KYA 10

KYA 10

                      காலம் யாவும் அன்பே 10

 

 

ஐந்து விதமான குறிப்புகளும் தனித் தனியே பலவித அர்த்தங்களைக் கொடுத்தது. அதைப் பற்றி யோசிக்க யோசிக்க அவனுக்கு தலை வலியே வந்தது. இதன் இடையே அவனது தேர்வுகள் மற்றும் மேற்ப்படிப்பு என்று காலங்கள் உருண்டோடின.

அவனது ப்ரொபசர் ஸ்டெபனின் உடல்நிலை சற்று தேரியதே தவிற முன்னைப் போல் இல்லை. அவரும் அவரது வேலையை ரிசைன் செய்துவிட்டு வீட்டில் இருந்தே தனது ஆராய்ச்சிகளை செய்துவந்தார்.

வாகீசன் அந்தக் கற்களைப் பற்றியும் தகடினைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளும் ஒரே நபர் அவர் மட்டுமே. ஆகவே தன் பங்கிற்கு அவரும் என்னவென்று கண்டு பிடிக்க, படாத பாடு பட்டார்.

இரண்டு மூன்று வருடங்கள் ஆகியும் எந்தப் பலனும் இல்லை. வாகீசன் பி ஹெச் டி முடித்து ஊருக்குச் செல்லலாம் என்ற நிலை வந்த போது கூட , இந்த ஆராய்ச்சிக்காகவே அதே கல்லூரியில் ஆசிரியரானான்.

அவனது பெற்றோர் சிறிது வருத்தப் பட்டாலும் அவனுக்காக சம்மதிக்கவே செய்தனர்.

வேலைப் பளு , இந்த ஆராய்ச்சியின் முடிவு, இவற்றால் சற்று தூக்கமில்லாமல் தவித்தான் வாகீ. தூங்கினாலும் அது நிம்மதியான ஆழ்ந்த உறக்கமாக இருப்பதில்லை.

ஒரு நாள் இரவு ஒரு மணி வரையிலும் அந்தக் கற்களை வைத்து வித விதமாக வரிசைப் படுத்திப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு ஒரு பொறி தட்டியது.

அந்தக் கற்கள் கிடைத்த இடம் ஒரு பிரமிட். அதனால்  வலப்புறம் ஒன்றின் மேல் ஒன்றாக சாய்ந்த வாக்கில் இரண்டு கற்களும் , இடது புறம் அதே போல இரண்டை வைத்து மேலே நடுவில் ஒரு கல்லை வைத்துப் பார்த்தான்.

பிரமிடின் வடிவம் போலவே இருந்தது. இப்போது அந்த தகடினை அடியில்  வைத்து அதன் மேல் இந்த வரிசையில் கற்களை வைத்துப் பார்த்தான். அந்தக் கற்களின் வழியே ஊடுருவிப் பார்த்தால் அங்கே தெரிந்தது ஒரு அற்புத விஷயம்.

தனித்தனியாக பார்க்கும் போது கிடைத்த கிறுக்கல்களும் சில குறியீடுகளும் ஒன்றோடொன்று இணைந்தும் இணையாமலும் வேறு ஒரு புது விஷயத்தை அவனுக்குக் காட்டியது.

 முதலும் முடிவும் இல்லாத வெற்றிடமான , ஒன்பது கோள்களும் அதற்கும் மேற்ப்பட்ட கோடிக் கணக்கான நட்சத்திரங்கள் சூழ்ந்திருந்த வானமண்டலம்.

ஒரு சில கற்களின் வழியே பார்த்த கிறுக்கல்கள் இப்போது நட்சத்திரங்களாகவும் , சில அரைகுறை ஓவியங்கள் கோள்களைப் போலவும் , சிலது  பறக்கும் சதுரங்களும் இப்போது தெரிந்தது.

அதில் ஒரு பகுதியில் தெரிந்த  எழுத்துக்கள் , அது மட்டும் அவனுக்கு விளங்கவில்லை.

பாதி கண்டுபிடித்த நிலையில் இப்போது இருக்க, மகிழ்ச்சியும் சிறிது குழப்பமுமாக மறுநாள் அவனது கல்லூரிக்குச் சென்றான்.

