LogicIllaMagic6

மேஜிக் 6

 

ஒன்றும் புரியாமல் வந்த நந்தனாவோ பயத்தில் பேய் முழி முழிக்க.

காஞ்சனா கண்ணனை பார்த்து ஆர்வமாய் “அண்ணா உனக்கு நிரஞ்சனை முன்னாடியே தெரியுமா?” என்றபடி அவரை நோக்கி நடக்க.

“ம்ம் வாங்க டாக்டர்! உட்காருங்க.” நிரஞ்சனை அமர வைத்தவர், மனைவியை ஜாடையாய் பார்க்கப் புரிந்துகொண்ட அவரோ காஃபி எடுத்துவர சமயலைக்கு சென்றார்.

யோசனையாய் உள்ளே நுழைந்த ஸ்ரீராமோ தன் ஹெல்மெட்டையும் பையையும் அங்கிருந்த அறையில் வைத்துவிட்டு வந்து ஹாலில் தந்தையின் அருகில் சோஃபாவில் அமர்ந்தான்.

கண்ணன் “உங்களுக்கு எப்படி டாக்டர் எங்க நந்துவை தெரியும் ?” புன்னகைத்தவாறே நிரஞ்சனை கேட்க. அவன் பதிலளிக்கும் முன்பே இடை புகுந்த காஞ்சனா

“அதுவா நம்ம நந்து…” என்றபடி நந்தனாவை தேட அவளோ வீடு வாசற்படியிலேயே சிலையாகி இருந்தாள்.

“உள்ள வாடி, ஏன் அங்கேயே நிக்கறே?” ஸ்ரீராம் அதட்டலாக அழைக்க, தயங்கித் தயங்கி அவர்களிடம் சென்றவள் பதிலேதும் சொல்லாமல் அமர்ந்துகொள்ள.

“நீ சொல்லு உனக்கு எப்படி டாக்டரைத் தெரியும் ?” கண்ணன் விடாப்பிடியாய் கேட்க.

காஞ்சனாவோ புன்னகைத்தபடி “மொதல்ல உனக்கு எப்படி நிரஞ்சனை தெரியும் அதைச் சொல்லு”

“அதுவா ? போனமாசம் என் மேனேஜர் பையனுக்குக் காது ஆபரேஷன் இவர்தான் பண்ணார். அப்போ ஹாஸ்பிடலுக்கு குழந்தையைப் பார்க்கப் போகும் போது தான் இவரை மீட் பண்ணேன்!”

“ காது ஆப்ரேஷனா? ” என்று விழித்த காஞ்சனா, நிரஞ்சனை நோக்கி “நீங்கப் பிளாஸ்டிக் சர்ஜன் தானே? காதுன்னா ஈ.என்.டி தானே பார்ப்பாங்க ?”

புன்னகைத்த நிரஞ்சனோ “ஆமா அத்தை…காதுலதான். அந்த குழந்தைக்குப் பிறவிலேயே காது கொஞ்சம் வளைவா இருந்தது அதை சீர்படுத்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. நாங்க அதை ஓட்டோபிளாஸ்டி (Otoplasty) ன்னு சொல்லுவோம்…” பொறுமையாய் நிரஞ்சன் காஞ்சனாவிற்கு எளிமையான முறையின் விளக்கத் துவங்க.

கண்ணனோ நிரஞ்சன் தன் தங்கை காஞ்சனாவை “அத்தை!” என்று அழைத்த நொடியே புருவம் முடிச்சிட அவர்களைக் கூர்ந்து நோக்கியபின் கேள்வியாய் மகளைப் பார்க்க, அவளோ கைகளைப் பிசைந்துகொண்டு தரையையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

