LogicIllaMagic22

LogicIllaMagic22

மேஜிக் 22

 

நிரஞ்சனின் மெஸேஜை படித்தவள் கண்கள் மேலும் கலங்க,

‘நீ தெளிவாத்தாண்டா இருக்க. நான் தான் பைத்தியமாயிட்டேன். நீ என்கூட அன்பா இருந்ததை காதலன்னு தப்பா நெனச்சுகிட்டேன்.’

முந்தைய இரவு அவனுடன் நிலாவை ரசித்தபடி இதமாய் கழித்தவள் இன்றோ தனிமையில் கண்கள் குளமாகத் தலையணிக்குள் முகத்தைப் புதைத்திருந்தாள்.

தன் அறையில் நிரஞ்சன் நந்தனா ஏதாவது கோவமாய் பதில் தருவாள், வம்பிருப்பதைப் போல் இரவை நந்தனாவுடன் பேசியபடி கழிக்க எண்ணிக் காத்திருந்து, பயண களைப்பில் உறங்கி இருப்பாளென்று நினைத்து ஏமாற்றத்துடன் உறங்கச்சென்றான்.

நந்தனா பின் வந்த நாட்களில் நிரஞ்சனுடன் பேசுவதைத் தவிர்த்து, தன் மனதை மீட்டெடுக்க எண்ணிப் படிப்பில் கவனத்தைத் திருப்பினாள்.

அவர்கள் எடுத்துவந்த காட்சிகளை எடிட் செய்வது, டப்பிங் செய்வது என்று முடிந்தவரை நண்பர்களுடன் பகல் பொழுதைக் கழித்தவள் இரவு நேரங்களில் பெற்றோர்கள் அறையில் படுத்துக்கொள்ளத் துவங்கினாள்.

திருமண நாள் நெருங்குவதால் பெண் இப்படி நடந்து கொள்வதாய் பெற்றோர்கள் நினைத்திருக்க, தனிமையிலிருந்தால் தன்னையும் மீறி நிரஞ்சனுக்கு போன் அல்லது மெசஜ் செய்துவிட வாய்ப்பிருப்பதால் அவளோ தனிமையைத் தவிர்த்தாள்.

ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் நந்தனா ஒருமுறை கூடத் தன்னுடன் பேசாததால் நிரஞ்சன் அவள் வீட்டிற்கே சென்று விபரம் அறிய எண்ணி, அவன் வேலைகளை முடித்துக்கொண்டு கிளம்ப, அங்கே வந்த வைஷாலி

“நிறு உன் ஃபோன் எங்க? எத்தனை தரம் ட்ரை பண்றேன்!” அவள் அவசரமாக அவன் கைப்பேசியைத் தேட

“சாரி ஆஃப் பண்ணி வச்சுருக்கேன். என்ன விஷயம்?” என்றபடி இழுப்பறையிலிருந்து தன் கைப்பேசியை எடுத்து ஆன் செய்தான்

“நாம இன்னிக்கே புனே கிளம்பனும், நம்ம டிரஸ்ட்ல சேர்றதா என்.எச் ஹாஸ்பிடலிருந்து கால் வந்தது. நீ ஈமெயில் பார்க்கலையா?”

“இல்லையே! அவங்க எப்படி? நான் அவங்ககிட்ட இதைப்பத்தி பேசவே இல்லையே?” புனேவில் புகழ்பெற்ற மிகப் பெரிய மருத்துவமனை தானே முன்வந்து நிரஞ்சனின் தன்னார்வலர் நிறுவதில் இணைய விருப்பம் தெரிவிப்பது அவனுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

“என்னடா என்னை கேக்கறே? உன் ப்ரெசன்ட்டேஷன் பார்த்து கால் பண்றதா சொன்னாங்களே!”

“ஒருவேளை நான் திருச்சிக்கு போனப்போ அங்க ஒரு ஹாஸ்பிடலுக்கு என் ப்ரெசன்ட்டேஷன் காபி கொடுத்தேன், அவங்க ஷேர் பண்ணிருப்பாங்க போல”

“இருக்கலாம். எனிவே நீ ரெஸ்பாண்ட் பண்ணலைன்னு எனக்கு கால் வந்தது. நாளை அந்த ஹாஸ்பிடல் சேர்மேன் யூ எஸ் போறார் போல. நாம நாளைக்கு கார்த்தாலேயே அங்க இருந்தா தான் அவர் அஃக்ரீமெண்ட் சைன் பண்ண முடியும் இல்லாட்டி அவர் வர 3 மாசம் மேல ஆகுமாம்”

“வெரி குட் ! இப்போவே டிக்கெட் இருக்கா பாக்கறேன். நீ அம்மாக்கு இன்போர்ம் பண்ணிடு. அந்த ஹாஸ்பிடலுக்கு கால் பண்ணி பேசிட்டு அக்ரீமெண்ட் ரெடி பண்ணிட்டு நான் வீட்டுக்கு கிளம்பறேன்.”

தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவமனைகளையும் மருத்துவர்களையும் மட்டுமே முதல் கட்டமாகத் தன்னுடன் இணைத்துக்கொள்ள எண்ணியவனுக்குத் தாமே முன்வந்து என்.எச் மருத்துவமனை இணைய விருப்பம் தெரிவிப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

புறப்படும் அவசரத்தில் நந்தனாவை பார்க்கப் போட்ட திட்டத்தை மாற்றிக்கொண்டவன், அவளுக்கு, தான் புனேவிற்கு அவசர வேலையாகச் செல்வதாகவும், வந்ததும் தங்கள் திருமணத்தைப் பற்றிப் பேசி முடிவெடுக்க வேண்டுமென்றும் மெஸேஜ் செய்துவிட்டு வைஷாலியுடன் புனேவிற்கு புறப்பட்டான்.

நந்தனாவோ மேலும் உடைந்து போனாள் ‘வேண்டாம்னு நீ சொல்றவரை என்னால் பொறுக்க முடியாது நானே பேசாம கல்யாணத்தை நிறுத்தப் பாக்கறேன். நீ என்னை வேண்டாம்னு சொன்னா அதைக் கேட்க எனக்கு மனசுல தெம்பில்லை’

எப்படியாவது திருமணத்தை நிறுத்துவதென முடிவெடுத்தவள் கையில் பேணவும் நோட்டு புத்தகத்தையும் வைத்துக்கொண்டு எதையோ பட்டியலிட்டுக் கொண்டிருந்த தன் அன்னையிடம்

“அம்மா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்”

“நீ என்ன இன்னும் குழந்தைன்னு நினைப்பா? எப்போ விளையாடுறதுன்னு இல்ல?”

“இல்லமா அவனுக்கு என் மேல காதலே இல்ல, பார் நான் ஊர்லேந்து வந்து ஒரு வாரமாச்சு ஒரு தரமான வந்து பார்த்தானா? அவன் என்னை அவாய்ட் பன்றான்” அவள் கோவமாக முறையிட

“நானே யாருக்கும் விட்டுப்போகாம பத்திரிக்கை கொடுக்க லிஸ்ட் போட்டுட்டு இருக்கேன். நீ இப்படி லூசுத்தனமா உளர்றதா இருந்தா இடத்தை காலி பண்ணு” அவர் எறிந்துவிழ

“அம்மா ப்ளீஸ் நான் சொல்றதை கேளு அவனுக்கு ஏன் மேல லவ் இல்லை!”

“உனக்கு அவன் மேல லவ் இருக்கா இல்லையா?”

“அம்மா!”

“கேட்டதுக்கு பதில்!”

வார்த்தையை மென்று விழுங்கியவள் “இருக்கு….” என்று இழுக்க,

“பின்ன என்னடி சும்மா தேவ இல்லாததை பேசி என் நேரத்தை வீணடிக்கிறே?”

“அம்மா நீயே நான் சொல்றதை கேக்கலைனா வேற யார் கேட்பா?”

மகளை தன் அருகில் அமரச் செய்தவர், அவள் கையை தன் இரு கரங்களுக்குள் பாதுகாப்பாய் பிடித்துக்கொண்டு,

“பெண்களை மாதிரி ஆண்களுக்கு அவங்க உணர்வுகளை வெளிப்படுத்த அவ்வளவா தெரியாதுடா கண்ணா.

அதுக்காக அவங்க மனசுல அன்பே இல்லைன்னு தப்பா நினைக்கக் கூடாது.

ஆணோ பெண்ணோ வேலை நால ஸ்ட்ரெஸ் வர்றது சகஜம் அப்படி இருக்கும்போது அவங்க மன அழுத்தத்தை கோவமாவோ மௌனமாவோ அவங்க துணைக்கிட்ட தான் உரிமையா வெளிப்படுத்துவாங்க.

