LogicIllaaMagic15

LogicIllaaMagic15

மேஜிக் 15

 

நிரஞ்சனும் அவன் குடும்பத்தாரும் வர, நந்தனாவின் குடும்பத்தினர் அவர்களை அன்பாய் வரவேற்று உபசரித்தனர். நந்தனா மேல் தளத்தில், தன் அறையைவிட்டு வெளியே வராமல் கையைப் பிசைந்தபடி அமர்ந்திருக்க, கீழ்த் தளத்தில் நிரஞ்சனோ புன்னகையுடன் அனைவருடன் பேசிக்கொண்டிருந்தான்.

ஜெகந்நாதனும் கண்ணனும் மிகவும் பரிச்சயமங்கவர்களை போலப் பேசிக்கொள்ள, சரஸ்வதி மைதிலி இருவரும் பேசிக்கொண்டிருக்க, நிவேதா பேச்சுத்துணையின்றி இருக்க, என்ன செய்வதென விளங்காமல்

“ஆண்டி நந்து எங்க?” ஆர்வம் தாங்காமல் கேட்டே விட்டாள்

“மாடியில் இருக்கா. நான் தான் அங்க அங்கேயே இருக்க சொன்னேன். கொஞ்சம் பதட்டமா இருக்கா போல இருக்கு, அதான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி அப்புறமா வரச்சொன்னேன். நீ வேணா மாடிக்குப் போய் பாரேன்டா” புன்னகையுடன் சரஸ்வதி சொல்ல

நிவேதா “நான் கூட்டிண்டு வரேன்” துள்ளிக் குதித்து எழ

“காஞ்சுமா வந்தாச்ச்…” என்றபடி உள்ளே காஞ்சனாவுடன் வந்த ஸ்ரீராமின் மேலே நிவேதா மோதிவிட இருவரும் தடுமாறி பின் நிலையாக நின்றனர்.

“பார்த்துப் பார்த்து” என்றபடி வந்த சரஸ்வதி “இவன் ஏன் பையன் ஸ்ரீராம். ராம் இவ நிவேதா, நிரஞ்சன் தங்கை” அறிமுகம் செய்து வைத்தார்.

“ஹாய்” புன்னகையுடன் ஸ்ரீராம் தலையசைக்க “ஹலோ” என்று சொன்ன நிவேதாவின் வாயிலிருந்து குரல் வரவில்லை காற்றுதான் வந்தது!

நந்தனாவின் அறைக்குச் செல்ல மெல்லப் படியேறியவள் கண்கள், அனைவருடன் புன்னகையுடன் பேசிக்கொண்டிருக்கும் ஸ்ரீராமின் மேலே திரும்பித் திரும்பி படிந்தது.

நந்தனாவின் அறைக்குச் சென்றவள், “ஹாய் நந்து! வா நாங்க எல்லாரும் உனக்காக காத்து கிட்டு இருக்கோம். என் அண்ணன் காரன் நீ வரியான்னு மாடிப்படியையே ஓரக்கண்ணால் பார்த்துகிட்டு கெடக்கான். வா வா” அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.

படியில் இறங்கியது முதல் நாற்காலியில் அமர்ந்தது வரை, மீண்டும் நிவேதாவின் கண்கள் ஸ்ரீராமின் மேலேயே இருந்தது.

நந்தனா மௌனமாக அமர்ந்திருக்க “என்னமா எங்கிட்ட என்ன தயக்கம்? பிரியா இருடா” வாஞ்சையாய் பேசிய மைதிலியை பார்த்துப் புன்னகைக்க. நந்தனா ஏனோ அமைதியாகவே இருந்தாள்.

‘டேய் ஏதாவது பண்ணுடா’ நிரஞ்சனை ஓரக்கண்ணால் உதவிக்கு அழைத்தாள் நந்தனா. அவனோ அவளைப் பாராது அவள் தந்தையுடன் எதோ பேசிக்கொண்டிருந்தான்.

‘மண்டைய மண்டைய ஆட்டி அங்கே என்னடா பேச்சு ? இங்க என்ன நடந்துகிட்டு இருக்கு ? ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லுறதுக்கென்ன ? கல்லுளிமங்கா!’ மனதில் அவனைப் பொரிந்து தள்ளினாள்.

