KVK-9

KVK-9

நடந்ததை அவர்களிடம் கதிர் கூற, மலர் மிகவும் வருந்தினார். அவரைப் பொறுத்தவரை அவனுக்குத் தந்தை இருந்தும் இல்லை என்றானதர்க்காக அவன் வருந்துகிறான் என்றே நினைத்தார். அவனுக்குள் அது பழிவாங்கும் எண்ணத்தை விதைத்து விட்டது என்பது அவர் அறியாத ஒன்று. அதை அறிந்தவர்கள் அன்பரசுவும் கதிரும் மட்டுமே! தன் மகனின் இந்த நிலையைச் சீர் படுத்த வழி என்ன என்று யோசனை செய்தார்.

தன்னுடைய சொந்த வீட்டில் தான் பதித்து வைத்திருந்த ஞாபக பொக்கிஷங்களை மறுபடியும் அலசிக்கொண்டிருந்தார் மனோகர். ஒரு கிழிந்த சேலையும் ஒரு தாமிரத்தால் ஆன மோதிரமும் ஒரு அழகிய மரப் பெட்டியில் பூட்டி வைக்கப் பட்டிருந்தது. தன் அறையில் தாழ் போட்டுக்கொண்டு அந்தச் சேலையை தரையில் விரித்தார். அதன் மேல் படுத்துக் கொண்டு சத்தம் இல்லாமல் கண்ணீர் சிந்தினார். தன் வாழ்வின் சுந்தர காண்டப் பகுதியை நினைத்துப் பார்த்தார்.

கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் திரும்ப கிடைக்காதது கடந்து போன காலங்கள் தான். அதை அனைவரும் ஒருமுறையாவது தங்கள் வாழ்வில் உணர்வார்கள்.

மனோகர் மிகவும் ஆனந்தமாக வாழ்ந்தது என்றால் அந்த ஆறு மாதத்தைத் தான் சொல்வார். அந்த ஆறு மாதத்தில் அவர் எல்லை இல்லா மகிழ்ச்சியை அடைந்தார். தன் வாழ்வில் அத்தனை சுகங்களையும் துக்கத்தையும் அவர் ஒருசேர அனுபவித்தது அப்போதுதான். இப்பொழுதும் அவர் அந்த நினைவுகளில் மூழ்கிப் போயிருந்தார். தன் நெஞ்சிலிருந்து இரத்தம் வடிவது போலவே உணர்ந்தார்.

குடும்பம் மனைவி மக்கள் இந்த நினைவுகளிலிருந்து வெகுதூரம் சென்று தனக்கான ஒரு உலகத்தில் இருந்தார். அந்த உணர்வில் லயித்திருப்பது ஒரு வகையில் அவருக்கு நிம்மதி அளித்தது.

சிறிது நேரத்தில் கதவு தட்டப்பட கஷ்டப்பட்டு தன்னை மீட்டெடுத்தார். மருமகன் ராஜேஷ் அவரை ஊர் மக்கள் திருவிழா விஷயமாகப் பார்க்க வந்தாதாகக் கூற அவசரமாக அனைத்தையும் மீண்டும் பெட்டியில் வைத்துவிட்டு விரைந்தார். ராஜேஷிற்கு அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என்று யூகிக்கவே முடியவில்லை. முகம் மட்டும் சோர்ந்து காணப் பட்டது.
தந்தை வருத்தத்தில் இருக்க , மகன் சித்துவோ தன் காதலியின் பிறந்தநாளை எப்படி சிறப்பாக அமைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான். முதலில் எங்குக் கூட்டி செல்வது என்று சுந்தருடன் சேர்ந்து ஆலோசனை செய்தான்.

