logicIllaaMagic9

logicIllaaMagic9

மேஜிக் 9

 

திகைத்த நந்தனாவோ ‘அடப்பாவி வேணும்னேவா? ‘  அவனை நோக்கி வேகமாகத் திரும்பியவள்

“அப்போ எல்லாம் வேணும்னே செஞ்சீங்க அதானே? என்னை சும்மா அழவச்சு பார்க்க இவளோ ஆசையா ? மாட்டேன் அழ மாட்டேன், அழவே மாட்டேன்” தன்னை மீறி கண்ணில் அதுவரை சேர்ந்திருந்த கண்ணீரைத் துடைத்தவள் கோவமாய் பிதற்ற,

அவள் கண்ணில் நீரை எதிர்பார்க்காதவனோ பதறிப்போனான், “ஹே பேபி என்ன இது? “ அவள் கண்களைத் துடைக்க அவசரமாய் கையை நீட்டியவள் அவன் அவ்வளவு நேரம் மணலில் அக்கைகளினால் விளையாடியதை மறந்திருந்தான்

கண்ணில் மண் துகள்கள் விழ “ஸ்ஸ்ஸ்…” கண்களைக் கசக்கி அவள் துடிக்க

“ஹே சாரி! கண்ணை கசக்காதே? ப்ளீஸ், மண் துகள் கண்ணை கீறிடும்…இரு…” எழுந்து ஓடிச்சென்று அருகிலிருந்த கடையிலிருந்து தண்ணீர் பாட்டிலை வாங்கிக்கொண்டு வந்தான்.

ஆனால் அவன் வரும் முன்னரே பெண்ணொருவர் கொடுத்த தண்ணீரில் கண்களை அலம்பிக்கொண்டு அவருக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தாள் நந்தனா.

இவன் அவளை நெருங்கவும் அப்பெண் விலகி நடக்கவும் சரியாக இருந்தது. மெல்ல அவளை நெருங்கியவன்,

“ நான் தான் தண்ணி எடுத்துட்டு வர போனேன்ல?”

“அது எனக்கு எப்படி தெரியும்?” கண்களிலிருந்த ஈரத்தைத் துடைக்கக் கைக்குட்டையை எடுத்தபடி,

“கண்ல மண்ணை தூவிட்டு ஓடுறதுன்னு கேள்வி தான் பட்டிருக்கேன், இன்னிக்கி தான் நேரிலே பார்த்தேன்” சில்மிஷமாய் புன்னகைத்தபடி கண்களைத் துடைக்க

மூக்கை சுருக்கியவனோ “எவ்ளோ பெரிய ஜோக்கு! சிரிப்பே வரலை. இந்தா இது வச்சு மொதல்ல கண்ணைத் திரும்ப அலம்பு ம்ம்” அவன் மூடியைத் திறந்து தண்ணீரை விடத் தயாராக

“அதான் அலம்பிட்டேனே?“ அவள் அலுத்துக்கொள்ள

அவனோ பிடிவாதமாய் மீண்டும் அவளை கண்களைச் சுத்தம் செய்ய வைத்தான்.

மீண்டும் அமராமல் மெதுவாக அலையை ஒட்டியபடி நடக்கத் துவங்கினர்

“நீங்க என்ன சொல்ல வர சொன்னீங்க?”

“நேத்துலிருந்து மனசே சரி இல்லை!” அவன் முகம் வாடியது

‘உனக்கு நேத்துலேந்து தானே மனசு சரி இல்ல? எனக்கு உன்னை பார்த்ததிலிருந்து எதுவுமே சரி இல்ல ! ‘ மௌனமாகவே நடந்தாள்

“நேத்து நீ அடிச்ச கூத்துல அப்பா எவ்ளோ மனசு உடைஞ்சு இருக்கார் தெரியுமா? அதுனால எனக்குத் தூக்கமே இல்ல… ஒரே டென்ஷன்… ஸ்ட்ரெஸ்! “ அவளைக் குற்றம் சாட்டுவதை போலப் பார்த்தான்

‘அடிங்கு! உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா?’

