காலம் யாவும் அன்பே 34
சேனாவும் ஆகாஷும் மீண்டும் திரும்பி வர, ஆகாஷைப் பார்த்து ‘என்ன?’ என்பது போல சைகை செய்தான் வாகீ.
“நத்திங் ..” என வாய் அசைத்து… ‘ ஹெட்டோட ஹெட் இனி காய போகுது…’ மனதில் நினைத்துச் சிரித்தான்.
ஆனால் வாகீக்கு மட்டும் தான் தெரியும் அவன் இனி வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து களித்து இன்புறப் போகிறான் என்று.இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த வரட்சியான வாழ்வில் இயல் வந்த பிறகு தான் பசுமை பரவ ஆரம்பித்தது.
அதை நினைத்து லேசாக ..மிகவும் லேசாக அவன் உதடுகள் சிரித்தது.
இயல் பார்ப்பதற்கு முன்னால் அதனை மறைத்து, கடுகடுப்பை வரவைத்துக் கொண்டான்.
இயலுக்கு இது சற்று சங்கடத்தை தந்தாலும், மனதிற்குப் பிடித்த அவனுடன் இனி ஒரே அறையில் இருக்கப் போவது ஒரு வித சுகத்தை அளிக்காமல் இல்லை.
உறங்கப் போவதற்கு முன்னும் பின்னும் அவனது வசீகர முகத்தை பார்த்து ரசிக்கலாம் என்ற எண்ணமும் தோன்றவே செய்தது.
‘இந்த மானங்கெட்ட மனச வெச்சுகிட்டு இவன் பக்கத்துல வேற இருந்து போறாடனுமே!’ தன் மனவோட்டத்தை நினைத்து அழுவதா சிரிப்பதா எனக் குழம்பினாள்.
சேனா மீண்டும் அவர்களிடத்தில் வந்து நிற்க,
“பரிகாரம் பண்ணனும்னு சொன்னீங்களே! அதை பத்தி சொல்லுங்க” வாகீ கேட்க,
“ அவசரப் படாதே! நீங்கள் இன்னும் அதற்குத் தயாராகவில்லை. முதலில் இருவரும் நான் சொன்னது போல ஒன்றாக உறங்கி, உண்டு ஒரே அறையில் இருந்துவிட்டு வாருங்கள். பிறகு நான் ஒவ்வொன்றாகச் சொல்கிறேன். இப்போது கிளம்புங்கள். எனக்கு சிவபூஜைக்கு நேரம் ஆகிவிட்டது. வருகிறேன்!” என்றுவிட்டு கோவிலை நோக்கிப் புறப்பட்டார்.
நால்வரும் கிளம்பி தாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு வர,
ஆகாஷ் வந்தனாவிடம் ஏதோ காதில் சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்றான்.
புரிந்துகொண்ட வந்தனா, தங்கள் வேலையில் முதல் கட்டத்தை ஆரம்பித்தாள்.
“ இயல், இப்போவே ரூம் ஷிப்ட் பண்ணிடலாம்..” சற்று சத்தமாகவே சொன்னாள்.
இயல் ‘அதற்குள்ளாக வா..’ என அதிர்ந்து பார்க்க,
விடாமல் ஆகாஷும் , மாடி அறையிலிருந்து வெளியே வந்து எட்டிப் பார்த்து,
“ஹே இயல், நீ ஷிப்ட் பண்ண எல்லாம் எடுத்து வை, நானும் என்னோட ரூம கீழ மாத்திகறேன்.” என அவளின் பதிலுக்காகக் காத்திருக்காமல் உள்ளே சென்று பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பித்தான்.
“வா.. நான் ஹெல்ப் பண்றேன்” என வந்தனா அவளின் அறைக்குச் செல்ல,
செய்வதறியாது விழித்தபடி அறையின் வாசலில் நின்றிருந்தாள் இயல்.
மேலிருந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் வாகீசன். அவளும் அவனைப் பார்க்க,
உதட்டை மடக்கிச் சிரித்தபடி , ஆள் காட்டி விரலை அவளை நோக்கிக் காட்டி, பின் கட்டை விரலைச் சாய்த்து தன் அறையைக் காட்டிவிட்டு , ‘வந்துவிடு என்று ஜாடை காட்டி அவளின் நிலைமையை நினைத்து உள்ளூர சிரித்துக் கொண்டான்.
