KYA-25
KYA-25
காலம் யாவும் அன்பே 25
இருவரின் ரத்தத்தில் இருந்த திசுக்களை சித்தர் சொன்ன முறையில் பதப்படுத்தி வைத்தான் சேனா.
ரதியும் வர்மாவும் சேர்ந்து அன்று பூஜை செய்துகொண்டிருந்தனர். அவனது ஆராய்ச்சிக்கான நேரம் நெருங்குவதாக ஏனோ அவனுக்குள் ஒன்று சொல்லிக் கொண்டே இருந்தது.
ஆனால் அதற்குமுன் சித்தரிடம் கேட்டுத் தெளிந்து கொள்ள வேண்டியது நிறைய இருந்தது. நாம் நினைத்த நேரத்தில் அவர்களை கண்டுவிட முடியாதே! அவர்கள் விரும்பினால் மட்டுமே அது சாத்தியம்.
சித்தர் கொடுத்த சிவலிங்கத்தின் முன்பு அமர்ந்து அவரைக் காண வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்க, அவனது அருகிலேயே தோன்றினார் பரஞ்சோதி.
“ஐயா!” என பூரித்துப் போய் திரும்ப,
“ உனக்கு என்னென்னே கேட்க வேண்டுமோ கேள்” நேராக விஷயத்திற்கு வந்தார்.
“என்னுடைய ஆராய்ச்சி இன்னொரு உலகம் இருக்கிறதா ? அங்கு எப்படிச் செல்வது? காலத்தில் பயணம் செய்வதால் நான் மீண்டும் இங்கு வரும் போது இந்த உலகம் நிச்சயம் பல வருடங்களைக் கடந்திருக்கும். ஏனெனில் நான் அப்போது ஒளியின் அளவைப் பொறுத்து பயணம் செய்துகொண்டிருப்பேன்.
அப்போது என் மனைவி தனியாக இங்கே வாழவேண்டும். அதை நான் ஈடு செய்ய, இங்கு வந்த பிறகு, மீண்டும் அதே காலப் பயணம் செய்து அவளுடைய கடந்து போன அந்த வாழ்விற்குச் சென்றால் , அப்போது நான் முன்பு வேறு உலகிற்குப் பயணித்தது இல்லை என்று ஆகிவிடும். ஒரு முரண்பாடு உண்டாகிவிடும்.
ஒரு வேளை நான் மீண்டும் வராமலே இருந்துவிட்டால், அவளுடைய வாழ்வு என்னை நம்பி நிராசையுடனேயே முடிந்தேவிடும்.
நான் கண்டுபிடித்ததை சொல்லி மகிழக் கூட அவள் என்னுடன் இருக்கமாட்டாள். பிறகு நான் என் வாழ்வில் இன்பத்தை தொலைத்தவன் ஆகிவிடுவேன்.
இது அனைத்திற்கும் எனக்கு ஒரு தீர்வு வேண்டும்.” கவலையுடன் அவரிடம் கேட்க,
அனைத்தையும் அமைதியாக அவன் அருகே நின்று பார்த்துக்கொண்டிருந்தாள் பாகீரதி. இத்தனை சிக்கலை உண்மையில் அவள் மனம் ஏற்கவில்லை.
இருவரும் சித்தரின் பதிலுக்காகக் காத்திருந்தனர். அவரோ இருவரையும் பார்த்துவிட்டு,
“நான் உனக்கு முன்பே சொல்லிவிட்டேன். இதில் பல சிக்கல்கள் உள்ளது. எல்லாவற்றுக்கும் நானே தீர்வு சொல்ல முடியாது. இப்போது நீ தான் அனைத்தையும் யோசித்து முடிவு செய்ய வேண்டும்.
காலத்தில் நீ பயணம் செய்தாலும், அதன் அளவைக் கணித்து மீண்டும் சரியான நேரத்திற்கு நீ திரும்பிவிடு. அதுவே உனக்குச் சிறந்தது. இன்று இரவு அந்த பாதாள சிவன் கோவிலுக்கு வந்துவிடு!” அவன் கேட்டதற்கு விடை சொல்லாமலே சென்றுவிட்டார்.
ரதி மனதில் கணத்த பாரம் ஏறிக்கொண்டது. அவன் சென்று திரும்பும் காலம் வரை தான் உயிருடன் இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள்.
