுதும் அப்படித்தான்.
வீட்டின் முகப்பில் கார் நின்றது. அங்கிருந்த வேலையாட்கள் ஓடிவந்தனர். காரிலிருந்து இறங்கி தங்கள் வீட்டின் அழகை ரசித்தனர். வீட்டின் முன் பெரிய தண்ணீர் சிந்தும் தொட்டி அதைச் சுற்றிலும் நடக்கவும், கார்கள் செல்லவும் பாதை, காம்பவுண்டு சுவரை ஒட்டி வளர்ந்திருந்த மரங்களும் செடிகளும் அவர்களை வரவேற்றது. அந்தக்காலத்தில் அந்த ஊரிலேயே பெரிய பணக்காரர் மனோகரின் தந்தை தான். வீட்டை மிக பிரம்மாண்டமாகக் கட்டியிருந்தார்.
“ஐயா, அம்மா வாங்க, நல்ல இருக்கீங்களா?” பழனி என்ற ஒருவன் கேட்க
“நல்லாயிருக்கோம் பழனி, நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க ?” சிறு வயதிலிருந்தே பார்த்து வளர்ந்த பழனியிடம் கேட்டார் மனோகர்.
“ஐயா உங்க புண்ணியத்துல நல்ல இருகோம்ங்க, சின்னயா வரலீங்களா ?”
“அவன் அப்புறம் வருவான் பழனி” சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
உள்ளே நுழைந்ததும் மனோகருடைய தந்தையின் படம் பெரிதாக மாட்டப்பட்டு இருந்தது. பெரிய மீசையுடன் கம்பீரமாகக் காட்சி அளித்தார். அனால் அதைப் பார்த்ததும் மனோகருக்கு ஏனோ கோபமே வந்தது. அனைவரும் இருப்பதால் அதை மறைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
யுவராஜ் அங்குச் சித்துவின் மேனேஜரை நேரில் அழைத்துப் பேசிக்கொண்டிருந்தான்.
“நாளைக்கு ஒரு கஸ்டமர் மீட்டிங் இருக்கு சார். இப்போ முடிச்ச வொர்க்க அப்ரூவ் பண்ண வராங்க அப்படியே இன்னொரு புது ப்ராஜெக்ட் ஒன்னும் சைன் பண்றதா பேசியிருக்கு” யுவராஜின் முன்பு பவ்யமாக அமர்ந்து சொல்லிகொண்டிருந்தார்.
“புது ப்ராஜெக்ட்க்கு நீங்கக் கோட் பண்ண அமௌன்ட் எனக்கு மெயில் பண்ணுங்க அப்புறம் இனிமே சைன் பண்ற நியூ அக்ரிமென்ட் டிடைல்ஸ் எனக்கு நீங்க அனுப்பனும். இந்த விஷயத்துல உங்க மேல டவுட் வராம நடந்துகோங்க” மனதில் ஒரு திட்டமிட்டு அவரிடம் சொன்னான்.
அவருக்குச் சிறிது குற்றவுணர்வு இருந்தாலும் ஒத்துக்கொண்ட வேலையை செய்யச் சம்மதித்தார். யுவராஜ் அவரின் மனஓட்டத்தை கவனித்தான்.