காஞ்சனா அனைவருக்கும் பலகாரம் கொடுத்து அமர்ந்து கொண்டாள்.

சரஸ்வதி மைதிலியிடம் நந்தனாவின் உடையைக் காட்டி “நந்து போட்டிருக்க சல்வார் காஞ்சானா தான் டிசைன் பண்ணா” என்று பெருமையாய் சொல்ல ஆச்சரியப் பட்டுப்போனார் மைதிலி

“ரொம்ப அருமையா இருக்கு, பேசாம நம்ம நிரஞ்சன் நந்தனா கல்யாணத்துக்கு நீயே டிரஸ் எல்லாம் பார்த்துக்கோயேன்” ஆர்வமாய் சொல்ல

“அதுக்கென்ன தாராளமா ஜமாய்ச்சுடலாம்! நான் ஏற்கனவே அதற்கான வேலையில் இறங்கிட்டேன்” காஞ்சனா சந்தோஷமாய் சொல்ல

“அடடா எப்போலேந்து?” மைதிலி கண்கள் விரிய

“உங்க வீட்டுக்கு வந்த நாளே ஏனோ ஒரு நல்ல உள்ளுணர்வு. அதான் நல்ல நாளா இருக்கேனு அன்னைக்கே ஆரம்பிச்சுட்டேன்”

இவர்கள் இன்னும் பேசிக்கொண்டே இருக்க, நந்தனாவோ அமைதியாய் நிரஞ்சனையே பார்த்துக்கொண்டிருந்தாள்

‘டேய் ஏதானா பண்ணுவியா? மாட்டியா? நானே இப்போ கத்திடுவேன் அப்புறம் என்னை சொல்லக்கூடாது…காதலிக்கிறமாதிரி நடின்னு சொல்லிப்புட்டு சம்பந்தம் பேச வந்து உட்கார்ந்திருக்க? டேய் ஃபிராடு!’

“ஒரு நல்ல நாளா பார்த்து நிச்சயம் பண்ணிக்கலாம் அப்புறம் சௌரிய படி கல்யாண தேதி பார்க்கலாம். என்ன சொல்றீங்க?” ஜெகந்நாதன் கேட்க

ஆமோதித்த கண்ணன் “தாராளமா அப்படியே செய்யலாம். நந்துக்கும் செமஸ்டர் எக்ஸாம் வருது அடுத்த மாசம் அதை பார்த்துண்டு பிளான் பண்ணலாம்”

ஜெகந்நாதன் “ஒரு நிமிஷம், நான் வரதுக்கு முன்னாடியே நல்ல நாள் சிலது குறிச்சுண்டு வந்தேன். இதுல ஏதாவது தோதா இருந்தா அன்னைக்கே நிச்சயம் வச்சுக்கலாம்” என்றபடி தன் கைப்பேசியில் தேதிகளைப் பார்த்து

“அடுத்த வாரம் நிச்சயம் வச்சுக்கலாமா? கல்யாணம் எக்ஸாம் அப்புறம் வச்சுக்கலாம். என்ன உங்களுக்கு சௌரிய படுமா?” ஜெகநாதன் கேட்க

மிரண்ட நந்தனா “மாமா” என்று கத்திவிட, அப்பொழுதுதான் அவள் வந்தது முதல் நந்தனாவை பாராது தவிர்த்த நிரஞ்சன் அன்று முதல் முறை நந்தனாவை பார்த்தான்.

அழகாக சின்ன சின்ன எம்பிராய்டரி செய்த இளம் பிங்க் வண்ண சல்வாரின் எளிமையான அழகில் மனதில் நொடியில் ஒட்டிக் கொண்டது அவள் முகம்.

தலையை உலுக்கி தன்னை திசை திருப்பிக்கொண்டவன் “அப்பா ரொம்ப ஸ்பீடா போற மாதிரி இருக்கு. அவ எக்ஸாம் முடியட்டும். அப்புறம் இதெல்லாம் …”

ஸ்ரீராம் அனைவர்க்கும் முன்னே “என்ன இன்னிக்கி மாத்தி மாத்தி கல்யாணத்தை ஒத்தி வைக்கத்தான் இப்படி கூட்டா பிளான் பண்றீங்க போல இருக்கே” சிரித்தபடி சந்தேகமாய் நிரஞ்சனை கேட்க

