KYA-22

KYA-22

                        காலம் யாவும் அன்பே 22

 

அஷ்டசேனாவின் மனதில் பலப்பல எண்ணங்கள் தோன்றி அன்று முழுதும் அவனைத் தூங்க விடாமல் செய்தது. எப்போது அந்தச் சித்தரைப் பார்க்கலாம் என்று துடித்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கென்று யாரும் சொந்தங்கள் கிடையாது, அவனது பாட்டியைத் தவிர. அவரும் இவனை வளர்த்து ஆளாக்கிய பின்னர் இறைவனடி சேர, வர்மா மட்டுமே அவனுக்கு உறுதுணையாக இருந்தான்.

எல்லாமே அவனுக்கு வர்மா மட்டும் தான். அவனுடைய கஷ்டநஷ்டங்களில் அவனோடு இருந்து காத்தவன். பாகிரதி அவனுக்குக் கூடப் பிறக்காத தங்கையாகிப் போனாள். இருவர் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருந்தான்.

வர்மா அவனை தன்னோடு வந்து தங்கிக்கொள்ளச் சொன்னபோது, அவர்களின் மகிழ்ச்சிக்கு ஒரு போதும் தான் தடையாக இருக்கக் கூடாது என்று மறுத்துவிட்டான்.

எப்போதும் இருவருக்கும் தான் பக்கபலமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவன். இப்போது பல திட்டங்களை தன் மனதில் வைத்திருந்தான்.

வர்மாவிடம் சேனா , “எப்போது நாம் அவர் உடலைப் பாதுகாக்க வேண்டும் ? அவர் எங்கு செல்கிறார்?” என்று கேட்க,

“ இன்று இரவு நாம் அங்கு போகலாம் . அவர் எங்கு செல்கிறார் என்று எனக்கும் தெரியாது நண்பா! போய் அறிந்து கொள்வோம். அவர் கூடு விட்டு கூடு பாய்ந்து செல்வதை நீயும் பார்க்கலாம்” என்றவன் இரவு அவனோடே உணவுண்ண வைத்து அழைத்துச் சென்றான்.

வர்மாவிற்கு அவர் தனது மூதாதையர் என்ற உணர்வு பெருமிதமாக இருந்தது. அத்துடன் அவர் தனது ஆராய்ச்சிக்கு உதவதாகச் சொன்னதும் நிறைவாக இருந்தது. வாழ்வில் எதையோ சாதிக்கப் போகும் திருப்தி அவன் முகத்தில் தெரிந்தது. ஆனால் சேனா யோசனையிலேயே வந்தான்.

அவன் முகத்தைப் பார்த்த வர்மா , “ என்ன நண்பா! என்ன யோசனை ? அவர் உடலை எப்படி பாதுகாக்கப் போகிறோம் என்றா..?” சிரித்தபடி கேட்க,

அவனும் லேசான விரக்திப் புன்னைகையை சிந்தினான்.

“இல்லை இந்திரா. வேறு சிந்தனை. அந்த சித்தர் கிளம்பும் முன் சிலவற்றை அவரிடம் கேட்க விரும்புகிறேன்! அதை விடு…” எனப் பேச்சை மாற்ற , அந்த வெட்டவெளி இடத்திற்கு வந்தனர்.

அந்த சித்தர் ஒரு இறந்த கிளியின் முன்பு அமர்ந்து தியானத்தில் இருந்தார்.

இவர்கள் வரும் அரவம் கேட்டதும் விழித்துக் கொள்ள,

“ வாருங்கள்” என அன்போடு வரவேற்றார்.

அந்தக் கிளி இருவரின் கண்களிலும் பட, இன்று அவர் எடுக்கப் போகும் அவதாரம் அது தான் என்று புரிந்து கொண்டனர்.

“ஐயா! இவன் தான் என்னுடைய நண்பன் அஷ்டசேனா! இவனுக்கு உங்களிடம் ஏதோ கேட்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டே வந்தான்.” தாழ்மையாக அவரிடம் கேட்டான் இந்திரவர்மா.

சேனாவின் எண்ணங்களை ஏற்கனவே தெரிந்தவர், லேசான புன்னகையுடன், “நீ கேட்கப் போவதும், உன்னுடைய ஆசையும் நிறைவேறும். ஈசனிடம் உத்தரவு கேட்ட பிறகு நான் நாளை இரவு இதே நேரத்திற்குத் திரும்பிவிடுவேன்.

நாம் அப்போது பேசுவோம்.” சேனாவைப் பார்த்துக் கூறியவர் ,

“ அதே போல நான் வந்த பிறகு , நீ ஆசைபடும் இன்னொரு உலகை அடைய வழி காட்டுகிறேன். அதில் பல சிக்கல்கள் உள்ளது. அதையும் சொல்கிறேன். அதன் பிறகு நீ முடிவை எடு” என வர்மாவிடம் கூறினார்.