“கூடவே இருந்துட்டு இப்போ துரோகம் பண்றோமேன்னு வருத்தமா இருக்கா?” ஏளன புன்னகையுடன் யுவா கேட்க
“கொஞ்சம் வருத்தமா இருக்கு சார்” முகத்தைத் தொங்க போட்டுக்கொண்டே சொன்னார்.
“துரோகம்னா எப்படி இருக்கும்ன்னு அந்தக் குடும்பம் உணரனும்” உணர்ச்சிவசப்பட்டு கத்தியவன் பின் சுதாரித்துகொண்டு
“நீங்கக் கெளம்புங்க, நான் கேட்ட டீடைல்ஸ் உடனே அனுப்புங்க ” சொல்லிவிட்டு கதிரை அழைத்தான்.
அவர் வெளியே சென்றதும் கதிர் உள்ளே வந்தான்.
“என்ன யுவா அந்த ஆளு சோகமா போறாரு ?” சோஃபாவில் அமர்ந்திருந்த யுவாவின் அருகில் சென்று அமர்ந்தான் கதிர்.
“அதெல்லாம் இல்லை. கொஞ்சம் ஃபீல் பண்றாரு. அதை விடு நம்ம வொர்க் எப்போ முடியும் , நாலு ப்ராஜெக்ட்டும் ஒன்னா நடக்குது. எதுவும் தப்பு வந்துடக் கூடாது.” சீரியஸாக சொன்னான்.
“நீ பண்றது எப்போ தாப்பாகியிருக்கு, எல்லா வொர்க்கும் ஓவர். ரிவியு பண்ணிட்டு இருக்காங்க இன்னிக்கு ஈவினிங் முடிச்சுடலாம்.” நம்பிக்கையாகச் சொன்னான்.
“குட். அப்புறம் அந்தச் சித்து பண்ணற ப்ராஜெக்ட் இப்போ நாம பண்ணனும். நாளைக்கு அவனோட வொர்க்க ரிஜெக்ட் பண்ணிடுவாங்க.” தன் லேப்டாப்பில் வேலை செய்துகொண்டே சொல்ல
“எப்படி டா அவ்ளோ கான்ஃபிடன்டா சொல்ற, அப்படியே அவன் வொர்க் ரிஜெக்ட்ஆனாலும் நம்ம கிட்ட எப்படி வருவாங்க?” புரியாமல் கேட்க
“இப்போ தான் நாம்மளோட கம்ப்லீட் ஆனா ஒரு வொக்ர் சாம்பிள் அவங்களுக்கு அனுப்பி இருக்கேன். அத பாத்து கண்டிப்பா இம்ப்ரெஸ் ஆவாங்க. சோ நமக்குக் கண்டிப்பா சான்ஸ் இருக்கு”
“அது சரி டா, அவனோடது இப்போ எப்படி ரிஜெக்ட் ஆகும்னு சொல்ற” சந்தேகம் தீராமல் கேட்டான் கதிர்.

” அவன் மேனேஜர அதுக்கு தான் கூப்பிட்டேன். ஃபைனல் டாகுமென்ட்ல கொஞ்சம் எடிட் பண்ண சொல்லிட்டேன். அவன் ப்ரெசென்ட் பண்ணும்போது தான் அதை பார்க்கப் போறான். சோ அந்த டைம் ல ஒன்னும் பண்ண முடியாது. கஸ்டமர்ஸ் ரிஜெக்ட்பண்ணிடுவாங்க” கூலாகச் சொன்னான்.
“ஹே அவன் வேற தனியா வெச்சிருந்தா என்ன பண்றது.?”
“இவரு எடிட் பண்ண போறது அவனோட காபிலயே தான். டோன்ட் வொரி டா”, சிரித்துக்கொண்டே சொன்னான்.
“வெல்டன் யுவா” பாராட்டினான் கதிர்.
“சரி டா. நான் ஒரு வேலையா வெளில போகணும். நம்ம அடுத்த ஆட் டிரஸ் பத்தி தான். சோ அம்மாவை டிசைன் பண்ண சொல்லிருக்கேன். ஆராதனாவ போய் கலக்ட் பண்ணிக்க சொல்லு”
‘அவ பேர சொல்லற அளவு வந்துட்ட ‘ , கதிர் மனதில் சிரித்துக்கொண்டான்.
“வெளில தான போற நீயே சொல்லட்டு போய்டு , நான் கொஞ்சம் சைட் ரெடி பண்ண போறேன் ” சொல்லிவிட்டு கிளம்பினான்.
யுவாவும் அவளிடம் சொல்ல வேண்டுமே என்று நினைத்து, வேலைகளை முடித்துக் கொண்டு கிளம்பினான். அவன் கதவைத் திறக்க மறுபுறம் கதவைத் தள்ளிய அராதனா நேராக அவன் மேலே வந்து விழுந்தாள். எதிர் பாராமல் இருவரும் மோதிக் கொண்டதால் கீழே விழுந்தனர். அவன் கீழே இருக்க இவள் அவன்மேல் படுத்திருந்தாள். யுவா, ஒரு பூமாலை தன் மேல் படர்ந்து இருப்பதைப் போல உணர்ந்தான். அவளை இடையை பற்ற நினைத்தாலும் அவனது ஈகோ இடம் தர வில்லை. அவளைத் தள்ளவிட நினைத்தும் அவனால் முடியவில்லை. அவளோ விழுந்த அதிர்ச்சியில் இருந்தாள். எப்படி எழுவது என்று தெரியவில்லை. முழுவதும் அவன்மேல் சரிந்து இருந்தாள். வலிமை மிகுந்த அவன் தோள்களில் அவள் முகம் இருக்க, அதனை அவள் உணர்ந்தாலும் இப்போது அதை அனுபவிக்கும் நிலையில் இல்லை. மெல்ல அவன் மார்பில் கைவைத்து எழ முயன்றாள். அவன் மார்பை தொட்டதும் உள்ளுக்குள் சிலிர்த்தாள்.

