LogicIllaMagic7

மேஜிக் 7

 

“நான் சொல்லணும் தான் இருந்தேன், எப்படி சொல்றதுன்னு தயக்கமா இருந்தது. ஆனா மறைக்கவும் முடியலை. அப்போ தான் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பேசி ஒரு முடிவெடுத்தோம்” என்றபடி நிரஞ்சனை பார்த்தவள்.

“இவர் தான் அவரே வந்து உங்க கிட்ட பேசுறதா சொன்னார். அத்தை கிட்டயும் அன்னிக்கி அதான் சொன்னார்… சாரி பா…” கெஞ்சலாய் தந்தையை பார்க்க.

“இதுக்கென்ன தயக்கம்? என் பொண்ணு புத்திசாலி எந்த முடிவெடுத்தாலும் அது சரியாத்தான் இருக்கும். நிரஞ்சனுக்கு என்ன குறைச்சல்? நல்லா படிச்சு இருந்தாலும் மரியாதையான பாசமான பையனா இருக்கான். “ என்று நிரஞ்சனை பார்த்துப் புன்னகைத்தவர் அவனையும் கண்ணால் அருகில் அழைக்க

வெருட்டென எழுந்தவன் “மாமா சாரி நான் தான். நீ ஏதும் சொல்ல வேணாம் நானே வந்து பேசுறேன்னு சொன்னேன் அதான்… மன்னிச்சுடுங்க”

“என்ன நிரஞ்சன் மன்னிப்பெல்லாம்? பெரியவங்க சம்மதம் முக்கியம்னு வீடு தேடி வந்து உண்மையைச் சொன்னதே உங்க நல்ல குணத்தைக் காட்டுதே! ஒரு 5 நிமிஷம் குடுங்க வரேன்!”

என்றவர் தன் மனைவி, மகன் இருவரையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்த அறைக்குச் சென்றார்.

காஞ்சனாவோ நந்தாவின் அருகிலேயே நின்றபடி அவள் கையைப் பற்றிக்கொண்டு “நீ ஒன்னும் கவலைப் படாதே அண்ணா அண்ணி கண்டிப்பா உன் மனசுபடியே நல்ல முடிவா எடுப்பாங்க”

நிரஞ்சன் கைப்பேசியில் அழைப்பு வர “ஒரு நிமிஷம் வந்துடறேன்” என்றபடி வாயிலை நோக்கிச் சென்றுவிட

நந்தனாவோ வெளியில் புன்னகைத்தாலும் மனதில் மூண்ட குழப்பத்தைத் தாங்கமுடியாமல் தவித்தாள்.

‘அடியே அறிவுகெட்டவளே அவன் சொன்னதெல்லாம் பொய்னு ஏன் சொல்லலை ? உண்மையைச் சொல்றேன்னு வந்த இவன் எதுக்காக இப்படிப் பொய் சொல்லணும்? ‘ மனம் குடைந்தது

‘இத்தனை பெரிய பொய்யைச் சொல்லி இருக்கான்னா கண்டிப்பா காரணம் இல்லாமல் இருக்காது’ இன்னொரு மனம் அவனுக்காக வாதாட

ஒருவேளை நெஜம்மா என்னை லவ் பன்றானோ? இருக்காது ! அவர் கல்யாணம் செஞ்சுக்க போற பொண்ணுகிட்ட நான் அவன் காதலின்னு சொன்னதுக்காகக் கோவத்துல பழி வாங்குறானா?

இப்போ இவன் சொன்னது உண்மை இல்லைன்னு சொன்னாலும் அப்பா இவனைத் தப்பா நெனச்சுப்பாரே ? ‘ மனது அலைபாய

‘அவனை எப்படி நெனச்சா உனக்கென்ன?’ மனது கேள்விகேட்க

‘அப்போ அவன் சொல்ற பொய்க்கெல்லாம் தலையாட்டி அவன் பொய்க்கெல்லாம் துணை இருக்கப் போறியா?’ மனம் எதிர்க் கேள்வி கேட்க

‘பின்னாடி மெதுவா சமாளிக்கலாம்’ மனம் சமாதானம் சொல்ல

‘எப்போ கல்யாணத்துக்கு அப்புறமா?’ மனம் கேலி பேச

தலையே வெடித்துவிடும் போல இருக்க அப்படியே சோஃபாவில் அமர்ந்துவிட்டாள்.