ரதி எப்படி உணர்கிறாள் என்று வர்மா நன்றாகவே புரிந்துகொண்டான். அன்று இரவே தான் கிளம்பவேண்டும் என்று சித்தர் சொன்னதனை மனதில் வைத்துக் கொண்டு, மேலும் அதைப் பற்றிப் பேசி அவளை துன்பத்தில் ஆழ்த்தாமல் , அன்று முழுதும் அவளுடன் ஆனந்தமாகக் கழித்தான். பகலென்றும் பாராமல் காதல் செய்தான்.
ரதியுடன் சேர்ந்து சமைத்து , உண்டு பின் அவளைத் தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றான்.
இதற்குப் பிறகு அவளை எப்போது காண்போமோ என்ற உணர்வில் அவளை தன் விழிகளால் அங்குலம் அங்குலமாக அளந்தான். நெற்றி முதல் பாத நகம் வரை கண்களால் வருடினான்.
அவளின் அந்த அழகை எத்தனை முறை ரசித்தாலும் அவனுக்குள் மேலும் அவள் மேல் காதல் பெருகிக்கொண்டே தான் இருந்தது.
மனதில் இருந்த வலியையும் தாண்டி கணவன் பார்வை கூச்சம் தர,
“அத்தான் , போதும்..” முகத்தை தாழ்த்திக் கொண்டாள்.
அவளது குரல் கூட தன்னைத் தூண்ட போதுமானது என்றுனர்ந்தான்.அவளின் முகத்தை கைகளில் ஏந்தியவன்,
“ ரதி! நான் உனக்காகவே சீக்கிரம் திரும்பி வர வேண்டும். நிச்சயம் வருவேன். அதுவரை நினைவில் இருக்கும்படி எதாவது…” அவளது இதழ்களை குறிவைத்து பார்வை செல்ல,
அவனது கழுத்தில் மாலையாக தன் கைகளைக் கோர்த்துக் கொண்டு,
“ நிச்சயம் தரேன் அத்தான். உங்களை , என்னை விட்டு பிரிய நான் விடமாட்டேன், சரி சீக்கிரம் கிளம்புங்கள். பொழுது சாய்ந்துவிட்டது.” என அவனை துரிதப் படுத்தினாள்.
மீண்டும் குளித்து அவள் பூஜை அறைக்கு வந்து, பூஜை செய்து, அவனுக்குத் திருநீறு கொடுத்தாள்.
தெளிவாக அனைத்தையும் செய்து கொண்டிருந்தாள். அவளைக் காணவே அவனுக்கு ஆச்சரியாமாக இருந்தது.
கவலை தோய்ந்த முகத்துடன் தன்னை வழியனுப்புவாள் என்று எண்ணிக் கொண்டிருக்க, இப்படி அனைத்தையும் ஒவ்வொன்றாக அவளே செய்வது அவனுக்கு சந்தேகமாக இருந்தது.
‘ஒரு வேளை அதிகமான துக்கத்தை மனதில் போட்டு அழுத்திக்கொண்டதால் இப்படி இரும்பாக இருந்து சமாளிக்கின்றாளோ’ வர்மாவுக்கு மேலும் வலிக்க,
லிங்கத்தை இருவரும் சேர்ந்து விழுந்து வணங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
ஊரும் அடங்கிவிட்டது. அந்தக் காலத்தில் கோவிலை வெறும் தாழ் மட்டும் போட்டுத் தான் மூடிவைத்திருன்தனர்.
அதனால் அவர்களுக்கு உள்ளே செல்வது எளிதாகவே இருந்தது. உள்ளே சென்றதும் கதவை லேசாக சாத்திவிட்டு, அந்த கர்ப்பகிரக மூலையில் அடைத்திருந்த சிறு துவாரத்தை விலக்கிவிட்டு உள்ளே சென்றனர்.
ஏற்கனவே சேனா உள்ளே வந்து தீபம் ஏற்றி வைத்திருந்தான். அதனால் அவர்களுக்கு பாதை தெளிவாகத் தெரிந்தது.
சேனா இருக்கும் தைரியத்தினால் தான் ரதியை தன்னுடன் அழைத்து வந்தான் வர்மா.
இருவரும் லிங்கத்தின் அருகில் வந்தனர். சேனா அங்கு தான் இருந்தான்.