அப்போது தான் ஆகாஷும் வந்தனாவும் அவனது வகுப்பில் கற்களின் காலம் அறிவதிலும் மொழி பெயர்ப்பதிலும் சிறந்து விளங்குவது தெரிய , அவர்களுக்கு அந்தக் குறியீடுகளைக் காட்டி தெரிந்த வழியிலெல்லாம் மொழி பெயர்க்கச் சொல்லியிருந்தான்.

அப்போது அவனது ப்ரொபசர் உடல் நிலை மிகவும் மோசமானதால் அவரைக் காண வருமாறு அழைப்பு வர, உடனே அங்கு சென்றான்.

மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமாக படுத்துக் கிடந்தார். இத்தனை நாள், தான் அவருக்கும் , அவர் தனக்கும் செய்த உதவிகள் , ஒரு நண்பனைப் போல இருவரும் சேர்ந்து செயல்பட்டது எல்லாம் சேர்ந்து வாகீசனுக்கு அவரைக் காணக் கண்ணில் நீர்த் துளிர்த்தது.

எண்ணங்கள் ஒன்றான இருவர் பிரிந்து செல்வது மனதிற்கு பெரும் வலியே! அந்த வலியைத் தான் இப்போது அனுபவித்தான் வாகீ.

அப்போது கூட அவனுக்கு உதவ நினைத்த அவர் , தனது முகத்தில் இருந்த ஆக்சிஜென் மாஸ்க்கை கழட்டிவிட்டு அவனிடம் பேசினார்.

திறந்திருந்த அந்த அறையின் கதவை மூடுமாறு சைகை செய்தவர், அவன் அதைச் செய்துவிட்டு வந்ததும், அவனது கையைப் பிடித்து அருகில் அமர்த்தினார்.

“வாகீ! அந்த தகடு பத்தி உனக்கு இப்போ என்ன தெரியும்?” உயிர் பிரியும் நிலையிலும் கூட அவருக்கு ஆராய்ச்சியை விட மனமில்லை.

எங்கே தாமதித்தால் அவர் உயிர் அதற்குள் போய்விடுமோ என்று, தான் கண்டிபிடித்த அனைத்தையும் அவரிடம் கொட்டினான்.

அதைக் கேட்டவரின் கண்களில் சிறு மின்னல் தோன்றி மறைந்தது.

நலுங்கிய சன்னக் குரலில் அவர் மீண்டும் தொடர்ந்தார்.          “ கிரேட் வாகீ! நீ இதுல கண்டிப்பா சாதிப்ப. உனக்கு ஞாபகம் இருக்கா? அந்த சர்ச் பாதிரியார் நம்ம கிட்ட , அந்த மூன்றாவது  பிரமிடுக்குள்ள இருக்கும் விஷயம் மனித சக்திக்கு அப்பாற்ப்பட்ட விஷயம்னு சொன்னாரு.” நீளமாகப் பேசியதில் எச்சிலை விழுங்கிக் கொண்டார்.

“ஆமா, சார். அது எனக்கும் நல்லா ஞாபகம் இருக்கு” அவருக்கு சற்று இடைவெளி கொடுத்தவன்,

“ம்ம்ம்.. அது உண்மை தான் வாகீ. நானும் நீ சொன்ன விதத்துல முயற்சி செய்து பார்த்தேன். அந்த பிரமிட் போல கற்களை வைத்துப் பார்த்தால் , வான மண்டலமும் அதன் பக்கத்தில் சில புரியாத எழுத்துக்களும் இருக்கும். அந்த எழுத்துகளை நான் கண்டுபிடிச்சு …” அதற்குள் அவருக்கு மூச்சு வாங்கியது,

உடனே வாகீ பதறிப்போய் ,” ப்ரொபசர் , நீங்க இப்போ எதுவும் சொல்லவேண்டாம் . இந்த மாஸ்க்கை போடுங்க” அருகில் இருந்த அவரது மாஸ்க்கை மாட்ட வந்தான்.

அவனைத் தடுத்தவர், “  எனக்கு என்னோட கடைசி நாள் இது தான்னு தெரியும் , என்னை பேசவிடு” தன் உடலில் எஞ்சி இருந்த முழு சக்தியையும் தேக்கி வைத்துப்பேசினார்.