காஞ்சனாவோ “என்ன நந்துமா நீ? இப்படி பதட்ட படுறே? நிரஞ்சன் உனக்குத்தான்.” என்று ஆறுதல் சொல்ல

‘இதெல்லாத்துக்கும் மூல காரணமே நீதானே! உன்னைச் சொல்லணும் எனக்குன்னு வந்தியே…ஆஆ…!’ மனதுள் அத்தையைக் கடிந்தவள் வெளியில் ஏதும் சொல்லாது தலையைப் பிடித்துக்கொண்டாள்

“நான் இருக்கேன் எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்” அவர் மேலும் தைரியம் சொல்ல

‘ஒடச்சதெல்லாம் பத்தாதா? இன்னும்வேற உடைக்கணுமா? காஞ்சு நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்!’

கதவைத் திறந்துகொண்டு மூவரும் வரப் பதட்டமாய் நந்தனா குடும்பத்தினரைப் பார்க்க

அவர்கள் மூவர் முகத்திலும் இருந்த புன்னகையைக் கண்டு சற்று மன சமாதானம் ஆகியவள் ‘ அப்பாடா’ என்று சாந்தமாக

“நிரஞ்சன் எங்க காஞ்சனா?” நாத்தனாரைக் கேட்டார் சரஸ்வதி

“இதோ இங்க இருக்கேன் அத்தை…ஒரு கால் வந்தது அதான்”

“பரவாயில்ல தம்பி” சரஸ்வதி புன்னகைத்தபடி தலையசைக்க.

கண்ணனோ “நிரஞ்சன் எங்களுக்குக் கொஞ்சம் அவகாசம் வேணும். நந்துவை நாங்க குழந்தையாகவே பார்குறதால எங்களால சட்டுன்னு ஒரு முடிவெடுக்க முடியலை. தப்பா எடுத்துக்காதே பா”

நந்தனாவிற்கு மனதிலிருந்த பாரம் இறங்கி லேசாவதைப் போல் உணர்ந்தாள்.

முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாத நிரஞ்சன் “என்னால புரிஞ்சுக்க முடியுது மாமா. இதெல்லாம் அவசர படுற விஷயம் இல்லையே. நான் வெயிட் பண்றேன்.” புன்னகையுடன் பதிலளித்தவன் மேலும்

“சரி மாமா அப்போ நான் கிளம்பறேன். நீங்க பொறுமையா யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க. அவசரமே இல்லை” விடைபெற்ற நிரஞ்சன்.

“ராம்! கொஞ்சம் வர முடியுமா?” கேட்க

ஸ்ரீராம் நிரஞ்சனும் வெளியே சென்றனர்.

அதன் பிறகு பெரியவர்கள் நடந்ததைப் பற்றியே மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்க நந்தனாவோ அதற்குமேல் தாங்க முடியாமல்

“நான் கொஞ்ச நேரம் ரூம்ல இருக்கேன்.” என்று தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.

அன்று நடந்தவை தன் எதிர்காலத்தையே நிர்ணயிக்கக் கூடியது என்றாலும் ஏனோ நிரஞ்சனுக்காக அவன் பொய்களுக்கு அவள் துணைபோனாள்.

ஏன் என்று பலமுறை தன்னைத்தானே கேட்டுக்கொண்ட போதிலும் அவளிடம் அதற்கு எந்த ஒரு நியாயமான காரணத்தையும் அவளால் சொல்லிக்கொள்ள முடியவில்லை.

கண்களை மூடி, கட்டிலில் சாய்ந்திருந்தவளின் அமைதியைக் கலைத்தது கைப்பேசியின் குறுஞ்செய்தி ஒலி.

