காலம் யாவும் அன்பே 31
காலங்கள் பல உருண்டோடின. பரஞ்சோதி சித்தர் சொன்ன தீர்வு நிம்மதியளித்தாலும் அதற்காக பல நூறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது விதி.
நண்பனுக்காக எதையும் செய்யத் தயாரானார் சேனா. அவர் யார் கண்ணுக்கும் தெரியாமல் சில காலம் மறைந்து வாழ முடிவு செய்து மலைப் பகுதிகளிலும் ஆள் அரவமற்ற காடுகளிலும் வாழ்ந்து வந்தார்.
இதற்கிடையே சேனா அந்த பிரமிடுக்குள் செல்வதைக் கண்டவன், மற்ற அரசர்களின் பேச்சைக் கேட்டு பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசைப் பட்டு, சேனாவை தேடும் முயற்ச்சியில் இறங்கினான்.
அரசர்கள் அனுப்பிய நூற்றுக்கணக்கான ஆட்களில் இவன் முக்கியமானவன். சேனாவை சுலபமாக அடையாளம் காணக் கூடியவன்.
அவன் ஒரு நாள் பல இடங்களில் பல நாடுகளில் சுற்றித் திரிய, கடைசியில் ஊர் பேர் தெரியாத கிராமத்தில் சில நாட்கள் தஞ்சம் புகுந்தான்.
அங்கே அக்கம் பக்கம் விசாரித்து அது தமிழ்நாடு என்பதை அறிந்து கொண்டான். அந்தப் பெயரைக் கேள்விப் பட்டதும் இது சேனா வின் நாடு என்பது அவனுக்குப் புரிந்தது.
அதனால் அந்த ஊரிலேயே தங்க முடிவு செய்தான். முதலில் சில நாட்கள் அவன் சேனாவைத் தேடினாலும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பிறகு தமிழ் எழுதப் படிக்க கற்றுக் கொண்டான். அங்கேயே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அவனது வாழ்வும் தடையில்லாமல் நடந்தது.
பாதி ஆயுட்காலம் முடிந்த சமயம், அவனும் மற்றவர்களைப் போல யாத்திரை செல்லப் புறப்பட்டான். சேனா என்ற ஒருவனைத் தேடி வந்தது கூட அவன் நினைவிலிருந்து மறைந்திருந்தது.
அப்போது தான் ஒரு மலையடிவாரத்தில் சேனாவைக் கண்டான்.
பார்த்த மறு நொடி சேனா அங்கே இல்லை. அவனுக்கு மீண்டும் பழைய நினைவுகள் வர, அங்கேயே சுற்றிச் சுற்றித் தேடினான்.
இறுதியாக ஒரு குடிலில் சேனாவைக் கண்டுகொள்ள, வேகமாக அங்கே சென்று குடிசையை சாத்தினான்.
சேனா அவனைக் கண்டதுமே அவனது பூர்விகம் முதல் அறிந்து கொண்டார். ஆனால் இப்போது அவன் மனதில் தன்னைக் காட்டிக் கொடுக்கும் எண்ணம் சிறிதும் இல்லை என்பதையும் உணர்ந்தார். மாறாக, அந்தப் பிரமிட் ரகசியத்தைப் பற்றி மட்டும் அறியும் ஆவல் அவனிடம் இருந்தது.
“ஐயா!” மெல்ல அவன் ஆரம்பிக்க,
“ தம்பி! நீ எதற்காக இவ்விடம் வந்தாய் என்பதை நான் அறிவேன். உனக்கு அந்தப் பிரமிடுக்குள் நான் சென்றது பற்றி அறியவேண்டும். சரிதானே!” சிரித்துக் கொண்டே சேனா கேட்க,
சேனா அவன் கண்களுக்குக் கடவுளாகவே தெரிந்தான். அவனது தீர்கமான குரலும், அன்று கண்ட மேனி இன்றும் மாறாமல் அப்படியே இருப்பதும் அவனுக்கு சேனா ஒரு சித்தர் என்பதை சொல்லாமல் சொல்லியது.
தான் சிறு வயதில் அறியாமல் அவரைப் பற்றி மற்றவர்களிடத்தில் புறம் பேசியது, அது அரசன் வரை சென்று அவன் ஆட்களை அனுப்பியது, அனைத்துமே இன்று அவனுக்கு அற்பத்தனமாகத் தெரிந்தது.