“அப்போ நீங்க பண்ணது என்ன சார்?” அவள் கேட்ட நொடி, பிரேக் அடித்ததைப் போல நின்றவன் அவள் புறம் திரும்பி

“நான் என்ன பண்ணேன்?” புருவம் முடிச்சிட கேட்டான்

இதில் பொறுமையை இழந்தவளோ “அப்படியே கடல்ல பிடிச்சு தள்ளிடுவேன் சொல்லிட்டேன்! ? என்ன பண்ணினேனாம்ல! ஏன் சார் மறந்துபோச்சா ? அதானே ஒண்ணா ரெண்டா பொய்கள், ஞாபகம் வச்சுக்க? ஏக்கர் கணக்குல ரீல் சுத்தியும், என்ன பண்ணேன்னு கேட்கவே தனி தில்லு வேணும்!” கோவமும் நக்கலுமாய் சொன்னவள் அவனைத்தாண்டி வேகமாய் நடந்தாள்.

பின்னே விரைந்தவன் கோவமாக அவள் கையை பற்றி இழுத்து “ஹே நான் என்ன வேணும்னா பண்ணேன்?”

“அதைத்தான் நானும் கேக்கறேன். என்னத்துக்கு இப்படி வந்து என் வாழ்க்கைல கும்மி அடிக்கிறீங்க? நீங்க எப்படி எங்க வீட்டுல நாம லவ்வர்ஸ்னு பொய் சொல்லலாம்?” கையை உதறிக்கொண்டு கடுகடுக்க,
“ப்ச்…நான் கோவத்துல, விளையாட்டா உன்னை மாட்டிவிட….” அவன் சொல்லத் துவங்க,

“என்னது விளையாட்டா? “ கண்கள் விரிய அவனை முறைத்தவளின் பார்வையைக் கொஞ்சமும் மதியாது தொடர்ந்தான் நிரஞ்சன்

“பின்ன? நீ ஹாஸ்பிடலுக்கே வந்து, ரிசெப்ஷன்ல நின்னு என் காதலின்னு கத்தி சொல்லுவே, அதுவும் வைஷுகிட்டவே. நான் உன்னை மன்னிச்சு விடணுமா? நல்ல கதையா இருக்கே!” அவன் ஏளனமாய் சொன்னபடி இரண்டடி எடுத்துவைக்க, இப்பொழுது அவன் கையை பிடித்து இழுத்த நந்தனா,

அவன் உயரத்திற்கு நிமிர்ந்து முறைத்தவாறே

“மிஸ்டர் அப்படி பார்த்தா அத்தைகிட்ட எதுக்கு நீங்க அன்னிக்கி அவ்ளோ வீர வசனம் பேசினீங்க? மணந்தால் மகாதேவி ரேஞ்சுக்கு கட்டினா நந்துவைத்தான்னு?

அதுகூட பரவால்ல மன்னிச்சுடுவேன். ஆனா என் வீட்டுக்கே வந்து அதுவும் எங்க குடும்பத்துகிட்டயே எதோ என்னை மாஞ்சு மாஞ்சு லவ் பண்றமாதிரி ரீல் ரீலா ஓட்டினதுமில்லாம,
நான் எதோ உங்கமேல தலைகுப்புற காதல்ல விழுந்தமாதிரி சீன் போட்டு. கொஞ்சம் நஞ்சமா பண்ணீங்க? எல்லாத்துக்கும் மேல பேபி பேபின்னு கொஞ்சல் வேற!”

தன் மீதுள்ள தவறை இப்பொழுதும் உணராதவன் அவளைப் பொரிந்து தள்ளினான்

“நீயும் நானும் ஒண்ணா? நானாவது வீட்லதான் சொன்னேன். நீ? அத்தனை பேர் வந்துபோகிற இடத்துல சொன்ன. எங்கப்பா ‘நீ தான் என் புள்ள விரும்பற பொண்ணான்னு’ கேட்டா இல்லைன்னு சொல்லுறதுக் என்ன? “

‘ஆமா நானாவது சொல்லி இருக்கணும்ல. தப்பு என்னுடையது தானோ?’ நந்தனா எப்பொழுதும் போல் தன்னை மறந்து மற்றவருக்காக யோசிப்பதைப் போல இப்பொழுது நிரஞ்சன் பக்கம் நியாயம் இருப்பதைப் போல என்ன துவங்கினாள்.

“ அதுகூட பரவால்ல சின்ன பொண்ணு பதட்டம்னு விடலாம். ஆனா எங்கப்பா காலுல விழுந்ததுமில்லாம மாமா மாமான்னு எதுக்கு உன் புராணத்தை ஒப்பிச்சே?

