KYA 32

KYA 32

காலம் யாவும் அன்பே 32

வாகீ வீட்டிற்கு வருவதற்குள் , இயலை தூக்கி அவளுக்கு உணவு கொடுத்து சற்று தெம்பு வர வைத்திருந்தனர்.
இருவருக்குள்ளும் என்ன நடக்கிறது என்று ஆகாஷ் வந்தனாவிற்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் இப்போது விஷயம் சரியில்லை என்பது மட்டும் நன்றாகப் புரிந்தது.
இயல் வாகீயை விரும்புவது இருவரும் அறிந்ததே. அதே சமயம் வாகீயும் அவளை நேசிக்கிறான் என்பது வாகீயின் செயலில் இருந்து ஒருவாறு புரிந்து கொண்டு தான் இருந்தனர்.
இப்போது எதையும் கேட்டு இயலை தொந்தரவு செய்ய விரும்பாமல் அவளிடம் நீருக்குள் சென்றது பற்றிக் கேட்டான் ஆகாஷ்.
“அது… ஒரு பெரிய மாஜிக் கதை.. கேட்டா ரெண்டு பேரும் ஷாக் ஆயிடுவீங்க..” பழைய தோழமையுடன் பேச,
“அப்படி என்ன கதை.. சொல்லு அந்த மேஜிக்க…” வந்தனாவும் பக்கத்தில் வந்து அமர,
“ நான் தண்ணீருக்குள்ள போய் வாகீ கைய பிடிச்சுக்கிட்டு அங்க தெரிஞ்ச மாயக் கதவுக்குள்ள போன மாதிரி ஒரு பிரம்மை… அப்போ அங்க எங்களையே பார்த்தோம்…” இயல் நடந்ததை அப்படியே சொல்ல ஆரம்பிக்க, இருவரும் வாய் பிளந்து அவள் கூறுவதை கேட்டனர்.
இதற்கிடையில் கோபமாக வெளியே சென்ற வாகீஸ்வரன் வெகு தூரம் நடந்து சென்றான்.
பாதி தூர நடைக்கு மேல் அவனால் இயல் மேல் கோபத்தை தாக்குப் பிடித்து வைத்துக் கொள்ள முடியவில்லை.
அவளின் துடுக்குப் பேச்சும் நொடிக்கு ஒரு முறை பாவனை காட்டும் கண்களும் , தனக்கு எதுவும் நேரக் கூடாது என்று தனக்காக நீருக்குள் வந்த அவளது காதலும் அதற்கு மேல் கோபம் கொள்ள விடவில்லை.
கோவிலுக்கு செல்லும் பாதையில் ஒரு புல் மேடு இருக்க, அங்கேயே அமர்ந்தான். இரவும் நிலவும் அவன் மனதை மாற்றத் தொடங்கியது. ஆனாலும் அவளுடைய அந்த விடாப்படியான ஈகோ அவனை முழுதாக அவளிடம் செல்ல விடாமல் தடுத்தது.
அவளே இறங்கி வரட்டும் என்று தான் தோன்றியது. கோபம் இல்லை… ஒரு வித ஊடல் , அவனுக்குள் புகுந்தது.
அந்தத் தரையில் படுத்து வானில் இருக்கும் நட்சத்திரங்களைப் பார்க்கத் தொடங்கினான். மீண்டும் வர்மா நினைவு வர,
சேனா சொல்லவந்ததை கேட்காமல் தான் எழுந்து சென்றது இப்போது தோன்ற, அவன் தலையை வருடியது ஒரு கை.
சட்டென எழுந்து அமர்ந்தவன் , அங்கே சேனா இருப்பதைக் கண்டான்.
“என்னை மன்னிச்சிடுங்க… இயல் எழுந்து வந்ததைப் பார்த்ததும், என்னால என்னை கட்டுப்படுத்த முடியல…. அதுனால தான் உடனே எழுந்து போயிட்டேன்…” வருந்தினான்.
“ நீ அந்த நேரத்துல எழுந்து போனதுல எனக்கும் மகிழ்ச்சி தான். உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சதே நான் தானே! உங்களுக்குள்ள இன்னும் அன்னியோன்யம் வராம இருக்கறது தான் ஆச்சரியமா இருக்கு..” அவன் அருகில் அமர்ந்தார்.