“ஐயா! நீங்கள் பெரிய மகான். என்னுடைய சிறு புத்தியை மன்னித்துவிடுங்கள். புத்தியில்லாமல் பல காரியங்களைச் செய்து விட்டேன்.” சேனாவின் கால்களில் விழுந்தான்.
“தம்பி நீ செய்தது தவறு என்று நான் கூறமாட்டேன். அது மனித இயல்பு தான். ஆனால் அந்த ரகசியத்தைப் பற்றி நான் யாரிடமும் கூறுவதாக இல்லை. அதைத் தெறிந்து கொள்ளும் ஞானமும் உனக்கு இல்லை.” சாந்தமாகவே பதிலளித்தார் சேனா.
“நான் செய்ததற்கு எனக்கு அந்தக் குடுப்பினை இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் இதன் பொருட்டு நான் இந்த தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்ததையே பாக்கியமாக நினைக்கிறேன். ஆனால் எனக்கு ஒரு ஆசை.” அவன் கைகூப்பிய படியே செனாவிடம் பேச,
“ சொல் தம்பி!”
“ என்னுடைய சந்ததியினரில் யாராவது ஒருவராவது உங்களின் சீடனாக ஆக வேண்டும். அப்போது தான் என் பாவம் நீங்கும். இதை எனக்காக நீங்கள் ஏற்றுக்கொண்டே தீர வேண்டும்.” விடாப்படியாக நின்றான்.
சேனாவும் கண் மூடி சிறிது நேரம் இருந்துவிட்டு, “உன்னுடைய தலைமுறையில் ஒருவனை நான் எனக்குத் தோன்றும் போது தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன். நீ சென்று வா.” என்றார்.
அவனும் அங்கிருந்து சென்று விட்டான். அதன் பிறகு அவன் வாழ்வில் யாரையும் அவன் சந்திக்க வில்லை. அவன் விதி நிம்மதியாக முடிந்துவிட்டது.
சேனாவும் வர்மாவை நினைத்த படி தக்க தருணத்திற்காகக் காத்திருந்தார்.
பல தலை முறைகள் கடந்தது. அப்போது ஒரு நாள் அன்று சந்தித்த மனிதனின் தலைமுறையில் ஒருவனைக் கண்டார்.
அவன் சிறந்த பக்திமான். சேனாவை ஒரு கோவிலில் கண்டு, அவர் ஒரு சித்தர் என்று அறிந்ததும், அவருக்குப் பணிவிடை செய்து வீட்டுக்கு அழைத்து உபசரித்தான்.
விதியின் ஆட்டத்தை சேனா நினைத்து சிரித்துக் கொண்டார்.
பிறகு அவனை சீடனாக ஏற்றுக்கொண்டார்.
அவனிடம் மட்டும் பிரமிட் மற்றும் அந்தக் கோயிலுக்கு அடியில் உருவான சிவலிங்கம் பற்றித் தெரிவிக்க, அவன் அதை ஒரு புத்தகமாக எழுதினான்.
இந்தப் புத்தகத்தை அவன் எழுத ஆரம்பிக்கும் போதே பல இன்னல்கள் வரும் என எச்சரித்தார்.
அவன் அதையும் தாண்டி அதைப் புத்தகமாக எழுதி விட, சேனா வைப் பற்றி காலம் காலமாகத் தேடிக்கொண்டிருக்கும் பல நாட்டு அரச குடும்பங்கள் , இந்தப் புத்தகத்தை கைப் பற்ற பல முயற்ச்சிகள் செய்ய ஆரம்பித்தனர்.
கடைசியில் மீண்டும் அவன் சேனாவிடம் உதவி கேட்க,
சேனா அதை அழித்தும் விட்டார். பிறகு அதை நினைத்து நினைத்தே அவன் இறந்தும் போனான்.
சேனா இதை வாகீஸ்வரனிடம் சொல்ல,
“ ஆமாம் ஐயா! நான் இந்தக் கோவிலைப் பத்தி ஆராய்ச்சிக்கு வந்தப்ப, இப்படி ஒரு புத்தகம் இருந்ததாகவும் அது பல வெளிநாட்டு அரசர்கள் அதற்காக தேடி வந்த போது, அதை உருவாக்கினவரே அழிச்சுட்டாறுன்னு கேள்விப் பட்டேன்.
