KYA-FINAL

KYA-FINAL

காலம் யாவும் அன்பே 39

சேனா சொன்னது ஒரு மாதம். ஆனால் இப்போது வர்மாவின் கையில் இருக்கும் சிவலிங்கம் கரைந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் முன்கூட்டியே இந்த முயற்சியில் இறங்கினார்.

 அன்று  திருவாதிரை நட்சத்திரம் இல்லை. ஆகவே வர்மாவை அவரால் நேரடியாக அழைக்க முடியாது. இங்கே இருக்கும் சிவலிங்கத்திற்கு பத்து நாட்களுக்கு மேல் பூஜை செய்து, இதன் மூலம் வர்மாவின் கையிலிருக்கும் ஸ்படிக லிங்கத்தை சற்று உருகாமல் நிறுத்தி வைத்திருந்தார். இப்போது வர்மாவின் கையில் இருக்கும் லிங்கத்தை இந்த உலகிற்கு  இழுக்கும் திறனை ஏற்படுத்தினார்.
வர்மாவிற்கு இப்போது ரதியை நெருங்கவும் அவளைத் தொடவும் சக்தி உண்டாக்க வேண்டும்.
சிவலிங்கத்தை ஸ்ரத்தையுடன் வணங்கிவிட்டு வாகீசனையும் இயலையும் நீருக்குள் அனுப்பினார்.
இப்போது இரண்டு பேருமே வர்மா ரதியைப் போல மிகவும் அன்னியோன்யமான தம்பதிகள். அவர்களின் கூடல் கூட சேனாவிற்கு  தெரிந்து தான் இருந்தது.
சேனா திருவாதிரை நட்சத்திரத்தை தன் மனக் கண் முன்னே கொண்டு வந்தார். சிவலிங்கம் பல ஆண்டுகளுக்குப் பிறகு பூஜை செய்யப்பட, அதன் சக்தி நீருக்குள் பரவி இருந்தது.
நீருக்குள் இறங்கும்போது இருவருக்கும் எந்த உணர்வும் இல்லை. அன்று அந்த மாயக் கதவு தோன்றிய இடத்தை நீருக்குள் நெருங்க நெருங்க, இருவருக்கும் ஒரு வித நடுக்கம் உண்டானது.
சேனா தன் தன் குருவான பரஞ்சோதி சித்தரிடம் கற்ற மந்திர வித்தையை அந்த நட்சத்திரத்தை நோக்கி சொல்லிக்கொண்டிருந்தார்.
அதிலிருந்து சக்தி கிளம்பி நீருக்குள் இருக்கும் வாகீசனைத் தாக்க, அவனால் மனத்தாலும் உடலாலும் ஒன்றான இயலுக்கும் பாதிப்பு உண்டானது.
நட்சத்திரத்தின் சக்தி அந்தக் கோவிலுக்குள் நுழைந்து சிவலிங்கத்தை எதிர்கொள்ள, ஏற்கனவே சேனாவால் இப்போது புது சக்தியுடன் இருக்கும் லிங்கம் நட்ச்சத்திர சக்தியைத் தன் பால் ஈர்த்தது.
அதன் மூலம் லிங்கத்திற்கு அடியில் இருக்கும் நீர், அதில் இப்போது பிரவேசித்திற்கும் வாகீ இயல் இருவரும் தங்களின் சக்தியை இழந்து கொண்டிருந்தனர்.
இருவரும் அவர்கள் யார் என்ற உணர்வை மறந்து கொண்டிருந்தனர்.
கைக்கோர்த்த படி எப்படியோ அந்த அடி ஆழத்தை அடைந்து அங்கிருந்த அந்தச் சுவர் போன்ற இடத்தை அடைய, சுத்தமாக வாகீ தான் யார் என்று சிந்திக்க முடியாமல் திணறினான்.
அவன் பெயர் என்ன!? எதற்காக அங்கே நிற்கிறான்? ஆனால் அருகில் இருக்கும் இயல் மட்டும் தனக்குச் சொந்தமானவள் என்ற நினைப்பு மட்டும் மாறாமல் இருந்தது.
அவளும் அதே நிலையில் தான் இருந்தாள்.
இது நடந்து கொண்டிருந்த வேளையில், வாகீயுடன் கோவிலுக்கு வந்திருந்த ஆகாஷை, இறந்து போன எதாவது இரண்டு உடலை எடுத்து வரச் சொல்லியிருந்தார்.