வாகீ இதற்கு என்ன சொல்வது என்று தெறியாமல் தரையைப் பார்த்துக் கொண்டிருக்க,
“ உங்க ரெண்டு பேருக்கும் வர்மா ரதிய பார்த்த பிறகு நிச்சயம் அந்தத் தாக்கம் கண்டிப்பா உருவாகியிருக்கணும். அப்படி உண்டானாதான் என்னோட வேலை சுலபமா முடியும்… அதுக்குத் தானே இத்தனை ஆண்டுகள் நான் தவமிருக்கறேன்..” சூசகமாகப் பேசினார் சேனா.
“ நீங்க சொல்றது எனக்குப் புரியல… அப்போ நீங்க எங்களால தான் வர்மாவிற்க உதவ முடியும்னு சொன்னீங்க… அதைத் தான் சொல்றீங்களா… கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.. நான் என்ன செய்யணும். கண்டிப்பா செய்யறேன்.”
“நீ மட்டும் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் இருவரும் சேர்ந்தால் தான் செய்ய முடியும்…” சேனா உள்ளர்த்தம் கொண்டு சொல்ல,
“அது தான் சேர்ந்துட்டோமே… நீங்க தான எங்கள சேர்த்து வெச்சீங்க… அப்பறம்..” குழப்பமாக வாகீ கேட்க,
‘வர்மா..உன் ரத்தத்திற்கு இவ்வளவு தான் சக்தியா…’ என மனதில் நினைத்த சேனா….
“ நான் சொல்லும் சேர்க்கை உனக்குப் புரியலையா…. நீ வர்மாவோட ரத்தம்…. வர்மா எந்த அளவு ரதிய நேசிச்சானோ… அதுல பாதிகூட உங்க ரெண்டு பேர் கிட்டயும் நான் பார்க்கல…” சேனா சற்று சலிப்பாகவே உணர்ந்தார்.
‘எனக்கு இருக்கு… அந்த ஈகோ புடிச்சவ இருந்தும் ஒதுக்க மாட்டேங்கறா.. நான் மட்டும் சொல்லி என்ன பண்றது..’ அவன் மனம் பேச, அதை நன்றாகவே உணர்ந்தார் சேனா.
“நாங்க எப்படி உருவானோம் அதை முதல்ல சொல்லுங்க…. அதன் பிறகு நடக்க வேண்டியதைப் பார்ப்போம்…” இயல் மேல் இருந்த கடுப்பை வேறு விதமாக மாற்றினான்.
“ ம்ம்.. அது ஒரு சாதாரண விஷயம். நான் வர்மா ரதியுடைய ரத்தத்தை பதப்படுத்தி அவர்களது ரத்த அணுக்களை சேகரித்து வைத்திருந்தேன்.
நாள் நட்ச்சத்திரம் , நல்ல மனிதர்கள் என பார்த்துப் பார்த்து கணித்து, ஒரு நாள் உன்னுடைய பெற்றோரை சந்தித்தேன்.
புதிதாக திருமணம் செய்து வந்தர்வர்கள் நான் வந்த கோவிலுக்கு வந்தார்கள். அப்போது உன் அப்பாவிற்கு எதிர்பாராத விதமாக மயக்கத்தை நான் ஏற்படுத்தினேன்.
பிறகு நான் குணப்படுத்துவதாகச் சொல்லி அவரை என்னுடைய ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று, அவனுடைய உடலின் ரத்த அணுக்களோடு வர்மாவின் ரத்த அணுக்களையும் சேர்த்தேன்.
நான் பதப் படுத்தி வைத்திருந்த அணுக்களுக்கு வீரியம் அதிகம். உன் தந்தையின் அணுக்களை விட அது சீராக அவர் உடலில் ஓட ஆரம்பித்தது.
பிறகு , உன் தாய்க்கும் சில மூலிகை விதயை கொடுத்து அதை சாப்பிட்டால் அறிவான குழந்தை விரைவில் பிறக்கும் என ஆசிர்வதித்தேன்.
தாம்பத்தியம் அவர்களிடத்தில் ஏற்படும் போது வர்மாவின் ரத்த அணுக்கள் மட்டுமே முழுவதுமாக உன் தாயில் கருவில் உருவாகும்படி செய்த மூலிகைகள் அவை.
நான் நினைத்த படியே வர்மாவை அச்சுப் பிசகாமல் பெற்றாள் உன் தாய்.