அனுப்பி இருந்தது நிரஞ்சன். அதில்

“சாரி! அண்ட் தேங்க்ஸ்! நீ எதுவும் குழப்பிக்காம தூங்கு. நான் நாளைக்கு ஃபோன் பண்றேன். நல்லதே நடக்கும் என்னை நம்பு ப்ளீஸ்! பை!”

எதோ உள்ளர்த்தம் இருப்பதைப் போல் உணர்ந்த நந்தனா ஏதும் சொல்லாமல் “சரி” என்ற ஒற்றை எழுத்தில் பதில் அனுப்பிவைத்தாள்.

‘ஹைய்யா அப்பா அம்மா ஓகே சொல்லலை! பரவால்ல நான் நினைத்ததைவிட நம்ம குடும்பம் கொஞ்சம் புத்திசாலிதான் போல இருக்கே…. எதோ ஒன்னு எப்படியும் தப்பிச்சாச்சு!’ நினைத்து நினைத்துச் சிரித்துக் கொண்டவள் ஒன்றை நினைக்கத் தவறிவிட்டாள்.

அது பெற்றோர்கள் பிறகு முடிவைச் சொல்வதாகச் சொன்னார்களே தவிர நிரஞ்சனை நிராகரிக்கவில்லை என்பதே.

அன்றிரவு டைனிங் டேபிளில் கண்ணனே பேச்சைத் துவங்கினார்.

“நந்து எங்க மேல உனக்கு ஏதான கோவம் இருக்காடா?”

திடுக்கிட்டு நிமிர்ந்தவள் ஒன்றும் புரியாமல் “என்ன இப்படி கேக்கறீங்க? நான் ஏன் உங்க மேல கோவப்படணும்?”

சரஸ்வதி “இல்லைடா நாங்க இன்னிக்கே எந்த முடிவும் சொல்லாம அவகாசம் கேட்டோமே அதான் கேக்குறார். என்னங்க அப்படித்தானே?”

பெற்றோர்கள் இப்படித் தயங்கித் தயங்கி தன்னிடம் பேசுவது அவளின் குற்ற உணர்ச்சியை மேலும் அதிகரிக்க

“அப்பா நான் உங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லிடறேன்…”

“அதான் நிரஞ்சன் எல்லாத்தையும் சொல்லிட்டானே. நீ ஃப்ரீயா இரு. எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடு போதும்” தந்தை உறுதியாய் சொல்ல நந்தனாவிற்கோ என்ன செய்வதெனத் தெரியவில்லை

“இல்லைப்பா நான் சொல்லிடறேன் நீங்க கேட்டுட்டு உங்க முடிவை சொல்லுங்க”

ஸ்ரீராமோ “ஹேய் போதும்டி! நீ என்ன சொல்லபோறேனு தெரியும். என்ன உன் காதல் தெய்விகமானதுன்னு சொல்லபோறே. அதானே? எல்லாரும் இதையே சொல்லி கேட்டுக் கேட்டுக் காது புளிச்சுப்போச்சு.”என்று அலுத்துக்கொள்ள.

“என்னதான் உன் பிரச்சனை? நான் என்ன சொல்ல வரேன்னே கேட்காம நீயா ஏதேதோ சொல்ரே?”

“டேய் ஏன்டா குழந்தை கிட்ட வம்பு பண்றே?” சரஸ்வதி நந்தனாவிற்கு பரிந்துகொண்டு வரக் காதில் வாங்கிக்கொள்ளாதது போலத் தொடர்ந்தவன்

“பின்ன? என்ன நிரஞ்சன் நல்லவன் வல்லவன் நாலும் தெரிஞ்சவன்னு சொல்லபோறியா?”

“வேண்டாம் ராம் ஓவரா போறே!” நந்தனா கோவமாகத் தட்டிலிருந்து இட்லியை நசுக்க

“போடி போடி உன் ரீல் அறைந்து போய் 3 மணி நேரமாச்சு. ஒருவாரம் கூட வீட்டுக்கு தெரியாம லவ் பண்ணத் துப்பில்லை. அத்தைகிட்ட மாட்டிகிட்டு இப்போ வேற வழி இல்லாம வீட்டுக்கு வந்து உண்மையை சொல்லி நல்லவன்னு நடிக்க பாக்குறான்” கோவமும் கிண்டலுமாய் ஸ்ரீராம் சொல்ல

“உனக்கு ரொம்பத் தெரியுமா?”