இது தான் அந்தக் கதையா!” ஆச்சரியப் பட்டான் வாகீ!
“ உண்மை தான்! அந்தக் கோவிலைப் பத்தின ரகசியத்தை நீயும் இயலும் கண்டுபிடிக்கத்தான், நான் அந்தக் கோவிலின் மதில் சுவரில் அதன் வழியை செதுக்கி வைத்தேன். எல்லாமே விதிப் படி தான் நடக்கிறது !”
‘அனைத்தும் இவர் வேலை தானா’ என வியந்தான் வாகீ!
“ஹெட்! இயல் கண் முழிச்சுட்டா!” வந்தனா குரல் கொடுக்க, சேனா தன்னிடம் பேசிக்கொண்டிருப்பதைக் கூட மறந்து சட்டென எழுந்து ஓடினான்.
இயல் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். கண்களில் இன்னும் தெளிவில்லை. ஆனால் அந்த அறையின் வாயிலில் வாகீயைக் கண்டதும்,
அவள் முகத்தில் பிரகாசம் குடிகொண்டது. தன்னை பாகிரதியாகவும் அவனை வர்மவாகவுமே நினைத்திருந்தவளுக்கு,
வாகீயின் பின்னால் வந்தனாவும் வந்து நிற்க, சட்டென இயலுக்கு இந்த உலக நடப்பு பிடிபட்டது.
ரீவைண்ட் செய்தது போல அன்று கிளம்பியதற்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் வந்து அவள் மனம் நின்றது.
தான் அவனுக்காக சென்றது , நீருக்குள் அவன் கை கோர்த்து உடன் சென்றது அனைத்தும் மறந்து ஈகோ வே முன்னால் வந்தது.
அவளின் கலைந்த நிலை வாகீயை ஏதோ செய்து உடனே அவளைத் தாங்கிக் கொள்ளத் துடிக்க அவளை நெருங்கினான். பின்னால் வந்த வந்தனாவை பிடித்து இழுத்து தன்னோடு நிறுத்திக் கொண்டான் ஆகாஷ்.
“ஹே லூசு, கொஞ்சமாவது உனக்கு அறிவிருக்கா, வா…”அவள் தலையில் தட்ட,
“ஓ!! இப்போ அவங்க வேற மாதிரி ல…. ஈஈஈ…. சாரி டா…” இளித்த படியே வெளியே சென்றாள்.
“ ஆமா … உனக்கு எங்க இதெல்லாம் புரிய போகுது..” சலித்துக் கொண்டான்.
“டேய்! ரொம்ப அல்ட்டிகாத … எனக்கும் புரியும்..”
“அடடே! மேடம் என்ன புரிஞ்சுக்கிட்டீங்க..கொஞ்சம் சொல்லுங்க…” கைகட்டி அவள் முன் நிற்க,
“ நாம ஊருக்குப் போனதும்…” எங்கோ பார்த்தபடி வந்தனா இழுக்க,
“ போனதும்….” ஆவலாய் அவளைப் பார்க்க
“ ம்ம்ம்… அதை என் மாமனார் மாமியார் கிட்ட சொல்லிகறேன். அவங்க பையனுக்கு ஆயுள் தண்டனை குடுக்கனும்னு…” அவனைப் பார்த்து கண்ணடித்துச் சொல்ல,
“ஓ…..டியர்….. வாழ்கை பூரா கைதியா இருக்க நானும் ரெடி…” தலையை கோதியபடியே ஆகாஷ் சிரிக்க,
“ அலையாத…” அவனைத் தள்ளி விட்டு வெளியே சென்றாள்.
அவனும் அவளைத் தொடர, இருவரும் அங்கே சேனா இல்லாததைக் கண்டனர்.
“அதுக்குள்ள எங்க போயிட்டாரு…” வந்தனா தேட,
“அவரு உன்ன மாதிரியா! இங்கிதம் தெரிஞ்சவரு…” , அவளது தோளில் கை போட்டு கலாய்த்தான்.
அந்த நேரம் வாகீ இயலிடம் நெருங்கி வந்து அமர, அவள் சங்கடமாக நெளிந்தாள்.