மார்பினில் நானும் மாறாமல் சேரும்                 காலம் தான் வேண்டும்                               வான்வெளி எங்கும் என் காதல் கீதம்                வாழும் நாள் வேண்டும்                                  

அங்கேயே இருக்கும் நிலை எப்போது வருமோ என்று தோன்ற, தன்னிலை உணர்ந்து அவசரமாக எழுந்தாள். இவள் எழுந்ததும் அவனும் எழுந்து நின்றான். எதுவும் சொல்லாமல் அவளை ஏற இறங்கப் பார்த்தான். அவள் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறினாள்.
சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு , “நீங்க கதவைத் திறப்பீங்கன்னு எதிர்பார்க்கல , தெரியாம.. சாரி ” , திக்கித் திணறி சொன்னாள்.
அவன் நடந்ததை சிறிதும் காட்டிக்கொள்ளாமல், “வெல், நானே உன்ன பார்க்கத் தான் வந்தேன்”.
‘தன்னைப் பார்க்க வந்தானா?’ யோசித்தாள்.

“நீங்க சொன்ன டாகுமென்ட்ஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டேன், மெயில்ஸ் ல அனுபிருக்கேன் உங்களுக்கு. அப்புறம் கரென்ட் ப்ராஜெக்ட் மாடியுல் பஃரேம் பண்ணிட்டேன். நீங்க சொன்ன வொர்க் எல்லாம் முடிஞ்சுது. ” படபடவென அவன் தந்த வேலைகளை முடித்ததை கூறினாள்.
அதைப் பார்த்து அவனுக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தது. இருந்தாலும் முகத்தைக் கடுமையாக்கிகொண்டு
“இது அடுத்த வேலை. என் அம்மா கிட்ட போய் டிசைன் பண்ண டிரஸ்சஸ் கலெக்ட் பண்ணிட்டு வரணும். அப்பறம் அதை மாடல்ஸ் கிட்ட குடுத்து செக் பண்ண சொல்லு” சொல்லிவிட்டு அவளைத் தாண்டி வெளியே சென்றான்.
‘எனக்குக் குடுக்கறதுக்குன்னே வேலைய ரெடி பண்ணுவான் போலிருக்கு. ஐயோ அவன் மேல வேற விழுந்துடேனே! என்ன நினைச்சானோ! கொஞ்சம் கூட பீஃலிங்கே இல்லாம போறான் பாரு. மரக்கட்டை! ஆனா நான் இன்னிக்கு தூங்கின மாதிரி தான்.’ மனதில் புலம்பிவிட்டு அவன் தந்த வேலையை செய்யச் சென்றாள்.
சக்தியின் வீட்டில் ஜானகி தன் கணவரிடம் சக்திக்கு வந்த வரனைப் பற்றி சொல்ல நினைத்தார். ஆனால் அருகில் சக்தியும் இருந்ததால் அவரால் அதைச் சொல்ல முடியவில்லை.
இரவு சக்தி தன் அறைக்குள் சென்றதும் கணவரை அழைத்து தரகர் சொன்ன விவரத்தைக் கூறினார். அதைக் கேட்டு ஸ்ரீநிவாசன்
“நான் விசாரிக்கறேன் ஜான். ஒரு மாசம் டைம் குடு அப்புறம் அவங்க கிட்ட பேசலாம். பொண்ணு பாக்க வந்துட்டு அதுக்கப்பறம் விசாரிக்கறது எல்லாம் சரியா வராது. முன்னாடியே தெரிஞ்சுகிட்டா ரொம்ப சௌகரியமா இருக்கும். நீ என்ன சொல்ற?”
“ஆமாங்க. நம்ம பொண்ணுக்கும் கஷ்டம் குடுக்காம எல்லாம் பாத்ததுக்கு அப்பறம் சொல்லிக்கலாம்” பெண் மனதைப் புரிந்த்துகொள்லாமல் சொன்னார்.
சக்தி தன் மனதை இவர்களிடம் சொல்லும் காலம் எப்போது வருமோ!
இவை எதுவும் தெரியாமல் அவள் சித்துவிடம் அரட்டை அடித்துக்கொண்டிருந்தாள்.
“எப்போ ஊருக்குப் போகப் போறீங்க சித்து?” குரலில் சிறிது வருத்தம் இருந்தது.
“என்ன டா அதுக்குள்ள ஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்டியா ? இன்னும் பத்து நாள் கழிச்சு தான் போவேன் அதுவும் இரண்டு நாள்ல திரும்பி வந்திடுவேன். கம்பெனி வேலை இருக்குல்ல” கொஞ்சும் குரலில் சொன்னான்.
“அப்போ கம்பெனிக்காகத் தான் இரண்டு நாள்ல வரீங்க, எனக்காக இல்லை. அப்படி தான?” கோபம் கலந்து பேச
“அப்படி இல்ல டா , நான் இங்க இருந்தாலும் வாரத்துல ஒரு நாள் தான் உன்ன பார்க்க முடியுது, மத்த நாள் எல்லாம் போன்ல தான் பேசறோம் , நான் அங்க போனாலும் உங்கிட்ட பேசுவேனே அதுனால தான் அப்படி சொன்னேன்” சமாதானம் செய்ய முயன்றான்.