“பேசாம என் வீட்டுக்குக் கூட்டிட்டு போய் அங்க ஒரு நாள் பூரா இருக்கலாம் டா சித்து” ஐடியா மணி போல ஐடியா குடுக்க
“அப்புறம் உன்ன அந்த வீட்ல இருந்து அடுத்த நாளே காலி பண்ண சொல்லிடுவாங்க பரவாலையா ?” அவனும் பதிலுக்குக் கேட்டான்.
“வேணாம்ப்பா நான் ரிஸ்க் எடுக்க விரும்பல” வாயை மூடிக்கொண்டான்.
“நான் வேற பிளான் வெச்சிருக்கேன். கம்பெனி கெஸ்ட்ஹவுஸ் போய்டலாம் . அங்க தான் நிம்மதியா ஒரு நாள் எந்த தொந்தரவும் இல்லாம டைம் ஸ்பென்ட் பண்ணலாம். அவள டோட்டலா இம்ப்ரெஸ் பண்ண நல்ல இடம். நீயும் சுஜாவ வரசொல்லிடு.

பாவம் சக்தி இல்லனா லோன்லியா பீல் பண்ணுவா” சக்திக்குத் துணை தேட
“ஏன் டா உங்க ஜாலிக்கு நாங்க கோலியா , நான் எதுக்கு டா அவள கூப்பிடனும். சக்திக்குத் தான பிறந்தநாள்” முறுக்கிக் கொண்டான் சுந்தர்.
“டேய்! டேய்! உன் தங்கச்சி ன்னு சொல்லுவல சக்திய இந்த ஹெல்ப் கூடச் செய்யமாட்டியா?” சுந்தரிடம் கெஞ்சலாகக்  கேட்டான்.

“தங்கச்சிக்கு அண்ணன் செய்யற காரியமாடா இது?” அவனை மேல் கண்ணால் பார்த்தான்.
“நான் என்னோமோ தப்பு பண்ண பிளான் பண்ற மாதிரி பேசற , ஜஸ்ட் அவளுக்கு ஒரு சர்ப்ரைஸ் அண்ட் அவள சந்தோஷப் படுத்தனும்ன்னு நினைக்கறேன். நான் ஜென்டில்மேன் டா” காலரை தூக்கிவிட்டு சித்து சொல்ல,

“அந்தப் படத்துல அர்ஜுன் கூடத் திருடன் தான் டா” சுந்தர்  நக்கல் செய்தான்.
“போடா ! உங்கிட்ட போய் சொன்னேன் பாரு. நான் தனியாவே வர சொல்றேன்” கோபமாகக் கிளம்பினான் சித்து..
“ஏதோ நண்பனா போய்ட்ட ஹெல்ப் பண்ணி தொல்லைக்கறேன்” அலுத்துக்கொண்டான் சுந்தர்.
சித்துவின் முகம் மலர, அடுத்த வேலையைச் செய்ய ஆரம்பித்தான். சுந்தரையும் கூடிக்கொண்டு ஒரு நகைக் கடைக்குச் சென்றான்.

பின் ஒரு பேகரியில் கேக் ஆர்டர் செய்தான். பூக்கடையில் ஒரு வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினார்கள். இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த சுந்தர்
“எனக்குப் பயமா இருக்கு, சுஜாவயும் வெச்சுகிட்டு இதெல்லாம் நீ செஞ்சா நான் தான் மாட்டப் போறேன். எனக்கு என்ன செஞ்ச ன்னு சண்டைக்கு வரப் போறா, ஆண்டவா என்னைக் காப்பாத்துப்பா. இவன் ஹீரோ ஆகறதுக்கு என்னைப் பலி கொடுக்கறானே!” புலம்பிக்கொண்டே வந்தான்.

இரவு சுந்தர் உறங்கியபிறகு, தன் அறைக்குச் சென்று வெகுநேரம் ஏதோ வேலை செய்தான். அதன் பிறகே மன நிம்மதியுடன் உறங்கினான். அவன் காதலியை ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்களைச் செய்தான்.
கண்கள் சிவக்க , கலைந்த தலையும் , மடித்து கட்டிய வேட்டியும், காலையிலிருந்து எதுவும் உண்ணாமல் களைத்துப் போய் வீடு திரும்பினான் யுவராஜ். அவனைப் பார்க்க மலருக்கு அடி வயிற்றைப் பிசைந்தது. காலையில் இருந்த யுவாவின் அழகென்ன?, இப்போது அவன் வந்து நிற்கும் நிலை என்ன?!! கதிரும் அன்பரசுவும் கூட அவனை அந்தக் கோலத்தில் பார்த்து வருந்தினர்.