வாகீஸ்வரனுக்கு முழுமையாக அவள் தன்னவள் என்ற நினைப்பு எப்போதோ வந்துவிட, அதுவும் வர்மா ரதியை பார்த்த பிறகு அவனால் தன்னை இயலிடம் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
இத்தனை நாள் தேக்கி வைத்திருந்த அனைத்து காதலும் சுனாமி போல பொங்கியது.
இருந்தாலும் சுற்றுப்புறம் உணர்ந்து சற்று உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியே வைத்திருந்தான்.
இப்போது தனிமையும் கிடைக்க அவளை நெருங்கி,
“ இப்போ எப்படி இருக்க இயல்?” கண்களில் காதல் மின்னக் கேட்டவனை ,
அவளால் ஒதுக்கவும் முடியவில்லை. ஏனெனில் இப்போது அவளுக்குமே தங்களின் ஈர்ப்பின் ரகசியம் புரிந்து தான் இருந்தது. ஆனாலும் தாங்கள் வாகீ,இயல் தான் என்று மனதில் தனக்குத் தானே கத்தி சொல்லிக்கொண்டாள்.
வாகீ தன்னிடம் இப்படி நடந்து கொள்வான என்ற ஏக்கம் அவளுக்கும் இருக்கத்தான் செய்தது.
ஆனால் அதை இப்போது ஏற்பதில் தான் அவளுக்கு சிறு உறுத்தல் இருந்தது.
வர்மா ரதியை பார்த்த பின்பு தானே இந்த மாற்றம்.! அது இல்லையென்றால் அவனும் முறுக்கிக் கொண்டு தானே இருந்திருப்பான்.
தேவையில்லாமல் யோசித்தாள்.
வாகீஸ்வரன் தன்னை ‘இயலா’கவே நேசிக்க வேண்டும் . ரதி யாக நினைத்து அல்ல! இது தான் அவளது அடி மனதில் இருந்த ஆசை.
இப்படி எல்லாம் குழப்பிக் கொண்டு , அவனுக்கு பதில் அளிக்காமல் இன்னும் அமர்ந்திருந்தாள்.
“ ஹே! இயல்! உன்ன தான் கேட்கறேன். தலை வலிக்குதா…?” பரிவோடு அவள் நெற்றியில் கை வைக்க,
அவனது அந்தச் செயல் ,பாசமான தொடுகை அத்தனையும் அவளுக்கு வேண்டியதாய் இருந்தது.
ஆனாலும் அது யாருக்காக! யார் நினைப்பில்…
அதனால் முகத்தைச் சுளித்துக் கொண்டாள்.
“என்ன டா…” இரு கைகளாலும் அவளது முகத்தை ஏந்திக் கொண்டான்.
அவனது அந்த நீண்ட கைகள் தன்னை தழுவாதா என்று ஏங்கிய நாட்கள் நினைவில் வர, இப்போது அதை ஏற்க முடியாமல் இருப்பதும் வலியைத் தர,
மெல்ல அவன் கையை தள்ளிவிட மனமில்லாமல் தன்னிடமிருந்து பிரித்தாள்.
அவனுக்கு சற்று கோபம் வரவே செய்தது.
அவளைக் கேள்வியாகப் பார்க்க,
“ நான் ரதி இல்ல… இயல்…” வராத குரலை தேக்கி வைத்து சொன்னாள்.
“ என்ன உளர்ற…!” அவன் குரலில் கடுமை!
அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள,
அவனுக்குப் புரிந்தது.
“ஓ!!! உன்ன ரதியாகவும் என்னை வர்மவாகவும் நினைத்து இப்படி வந்து பேசறேன்னு நினைக்கறியா…! ச்சே…” அந்த மெத்தையில் ஓங்கிக் குத்திவிட்டு அங்கிருந்து எழுந்தான்.
“ ஏன் உனக்கு இப்படி எல்லாம் தோணுது இயல்… அவங்க வேற நாம வேறன்னு எனக்கும் தெரியும். ஆனா, அவங்களா உன்ன நெனச்சு நான் உன்கிட்ட வரல..நான் அப்படிப் பட்டவனும் இல்லை…” குரல் சற்று உயரவே,
அவளுக்கு சோர்ந்த உடல் லேசாக நடுங்கியது.