சரஸ்வதி அனைவருக்கும் காபி கொண்டுவர “எடுத்துக்கோங்க டாக்டர்!” என்று கண்ணன் சொல்ல

“ப்ளீஸ் மாமா நீங்க நிரஞ்சன்,நீ,வா, போன்னே சொல்லலாம்” புன்னகையுடன் சொன்னபடியே, காபி கோப்பையை எடுத்துக்கொண்டவன், சரஸ்வதியை பார்த்து “தேங்க்ஸ் அத்தை” என்று மயக்கும் புன்னகையை வீச

“மாமா” என்ற அழைப்பில் கண்ணன் திடுக்கிட்டு நிரஞ்சனை பார்க்க, “அத்தை” என்ற அழைப்பில் சரஸ்வதியோ தன் கணவரைக் குழப்பமாய் பார்க்க, காஞ்சனா புன்னகையுடன் நிரஞ்சனை பார்க்க, ஸ்ரீராம் நந்தனாவை முறைத்துப் பார்க்க, நந்தனாவோ யாரையும் பார்க்காமல் கண்களை இருக்க மூடிக்கொண்டு

‘சுத்தம்! ஆட்டம் குளோஸ் ! இனி உன்னை யாராலும் காப்பாத்த முடியாது நந்து! எல்லாம் ஓவர்!

டேய் லூசுப் பயலே! என் அப்பா,அம்மா உனக்கு அத்தை, மாமாவா? ஏன்டா ஏன் இப்படி என்னை இம்சிக்கிறே ?

எங்கிருந்துடா எனக்குன்னு வந்து சேர்ந்தே? உன்னை அன்னிக்கே திட்டித் துரத்தி இருக்கனும்.

என்னை சொல்லணும். இவளோ நாளா உன்கிட்ட போய்ப் பேசிட்டு இருந்தேன் பார்.

வில்லனை வீட்டுக்கே கூட்டிண்டு வந்த என்னை என் ஜோட்டாலேயே அடிச்சுக்கணும்.

ஆண்டவா காப்பாத்து !

பேசாம அந்தக் கிரிக்கெட் பேட்டை எடுத்து இவன் மண்டைலயே ஒன்னு போட்டு, இங்கிருந்து எழுந்து எங்கயான ஓடிடுவோமா?’ பதட்டத்தில் எண்ணம் கன்னாபின்னாவென்று தறிகெட்டு ஓடத் தன் சுற்றத்தை மறந்து தனக்குள்ளேயே யோசித்திருக்க.

தன்னை சுற்றி இத்தனை மாற்றங்கள் நிகழ அவற்றை கவனியாமல் காபியை ஒரு தரம் முகர்ந்துவிட்டு ரசித்துக் குடித்தவன். சரஸ்வதியை பார்த்து

“சூப்பர் காபி, அலுப்புக்கு ரொம்ப இதமா இருந்தது தேங்க்ஸ்” புன்னகைத்தவாறே சொல்ல, தலையை ஆட்ட வேண்டுமே என்று ஸம்ப்ரதாயமாய் தலையை ஆட்டி வைத்தார் சரஸ்வதி.

தங்கையைப் பார்த்த கண்ணன் “உனக்கு எப்படி காஞ்சனா நிரஞ்சனை தெரியும் ?”

ஷாக்கடித்தது போல் நிமிர்ந்த நந்தனா ‘ போச்சு போச்சு போச்சு ! ஐயோ அத்தை ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்…’ பதற்றத்தில் கைகால் உதர நிரஞ்சனை பார்க்க அவனும் அதே நொடியில் நந்தனாவை பார்க்க

நந்தனா கண்ணால் ‘ சொல்லுங்க! ‘ என்று ஜாடையில் கெஞ்சினாள்

சரி என்பதுபோல் கண்களை மெல்ல மூடித்திறந்து தலை அசைத்தவன் வாயெடுக்கும் முன்பே காஞ்சனா பேசத் துவங்கி விட்டார்

“அண்ணா நான் போன வாரம் ஹோட்டல் போயிருந்தேன் அங்க…” என்று துவங்கியவர் சுவாரசியமாய் நடந்ததை கைகளை ஆட்டி, கண்கள் விரிய சுவாரசியமாய் சொல்லச் சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாய் கண்ணனின் முகம் இறுகத் துவங்கியது.