இத்தனைக்கும் அப்போ தான் சொன்னேன் உன்கிட்ட, எனக்கு பார்த்த பொண்ணு வைஷாலின்னு” அவன் புகார்களை அடுக்க முழுவதும் தன்மேல் தான் தவறென்று எண்ணிக்கொண்டாள் நந்தனா.

தலைகுனிந்தவள் “சாரி நான் ஒன்னும் வேணும்னே பண்ணலை. என்னை மன்னிச்சுடுங்க.” குற்ற உணர்ச்சியில் கண்கள் கலங்க ஏனோ அதில் தன்னையறியாது அவன் மனம் கரைந்தான்.

“ஹே பேபி என்ன இது ? பரவாயில்லை விடு. நீ பண்ணதுக்கு நான் பண்ணேன். அத்தோட முடிஞ்சது. இதுக்கெல்லாமா அழுவா? டோன்ட் க்ரை பேபி”

நந்தனா, கண்களை துடைக்க தன் கையை உயர்த்தும் பொழுதுதான் அதுவரை அவன் கையை பற்றி இருந்ததை உணர்ந்தாள்.

அவனும் அதுவரை அதை உணர்த்ததுபோலத் தெரியவில்லை. “சாரி ! “ கையை இழுத்துக்கொண்டவள் மேலும்

“ நான் ஒன்னும் அழலை “போல உதட்டைப் பிதுக்கி. “எல்லார் முன்னாடியும் நான் அழமாட்டேன், அப்புறம் எல்லாரும் என்னை பத்தி என்ன நினைப்பாங்க ? ” கடலை பார்த்தபடி சிணுங்க,

“யார் என்ன நினைச்சா நமக்கென்ன ? யாரோ முகம் தெரியா ஒருத்தருக்காக நாம எதுக்கு யோசிக்கணும்? “ அவன் சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே அவன் கைபேசி சிணுங்க

“ஒரு நிமிஷ…அம்மா” நந்தனாவிடம் சொல்லிவிட்டு அழைப்பை ஏற்றான்.

“சொல்லுமா…” சாதனரமாய் கேட்டவன் முகம் இறுகி பதட்டமாய்

“சார் நீங்க யார் பேசுறீங்க ? இதோ வரேன் பக்கத்துல தான் இருக்கேன். தயவு செஞ்சு அவர்கள் கூடவே இருங்க ” அழைப்பைத் துண்டித்தவன்

“நந்து வா ! சீக்கிரம் ” அவள் பதிலுக்குக் காத்திராமல் அவன் காரை நோக்கி ஓடினான்.

காரில் ஏறியவுடன் காரை புயலெனச் செலுத்தத் துவங்கினான் நிரஞ்சன்.

“சார்…” “சார்…” எத்தனை முறை அவள் அழைத்தும் அவன் கவனம் சாலையிலேயே இருந்தது

சொல்லத் தெரியாத பயம் தொற்றிக்கொள்ள

“ரஞ்சன் ! “ அவள் உரக்க அழைக்க

“ம்ம் சொல்லு” அவன் பார்வை சாலையை விட்டு இம்மியும் விலகவில்லை

“என்னாச்சு ? “

“அம்மா கோவில்ல மயங்கி விழுந்துட்டாங்களாம். ஸ்பீட் டயல்ல என் நம்பர் இருக்கவே கால் செஞ்சுருக்காங்க, யாரோ ஒருத்தர்.” அவன் குரலில் ஜீவனே இல்லை.

“ஐயோ ! “ பதறியவள் “ஒன்னும் இருக்காது. சரியாகிடும் ! நீங்க டாக்டரா இருந்துகிட்டு இப்படி பதறலாமா? அவங்களுக்கு ஒன்னும் ஆகாது. கொஞ்சம் நிதானமா இருங்க ப்ளீஸ்.” அவனைச் சமாதானம் செய்ய முயன்றவள், கியரை பற்றி இருந்த அவன் கையின் மேல் தன் கையை ஆதரவாய் வைத்துப் பற்றிக்கொண்டாள்

அவளின் இந்தச் சின்ன செய்கை ஏனோ அவன் மனதிற்குத் தைரியத்தையும், சொல்லத்தெரியாத உணர்வையும் தர

“ம்ம்…” என்று மட்டும் சொல்லிவைத்தான்

பெசன்ட் நகர் அறுபடை முருகன் கோவில் வாயிலில் காரை நிறுத்தியவன்.