“இதை கண்டுபிடிக்க கொலம்பசையா கூட்டிகிட்டு வரணும்?” கிண்டலாய் சிரிக்க.

“கண்டுபிடிச்சுட்டாலும்!” என்றவள் மனதினில் அண்ணனை திட்டிதீர்தாள்.

‘கண்டுபிடிக்கிற மூஞ்சியை பாரு. ஒருத்தன் சுத்தோ சுதுன்னு ரீல் சுத்திட்டு போயிருக்கான். அதை கண்டுபிடிக்காம இப்போவந்து சீன் போடறதப்பாரு!’

பிள்ளைகள் சண்டையைக் காணச் சகிக்காமல்

“ஒழுங்கா சாப்பிட்டுத் தூங்க போற வழியை பாருங்க.” கண்ணன் கண்டித்துவிட்டு எழுந்து சென்றுவிடப் பிள்ளைகள் இருவரும் அமைதியாகினர்.

***

நிரஞ்சனின் வீட்டில் ஹாலில் அமர்ந்திருந்த அவன் தங்கை நிவேதா டிவி பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது, கைப்பேசியில் மெஸேஜ் வர அதைப் படித்தவள்.

“அம்மா அது வருதாம் !” நிவேதா கத்தி சொல்ல

“எது வருது?” சமையலறையிலிருந்து சமைத்தபடியே கேட்டார் திருமதி மைதிலி ஜெகந்நாதன்

“அதான் எனக்கு முன்னாடி பிறந்தானே ஒரு நெட்டை கொக்கு அதுதான், வந்துட்டு இருக்காம்”

“நிவி எத்தனை தரம் சொல்லிருக்கேன் அவனை இப்படி அது இதுன்னு சொல்லாதேன்னு!”

“ஏன் சொன்னா என்ன? அவன் என்னைவிட ரெண்டு வயசு தானே பெரியவன்” தோளைக் குலுக்கிக்கொண்டு டிவியின் பக்கம் திரும்ப

“அண்ணன்னு ஒரு மரியாதையை வேண்டாமா?”

“சும்மா காமெடி பண்ணிக்கிட்டு இருக்காதம்மா” புன்னகைத்தபடி டிவியில் மீண்டும் மூழ்கினாள்.

“வாய் வாய்” முணுமுணுத்துக் கொண்டே வேலையைத் தொடர்ந்தார்

சிறிது நேரத்தில் வீட்டினுள் நுழைந்த நிரஞ்சன்

“அம்மா ரொம்ப தலை வலிக்குது சூடா ஒரு சுக்கு காபி” என்றபடி தங்கையின் அருகில் அமர்ந்தான்.

“அப்பா எங்கடி ?”

“மாடில அவர் ரூம்ல இருக்கார்”

“எப்போ வந்தார்?”

“எப்போவும் வர டைம் தான்.” டீவியிலிருந்து கண்களை விலக்காமல் பதிலளித்தாள்.

நிரஞ்சன் சோஃபாவில் தலைசாய்த்துக் கண்மூடினான்

“நீ வந்ததும் சொல்ல சொன்னார்”

கண்களை சடாரென்று திறந்து நிமிர்ந்து நேராக அமர்ந்தவன்

“இதைத்தானே மொதல்ல சொல்லணும்?” கடுகடுக்க

“நீ கேட்டியா?” தோளைக் குலுக்கியவளின் கண்கள் டிவியை விட்டு இப்பொழுதும் விலகவில்லை

“ஏண்டி அவன் கிட்ட வம்பு பண்றே? “ பெண்ணை கண்டித்துக்கொண்டே கையில் சுடச் சுட சுக்கு காபியுடன் வந்தார் மைதிலி

நிவேதா “இப்போதான் கேட்டான் அதுக்குள்ள எப்படி?” உலகமகா சந்தேகத்தைத் தாயிடம் கேட்க

“ஏற்கனவே போட்டுட்டேன் இப்போ சுடவைச்சேன் இதெல்லாம் ஒரு கேள்வியா?”