நந்தனா “டேய் அவரை ஏண்டா வம்புக்கு இழுக்குறே ? அவர் எனக்காகத்தான் கேட்கறார்”

அனைவரும் திகைத்தபடி அவளையே பார்த்திருக்க

“ஹலோ! நீ என்னடான்னா நிரஞ்சனுக்காக பேசுறே, சார் என்னடான்னா உனக்காக பேசுறார். அப்போ நாங்க என்ன நினைக்கிறதாம் ? இதுல மட்டும் நல்ல ஒத்துமை டி” ஸ்ரீராம் விடாது பேச

“டேய் அவருக்காக நான் பேசாம யாருடா பேசுவா?” நந்தனா சளைக்க வில்லை

நந்தனாவை ஆச்சரியமாகப் பார்த்த நிரஞ்சன் “அதானே ராம் என் பேபிக்காக நான் பேசுறேன். அவ படிப்பு முக்கியம்ல” நந்தனாவுடன் கூட்டணி சேர

நிவேதா வோ வரிந்துகொண்டு “ராம் ! நீ சொல்றது தான் சரி! எல்லாரும் சம்மதிக்கிற வரை சும்மா சீன் போட்டுட்டு இப்போ கல்யாணமுன்னதும் பம்ம வேண்டாது? நல்ல கூத்தா இருக்கே” ஸ்ரீராமுடன் இனைந்து கொண்டாள்

“அப்படி சொல்லு நிவி, இதுக்கு பதிலை சொல்லுங்க” ஸ்ரீராம் நிரஞ்சனையும் நந்தனாவையும் கேள்வியாய் பார்க்க

ஸ்ரீராம் தன்னை நிவி என்று அழைத்த நொடியே நிவேதா மொத்தமாய் ஸ்ரீராமிடம் தன் மனதைக் கொடுத்துவிட்டாள்.

என்ன சொல்வதென நிரஞ்சன் யோசித்திருக்க அவன் காதருகில் சென்ற நிவேதா “அண்ணா…டேய்!”

“என்னடி” கிசுகிசுப்பாய் கேட்டான் நிரஞ்சன்.

“உனக்கு வேணும்னா பொறுமையா கல்யாணம் பண்ணிக்கலாம். எனக்கு இந்த ஸ்ரீராமை கல்யாணம் செஞ்சு வைடா.” எதோ இந்தப் பொம்மையை வாங்கி தா என்பது போல் சொல்லத் திடுக்கிட்டுத் தங்கையின் புறம் திரும்பினான் நிரஞ்சன்.

“என்ன சொல்றே நிவி ?” தன்னை மறந்து உரக்கவே கேட்டுவிட்டான்

அனைவர் பார்வையும் தன்மேல் விழ, கண்களை மூடிக்கொண்டு நிவேதா ‘உன்கிட்ட சொன்னேனே என்னை…’ எச்சிலை முழிங்கிவள்

“எனக்கு ஸ்ரீராமை பிடிச்சிருக்கு, அவருக்கு என்னை பிடிச்சிருந்தா, உங்க எல்லாருக்கும் சம்மதம்னா எங்க கல்யாணத்தையும் இவங்க கல்யாணத்தையும் ஒண்ணா செஞ்சிடலாமேன்னு சொன்னேன் அவளோதான்” மிகவும் கூலாக சொல்ல அனைவரும் திகைத்துவிட

ஸ்ரீராம் உறைந்துவிட்டான் ‘என்ன பொண்ணுடா!’ வாயைத் திறந்தபடி அதிர்ச்சியாய் நிவேதாவையே பார்த்திருந்தான்.

இதுவரை பிள்ளைகள் விளையாட்டாய் வாதாடியதைச் சுவாரசியமாய் பார்த்திருந்த பெரியவர்கள் நிவேதாவின் இந்த அறிவிப்பில் இமைக்க மறந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

நிரஞ்சனும் நந்தனாவும் ஒருவரை ஒருவர் கண்ணோடு கண் பார்த்துக்கொண்டு ‘இல்லை! வேணாம் சொல்லு’ என்பது போல ஏதோ ஜாடை பேசிக்கொண்டிருக்க, தொண்டையை செறுமிய ஜெகந்நாதன்

“நிவி நீ விளையாட்டா கேட்கறியா இல்லை…”