அவனை உள்ளே அழைத்து வந்து சோஃபாவில் அமர வைத்தார். “எங்க போன யுவா ? ஏன் இப்படி வந்து நிக்கற ? உன்னோட இந்த நிலைமைக்கு நானும் ஒரு காரணம் தான் யுவா ” அவன் தலையைத் தடவிக் கொண்டே சொல்ல,
அவரை அமரவைத்து எதுவும் பேசாமல் அவர் மடியில் படுத்தான்.
‘நீங்க எந்த வகையிலும் காரணம் இல்லம்மா. உங்களோட நல்ல குணத்தை சிலர் சாதகமா பயன் படுத்திக்கிட்டாங்க. உங்கள நல்லா ஏமாத்திட்டாங்க’ மனதில் மருகினான்.
அன்பரசு அவனுக்கு ஒரு கிண்ணத்தில் உணவு எடுத்து வந்தார். அவன் முன் மண்டியிட்டு அதை ஒரு வாய் அவனிடம் நீட்டினார். அதைக் கண்டவுடன் அவனுக்குக் கண்ணீர் பெருகியது. வார்த்தைகள் பேசவில்லை. அவர்களின் உணர்வுகள் பேசியது. வாயைத் திறந்து காட்ட அவனுக்குச் சிறு பிள்ளைபோல் உணவை ஊட்டினார்.

அவர் எப்பொழுதும் தனக்கும் யுவாவிர்க்கும் எல்லா நேரத்திலும் துணையாக இருந்திருக்கிறார் என்ற நினைப்பே பெருக்கெடுத்து ஓட அவரின் பாசமும் அப்போது இருந்த அவர்களின் நிலைமையும் மலரை வாய் விட்டு கதற செய்தது.
மூவரும் கண்ணீரில் கரைந்தனர். இப்படியொரு பாசமும் நேசமும் கொண்ட இவர்களை வஞ்சித்தவர்களை நினைத்து யுவாவின் மனது வெதும்பியது. அவனது பழிவாங்கும் எண்ணம் கொழுந்துவிட்டு எரிந்தது.
“நாம உங்க சொந்த ஊருக்குப் போகலாமா அம்மா!?” யுவா கேட்க
மலரும் அன்பரசுவும் ஒருசேர திகைத்தனர்.

சக்தியும் சுஜாவும் மண்டையை உடைத்துக்கொண்டு யோசித்தனர். அம்மா நம்பும் படி என்ன சொல்வதென்று. யாருக்கும் சந்தேகம் வந்துவிடக் கூடாது. இதுவரை சக்தி தன் தாயிடம் பொய் சொல்லிவிட்டு வெளியே சென்றது இல்லை. அதற்கான சந்தர்ப்பம் அவளுக்கு ஏற்படவில்லை. இப்பொழுது சற்று கலக்கம் உண்டானது.

சுஜாவின் வீட்டில் கண்டுகொள்ள மாட்டார்கள். அவள் நிறைய நாள் சக்தியின் வீட்டிலேயே கூட உறங்கி இருக்கிறாள். அதனால் சக்தி வீட்டில் இருக்கிறேன் என்று சொன்னால் போதும் நம்பிவிடுவார்கள். இம்முறை சுஜா வீட்டில் சக்தி தங்கப்போவதாகச் சொல்ல முடிவெடுத்தார்கள். இருந்தாலும் பிறந்த நாள் என்பதால் இதற்குச் சம்மதிப்பார்களா என்பது தான் தயக்கம். “ப்ராஜெக்ட் வொர்க் அடுத்த வாரம் டெமோ காட்டனும்ன்னு சொல்லி பெர்மிஷன் வாங்குவோம், ஸ்டடீஸ்னா கண்டிப்பா ஒத்துப்பாங்க. நான் பேசிக்கறேன் ” தைரியம் சொல்லி அழைத்துச் சென்றாள் சுஜா.