அதைக் கண்டவன் சட்டென குரலைத் தாழ்த்தினான். அவளிடம் மென்மையாக எடுத்துச் சொன்னான்.
“இயல்! இங்க பாரு! நான் வர்மா இல்லை. வாகீஸ்வரன். நீ இயல். இப்போ என்னோட மனைவி. அந்த நினைப்புல தான நீயும் எனக்காக தண்ணீல குதிச்சு வந்த.. அப்போ மட்டும் கைய பிடிச்சுகிட்ட.. அப்போ எனக்கு வர்மா பத்தியோ ரதிய பத்தியோ தெரியாது டி!
உன்ன … நீ இயலா இருந்தப்ப…. பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டுத் தான் நான் போனேன். நீ தான் அப்பவும் அதை ஏத்துகல..இப்பவும் எதையோ நினைச்சி ஏத்துக்க மறுக்கற…”
அவன் சொன்ன போதுதான் தேவையில்லாமல் தான் குழப்பிக் கொள்கிறோம் என்பது அவளுக்குமே புரிந்தது. ஆனாலும் அவள் பேசும் முன்பே அவனே பேசிக் கொண்டிருந்தான்.
“ சோ… உனக்கு என்னைப் பிடிக்கல.. நீயும் நானும் வர்மா ரதியோட டிஎன்ஏ ல இருந்து வந்திருந்தாலும்… நான் உன்னை விரும்பற மாதிரி நீயும் என்னை விரும்பனும்னு நான் எதிர்ப்பார்த்திருக்கக் கூடாது தான். ஐ அம் சாரி…”
படபடவென பேசியவன் சற்று இடைவெளி விட,
“ இல்லை… அது நான் தான் …” தப்பா புரிஞ்சிக்கிட்டேன் என்று இயல் சொல்லும் முன்பே ,
அதைக் காதில் வாங்காமல் வாகி மீண்டும் தொடர்ந்தான்.
“நான் அன்னைக்கே சொன்ன மாதிரி நீ என்கூட வாழனும்னு அவசியமில்ல.. ஆனா, சேனா இப்போ சில விஷயங்களை சொன்னார். ..” புருவத்தைச் சுருக்கியவன்,
“ஹே! வெய்ட்… உனக்கு வர்மா ரதி எப்படி இருக்காங்கன்னு எதாவது தெரிஞ்சுதா..? எனக்கு வர்மா ரதிய தேடிப் போன பிறகு என்ன அச்சுன்னு எதுவும் தெரியல.. உனக்கு?”
“எனக்கும் அதுக்கப்பறம் எதுவும் தெரியல..” அவனது சீரியசான கேள்விக்கு பதில் சொன்னவள், அவனிடம் ஏதோ சொல்ல வாய் திறக்க,
“சரி விடு! சேனா இதுக்கு நாம தான் உதவனும்னு சொல்லி இருக்காரு. அட்லீஸ்ட் அவங்க வாழ்க்கையாவது நல்ல இருக்க நாம உதவனும். அது வரைக்கும் நீ என்கூட இருப்பன்னு நினைக்கறேன்.
எனக்காக கேட்கல, ஒருத்தரை ஒருத்தர் விட்டு தனியா இருக்க முடியாத அவங்களாவது சேரனும்… அதுக்காக… ப்ளீஸ்…”
அவள் தலையாட்ட… ,
உள்ளே இருந்த துக்கத்தை பெருமூச்சு விட்டு வெளியேற்றிய படியே அங்கிருந்து சென்றுவிட்டான்.
“ ஒரு நிமிஷம்…” என்ற அவள் வார்த்தை காற்றில் கரைந்தது.
‘தப்பு மேல தப்பு பண்ணிட்டு இருக்கியே இயல்… உன்ன மாதிரி தான் அவரும்..அது ஏன் உனக்குப் புரியல… அவர் மனச நோகடிச்சுட்டேனே….
அவர் கிட்ட சாரி சொல்லி, லவ்-அ சொல்லிடு….’
இயலின் மனம் அறிவுரை வழங்க, அவன் பின்னே சென்றாள்.
ஆனால் அவன் வெளியே நடந்து சென்று விட்டான். அடுத்த அடி எடுத்து வைக்க தெம்பில்லாமல் கால்கள் தடுமாறி தரையில் அமர்ந்தாள்.