“அப்படி எல்லாம் இனிமே இல்லை. எனக்கும் காலேஜ்ல ப்ராஜெக்ட் வொர்க் போகுது , அடிக்கடி வெளில போக வேண்டிய வேலை இருக்கு . சோ நாம அடிக்கடி மீட் பண்ணலாம்” ஆர்வமாக அவள் சொல்ல
“நீ சொல்றது சரி தான். ஆனா எனக்கு அப்படி முடியாதே, கம்பெனில இப்போ தான் நான் ஃபுல்லா டேக் ஓவர் பண்ற டைம் அதுனால கொஞ்சம் கஷ்டம் டா . இருந்தாலும் நான் அப்பப்ப உன்ன வந்து பாக்கறேன் சரியா” குழந்தையிடம் பேசுவது போலச் சொல்ல,
சிரித்துவிட்டு , “நான் ஒன்னும் குழந்தை இல்லை. எனக்கும் பொறுப்பு இருக்கு, உங்க வொர்க்ல நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் . ஆனா எனக்கும் நீங்க டைம் ஸ்பென்ட் பண்ணனும்”
“சரிங்க மேடம். அப்புறம் எதுக்கு எப்போ ஊருக்குப் போறேன்னு கேட்டீங்க?”
“நெக்ஸ்ட் வீக் எனக்குப் பிறந்தநாள் சித், உங்க கூட இருக்கணும்ன்னு நினச்சேன் அதுனால தான்..” வெட்கத்துடன் சொல்ல,
ஆனந்தமாக விசில் அடித்தான். “வாவ் ! என்னோட பேபி கேர்ள் அன்னிக்கு தான் எனக்காக இந்த உலகத்துக்கு வந்தாளா ! அப்போ கண்டிப்பா செலிபிரேட் பண்ணியே ஆகணும். அன்னிக்கு பூரா நீ என்கூட தான் இருக்கணும். இப்போவே உங்க அம்மா கிட்ட சொல்லிடு” அதிகாரமாக அறிவித்தான்.
“ஒரு நாள் பூராவா ! கஷ்டம் சித், அம்மா கிட்ட என்ன சொல்லுவேன்?!!” பதற்றத்துடன் கேட்டாள்.