ஜானகி உள்ளே சமையல் செய்துகொண்டிருந்தார். “ஆண்ட்டி உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்” தலையைச் சொரிந்துகொண்டு சுஜா நிற்க
“சொல்லு சுஜா , என்ன விஷயம்?”
ப்ராஜெக்ட் முக்கியமா இல்லை பிறந்தநாள் முக்கியமா நீங்களே சொல்லுங்க?” இப்போது சற்று நிமிர்வாகவே கேட்க
“என்ன கேள்வி இது படிப்பு தான் முக்கியம்” தன் வேலையைப் பார்த்துக்கொண்டே ஜானகி சொல்ல
“வெரி குட், நானும் உங்க பொண்ணும் அடுத்த வாரம் ப்ராஜெக்ட் சாம்பிள் குடுத்தாகணும். இன்னும் அதுக்கு கொஞ்சம் கூடப் பிரிப்பேர் பண்ணல. நாளைக்கு ஸ்டார்ட் பண்ணலாம்ன்னு சொன்னா , எனக்குப் பிறந்தநாள் நான் வர மாட்டேன்னு சொல்றா , நீங்களே கேளுங்க ஆண்ட்டி!” ரிவெர்ஸ் சைகாலஜியை போட்டுப் பார்த்தாள்.
அது நன்றாகவே வேலை செய்தது. ஜானகி சக்தியை அழைத்தார். அவளும் ஒன்றும் தெரியாதவள் போல வந்து நிற்க “என்னடி இது படிக்கறதுக்கு சாக்கு சொல்லிட்டு இருக்க, இது கடைசி வருஷம் கவனமா படிக்க வேண்டாமா? பிறந்தநாள் அன்னிக்கு நீ என்ன பண்ண போற? ஒழுங்கா ப்ராஜெக்ட் முடிக்கற வேலைய பாரு” கொஞ்சம் மிரட்டலாகவே சொல்ல , சக்திக்குச் சுஜாவின் வேலை சிரிப்பை வர வைத்தது.
தன் பங்கிற்கு சக்தியும் அப்பாவி வேடம் போட்டாள். “அதில்லம்மா அவ அவங்க வீட்டுக்குக் கூப்பிடறா, பிறந்தநாள் அன்னிக்கு உங்கள விட்டுட்டு எப்படி போறது” வருத்தத்தோடு சொல்ல
சற்று தயங்கினார் ஜானகி. அதைப் பார்த்த சக்தி ‘போக வேண்டான்னு சொல்லிடுவாங்களோ ‘ என மனதில் பதற, நகத்தைக் கடித்துக்கொண்டு சுஜாவை பார்த்து கண்ணால் ஜாடை காட்டினாள்.

“ஏன் டி! நான் எவ்ளோ நாள் உங்க வீட்ல தங்கியிருக்கேன். எங்க அப்பா ஊருக்குப் போறாரு, நானும் எங்க அம்மாவும் தான் தனியா இருக்கோம், அதுனால தான உன்ன கூப்பிடறேன். பாருங்க ஆண்ட்டி . நீங்களே அவகிட்ட சொலுங்க, ஒரு நாள் நைட் தான ” எனப் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.
அவள் கூறியதில் சற்று மனம் இறங்கியவர். “சரி சுஜா அவங்க அப்பா கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்றேன்” சொல்லிவிட்டு ஸ்ரீநிவாசனுக்கு அலைபேசியில் அழைக்கச் சென்றார். அவர் சென்றபிறகு இருவரும் தங்கள் கையைத் தட்டிக் கொள்ள, “இருந்தாலும் கஷ்டமா இருக்கு டி!” சக்தி சற்று இறங்கிய குரலில் சொன்னாள்.
“அப்போ சித்து கிட்ட முடியாதுன்னு சொல்றியா” இடுப்பில் கைவைத்து சுஜா கேட்க,
“வேண்டாம்மா தாயே ! அப்புறம் நம்பிக்கை இல்லையான்னு ஆரம்பிச்சுடுவாரு ” பயந்து போய் சொன்னாள்.
சிறு வயது முதலே சுஜாவை தெரியுமென்பதாலும் இது படிப்பு விஷயம் என்பதாலும் ஸ்ரீநிவாசன் சம்மதம் தெரிவித்தார். அதை ஜானகி சொல்ல குஷியாகி விட்டனர். இருவரும் சேர்ந்து சக்தியின் அறைக்குச் சென்று அவளுக்குத் தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டனர்.
மாலையில் சித்து போன் செய்து அவர்களை அருகில் உள்ள கோவிலுக்கு வரச் சொன்னான். அவனுடன் ஒரு நாள் முழுவதும் இருக்கப் போகும் தருணத்தை எண்ணி படபடப்பும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு உணர்வுடன் தன் தாயிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள். அவரும் தன் மகளின் பிறந்த நாளிற்காகச் செய்த ஜாமூனை அவளுக்கு ஊட்டி விட்டு வழியனுப்பினார்.
சக்தியும் சுஜாவும் கோவில் வாசலை நெருங்க சுந்தர் வாசலில் நின்றான். சுஜாவை தன்னுடன் நிறுத்திக் கொண்டு,
“சித்து உள்ள இருக்கான் நீ போ சக்தி நாங்க வரோம்” என்றான்.