வர்மா , “இதில் என்ன சிக்கல் வரும் ஐயா? எதுவாக இருந்தாலும் நான் சந்திக்கத் தயாராகத் தான் இருக்கிறேன். அதை நீங்கள் வந்து எனக்கு சொல்லும் வரை நான் பொறுமையாக காத்திருப்பேன்.” பெருமிதமாகச் சொல்ல

“இன்னொன்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு நல்ல விஷயங்கள் நடந்தாலும் அதைத் தடுக்க தீய சக்தி உடன் வரும். இன்று நான் சென்ற பிறகு என் உடலுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அது மறைமுக தீய சக்திகள் செய்யும் வேலை. அது எதுவும் செய்யாமலும்  இருக்கலாம். எதற்கும் நான் மந்திரக் கட்டு போட்டுவிட்டு தான் செல்வேன்.

நான் திரும்பும் வரை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.” என்று சொன்னவர் கண்மூடி சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.

பின் அவரது உடல் படுத்த நிலைக்குச் செல்ல , அருகில் இருந்த கிளி சற்று நேரத்தில் உயிர் பெற்றது.

அவரின் ஆன்மா அங்கு குடியேறியதைப் புரிந்து கொண்டனர்.

“கீ…கீ…”என கத்திக் கொண்டே அந்தக் கிளி பறந்தது.

இருவரும் நேரில் நடந்த சம்பவத்தால் ஆச்சரியப் பட்டுக் கொண்டு, அவரின் உடலின் அருகில் அமர்ந்திருந்தனர்.

வர்மாவிற்கோ சேனா அப்படி என்ன சித்தரிடம் கேட்கப் போகிறான் என்று ஒரு மூலையில் அரித்துக் கொண்டே இருந்தது. ‘எதையும் தன்னிடம் மறைக்காத சேனா, இதை மட்டும் ஏன்  சொல்லவில்லை’ என்று நினைத்தாலும் அவனை அதற்கு மேல் வற்புறுத்திக் கேட்கும் எண்ணம் வரவில்லை.

‘சீக்கிரம் ஒரு பெண் பார்த்து அவருக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்று ரதி சொன்னது எவ்வளவு உண்மை . இல்லையென்றால் இப்படி எதாவது சிந்தித்துக் கொண்டே இருப்பான்’ நண்பனை சம்சார பந்தத்தில் தள்ள கணவன் மனைவி இருவரும் திட்டம் போட்டு வைத்திருந்தனர்.

அன்றிரவு சேனாவும் வர்மாவும்  உறங்காமல் தங்களின் ஆராய்ச்சி பற்றிப் பேசிக் கொண்டிருக்க,

லேசாகக் காற்று வீச ஆரம்பித்தது. இதமாக இருந்தது. இருவரும் அதை ரசிக்க, தூக்கம் கண்ணை இழுத்தது. சற்று கண்ணை அசரப் பார்க்க,

திடீரென வேக மெடுத்து புயல் காற்றுப் போல் ஆனது. இருவரது உறக்கமும் கலைந்து படபடப்பு தொற்றிக் கொண்டது. இருவரும் எதிர்க்க முடியாமல் திணற, சுற்றி இருந்த தடுப்புக் கூரைகள் காற்றில் ஆட, அவற்றைப் பத்திரமாக இருவரும் பிடித்து நிறுத்தினர். சித்தரின் உடல் மட்டும் அசையாமல் இருந்தது.சுமார் அரைமணி நேரம் போராடிய பின்னர்,

இது ஒரு வேளை தீய சக்தியின் செயலோ என்று நினைக்கும் முன்பு , சட்டென எதுவும் நடக்காதது போல அனைத்தும் நின்றது.

இருவரும் சற்று நேரத்தில் அசந்து , அலுத்து அமர்ந்துவிட்டனர்.

அடுத்து என்ன நடக்கும் என்று யோசித்த படியே விடிய விடிய விழித்திருந்தனர்.

மறுநாள் காலை சூரியன் உதித்த பின் தான் களைப்புத் தெரிந்தது.

பசி தாகம் ஏதுமின்றி இருவரும் நாள் முழுக்க அங்கேயே இருந்தனர்.

உணவு எடுத்து வருவதாகச் சொன்ன ரதியையும் வேண்டாமென்று தடுத்திருந்தான் வர்மா.

ஒரு வழியாக அந்த நாளும் முடிவிற்கு வர, சூரியன் மறைந்த சமயம்  கிளியும் பறந்து வந்தது.

சித்தர் மீண்டும் தன் உடலுக்குள் புகுந்தார்.