“ அந்த எழுத்துகளை நான் சில புத்தகங்களைப் புரட்டி மொழி பெயர்த்து வெச்சிருக்கேன். அது இந்தப் பையில இருக்கு. இதை நீ வெளி ஆட்களுக்குத் தெரியாம கண்டுபிடிக்கணும். ” என தான் கையோடு மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருந்த ஒரு சிறு பையினைக் காட்டிச் சொல்ல,

அவருக்கு மூச்சு வாங்கியது. அவர் உயிர் பிரியும் தருணம் என்பதை உணர்ந்து , தன் துக்கத்தை எச்சிலை விழுங்கி தனக்குள்ளே தள்ளப் பார்த்தான்.

வேகமாக ஸ்டெபன்னுக்கு மூச்சு வாங்க , உடனே அவரை மாஸ்க் போட்டு படுக்க வைத்துவிட்டு டாக்டரை அழைத்தான்.

டாக்டர் ‘சில நிமிடங்களே’ என்று நேரம் கொடுத்துவிட்டுச் செல்ல, அங்கிருக்க முடியாமல் வாகீ அவரிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.

அப்போது அவன் கையைப் பிடித்து “உன் சொந்த நாட்டுக்குப் போ. அங்க தான் உனக்கு இனிமே வேலை” என்று கடைசியாக அவனுக்குக் கூற , அவன் அவரது அவஸ்தையைக் காண முடியாமல், அங்கிருந்து அவர் கொடுத்த பையுடன் வெளியேறினான்.

ஸ்டெபனின் உறவுகள் அங்கே இருக்க, அவரும் அவர்களைக் கண்டு  நிம்மதியாக கண் மூடினார்.

தனக்கு ஆசிரியருக்கும் மேலான ஸ்டெபன் இறந்தது வாகீக்கு பெரும் துன்பமே! அவர் கொடுத்த அந்த பேப்பரைப் பார்க்கும் ஆர்வம் இப்போது அவனுக்குத் துளியும் இல்லை.

என்ன தான் அவன் முழுமூச்சாக ஆராய்ச்சியில் இருந்தாலும், சுற்றி நடக்கும் நடப்பை உணர்ந்து வாழ்வதே வாழ்க்கை.

இப்போது அவன் ஸ்டெபன் இழப்பை நினைத்து வருந்திக் கொண்டிருந்தான். அந்த நொடியின் வருத்தத்தை உணர்ந்துகொண்டிருந்தான்.

சில நாட்கள் அவர் கொடுத்த பையை பிரித்துக் கூடப் பார்க்காமல் அப்படியே வைத்திருந்தான்.

ஆகாஷும் வந்தனாவும் தங்களுக்குக் கொடுத்த அந்தப் பணியை முடித்து அவனிடம் கொண்டு வந்து காட்ட, அப்போது தான் அவனும் சற்று தெளிந்தான்.

கவலையிலிருந்து மீண்டவன், அவரின் மொழிப் பெயர்ப்பைக் காண அந்தப் பையினைத் திறந்து பார்த்தான்.

வந்தனாவின் குறிப்புகளும் அவர் கொடுத்த குறிப்புகளோடு நூறு சதவிகிதம் ஒத்துப் போகாவிட்டாலும் , பல இடங்களில் சரியாவே இருந்தது. ஆகாஷும் அந்தக் கற்களின் காலத்தை சரியாவே கணித்திருந்தான்.

அன்று முதல் அவனது ஆராய்ச்சியில் அவர்களும் சேர்ந்து கொண்டனர்.

அவன் எந்த வேலை கொடுத்தாலும் எந்த நேரமானாலும் முடித்து விட்டே சென்றனர்.

ஸ்டெபன் கொடுத்த பேப்பரில் முழுவதுமாக தகவல்கள் இல்லை, மீதத்தை வாகீசனே இப்போது கண்டுபிடித்துக் கொண்டிருந்தான்.

தகடில் தெரிவது வான மண்டலம் என்பதை சுலபமாகக் கண்டுபிடித்திருந்தான். அதன் பக்கத்தில் இருந்த எழுத்துக்களைக் குறிப்பது  ‘இசிகாதி ’ இதைத் தான் வந்தனாவும் ஸ்டெபனும் மொழிபெயர்த்துக் கண்டுபிடித்தது.