சேனாவிற்கு ரதியைக் கண்டதும் அவள் திடமாக இருக்கிறாள் என்றே தோன்றியது.
“நீ ஏன்னம்மா இங்கே வந்தாய். வீட்டிலேயே இருந்திருக்கலாமே!” பாசமாக அவன் கேட்க,
“எப்படி அண்ணா? அவரை இங்கே அனுப்பிவிட்டு என்ன ஆயிற்று என்று யோசித்துக்கொண்டே என்னால் அங்கு எப்படி இருக்க முடியும்…” சிறு வருத்தம் குரலில் பொதிந்தே இருந்தது.
“ கவலைப் படாதே. அவன் நலமோடு திரும்பி வருவான். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. எப்படியும் நான் அவனை வரவைத்து விடுவேன்” வர்மாவைப் பார்த்து நம்பிக்கையாகக் கூறினான்.
மூவரும் பேசிக்கொண்டிருக்க, ஒரு கழுகின் நிழல் சிவலிங்கத்தின் மேல் படர்ந்தது. சிறிது நேரம் சென்ற பின்னர் அந்த நிழல் நகர்ந்து வந்து சித்தராக மாறினார்.
இதெல்லாம் வெறும் மாயம் மட்டுமல்ல, அது வகை சித்தி பெற்ற நிலை என்று சேனாவும் வர்மாவும் உணரத் தொண்டங்கியிருநதனர்.
மூவரும் அவரின் அருகில் வர, பரஞ்சோதி அவர்களுக்கு முன்னேயே வரமாவிற்கு விளக்கம் அளித்தார்.
“இந்திரா, நீ எதற்கும் தயாரா?” முதல் கேள்வி கேட்க,
மனதில் கவலைகளும், சோகங்களும் இருந்தாலும் அதையும் தாண்டி சென்று பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் திண்ணமாக இருந்தது.
“ஆமாம் ஐயா. என் மனைவியில் சம்மதத்தோடு..” என அவளை அதில் கூட சேர்த்துக் கொண்டான்.
மனைவியான அவளுக்குப் தன் கணவனை நினைத்து எப்போதும் (இப்போதும்)பெருமையே..!
சரியென அவனுக்கு வழி சொன்னார்.
“ இந்த லிங்கத்தின் நீர் சூழ்ந்த பகுதி வழியே உள்ளே சென்று அடிஆழம் வரை நீந்திச்செல். அங்கே நீ இந்த லிங்கத்திற்கு வழி செய்த அந்தச் சுவர் இருக்கும். மீண்டும் உன் விரல் பதித்த அந்த ஐந்து கற்களை அங்கே பொறுத்த வேண்டும்.
அதைச் செய்தவுடன் அந்த மாயக் கதவு தோன்றும். அது தான் இந்த உலகம் ஏற்படுத்திய கடவுளின் கதவு.(star gate). கடந்து செல்வதற்க்கான கதவு என்று வைத்துக் கொள்.
அந்தக் கதவிற்குள் இந்த லிங்கத்தோடு உள்ளே நுழைந்து செல். அது உன்னை நான்காம் பரிமானத்திற்கு அழைத்துச் செல்லும்.
அங்கிருந்து பார்த்தால், இந்த அண்ட வெளி உன் கண்களுக்குப் புலப்படும். அதில் நீ எங்கு வேண்டுமானாலும் பயணப் படலாம்.
இந்த சூரியக் குடும்பம் மட்டுமல்ல, எத்தனையோ சூரியக் குடும்பங்களை உன்னால் காண முடியும்.
மீண்டும் நீ திரும்பி இந்த உலகிற்கு வருவதற்கு முன்னர் , ஒரு விஷயத்தை நினைவில் கொள்.
இந்த உலகில் பல்வேறு இடங்களில் இதே போன்ற கதவுகள் உள்ளது. அதில் நீ எங்கு வேண்டுமானாலும் திரும்பக் கூடும்.
மாறி சென்ற அந்த இடத்தில் இந்த போன்று லிங்கத்திற்கு நீ ஒரு இடம் அமைத்தால் அந்த வழி மூலம் தான் இங்கு இருக்கும் உன் சொந்த இடத்திற்கு வழி தெரியும்.” அவர் சொல்லச் சொல்ல அனைத்தையும் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான் வர்மா.