அவரை கண்டதும் இருவரது களைப்பும் தீர்ந்தது . இருவரையும் பார்த்து, “ ஈசன் அருள் கிடைத்தது. நீங்கள் கோயில் கட்ட அமைத்துக் கொடுத்த இடத்திலேயே ஈசன் வருவார்” மகிழ்ச்சியோடு சொல்ல,

‘எப்படி?’என்று இருவரும் குழம்பினர்.

“ அது எப்படி சாத்தியமாகும் ஐயா. அங்கு ஏற்கனவே அவர்கள் மூலவர் சிலை செய்து பிரதிஷ்டை செய்ய தயாராக உள்ளார்களே! அப்படி இருக்க சுயம்புவாக  எப்படி தோன்றுவார்.?” வர்மா தன் சந்தேகத்தைக் கேட்க,

“ நீங்கள் நினைப்பது போல அவர் மூலவராக அங்கே இருக்க விரும்பவில்லை. அமைதியான இடத்தில் குடியிருக்க எண்ணியிருக்கிறார்.

அவர்கள் கோயில் கட்டும் இடத்தில் மூலவர் சன்னிதிக்குக் கீழே ஒரு சுரங்கம் அமைக்கச் சொல்லுங்கள்.

ஆனால் எதற்காக என்ற காரணத்தை  எதையும் சொல்லாதீர்கள்.

வர்மா, இங்கு தான் நீ தேடிய உன் ஆராய்ச்சி அரங்கேறப் போகிறது. கற்பகிரகத்துக்கு அடியில் சுரங்கம் அமைத்து பின் அதை மூடிவிட வேண்டும். யாரும் அந்த இடத்தை  நெருங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

அங்கே  இருபதடி ஆழம் கொண்ட கிணறு வெட்டு.

நீ கிணறு வெட்ட வெட்ட , என் அப்பன் ஈசன் உன்னை ஆட்கொள்வான். உனக்கு நீரிலிருந்து தோன்றி காட்சி தருவான் என் நீலகண்டன்.

அவன் வெளிப்பட்ட பின் என்னை நினைத்துக் கொள். நான் வருவேன். வந்து உன் ஆராய்ச்சி நடக்க வழி சொல்கிறேன்” அடுத்து நடக்க வேண்டியவற்றை தெளிவாக உரைத்தார்.

இருவரும் சரி என்றவுடன் , சேனாவை அழைத்தார். “நீ என்னிடம் கேட்க வேண்டியதை இப்போது கேள்” என்றார்.

வர்மாவைத் திரும்பிப் பார்த்தவன், அவன் என்ன நினைத்தாலும் பரவாயில்லை தன் கோரிக்கையை அவர் முன் வைத்தான்.

அவர் முன் மண்டியிட்டு,

“ஐயா, எனக்கு இல்லற வாழ்வில் நாட்டமில்லை. எப்போதும் என் நண்பனுக்கு உதவியாக இருக்க வேண்டும். எத்தனை ஜென்மமெடுத்தாலும் அவனுக்கு நான் உதவி செய்ய வேண்டும். அதனால் நானும் தங்களைப் போல சித்தி பெற்று சந்நியாசியாக இருக்க ஆசைப் படுகிறேன்.” கரம் குவித்து அவரிடம் வேண்ட,

வர்மா அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தான். தானும் ரதியும் இவனுக்காக போட்டு வைத்த திட்டங்கள் ஒன்றுமில்லாமல் போனதும் அதை விட எந்தக் காலத்திலும் தனக்கு உதவ வேண்டும் என்று அவன் நினைப்பதும் சேர்ந்து அவனுக்கு கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.

இப்படி ஒரு நண்பனும் மனைவியும் கிடைக்க தான் எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தோமோ என்று நெஞ்சை அடைத்தது.

“சேனா..!” உணர்ச்சிப் பெருக்கில் அவனை எழுப்பி அனைத்துக் கொள்ள,

“ என்ன இது நண்பா..” என முதுகைத் தட்டி அவனைத் தேற்ற,

“ எதற்க்கடா உனக்கு இந்த சந்நியாசம். வேண்டாம், நானும் ரதியும் உனக்கு ஒரு அழகான பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம்.” அவனை மண்மாற்ற முயல,

“ இல்லை இந்திரா, எனக்கு அந்த வாழ்க்கை சரிப்பட்டு வராது. எனக்கு அதில் நாட்டமும் இல்லை. என் வழி இது தான் என தீர்மானித்து விட்டேன். எனக்கு அது தான் திருப்தி அளிக்கும். என்னை அந்தப் பாதையிலேயே விட்டுவிடு” தீர்மானமாக உரைத்தான்.

இடையில் பேசி அவர்களைக் கலைத்தார் சித்தர்.