“ஐ டோன்ட் நோ. நீ என் லைஃல வந்தப்பறம் வர்ற முதல் பிறந்தநாள் , நான் மிஸ் பண்ண மாட்டேன். சுஜா கிட்ட ஐடியா கேளு, டூ சம்திங், பட் ஜஸ்ட் ஒன் டே, நீ என்கூட இருக்கணும், இதுல நோ சேன்ஜ், டாட்.”
மறுத்துக் கூற முடியாமலும் சரி என்று சொல்ல முடியாமலும் அவள் திணற
“என் மேல நம்பிக்கை இல்லையா சகி” சிறு வருத்தத்துடன் அவன் கேட்க
“சே! ச்சே! என்னைவிட உங்களை நான் நம்பறேன் சித், நான் வரேன் ” அவன் வருந்துவதே அவளைச் சம்மதிக்க வைத்தது.
இன்னும் எதேதேதோ பேசிக்கொண்டிருக்க நேரம் போனதே தெரியவில்லை.
” ‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா’ சாங் ல வர மாதிரி உங்ககிட்ட பேசனும்ன்னு ஆசையா தான் இருக்கு இருந்தாலும் நாளைக்கு உங்களுக்கு முக்கியமான வேலை இருக்குன்னு நீங்கச் சொன்னதினால இப்போ நாம போன் வைக்கலாம் சித்” சிரித்துக்கொண்டே அவள் சொன்னாள்.
“குட் நைட், மை ட்ரீம்ஸ் ” என்று அவனும் உறங்கச்சென்றான்.
அடுத்த நாள் யுவா அவனுக்கு வைத்த டைம் பாம் வெடித்தது. நல்ல வேளையாகக் கஸ்டமர் வரும் முன்பே அவன் ஒரு முறை அவன் ரிவ்யு செய்தான். அதில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்க , உடனே மேனேஜெரை விசாரித்தான்.
அவர் உள்ளுக்குள் சிறு பயத்துடன் , தனக்கு எதுவும் தெரியாது என்று கையை விரிக்க
அவரிடம் உள்ள ஒரு ப்ரோகிராம் காபியை சித்து கேட்க, சரியாக மாட்டிக்கொண்டார்.
அவர் சித்துவின் ஃபைலில் மாற்றம் செய்தார், ஆனால் தன்னிடம் உள்ளதை மாற்ற மறந்து விட்டார்.
‘ஐயோ ! இந்த விஷயம் தெரிந்தால் யுவா என்னை என்ன செய்வானோ?’ மனதில் ஒரு மரணபயம் தோன்றியது.
“சீக்கிரம் உங்க ஃபைல காட்டுங்க” என்று அவனும் கூடவே சென்று அவர் இடத்தில் அமர்ந்து அதை ஒரு முறை பார்த்தான்.
பெருமூச்சுடன் நிம்மதி அடைந்தான். “நல்ல வேளை உங்க கிட்ட ஒரு பேக்அப் இருந்தது, இல்லன்னா ரொம்ப சிக்கலா போயிருக்கும் , தேங்க்ஸ்” சொல்லிவிட்டு அதை எடுத்துக்கொண்டே கிளம்பினான்.
இப்பொழுது இவர் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டார்.

க்லைன்ட் அவன் செய்து கொடுத்த வேலையில் திருப்தி அடைந்தனர். சித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தான். இருந்தாலும் தன்னிடம் உள்ளதை மாற்றியது யார் என்று யோசிக்க ஆரம்பித்தான்.
விரைவில் அதை அவன் அறிவானா ?!
யுவராஜின் கண்கள் கோபத்தில் சிவந்து இருந்தன. அதைப் பார்த்த கதிரே சற்று திணறித்தான் போனான். தன் அறைக்குள்ளேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.
“அந்த மேனேஜர் இப்படி சொதப்புவான்னு நினைக்கல, ஒரு சின்ன வேலைய கூடச் செய்ய முடியல அவனால, இவனப் போய் நம்பினது என்னோட தப்பு!” பல்லைக் கடித்துக் கொண்டு கத்தினான்.
“அவர் ஏதோ பதட்டத்துல மறந்துட்டேன்னு சொல்றாருல இன்னொரு சான்ஸ் குடுத்துப் பாரு யுவா” கதிர் தன் கருத்தைச் சொன்னான்.
“என்னைப் பொறுத்தவரை ஒரு வாய்ப்பை வீணடிக்கறவன், நிச்சயமா அடுத்த முறை அந்த வேலைய செய்வதற்கு நிச்சயம் பயப்படுவான்.
இவரு இப்போவே பயந்து நடுங்கறாரு. இன்னும் என்னை ரிஸ்க் எடுக்கச் சொல்றியா?”
“அப்படி இல்ல யுவா, அடுத்த முறை தவறு இல்லாம செய்யறத்துக்கும் வாய்ப்பு இருக்குன்னு சொல்லறேன்.” நண்பனுக்கு எடுத்துரைத்தான் கதிர்.
“எனக்கு நம்பிக்கை இல்லை” கடுமையாகக் கூற,
“எனக்காக ஒரு முறை ட்ரை பண்ணு யுவா” அவன் கையைப் பிடித்து சொல்ல , யுவா சற்று அமைதியானான்.
“உனக்காக ஒரு லாஸ்ட் சான்ஸ் , அடுத்த முறை நேராவே மோத நான் ரெடி” சொல்லிவிட்டு அந்த மேநேஜரை அழைத்து சில விஷயங்களைச் சொல்லிவிட்டுதான் தன் அடுத்த வேலையைப் பார்த்தான்.
மலர்மொழி தன்னுடன் வேலை பார்க்கும் பெண்களை அழைத்து புது இல்லத்தில் அழகாக அலங்காரம் செய்துகொண்டிருந்தார். ஹோமம் செய்யப் போகும் இடத்தை மேடைபோல் அமைத்து நாற்புறமும் பந்தல் கட்டி பூக்களால் தோரணம் அமைத்தனர். வீடு முழுதும் ஆங்காங்கே பூங்கொத்து வைத்து அழகு படுத்தினர். வாசலில் வாழை மரமும் மாவிலை தோரணமும் வரவேற்க்க , சந்தனம் , பன்னீர் கல்கண்டு வைத்து அருகிலேயே ஒரு டேபிள் அமைத்திருந்தனர்.
பூஜை அறையை மலர் அலங்கரித்தார். அழகாகத் துடைத்துக் கோலமிட்டு, குத்துவிளக்கில் எண்ணெய் ஊற்றி திரி போட்டு தயாராக வைத்தார்.
அன்பரசு தன் பங்கிற்கு தனக்கு தெரிந்தவர்களை அழைத்திருந்தார். அங்கு வேலை செய்து கொண்டிருந்த பெண்களுக்குப் பழச்சாறு எடுத்து வந்து கொடுத்தார்.

ரொம்ப தேங்க்ஸ் சார், எங்களுக்குப் போய் நீங்க கொண்டுவரலாமா ?” ஒரு பெண் கேட்க
“உங்கள எல்லாம் என் தங்கை வேலை செய்யும் பெண்களாகப் பார்க்லம்மா , குடும்பத்தில் ஒருத்தரா தான் நினைக்கறா. நாங்களும் ஒரு காலத்தில உங்கள மாதிரி இருந்து தான் இப்போ இந்த நிலைமைக்கு வந்திருக்கோம், உங்களோட கஷ்டம் எனக்குத் தெரியும்மா , கூச்சப் படாம சாப்பிடுங்க ” சிரித்த முகத்துடன் சொல்லிவிட்டு சென்றார்.
“ரொம்ப நல்லவங்க இல்ல ” மற்றொரு பெண் சொல்ல
” ஆமாம் டி, நம்ம மேடத்தோட பையன பாத்திருக்கியா ? ” முதலாமானவள் கேட்டாள்.
“இல்லையே! ஏன் அவரு இவங்கள மாதிரி இல்லையா?”
“அது எனக்குத் தெரியாது ஆனா ஆம்பளைன்னா அவர மாதிரி தான் இருக்கனும். அந்தப் போட்டோல பாரு ! ” மாடிப்படியின் அருகே மாட்டப்பட்டிருந்த அவன் புகைப்படத்தைக் காட்ட , மற்றவள் இமைக்கவும் மறந்தாள்.
“ஹப்பா என்ன உயரம் என்ன உடம்பு! , எடுப்பான மூக்கு, களையான முகம். கட்டிக்கப் போரவ குடுத்துவெச்சிருக்கா!!” ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.

