Lovely Lavi – Epiosde 11

Lovely Lavi – Epiosde 11

அத்தியாயம் – 11

லவியின், “அப்பா… அப்பா…” என்ற அலறல் சத்தத்திற்கு எந்தப் பயனுமின்றி போனது. நடராஜ் கண்விழிக்கவில்லை. லவியின் தந்தையை அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவசர சிகிச்சை பகுதியின் வாசலில் நாற்காலியில் தன் புடவை முந்தானையால் முகத்தை மூடிக் கொண்டு விசும்பிக்கொண்டிருந்தார் நடராஜனின் மனைவி கல்யாணி. அவர் அருகே அமர்ந்திருந்த யாதவின் தயார் சோகம் அப்பிய முகத்தோடு காட்சி அளித்தார்.

லவி மௌனமாக அமர்ந்திருக்க, நித்திலா லவியின் அருகே அவளுக்குத் துணையாக அமர்ந்திருந்தாள். சங்கர், யாதவ் இருவரும் ஏதோ வேலையாக வெளியே செல்ல, யாதவின் தாயார் லவியை பார்த்து, “உன்னால் தான் உங்க அப்பாவுக்கு இந்த நிலைமை.” என்று கடுமையாகக் கூறினார். கல்யாணி தன் நாத்தனாரை அதிர்ச்சியாகப் பார்க்க, லவி தன் அத்தையைக் கோபமாகப் பார்த்தாள்.

“எங்க அண்ணனை இப்படி படுக்க வச்சிட்டியே.” என்று யாதவின் தயார் சீற்றமாகக் கூற, லவியின் மூக்கு கோபத்தால் சிவந்தது.

உதடுகள் துடிக்க, “அத்தை… அப்பா இப்படி ஆனதுக்கு நீங்கத் தான் காரணம். உங்க வயசுக்கு மரியாதை கொடுத்து அமைதியா இருக்கேன். இதுவே வேற யாராவதா இருந்திருந்தா இப்ப நடக்கிறதே வேற.” என்று கர்ஜித்தாள் லவி.

“லவி…” என்று கல்யாணி கெஞ்ச, “என்ன அண்ணி அவ கிட்ட கெஞ்சிகிட்டு இருக்கீங்க? அது தான் இவை இப்படித் தருதலையா இருக்கா?” என்று யாதவின் தாயார் கூற,’எப்பவும் இடக்கு மடக்காகப் பேசுபவர் தான். ஆனால், இன்று தன் கணவனின் அருகாமை இல்லாததால் அதிகப்படியாக இருக்கிறதோ…’ என்ற எண்ண ஓட்டத்தோடு கல்யாணி தன் நாத்தனாரைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

“அம்மா… நீங்க ஏன் பயப்படுறீங்க?” என்று லவி தன் தாயைப் பார்த்து  கோபமாகக் கேட்க, லவியின் கைகளைப் பிடித்து அமைதியாக இருக்கும்படி லவியிடம் கெஞ்சினாள் நித்திலா.

நித்திலாவின் கைகளை உதறிவிட்டு, “அம்மா… நீங்க என்ன புது மருமகளா? மாமியார், நாத்தனார் முகம் பார்த்துப் பயபடுறதுக்கு? கல்யாண ஆன புதுசுலே இப்படி பேசுற நாத்தனாரை வைக்க வேண்டிய இடத்தில் நீங்க வச்சிருக்கணும். அன்னைக்கி வச்சிருந்தா இன்னைக்கி இப்படியொரு நிலைமை வந்திருக்குமா?” என்று தாயிடம் தன் ஆதங்கத்தைக் கொட்டினாள் லவி.

நித்திலாவின் சமாதானம், கல்யாணியின் கெஞ்சல் எதுவும் பலனற்று போக யாதவின் தாயாருக்கும், லவிக்கும் சண்டை வளர்ந்து கொண்டு போக, நித்திலா பெருமூச்சோடு சங்கர் யாதவ் இருவரையும் தேடிப் போனாள்.

நித்திலாவை பார்த்துவிட்டு, அவள் அருகே இருவரும் வர, நித்திலா என்ன பேசுவது, எப்படிக் கூறுவது என்றறியாமல் ஏதும் பேசாமல் மெளனமாக நின்றாள்.

“அவ எங்க கிட்ட சொல்லிருக்க மாட்டா. நீயாவது எங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லிருக்கலாம்.” என்று குறைபடும் குரலில் சங்கர் கூற, ஆமோதிப்பாகத் தலை அசைத்தான் யாதவ். “இவ்வளவு பெரிய பிரச்சனையாகும்ன்னு நான் நினைக்கலை. நான் கொஞ்ச சுதாரிப்பா இருந்திருந்தா இந்த விஷயத்தைத் தடுத்திருக்கலாம்.” என்று குற்ற உணர்ச்சியோடு கூறினாள் நித்திலா.