சரஸ்வதியோ அதிர்ச்சியில் உரைத்திருக்க ஸ்ரீராமோ தங்கையைக் கொன்றுவிடுவது போல் முறைக்கத் துவங்கினான்.

நந்தனாவிற்கோ தன் குடும்பத்தினர் தன்னை பற்றி என்ன நினைப்பார்களோ என்ற கவலையும், குற்ற உணர்ச்சியும் மனதை ஒரு புறம் அழுத்த, உண்மையைச் சொல்லச் சொல்லி எவ்வளவு கெஞ்சியும் மௌனம் சாதிக்கும் நிரஞ்சினின் மேல் கோவமும் வெறுப்பும் மேலோங்க,

கண்கள் கலங்கி தலை குனிந்தவாறே இருந்தாள். கண்ணீர் மெல்லக் கண்களை மறைக்கக் கொஞ்சமும் நிமிராமல் தரையை வெறித்திருந்தாள்.

காஞ்சனா “ஆச்சு…இதான் நடந்தது அண்ணா ! குட்டிம்மா உன்கிட்ட சொல்லி இருப்பான்னு நெனச்சேன். பாவம் சின்னப் பொண்ணு தானே பயந்து இருப்பா போல” என்றவாறே நந்தனாவை பார்க்க.

அவளோ மெதுவாய் கண்களை உயர்த்தி கெஞ்சுதலாய் தந்தையைப் பார்க்க

“நந்து அத்தை சொல்லுறதெல்லாம் உண்மையா?” கண்டிப்பான குரலில் கண்ணன் கேட்க

என்ன சொல்வதென்றே தெரியாமல் பேய் முழி முழித்த நந்தனா “அப்பா! அது…அது…” வார்த்தைகளை மென்று விழுங்க

“உண்மைதான் மாமா!” குறுக்கிட்டு அறிவித்தான் நிரஞ்சன்.

இம்முறை பொறுமை இழந்த நந்தனா “ஹேய் நிரஞ்சன்” என்று கத்த

“எஸ் பேபி!”

“பேபி கீபின்னே அவளோதான் பிச்சுடுவேன் பிச்சு”

குறுக்கிட்ட கண்ணனோ “நந்தனா…” என்று கர்ஜிக்க

“நந்து” என்று அழைக்கும் தந்தை கோவம் தலைக்கேறினால் மட்டுமே தன்னை “நந்தனா” என்று முழு பெயர் சொல்லி அழைப்பதை அறிந்தவள் பயத்தில் உறைந்து நிற்க

“என்ன பேச்சு இது? உன்னைவிட பெரியவங்க கிட்ட இப்படி தான் பேசுவியா? ” தந்தை பொரிந்து தள்ள

“இல்லை மாமா பரவால்ல…” நிரஞ்சன் நந்தனாவிற்கு பரிந்துகொண்டு வர

“நீங்க சும்மா இருங்க உங்களுக்குத் தெரியாது இதெல்லாம் ஆரம்பத்திலேயே திருத்தனும்” என்றவர், நந்தனாவை பார்த்து “நிரஞ்சன் கிட்ட மன்னிப்பு கேளு!” தீர்க்கமாய் கட்டளையிட

‘லூசாப்பா நீ ?’ என்பதைப் போல் பார்த்தவள், நிரஞ்சனை பார்த்து முறைக்கப் பதிலுக்குப் புன்னகைத்த அவனோ, கண்ணனிடம் “ப்ளீஸ் மாமா அதெல்லாம் வேண்டாம்” என்று சமாதானம் சொல்ல