அதுலயும் நிரஞ்சன் டாக்டர். அவன் கிட்ட வர ஒவ்வொரு பேஷன்டையும் பத்திரமா கையாள வேண்டிய பொறுப்புல இருக்க பையன்.

அவனுக்கு எவளோ ஸ்ட்ரெஸ் இருக்கும்? அப்படியும் உனக்காக ஊட்டிக்கு வந்து மூணு நாள் இருந்தான்ல, அப்போ உன் மேல அன்பில்லாமலா வந்தான் சொல்லு?

எவளோ அன்னோன்யமா காதலிச்சாலும் எப்போவும் கொஞ்சிக்கிட்டு, மரத்தைச் சுத்தி டூயட் பாடிகிட்டு இருக்க மாட்டாங்க நந்து. ஒருத்தருக்கு ஒருத்தர் எந்த சூழ்நிலையிலும் அன்பா அரவணைப்பா இருக்கறதுதான் குடும்பம்.

நிரஞ்சன் முடிஞ்சவரை அவனோட அன்பை வெளிப்படுத்திட்டு தான் இருக்கான். அதை புரிஞ்சுக்க நீ தான் மருக்குற. நான் சொல்றத பொறுமையா யோசிச்சு பாருடா புரியும்.”

“அம்மா நீ சொல்றதெல்லாம் நான் மறுக்கலை. இருந்தாலும்…”

“நந்து போதும். கிளி பிள்ளைக்கு சொல்றமாதிரி சொல்லிட்டு இருக்கேன் சும்மா ஏதான தத்து பித்துன்னு யோசிக்காம போய் படிக்கிற வேலைய பார்”

அதன் பிறகு நந்தனா எவ்வளவு முயன்றும் சரஸ்வதி பேசுவதாக இல்லை

***

புனேவில் என்.எச் மருத்துவமனையின் உரிமையாளரை, போர்ட் உறுப்பினர்களைச் சந்தித்து அக்ரீமெண்ட் கையெழுத்தான பின்பு, ஆர்வம் தாங்காமல் தன் ட்ரஸ்டின் விவரங்கள் அவர்களுக்கு எப்படிக் கிடைத்ததென்று கேட்டான் நிரஞ்சன்.

தங்கள் மருத்துவமனை முகவரிக்கு மின்னஞ்சலில் நிரஞ்சனின்அறக்கட்டளை , பற்றிய விவரங்களும், இதுவரை அதன் மூலம் பயன் பெற்றோரின் மேலோட்டமான விவரங்களும் தங்களுக்குக் கிடைத்ததாகவும் தெரிவிக்க

“தப்பா எடுத்துக்கலைனா உங்களுக்கு யார் அந்த ஈமெயில் அனுப்பினா சொல்ல முடியுமா?” அவன் கேட்க, அவர்கள் தந்த பதிலில் வியந்தவன் வைஷாலியை பார்க்க

“வைஷு என்ன இது ?”

“டேய் எதுக்குடா முறைக்கிற?”

“என் கிட்ட ஒருவார்த்தை சொல்லர்துக்கு என்ன?”

“அது பொறுமையா சொல்லிக்கலாம்ன்னு இருந்தேன்”

அவன் அதன் பிறகு எதோ சொல்ல, வைஷாலியோ புன்னகையுடன்,

“இங்க பாருடா… இவனுங்களுக்கு தமிழ் புரியாதுன்றதுக்காகத் தமிழ்லயே திட்டாதே. இப்போவே ஒருமாதிரி பாக்குறாங்க. நாம நம்ம கெத்தை இங்க மெயின்டெயின் பண்ணனும். சொன்னா கேளு! அப்புறம் பேசிக்கலாம்” புன்னகையுடனே அவனை முணுமுணுத்தபடி கெஞ்ச,

அவனும் சிரித்தபடி, “தப்பிச்சிட்டதா நினைக்காதே உனக்கு இருக்கு!” மறைமுகமாக எச்சரித்தான்.

இரவு ஹோட்டலில் வைஷாலியின் அறையில், நிரஞ்சன் கோவமாக இங்கும் அங்கும் நடந்தபடி,

“சென்னைலயே நீ ஒரு வார்த்தை சொல்லிருக்க கூடாதா?”

“இல்லடா நந்தனாதான் சொல்ல வேண்டாம்னு சொன்னா.”