அவளுக்கு அவனின் செய்கை சற்று கோபத்தை வர வைத்தாலும் வேறு வழியின்றி செல்ல வேண்டுமே என , காலை ஓங்கி தரையில் மிதித்து விட்டு சிணுங்கிக் கொண்டே அறையை காலி செய்யச் சென்றாள்.
அன்று மதியமே அவளது அனைத்துப் பொருட்களும் வாகியின் அறைக்குக் குடி பெயர்ந்தது. அனைத்தையும் வந்தனாவும் ஆகாஷும் எடுத்து வைக்க உதவினர்.
இயல் கீழிருந்து எடுத்துக் கொடுக்க, ஆகாஷ் வாகீயின் அறையில் அனைத்தையும் வைத்தான்.
ஆனால் அவள் உள்ளே இன்னும் செல்லவில்லை.
நாள் முழுதும் மேலே வராமல் கீழேயே இருந்தபடி ஏதோ வேலைகள் செய்து ஒப்பேற்றியவள் ,இரவானதும் மனதில் ஏதோ படபடப்பை உணர்ந்தாள்.
“சாப்பிட வாங்க…..” வந்தனா குரல் கொடுக்க,
வாகீசனும் ஆகாஷும் உணவு மேசையில் ஆஜராகினர்.
இயல் வராததைக் கண்டு ஆகாஷை வாகீ ஒரு பார்வை பார்க்க,
உணர்ந்து கொண்ட ஆகாஷ், “ ஹ்ம்ம்..ஹ்ம்ம் “ தொண்டையை செருமிக் கொண்டான்.
“இயல், சாப்பிட வா.. எல்லாரும் வெய்டிங்….” வெய்ட்டிங்கில் சற்று அழுத்தம் கொடுக்க,
யாரைச் சொல்கிறான் என்று இயலும் புரிந்து கொண்டாள்.
“ எனக்குப் பசிக்கல நீங்க சாப்பிடுங்க…” மொட்டையாகச் சொல்லி அங்கேயே அமர்ந்திருந்தாள்.
ஆகாஷ் இதற்கு என்ன சொல்வது என்று யோசிக்க, அதற்குள் வாகீசனே பேசினான்.
“ வர்மா ..ரதி ரெண்டு பேரோட நிலைமையும் மனசுல இருந்தா… கண்டிப்பா பசிக்கும்…” தட்டை எடுத்து வைத்துக் கொண்டு அவள் காதில் விழும்படி சொல்ல,
அவன் சொன்ன வார்த்தை அவளை அசைத்தது. அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவன் அருகில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள்.
அவளுக்கு ஒரு தட்டை எடுத்து வந்தனா நீட்ட,
“தேவையில்ல.. இதுலையே சாப்பிடறேன்…” என வாகீசனின் தட்டிக் காட்டி சொன்னாள்.
அவளைக் கண்டு தன் புருவங்களை உயர்த்தினான் வாகீ.
ஆகாஷ் “அப்படிபோடு” மெதுவாக வாய்க்குள் சொல்லிக்கொள்ள,
வாகீசன் தன் தட்டில் சாதம் போட்டுக் கொள்ள, இயல் அதில் சாம்பார் ஊற்றினாள்.
நன்றாகப் பிசைந்து தன் வாய் வரை எடுத்துச் சென்றவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் உண்ட பின்பு தான் அந்தத் தட்டில் உண்ண நினைத்துக் காத்திருந்தாள்.
ஆனால் வாகீசன், தன் வாய் வரை எடுத்துச் சென்றதை நிறுத்திவிட்டு சட்டென அவளின் முன் எடுத்த உணவை நீட்டினான்.
அவள் இதை எதிர்ப்பார்க்கவே இல்லை.
அவளையும் அறியாமல் வாய் திறக்க,
அவனது விரல்கள் அவளது உதட்டில் பட, ஊட்டிவிட்டான். அந்த நொடி இருவரிடம் இருந்த விரிசல்கள் மனதில் நிற்கவில்லை.
காதல்…. , மனம் நிறைந்த காதல்!! உயிருக்குள் பொங்கி வழிந்த ஆழமான , ஆயிரம் வருடங்கள்.. நாடி நரம்பெல்லாம் ஊறிப் போயிருந்த அன்பு இருவரின் கண்களிலும் மின்னியது.