அதே போலத் தான் இயல். அவள் தாய் தந்தையர் என்னைத் தேடி வந்தனர்.
ரதியின் அணுக்களுக்கு வேலை வந்ததை உணர்ந்து , அதே முறையை செய்தேன். இயலும் பிறந்தாள்.
இது தான் நடந்தது. உங்களுக்கு நான் விதித்த படி இருவரும் சந்தித்தீர்கள்.
திருமணமும் செய்து வைத்து விட்டேன். உங்கள் உண்மையான ரத்த உணர்ச்சிகளைப் பெற அவர்களைப் பற்றியும் தெரிய வைத்தேன். ஆனால் இன்னும் நீங்கள் சேராமல் இருக்கிறீர்கள்.” சலித்துக் கொள்ள,
“ எல்லாம் சரி… எங்களால தான் அவங்கள காப்பாத்த முடியும்னு சொன்னீங்க.. அது எப்படி..?” சேனாவின் பேச்சை மாற்ற வாகீ கேட்டான்.
“ நீங்க ரெண்டுபேரும் வர்மா ரதியா உங்கள மாத்திக்கிட்டா தான் அது நடக்கும். நீங்க எப்பவும் நீங்க தான். ஆனால் அவங்கள காப்பாத்த அவங்களா மாறனும். அப்போ தான் அது நடக்கும். உங்களோடப் பிறவியின் நோக்கமே அது தான்.” இப்போது தீவிரமாகப் பேசினார்.
இதை வாகீ எதிர்ப்பார்க்கவே இல்லை. திகைத்துப் போய் அமர்ந்துவிட்டான்.
“நாங்கள் அவர்களாக மாறுவது சாத்தியமா?! மாறிய பின் எப்படி காப்பாற்றுவது…?” வாய் கேட்டதே தவிற, மனம் பதட்டத்தில் இருந்தது.
“நிச்சயம் சொல்றேன் வாகீசா…. அது ஒரு பெரிய கண்டம் தான். நீங்கள் நால்வருமே கடக்க வேண்டிய கட்டம். அதற்கு இன்னும் காலம் இருக்கு…. இப்போதிக்கு நீங்கள் இருவரும் சேர்ந்து சில சடங்குகள் செய்யணும். அதுக்குப் பிறகு தான் நீங்கள் அவங்களா மாற முடியும். நீ வீட்டுக்குக் கிளம்பு. நான் நாளைக்கு வந்து என்னென்ன சடங்குன்னு சொல்றேன்.” அவரும் கிளம்பிவிட,
வாகியின் மனம் கிடந்தது தவித்தது.
“ அவ என்னடானா , நான் அவளை ரதியா நினைச்சு பாக்கறேன்னு சொல்றா…. இவரு என்னடா னா ரெண்டு பேரும் அவங்களாவே மாறணும்னு சொல்றாரு… கடவுளே!
இதுல இவளோட நான் பீல் பண்ணி சேரனும்னு வேற சொல்லிட்டு போய்ட்டாரு…
இவளோட ஈகோ வ விட்டு அவ வெளிய வரமாட்டா ..எங்க போய் அவளுக்கு புரிய வைக்கறது..
நான் மட்டும் ரெண்டு பக்கமும் அடிவாங்கணுமா… இது என்ன கொடுமை… அவரே வந்து நாளைக்கு அவகிட்ட சொல்லட்டும். நான் மட்டும் எத்தன தடவ தான் அவகிட்ட பரிஞ்சு போறது. போனா போகுது சின்ன பொண்ணுன்னு பாத்தா அவளும் என்னை ரொம்ப சோதிக்கறா…யப்பா வர்மா… உன்ன மாதிரி கரெக்ட் பண்ண எனக்கு வரல டா… “புலம்பிய படியே எழுந்து வீட்டிற்குச் சென்றான்.
அங்கே அனைவரும் இயல் சொன்ன கதையைக் கேட்டு பிரம்மை பிடித்தது போல அமர்ந்திருந்தனர்.
“இந்தக் காலம் வரை இன்னும் அவங்க மில்கிவே ல சுத்திட்டு இருக்காங்களா..?!! இப்போ அங்க எத்தனை வருஷம் ஆகிருக்கும்…?” அதி புத்திசாலியாக வந்தனா கேள்வி கேட்க,
“நிச்சயம் அவங்களுக்கு ஒரு ரெண்டு வருஷமாவது ஆகிருக்கும். அதுவரை ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கிட்டு மட்டும் இருக்காங்களா… ? அடக் கடவுளே!! இது ரொம்ப கொடுமை!” ஆகாஷ் வருந்தினான்.