“நான் நிஜமாத்தான் கேட்கறேன் பா. தோணிச்சு உடனே கேட்டுட்டேன். எனக்கு இந்தக் காதல் கத்திரிக்காய் எல்லாம் இண்டெர்ஸ்ட் இல்லை. எனக்கு ஸ்ரீராமை பார்த்ததும் பிடிச்சுப்போச்சு, நல்ல குடும்பமா பாசமா இருக்காங்க அதான். மொதல்ல அவருக்கு சம்மதமாண்ணே தெரியலையே?” சொன்னபடியே ஸ்ரீராமை கேளிவியாய் பார்க்க

‘நான் சொல்ற அதே டைலாக்! வாவ்! இவளோ நாள் என் கண்ணுல படமா எப்படி இருந்தே?’ ஸ்ரீராம் புன்னகைத்தபடி,

“எனக்கும் நிவியை பிடிச்சுருக்கு. பெரியவங்களுக்கு சம்மதம்னா எனக்கும் சந்தோஷம்” சுருக்கமாக தன் சம்மதத்தைச் சொல்லிவிட அனைவர் முகமும் சட்டென மலர்ந்தது.

நிவேதாவின் முகமோ அவள் மனம் சந்தோஷத்தில் நிறைந்ததை புன்னகையாய் வெளிக்காட்டியது. நிரஞ்சனின் தோளில் புன்னகையுடன் சாய்ந்துகொள்ள, தங்கையின் எண்ணம் விளையாட்டில்லை என்பதை நொடியில் உணர்ந்துகொண்டான் நிரஞ்சன்.

“ஒரு 5 நிமிஷம் கொடுப்பீர்களா பசங்களா? நாங்கள் எங்க மனைவிமார்கள் கிட்ட ஓரிரு வார்த்தை பேசலாமா?” விளையாட்டாக கண்ணன் கேட்க

“நானும் இதான் கேட்க நெனச்சேன்” ஜெகந்நாதன் ஆமோதிக்க, பெற்றோர்கள் ஆளுகொருபுரம் தனியாகப் பேசச் சென்றனர். காஞ்சனாவை தன்னுடன் அழைத்து சென்றார் சரஸ்வதி.

“வா நிவி நாமும் பேசிக்கிட்டா நல்லது. எனக்கு உன்னை பற்றியும், உனக்கு என்னை பற்றியும் எதுவும் தெரியாது. அதான்” ஸ்ரீராம் அழைக்க நிவியும் அவனுடன் அமர்ந்துகொண்டு பேசத் துவங்கினாள்.

மெல்ல எழுந்த நிரஞ்சன் “பேபி கொஞ்சம் பேசணும் பின்னாடி தோட்டம் இல்லை மேல பால்கனி இப்படி எங்கயான இடமிருக்கா?”

தலையை மட்டும் அசைத்த நந்தனா “ம்ம்” என்றபடி “ராம், நாங்க தோட்டத்தில் கொஞ்சம் பேசிட்டு வரோம்” என்று சொல்ல

“எதுக்கு? என்ன செஞ்சு இந்த கல்யாணத்தை நிறுத்தலாம்னு கூட்டு சதி செய்யவா? இனி இது எங்க கல்யாணமும் கூட! புரிஞ்சுதா? ஒழுங்கா நல்ல முடிவா எடுங்க” சிரித்தபடி செல்லமாக மிரட்டினான் ஸ்ரீராம்.

“ஆமா டேய் அண்ணா, உனக்கும் அதான். ஒழுங்கா சொதப்பாம இருங்க” நிவியும் புன்னையுடன் மிரட்டினாள்.

புன்னகையைப் பதிலாகத் தந்த நிரஞ்சன் “ஸ்ரீராம், என் தங்கைன்னா எனக்கு உயிர்! அவ மனசு கஷ்டப்பட விடமாட்டேன். நம்புங்க உங்க கல்யாணம் எங்க பொறுப்பு” வாக்குறுதி கொடுத்தபடி நந்தனாவுடன் தோட்டத்தை நோக்கி நடந்தான்.

‘இவன் ஒருத்தன் எனக்கும் சேர்த்தே எப்போவும் பேசுறது. பெரிய நாட்டாமை’ நந்தனா பொறுமை காற்றில் பறக்கத் துவங்கியது.