வாயில் வைத்த உணவை அவன் விரல்களோடு சேர்த்துச் சுவைத்தாள். அமுதமாக இறங்கியது.
அவளது உதடுகளின் மெல்லிய தீண்டல் அவன் கை விரல்களில் இதம் கொடுத்தது. அந்த செப்பிதழ்களை அளந்த படி விரல்களை எடுத்துக் கொண்டான்.
“இதயம் இடம் மாறியதே…விழிகள் வழி மாறியதே…
இது தானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே…”
அவனுக்குள் பாடல் ஒலித்தது..
மீண்டும் அந்த அழகிய இதழ்களைத் தீண்ட அவனுக்குள் ஆவல் பிறந்தது. அடுத்த வாய் உணவை எடுக்கும் முன், இயல் உணவைக் கையில் எடுத்து அவனுக்கு நீட்டினாள்.
அவளை அர்த்தப் பார்வை பார்த்தவன், பின் வாய் திறந்து அவளது பிஞ்சு விரல்களால் கொடுத்த உணவை ஆசையாக உண்டான்.
வாழ்வில் முதல் முறை ஒரு பெண்ணை ரசித்துக் காதல் செய்ய ஆரம்பித்திருக்கிறான்.
அவளது கையை அவன் வாயிலிருந்து வெளியே எடுக்கும் சமயம் வேண்டுமென்றே அவளது விரலை மெல்லிதாகக் கடித்தான்.
“ஆ…! ஸ்ஸ்…” என கத்தியவள் , பின் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த மற்ற இருவரும் கண்ணில் பட,
இத்தனை நேரம் அவர்களுக்கு ஒரு படமே காட்டிவிட்டோம் என்பது புரிய வெட்கம் அள்ளிச் சென்றது.
உடனே உரிமையாக, “ நீங்க சாப்டுட்டு வைங்க ..நான் சாப்டறேன்” என மெதுவாகச் சொன்னாள்.
அவனும் மறுத்துப் பேசும் எண்ணமின்றி உண்டு முடிக்க, அந்தத் தட்டில் அவளும் உண்டு விட்டு எழுந்தாள்.
வந்தனாவும் ஆகாஷும் மலைத்துப் போய் அமர்ந்திருந்தனர்.
இவர்களா எலியும் பூனையுமாக இருந்தவர்கள் என வந்தனா வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
“டேய்! நீ தான் ரொமான்ஸ்ல கிங் ன்னு நெனச்சேன்.. ஹெட் பின்றாரு டா…” கற்பனையில் சொல்ல,
“ ஹே! வந்தூ…. நானும் உனக்கு ஊட்டிவிடட்டுமா?!” ஆகாஷ் அருகில் வர,
“ம்ம்ம்… நாளைக்கு புதுசா எதாவது ட்ரை பண்ணு.. ஓட்டுன படத்தையே திரும்ப ரீமிக்ஸ் பண்ணி ஒட்டாத… குட் நைட்” அவனுக்கு டேக்கா கொடுத்துவிட்டு அங்கிருந்து ஓடினாள்.
“ இது என்ன டா ஆகாஷுக்கு வந்த சோதனை… ம்ம்ம் இருக்கட்டும்… உன்ன அப்பறம் கவனிச்சுக்கறேன்… முதல்ல நம்ம தல செட்டில் ஆகட்டும்..
சும்மா சொல்லக் கூடாது மனுஷன் நல்லாவே பண்றாரு…இவருக்காக நாம தனியா பிளான் போடா வேண்டியது இல்ல.. அவருக்கே இண்டரெஸ்ட் வந்துருச்சு… எல்லாத்துலையும் கில்லி தான் அவரு..ஹ்ம்ம்” தனக்குத் தானே பேசிக் கொண்டு கை கழுவச் சென்றான்.
வந்தனா அவள் அறைக்குச் சென்று உறங்கிவிட…
ஆகாஷ் அடுத்த கட்ட வேலையாக இயலை வாகீசன் அறைக்கு அனுப்ப அவளைத் தேடினான்.
காலையில் இருந்து அவள் மேலே செல்லாமல் போக்குக் காட்டுவது அவனுக்கும் புரிந்து தான் இருந்தது. அவளை வெளியே சென்று தேட,
அவன் நினைத்தது போல அவள் வாசலில் தான் அமர்ந்திருந்தாள்.