அதை ஒரு முறை அவனும் சரியாக மாற்றப்பட்டது தானா என்று தன் வகையில் ஆராய்ச்சி செய்தான்.

இந்த இசிகாதி என்பது வேற்றுமொழிச் சொல். அதாவது காலத்தைக் கணிக்க உதவும் ஒரு கருவி. இந்த மொத்த அமைப்பையும் வைத்துப் பார்த்தால் அவனுக்குப் புரிந்தது, விண்வெளியைத் தாண்டி  இருக்கும் காலம் பற்றிய குறிப்பு தான் அது.

‘நமக்குத் தெரிந்தது விண்வெளி வரை தான். அதையும் தாண்டி என்ன காலம் இருக்க முடியும்’ என்பது அவனுக்குள் குடைந்து கொண்டிருந்த கேள்வி.

மேலும் அதைப் பற்றி அவன் ஆராய, உதவிக்கு வந்தனா ஆகாஷை வைத்துக் கொண்டான். அப்போது மீண்டும் ஒரு முறை அந்த சர்ச்சுக்குச் சென்று வர அவனுக்குத் தோன்றியது. உடனே புறப்பட்டான்.

ஸ்டெபன் இறப்பிற்கு வருத்தம் தெரிவித்த அந்தப் பாதிரியார், யாருக்கும் தெரியாமல் அவனிடம், கிழிந்த மிகவும் பழமையான துணியின் ஒரு பகுதியும் அதனுடன் இருந்த பாதி காகிதமும் கொடுத்தார்.

‘நான் சின்ன வயசுலேந்து இந்தச் சர்ச்ல இருக்கேன். என் தாத்தாவுக்குத் தாத்தா காலத்துல இருந்து சிலவற்றை பாதுகாக்கறாங்க. அதுல எல்லாமே இந்த சர்ச் பத்தின விஷயம் தான். ஆனா, சில நாட்களுக்கு முன்பு அந்தப் பொருட்களோட இருந்த ஒரு சிறு துணி மூட்டைல இந்த இரண்டும் கட்டப்பட்டு இருந்தது என் கைல கிடச்சுது. அந்த மூட்டைல வெளில இந்த பிரமிடின் உருவம் வரையப்பட்டிருந்தது. இது உனக்கு உதவலாம்” என்று அவனிடம் அதை ஒப்படைத்தார்.

மிகவும் நன்றியோடு அதைப் பெற்றுக் கொண்டான். மீண்டும் ஒரு முறை அந்தப் பிரமிடை வெளியிலிருந்து பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

அந்த காகிதமும் சிறு துணியையும் வைத்து சிலவற்றைத் தெரிந்து கொண்டான். கடைசியாக அன்று வந்தனாவும் ஆகாஷும் ஒரு முறை ஆராய்ந்து அதையே சொல்ல, அவனுக்கும் தமிழ்நாட்டில் தான் இனி வேலை என்று தெரிந்து கொண்டான்.

அந்தத் துணியில் ஒரு ஓவியம்! அது நம் நாட்டில் இருக்கும் கோவில்களின் அமைப்பை ஒத்திருந்தது. அடுத்து அந்த காகிதம் அதில் இருந்த குறிப்புகள் அனைத்தும் இப்போது அவர்கள் வந்து சேர்ந்திருக்கும் கோவிலுடையது. ஆகாஷிடம் அவன் கண்டிபிக்கக் கொடுத்தது  அந்தப் பளிங்குக் கற்களில் ஒன்று. ஆகாஷ் அது எடுத்த இடமாகக் கண்டுபிடித்துக் கூறியது இந்தக் கோவில் தான்.

அதை அவன் அறிந்ததும் இந்தக் கோயில் கண்டுபிடிக்கப் பட்டிருப்பது தெரியவர, உடனே அங்கு சென்று ஆராய்வதற்கான வேலைகளைச் செய்துவிட்டுப் புறப்பட்டான்.

