KYA 15

KYA 15

                            காலம் யாவும் அன்பே 15

ஏணி சறுக்குவதை அவளால் தடுக்க முடியாமல் வாகீசனின் மேல் விழ, அந்த எதிர்பாராத மோதலில் அவனும் இரண்டு படி சறுக்கி பின் சுதாரித்துக் கொள்ள அவளது இடையைத் தன்னோடு இருக்கப் பற்றிக் கொண்டு மற்றொரு கையால் ஏணியைப் பிடித்த படி நின்றான்.

இயலின் கால் இப்போது அவனது கால்களின் மேல்! அவனது கைவளைவிற்குள் அவள்! எப்போதும் அவன் அருகில் வந்து நின்றாலே அவளுக்கு மூச்சு முட்டுவது போலத் தான் இருக்கும்.

ஆனால் இன்று நடந்து கொண்டிருப்பவைகள் அவளையும் மீறி அவனோடு அவளைச் சேர்த்துக் கொண்டிருந்தது.

அவனும் அதை உணர்ந்தே இருந்தான். ஆனாலும் எதையும் ஏற்கவும் விலக்கவும் அவனால் முடியவில்லை.

அவளது மெல்லிடையைச் சுற்றி வளைத்த கைகளை எடுக்க மனமில்லாமல் விலக்கினான்.

மெல்ல கீழே இறங்க நினைத்தவன்,

“நீ ஒரு ஸ்டெப் மேல ஏறு அப்போ தான் நான் என் கால வெளில எடுக்க முடியும்” அவளது காதுக்குள் அவனது உதடு உரசப் பேசினான்.

கண்மூடி சிலிர்த்து மீண்டவள் , உடனே ஒரு படி மேலே ஏறினாள்.

மனதிற்குள் அவளின் செயலைக் கண்டு மனதிற்குள் சிலிர்த்தவன் ,மீதம் இருந்த நான்கு படிகளைக் கடந்து கீழே இறங்கினான்.

அவளும் பின்னால் இறங்க,

“ வாங்க ஹெட் போலாம், நாம காலைல வரலாம்.” என்றாள்.

“இல்ல, என்னை ஏதோ ஒன்னு தடுக்குது. இரு இந்த இடத்துல எதாவது கிடைக்குதான்னு பார்க்கலாம்” தன் கைகளை நெட்டி முறித்து அந்த இடத்தில் மீண்டும் அவன் நடக்க,  

இப்போது அந்த தீப்பந்தத்தின் உதவியால் அங்கிருந்த சுவர்களை நோட்டம் விட்டான். அனைத்தும் கருங்கல் பாறைகள்.

அவற்றைத் தன் கைகளால் தட்டிப் பார்த்தான். இயலும் தன் பங்கிற்கு அவனுக்கு எதிர்ப்புறம் இருக்கும் சுவர்களை தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இயல் தன் கைகளால் அந்த கல் சுவரில் சிறு பிள்ளை போல தடவிக் கொண்டே வர, ஒரு இடத்தில் அவளது நடுவிரல் சிக்கிக் கொண்டது.

“ஆ!!” என்ற அலறலில் வாகீ அவளிடம் ஓடி வர,

“என்ன ஆச்சு?” என்று பதறினான்.

“கை..!!ஆ.!!!!!…விரல் மாட்டிக்கிச்சு…”  விரல் வலிக்க ஆரம்பித்தது.

“ஹே! இரு நான் பாக்கறேன்..” அவளது விரல் எங்கு மாட்டிக்கொண்டிருக்கிறது என்று அவனுக்குச் சரியாகத் தெரியவில்லை. உடனே தீப்பந்தத்தை அருகில் எடுத்து வந்து பார்க்க,

இரண்டு கற்களுக்கு நடுவில்  சிக்கி இருந்தது. எப்படி இங்கே போய் மாட்டியது என்று ஒன்றும் விளங்கவில்லை.

“ ஆ.. வலிக்குது ஹெட்… சீக்கிரம் எடுங்க” அவள் கண்களில் வலியால் கண்ணீரே வந்தது.

அதைக் கண்டவனுக்கு ஏனோ உள்ளம் பதைத்தது. எதையும் யோசிக்காமல் உடனே அவளது கையைப் பிடித்து இழுத்தான். அவன் இழுத்த வேகத்தில் அவளது விரல் சிவந்து போய் வெளியே வந்தது..ஆனால் ரத்தத்துடன்!