சிறிய தோட்டமென்றாலும் ஓரிரு மரங்களும், நிறையப் பூந்தொட்டிகளும், அழகான துளசி மாடம், ஒரு சிறிய சிமெண்ட் பெஞ்ச் என்றுமென மிகவும் அழகாக இருந்தது.

காற்றில் நந்தனாவின் முகத்தின் ஓரத்தில் விழுந்திருந்த கூந்தல் கற்றைகள் காற்றில்  ஆட , கோவத்தில் சிவந்திருந்த அவள் முகம் கூட நிரஞ்சனின் கண்ணிற்கு அழகாய் தெரிந்தது.

‘இப்போ பாத்து கண்ணுக்கு அழகா தெரியுறாளே!’ என்றெண்ணியவனின் மூளை ‘டேய் டேய் வேண்டாம், வந்த வேலையை பார்’ எச்சரிக்கை செய்ய

“பேபி!” அவன் அழைக்க,

“என்னதான் நெனச்சுட்டு இருக்கீங்க ?” அவன் பேசும் முன்னே கோவமாக மெல்லிய குரலில் நந்தனா கோவமாக கேட்க

“நான் மட்டும் இதெல்லாம் எதிர்பார்த்தேனா என்ன?” அவன் குரலிலும் கோவமும் ஏமாற்றமும் இருந்தது.

“நான் உங்களை நம்பித்தான் சம்மதிச்சேன். இப்போ சொல்லாம கொள்ளாம கல்யாணம்னு வந்து நின்னா, நான் என்ன செய்ய முடியும் ?”

“உங்கப்பா வேண்டாம்னு சொல்வாருன்னு நம்பினேன். எங்க வீட்லயும் கவுத்துட்டாங்க. நான் முடிந்தவரை எவளோவோ தடுத்தேன் தெரியுமா ? சரி இங்க வந்து சமாளிச்சுக்கலாம்னு பார்த்தேன்”

“என்னத்த சமாளிக்க இப்போ எதுவும் நம்ம கையில் இல்ல போல இருக்கு” கோவமாக முகத்தை திருப்பி கொண்டாள்.

“ப்ளீஸ் பேபி ! நான் சத்தியமா நிவி இப்படி புதுசா கெளப்புவான்னு நினைக்கல. ஆனா என்ன பண்ண அவ சந்தோஷம் எனக்கு முக்கியம். கண்டிப்பா அதுக்காக என்னை நம்பின நிச்சயமா என்னால கஷ்டப் படுத்த முடியாது பேபி. என்னை நம்பு. உன்னை கனவில்கூட நான் கஷ்டப்படுத்தமாட்டேன்.”

“நிவி என்ன பண்ணுவாங்க பாவம். அவங்க நெஜமாவே ஸ்ரீராமை விரும்பறாங்க போல, அதான் உடனே தைரியமா கல்யாணத்துக்கு பேசிருக்காங்க. நம்மளால அவங்க மனசு கஷ்டப்படக் கூடாது”

“இப்போ என்ன பண்ணர்துன்னு பார்ப்போம். அவங்க கல்யாணம் தடைப் படக் கூடாது ஆனா நாம விஷயம் மட்டும் எப்படி சாதிக்கிறதுன்னு பார்ப்போம்”

“எனக்கும் அதான் யோசனை. நேத்துவரை கல்யாணம்ன்னு சொன்னாலே ஓடுறவன் இப்போ ஒரு நொடியில் தொபுக்கடீர்னு விழுந்துட்டான்.” சிலநொடி அமைதிக்குப்பின் தொடர்ந்த நந்தனா,

“நிவி மாதிரிப் பெண்ணை யாரு வேணாம்னு சொல்லுவா?. அவங்க ரொம்ப அழகு அதைவிட நிறைய அன்பு!” முகத்திலிருந்த கோவம் மறைந்து புன்னகையுடன் அவள் சொல்ல

நொடியும் தாமதிக்காமல் புன்னகையுடன் “உனக்கு என்ன குறைச்சல் பேபி? நீயும் தான் அழகு! ரொம்ப அன்பான பெண்ணும் கூட. உன்னை யாருக்குத்தான் பிடிக்காது?” மனதில் பட்டத்தை வெளிப்படையாய் நிரஞ்சன் சொல்லத் திகைத்து நிமிர்ந்தவள்,