வாகீசன் சொல்லி முடித்ததும்,  இப்போது இந்தக் கோவிலில் தாங்கள் தெரிந்து கொள்ளப் போவது அல்லது கண்டுபிடிக்கப் போவது என்ன என்பது ஒரு பெரிய கேள்விக் குறியாக நின்றது.

“அப்படினா நாம இங்க காலத்தைப் பத்தி கண்டுபிடிக்கப் போறோமா?” இயல் தான் முதலில் கேட்டாள்.

“ இல்ல, ஸ்பேஸ் வேற இருக்கு , அதுனால எதாவது அஸ்ட்ராலஜி பத்தின்னு நினைக்கறேன்” வந்தனா தன் பங்கிற்கு சொல்ல,

ஆகாஷ் வாகீசனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“ நீ என்ன நினைக்கற ஆகாஷ்” வாகீ கேட்க,

“ டைம் ட்ராவல் ?!”

அவன் அதைச் சொன்னதும் வந்தனா இயல் இருவருக்குமே ‘பக்’ கென்று இருந்தது.

மூவரையும் வாகீசன் பார்க்க,

“ சொல்லுங்க ஹெட்! நான் சொன்னது கரெக்ட்டா?”

“ நீ சொன்னது ஒரு வகைல ஏத்துக்கலாம் , ஆனா டைம் ட்ராவெல் பண்ண நம்ம கிட்ட என்ன இருக்கு! நாம என்ன சைன்டிஸ்ட்டா?” நக்கலாகக் கேட்க,

“ வேற என்ன ஹெட்? இந்தக் கோயிலிக்கும் காலத்துக்கும்  என்ன சம்மந்தம்?” ஆகாஷ் புரியாமல் தவித்தான்.

“ நான் எனக்குக்  கெடச்ச எல்லாத்தையும் வெச்சு கண்டுபிடிச்சது , எனக்கே சரியா இன்னும் புரியாத ஒரு விஷயம். இந்தக் கோயிலில் ஒரு இடத்துல வார்ம் ஹோல் (worm hole) இருக்கணும். அதுல நாம நுழைஞ்சா எங்க வேணா போகலாம். அதவாது வேற கிரகத்துகுக் கூட நாம போகலாம். முன் ஜென்மத்துகுப் போகலாம். அந்த ஒன்பது கோள்களையும் கடந்து காலத்துக்கு அப்பாற்ப்பட்ட ஒரு இடத்தை கூட அடையலாம். இங்க என்ன என்ன இருக்கு என்ன நடக்கும்னு தெரியாது. இன்னும் அந்தப் பிரமிடுக்கும் இந்தக் கோயிலுக்கும் என்ன சம்மந்தம்னு இங்க தான் தெரிஞ்சுக்கணும்.  அந்தப் பிரமிடுகுள்ள யார் அந்த ரகசியத்தை வெச்சது, இதைப் பத்தி தெரிஞ்சுக்க இந்தக் கோவில்ல கண்டிப்பா ஒரு விஷயம் இருக்கு. அதைக் கண்டுபிடிக்கத் தான் நாம இங்க வந்திருகோம்.

 இந்தக் கோவிலே ஒரு பொக்கிஷம். இந்த விஷயம் வெளில தெரிஞ்சா பல பேர் வந்து போற இடமா மாறிடும். அந்த வார்ம் ஹோல் மறஞ்சு போய்டலாம். சோ கீப் இட் சீக்ரெட்..”

அவன் கூறியதை அவர்களுக்கு ஜீரணிக்கவே முடியவில்லை. மூவரும் பேயறைந்தது போல தங்கள் அறைக்குச் சென்றனர்.

திருவாசகம்:

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் ……

பொருள்:
அப்போது கறந்த பாலோடு கரும்பின் சாறும் நெய்யும் கலந்தால் எவ்வாறு இனிக்குமோ
அவ்வாறு சிறந்து, அடியவர்கள் மனத்தில் தேன் ஊற்றெடுத்தாற் போல நின்று,
இப்பிறவியை முற்றுப் பெறச்செய்யும் எங்களுடைய பெருமானே !
ஐந்நிறமும் நீயே ஆனாய் ! வானவர்கள் போற்றி நிற்க அவர்களுக்கு அரியவனாக
மறைந்திருந்தாய், எம்பெருமானே !

 

 

 

 

 

 

error: Content is protected !!