“அவ சொன்னா உனக்கு என் கிட்ட சொல்லணும் தோனலயா? நீ கல்யாணம் செஞ்சுக்க போற பொண்ணு ஈமெயில் பண்ரா உனக்கே தெரியாதானு அவனுங்க கேட்டப்போ எப்படி இருந்தது தெரியுமா?” அவன் கடுகடுக்க

“டேய் அவங்க கிண்டலாதான் கேட்டாங்க. ஓவரா குதிக்காத” வைஷாலி சண்டைக்கு நிற்க

“என்கிட்ட ஒருவார்த்தை சொல்றதுக்கு என்ன? ஒண்ணுமே தெரியாத மாதிரி நீ ஏன் நடிச்சே?”

“எத்தனை தரம் சொல்றது? அவ உனக்கு உதவணும்னு நெனச்சுதான் என் கிட்ட ப்ரெசன்ட்டேஷன் கேட்டா. நீ அவளுக்கு நியாயமா நன்றிதான் சொல்லணும். அப்படியே கோவம்னாலும் உன் ஸ்வீட் ஹார்ட்டை கேட்காம என்கிட்டே எதுக்குடா சண்டைக்கு வர?”

“ஆமா மொதல்ல அவளை வச்சுக்குறேன்” கைப்பேசியை எடுத்து நந்தனாவிற்கு கால் செய்தான், அவள் எப்போதும் போல அதை ஏற்காததால்

“இவ ஒருத்தி ஃபோனை எங்கயான போட்டுட்டு போயிட வேண்டியது” முணுமுணுத்தபடி, யாரை அழைக்கலாமென்று யோசித்திருக்க, வைஷாலியோ,

“நல்லா வேணும்டா உனக்கு. காதலிக்கிறவனை எல்லாம் கிண்டல் பன்னிட்டு, கல்யாணம் செஞ்சுக்குற வனெல்லாம் லூசுன்னு சொல்லிட்டு இப்போ தம்மாத்தூண்டு பொண்ணுகிட்ட சிக்கி சின்னாபின்னமாகிட்டு இருக்கே பாரு… இதான் மச்சி விதி வச்சு செய்யுறதுன்னு சொல்றது”

கைபேசியை பார்த்திருந்தவன், “கடுப்பேத்தாம ஓடிரு! செம்ம காண்டுல இருக்கேன். அவ மட்டும் இப்போ என் கைல கிடைச்சா…”

வாய்விட்டுச் சிரித்த வைஷாலியோ, “அப்படியே கெடைச்சுட்டாலும்! இப்போவே உன்னை இவளோ சுத்தல்ல விடறாளே, உனக்கு கல்யாணம் ஆகட்டும் மச்சி, நந்தனா உன்னை அடிக்கிற அடியில உன் முகத்துக்கு நீயே பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்க போற பார்”

அவளை முறைத்தபடி கைப்பேசியில் ஸ்ரீராமிற்குக் கால் செய்தவன், செல்லமாக வைஷாலியின் தலையில் குட்டிவிட்டு, ஸ்ரீராமுடன் பேசியபடியே தன் அறைக்குச் சென்றான்.

ஸ்ரீராமுடன் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவன், பதற்றத்துடன் மீண்டும் வைஷாலியின் அறைக்கு விரைந்தான்.

மறுநாள் மாலை சென்னை திரும்புவதாக அவர்கள் போட்ட திட்டத்தை மாற்றி அடுத்த விமானத்திலேயே திரும்பவேண்டுமென்று சொன்னவன், அதிகாலை விமானத்திற்குப் பதிவுசெய்தான்.

மறுநாள் வைஷாலியை அவள் வீட்டில் விட்டுவிட்டு நேராக நந்தனாவின் வீட்டிற்கு விரைந்தான் நிரஞ்சன்.

புயலென நுழைந்தவனைக் கண்டு அதிர்ந்த கண்ணன், “வா பா, புனே போய்யிருக்றதா உங்கப்பா சொன்னாரே”

கோவத்தை வெளிக்காட்டாது, “ம்ம் இப்போதான் வந்தேன் மாமா. நந்து எங்க?”

“அவ வேலை இருக்குனு இப்போதான் கிளம்பி போனா. ஏதாவது பிரச்சனையா உங்களுக்குள்ள?” மனதில் பட்டத்தை அவர் கேட்டுவிட, இல்லை என்று மறுத்தவன். ஸ்ரீராம் அலுவலகத்திற்குச் சென்று அலுவலக காஃபி ஷாப்பில் ஸ்ரீராமை சந்தித்தான்.

“உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையா?” ஸ்ரீராமும் கண்ணன் கேட்ட கேள்வியை முன்வைக்க

“இல்லை. நான் என்ன செஞ்சேன்னு எனக்கே புரியலை ராம். நந்து கால் பண்ணா எடுக்க மாட்டேங்குறா” வருத்தமாய் சொன்னவனுக்கு இப்பொழுதும் ஒன்றும் புரியவில்லை

“அவ நேத்து காலைலயே சரி இல்லை, அம்மாக்கிட்ட உனக்கு அவ மேல காதலே இல்லைன்னு சொல்லிருக்கா!” ஸ்ரீராம் நிரஞ்சனை கூர்ந்து நோக்க, காஃபி குவளையை வெறித்திருந்தவன் அதிர்ந்து நிமிர்ந்தான்.

“என்ன?”

“நீங்க ஊருக்கு போயிட்டு வந்ததுலேந்து அவ முகமே சரி இல்லை. எப்போ கேட்டாலும் உனக்கு அவ மேல காதல் இல்லைன்னு மட்டுமே சொல்றா. போறத குறைக்கு எங்க எல்லார் கிட்டவும் இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லி ஒரே அடம்.”

அவன் காதுகளில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாமல், கண்களை மூடிக்கொண்டவன், “நான் நந்து கிட்ட பேசணும் ராம். எதோ தப்பா அர்த்தம் பண்ணிட்டு இருக்கா. நான் அவளை உயிருக்கும் மேலா விரும்பறேன். அவ மேல எனக்கு இருக்குற லவ் நாளுக்கு நாள் அதிகமாகுதே தவிர குறைய வாய்ப்பே இல்லை.” அவன் முகத்தில் தெரிந்த வலி ஸ்ரீராமை மிகவும் கவலைகொள்ள வைத்தது.

காலை அவள் மடிக்கணினியில் எதையோ தேட சென்றவனின் கண்ணில் அவள் வெளிநாட்டில் மேற்படிப்பிற்காக அனுப்பிய விண்ணப்பத்திற்குப் பதிலாக, அந்த ஆஸ்திரேலியன் பல்கலைக்கழகத்திலிருந்து ஆன்லைன் நேர்முகத் தேர்விற்கான தேதியைத் தெரிவிக்கும் மின்னஞ்சலை எத்தேசியாகப் படித்ததை நிரஞ்சனிடம் சொல்ல, நிரஞ்சனின் முகம் அதிர்ச்சியில் வாடி பின்பு இறுகியது.

“நான் அவ கிட்ட பேசிட்டு உன்கிட்ட சொல்றேன் ராம். அவளே நெனச்சாலும் நான் தான் அவளுக்கு! இப்போவும் எப்போவும்!. என்னைத்தவிர வேற யாராலயும் அவளைச் சந்தோஷமா பார்த்துக்க முடியாது. வரேன்!” உறுதியாய் சொன்னவனை அணைத்துக்கொண்டான் ஸ்ரீராம்.

“தேங்க்ஸ்! நீங்க ரெண்டுபேரும் உண்மையா காதலிக்கிறீங்களானு எனக்கு பலநாள் சந்தேகம் வந்திருக்கு ஆனா இப்போ இல்லை. என் தங்கை உனக்குத் தான். நான் வாக்கு தரேன்.நீ இப்போவே கன்னிமாரா கிளம்பு அவ அங்கதான் போயிருக்கா எதோ புஸ்தகம் அவசரமா வேணும்னு.”

ஸ்ரீராமிடம் புன்னகையைப் பதிலாகத் தந்தவன் நேராகச் சென்னை எழும்பூரில் இருக்கும் இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றான கன்னிமாரா நூலகத்திற்கு விரைந்தான்.

பல்லாயிரக்கணக்கான நூல்களைக் கொண்டு பிரமாண்டமாக நின்றிருந்த நூலகத்தில் அவளை எங்கே தேடுவதென்று திகைத்து வாயிலில் நின்றவன், கைப்பேசியில் அவள் படிப்பு சம்மந்த பட்ட பாடங்களில் பட்டியலைப் பார்த்து எங்கெங்கு தேடவேண்டுமென்று குறித்துக்கொண்டு ஒவ்வொரு பகுதியாகத் தேட துவங்கினான்.