அதைக் கண்டவனுக்கு கட்டுக்கடங்காமல் ஏனோ கோபம் வந்தது.

இயல் கீழே அமர்ந்துவிட, அவனோ கையிலிருந்த பந்தத்தால் அந்த இடத்தை ஓங்கி அடித்தான். அடித்த வேகத்தில் அந்தக் கற்சுவர் சற்று பெயர்ந்து சில்லு சில்லாகக் கீழே விழுந்தது.

அந்தக் கல் விழுந்த இடம் லிங்கத்தின் அடியில் இருந்த நீரில்.சென்று மூழ்கியது.

கோபத்தில் அடித்ததில் வாகீசன் அதை கவனிக்கவில்லை. ஆனால் கீழே அமர்ந்திருந்த இயல் அந்தக் கல்லின் ஒரு சில்லு நீருக்குள் மூழ்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அது வித்தியாசமாகப் பட்டது அவளுக்கு. வாகீ அவளின் அருகே வந்து அமர்ந்து அவளது விரலைப் பிடித்துப் பார்த்தான்.

ரத்தம் சகிவது நின்றிருந்தது. ஆனாலும் அது நன்றாக சிக்கியிருந்ததில் விரல் சிவந்து இருந்தது மேலும் லேசாக நடுங்கியது.

“இன்னும் வலிக்குதா” மென்மையாக அவன் கேட்க, அவளின் பார்வை கூர்மையாய் எங்கோ படர்ந்திருப்பதை கவனித்தான். அவனும் அந்தத் திசையில் பார்த்தான். ஒன்றும் புரியாமல்,

“ என்ன பாக்கற?” சந்தேகத்தோடு கேட்டான்.

“இல்ல கீழ இருந்த தண்ணிக்குள்ள அந்தக் கல் விழுந்துச்சு , ஆனா கல் விழுந்த இடம் ஆழமா இருக்குமோ ன்னு தோணுது” சாதாரணமாகச் சொல்ல,

“அப்படியா?” என எழுந்து சென்று, கீழே இருந்த கல்லில் ஒன்றை எடுத்து மீண்டும் வீசிப் பார்த்தான். அது தரையைத் தொடும் சத்தம் எதுவும் கேட்கவில்லை.

சந்தேகம் வர , உடனே தன் கையை உள்ளே விட்டு தரை தட்டுப் படுகிறதா என்று பார்த்தான்.  கை ஆழமாக உள்ளே சென்று கொண்டிருந்தது, தரை என்பது இல்லவே இல்லை.

அவன் கண்களில் ஆச்சரியம் தெரிய, இயலும் எழுந்து வந்து

“என்ன ஹெட், என்ன ஆச்சு?” என்றாள்,

“இங்க தரையே இல்ல … இந்த தண்ணீர் ரொம்ப ஆழமா உள்ள போகுது. இந்த லிங்கம் இருக்கற இடத்தை சுத்தி பள்ளம் தான் இருக்கணும்.” அவன் புருவத்தை சுருக்கி எதையோ யோசித்துக் கொண்டே சொல்ல,

அவளும் உள்ளே குனிந்து அவளது கையை உள்ளே விட்டுப் பார்த்தாள்.

அவள் உள்ளே விட விட கை நீருக்குள் மறைந்து கொண்டே சென்றது.

‘இது என்ன விந்தை! ஒரு பத்தடி ஆழம் இருக்குமோ!’ என யோசிக்க, கையை மீண்டு நீரிலிருந்து வெளியே எடுத்தாள்.

அவளது கையில் இருந்த காயம் இப்போது குறைந்திருந்தது. அவளுக்கு வலிக்குமோ என்று அடிக்கடி அவளது கையையே பார்த்துக் கொண்டிருந்த வாகீசன் அதை கவனிக்க,

“ஹே உன் காயம் இப்போ இல்ல” எனவும்

இயலும் அவளது விரலை பார்க்க, முன்னை விட இப்போது வெகுவாகவே குறைந்திருந்தது. அத்துடன் கன்றிச் சிவந்த சிகப்பும் மறைந்து இருந்தது.

இருவருக்கும் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. ‘இந்த இடத்தில் இத்தனை மர்மங்களா!’ என்று குழம்பிக்  கொண்டிருந்தனர்.