தன் அண்ணனை நோக்கித் திரும்பியவள் “பார்த்துடா…என்னிக்கி போட்டதோ? என்னமோ? வயத்தை கலக்கபோகுது” சிரித்தவள் அவனிடமிருந்து தலையில் செல்லமாகக் குட்டை வாங்கிக்கொண்டாள்.

சுக்கு காபியைக் கண்களை மூடி முகர்ந்து, ரசித்துக் குடித்தவன்

“தேங்க்ஸ் மா! அப்பாவை பார்த்துட்டு வரேன்”

தன் நீண்ட கால்களால் இரண்டு இரண்டு படிகளாகத் தாவி மேற்தளத்திற்குச் சென்றான்.

சில நீண்ட நெடிய மூச்சுக்களை விட்டவன் தந்தையின் நூலக அறைக்கதவைத் தட்டினான்.

“எஸ்! கம் இன்”

கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான் நிரஞ்சன்.

சில மருத்துவ நூல்களை ஆராய்ந்து கொண்டிருந்தவர் கண்களைமட்டும் நிமிர்த்தி அவனைப் பார்த்தவாறே தலையை ‘வா’ என்பதுபோல அசைக்க

அவரை நோக்கி நடந்தவன் அவர் எதிரே சென்று மெளனமாக நின்றான்

“உட்கார் பா”

“இருக்கட்டும் பா”

“ஒரு 5 மினிட்ஸ்”

“ம்ம்”

மெல்ல தந்தையின் நூலக அறையைச் சுற்றி பார்வையை ஓடவிட்டான்.

பல வருடங்களாகச் சற்றும் மாறாமல் அப்படியே இருந்தது அந்த அரை. அறையின் மூன்று பக்கச் சுவர்களையும் மறைத்திருந்தன நூற்றுக்கணக்கான புத்தகங்கள்.

மருத்துவம் மட்டுமல்லாது பலதரப்பட்ட புத்தகங்கள் சீராக அடுக்கிவைக்கப் பட்டிருந்தன. ஒரு மூலையில் கண்ணாடி பெட்டியில் சில ஓலைச்சுவடிகளும் இருந்தன.

புத்தகங்களைப் பத்திரமாகக் கையாளும் வயது வரும் வரை தன் பிள்ளைகளான நிரஞ்சனையும் நிவேதாவையும் ஜெகந்நாதன் அந்த அறையினுள் அனுமதித்ததே இல்லை.

தந்தையின் தொண்டை செருமலில் அவர் பக்கம் திரும்பினான் நிரஞ்சன்.

“இன்னிக்கி நான் பார்த்தது கேள்விப்பட்டது எல்லாம் உண்மையா?” நேராக விஷயத்திற்கு வந்தார் அவர்

“அப்பா நானே உங்ககிட்ட இதைப்பத்தி பேசணும்னு இருந்தேன் ஆனா இந்தவாரம் கொஞ்சம் பிஸியா போனதால முடியலை”

ஜெகந்நாதனின் பார்வையில் தீவிரம் கூடியது “நான் கேட்டதுக்கு பதில்!”

“அது…” நிரஞ்சன் தயங்க

மகனைத் துளைப்பதைப் போல் பார்த்தவர் “நிரஞ்சன்!”

“நந்தனாவ காதலிகர்த்தா நான் இன்னிக்கி அவ வீட்டுல சொல்லிட்டேன்!”

“அப்போ நீ அந்த பெண்ணை நிஜமா நேசிக்கிறியா?” ஊடுருவும் பார்வை தொடர்ந்தது

“அவ நல்ல பொண்ணுப்பா! ரொம்ப அன்பான குடும்பமா இருக்காங்க”

“அப்போ உனக்கும் வைஷாலிக்கும் கல்யாணம் செய்றதா நான் என் நண்பனுக்கு கொடுத்த வாக்கு?”