“வெற்றியோடு திரும்புவாய் !” என அவனது கையில் லிங்கத்தை கொடுக்க ,
அதை அவன் வாங்காமல் ரதியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் மனம் புரிந்து ரதியே அவரிடமிருந்து அந்த லிங்கத்தைப் பெற்றுக் கொண்டாள். பின்பு வர்மாவிடம் அதைக் கொடுக்க, கண்கள் குளமாயின.
வெகுவாக சிரமப் பட்டு தன் துக்கத்தை மறைத்து , அவள் கைகளிலிருந்து அந்த லிங்கத்தை வாங்கிக் கொண்டான் வர்மா . அவனது இடையில் இறுக்கமாகக் கட்டியிருந்த துணியில் இந்த லிங்கத்தை ஒரு புறம் வைத்துக் கொள்ள,
ரதி தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்த அந்த துணிப் பையையும் எடுத்து அவனிடம் கொடுத்தாள். அதில் தான் அவன் அன்று கொண்டு வந்திருந்த ஐந்து கற்கள் இருந்தது.
அதையும் அவள் கையால் வாங்கித் தன் இடையில் சொருகிக் கொண்டான்.
வர்மா கிளம்பும் சமயம் வந்ததென ரதியை ஆறுதல் பார்வை பார்க்க, அதற்கு மேல் அவனைக் கண்டால் தடுத்து விடுவோம் என்று திரும்பி நின்று தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
அவளது தோளைத் தொடப் போனவனைத் தடுத்தான் சேனா.
வேண்டாமென கண் ஜாடை காட்ட,
மனத்தைக் கல்லாகிக் கொண்டு திரும்பி நீரில் இறங்கினான். நீரின் சலசலப்பு ரதியை கலைக்க, திரும்பி அவனை ஒரு முறை பார்ப்பதற்குள், உள்ளே குதித்துவிட்டான் வர்மா.
சித்தர் தன் கடமை முடிந்ததென அங்கிருந்து மறைய, சேனா கண்மூடி தன் நண்பனுக்காக அந்த ஈசனிடம் வேண்டிக் கொண்டிருக்க, அந்த சமயம் தன் மனம் தாளாமல் சட்டென ரதியும் நீருக்குள் குதித்து விட்டாள்.
சத்தம் கேட்ட சேனா , பதறிவிட,
“ அம்மா, ரதி! வேண்டாம் அம்மா, வெளியே வந்துவிடு….” கதறினான்.
ஆனால் அந்தக் குரலைக் கேட்பதற்கு அவள் அங்கு இல்லை. வர்மா சென்ற இடத்திற்கு தானும் சென்று கொண்டிருந்தாள்.
இதை அறியாத வர்மா , சிறிது நேரத்தில் ஆழத்தை அடைந்து , ரதி கொடுத்த கற்களை அந்தப் பாறையில் பொருத்திக் கொண்டிருக்க அந்தக் கதவு திறந்தது.
கதவைத் தொட அவன் சென்ற சமயம் ரதியும் வந்து சேர, அவனது கையைப் பிடித்துக் கொண்டாள்.
அவளை அங்கே சற்றும் அவன் எதிர்ப்பார்க்கவில்லை. இன்ப அதிர்ச்சியில் அவளை அனைத்துக் கொண்டான்.
எப்போதும் அவனோடு சேர்ந்து இருப்பதாக வாக்களித்தவள் இப்போதும் அதை நிறைவேற்றினாள்.
அவளையும் அழைத்துக் கொண்டு அந்தக் கதவைப் பார்க்க, ரதிக்கு அங்கே ஒன்றும் தெரியவில்லை.
“கதவு தெரியவில்லை அத்தான்” என அவள் கவலையுற, உடனே அதற்கான மார்கத்தை யோசித்தான்.
அவளும் அந்தக் கதவைத் திறக்க வேண்டும் என எண்ண, அவளை இழுத்துச் சென்று அவளது கையை அந்த சுவரில் பொருத்திய கற்கள் மேல் வைத்தான். அந்த ஐந்து கற்கள் கீழே விழ, அதை மீண்டும் எடுத்து வைத்துக் கொண்டான்.
இப்போது ரதிக்கும் கதவு தெரிய, இருவரும் முதல் அடி எடுத்து வைத்து உள்ளே சென்றனர்.
திருவாசகம்: