Lovely Lavi – 6

Lovely Lavi – 6

அத்தியாயம் – 6

லவி வேகமாக நடக்க, அவளைக் கட்டுப்படுத்தமுடியாமல் நித்திலா தடுமாற, அதற்குள் ஹரியை நெருங்கிவிட்டாள் லவி.

இதை எதிர்பார்க்காத, ஹரி தன்னை தான்  சுதாரிப்பதற்குள் அவன் கையிலிருந்த அலைப்பேசியைப் பிடுங்கி, அதைப் பாறைமீது கோபமாக அடிக்க… அது இரண்டாக உடைந்தது.

உடைந்த அலைப்பேசியை அங்கு வேகமாக விழுந்து கொண்டிருந்த அருவியில் தூக்கி எறிய, அங்குச் சுற்றி நின்று கொண்டிருந்த அனைவரும் லவியை அதிர்ச்சியாகப் பார்த்தனர்.

நித்திலா செய்வதறியாமல் தலையில் கை வைத்துப் பாறை மேல் அமர்ந்து, அங்கு நடப்பவற்றை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அதற்குள் சற்று தள்ளி நின்று கொண்டிருந்த ஆசிரியர், அருகே வந்து, “என்ன ஆச்சு?” என்று சந்தேகமாகக் கேட்டார்.

ஹரி அருகே நின்று கொண்டிருந்த மாணவன், “லவி…” என்று ஏதோ  ஆரம்பிக்க, ‘சொல்லிவிடுவானா?’ என்று சவால் விடும் விதமாக ஹரியைப் பார்த்தாள் லவி.    

“லவியும் நானும் நட்பா பேசிகிட்டு இருந்தோம்…” என்று ஹரி இன்முகமாகக் கூற, நக்கல் சிரிப்போடு தோளைக் குலுக்கி அங்கிருந்து நகன்றாள் லவி.

“நட்பு நட்பா இருக்கட்டும்.” என்று முணுமுணுத்துக் கொண்டே தன் வேலையைக் கவனிக்க சென்றார் ஆசிரியர்.

“டேய்… மத்த நேரமெல்லாம் சீன் போடுவ? ஏன்டா லவி கிட்ட பம்முற? அவங்க பேஸ் புக், வாட்சப், டிக் டாக்ன்னு, இன்ஸ்டாகிராம் இப்படி எல்லா இடத்திலேயும் அவங்க போட்டோ போடுவாங்க. நாம எடுத்தா என்ன தப்பு?” என்று கடுப்பாகக் கேட்டான் ஹரியின் தோழன்.

“இப்ப நடந்ததைச் சொன்னால், லவி என்ன வேணாலும் சொல்லுவா… பிரச்சனை நம்ம பக்கம் திசை திரும்பிரும்… அவளுக்குப் பெரிய இழப்பு வராது. அதுக்காக லவியைச் சும்மா விடக் கூடாது. இவளைக் காலேஜ் மொத்தமும் பார்க்கும்படி அவமான படுத்தனும். எல்லார் முன்னாடியும் கூனி குறுகி அவமானப்பட்டு லவி கதறணும்… அதை நான் பார்க்கணும்.” என்று பற்களைக் கடித்தபடி கர்ஜித்தான் ஹரி.

நித்திலா அருகே அமர்ந்து அருவியை அமைதியாகப் பார்த்தாள் லவி.

சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த ஹரியைப் பார்த்தபடி, “உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா?” என்று லவியிடம் கோபமாகக் கேட்டாள் நித்திலா.

“ஏன்? என் அறிவுக்கு என்ன குறைச்சல்?” என்று தன் கவனத்தை அருவியிலிருந்து நித்திலாவிடம் திருப்பிச் சிரித்த முகமாகக் கேட்டாள் லவி.

“இப்படி அவசரக் குடுக்கை மாதிரி அவன் மொபைலை உடைச்சிருக்கியே… அதுவும் எல்லார் முன்னாடியும்? அவன் உன்னைச் சும்மா விடுவானா?” என்று நித்திலா கோபமாகக் கேட்க, “ஹலோ… நான் எவ்வுளவு பொறுமையா நிதானமா செயல் பட்டிருக்கேன் தெரியுமா? எனக்கு வந்த கோபத்துக்கு அவனையே உள்ள தள்ளி விட்டிருப்பேன்… சரி… கொலை கேஸ் ஆகிரும்… நம்ம வாழ்க்கை வீணா போய்டுமுன்னு அமைதியா என் கோபத்தை மொபைல் கிட்ட மட்டும் காட்டி பொறுமையா திரும்பி வந்துட்டேன்.” என்று லவி அடக்கமாகக் கூறினாள்.

லவியின் பொறுமையின் அளவை எண்ணி நித்திலாவின் முகத்தில் மெல்லிய புன்னகை பூத்தது.

எக்கோ பாயிண்ட், வைல்ட் லைப் பார்க் எனச் சில இடங்களைப் பார்த்துவிட்டு அன்று இரவு அவர்கள் அறைக்குத் திரும்பினர்.

லவி செய்தது சரி, தவறு என்று அவள் நட்பு வட்டாரத்தில் பெரிய வாக்குவாதம் அரங்கேறியது. லவி தனக்கு எதுவும் சம்பந்தம் இல்லாதது போல் தன் ஆட்டபாட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

அன்று இரவு முகாம் தீ (கேம்ப் பையர்) ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அங்குப் பாட்டமும், ஆட்டமும் இளவட்டத்தினிடையே துள்ளி விளையாடியது.

அப்பொழுது ஹரியை அனைவரும் பாடச் சொல்ல,

ஹரியின் கண்கள் லவியை வருடியபடி,

அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சாய்த்தவளே
மழையூரின் சாரலிலே
என்னை மார்போடு சேர்த்தவளே
உனை அள்ளித்தானே
உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து
உதிராமல் காப்பேன்
அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சாய்த்தவளே

ஏ… ஏ… ஏ… என்று வரிகள் ஏதேதோ கூற, அவன் பார்வை ஏதேதோ கூற ஹரியின் பாடல் தொடர,

“ஓ… ஓ… ஓ. ஊஊஒ…” என்று ஹரியின் நண்பர்கள் குலாம் சத்தம் எழுப்ப, லவி துணுக்கற்றவளாக நித்திலாவை பார்த்தாள்.

அப்பொழுது சில பெண்கள் வேண்டுமென்றே, லவியை பாடச் சொல்ல, “எனக்குப் பாடத் தெரியாது.” என்று கூறி மறுப்பாகத் தலை அசைத்தாள்.

“நித்தி நீ நல்லா பாடுவியே நீ பாடு.” என்று லவி நித்திலாவை பாடச் சொல்ல, நித்திலா லவியை பார்த்தபடி அவர்கள் நட்பைப் பறைசாற்றும் விதமாகப் பாடினாள்.

தில் படப் பாடலை, சற்று மாற்றி

அலே-அலே- அலே- ஓ
அலே-அலே- அலே- ஓ
அலே-அலே- அலே- அலே- அலே- ஓ
ஓ… தோழியே தோழியே தோழியே
நீ என்றுமே வெற்றியின் தோழியே
கண்டேன் கண்டேன் வீரம் கண்டேன்
உன் கண்கள் இரண்டில் தீயைக் கண்டேன்
அதில் நான் இருப்பேன் இமையாக
இப்போதும் எப்போதும் நீ போதுமே
உன் சுவாசம் இல்லாமல் நான் இல்லையே
இப்போதும் எப்போதும் நீ போதுமே
என்றென்றும் நம் நட்பு வாழுமே…
அலே-அலே- அலே- ஓ
அலே-அலே- அலே- அலே- அலே- ஓ
ஓ… தோழியே தோழியே தோழியே

என்று நித்திலா உணர்ந்து பாட, லவி நித்திலாவை கட்டி அணைத்தாள்.

பெண்கள் கூட்டம் ஓ… ஓ…ஓ… ஓ…ஓ… ஓ… என்று சத்தம் எழுப்ப, ஹரி தான் பாடிய பாடலின் தாக்கம் மறைந்து போக, அவர்கள் அறையை நோக்கிக் கடுப்பாகச் சென்றான்.

லவி அவர்கள் அறையை நோக்கிச் செல்ல, லதாவும் அவள் தோழிகளும் நேற்று போல் இன்றும் குளியலறையில் துண்டு, அவர்கள் துப்பட்டா போன்ற துணிமணிகளைக் குளியலறையில் போட்டுவிட்டுச் சென்றனர்.

‘இவங்க ஹோஸ்டேல்லுனு நினைப்பு… என்ன செய்றேன்னு பாருங்க!’ என்று எண்ணியபடி கண்ணில் குறும்போடு அவர்கள் அறை நோக்கிச் சென்றாள் லவி.

இரவு ஒரு மணி. அனைவரும் நித்திரையில் ஆழ்ந்து விட, ஆண்கள் தங்கியிருக்கும் விடுதியில் ஹரி தூக்கம் வராமல் தான் பட்ட அவமானத்தை நினைத்துக்கொண்டிருந்தான்.

அதே நேரம் இரவு ஒரு மணிக்கு, பெண்கள் விடுதியில்  இன்று பல இடங்களுக்குச் சுற்றியதன் பலனாக அனைவரும் உறங்கி விட, லவி தன் கண்களைச் சுழலவிட்டாள்.

அங்கு இருள் சூழ்ந்திருக்க, பூனைபோல் நடந்து குளியலறைக்குள் சென்றாள் லவி. அங்கிருந்த அனைத்து துணிமனைகளையும் ஓர் வாளி நிறைய தண்ணீர் பிடித்து அதில் நனைய வைத்தாள். ‘துண்டு போட்டு இடமா பிடிக்கிறீங்க. நாளைக்கி துண்டு, துப்பட்டா இல்லாமல் திணருங்க.’ என்று தனக்கு தானே கூறிக்கொண்டு அமைதியாக நித்திலா அருகே படுத்துக் கொண்டாள் லவி.

மறுநாள் காலையில் பலரின் துண்டு தண்ணீரில் இருக்க, விடுதியை அல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. சுமி பதறிக் கொண்டு ஓடி வர, “இதுக்கு நீ ஏன் சுமி பதட்டப்படுற?” என்று லவி மெத்தையில் புரண்டபடி ஒற்றை கண்ணைத் திறந்து கொண்டு கேட்டாள்.

“எல்லாரும் நீ தான் இந்த மாதிரி வேலையைப் பண்ணிருப்பேன்னு சந்தேக படுறாங்க.” என்று சுமி அதீத பதட்டத்தோடு கூற, “எவ? சொல்றவல்ல இங்க வரச்சொல்லு…” என்று தலையணையை முதுக்கு அண்டை கொடுத்து, தன் கைகளைத் தலைக்கு அண்டை கொடுத்து தெனாவட்டாகக் கூறினாள் லவி.

“எவளாவது பன்னிட்டு, நம்மளை சொல்ல வேண்டியது. நேரில் சொல்ல யாருக்கு தைரியம் இருக்கு?” என்று சுவிட்டி கூற, லவி நக்கலாகச் சிரித்தாள்.

லவி ஒயிலாக நடந்து குளிக்கச் செல்ல, அனைவரின் சந்தேக பார்வையும் லவியை தொடர தான் செய்தது. லவி அவளறியாமல் பகையை வளர்த்துக் கொண்டாள்.

லவியிடம் கேட்கத் தைரியம் இல்லாமல் பலரும்  நித்திலாவை கேட்க, “என்ன தேவையில்லாத பேச்சு? லவி இதைச் செய்யலை. அவ என் கூடத் தான் படுத்திருந்தா.” என்று நித்திலா அடித்துப் பேசினாள்.

லவி மீது சந்தேகமிருந்தாலும் நித்திலாவின் உறுதியான பேச்சில் அனைவரும் புலம்பிக் கொண்டே வேறு வழியின்றி அவர்கள் வேலையைக் கவனிக்கச் சென்றனர்.

அனைவரும் விடுதியிலிருந்து கிளம்பி ஆலப்புழா செல்ல, நித்திலா லவியிடம் பேசுவதைத் தவிர்த்தாள்

“நித்தி… ஏன் பேச மாட்டிங்கிற?” என்று நித்திலாவை வழிமறித்து லவி கேட்க, நித்திலா முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றாள்.

“நித்தி…” என்று லவி நித்திலாவின் கைகளைப் பிடித்து இழுக்க, “ஏன் லவி இப்படி பண்ற? மத்தவங்க வேணா நான் சொன்னதை நம்பிப் போயிருக்கலாம். ஆனால், நீ தான் அப்படி செய்தேன்னு எனக்குத் தெரியும்.” என்று கோபமாகக் கூறினாள் நித்திலா.

“அப்ப… ஏன் நான் இல்லைன்னு சொன்ன… லவி தான் செய்தானு சொல்ல வேண்டியது தானே?” என்று லவி தன் தோழியின் தோளில் கை போட்டுப் புருவம் உயர்த்தி புன்னகையோடு கேட்டாள்.

“நான் உயிரோடு இருக்கும் வரை, உன்னை எல்லா சிக்கலிருந்தும் காப்பாற்றுவேன் லவி.” என்று நித்திலா கண்கலங்க, உணர்ச்சி பொங்கக் கூறினாள். சில சிக்கல்களை அருகே இருந்தாலும், பார்க்கத் தான் முடியும். ஆனால் லவியின் வாழ்வில் தானே சிக்கல் ஆகப்போகும் விதம் தெரியாமல் லவிக்காக உருகிக் கொண்டிருந்தாள் நித்திலா.

“ஹே… லூசு… இப்ப எதுக்கு இந்தச் சின்ன விஷயத்துக்கு இவ்வளவு சென்டிமென்டலா பேசுற? இப்ப என்ன நான் இந்த மாதிரி எதுவும் செய்யக் கூடாது. அவ்வுளவு தானே? செய்யலை. லவி பொறுமையில் பூமாதேவியா இருப்பா.போதுமா?” என்று லவி நித்திலாவை சமாதானப் படுத்தினாள்.

‘இருந்திட்டாலும்…’ என்று தோன்றினாலும், அதை மறைத்துக் கொண்டு,  “ஹரி விஷயம் எனக்கு நெருடலாவே இருக்கு லவி. இப்ப இது வேற.” என்று நித்திலா சலிப்பாகக் கூற, “கூல் பேபி. நான் இருக்கேன். பாத்துக்கறேன்.” என்று லவி தன் தோழியைச் சமாதானம் செய்து ஆலப்புழாவின் அழகை ரசிக்கச் செய்தாள்.

லவி, நித்திலா மற்றும் அவர்கள் பட்டாளம் சுற்றுலா பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர்.

அதே நேரம், யாதவ் வீட்டில்.

“அம்மா. நீங்கச் செய்றது உங்களுக்கே நியாயமா இருக்கா? யாரைக் கேட்டு லவி கூட எனக்கு நிச்சியதார்த்தம் ஏற்பாடு பண்ணீங்க?” என்று கோபமாகக் கேட்டான் யாதவ்.

“யாதவ். யாரை கேட்கணும்? சின்ன வயசில் முடிவானது தானே.” என்று சிரித்த முகமாகக் கூறினார் யாதவின் தாய்.

“அம்மா… லவி கிட்ட கேட்டீங்களா? அவளைச் சமாளிக்க முடியாதும்மா.” என்று பரிதாபமாகக் கூறினான் யாதவ். “எல்லா பெண்களும் கல்யாணத்துக்கு முன்னாடி பாரதி கண்ட புதுமை பெண் தான். கல்யாணமாகி ஒரு குழந்தை வந்துட்டா எல்லாரும் அடுப்பூதும் பெண்கள் ஆகிருவாங்க.” என்று அவருக்கு தெரிந்த  நிதர்சனத்தை எடுத்துக் கூறினார் யாதவின் தாயார்.

‘வேண்டாம் என்று நாம் நினைப்பதை விரும்பிச் செய்யும் சூழல் விரைவில் வரும்.’ என்றறியாமல் லவியுடனான திருமணத்திற்கு யாதவ் மறுப்பு தெரிவித்துக் கொண்டிருந்தான்.

லவ்லி லவி வருவாள்…

error: Content is protected !!