“இங்க என்ன மாயஜாலம் நடக்குதா” இயல் பயத்தில் கேட்க,

வாகீசன் அவளுக்கு விளக்கினான். “அப்படி இருக்காது. எல்லாமே சைன்ஸ் தான். நம்ம முன்னோர்கள் எல்லாம் போலியா எதையும் நம்ப மாட்டாங்க. ஒரு வேளை இந்தத் தண்ணீல மூலிகைகள் கலந்திருக்கலாம். அதுனால கூட உன்னோட காயம் ஆரியிருக்கலாம் .”

அவன் சொன்ன பிறகே  இப்படித் தான் இருக்க வேண்டும் என்று உணர்ந்தாள்.

“சரி இப்போ அடுத்து என்ன பண்ணப் போறோம்? எப்படி ஆரம்பிக்கறது..?!” இயலுக்கு எப்படி கண்டுபிடிக்கப் போகிறோம் என்ன கண்டுபிடிக்கப் போகிறோம் என்ற ஆர்வம் கட்டுக்கடங்காமல் இருந்தது.

“எதாவது வழி கிடைக்கும்”  யோசித்துக் கொண்டே நடந்தான்.

முதலில் அந்த நீர் எது வரை ஆழம் உள்ளது என்று பார்க்க நினைத்தான்.

இயலும் ஒரு ஓரம் நின்று யோசிக்க , வாகீ அந்த ஏணியைப் பார்த்தான்.

உடனே அதைக் கொண்டு வந்து அந்த நீருக்குள் விட்டு ஆழம் பார்க்க நினைத்தான்.

அதைக் கொண்டு வந்து சரியாக அவன் கையை விட்ட இடத்திலேயே ஏணியை மெல்ல மெல்ல நுழைத்தான். அதுவும் உள்ளே சென்று கொண்டிருந்தது.

இயல் கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்தாள். கிட்டத்தட்ட அந்த ஏணியின் பாதி உள்ளே சென்றிருந்தது. அப்போதும் தரை தட்டுப் படாமல் இருக்கவே , இருவரும் ஒருவரை ஒருவர் அச்சம் கலந்த சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சட்டென தரை முட்டியது. முக்கால் வாசி ஏணி உள்ளே!

ஏணியை வெளியே எடுத்து மீண்டும் பழைய இடத்தில் வைத்தவன் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது.

அதைக் கண்ட இயல் அவனிடமே கேட்டாள்.

“ என்ன ரொம்ப தெளிவா இருக்கீங்க? இப்போ ஆழம் பாத்தாச்சு, அடுத்து உள்ளே குதிச்சு பார்க்க போறீங்களா?” கிண்டலாகக் கேட்க,

“எஸ் அஃப் கோர்ஸ்” தோளைக் குலுக்கி அசால்ட்டாகக் கூறினான்.

“என்ன… ? விளையாடாதீங்க. முதல்ல இது எப்படிப் பட்ட தண்ணீர்னு தெரியல, அதுவும் இல்லாம இங்க பகல்லயே பசு மாடு தெரியாது, ராத்திரில எருமை மாட தேடப் போறீங்களா?” எங்கே அவன் உள்ளே குதித்து விடுவானோ என்ற அச்சத்தில் பேசினாள்.

“நீ ஏன் பதர்ற?, உன்னையா குதிக்க சொன்னேன்! நான் தான குதிக்க போறேன்.” ஒற்றைப் புருவத்தை ஏற்றி அவளைக் கேட்க,

இது போலக் கூட அவனுக்குப் பேசத் தெரியுமா என அசந்து போனாள்.அவனது அந்த செய்கை அவள் மனதில் நிலைத்தே விட்டது.

‘ஆனால் என் மனது ஏன் அவனுக்காக பதறுகிறது.’ இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல அவளாலும் முடியவில்லை.

“ பயப்படாத .இப்போ குதிக்கமாட்டேன். காலைல தான். நீ சொல்ற மாதிரி இங்க இருட்டுல  எதுவுமே தெரியாது. அதுனால காலைல சில அத்தியாவசியமான பொருட்களெல்லாம் கொண்டு வந்து அப்புறம் தான் உள்ளே போய் பார்க்கணும். நிச்சயம் ஏதோ கிடைக்கப் போகுதுன்னு என்னோட இன்ஸ்டிங்ட் சொல்லுது” அவன் சொல்லும்போதே மீண்டும் அந்தக் கழுகு கத்தும் சத்தம் மீண்டும் கேட்டது.