சிரித்தபடி “நீங்க ஏன் சார் காமெடி பண்ணிக்கிட்டு. நான் முன்ன ஸ்கூல்ல ஒருத்தன் கிட்ட ப்ரொபோஸ் பண்ணப்போய் அவன் என்னை ‘ஒரு அறிய விலங்கென்ற’ மாதிரி பார்த்துட்டு போனான் தெரியுமா”

“ரசனை கெட்டவன்!” தோளைக் குலுக்கினான்

“ஆஹான்! அப்போ நான் உங்களை ப்ரொபோஸ் பண்ணா என்ன சொல்வீங்க?” அவன் கண்ணை நேரே பார்த்து அவள் கேட்க, பதில் சொல்ல முடியாமல் அவளையே பார்த்து உறைந்து நின்றான் நிரஞ்சன்.

‘ஆஹா பய பயந்துட்டான்! யாரு கிட்ட?’ உள்ளுக்குள்ளே புன்னகைத்துக் கொண்டவள்

“சரி சரி…சும்மா சொன்னேன் பயப்படாதீங்க. என்னால் உங்க பிரம்மச்சரியத்துக்குப் பங்கம் வராது! இப்போ நாம என்ன செய்யலாம் சொல்லுங்க”

தலையைக் கோதிக்கொண்டு சில நொடி அதிர்ச்சியிலிருந்து மீளப் போராடியவன்,

“தெரியலை… நிச்சயம் பண்ணிட்டு அப்புறம் கல்யாணம் வேணம்னா ஒரு பெண்ணா உனக்கு என்னை விட பாதிப்பு அதிகம் . அதான் யோசனையா இருக்கு. இப்போ இவங்க வேற புது ஜோடி, அவங்க மனச கஷ்டப்படுத்தவும் மனசு வரலை” நெற்றியைப் பிடித்துக்கொண்டான்.

“எனக்கும் அதான் யோசனை நம்மளால அவங்க சங்கடப் படக் கூடாது” நந்தனாவிற்கும் குழப்பம்

தன்னை பற்றி யோசிக்காமல் பிறருக்காய் யோசிக்கும் நந்தனாவின் மனதில் மிகவும் கவரப்பட்டான் நிரஞ்சன்.

‘உன்னை மாதிரி ஒரு பெண்ணை நான் கற்பனை கூட செஞ்சு பார்த்ததில்லை.  எப்போவும் சந்தோஷமா இருக்கணும் பேபி நீ !’ மனம் நந்தனாவின் மீதி சாய,

“என்ன யோசிக்கிறீங்க சார் ?” நந்தனாவின் குரலில் சுதாரித்தவன்,

“சரி பாப்போம். எவளோ முடியுதோ சமாளிப்போம், பேசி பாப்போம்”

“ம்ம் சரி அப்போ நான் வேணும்னா…” நந்தனா துவங்கும் போதே

“வாங்க” காஞ்சனாவின் குரல் வர இருவரும் உள்ளே சென்றனர்

“எங்களுக்கு பரிபூரண சம்மதம். உங்க பையனை எங்களுக்கு பிடிச்சுருக்கு. நிவி பிடிஎஸ் முடிக்கணுமேன்னு தான் கொஞ்சம் யோசனை” ஜெகந்நாதன் தயங்க,

“அதுனால என்ன தாராளமா படிக்கட்டும். கல்யாண தேதி பார்த்து பிளான் பண்ணிக்கலாம்” கண்ணன் புன்னகையுடன் பதிலளிக்க

“அப்போ இனி தேதி பார்க்க வேண்டியதுதானே” காஞ்சனா குதூகலமாய் சொல்ல

புன்னகையுடன் “கண்டிப்பா மா” என்ற ஜெகந்நாதன்,

“கேக்றேன்னு தப்ப எடுத்துக்க கூடாது. மைதிலியுடைய அண்ணன் பையன் கிரிதர் நம்ம ஹாஸ்பிடல்ல கார்டியாலஜிஸ்ட்டா இருக்கான். அவனுக்கு வரன் பாக்கறோம். உங்க காஞ்சனாவை எங்களுக்கு பிடிச்சுருக்கு. ஓகேனா ஒருநாள் மீட்பண்ணுங்க. பிடிச்சிருந்தா மேல பேசலாம்”