“ஹரி… ரொம்ப மோசமானவன் மாதிரி தெரியுது. யாதவ் வீட்டுக்கு அவன் தான் தகவல் கொடுத்திருக்கான். நீங்க ரெண்டு பெரும் பத்திரமா இருங்க. அவ கிட்ட சொன்னா  எதுவும் கேட்க மாட்டா. நீ தான் பார்த்துப் பத்திரமா நடந்துக்கணும்.” என்று எச்சரிக்கும் குரலில் சங்கர் கூற, “இப்ப எங்களைத் தேடி ஏன் வந்த?” என்று புருவம் நெளித்து யோசனையாகக் கேட்டான் யாதவ்.

“அத்தைக்கும், லவிக்கும் பயங்கர சண்டையா போகுது. என்னால் தடுக்க முடியலை.” என்று நித்திலா பரிதாபமாகக் கூற, “அறிவில்லை உனக்கு… அதை இப்படி தான் சாவகாசமா சொல்லுவியா…” என்று நித்திலாவிடம் கடுமையாகக் கேட்டுக் கொண்டு, தன் தாயிடம் விரைந்தான் யாதவ்.

“இல்லை… எப்படி சொல்றதுன்னு…” என்ற நித்திலாவின் வார்த்தைகள் காற்றில் தான் பறந்தது.

“இல்லை அவனுக்கு இன்னைக்கி நிறைய அதிர்ச்சி… அது தான் இப்படி இருக்கான்.” என்று சங்கர் நித்திலாவை சமாதானப்படுத்த, ‘ அதிர்ச்சி எனக்கில்லையா…’ என்று சங்கரைப் பரிதாபமாகப் பார்த்தாள் நித்திலா.

பதில் கூற முடியாமல், சங்கர் மௌனமாக நடக்க நித்திலாவும் மௌனமாக நடந்தாள். தன் தாயிடம் சென்ற யாதவ், அங்கு நடந்து கொண்டிருந்த கலவரத்தைப் பொறுப்படுத்தாமல், தன் தாயைப் பார்த்துக் கை எடுத்துக் கும்பிட்டு, “அம்மா… நீங்க இதுவரைக்கும் செஞ்சது போதும். தயவு செஞ்சி வீட்டுக்குக் கிளம்புங்க.” என்று கெஞ்சினான்.

யாதவின் தாயோ, “அண்ணா…” என்று ஆரம்பிக்க, “நான் பாத்துக்கிறேன்… நீங்கக் கிளம்புங்க…” என்று யாதவ் கண்டிப்போடு கூற, வேறு வழியின்றி கிளம்பினார் யாதவின் தாயார்.

அனைவரும் அவசர சிகிச்சை வாசலில் காத்திருக்க, நாம் ஹரியின் மனநிலையை அறிந்து கொள்ள அவனை நோக்கிப் பயணிப்போம்.

ஹரி அடிபட்ட புலியாய் அவன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனைச் சுற்றி நண்பர்கள் கூட்டம் அமர்ந்திருந்தது.

“லவியின் கல்யாணம் நின்னுருக்குமா?” என்று சந்தேகமாகக் கேட்டான் ஹரி. “நிச்சயமா… நாம இவ்வளவு பேசினதுக்கு அப்புறம் அந்த அம்மா கல்யாணத்தை நிச்சயம் நிறுத்திருப்பாங்க.” என்று உறுதியாகக் கூறினான் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன்.

“அடுத்து லவியை ஒரு வழி பண்ணனும் டா… அவ ஏதோ ஒரு பாட்டு சொன்னாலே…” என்று தன் நெற்றியைத் தட்டி சிந்தித்தான் ஹரி.

சில நிமிடங்கள் கழித்து, “ஆ…” என்று கூறி லவி கூறிய வரிகளைக் கடுப்பாக உச்சரித்தான் ஹரி.

கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;

“இப்படி தான் இந்த சமுதாயம் நினைக்குதான்னு சோதிச்சு பார்த்திருவோம்.” என்று தன் அரும்பு மீசையை தன் இரு விரல்களால் தடவிக் கொண்டு கேலி புன்னகையோடு நக்கலாகக் கூறினான் ஹரி.

“லவி தனியா சிக்க மாட்டா ஹரி… அவளைச் சுத்தி எப்பவுமே ஒரு கூட்டம் இருக்கும். யாருமில்லைனாலும், நித்திலா கூடவே இருப்பா.” என்று கூட்டத்தில் ஒருவன் கூற, “அவங்களை தனியாக பிரிக்கணும். இரெண்டு பேரில்  யார் நம்ம கிட்ட சிக்கினாலும், நமக்கு லாபம் தான். ஒருத்தியை தொட்டா இன்னொருத்திக்கு வலிக்கும்.” என்று யோசனையாகக் கூறினான் ஹரி.

அதே நேரம் மருத்துவமனையில் லவியின் தந்தை அவசர சிகிச்சை முடிந்து அறைக்கு மாற்றப்பட்டார்.

