Lovely Lavi – Epilogue

Lovely Lavi – Epilogue

Lovely Lavi – Epilogue

சில மாதங்கள் கடந்த நிலையில், ரிச்மாண்ட்டில் அவர்கள் இல்லத்தில், லவி அந்த கருப்பு நிற சோபாவில் சாய்வாக அமர்ந்திருந்தாள்.

அவள் முகத்தில் அழகான புன்னகை. கண்களில் குறும்பு. அவள் கால்கள் சற்று ஒய்யாரமாக அசைந்து கீழே இறங்கியது. அவள் நடவடிக்கைகள் நமக்கு சற்று பழைய லவியை நினைவுபடுத்துகிறது.

அவள் எண்ணங்கள் ஹரியைச் சந்தித்து விட்டுத் திரும்பிய அந்த நாளுக்குத் திரும்ப, லவியின் முகத்தில் இருந்த அழகான புன்னகை மேலும் மெருகேறி வெட்க புன்னகையாக மாறியது.

ஹரியைச் சந்தித்து விட்டுத் திரும்பிய அன்று:

யாதவும் நித்திலாவும் பேசிவிட்டுச் சென்ற பின், சங்கர் மீண்டும் லவியின் அருகே அமர்ந்து, அவள் காதில் கிசுகிசுப்பாக லவியின் முழு பெயரை அழைக்க, லவி சங்கரை இம்முறை கோபமாக பார்த்தாள்.

“நீ என்ன நி்னைச்சிட்டு இருக்க?” என்று லவி கடுப்பாகக் கேட்க, லவியை தன் பக்கம் திருப்பி, “உன்னைத் தான்…” என்று சங்கர் பரீட்சைக்குப் பதில் கூறுவது போல் தீவிரமாக  கூற, மேலும் கடுப்பான லவி சங்கரைக் சினத்தோடுப் பார்த்தாள்.

“கால்குலேஷன் ஓவரா? தேறுவேனா?” என்று அவள் பார்வையை கணக்கிட்டபடி  சங்கர் லவியின் கோபத்தைச் சிறிதும் சட்டை செய்யாமல் கேட்க, “என்ன  வேணும் உனக்கு?” என்று லவி சங்கரின் முகம் பார்த்துக் கேட்டாள்.

“இது. இப்படி விஷயத்திற்கு நேரா வரணும். ராஜ்க்கு ஒரு தம்பி இல்லைனா ஒரு தங்கை. நீ என்ன சொல்ற?” என்று சங்கர் கேட்க, லவி பதில் கூறாமல் சங்கரை மௌனமாகப் பார்த்தாள். “பழசை நீ இன்னும் மறக்கலையா?” என்று சங்கர் அனுசரணையாகக் கேட்டான்.

எதையோ தவிர்க்க எண்ணி, லவி அங்கிருந்து எழுந்து செல்ல, சங்கர் எழுந்து லவியை தன் பக்கம் இழுத்து தன் இடக்கையால் அவளை  இடையோடு அணைத்துக்கொண்டு, “என் கேள்விக்கு பதில் சொல்ல மாட்டியா?” என்று கண்களில் காதல் வழிய கேட்டான் சங்கர். அத்தனை நெருக்கத்தில் சற்று தடுமாறிய லவி, எதுவும் பேசாமல்  மறுப்பாக தலை அசைத்தாள்.

சங்கரின் கைகளுக்குள் வாகாய் பொருந்திய லவி, சற்று தயக்கம் மற்றும் சங்கரின் செயலில் வெட்கம் என அவன் முகம் பார்க்க தவிர்த்து தன் தலையை குனிந்த படி, “நீ என்னைக்காவது நான் செய்ததெல்லாம் மறந்து போவியா?” என்று லவி  கேட்க, “ம்.. ஹூம்… மாட்டேன்.” என்று சங்கர் மறுப்பு தெரிவித்தான்.

சங்கரின் பதிலில் ஏமாற்றமாக அவன் முகம் பார்த்து, சுணக்கத்தோடு தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் லவி.

தன் வலது கையின் ஒற்றை விரலால் லவியின் முகத்தை தன் பக்கம் திருப்பி, “எதுக்கு மறக்கணும்? நீ என்ன தப்பு பண்ண?” என்று சங்கர் கேட்க, லவி சங்கரை தன் விழிகள் விரித்து விழுங்குவது போல் பார்த்தாள்.

“உன்னை பிடிக்கும்… காதல் அப்படின்னு நான் சொல்ல மாட்டேன். ஆனால், நீ அப்படினா எனக்கு ஒரு பிரமிப்பு. ச்ச… எப்படி இந்த பொண்ணு கார் ஒட்டுது? எப்படி எல்லாரயும் மிரட்டி கை நுனியில் வச்சிருக்கு. இப்படி எல்லாம் யோசிப்பேன். உனக்கு என்னை பிடிக்காதுன்னு தெரியும். ஆனாலும், நீ என்னை மிரட்டுறப்பல்லாம், நான் உன்னை முதல் நாள் சந்திச்சது தான் ஞாபகம் வரும். கையிலே பொம்மையோட நின்னுகிட்டு இருந்த…” என்று சங்கர் பேச்சில் மட்டும் இடைவெளி விட்டு, அவர்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை குறைத்துக் கொண்டான்.

லவி அவன் ஸ்பரிசத்தில் மெய்சிலிர்த்து, தன் கவனத்தை சங்கரின் பேச்சில் செலுத்திக் கொண்டு அவனை பார்வையால் ஆரத்  தழுவிக் கொண்டிருந்தாள்.

“ஒரு உண்மையைச் சொல்லட்டுமா?” என்று கண்களிலும், கைகளிலும் குறும்போடு, சங்கர் கேட்க, ‘என்ன?’ என்று கண்களால் மட்டும் கேட்டு, வார்த்தைகள் வராமல் தடுமாறினாள் லவி.

“உனக்கு அப்பதிலிருந்தே என்னைப் பிடிக்காது. உன் காரில் வந்தேன். உங்க அப்பா கையை பிடிச்சிட்டு வந்தேன். அப்படின்னு ஒரே அழுகை. அப்பதிலிருந்தே நீ வளரவே இல்லை.” என்று கூறி சங்கர் கேலியாக  சிரிக்க, அவனிடமிருந்து கோபமாக விலக முயற்சிக்க, சங்கரின் பிடிமானம் இறுக விலக முடியாமல் லவி சிணுங்கினாள்.

“இப்ப மாதிரியே…” என்று லவியின் சிணுங்களை சுட்டிக் காட்டி அவன் விரல்களால் லவியின் முகத்தில் கோலமிட்டபடி, “நீ செய்ற எல்லா தப்பும் எனக்குக் குழந்தைத்தனமா தான் தெரியும். அப்படியே கடந்து போய்டுவேன்.” என்று சங்கர் தன் தோள்களை குலுக்க, ‘இவன் எத்தகைய மனிதன்?’ என்று எண்ணி சங்கரின் அருகாமையை ரசிக்க ஆரம்பித்தாள் லவி.

“ஆனால், எப்பவும் எளிதா கடந்து போற என்னால், கல்யாணத்துக்கு அப்புறம் உன் பேச்சைக் கடந்து போக முடியலை. உன் பேச்சை மட்டுமில்லை. உன்னையும் தான். அத்தனை நாள் நீ பண்ற டிரஸ் எல்லாம்  எனக்கு கோமாளித்தனமா தான் என் கண்களுக்குத் தெரியும். ஆனால், அன்னைக்கி  ரொம்ப அழகா தெரிஞ்சிது. மனைவிங்கிற உரிமையா? இல்லை கணவன் என்னும் பந்தமான்னு தெரியல…” என்று பேசிக்கொண்டே கணவன் என்ற தன் உரிமையை நிலைநாட்டிக் கொண்டிருந்தான் சங்கர்.

லவியின் முகம் குங்குமமாய் சிவக்க, “அப்ப மட்டுமில்லை… இப்பவும் தான்… ரொம்ப அழகா இருக்க… எப்பவும் நான் உன்னை மட்டும் நினைச்சுகிட்டு இருக்கிற மாதிரி! ” என்று உலகத்தை மறந்து பேசிக்கொண்டே  சங்கர் தன்னவளை தனதாக்கி கொண்டான்.