“இல்லை அவர் சொல்றதுதான் சரி.நந்து ம்ம் மன்னிப்பு கேளு…” சரஸ்வதி மகளை முறைக்க

‘ஐயோ இவனை பத்தி தெரியாம எல்லாரும் இவனுக்கு இத்தனை பில்டப்பா பண்றீங்க? கூடிய சீக்கிரம் உங்க எல்லாருக்கும் பெரிய ஆப்பா வைக்கப் போறான்! அப்போ பேசிக்குறேன்’ மனதில் சபித்தவள்

“சாரி சார்! “ என்று இளிக்க

“சாரா?” காஞ்சனா வாய் பிளக்க

காதில் விழாததுபோல் நிரஞ்சனோ “பரவால்ல பேபி” என்றவன் கண்ணனைப் பார்த்து

“மாமா! நான் எல்லா உண்மையையும் சொல்லிடுறேன் அப்புறம் நீங்க எந்த முடிவெடுத்தாலும் நான் கட்டுப்படுவேன்! “ என்றவன்

“நீங்களும் கேளுங்க அத்தை…ப்ளீஸ் ஸ்ரீராம் “என்று அனைவரையும் பார்த்தவன் காஞ்சனாவைப் பார்த்து மெல்லத் தலையசைத்து, நந்தனாவை மட்டும் தவிர்த்துப் பேசத் துவங்கினான்.

“நான் நந்துவை முதல் முதலா அவ காலேஜ் ஐடி கார்டில் தான் பார்த்தேன்!”

நந்தனாவிற்கோ உயிர் வந்தது ‘ அப்பாடா உண்மையைச் சொல்லப் போறான் போல இருக்கே. நல்லவனே இப்போவாவது மனசு வந்ததுதே. ஜாலி!’ மெல்ல நிமிர்ந்து தெம்பாக அமர்ந்தாள்.

“அந்த நொடியே நான் நந்து மேல விருப்ப பட்டுட்டேன்!” என்று நிரஞ்சன் ஒரு நொடி கண்களை மூட

‘ அடப்பாவி! அடேய் ஃப்ராடு! என்னடா சொல்றே?’ நந்தனாவிற்கு உலகமே நின்று போனதுபோல் இருந்தது, கோவம் தலைக்கேற வெருட்டென எழுந்தவள் தந்தையின் முறைப்பிற்குக் கட்டுப்பட்டு முணுமுணுத்தபடி அமர்ந்தாள்

“எஸ் ! கண்டவுடன் காதல்! நம்பவே முடியலை நானா இப்படின்னு!“ மெல்லிய புன்னகை ரசனையுடன் சொல்ல

‘எனக்கும் தாண்டா நம்ப முடியலை.கண்டவுடன் காதலாவது? காலராவாவது? கருமாந்தரம் பிடிச்சவனே!’ நந்தனா கண்கள் விரிய அவனைப் பார்க்க.

அவனோ அங்கிருந்தவர்களை ஒவ்வொருவராய் பார்த்தவாறு தொடர்ந்தான்

“எங்களுக்குள்ள இருக்க வயசு வித்தியாசம் தெரிஞ்சதுமே நானும் எவ்வளவோ முயற்சி செஞ்சு பார்த்தேன்… ஆனா நந்து மேல வந்த அன்பை என்னால அழிக்க முடியலை!” கவலையாய் சொல்ல

‘ஏன் ரப்பர் கிடைக்கலையா? நான் தரவா? மக்கு முண்டம் உண்மையைச் சொல்லுடான்னா உடான்ஸ் விட்டுட்டு இருக்கான் உருப்படாதவன்! ‘ நந்தனா அவனை மனதில் பொரிந்து தள்ள

ஸ்ரீராமோ “அவ வயசு உங்களுக்கு எப்படித் தெரியும் ?” புத்திசாலித்தனமாய் கேட்பதாய் எண்ணிக் கேட்க

“இதென்ன கேள்வி? காலேஜ் ஐடி கார்டுல இருக்குமே டா!” காஞ்சனா பதில் சொல்ல

நிரஞ்சன் “எஸ்! தேங்க்ஸ் அத்தை! “ என்று புன்னகைத்தவாறே

“கார்டுல பார்த்துத் தான் தெரிஞ்சுகிட்டேன். ஆனா அந்தக் கார்டுல இருந்த நந்துவுடைய முகம் என் மனசுல அப்படியே பதிஞ்சு போச்சு”

‘ டேய்! என் போட்டோ அதுலயே ஒழுங்கா பதியலை. இதுல மனசுல பதிஞ்சுதா? அதைவிட ஆதார் கார்டுலேயே என் முகம் தெளிவா இருக்குமேடா…’ நந்தனாவிற்கு பைத்தியம் பிடிக்கும் போல இருக்க

“அப்புறம் கார்டை கொடுக்கப் போகும்போது நேரில் பார்த்த நொடியே எதிர்பாராம என் பேபி கிட்ட…” என்றவன் கண்ணனின் தொண்டை செருமலில் சுதாரித்து “நந்துகிட்ட விழுந்துட்டேன்!” என்று சொல்ல

‘விழுந்துட்டியா? அடுக்காது டா அடுக்காது! நான் என்ன ட்ரெயினேஜ் குழியா? எதிர்பாராமல் விழ. என்னடா இஷ்டத்துக்கு அளக்குறே?’

“அப்புறம் என்ன தயக்கத்தை விட்டு, தைரியத்தை வரவச்சுக்கிட்டு என் காதலை நந்துகிட்ட சொன்னேன்” என்றவன் நந்தனாவை பார்க்க

‘என்னை எதுக்குடா பாக்குறே? கண்ணை நோண்டிடுவேன் டா நெட்டை கொக்கு’ நந்தனா முறைக்க

நிரஞ்சனா புன்னகையுடன் “ஏன் நந்து முறைக்கிறே? சொல்லணும்னு ஆரம்பிச்ச அப்புறம் எதுக்கு மறைக்கணும்? “ வெகுளியாய் கேட்க

‘என்னடா பிளான் பண்ணிருக்கே ?’ பதறியவள் சொல்வதறியாது அனைவரையும் பார்க்க

“அவ கெடக்கா நீங்க சொல்லுங்க” காஞ்சனா அவனை ஊக்குவிக்க

“என் காதலை நந்துகிட்ட சொன்னபோ…“ என்றவன் நந்தனாவை மீண்டும் பார்த்து

“சொல்லிடவா நந்து?” நிரஞ்சன் கொஞ்சலாய் கேட்க

‘என்னை எதுக்குடா கோர்த்து விடுறே? அதான் நான் வாயைத் திறந்தாலே இவங்க சண்டைக்கு வாரங்களே. எப்படியும் எதோ முடிவு பண்ணிட்டே ‘

“….” மௌனமாய் அவனை மிரட்சியாய் பார்க்க.

“ம்ம். நீ மேல சொல்லுப்பா “கண்ணன் முதல் முறை ஒருமையில் அவனை கேட்கத் தொடர்ந்தான் நிரஞ்சன்

“நான் அப்போவே ரெஸ்டாரண்டில் என் காதலை மனம் திறந்து சொல்லிட்டேன். ஆனா நந்து தான் எதுவுமே சொல்லாம கார்டை வாங்கிண்டு கிளம்பிட்டா…என் நம்பரைக் கொடுத்து பதிலைச சொல்லச் சொல்லி கேட்டுண்டேன்! ” என்றவன் மீண்டும் நந்தனாவை பார்த்து

“எல்லாத்தையும் சொல்லிடவா அப்புறம் என்கிட்டே சண்டைக்கு வரக் கூடாது!” என்று மீண்டும் கொஞ்சலாய் கேட்க

கணைகள் விரிந்து அவனைப் பார்த்த நந்தனாவோ ‘இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன? இன்னும் என்னல்லாம் சுத்தனுமோ சுத்தி தொலை!’

இந்த முறையும் மௌனமே பதிலாய் தர

“ரெண்டு நாள் எதுவுமே சொல்லை அப்புறம் காலேஜ் பிரேக் டைம்ல ஃபோன் பண்ணி காதலுக்குச் சம்மதம் சொன்னா! “ எந்தவித பதட்டமோ பயமோ இல்லாமல் கதைபோல் சொல்லிக்கொண்டு போனான் நிரஞ்சன்.

‘நாசமா போச்சு!’

உறைந்துவிட்டாள் நந்தனா, மூளை அதிர்ச்சியில் வேலை நிறுத்தம் செய்துவிட, ஜடம்போல் வெறித்துப் பார்த்துக்கொண்டு இருக்க

“என்ன? எப்போ இதெல்லாம் நடந்தது?” ஸ்ரீராம் புருவம் முடிச்சிட்டு கேட்க

‘அப்பாடா…கேளுடா கேளு…’ அண்ணன் கேள்வியில் சற்று நம்பிக்கை பிறக்க

“போன வாரம் தான்” கூலாய் பதிலளித்தான்.

சற்று நிமிர்ந்து அமர்ந்த கண்ணன் “நந்து இங்கவா!” மகளை அழைத்தார்.

நந்தனா கேள்வியாய் நிரஞ்சனை பார்த்தாள், அவனோ “ம்ம் போ” என்று கண்ணால் சொன்னான்.

பயந்தபடி அவரிடம் சென்ற நந்தனா ஏதும் சொல்லாது அவரையே பார்க்க

“எல்லாத்தையும் என்கிட்டே சொல்லுவியே, இப்ப இவ்வளவு நடந்திருக்க ஒருவார்த்தை சொல்லலையே?” ஆதங்கம் தோய்ந்த குரலில் அவர் கேட்க

“அப்பா…சாரி! நான் போன வராமே இதைப்பத்தி உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன் ஆனா…” இப்பொழுது உண்மையை சொல்வதா இல்லை நிரஞ்சன் சொன்ன பொய்யைத் தொடர்வதா என்று மனம் போராட

‘நீ ஏண்டி அவன் சொன்ன பொய்யைத் தொடரனும்? உண்மையை சொல்லிடு!’ மனம் ஊக்குவிக்க

சரஸ்வதியோ “ஏண்டி மறைச்சே? எங்க கிட்ட ஒருவார்த்தை சொல்லி இருக்கலாமே” கோவமும் ஆதங்கமும் சேர்ந்த குரலில் கேட்க

ஸ்ரீரமோ “நல்லா கேளுமா ! ஏண்டி குழந்தை குழைந்தைன்னு உன்னை நாங்க பாசமாதானே பாத்துக்குறோம்? எங்க கிட்ட மறைக்க எப்படி முடிஞ்சது?”

“ம்ம்ம்!” என்ற கண்ணனின் சரஸ்வதியும் ஸ்ரீராமையும் அடங்க, நந்தனாவிற்கோ தயக்கமும் குழப்பமும் மண்டையை குடைய

மகளை நெருங்கியவர் மெல்ல அவள் தலையைப் பாசமாய் வருடிக் கொடுத்தபடி “பரவால்ல இப்போ சொல்லு…பயப்படாம சொல்லும்மா”

ஓரக்கண்ணால் நிரஞ்சனை பார்த்தாள். அவனோ அவளையே புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்க. அவள் மனமோ ஒரு நிலையில் நில்லாது தாறுமாறாய் துடிக்க

காஞ்சனாவும் “ம்ம் சொல்லுடா கண்ணா” என்று புன்னகைக்க.

கண்களை மூடி ஒரு சில நொடிகள் ஏதோ யோசித்தவள் தீர்க்கமாகத் தந்தையை பார்த்து “எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க….”

error: Content is protected !!