“ அவன் அதற்காகப் பிறந்தவன் தான். பற்றறு வாழ்ந்து விட்டான்.இனி அவனை நீ திருமணத்தில் தள்ளினாலும் அவனால் ஈடுபாடோடு வாழ முடியாது.  

ஒரு மனிதன்,தன் வாழ்வில் காமம், அர்த்தம், தர்மம் மற்றும் மோக்ஷம் என்பதைப் பெற வேண்டும் என்று தான் அர்த்த சாஸ்த்திரம் சொல்கிறது.

அதாவது காமத்தை துறந்த ஒருவன், அதில் ஆசை இல்லாமல் இருப்பவன் அல்லது சலித்துப் போய் வேண்டாமென ஒதுக்கியவன், அடுத்து

அர்த்தம் –  உடை , நகை, பெயர் , புகழ் , ஆடம்பரம் போன்ற லௌகீக வாழ்வைக் கடந்து

தர்மம்- வாழ்வில் தர்மத்தைக் கடைப்பிடித்து நடந்தால்  தான்

மோக்ஷம் என்னும் இறையை அடைய முடியும்.

இதில் ஏற்கனவே அவன் மூன்றையும் கடைபிடிக்கிறான். அவனுக்கு தேவை மோக்ஷம் மட்டுமே. இறைவனை அடையும் வழியை நான் அவனுக்குச் சொல்லிக் கொடுக்க காத்திருக்கிறேன்.

அவன் என்னைப் போன்ற சித்தனாக உருவாக வேண்டும் என்பது அவனது தலைவிதி. அதை உன்னாலோ அல்லது என்னாலோ மாற்ற முடியாது.

அவனுக்கு இருப்பது ஒரு கடன், நன்றிக்கடன். அது முடிந்த பின் அவனே இறையை அடைவான்.

இருவரும் இதை உணருங்கள். அவரவர்களின் கடமையை செய்வதே சிறந்த பனி. சென்று வாருங்கள்.” என வாழ்வில் அர்த்தத்தை விளக்கி இருவரையும் அனுப்பி வைத்தார்.

அவர் சொல்வதில் இருக்கும் உண்மையை அறிந்தான் வர்மா. தன் நண்பனை நினைத்து பெருமிதம் கொண்டான்.

மனதில் இருந்த பெரும் பாரம் இறங்கியாதாக சேனாவும் உணர்ந்தான். தன் வாழ்வின் பயனை அடைந்துவிட்டான். அவனது ஒரே கடமை தனக்கு உதவிய நண்பனுக்கு  தான் உதவ வேண்டும் என்பதே. அதை நிச்சயம் அவன் காலத்திற்கும் இருந்து செய்வான்.

இருவரும் மனச்சாந்தியுடன் சென்றனர்.

அடுத்தநாளே சித்தர் தங்களுக்குக் கொடுத்த பணியைச் செய்ய அந்த ஊருக்குப் புறப்பட்டனர்.

கோயில் கட்டுமானப் பணிகள் செவ்வனே நடந்துகொண்டிருந்தது. கோயில் கட்டும் ஊர் பெரியவரைச் சந்தித்து சுரங்கம் அமைக்க வேண்டும் என்று சொல்ல, அவர் மறுத்தார்.

“ ஐயா இங்கிருக்கும் கோயில் அமைப்புப் படி நிச்சயம் ஒரு சுரங்கம் நீங்கள் அமைக்க வேண்டும், இல்லையென்றால் நீங்கள் பாவத்தை சேர்த்துக் கொள்ள நேரிடும்” என வர்மா அவரை சற்று பயமுறுத்த,

வேறு வழியின்றி ஒத்துக் கொண்டார்.

“ஆனால் இதை நீங்கள் ரகசியமாக உங்கள் ஆட்களை வைத்துச் செய்யுங்கள். நாங்கள் கூடவே இருக்கிறோம்.” சேனாவும் உடன் சொல்ல,

பயபக்தியுடன் அதற்கான வேலைகளைச் செய்ய உத்தரவிட்டார்.

திருவாசகம்:

திருநீற்றுப் பதிகம்

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே

திருநீறானது, மந்திரச் சொல் போன்று அச்சம் நீக்கி, வேண்டிய நற்பயனைத் தருவது ஆகும். வானவர்கள் திருநீற்றைஅணிகின்றனர். மனிதர்களுக்கு இது, வானவர்களை விட மேலானதாகி விளங்குவது. அழகினைத் தந்து பொலியும்திருநீறு, துதிக்கப் படும் பொருளாக உள்ளது. உமையவளைப் பாகங் கொண்ட ஆலவாய் அண்ணலாகிய ஈசனின்திருநீறு இத்தகையது ஆகும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!