“வா நந்து” விரய

“சார் நீங்க போங்க, நான் வரலை” தயங்கியபடி அவள் நிற்க

“ஹே ப்ளீஸ் வா” கோவில் வாயிலையும் அவளையும் மாறி மாறி பார்த்து அவள் பரபரக்க

“நான் வரக் கூடாது சார்” தயங்கி நிற்க

“ஏன் ? கோவமா? அதை காட்ட இதான் நேரமா? ச்சே ! “ அவன் பொரிந்து தள்ளிவிட்டு அவள் பதிலுக்குக் காத்திராமல் கோவிலுள்ளே விரைந்தான்
மாத சுழற்சியால் தான் கோவிலுக்குள்ளே செல்ல முடியாதென்பதை அவனிடம் அவள் சொல்லத் தயக்கம் தடுக்க அமைதியாய் நின்றவள் மனதில் முருகனை வேண்டிக்கொண்டாள்

“முருகா! சாரி உன் கோவிலுக்குள்ளே வர முடியாத நிலைல இருக்கேன் ! உனக்கு தெரியாதது இல்லை. பாவம் ஆண்டிக்கு ஒன்னும் ஆகம நல்லபடியா அனுப்பிவை ப்ளீஸ்” முருகனிடம் வேண்டிக்கொண்டிருந்தாள்

சிறிது நேரத்தில் தன் அன்னையைத் தாங்கியபடி மெல்ல வந்தான் நிரஞ்சன்.

அவர்கள் கோவில் வாயிலைத் தாண்டியதும் ஓடிச்சென்று மறுபுறம் அவன் அன்னையைத் தாங்கிக் கொண்டாள் நந்தனா.

காரில் பின் சீட்டில் அவரை நந்தனாவின் மடியில் தலைவைத்துப் படுக்க வைத்து தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டான்.

“மயக்கமா இருக்காங்களே. என்னாச்சு ? பக்கத்துல ஹாஸ்பிடல் இருக்கா ?” நந்தனா பதற்றமாய் கேட்க

அவனோ கோவமாய் “எதுவும் பேசாத ! ஒரு அவசரம்னா இப்படியா கோவத்தை காட்டுவ ? உன்னை என்னவோன்னு நெனச்சேன் ! “ எரிந்து விழ,

அவன் அன்னையின் தலையை வருடிக் கொண்டிருந்தவள் கோவமாய்

“சார் ப்ளீஸ் சும்மா புரியாம உளறாதீங்க! நான் ஒன்னும் கோவத்துல வரமாட்டேன்னு சொல்லலை”

“பின்னா என்ன உன்னதமான காரணமோ?” ரியர்வியு கண்ணாடியில் அவளை முறைத்தபடி இளக்காரமாகக் கேட்டான்

“….” என்ன சொல்வதென அவள் விழிக்க
“ஒரு அவசரம்னா அப்போ கூடவா உன் கோவத்தை காட்டுவ ? பழிவாங்க நேரம் காலம் வேண்டாமா?” அவன் மேலும் அடுக்க

“நிறுத்துங்க ! “ கத்தியவள், மடியில் அவன் அன்னை இருப்பதை உறைந்து சற்று தணிந்த குரலில்

“நான் வரமுடியாதுன்னு சொன்னேன் வரமாட்டேன்னு சொல்லலை”

“அய்யோ ரொம்ப பெரிய வித்தியாசம் பார். இவ்வளவு சுயநலவாதியா நீ ? ” அவன் திட்டுவதை நிறுத்தியபாடில்லை

“ஷட் அப் ! “ மீண்டும் கத்தியவள் மீண்டும் சூழ்நிலை உணர்ந்து

“ப்ளீஸ் சார் என்னனு புரியாம சும்மா பழி போடாதீங்க. நான்…இப்போ…” தயங்கி

“எனக்கு இப்போ பீரியட்ஸ் சார் ! கோவிலுக்குள்ளே எப்படி ? அதான் …” அவனிடம் இதைக்கூடப் பகிரவேண்டிய வந்ததை எண்ணித் தலைகுனிந்து கொண்டாள்

சற்றும் இதை எதிர்பாராதவனோ ‘ஒ ஷீட் ! அவசர பட்டியேடா ! ‘ தன்னை தானே நொந்து கொண்டான்

“சாரி பேபி ! ரியலி சாரி” நெற்றியை தடவிக்கொண்டவன்

அதன் பிறகு காரில் அமைதி மட்டுமே நிலவியது

சிறிது நேரத்தில் நிரஞ்சனின் வீட்டை அடைத்தார்கள்.