“ இயல்.. என்ன இங்க இருக்க…. ? மேல போ… ஹெட் வர சொல்றாரு…அவர் தூங்கணுமாம். ரூம் லாக் பண்ணனும்.. நீ எப்போ வருவன்னு கேட்டாரு..” தன் கற்பனையை கதையாக அள்ளிவிட்டான்.
“ ஓ! …ம்ம்ம்ம் போறேன் ஆகாஷ்..” எழும்பாத குரலில் சத்தில்லாமல் சொல்ல,
“ என்ன சத்தமே காணும்.. இப்போ தான் நல்லா சாப்பிட்ட போலிருக்கு.. அப்புறம் என்ன… எங்க போச்சு எனெர்ஜி!” கலாய்த்தான்…
“ நக்கலா…”
“ அட! என்னமா நீங்க இப்படி பண்றீங்களே மா… ! உள்ள போ மா.. !” அவளை கட்டாயப்படுத்தி உள்ளே அனுப்பினான்.
அவள் தயங்கித் தயங்கி மேலே செல்ல, இவன் தன் அறை வாசலில் நின்ற படி பார்த்துக் கொண்டிருந்தான்.
வாகீசன் அறையின் முன்னால் நிற்க, அவளை எதிர்ப்பார்த்தவன் போன்று சரியாக அவன் கதவைத் திறக்க,
அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் உள்ளே சென்றாள்.
வேலை முடிந்ததென ஆகாஷும் அவன் வேலையைப் பார்க்கச் சென்று விட்டான்.
***
அறையில் மங்கலான ஒளி விளக்கை எறியவிட்டிருந்தான். அந்த ஒளியில் இவள் தயங்கி நிற்காமல் வேகமாகச் சென்று தறையில் போர்வையை விரித்துப் படுத்துக் கொண்டாள்.
அவனை நேருக்கு நேர் பார்த்துப் பேச அவளுக்கு இப்போது தெம்பில்லை.
‘நேற்று தனியே அவன் அறைக்கு வந்ததற்கு என்னவெல்லாம் பேசினான். இப்போது வேறு வழியே இல்லை! ஆனாலும் நேற்று போல் இல்லாமல் இன்று டிஷர்டும் முழுதாக நைட் பேண்ட்டும் அணிந்து இருந்ததனால் தப்பிச்சேன்..’ என நினைத்தபடியே கண்களை இருக்க மூடிக்கொண்டு படுத்திருந்தாள்.
அவளை உள்ளே அனுப்பிவிட்டு வாகீசன் கதவைச் சாத்திவிட்டு வருவதற்குள் இவள் படுத்தே விட்டாள்.
‘அட.. அதுக்குள்ள பயந்து பூனை போர்வைக்குள்ள போயிடுச்சா..’ அவள் படுத்திருப்பதைப் பார்த்துக் கொண்டே இவன் மெல்ல அவளைத் தாண்டி , கட்டிலில் வந்து படுத்துக் கொண்டான்.
இயல் சற்றும் அசையமால் படுத்திருந்தாள். அறை முழுதும் வாகீசனே நிறைந்திருப்பதாகத் தோன்றியது. அவனது சிறு அசைவைக் கூட கண்மூடிய படியே பார்த்திருந்தாள்.
ஐந்து நிமிட அமைதிக்குப் பிறகு “ஹ்ம்ம்..கும்ம்…..” தொண்டையை செருமினான்.
அப்போதும் அவளிடம் அசைவில்லை.
“ தூங்கற மாதிரி நடிக்கறது ரொம்ப கஷ்டம் மேடம்..” சீரியசாக ஒலிக்க,
கண்ணைத் திறந்து பார்த்தாள்.
“ சேனா நம்மள ஒரே ரூம்ல தங்க மட்டும் சொல்லல… தூங்கறதும் ஒரே…” அவன் சொல்வதற்கு முன்பு எழுந்து அவன் அருகில் வந்து அமர்ந்துவிட்டாள்.
எதற்கு வம்பு.. மீண்டும் அவன் வர்மா ரதி யைப் பற்றி பேசுவான். அதற்கு முன் அவளே வந்துவிட்டாள்.
வந்து அமர்ந்த அவசரத்தில் அவன் கை மீது அமர்ந்து விட்டாள்.
அவனும் அமைதியாகவே அமர்ந்திருக்க, சற்று நேரத்திலேயே தன் தொடையின் கீழே அவன் கையை உணர, சட்டென தள்ளி அமர்ந்தாள்.