அவன் எண்ணியது போலவே ஒரு பகுதியில் எதோ புத்தகத்தை எடுக்க எம்பி எம்பி அவள் முயற்சித்துக் கொண்டிருந்தாள். ஓசைப்படாமல் அவள் பின்னே சென்று அந்த புத்தகத்தை எடுத்துவிட,

தன்னை தாண்டி ஓர் ஆணின் கை தான் எடுக்க முயற்சிக்கும் புத்தகத்தை எடுப்பதை கண்டவள்,

“ஹலோ அந்த புக் எனக்கு வேணும் மிஸ்டர்…” என்று கோவமாகத் திரும்பியவள், நிரஞ்சனை அங்கு எதிர்பாராது திகைத்து நின்றாள்.

“நிரஞ்சன் ! என் பெயர்கூட மறந்து போச்சோ?” ஒற்றை புருவம் உயர்த்தி அவன் கேட்க,

அவன் கையிலிருந்த புத்தகத்தை அவள் பிடுங்க முயற்சிக்க, அவனோ கையை மேலே மேலே உயர்த்தி போக்கு காட்டியபடி “மொதல்ல நீ எனக்கு பதிலை சொல்லு”

“உனக்கு பதில் சொல்ல எனக்கு நேரமில்லை. புக்கை குடு நான் கிளம்பனும்”

“ஆஹான்?” அவன் புத்தகத்தைக் கொடுக்காது முன்னும்பின்னும் அலைக்கழிக்க

“ரஞ்சன்!” அவள் உரக்க கோவமாகக் கத்தியதில், நூலகத்தில் வேலைபார்க்கும் ஒருவர் இருவரையும் கடிந்து, எச்சரிக்கை செய்துவிட்டுச் செல்ல,

ரகசியம் பேசும் குரலில் “புக்கை குடு எனக்கு நேரமாகுது”

அவனும் அதே பொய் ரகசியமாய், அவள் உயரத்திற்குக் குனிந்து அவன் முகத்தின் வெகு அருகில் சென்று,

“முடியாது போடி!” என்று விட்டு புன்னகையுடன் திரும்பி நடக்க, பின்னாலே சென்று அவன் காலில் உதைத்தவள் அவன் தடுமாறியதில் அவன் கையிலிருந்த புத்தகத்தைப் பறித்துக்கொண்டு ஓடிவிட

‘எங்கே போயிட போறே ? இனி நீயே நெனச்சாலும் என்னைவிட்டு நீ பிரியவே முடியாது பேபி. உனக்கு நான்னு கடவுள் முடிவு பண்ணிட்டார்’ புன்னகையும் சிரிப்புமாக அவளை பின் தொடர்ந்தான்.

நூலகத்தை விட்டு வெளியேறியவள், ஆட்டோவிற்காகச் சென்று நிற்க,

“உன் வண்டி என்னாச்சு?” என்றபடி அவள் அருகில் தன் பைக்கில் வந்து நின்றான் நிரஞ்சன்.

இதுவரை அவனை இருசக்கர வாகனத்தில் பார்த்திராதவள், “யார் பைக்கை சுட்டுட்டு வந்திருக்கீங்க?”

“ஹலோ என் பைக் தான் எப்போவும் கார்ல போனா கட்டுப்படி ஆகாது பேபி. பிளஸ் பைக்ல போனாதான் ரொமான்டிக்கா இருக்குமாம்”

“ஆஹா யார் சொன்னா ?”

“உன் நாத்தனார் தான்!”

“…”

“வா ஏறு எங்க போணுமோ டிராப் பண்றேன்”

“தேவையில்லை…ஆட்டோ !” சாலையைப் பார்த்துக் கத்த

“மரியாதையா ஏறு பொறுமையா பேசிட்டே இருக்க மாட்டேன். நீ என்னை அவாய்ட் பன்றேன்னு ஏற்கனவே உன்மேல கொலை காண்டுல இருக்கேன்.”

“ஆட்டோ ! ஆட்டோ !” அவனைப் பொருட்படுத்தாது சாலையில் செல்லும் ஆட்டோக்களை நிறுத்த அவள் கத்திக்கொண்டிருக்க, ஒரு ஆட்டோகூட நிற்கவில்லை.

வெறுப்பாக அவன் புறம் திரும்ப, அவன் ஆட்டோக்களை பார்த்து வேண்டாமென்று ஜாடை செய்து கொண்டிருப்பதைக் கண்டு முறைக்க

அதுவரை போகும் படி கையை ஆட்டிக்கொண்டிருந்தவன் தன் தலை முடியை கோதுவதை போலப் பாவனை செய்து எங்கோ பார்க்க

“உங்களுக்கு என்னதான் வேணும்?”