அன்னையைத் தாங்கியபடி வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்

“அம்மாக்கு என்னாச்சு ? திரும்ப லோ பீபியாடா ? “ ஓடிவந்தாள் நிவேதா

“ஆமாடா இன்னிக்கி மேடம் கோவில்ல ஸ்டண்ட் அடிச்சுட்டாங்க, நல்லவேளை நான் பக்கத்தில் பீச்சுலதான் இருந்தேன்” என்றபடி கீழ் தளத்திருந்த பெற்றோரின் அறையில் அன்னையைப் படுக்க வைத்தான்.

அதனுள் ஓ.ஆர்.எஸ் (ORS) கொண்டு வந்த நிவேதா, மெல்ல மெல்ல அன்னை மைதிலிக்கு புகட்டினாள்.

“அம்மா ரெஸ்ட் எடுக்கட்டும் வா” பதற்றத்துடன் நின்றிருந்த நிரஞ்சனின் கையை பற்றி ஹாலிற்கு அழைத்துச் சென்றாள் நிவேதா.

“நீ ஏன்டா இதுக்கே இப்படி டென்ஷன் ஆகுறே? அப்பப்போ வரது தானே? நான் முன்னாடியே சொன்னேன் டா, தனியா போகாதே நானும் வரேன்னு ரெண்டு நாள் அப்புறமா போகலாம்னு கேட்டாத்தானே?” என்ற படி அவனை சோபாவில் அமரவைத்தாள்.

“ஏண்டி இன்னிக்கே கூட போறதுக்கென்ன? ஏன் தனியா விட்டே? “ தங்கையை கடிந்துகொண்டான்

“டேய் எனக்கு இப்போ சைக்கிள் டே (மாதவிடாய்) டா லூசு நான் எப்படி போவேன்?”

‘எல்லாருக்கும் ஒரே நாளில் வருமா என்ன ?’ புருவம் சுருக்க விழித்தவன் ஒருநொடி உறைந்தான் “பேபி! “ ஷாக் அடித்தது போல எழுந்தான்.

“என்னடா புதுசா பேபின்னு கொஞ்சுறே ? அவ்ளோ பாசமாடா என் மேல?” பூரித்து நிவேதா கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே

“பேபி…” என்று அழைத்த படி, வாயிலை நோக்கி ஓடினான் நிரஞ்சன்

“யாருடா இங்க என்னைத் தவிர வேற ஒரு பேபி?” என்றபடி அவளும் அவனை பின் தொடர்ந்தாள்

“டேய் என்னடா நாய்க்குட்டி எதாவது வாங்கிண்டு வந்துருக்கியா ? பேபி ! ச்சு ச்சு பேபி ச்சு ச்சு….” பேபி என்பது நாயென்றெண்ணி உதட்டைக் குவித்து அழைத்தபடி வந்த நிவேதா, நந்தனாவை கண்டு குவிந்த இதழ்கள் குவிந்தபடி இருக்க, கண்கள் விரியச் சிலையாய் நின்றாள்.

நிரஞ்சன் நந்தனாவிடம் “ஏன் உள்ள வராம இங்கேயே நிக்குறே ? வா! “ அவளை அழைத்துக்கொண்டிருந்தான்.

“இல்லை சார் பரவால்ல. நான் கிளம்பலின் நீங்க அவங்களை பாருங்க”

“கேவலமா பண்ணாத வா” என்றவன் உரிமையாய் அவள் கரம்பற்றித் தன் வீட்டினுள் அவளை இழுத்துச் செல்ல திரும்ப

வாயிலில் நின்றிருந்த தங்கையைப் பார்த்தவன் “நிவி இது நந்து, நந்து இவ நிவேதா, என் தங்கை” அறிமுகம் செய்தபடியே அவளை இழுத்துக்கொண்டு அவன் வீட்டினுள் நுழைந்தான்

பெண்ணவள் கையை பற்றி இழுத்துச் சென்ற நிரஞ்சனோ, அவன் இழுத்த இழுப்புக்குக் கைப்பாவை போலக் கூட சென்ற நந்தனாவோ கவனிக்கவில்லை இருவரும் ஒரே நொடி வலது காலை எடுத்துவைத்து அவன் இல்லத்துள் நுழைந்ததை, ஆனால் நிவேதா ஆச்சரியமாய் கவனித்திருந்தாள்.