“அப்பா ப்ளீஸ்! என்னை மன்னிச்சுடுங்க. என்னால வைஷுவை கல்யாணம் பண்ணிக்க முடியாதுப்பா! அவளை நான் அந்த கண்ணோட்டத்துல பார்த்ததே இல்லை. அவ எனக்கு நல்ல பிரென்ட் அவளோ தான். உங்க மனசு கஷ்டப்படக் கூடாதுன்னுதான் நான் அவளை கல்யாணம் பண்ண சம்மதிச்சேன் ஆனா நந்து என் லைஃப்ல வருவான்னு சாத்தியமா நான் நினைக்கலை!”

“தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை நண்பனா பார்கணும்ன்னு உன்னை நான் நண்பனா தானே பார்த்தேன். என்கிட்ட எப்படி இவ்வளவு பெரிய விஷயத்தை உன்னால் மறைக்க முடிஞ்சுது? நான் உனக்கொரு நல்ல அப்பாவா நண்பனா இல்லையா?” ஆதங்கம் தோய்ந்த குரலில் ஜெகந்நாதன் கேட்க

அவனோ ‘ச்சே தப்பு பண்ணிட்டேன். அவசர பட்டுட்டேன்! இன்னும் பொறுமையா டீல் செஞ்சுருக்கணும்.’ என்று குற்ற உணர்வில் மனம் தவிக்க

மெல்லத் தலை நிமிர்ந்து தந்தையைப் பார்த்தவன் “அப்பா தயவுசெய்து என்னை மன்னிச்சிடுங்க. இப்படியெல்லாம் ஆகும்ன்னு நான் நினைக்கவே இல்லை. சாரிப்பா” மெய்யாய் வருந்தினான்.

மகனின் முகம் வாடுவதை கண்டவரோ “ஸ்ரீதர் கிட்ட இந்நேரம் வைஷாலி சொல்லி இருப்பா.இருந்தும் அவன் ஒரு வார்த்தை கூட என்கிட்ட இதுவரை கேட்கலை. அவனை எப்படி நான் ஃபேஸ் பண்ணுவேன்? எனக்கு டைம் வேணும். அதுவரை…” அவர் தயங்க

“அப்பா நான் உங்களுக்கு அவமானத்தை என்றைக்கும் தேடித் தரமாட்டேன். நானே அவர் கிட்ட பேசி மன்னிப்பு கேட்கிறேன். ”

“வேண்டாம்பா அது மரியாதை இல்லை….எனக்கு கொஞ்சம் யோசிக்க அவகாசம் தருவியா?”

மிகப்பெரிய மருத்துவ சாம்ராஜ்ஜியத்தை தன் ஒற்றை பார்வையில் ஆட்டிவைக்கும் தன் தந்தை தன்னிடம் இப்படிக் கேட்டது அவனை அதிரவைத்தது.

“பிளீஸ் அப்படியெல்லாம் பேசாதீங்க. நீங்க எந்த முடிவு எடுத்தாலும் நான் அதற்கு கட்டுப்படுவேன்.”

“தேங்க்ஸ்! நீ போய் சாபிடுப்பா. ”

“நீங்க?”

“கொஞ்சம் வேலை இருக்கு.நீ போப்பா”

“ஓகே”

தன் அறைக்குச் சென்றவன் ஆடைகளைக் களையாது முழு உடையுடன் குளியல் அறையில் ஷவரின் அடியில் கண்களை மூடி நின்றவன் ஓடும் தண்ணீரில் தன் மனச் சோர்வைக் கரைக்க முயற்சிதான்.

இரவு உணவின் பின் வராந்தாவில் காற்றுவாங்கிய படி நிலவை வெறிதிருந்தான் நிரஞ்சன்.
“கண்ணா! தூங்க போலயாப்பா?” கையில் பாலுடன் வந்தார் அவன் அன்னை மைதிலி.

“இல்ல மா”

“இந்தப பாலை குடிச்சுட்டு தூங்கு. தூக்கம் தானா வரும்.”