“நீ இப்போ வண்டியில ஏறணும்” ஹெல்மட்டை மாட்டிக்கொண்டு வாகனத்தை ஸ்டார்ட் செய்தான்.

“இம்சைக்கு வேற பெயர்வச்சா அது நிரஞ்சன் தான்” அவன் காதுபட புலம்பிக்கொண்டே அவள் பைக்கில் அமர்ந்துகொண்டாள்.

“ஏறிட்டியா பேபி? ஒழுங்கா பிடிச்சுக்கோ விழுதுட போற” அவன் அக்கறையாக ரியர்வியூ கண்ணாடியில் பார்த்துச் சொல்ல

“எல்லாம் பிடிச்சுக்கிட்டு தான் இருக்கேன். கிளம்புங்க” அவன் கடுகடுக்க

“எங்க பிடிச்சுருக்கே? என்னை பிடி”

“தேவையில்லை, பின்னாடி கைப்பிடி இருக்கு அதை பிடிச்சுருக்கேன்” கண்ணாடியில் தெரியும் அவன் முகத்தைப் பார்த்து அவள் வெட்டேத்தியாகச் சொல்ல, கோவமாக வண்டியைக் கிளப்பினான் அதில் ஆட்டம் கண்டவள் பயந்து அவன் தோளைப் பற்றிக்கொள்ள,

‘அது!’ ஹெல்மெட்டிற்குள் சிரித்துக்கொண்டான்.

வண்டியை நேராக ஒரு உணவகத்திற்குச் செலுத்தியவன் பைக்கை பார்க் செய்ய,

“இப்போ எதுக்கு ஹோட்டல்? எனக்கு பசிக்கல” முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“எனக்கு பசிக்கிதே” பாவமாகச் சொன்னவனைக் கண்டவள் மனம் நொடியில் உருக

“சாப்பிடாம ஊரசுத்துறீங்க ? ஹாஸ்பிடல் போகவேண்டாமா ? வெட்டி ஆபிசர்ன்னு நினைப்பா? வாங்க மொதல்ல சாப்பிட்டு கிளம்புங்க” விறுவிறுவெனச் சொன்னவள் அவன் கையை பிடித்து இழுத்துச் சென்றாள்.

இருவருக்குமான உணவை ஆர்டர் செய்தவன், “பேபி”

“ம்ம்”

“கல்யாணம் வேணாம்னு சொன்னியா?” தாங்காமல் கேட்டுவிட

“ம்ம்”

“ஏன்?”

“என்ன ஏன் ? நீங்களும் அதைத்தானே பண்ண போறீங்க? நான் பண்ணா என்ன ?” முறைக்க

“நான் எப்போ அப்படி சொன்னேன்?”

‘அடப்பாவி!’ அதிர்ந்தவள் மௌனமாக அவனைப் பார்த்து “அதானே நம்ம அக்ரீமெண்ட் இப்போ என்ன புதுசா கேட்குறீங்க?”

“இத பார் பேபி…” அவன் பேசத்துவங்கவும் சுடச் சுட பொங்கல் வடையுடன் உணவு பரிமாறுபவர் வரவும் சரியாக இருந்தது

“மொதல்ல சாப்பிடுங்க அப்புறம் பேசிக்கலாம் நான் எங்க ஓடியா போறேன் ?” அவனுக்கான தட்டை அவன் முன் நகர்த்தி வைத்தாள்.

“ஒடித்தானே போகப்போரே ஆஸ்திரேலியாவுக்கு!” சொன்னவன் பொங்கலைச் சாப்பிடத் துவங்க

அதிர்ந்தவள் “உங்களுக்கு எப்படி?”

“எல்லாம் எனக்கு தெரியும். நீ ஏன் இப்போ நாட்டை விட்டே ஓடப்பாக்குறே?”

பதிலேதும் சொல்லாது மௌனமாக இருந்தவள் “சாப்பிடுங்க பேசிக்கலாம்” பதில் சொல்லாமல் தவிர்த்தாள்

“என் அம்மாவுக்கு அப்புறமா என் பசி பொறுக்காத ஒரே ஜீவன் நீ தான் பேபி” அவன் உருக்கமாகச் சொல்லிவிட்டுச் சாப்பிட, கண்கள் தன்னை அறியாமல் கலங்கிவிட அதை மறைக்க குனிந்தவள் உண்டு முடிக்கும் வரை நிமிர்ந்து அவனைப் பார்க்கவில்லை.