லவியின் நினைவுகள் ஓர் வெட்க சிரிப்போடு நிகழ் காலத்திற்குத் திரும்பியது.

‘சங்கருக்கு என் மேல் எவ்வுளவு பாசம். எவ்வுளவு அக்கறை. கல்யாணம் இத்தனை சுகம் தருமா?’ என்று சிந்தித்த படி  தன் மேடிட்ட வயிற்றைத் தடவிப் பார்த்தாள் லவி. சங்கர் தான் ராஜ்க்கு செய்யத் தவறிய கடமைகளை, இப்பொழுது லவிக்கு ஆசையாக, அன்பாக உரிமையோடு செய்தான். லவி தன் படிப்பையும் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

சங்கர் யாருமில்லா தனிமையில் லவியின் முழு பெயரையும், மற்ற நேரத்தில் பெயரை சொல்லாமலுமே வருடங்கள் உருண்டோடின.

லெவி, நித்திலா இருவரும் சொந்தமாக ஓர் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்தனர்.

அன்று மாலை :

ராஜ் அவன் தங்கையோடு விளையாடிக் கொண்டிருந்தான். லவி கோபமாகக் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள்

“நான் தான் பாய். நான் தான் ஸ்ட்ரோங். நான் தான் சைக்கிள் ஓட்டுவேன். நீ பின்னாடி உட்காரு.” என்று ராஜ் தன் தங்கையை மிரட்ட, “பாய்ன்னா என்ன? கேர்ள்னா என்ன? இரண்டும் சேம்… அம்மா சொல்லிருக்காங்க. அப்பாவும் சொல்லிருக்காங்க.” என்று ராஜின் தங்கை சண்டைக்குத் தயாராக, “என்ன பேச்சு.. நான் பாய் அப்படி இப்படி. கேர்ள்ன்னா ரெஸ்பெக்ட் பண்ணனும்.” என்று சங்கர் மிரட்டிவிட்டு உள்ளே சென்றான்.

மாற்றம் வீட்டிலிருந்து வர வேண்டும்  அது வேர்விட்டு வளர்ந்து சமுதாயம் எங்கும் பரவி நிற்கும். சங்கரும், லவியும் அதை செவ்வனே செய்திருந்தனர்.

யாதவ், நித்திலா அவர்கள் புதல்வனோடு வர, அந்த இளைய பட்டாளம் ஒன்று கூடியது.

“லவி ஏன் கோபமா இருக்க?” என்று நித்திலா கேட்க, யாதவும் சங்கரும் அவளைக் கூர்மையாகப் பார்த்தனர்.

“நான் அவ கிட்ட நிறையத் தடவை சொல்லிட்டேன். அம்மா பெயர் கேட்டா  லவின்னு சொல்லு. நான் சொல்றதை  கேட்கவே மாட்டேங்குறா. அம்மா ஒரு தடவை சொன்னதை மனசில் வச்சிக்கிட்டு எல்லா இடத்திலும். பல்லவி… பல்லவின்னு எழுதுறா.” என்று லவி கோபமாகக் கூற, யாதவ் உருண்டு உருண்டு சிரித்தான்.

“உனக்கென்னடா சிரிப்பு?” என்று லவி கோபமாக யாதவை பார்த்துக் கேட்க, “இல்லை எங்க யாருக்கும் வராத தைரியம் உன் பொண்ணுக்கு வந்திருக்கு பாரு. அவ உன்னை மாதிரியே இருக்கா. உன்னை மாதிரியே பேசுறா.” என்று யாதவ் கூற, “கெட்டிக்காரி.” என்று சங்கர் சிலாகித்தான்.

“டேய்… நீ என்ன சந்துல சிந்து பாடுற?” என்று யாதவ் கேட்க, சங்கர் லவியை பார்த்து கண்சிமிட்டிச் சிரித்தான்.

சங்கரின் கண்சிமிட்டலில், அவர்கள் தனிமையில் இதழ் பதித்து ‘பல்லவி…’ என்று சங்கர் அழைப்பது லவியின் காதில் ஒலிக்க அவள் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

அவர்கள் வாழ்வில் புன்னகை பூக்கள் பூக்கட்டுமே!

error: Content is protected !!