“ அதை நினச்சா எனக்கும் கஷ்டமா தான் இருக்கு.. அப்படி நேசிச்சவங்க இப்படி இருக்கறது கஷ்டம் தான். ஆனாலும் ரெண்டுபேரும் கண்ணுக்கு முன்னாடி இருக்கறது ஒரு ஆறுதல் தான்..” இயல் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வாகீ உள்ளே நுழைய,
அவள் சொன்னது காதில் விழுந்தது.
‘பாத்துக்கிட்டு இருக்கறதே போதுமாம்.. இவ இப்படி பண்ணா.. பாக்கும் பொது எரிச்சல் தான் வரும்..’ மனதில் கருவிக்கொண்டே அவன் அறைக்குச் செல்ல முற்பட,
“ஹெட்.. சாப்பிட்டு அப்றமா தூங்க போங்க. கொஞ்ச உடம்புக்கு தெம்பு வேணும்” ஆகாஷ் அக்கறையாகப் பேச,
அவளை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தான். அவள் முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் அமர்ந்திருந்தாள்.
இயலுக்கு எல்லோர் முன்னிலையிலும் பேச வரவில்லை. அனைவரும் உண்டு சென்ற பிறகு, அவனிடம் பேசலாம் என நினைத்திருந்தாள். அதனால் இப்போது பேசாமல் இருக்க,
அவனுக்கு உள்ளே கொதித்தது. ‘இவளுக்காக நான் ஏன் உண்ணாமல் படுக்க வேண்டும் எனத் தோன்ற,
“தேங்க்ஸ்” என ஆகாஷைப் பார்த்துக் கூறிவிட்டு, டைனிங் டேபிளுக்குச் சென்றான்.
அனைவரும் அவனுடன் சென்று உணவருந்திவிட்டு அவரவர் அறைக்குச் சென்றனர்.
வாகீ மேலே சென்றுவிட, காலையிலிருந்து கதை கேட்ட பிரமிப்பிலும் களைப்பிலும் வந்தனாவும் ஆகாஷும் உடனே உறங்கிவிட்டனர்.
இயலிக்குத் தூக்கம் சிறுதும் வரவில்லை. அவனிடம் சென்று பேசும் வரை நிம்மதியில்லை என்றிருந்தவள், நல்ல சந்தர்ப்பம் கிடைக்க,
மெல்ல அவன் அறைக்கு சென்றாள். வாயில் வரை சென்றவள் அங்கேயே நின்றாள்.
‘இப்போது கதவைத் தட்டினால் , என்னை என்ன நினைப்பார்..! காலைல அப்படிப் பேசிட்டு இப்போ எந்த முகத்தோடு வந்தன்னு கேட்பாரோ!
என்ன நினைச்சாலும் பரவாயில்ல.. நாம புரிஞ்சுக்கிட்டது தப்புன்னு அவர்கிட்ட சொல்லிடனும். அவர பாக்கறப்பலாம் காதலோட இருந்துகிட்டு போலியா சண்ட கூட போடா முடியாது…’ என முடிவு செய்து அவன் அறைக் கதவைத் தட்டினாள்.
ஷார்ட்ஸ் மற்றும் கையில்லாத பனியன் அணிந்து படுக்கையில் படுத்திருந்தவன். ஆகாஷோ என நினைத்துக் கதவைத் திறந்தான்.
அவசரமாக உள்ளே வந்து கதவை சாத்தினாள் இயல்.
அவளை நைட் சூட்டுடன் பார்த்தது முதல் அதிர்ச்சி என்றாலும்.
இரண்டாவதாக அவள் கதவைச் சாத்தியது அடுத்த அதிர்ச்சி.
“என்ன எதுக்கு இப்போ வந்த? , அதுவும் கதவை வேற சாத்தற ?! ‘ வாகீ கேட்டு முடிப்பதற்குள் இயல் அவன் அருகில் நின்றாள். கொஞ்சம் முன்னை சாய்ந்தால் கூட வாகியின் மேல் இடிக்க வேண்டும்.

error: Content is protected !!