சரியென்று உள்ளே சென்றாள். அவள் வருவதை தூரத்தில் இருந்தே கண்டுகொண்டான். ‘என் சகி அழகின்னு தெரியும் இவ்ளோ அழகா!!’ விழி விரிய அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான். வெள்ளை நிற சல்வாரில் தேவதை போலக் காட்சி அளித்தாள்.
கோவில் முழுதும் கீழே தண்ணீர் ஊற்றி சுத்தப் படுத்தியிருந்தார்கள். ஆகையால் அவள் மெல்ல மெல்ல கீழே பார்த்து நீர் இல்லாத இடமாகத் தாவி வந்தாள். முன்னால் விழுந்த தன் கூந்தலை அழகாக ஒதுக்கினாள். அவளின் அந்தச் செயல்களை ரசித்தான். அவள் ஒரு இடத்தில் வந்து நின்று அவனைப் பேசியில் அழைக்க
“உனக்கு முன்னாடி தான் இருக்கேன் சகி” என அவளை நோக்கி கையைத் தூக்கினான். சுற்றும் முற்றும் தேடி கடைசியில் அவனைக் கண்டாள்.
கருப்பு நிற ஜீன்சும் பழுப்பு நிறசட்டையும் அணிந்திருந்தான். கையில் பெரிய டயல் வைத்த டேக் ஹூயர் ஸ்ட்ராப் வாட்ச் அவனுக்கு எடுப்பாக இருந்தது. நெற்றியின் ஓரத்தில் ஒரு கோடாக வழிந்த வியர்வையும் , முகத்திற்கு ஏற்றவாறு ட்ரிம் செய்த அடர்ந்த மீசையும் லேசாக வளர்ந்திருந்த தாடியும் அவனை மேலும் ஆணழகனாகக் காட்டியது. அவளைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தான்.
இவன் என் காதலன் என்று நினைக்கும்போதே கர்வமாக உணர்ந்தாள். ‘சிரிச்சு வேற கொல்றானே!’ கத்தியது மனது. கட்டுப்படுத்திக்கொண்டு அவன் அருகிலேயே அமர்ந்தாள். அவனும் கிட்டத்தட்ட அதே நிலையில் தான் இருந்தான். அவளைத் தன் அருகில் கண்டவனுக்கு மனம் அலைபாய்ந்தது. அவள் கன்னத்தை வருடத் துடித்த கைகளை மடக்கி பல்லைக் கடித்துக்கொண்டு தன் இதயத்தில் குத்தினான். மறுபுறம் திரும்பி தன் பின்தலையை இருகைகளாலும் கோதி “ஊஊஃப்” எனப் பெருமூச்சு விட்டான். புரியாமல் அவனைப் பார்த்தவள்
“என்ன ஆச்சு சித் ?” எனக் கேட்க,
“ஒண்ணுமில்லம்மா ஒண்ணுமில்ல….!!” சொல்லிக்கொண்டு இருக்கும் போதே சுஜாவும் சுந்தரும் பூஜைத் தட்டுடன் வந்தனர்.
“என்ன டா அதுக்குள்ள வந்துட்ட “, உள்ளே கடுப்பாகவும் வெளியே சிரித்துக்கொண்டும் கேட்டான். அதை உணர்ந்த சுந்தர்
“கோயிலுக்கு வந்துட்டு இவ்ளோ நேரம் ஆகியும் என்னைப் பார்க்க வரலியேன்னு சாமி செம்ம காண்டுல இருக்கு, இப்பயும் போகலன்னா நம்ம வேண்டுதலை ரிஜெக்ட் பண்ணிடும் பரவாலையா?”  சத்தமாகச் சொல்லிவிட்டு , அவனுக்கு மட்டும் கேட்கும் விதம் “எழுந்து வா டா! மத்ததெல்லாம் வீட்ல போய் வெசிக்கோ ” என முணுமுணுத்தான்.

அவன் கடுப்பைப் பார்த்து சித்துவிற்கு சிரிப்பு வர, “போகலாம் வாங்க ” பொதுவாகச் சொன்னான்.
உள்ளே சென்று சக்திப்ரியா பெயருக்கு அர்ச்சனை செய்ய சொன்னான். ஏன் ! என்பதுபோலப் பார்த்த சக்தியின் காதில்
“நாளைக்கு வர முடியுமோ முடியாதோ அதான் இன்னிக்கே கோயிலுக்கு வர சொன்னேன் ” அவளைப் பார்த்து கண்ணடித்து கிசுகிசுப்பாகச் சொன்னான். அதை ரசித்தவள்,
“உஷ்! இது கோயில்” என்று உதட்டை அசைக்க,
ஆள்காட்டி விரலைத் தன் உதட்டில் வைத்து “ம்ம்” எனத் தலையாட்டினான்.
இருவரும் மனமுறுக அந்தக் கடவுளை வேண்டிக்கொண்டனர். ‘ஆண்டவா என்ன பிரச்சனை வந்தாலும் இவரையே நான் மணக்க வேண்டும் . எங்கள் வாழ்வில் எப்பொழுதும் மகிழ்ச்சியை கொடு’ வேண்டிக்கொண்டு திரும்பினாள். அர்ச்சகர் குங்குமத்தை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். அதற்குள் அவளது நெற்றியில் சித்துவே குங்குமத்தை அழகாக வைத்துவிட , சிலிர்ப்புடன் அவனைப் பார்த்தாள்.
அவர்களுக்கு எதிரே நின்ற சுந்தர் “ஹ்ம்ம் ஹ்ம்ம் ” என்று தொண்டையை செருமிக்கொண்டான்.
அதைப் பார்த்து எதுவும் சொல்லாமல் சித்து கிளம்ப ,சக்தியும் பின்னே சென்றாள்.
“இவன் இங்கயே இவ்ளோ கூத்தடிக்கறானே! வீட்டுக்குப் போனா என்னென்ன பண்ணுவான். ஆண்டவா எல்லாருக்கும் நல்ல புத்திய குடுப்பா ” சொல்லிக்கொண்டே சுஜாவைப் பார்க்க
அவளோ “நீங்க ஒரு நாளாவது எனக்கு வெச்சிருப்பீங்களா?” என முறைத்துக்கொண்டே செல்ல, காதைப் பிடித்துக்கொண்டு அவள்பின் கிளம்பினான்.
அனைவரும் சித்துவின் ஆபீஸ் கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்ந்தனர்.
இது தெரிந்ததும் சற்று பின்வாங்கிய சக்தியை, கையைப் பிடித்து நிறுத்தினான். “நீ நினைக்கற மாதிரி இது தப்பான இடம் இல்லை. ஆபீஸ் விஷயமா வர ஃபாரின் க்லைன்ட்ஸ் மட்டும் தான் இங்க தங்க வைப்போம். தேவைபட்டா ஷூட்டிங்கு யூஸ் பண்ணிப்போம். பயப்படாம உள்ளவா” மெதுவாகச் சொல்லிவிட்டு அவள் கையை விடாமல் பிடித்துக்கொண்டே உள்ளே அழைத்துச் சென்றான். அவன் கையின் இதமே அவளின் பாதி பயத்தை குறைத்தது.
வீடு மிகவும் பிரம்மாண்டமாக இருந்தாலும் கலைனயத்துடன் அமைத்திருந்தனர். பெரிய அளவிலான பலவித படங்கள் என்லார்ஜ் செய்து மாட்டியிருந்தது.