அது பூனையோ, வாத்தோ கோழியோ ஏதோ இரண்டு வேண்டும் என அனுப்பி வைத்திருந்தார். அவனும் உடனே கிளம்பினான்.
சேனாவினால் இப்போது திருவாதிரை நட்சத்திரம் முழுதும் லிங்கத்துடன் ஐக்கியமாக, லிங்கம் நீருக்குள் இருக்கும் வாகீயை கொஞ்சம் கொஞ்சமாக வர்மாவாக மாற்றியது.
வர்மாவிற்கு அவன் மனைவி பாகீரதி. “ரதி!”
“அத்தான். நாம எங்க இருக்கோம்!?” இயல் வர்மாவாகிய வாகீயைக் கேட்டாள்.
“ தெரியல! இரு இந்தச் சுவரை உடைத்துப் பார்ப்போம்!” மீண்டும் அந்தச் சுவரை அவன் கீழே கிடந்த பெரிய கல்லினால் தாக்க முற்பட்டான்.
சேனா நினைத்தது போல எல்லாம் நடந்தது. இப்போது அவன் மீண்டும் அந்த ஐந்து கற்களை அந்தச் சுவரிலிருந்து எடுக்க அவன் வர்மாவாகவே உருப்பெருவான்!
மேலே நின்று கொண்டிருந்த சேனா… விண்ணில் மிதக்கும் தன் நண்பனை அழைக்கச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தார்.
அந்த ஊர் அம்மன் வீதி உலாவிற்குப் புறப்படும் நேரம். ஒட்டு மொத்த சக்தியும் இந்த ஊரில் பரவும்.
அப்போது அது வர்மாவின் கையிலிருக்கும் ஸ்படிக லிங்கத்தை இங்கே ஈர்க்கும். நீருக்கடியில் இருக்கும் வாகீ ஐந்து கற்களை மீண்டும் எடுக்க, அப்போது ரதியை வர்மா தொடும் சக்தியைப் பெறுவான்.
மீண்டும் மாயக்கதவு தோன்றும். இருவரும் அக்கதவு வழியே நீருக்கடியில் வந்து விழ வேண்டும். இது தான் சேனா வின் திட்டம்.
அவர் நினைத்தது போல, வாகீசன் அந்தச் சுவரை இடித்தான். ஐந்து கற்களும் கீழே விழுந்தன. 
புதிதாகப் பார்ப்பது போல வாகி அதைக் கையில் எடுத்தான்.
இயல் அவனுக்கு அருகே சென்று அதை என்னவென்று பார்க்க, இருவருக்கும் முன்னே மாயக் கதவு தோன்றியது.
மாயக் கதவு தோன்றிய சமயம், ஊரில் சாமி ஊர்வலம் ஆரம்பமானது. தெருக்களில் முதல் சுற்று ஆரம்பித்தது. அம்மனின் சக்தி அனைத்து தெருக்களிலும் பரவி, கோவிலில் அமைதியாக அமர்ந்திருக்கு ஈசனையும் வந்து அடைந்தது,
அம்மனின் சக்தி சிவனைத் தொட, அது நீரில் அதிர்வை ஏற்படுத்தி, மாயக் கதவின் மூலம் வர்மாவின் கையில் இருக்கும் ஸ்படிக லிங்கம் வரை சக்தி அலைகள் பாய,
அங்கே ஆகாயத்தில் வர்மவிற்கும் ரதிக்கும் இடையே இருந்த மாயவலை அறுந்தது.
“ ரதி…. ! என் அன்பே !” என வர்மா கத்த, அது ரதியை எட்டியது.
அவளும் சிறையிலிருந்து விடுபட்ட பறவையாகத் தன் துணையைத் தேடி ஓடி வந்தாள்.
இருவரும் ஓடி வந்து ஆசை தீரக் கட்டிக் கொண்டனர். கதறினாள் ரதி.
“இனி இந்த ஜென்மம் இப்படியே போய்விடுமோ என ஒவ்வொரு நொடியும் துடித்தேன் அத்தான். என் உயிர் மீண்டும் எனக்கே கிடைத்துவிட்டது.” அவன் நெஞ்சில் சாய்ந்து குமுறினாள்.