“வேண்டாம் மா” நிலவை வெறித்தவன் திரும்பாமலே பதில் தரப் பாலை அருகிலிருந்த மேஜயில் வைத்தவர் தன் மகனின் தோளை பற்றி தன் புறம் திருப்பினார்.

“அம்மாகிட்ட ஏதாவது சொல்லனுமா?”

“நிறைய சொல்லணும். ஆனா இன்னைக்கு என்னால…” அவன் தயங்க

“சரிப்பா உனக்கு எப்போ சொல்லனும்னு தோணுதோ அப்போ சொல்லு.” அவர் திரும்பிச் செல்ல முற்பட

“அம்மா”

நின்றவர் தன் மகனின் புறம் மீண்டும் திரும்பி “சொல்லுப்பா”

“கொஞ்ச நேரம் உன் மடில படுதுக்கவா?”

பருவம் வந்தபின் சற்று விலகியே வளர்ந்த மகன் பல வருடங்கள் கழித்து இப்படிக் கேட்கவும் திகைத்தவர். அங்கிருந்த தீவானில் அமர்ந்துகொண்டார்.

அன்னையின் மடியில் கண்மூடிக் கொண்டான் நிரஞ்சன்.

மெல்ல அவன் தலை முடியை கோதிய படியே

“கண்ணா ! உன்னை எதுவோ ரொம்ப டிஸ்டர்ப் செய்யர்துன்னு நினைக்கிறேன். எதுவா இருந்தாலும் நிதானமா யோசிச்சு, சரியான முடிவையே நீ எடுப்பேண்ணு எனக்கு நம்பிக்கை இருக்கு. மனசை அலைபாய விடாம தூங்கு.”

பதிலேதும் சொல்லாமல் கண்களை மூடித் தூங்க முயற்சித்து தோற்று போனான்.

மெல்ல எழுந்தவன் “நான் ரூம்க்கு போறேன் மா.பால் வேண்டாம் சாரி” என்று தன் அறைக்கு சென்றுவிட்டான்.

மகனின் குழப்பமான முகம் மைதிலியை உறங்க விடவில்லை. தூங்க முயற்சித்து கொண்டிருந்த தன் கணவரை எழுப்பி

“நம்ம நிரஞ்சன் இன்னிக்கி ஏதோ போல இருக்கானே ஹாஸ்பிட்டல்ல ஏதான நடந்ததா? நான் இன்னிக்கி கொஞ்சம் ஃப்ரீயா இருந்ததால சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்டேன்.”

“கொழந்த என்னமோ போல இருக்கான். தெனோம் சந்தோஷமா தூங்கப் போவான் ஆனா இன்னைக்கு முகம் சரி இல்லை வாடி இருக்கு. அவனை எதுவோ ரொம்ப சங்கட படுதுதுண்ணு நினைக்கிறேன். தாங்க முடியலை”

ஆதங்கமும் கவலையும் தாளாமல் கணவரின் தோளில் சாய்ந்து கொண்டார் மைதிலி.

மனைவியின் நிலை கண்டு சகிக்க முடியாமல் அன்று நடந்தவற்றை மனைவியிடம் பொறுமையாய் சொல்லத் துவங்கினார்.

தன் அறையில் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தான் நிரஞ்சன்.

‘அப்பா என்னால தான் இவ்வளவு டென்ஷன் ஆகிட்டார். நான் கொஞ்சம் பொறுமையா டீல் பண்ணி இருக்கணும். ச்சே எல்லாம் இந்த நந்துவால வந்தது. அவசரக்குடுக்கை. இப்படி தேவையில்லாத பிரச்சனையைக் கிளப்பி விட்டாளே’

மனதில் கோபம், ஆதங்கம், இயலாமை அனைத்தும் சூழ்ந்து கொள்ள…செய்வதறியாது சிறிது நேரம் கண்களை மூடி இருந்தவன்,

ஒரு கட்டதிற்குமேல் தாங்காமல் நந்தனாவிர்க்கு “துாங்கிட்டியா?” என்று வாட்சப்பில் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அவள் பதிலுக்காய் காத்திருந்தான்.