“ஆமா டி ! எவளுக்குச் சான்சோ தெரியல” அந்த படத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தவர்கள் பின்னால் நின்ற மலரைக் கவனிக்கவில்லை.
இருவரின் காதையும் பிடித்து திருகி , “என்னங்கடி! என் பையன என் வீட்டுலையே நின்னுகிட்டு ரசிச்சுகிட்டு இருக்கீங்களா , உங்களுக்கு எவ்ளோ தைரியம் “
“மேடம் விட்ருங்க வலிக்குது ..” இருவரும் சேர்ந்து சொல்ல
“உங்க கிட்ட இருந்து என் பையன பாதுகாக்கணும் போல இருக்கே.. அவன் வந்தா தான் உங்களுக்குப் பயம் வரும். ஓடுங்க டி!” அவர்களைச் செல்லமாக விரட்டினார்.
அவர்கள் பேச்சில் தான் தரகரிடம் கேட்க மறந்தது நினைவுக்கு வர தன் பேசியில் அழைக்க நினைத்தார். அதற்குள் அன்பரசு வந்து ஐயர் வந்திருப்பதாக அழைத்தார். மறுநாள் புதுமனை புகு விழா முடிந்ததும் கேட்டுக்கொள்ளலாமென நினைத்தார்.
மறுநாள் விடிந்தது. காலையிலேயே எழுந்து கிளம்பி புது வீட்டிற்கு சென்றனர். அங்கே ஆட்களைக் கொண்டு அனைத்தும் தயார் நிலையில் வைத்திருந்தார் அன்பரசு. பூஜை செய்ய அனைத்தும் தயாராக இருந்தது. பூஜை செய்பவரை வந்து அமரச் சொல்ல, யுவா தனது தாயை அமரச் சொன்னான். மலர் மறுத்து விட்டார்.

யுவாவையே அமரச் சொல்ல வேறு வழியின்றி அவனே ஹோமத்தில் அமர்ந்தான். பட்டுவேட்டி பட்டு சட்டை அவனுக்கு மிகவும் எடுப்பாக இருந்தது. பார்ப்பவர்களை மிகவும் ஈர்த்தான். நேற்று அவர்கள் பூக்களால் அலங்கரித்த மேடையில் அமர்ந்திருந்தவனை பார்த்து பூரித்துப் போனார் மலர். தன் பெயருக்கு ஏற்றார் போலவே இருந்தான். இவனுக்கு வரப்போகும் பெண் எங்கிருக்கிறாளோ என்று மலைப்பாக உணர்ந்தார்.
கதிர் அன்று தாமதமாக வந்தான். புன்னகைத்து அவனை வரவேற்றான் யுவராஜ். அவன் அருகே சென்று
“மாப்பிள்ளை களை வந்துடுச்சு யுவா உனக்கு, இப்போ மட்டும் ஆராதனா உன்ன பார்த்தா ..” இழுத்தவன் யுவாவின் முறைப்பை பார்த்து தன் வாயை மூடிக்கொண்டான்.
எல்லாம் நல்ல படியாக முடிந்த பின் வாசலில் நின்று கதிருடன் பேசிக்கொண்டிருந்தான் யுவராஜ். அந்த ஐயர் அவன் அருகே வந்தார். அவனிடம் “அம்மா அப்பா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க” என்றார்.
சிரித்துப் பேசிக்கொண்டிருந்தவன் அந்த வார்த்தையைக் கேட்டு இருகினான். கதிர் அந்த ஐயரை பார்த்து கண்ஜாடை காட்ட , அதை அவர் பொருட்படுத்தாமல் மீண்டும் அவனிடம் “அப்பாவைக் கூப்பிடுப்பா” என்றதும்
அவ்வளவு நேரம் தன்னை பொறுமையுடன் அடக்கிகொண்டிருந்தவன் கொதித்தெழுந்தான். “நீங்க கிளம்பலாம்” ஒரு வார்த்தையில் முடித்தான்.
அவருக்கு அன்று நேரம் சரியாக இல்லை போலும்!

“நான் என்ன தப்பா சொல்லிட்டேன், வந்ததிலிருந்து உங்க அப்பாவைப் பார்க்கல , உங்க அம்மா மஞ்சள் குங்குமத்தோட தானே இருக்கா ! ஒரு வேளை டைவர்ஸ் ஆயிடுத்தோ!” அதற்கு மேலும் அவனுக்கு அவர் பேச்சைக் கேட்க இயலவில்லை.
அருகில் இருந்த டேபிளை கோபத்துடன் கையை மடக்கி ஓங்கி குத்தினான். அதில் இருந்த கல்கண்டு சந்தனம் எல்லாம் தெரித்து விழுந்தது. அவனை அந்த நிலையில் கண்டவர் பயத்துடன் சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டார்.
சத்தம் கேட்டு மலரும் அன்பரசுவும் ஓடி வர அவர்களிடம் எதுவும் சொல்ல முடியாமல் வெளியே சென்று தன் காரை எடுத்துகொண்டு வேகமாகக் கிளம்பினான்.

error: Content is protected !!