“எப்படியும் சேனா நம்மைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது ரதி. உன்னைப் பார்க்கும் இன்பமே என்னை விடாப்படியாக நிற்க வைத்தது. வா உடனே செல்வோம்! என் கையில் இருந்த ஸ்படிக லிங்கம் கரைந்து கொண்டே வந்தது. இப்போது அதனைச் சேனா தான் ஏதோ செய்து நிறுத்தி வைத்திருக்க வேண்டும்.
இனியும் தாமதிப்பது நல்லதல்ல…” அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டு, அவளைப் பற்றிக் கொண்டான்.
இருவரும் ஒன்று சேர அங்கே மாயக் கதவு தோன்றியது.
அதைக் கண்டதும் மகிழ்ச்சி பொங்க, ஒன்றாகவே அதற்குள் சென்றனர்.
காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்து வந்தனர். அவர்கள் ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் அவர்களைக் கொண்டு வந்து தள்ளியது அந்த ஒளிப் பயணம்.
கண்முன்னே நின்ற வாகீ இயலைக் கண்டதும், வர்மாவும் ரதியும் அதிர்ந்தே விட்டனர்.
வேறு உலகத்திற்கு மீண்டும் வந்துவிட்டோமோ என்ற உணர்வு!
வாகீசனும் இயலும் ஏற்கனவே தாங்கள் யார் என்றதை மறந்து நின்றிருக்க, இவர்களைக் கண்டதும் மீண்டும் சித்தம் தெளிந்தது.
யார் யார் என்பதை அடையாளம் கண்டு கொண்டனர்.
“அத்தான், இது என்ன! நாம் நம்முடைய உலகத்திற்கு வரவில்லையா.? நம்மைப் போன்றே இருக்கிறார்களே! ஒரு வேலை இதுவும் வேறு உலகமா!?” கலங்கிப் போனாள்.
அதற்குள் இயல் முந்திக் கொண்டு பதில் சொன்னாள்.
“இல்லை, இது நீங்க வாழ்ந்த உலகம் தான். நாங்க உங்க ரத்த அணுக்களிலிருந்து சேனா வால உருவாக்கப் பட்டவங்க!” அவர்களுக்கு விளக்க முற்பட்டாள்.
இன்னும் சொல்லி விளக்க எத்தனிக்க, அதற்குள் இயற்கை அவர்களை ஏற்க முடியாமல் குழம்பியது.
அந்த நீர் நிலை கொந்தளிக்க ஆரம்பித்தது.
சேனா விற்கு பரீட்சை ஆரம்பமானது. நால்வரில் இருவர் பலியாகப் போகிறார்கள். அது யார் என்று தெரியாது.
ஆகாஷின் வருகைக்காகக் காத்திருந்தார் சேனா.
நீரின் கொதிநிலை அதிகமாகியது.
அதை அடக்கத் தன் மந்திரத்தால் முயற்சி செய்துகொண்டிருந்தார். அருகில் நின்றிருந்த வந்தனா பயந்து நடுங்கினாள்.
அந்த இடமே ஆட்டம் கண்டு கொண்டிருந்தது.
எங்கோ தூரத்தில் இடி இடிக்க, அது அவளது மனதில் அச்சத்தை கொடுத்தது.
சேனாவும் கண் திறக்காமல் இருந்தார். தன்னால் முடிந்த அளவு, இயற்கையின் வேகத்தைக் குறைக்க எண்ணினார்.
நீருக்குள் இருந்த நால்வருக்கும் தலை வலிக்க ஆரம்பித்தது.
அனைவரும் முடியாமல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர்.
நல்ல வேளையாக, சரியான நேரத்தில் ஆகாஷ், ஒரு கிளியும் ஒரு புறாவும் இறந்த நிலையில் கொண்டு வந்தான்.
“ஐயா, இந்தாங்க” மூச்சு வாங்க அவற்றைச் சேனாவின் முன் வைத்தான்.
சேனாவின் சக்தி பாதி ஈர்த்துக் கொண்டது இயற்கை. முன்பு போல் இல்லாமல் சற்று தளர்ந்து விட்டார்.
இருந்தாலும், உடனே அந்தக் கிளி மற்றும் புறவின் உடலில், இருவரின் உயிரைத் திணிக்க ஆரம்பித்தார்.