சந்தேக புன்னகையுடன் அவர்களை தொடர்ந்தவள் ஹாலில் நந்தனாவை அமரவைத்து, பழச்சாறு பரிமாறி அவள் அருகில் அமர்ந்து கொண்டாள்.

“நீங்க பேசிட்டு இருங்க, ஹாஸ்ப்பிடலேந்து நேரப் பீச்சுக்கு போனதால் குளிக்க முடியலை. ஒரு 10 மினிட்ஸ் பேபி வந்துடறேன்! “ என்று நந்தனாவிடம் சொன்னவன்.

நிவேதாவை நோக்கி “ஏய் வாலு பேசிட்டு இரு வந்துடறேன். என் போன் இந்தா, சார்ஜ்ல போடு” எப்பொழுதும் போல நீண்ட கால்களால் ரெண்டு ரெண்டு படிகளாய் தாண்டி மேல் தளத்திலிருந்து தன் அறைக்குச் சென்றான்

அவன் கைப்பேசியை எடுத்து சார்ஜ் போட்டவள் மனமோ ‘ யார் இந்தப பொண்ணு? பேபியாம்ல! கையை பிடிக்கிறான் இளிக்கிறான், பீச்சுக்கு வேற போனானாம்! சரி இல்லையே…நிவி நீ ஷெர்லாக் ஹோம்ஸ் (ஆங்கில கதையில் வரும் துப்பறிவாளன் கதாபாத்திரம்) ஆகவேண்டிய நேரம் வந்துடுத்துடி ‘ என்றெண்ணியவள் நந்தாவை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

அவ்ளோ அவர்கள் வீட்டைச் சுற்றி பயம் கலந்த பதற்றத்துடன் பார்வையை சுழல விட்டுக்கொண்டிருந்தாள்.

“ஹாய்! ஃப்ரீயா இருப்பா…” என்றபடி நந்தனாவின் எதிரில் அமர்ந்தவள்

“நான் பிடிஎஸ் படிக்கிறேன்! நீ என்ன பண்றே? ” தோழமையாய் புன்னகைத்தவளை கவனித்தாள் நந்தனா.

நிவேதா, கிட்டத்தட்ட நிரஞ்சனின் உயரம், அவன் ஆறடி என்றால் நிவேதா ஐந்தேமுக்கால் அடியாவது இருப்பாள். அழகிய சிவப்பும் வெண்மையும் கலந்த நிறம், லக்ஷணமான உருவம், சிரித்தால் கன்னத்தில் குழிவிழும், கண்களும் சேர்ந்து சிரிக்கும் அழகிய மெழுகு சிலைபோல இருந்தாள்.

கண்டவுடன் தன்னை அறியாமல் அவளைப் பிடித்துப்போனது நந்தனாவிற்கு, இப்பொழுது நட்பாய் அவள் பேசத் துவங்கவும் இன்னும் ஸ்நேகமாய் உணர்ந்தாள்

“நான் நந்தனா. விஸ்காம் படிக்கிறேன் பைனல் இயர்”

“ஒ சூப்பர் பா ! நீ அண்ணா பிரெண்டா, அம்மா பிரெண்டா?” இயல்பாய் அவள் கேட்க

நிரஞ்சனை ஏனோ மீண்டும் வம்பிழுக்கும் எண்ணம் வர

“நான் அவரோட கேர்ள் ஃபிரென்ட்! ” யோசனையோ தயக்கமோ இல்லாமல் சாதாரணமாய் நந்தனா சொல்ல, திகைத்தாள் நிவேதா
விழிகள் சாஸர் போல் விரிய “என்னது கேர்ள் ஃபிரெண்டா? யு மீன்….”

“நானும் அவரும் லவ் பண்றோம்” இல்லாத வெட்கத்தை வரவழைக்கப் போராடிக் கொண்டிருந்தாள் நந்தனா.

error: Content is protected !!