அவன் சொன்னதைக் காதில் வாங்காமல் அவன் மேல் தான் கொண்ட அக்கரையிலேயே அவள் மனம் நிற்க, அந்தச் சத்தம் தான் அவளைக் கலைத்தது.

அது எங்கிருந்து கேட்கிறது என்று ஒருமுறை சுற்றி முற்றிப் பார்க்க, எதுவும் புலப்பட வில்லை. அதே சமயம் இந்த முறை இருவருக்கும் அந்த சத்தம் பயத்தை அளிக்கவில்லை.

“இது என்னவோ சொல்ல வர மாதிரி எனக்குத் தோணுது” தனக்குள்ளே சொல்லிக்கொண்டு , அந்தச் சுவர்களில் காதை வைத்துக் கேட்டுப்பார்க்க, பதிலாக நிசப்தமே வந்தது.

மீண்டும் சில ஆராய்ச்சிகள் செய்ய கற்களைப் பெயர்த்து எடுத்துக் கொண்டான். நேரம் சென்றது.

“இப்போ நாம கிளம்பலாமா ?” கண்ணைக் கசக்கிக் கொண்டு இயல் கேட்க,

லேசாகச் சிரித்தான். அவளுக்கு தூக்கம் வந்துவிட்டது என்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்தது.

மீண்டும் ஏணியில் பதுவிசாக ஏறி, வெளியே வந்தனர்.

நேரம் அப்போதே மூன்றாகி இருந்தது. மீண்டும் அவ்வளவு தூரம் நடக்க வேண்டுமே என்ற நினைப்பே அவளுக்கு அலுப்பைத் தந்தது.

தயங்கி வாசலிலேயே நின்றாள். அவளைப் புரிந்தவன் ,

“வா சைக்கிள்ல போலாம்” என்றான்.

அவளுக்கு முதலில் தயக்கமாக இருந்தாலும், வேறு வழியின்றி அவன் பின்னே எரிக் கொண்டாள்.

அவனுக்கும் அவளை இப்படி பின்னால் வைத்துக் கொண்டு போவது சுகமாய் மனதில் இனித்தது. அந்த நினைப்பில்  எதுவும் பேசாமல் சைக்கிளை ஓட்ட  , பாதி வழிலேயே அவளுக்குத் தூக்கம் வந்தது.

அவன் முதுகின் மீதே சாய்ந்தாள். முதலில் “ ஏய்! என்ன பண்ற?” என சற்று கோபமாகக் கேட்டவன், அவளிடம் பதில் இல்லாது போகவே, அவள் உறங்குகிறாள் என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டான்.

உதட்டில் புன்னகை மலர, மெதுவாக ஓட்டிக் கொண்டு வந்தான்.

அவர்கள் வந்த காட்சியை இரு கண்கள் ஆனந்தமாகப் பார்த்தது..

“ வாங்க ! வாங்க! உங்களுக்காகத் தான் காத்திருக்கேன்!” சிரித்துக் கொண்டே அந்தக் கண்களுக்குடையவன் திரும்பிச் சென்றான்.

திருவாசகம்: 

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் 75
நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே

பொருள்:
அன்பினால் தன்னைத் தொழும் அடியார்களுக்கு அன்பே உருவாயவனே !
எல்லாமும் தானே ஆகி, எதுவும் தானாக இல்லாது இருக்கின்றவனே !
சுடருருக்கொண்டவனே ! அடர்ந்த இருளாகவும் இருப்பவனே !
பிறப்பு என்பதே இல்லாத பெருமை உடையவனே !
முதலாக இருப்பவனே ! இறுதியாகவும் இடைப்பட்ட நிலையாகவும்
ஆகி இத்தத்துவங்கள் எல்லாம் கடந்தவனே !
(காந்தம் போல) என்னை ஈர்த்து என்னை ஆளாக –
அடியவனாகக் கொண்டு அருளிய என் தந்தைக்கும் தலைவனே !
உன்னைத் தமது கூர்மையான மெய்யறிவின் துணையாகக் உணர்கின்ற பெரியோர்களுடைய சிந்தையின்
பார்வை வியத்தற்கு உரிய பார்வை ! அவர்களுடைய ஆராயும் திறன் வியத்தற்கு உரிய ஆய்வுணர்வே !

error: Content is protected !!