எதாவது ஓரு ஜோடியின் உயிர் பறிக்கப் படும். அது யாரென்று சேனாவிற்கே தெரியாது.
கூடு விட்டுக்கூடு பாய்ச்சும் மந்திரத்தைக் கூற ஆரம்பித்தார்.
முதலில் பிரிந்தது ரதியின் உயிர். வர்மா அதைக் கண்டதும் துடித்துப் போனான். அடுத்து பிரிந்தது. அவளின் உயிரான வர்மா….!
உலகமே ஸ்தம்பித்தது!
நீர் நிலைகள் அமைதி கொண்டது!
இயற்கை சாந்தாமயின!
வாகீசனும் இயலும் தலைவலி நீங்கித் தெளிவான பார்வை பெற்று அவர்களைப் பார்க்க, அங்கே அவர்களின் இறந்த நிலை கண்டு உள்ளம் பதறினர்.
“ஐயோ! கடவுளே! என்ன இது!” இயல் அதைக் காண முடியாமல், ஓடிச்சென்று வாகீயை கட்டிக் கொண்டு நின்றாள்.
அவனோ பேரதிர்ச்சியில் இருந்தான்.
இயலை ஆதரவாக அணைத்துக் கொண்டான்.
கதறி அழுதாள் இயல்.
அவளைத் தேற்ற வாகீக்கும் முடியவில்லை. அவனாலும் இதை ஜீரணிக்க முடியவில்லை.
“இப்படி நடந்திருக்கக் கூடாது! இத்தனை காலம் காத்திருந்து அவங்க இங்க வந்து இறக்கணுமா… என்ன பண்ணார் சேனா! அவங்கள இங்க வந்து இறக்க வெச்சுட்டாரே!” அவனிடம் அழுது கரைந்தாள்.
“இல்ல இயல்! வேற எதாவது ஏற்பாடு செஞ்சிருப்பாரு சேனா! கவலைப் பாடதே டா” ஆறுதல் வார்த்தைக் கூறினாலும் அவனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
என்ன செய்வதென்று தெரியாமல் இருவரும் நிற்க, மேலிருந்து அவர்களை மீட்க கயிறு வர,
முதலில் இயலை மேலே போகச் சொன்னான். அங்கே நடந்த காட்சியைச் சகித்துக் கொள்ள முடியாமல் முதலில் ஏறிச் சென்றாள்.
பின்பு வாகீ வர்மாவின் உடலையும், பாகீரதியின் உடலையும் ஒன்றன் பின் ஒன்றாகத் தூக்கி வந்து வெளியே போட, ஆகாஷ் சற்று உதவினான்.
முதலில் இயல் வந்ததில் நிம்மதியடைந்த வந்தனா அவளைக் கட்டிக் கொள்ள, அவளுக்கும் மற்ற இருவரின் நிலையை நினைத்துச் சங்கடமாகவே இருந்தது.
இயல் கண்ணில் தாரைத் தாரையாக நீர் பெருகி வந்தது.
வாகீசனும் வெளியே வந்தபின்னர், சேனா கண்மூடி ஏதோ முணுமுணுத்துக்கொண்டிருந்தார்.
ஆனால் அங்கே அந்தக் கிளியும் புறாவும் உயிருடன் வந்ததை யாரும் கவனிக்க வில்லை.
சேனா இயற்கையை ஏமாற்ற, வர்மா ரதியின் உயிரை அந்த இறந்த உடலுக்குள் புகுத்தி இருந்தார்.
சேனா மெல்லச் சிரித்த படி கண் திறக்க,
இயலின் அழுத நிலை, வாகீயின் சோகத் தோற்றம் கண்ணில் பட்டு,
“கவலைப் படாதீர்கள், யாரும் இறக்கவில்லை. அங்கே பாருங்க!” என அந்த ஜீவன்களைக் கைக்காட்ட,
அப்போதுதான் நடந்ததை அறிந்தனர்.
“அப்பா….” எனப் பெருமூச்சு விட்டு, அழுகையை நிறுத்தினாள் இயல்.
“ரொம்ப நன்றி ஐயா!” வாகீ அவரை வணங்க,
“எதுக்கு நன்றி, என் நண்பனை நான் கொண்டு வந்து விட்டேன். உண்மையில் உங்களுக்குத் தான் நன்றி சொல்லணும்!” எனச் சொல்ல,
“இன்னும் எத்தனை நாட்கள் அவர்கள் இந்த உருவத்துல இருக்கணும்!” வாகீ கேட்க,