கண்ணனோ சரஸ்வதியை பார்க்க, இருவரும் சேர்ந்து காஞ்சனாவை பார்க்க, அவளோ எதுவும் புரியாமல் அண்ணன், அண்ணியைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ரொம்ப சந்தோஷம். ஆனா இதுல நான் தனியா முடிவெடுக்க எதுவுமில்லை, பையனைப் பத்தி நீங்க சொல்லுங்க, என் அண்ணன்கள் கிட்ட பேசிட்டு சொல்றேன். எல்லாத்துக்கும் மேல காஞ்சனா விருப்பம் தான் எங்களுக்கு முக்கியம்” கண்ணன் சொல்லிவிட்டு, தன் தங்கையைப் பார்த்து

“என்ன காஞ்சனா ப்ரோஸீட் பண்ணலாமா?” என்று கேட்க

படபட பட்டாசாகப் பேசும் காஞ்சனா அமைதியாக இருக்க, ஸ்ரீராம் “ நான் ஒரு 2 மினிட்ஸ் காஞ்சு குட்டிக்கிட்ட பேசிட்டு வரேன்…வா டார்லிங்” காஞ்சனாவை அழைத்துச் சென்றான்.

தயங்கியபடி கண்ணனோ “வித்தியாசமா நினைக்க வேண்டாம் காஞ்சனா, ஸ்ரீராம் நந்தனா எல்லாரும் ஒன்னாவே வளந்துட்டாங்க அதான் கொஞ்சம் பிரீயா பழகுறாங்க” விளக்கம் சொல்ல

ஜெகந்நாதன் “அதெல்லாம் ஒன்னும் நாங்க நினைக்க மாட்டோம். இந்த பாசம் தான் எனக்கு உங்க குடும்பத்துக்கிட்ட எங்களுக்கு ரொம்ப பிடிச்ச முதல் விஷயம்.”

“இனி நம்ப குடும்பம்னு சொல்லுங்கப்பா” மைதிலி சேர்க்க,

ஜெகந்நாதன் “ஆமாம் நம்ம குடும்பம்” சந்தோஷமாகப் புன்னகைத்தார்.

அறையை விட்டு வெளியே வந்த காஞ்சனா “எனக்கு ஓகே அண்ணா. நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படி…” அவள் தன் சம்மதத்தைச் சொல்ல, சட்டை காலரைத் தூக்கிவிட்டு நிவேதாவை ஸ்ரீராம் பார்க்க அவளோ ‘பிரமாதம்’ என்று செய்கையில் பாராட்டினாள்.

“அப்போ சரி நீங்க ஒரு நாள் பாருங்க நானும் அண்ணன்கள் கிட்ட பேசிட்டு சொல்றேன். பசங்க ரெண்டு பேரும் சந்திச்சு மனசு ஒத்துப்போச்சுன்னா கெட்டிமேளம் தான்!” கண்ணன் கொஞ்சம் குதூகலமாகவே சொல்ல அனைவர் மனமும் நிறைந்தது.

சரஸ்வதி மெல்ல “நான் ஒன்னு சொல்றேன். உங்க எல்லாருக்கும் சம்மதம்னா…” தயங்க

மைதிலி புன்னகையுடன் “தயங்காம சொல்லுங்கப்பா”

“அது…எப்படியும் இரண்டு கல்யாணமும் சேர்ந்து வைக்கலாம்னு நெனச்சோம். காஞ்சனா கிரிதர் சம்பந்தம் கைகூடினா மூணு கல்யாணத்தையும் சேர்த்தே செய்யலாமே”

சரஸ்வதி சொன்ன யோசனையை அனைவரும் உடனே ஒப்புக்கொள்ள, இருவரைத் தவிர மற்ற அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். நிரஞ்சன் நந்தனா மட்டும் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி வர யோசிக்கவும் மறந்தனர்.

உடன் பிறந்தவர்களின் திருமணம் தங்களால் தடைப்படக் கூடாதென்று தயக்கத்திலிருந்தவர்கள் இப்பொழுது இன்னும் திருமணமாகாமல் இருக்கும் காஞ்சனா, தாய் தந்தையின்றி, அத்தை, மாமாவைப் பெற்றோராய் ஏற்றுக்கொண்டு வாழும் கிரிதர் இருவரின் திருமணமும் சேர்ந்து கொள்ள. குழப்பமும் அதிர்ச்சியுமாய் மௌனமாகினர்.

error: Content is protected !!