காலைத் தூக்கி ஆடும் நடராஜர் , பண்டைய தமிழ் கலாச்சாரத்தைச் சொல்லும் விதமாகப் பெண்கள், தமிழ் நாட்டின் பிரபலமான கோயில்கள் என அவற்றைப் பார்க்கப் பார்க்க தெவிட்டவில்லை. வீட்டின் நடுவே பெரிய பித்தளை பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் பல வண்ண ரோஜாக்கள் சீராக வைத்து அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மிகவும் சுத்தமான வைத்திருந்தனர்.
அதைப் பார்த்து, “வீடு ரொம்ப அழகா வெச்சிருகீங்க சித்து ” எனச் சொல்லிக்கொண்டு திரும்பினாள். அருகில் யாரும் இல்லை. அவளது உடமைகளை ஒரு அறையில் வைத்துவிட்டு வந்துகொண்டிருந்தான் சித்து . சுந்தரும் சுஜாவும் அங்கிருந்த பெரிய நாற்காலியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். தான் மெய் மறந்து அந்த இடத்தைப் பார்த்துகொண்டிருந்தது அப்போது தான் உரைத்தது.
“சரி கிளம்புங்க !” சித்து சொல்ல
“இப்போ தான வந்தோம் அதுக்குள்ள எங்க போறோம்?” என்றாள் சக்தி.
“மேடம் இது சாப்பாட்டு டைம் எனக்கு ரொம்ப பசிக்குது ” வயிற்றை பிடித்துக்கொண்டு சுஜா சொல்ல
“ஹோட்டலூக்கா ?!!” அலுத்துக்கொண்டு கேட்க
“ஹோட்டல் சாப்பாடு தான் ஆனா வீட்ல சாப்பிட போறோம்” சுந்தர் சொல்ல
அதைக்கேட்டு முகம் சுளித்த சக்தியை , அருகில் சென்று அவள் அவள் கண்களைப் பார்த்து “நாளைக்கு நானே சமைச்சு தரேன் ஸ்பெஷலா . இப்போ இதை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ சகி” சொல்ல
அந்தப் பார்வையின் வீச்சு தாளாமல் வேறுபுறம் பார்த்து “சரி ” என்றாள். அங்கிருந்த டேபிளில் சாப்பாடு தயாராக இருந்தது. அனைவரும் சென்று உணவருந்திவிட்டு சிறிது நேரம் அங்கிருத்த காரம்போர்டில் விளையாடினார்கள். பின்பு தூக்கம் வரும் வரை ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். பின் அவரவர் தங்கள் அறைக்குச் சென்றனர்.
சுஜாவும் சக்தியும் ஒரே அறையில் உறங்கினர். மணி பன்னிரண்டு அடிக்க பதினைந்து இருக்கும் சமயம் சித்து சக்திக்குப் போன் செய்தான். அறைகுறை தூக்கத்தில் இருந்தவள் எடுத்து “சொல்லுங்க சித்” என்றாள் சினுங்கிக்கொண்டே.
அவனும் ஹஸ்கி வாய்சில் பேசினான்.” கொஞ்சம் வெளில வா சகி, உன்கிட்ட பேசணும்”
“சரி” சொல்லிவிட்டு சுஜாவை எழுப்பாதவண்ணம் மெதுவாக எழுந்து சென்றாள்.

error: Content is protected !!