“ சில மணி நேரங்கள். அவ்வளவு தான்! ஒரு முறை இந்த இயற்கையை ஏமாற்றிய பின் அது மீண்டும் இந்தப் பக்கம் திரும்பாது. இனி கவலை இல்லாமல் அவர்களை மீண்டும் அவர்கள் உடலிலேயே சேர்த்துவிடலாம்.” நிம்மதியை விதைத்தார்.
அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தனர். சில மணி நேரங்கள் காத்திருப்பிற்குப் பிறகு அவர்களை மீண்டும் வர்மா ரதியின் உடலில் மீண்டும் மாற்றினார்.
சில நிமிடங்களில் உயிரித்தெழுந்தனர்.
வர்மாவினை ஆர்த்த தழுவிக் கொண்டார் சேனா. அவர் செய்த அனைத்தையும் தெரிந்து கொண்டான்.
நண்பனின் செயல்கள் ஒவ்வொன்றும் வர்மாவை பாசவலையில் மூழ்கடித்தது.
“இப்படியொரு நண்பன் கிடைக்க எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தேனோ! கடவுள் எனக்கு அளித்த ஒப்பற்ற வரம் நீ!” வர்மா கண்ணீருடன் சொல்ல,
“ உன்மீது எனக்கு எப்போதும் அளவு கடந்த பாசம் தான் நண்பா! நீயும் எனது தங்கையும் இன்பமாக இனி காலம் எல்லாம் வாழ வேண்டும். அதை நான் அருகில் இல்லாவிட்டாலும் கண்டு ரசிப்பேன்!” சேனா உருக்கமாகச் சொல்ல,
அனைவருக்கும் கண்ணீர் வந்தது.
“ நண்பா! என்னுடன் இல்லாமல் நீ எங்குச் செல்ல முடிவெடுத்தாய்!” உரிமையாகக் கோபம் கொண்டான் வர்மா.
“ உனக்கே தெரியும் நண்பா! சித்தனாகிய நான், என் கடமைகள் முடியும் வரை மட்டுமே இவ்வுலகில் இருக்க முடியும். என் வாழ்வின் ஒரே கடை உன்னை மீட்டெடுப்பது. அதைச் செவ்வனே செய்து முடித்தேன். இனி இவ்வுலகில் எனக்கு இடமில்லை. ஈசனடி சேர வேண்டும்.!” உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் உள்ளதைப் பேசினார் சேனா.
“அண்ணா! எங்களுக்காக இன்னும் சில காலம் எங்களோடு இருங்கள்!” ரதி கண்ணீருடன் கேட்க,
“ இல்லையம்மா… போதுமான அளவு நான் வாழ்ந்துவிட்டேன். இனி என்னைத் தடுக்காதீர்கள். ஈசன் மூன்றாவதாகத் தோன்றும் இடத்தில் என் ஜீவ சமாதி அமையும்!” எனச் சொல்லிவிட்டு,
“அனைவரும் கிளம்புங்கள்! நான் நாளை வந்து சந்திக்கிறேன்!” என்று வலுக்கட்டாயமாகச் சொன்னார்.
“ சரி நண்பா! எனக்காக நீ வாழ்ந்தது போதும் இனியும் உன்னை என்னுடனேயே சுயநலமாக வைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. ஆனால் நானும் வாகீசனும் ஒரே உருவத்தில் எப்படி நடமாடுவது. அது குழப்பத்தை அல்லவா விளைவிக்கும்.
அதுவும் இல்லாமல், எனக்கு நீ இல்லாத இவ்வுலகில் வாழ விருப்பமில்லை. நான் மீண்டும் ரதியுடன் வேற உலகத்திற்குச் செல்கிறேன்.
புது இடம் என் மனதைத் தேற்றும். என்ன சொல்கிறாய் ரதி!” என அவளையும் கேட்க,
“ அத்தான்! எனக்கு உங்களோடு இருக்க வேண்டும். அவ்வளவு தான். உங்கள் முடிவே என் முடிவு!” என முடித்துக் கொண்டாள்.
அவரவர்களின் விருப்பத்தைக் கூற, மற்றவர்கள் எதுவும் பேசவில்லை.