அங்கிருந்து புறப்பட்டு நந்தனாவின் கல்லூரியை அடைந்ததும், அவளை இறக்கிவிட்டவன் ஹெல்மெட்டை பெட்ரோல் டேங்கின் மீது வைத்து அவளையே புன்னகையுடன் பார்த்திருக்க,

“உனக்கு ஹொஸ்பிடலுக்கு நேரமாகலாயா? கிளம்புங்க!”

“நீ இன்னும் ஒரு முடிவுக்கு வரல போல இருக்கே!”

“எதைப்பத்தி ?”

“நீ ன்னு ஆரம்பிச்சு கிளம்புங்கன்னு முடிக்கிறே ? என்னை எப்படி கூப்பிடணும்னே உனக்கு இன்னும் குழப்பம் தீரலயா?”

நெற்றியை தடவிக்கொண்டவளோ, “நான் எப்படியோ கூப்டுட்டு போறேன் அதான் உங்களுக்கே புரியுதே நான் குழப்பத்துல இருக்கேன்னு. இப்போ கிளம்புங்க நேரம் ஆச்சு. பை” அவள் திரும்பி நடக்க எத்தனிக்க,

“பேபி நில்லு ப்ளீஸ்” அவன் அழைக்க

“என்ன?”

அவளையே சிலநொடிகள் பார்த்திருந்தவன்,

“பேபி ப்ளீஸ் ஏதாவது லூசுத்தனமா பண்ணி கல்யாணத்தை நிறுத்தறேன்னு எதையாவது செஞ்சுவைக்காதே!” ஆதங்கமாகச் சொல்லிவிட

“ஏன் ?”

“ஏன்னா?”

“ஏன்?”

“ஏன்னா?”

“அதைத் தான் நானும் கேட்கறேன். ஏன் நிறுத்தக் கூடாது?”

“பாரு பேபி என்னால புதுசா இனிமே ஒரு பொண்ணுக்கிட்ட என்னை புரியவைக்க முடியாது” அவன் வழக்கமான கிண்டல் புன்னகையுடன் சொல்ல

“அதுக்காக?”

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ!” அவள் கண்களை நேரே பார்த்து அவன் கேட்டுவிட

‘இதையே நீ காதலோடு கேட்டிருந்தா இப்போவே கட்டுடா தாலியைன்னு வந்திருப்பேன் நீ என்னடான்னா வேற யார் கிட்டவும் பேசி புரியவைக்க முடியாதுனு சொல்றே?’

“…”

“என்ன?”

“முடியாது!”

“நான் உன்னை அவிப்பிராயம் கேட்கலை, பண்ணிக்கோன்னு சொல்றேன். நாம கல்யாணம் பண்ணிக்கலாம் பேபி!”

“தண்ணிகின்னி அடிச்சிருக்கீங்களா ? ஊதுங்க” குழப்பமாக அவன் அருகில் அவள் செல்ல சிரித்துவிட்டவனோ,

“வேணாம் பேபி இது காலேஜ் இங்க உதட்டை குவிச்சுக்கிட்டு உன் பக்கத்துல நான் வந்தா உம்மா கொடுக்க வரேன்னு நினைப்பாங்க. வேணும்னா ஈவினிங் வீட்டுக்கு வா, இல்லை நான் வரேன் அப்போ தரேன், இப்போ போய் நல்ல பொண்ணா படி” கிண்டலாகச் சொல்லிவிட்டு அவள் கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டு ஹெல்மெட்டை அணிந்து கொண்டவன்

“வரேன் மிஸ்ஸஸ் நிரஞ்சன்” கண்ணடித்துவிட்டு பைக்கில் பறந்துவிட்டான்.

பேயறைந்ததை போல் வகுப்பிற்குச் சென்றவள் மனம் எதையும் யோசிக்கும் திறனை இழந்துவிட்டது. அவன் சொன்ன வார்த்தைகளும் செய்கைகளும் இது நாள்வரை அவள் கண்டிராதது.

“என்னடி இவளோ லேட்டா வர ? புக் கெடைச்சுதா? வா” அவளை அழைத்துக்கொண்டு ஆசிரியர்கள் அறைக்கு விரைந்தாள் சுகன்யா.

error: Content is protected !!