“ ஊட்டிவிட்ட கைய நசுக்கனும்னு நெனச்சுட்டே வந்தியா…” வம்பு வளர்த்தான்.
“நீங்களும் தான் ஊட்டிவிட்டப்ப கடிச்சீங்க… நான் கேட்டேனா..!” துடுக்குத் தனம் மெல்ல வெளிவந்தது.
“ஓ! நீ அதை அப்படி நினச்சுக்கிட்டீயா… நான் வேணும்னு பண்ணல.. கொஞ்சம் கொஞ்சமா வர்மாவா மாறனும்ல.. அதுனால அவன மாதிரி இருக்க ட்ரை பண்ணேன்.. எல்லாம் அவங்களுக்காக தான். இதுல என் சுயநலம் எதுவும் இல்ல…” தோளைக் குலுக்கி சாதரமாகச் சொல்லி விட்டு.. முதுகின் பின்னால் தலையணை வைத்து வாகாக அமர்ந்து கொண்டான்.
“வர்மாவா மாற கடிக்கனுமா..?” அவனுக்கு எதிரே அவளும் கட்டிலில் சாய்ந்து கொண்டு கேட்க,
அவளுக்கு ஒரு தலையணையை எடுத்துக் கொடுத்தான். மறுப்பின்றி அதா வாங்கி முதுகை வசதிப் படுத்தினாள்.
“வர்மா..இப்படித் தான் அவன் வைஃப் கிட்ட எதாவது சீண்டிகிட்டே இருப்பான். அதான் நானும் பண்ணேன்…”
அவனது பதில் உண்மை என்பதால் அவனை எப்படி மடக்குவது என்று குழம்பினாள்.
“நான் அந்த சமயத்துல அதை எதிர்ப்பார்க்கல.. ஆனா நல்லா கடிச்சுட்டீங்க..” விரலைப் பார்த்தபடி சொல்ல,
“ அப்படி ஒன்னும் நான் வேகமா கடிக்கலையே.. மெதுவாதான கடிச்சேன்.. இதுக்கே உனக்கு வலிக்குதா.. அப்போ மத்ததெல்லாம்..” சீண்டும் பார்வை பார்த்து கேட்டு வைக்க,
அவனை முறைத்தாள் இயல்.
“ என்ன… சொன்னீங்க…” கூர்மையாகக் கேட்க…
“ என்ன அப்படி பாத்தா நான் பயந்துடுவேனா…வர்மாவா மாற ட்ரை பன்னதுக்கே இப்படி சலிச்சுக்கற.. இன்னும் அவன மாதிரி இருந்தா..”
“போதும் போதும்…” காதை மூடிக் கொண்டாள்.
“ அவங்கள மீட்ட பிறகு இந்த போதும் சொல்லு.. அப்போ விட்டுடறேன்… இப்போ தூங்கு… இங்க…” என அவன் பக்கத்து இடத்தில் கை காட்ட…
அவள் அப்போது தான் கவனித்தாள். அது ஒருவர் மட்டும் தாராளமாக படுக்கும் கட்டில். இருவர் என்றால் இடிக்காமல் படுக்கவே முடியாது.
‘இது என்ன டா சோதனை!’ “ஈஷ்வரா…” சத்தமாக கத்திவிட…
“ என்ன பேர் சொல்லி கூப்பிடற… அவ்ளோ உரிமை உனக்கு வந்துடுச்சா…”
“நான் ஒன்னும் உங்கள சொல்லல.. கடவுளைச் சொன்னேன்..நீங்க என்ன ஈஸ்வரனனா” யோசிக்காமல் கேட்டுவிட…
அவள் முன் சொடக்குப் போட்டு… “நான் ஈஸ்வரன் தான்..வாகீஸ்வரன்..”
‘ ஐயோ ! இத மறந்துட்டேனே.. வாகீ வாகீ ன்னு சொல்லி ஈஸ்வரன மறந்துட்டேனே…’
‘ உரிமை எடுத்துக்கறேனா..’
‘இவர் எது பண்ணாலும் சரி..நாம பண்ணா உரிமை எடுத்துக்கறேனாமா.. முன்னாடி போனா முட்டுது பின்னாடி வந்தா இடிக்குது..நான் நடுல நின்னு முழிக்கறேன்..’ விதியை நொந்து கொண்டாள்.