“இந்த முடிவில் மாற்றமில்லையே நண்பா!?” சேனா கேட்க,

“நீ இல்லாத இந்த உலகத்தை என்னால் ஏற்றுக் கொண்டு பழயபடி வாழ இயலாது நண்பா.” வர்மா முடித்துக் கொள்ள,

சேனா உடனே, “சரி நண்பா! என்னுடன் இப்பொழுதே கிளம்பு! புது வாழ்வை உனக்கு அளித்து, மோட்ச வாழ்வை நான் தேடிக் கொள்கிறேன்!”
“வாகீசா, இயல், நீங்கள் இருவரும் எப்போதும் பிரியாமல் அன்பும் காதலுமாக வாழ நான் ஆசி கூறுகிறேன். ஆகாஷ் நான் வர்மாவிற்கு இருந்தது போல, வாகீக்கு துணையாக இரு. வந்தனாவை சீக்கிரம் மனம் செய்துகொள்! நாங்கள் வருகிறோம். என் நண்பனை மீட்ட உங்கள் அனைவருக்காகவும் நான் ஈசனிடம் உங்கள் வாழ்வு சிறக்க கோரிக்கை வைக்கிறேன்.” எனச் சொல்லி விட்டு, வர்மா ரதியுடன் தன் பயணத்தைத் துவக்கினார்.
மூன்றாவது லிங்கம் தோன்றும் இடத்தை நோக்கி!
வாகீசனும் மற்றவர்களும் ஒரு கனத்த மனதுடன், அதே நேரம் நிம்மதியுடன் தங்கள் இருப்பிடம் வந்து சேர்ந்தனர்.
அந்தப் பாதாள லிங்கத்தை யாரும் இனி பார்க்க முடியாத படி, அதற்குச் செல்லும் அந்தச் சிறு பாதையைக் கூடக் கச்சிதமாக மூடிவிட்டனர். அலுவலகத்திலும் வந்த வேலை முடிந்தது என்று பாராட்டுக்களைப் பெற்றனர்.
இயலின் தந்தையும் வாகீயின் பெற்றோரும் மனதார அவர்களை வாழ்த்தினர். அவர்களின் விருப்பமே! இவர்களின் மகிழ்ச்சி!
ஆகாஷ் வந்தனாவின் பெற்றோரும் வந்துவிட,
அதே ஊரில் அவர்களின் ஆசைப்படி கல்யாணம் செய்து வைத்து இன்புற்றனர்.

இயலும் வாகீசனும் அவளின் ஊரான தஞ்சாவூருக்கு சென்று பிரகதீஸ்வரரை வணங்கி வாகீயைத் தனக்குத் தந்ததற்கு நன்றி சொன்னாள்.
பின் ரிசெப்ஷனை வைத்து அனைவருக்கும் தங்கள் திருமணத்தைத் தெரிவித்தனர்.

வர்மாவின் எண்ணத்தை நிறைவேற்றினார் சேனா. அந்த ஸ்படிக லிங்கத்தின் மூலம் அவர்கள் இருவரையும் வேறொரு உலகத்திற்கு அனுப்பி வைத்தார்.
அவர்கள் இருந்த அந்தக் காலம் போலவே இன்னும் பழமையானதாக இருந்தது அந்த உலகம். அங்கிருப்பவர்கள் கள்ளம் கபடமின்றிப் பழகினர்.
வர்மா தனது சிற்பக் கலையை மீண்டும் தொழிலாக ஆரம்பித்து, வானவியலை அங்கிருக்கும் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தான்.

தான் நேரடியாகக் கண்டு ஆராய்ச்சி செய்த அனைத்தையும் பிற்கால சந்ததியினருக்காக குறிப்பு எழுதி வைத்தான்.

தன் மனைவியுடன் எப்பொழுதையும் விட இன்னும் அதிகமாகக் காதல் செய்தான்.

தன் கடமை முழுவதையும் முடித்த சேனா, மூன்றாம் சிவலிங்கம் தோன்றப் போகும் இடத்தை அறிந்தார்.
அது ஒரு காடு. மனிதர்கள் கண்ணில் படுவது அரிது.

 அங்கேயே ஒரு திருவாதிரை நச்சத்திரத்தன்று ஜோதி வடிவமாகத் தோன்றி, சேனாவை தன்னோடு ஆக்ரமித்துக் கொண்டு மூன்றாம் சிவலிங்கம் உருப்பெற்றது.
வர்மாவும் வாகீசனும் மட்டுமே அதை மனதால் கண்டனர்.

சேனாவின் உழைப்பு அவர்கள் கண்களை நிறைத்தது. நிச்சயம் அவரின் இழப்பைத் தாங்க முடியாது என்று தான் வர்மா கண் படாத இடத்திற்குச் சென்றான்.
நண்பனையும் வாகீசனையும் என்றும் அருகிலிருந்து காத்தார் அஷ்டசேனா.
இருவரும் தங்களின் காதல் மனைவிகளைக் காலம் யாவும் அன்போடு நேசித்தனர்.

 

EPILOGUE

சில நாட்கள் பெற்றோருடன் இருந்துவிட்டு வாகீசன் மீண்டும் தன் பணியைத் தொடர , சென்னைக்கு வந்து சேர்ந்தான். இயலை சிறிது நாள் அவள் தந்தையிடம் விட்டு வந்திருந்தான்.

ஆகாஷ் வந்தனா அவர்களுக்கு முன்பே அங்கு சென்று, வாகீசன் சொன்ன படி அவனுக்காகத் தனி வீடு ஒன்றை விலைக்குப் பேசி முடித்திருந்தான்.

வாகீசன் வந்ததும் முதலில் வீட்டின் கட்டமைப்பை மாற்றிக் கட்டினான்.

இயலுக்கும் தனக்கும் பிடித்த படி அதை முழுதுமாக பழைய காலத்து முறையில் அமைத்திருந்தான் வாகீசன்.

திண்ணை வைத்து, முற்றம் அமைத்து, சமயலறையில் சகல வசதியுடன் ஆனால் பழைய காலத்து பாரம்பரியம் குறையாமல் செய்திருந்தான். வீட்டின் பின் புறம் அழகான கொல்லைப்புறம். தோட்டம் போட்டு அதில் இருவருக்கும் முதலில் சங்கமிக்க உதவி செய்த மல்லிகைப் பந்தலை மறக்காமல் போட்டு வைத்தான். அதை நினைக்கும் போதே அவனுக்குள் தன் மனைவியின் எண்ணம் முன்னே வர, உடனே அவளுக்கு போனில் அழைத்தான்.

திரையில் வாகீசன் அவளைத் தோளோடு அணைத்து நிற்கும் புகைப்படம் ஒளிர, புன்னகையோடு அதை இயக்கிக் காதுக்குக் கொடுத்தாள்.

“ஹே! பொண்டாட்டி! என்ன டி இவ்வளவு நேரமா போன் எடுக்க?” அவன் குரலில் இருந்த வசியம் அவளை எங்கோ இழுத்துச் சென்றது.

“நம்ம போட்டோவ ஸ்க்ரீன்ல பாத்துட்டு இருந்தேனா அதான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. வொர்க் நேரத்துல என் புருஷனுக்கு எப்படி என் ஞாபகம் வந்துச்சு? ஆச்சரியமா இருக்கே!” அவனை வம்பிழுக்க,

“நம்ம வீட்டை ரெடி பண்ணிட்டு இருந்தேன். பின்னாடி மல்லிப்பூ பந்தல பாத்ததும் என் பொண்டாட்டி தான் கண்ணுக்குள்ள வந்தா, அதான் உடனே போன் பண்ணிட்டேன். மல்லி உனக்காக வெய்ட்டிங்.. இல்ல நமக்காக.” கிரக்கமாகக் கூற,

அவள் அங்கே வெட்கத்தில் சிவந்து கொண்டிருந்தாள்.

“எனக்கும் அங்க வரணும்னு தான் இருக்கு. எப்போ வரட்டும். உங்களைப் பார்க்க இவ்வளவு நாள் என்னைக் காக்க வைக்கறீங்க. எல்லாத்துக்கும் சேர்த்து உங்களுக்கு வெச்சிருக்கேன்.” மிரட்டுவது போல கொஞ்ச,

“வாடி வாடி, உன்னோட இம்சை இல்லாம என்னாலையும் தூங்க முடியல. வீடு ரெடி டா. நாளைக்கு நல்ல நாள்னு அம்மா சொன்னாங்க. அதுனால இன்னிக்கு நைட் கிளம்பி என் பொண்டாட்டி நாளைக்கு காலைல எனக்கு தரிசனம் தருவாளம். நாம பால் காய்ச்சி சந்தோஷமா இருப்போமாம்.”