“ஆமா..என்னைப் பொறுத்தவரை நீங்க வாகீ தான்.. இதுல எப்படி ரெண்டு பேர் படுக்கறது.. நான் கீழயே படுத்துக்கறேன்..” கட்டிலிருந்து எழும்ப,
அவள் கையைப் பிடித்து இழுத்தான்.
அவளுக்கு நாடி நரம்பெல்லாம் ரத்தம் வேகமாகப் பாய்ந்தது…
‘இவன் வர்மாவா மாறறேன்னு..இன்னும் என்னை என்ன பண்ணப் போறான்..’ கண்களில் பீதியுடன் அவனைப் பார்க்க,
“ வாகீ யா…”
“அது…வந்து… ஷார்ட்டா சொன்னேன்… சாரி” பம்மினாள்.
“ கட்டில் சின்னதா இருந்தாலும் பெருசா இருந்தாலும் இது தான் உன் இடம்.. படு..” அவளை ஒரே இழுப்பில் இழுக்க் அவன் மடியில் விழுந்தாள்.
அவள் இடையைப் பற்றி ஒரே சுற்றில் அவளைத் தன்னருகில் படுக்க வைத்து அவனும் படுத்தான்.
நெஞ்சமெல்லாம் படபடக்க ஒரு நொடி என்ன நடந்ததென்று மெதுவாகத் தான் உணர்ந்தாள்.
“ இல்ல..நான் கீழ…”
“நோ மோர் டாக்ஸ்…எனக்குத் தூக்கம் வருது…” கண்மூடி படுத்துவிட்டான்.
‘எனக்குத் தூக்கமே போச்சு…’ விழித்த படியே விட்டதைப் பார்த்து முடிந்த வரை அவனை இடிக்காமல் படுத்திருந்தாள்.
தூக்கத்தில் கொஞ்சம் அவன் அசைந்தாலும் அல்லது அவளே தூங்கி விட்டாலும் நிச்சயம் அவன் மேல் உரசிக் கொண்டு தான் படுக்க வேண்டும்.
அதனாலேயே விழித்திருந்தாள்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் அவன் சங்கடமாக நெளிந்தான்.
மெல்ல எழுந்தவன் , சட்டையைக் கழட்டி எறிந்துவிட்டு மீண்டும் கையில்லாத பனியனுடன் படுத்தான்.
அவள் பேயரைந்தவள் போல் அவனைப் பார்க்க,
“ ரொம்ப சைட்அடிக்காத.. தூங்கு..” கிறக்கமான குரலில் அவள் காதருகில் பேச,..
“ச்சே ச்சே.. நான் சைட்அடிக்கறேனா..நோ வே!” என அவள் வாய் சொன்னாலும் கண்கள் அவனது வலிய தோள்களைத் தான் தேடியது…
அவளது உதட்டை பேசிக்கொண்டிருக்கும் போதே இரு விரலால் பிடித்தான்.
“ இதால பொய் சொல்ல முடிஞ்சாலும்…” அவள் கண்னின் மேல் இமையை கட்டை விரால் வருடி …
“ இது காட்டிக் குடுத்துடும்..”
மீண்டும் ஆள் காட்டி விரலை அவள் உதட்டில் வைத்து
“சோ பேசாம தூங்கு..” என்று விட்டு கண்களை மூடிக் கொண்டான்.
அவனது தீண்டல் புதியதாய் அவளை வாட்டியது.
‘இவனோட எத்தனை நாள் நான் வீம்பா நிற்க முடியும்.. ஒவ்வொரு முறையும் என்னை காதல் கொள்ள வைக்கறானே… சீக்கிரம் இந்த பூசல் மாறி எப்போ நாங்க சேருவோம்..’ கண்களில் கனவுடன் அவனைப் பார்த்தபடியே உறங்கிப் போனாள்.
சற்று நேரத்தில் அவள் உறங்கியதும் கண் விழித்தவன், கட்டிலின் ஓரமாக விழுவது போலப் படுத்திருந்தவளை, மெல்ல இடையில் கை வைத்து இழுத்து தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு படுத்தான். .
‘ செல்ல ராட்ஷசி வீம்புல ஒன்னும் குறைச்சல் இல்ல..’ உறங்கும் அவளின் நெற்றியில் முதல் முதலாக முத்தமிட்டான்.