“ஐ! இப்போவே அப்பவ கூட்டிட்டு கிளம்பறேன்.நைட்டே அங்க வந்திருவேன்.” குதித்துக் கொண்டு சொல்ல,

அவன் சிரித்தான். “சரி டா. ஜாக்ரதையா வா. எந்த பஸ்ல வர ன்னு எனக்கு சொல்லு. நான் பஸ்ஸ்டாப்க்கு வந்து உங்கள பிக் பண்ணிகறேன். இன்னிக்கு நைட் அம்மா அப்பா கூட தங்கிட்டு,, காலைல எல்லாரும் வந்து பால் காய்ச்சுவோம்” கனவுகளுடன் போனை வைத்தான்.

காலையில் அனைவரும் வந்து வீட்டை ரசித்தனர். பழைய ஸ்டைலில் அதே சமயம் புதிய வசதிகளும் இருந்த அந்த வீடு அனைவரையும் கவர்ந்தது. பாலைக் காய்ச்சி அனைவரும் அருந்தி கலகலப்பாக இருந்துவிட்டு மாலையில் கிளம்பி விட்டனர்.

இரவு, களைப்புத் தீர குளித்துவிட்டு வந்தாள் இயல். எப்போதும் போல டவலை மட்டும் சுற்றிக் கொண்டு அவர்களின் அறையில் இருந்த பீரோவிலிருந்து இரவு உடையைத் தேட,

பின்னால் வந்து அவளை அணைத்துக் கொண்டான் வாகீசன்.

“என்னங்க இது, கொஞ்சம் டிரஸ் போடா விடுங்க..” செல்லமாகச் சிணுங்க,

“எதுக்கு இப்போ டிரஸ்? கொஞ்ச நேரத்துல அது எங்க இருக்குனே தெறியாது. ஏன் டி இப்படி படுத்தற?” அவளைத் தூகிக் கொண்டு வீட்டின் கொல்லைப் புறத்திற்குச் சென்றான்.

மல்லிகைப் பந்தலின் கீழ் ஒரு அழகிய கயிற்றுக் கட்டில் போட்டிருந்தான். மேலிருந்து பூக்கள் ஒவ்வொன்றாக பூத்து உதிர்ந்தது. நிலவொளியும் காற்றும் மல்லிகையின் மனத்தை அங்கே பரப்ப, இயல் அதை ரசிக்க, வாகீயோ இயற்கையோடு சேர்ந்து தன் மனைவியையும் ரசித்தான். அவளின் அந்தக் கோலம் அவனை மேலும் கிறங்க வைத்தது.

அவள் ஏதோ பேச வாய் திறக்க, “உஷ்ஷ் பேசாதே!” என அவள் உதட்டைப் பிடித்தான். “இந்த உதட்டை முதல்ல நான் ரசித்தேன். அதுக்கப்றம் இது ரொம்ப பேசி என்னை கடுப்பாகிடுச்சு. அதுனால முதல்ல இதுக்கு தண்டனையா…!” மெலிதாக அவளின் இதழ்களைக் கடிக்க,

கண்மூடி வலியைத் தாங்கினாள். பின் அவளை விடுவிக்க,

“என்னை நீங்க இத்தனை நாள் காக்க வெச்சதுக்கு நானும் தண்டனை கொடுக்கணும்” என அவன் மடி மீது வந்து அமர்ந்து கொண்டாள். டவல் சுற்றிய தன் நெஞ்சோடு அவன் முகத்தை கட்டிக் கொள்ள, அவன் திக்குமுக்காடிப் போனான். அவள் இடையைக் கட்டிக் கொண்டான்.

இத்தனை நாள் பிரிவு இருவரையும் நகரவிடவில்லை. இருவர் மீதும் விழுந்த மல்லிகை அன்றைய அவர்களின் காதலுக்கு துவக்க விழா செய்ய, மலர்ப்படுக்கையில் இனிதே துவங்கியது காதல் அரங்கேற்றம்.

அந்தக் காதலின் பரிசாக அவர்களுக்கு இரு ஆண் குழந்தைகளும் மூன்றாவதாக ஒரு பெண்ணும் பிறக்க, அவர்களுக்கு வர்மா, சேனா, பாகிரதி எனப் பெயர் சூட்டி காலம் யாவும் அவர்களை நினைத்து வாழ்ந்தனர்.

****************************** முற்றும் *******************************

 

error: Content is protected !!