ஹார்ட் அட்டாக் என்றும் பைபாஸ் செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூற, அனைவர் முகத்திலும் அதிர்ச்சி சோகம் தெரிந்தது.

அவரை சுற்றி, லவி, கல்யாணி, நித்திலா, யாதவ் சங்கர் அனைவரும் நிற்க, சோகம் தேக்கிய கண்களோடு லவியை பார்த்தார்.

“சங்கர்… நான் ஆபரேஷன் போகறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு வாக்கு கொடுக்கணும்.” என்று கூற, லவி பதட்டமாக தன் தந்தையைப் பார்த்தாள்.

“சொல்லுங்க அங்கிள்…” என்று சங்கர் அவர் கைகளைப் பற்ற, “நான் ஆபரேஷன் முடிஞ்சு வந்ததும், உனக்கும் லவிக்கும் கல்யாணம். இதுக்கு நீ சம்மதம் சொல்லணும்…” என்று கூற சங்கர் நடராஜை அதிர்ச்சியாகப் பார்த்தான்.

‘இவள் என் மனைவியா?’ இந்த எண்ணம் சங்கரின் மனதை ரணமாய் அறுத்தது.

‘கடவுளே அம்மா முகத்தையும் நீ என்னைப் பார்க்க விடலை. அப்பா தான் உலகமுன்னு வாழும் பொது நஷ்டத்தை உண்டு பண்ணி அவரையும் உன்கிட்ட கூட்டிகிட்ட. எத்தனை பாசமான மனிதர்களாக இருந்தாலும், இவர்கள் என்னவர்கள் ஆவார்களா? என் மேல் அன்பு செலுத்தும் மனைவி கூட அமைய கூடாதுன்னு விதி படைத்த அளவுக்கு  துர்பாக்கியசாலியா நான்?’ போன்ற எண்ணங்கள் சங்கரின் எண்ண ஓட்டத்தைத் துரத்த, “மாமா… என் மேல் கோபமா?” என்று பரிதாபமாகக் கேட்டான் யாதவ்.

“உன் மேல் எனக்கென கோபம். நான் உன் வாழ்க்கையைச் சிக்கலாக்க விரும்பலை யாதவ். எனக்கு எல்லாரும் நல்லாருக்கணும்.” என்று பெருந்தன்மையோடு கூறினார் நடராஜ்.

“அப்பா… எனக்கு இப்ப  கல்யாணம் வேண்டாம் அப்பா. நான் படிக்கணும். எனக்கு நிறைய கனவு இருக்கு அப்பா..” என்று அவர் தோள் சாய்ந்து கெஞ்சினாள் லவி.

லவியின்  கெஞ்சலில்   நித்திலா கண்கலங்க, “அப்பா நான் என்ன தப்பு பண்ணேன்? எனக்குத் தெரியலை அப்பா?” குழந்தையை போல் கேட்டாள் லவி.

நடராஜ் மௌனம் காத்தார்.

“அப்பா… நீங்க தானே சொல்லுவீங்க… பையான இருந்தா என்ன? பொண்ணா இருந்தா என்ன? அப்படின்னு நீங்க தானே சொல்லுவீங்க. தைரியமா இருக்குமுன்னு நீங்க தானே அப்பா சொல்லுவீங்க?” என்று தலை அசைத்து தன் கைகளை கேள்வியாக மாற்றி பதட்டமாக கேட்டாள்  லவி. நடராஜ் தன் மகளின் தலை கோத, “அப்பா… நான் எந்த தப்பு பண்ணலை அப்பா. தப்பு செய்றவங்களை ஏன்னு கேட்கக் கூடாத அப்பா? எதிர்த்துக் கேட்கக் கூடாதா அப்பா?” என்று பரிதாபமாகக் கேட்டாள் லவி.

தன் தந்தையின் மௌனம் தொடர,  “ஏன் அப்பா பேச மாட்டேங்கிறீங்க?” என்று லவி உடைந்த குரலில் கேட்டாள்.

“அப்பா… நான் தான் இந்த வீட்டுக்கு பையன்னு சொல்லுவீங்கல்ல? எனக்கு கார், பைக் எல்லாம் ஓட்ட சொல்லி கொடுத்தது நீங்க தானே அப்பா… நான் தைரியமா இருக்கேன். அவ்வுளவு தான்.” என்று லவி கூற, அனைவரின் கண்களும் கலங்கியது.

“லவி… அமைதியா இரு.. மாமா ஸ்ட்ரைன் பண்ண கூடாது.” என்று யாதவ் லவியை கண்டிக்க, லவி அவனை பொறுப்படுத்தவில்லை.

 

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே”

வீரமாய் ஆரம்பித்து உடைந்த குரலில் லவி முடிக்க, தன் மகளை அணைத்துக் கொண்டார் லவியின் தந்தை.

“இதெல்லாம் நீங்க தான அப்பா  சொல்லி குடுத்தீங்க. நான் எந்த தப்பும் பண்ணலை அப்பா..” என்று லவி மீண்டும் மீண்டும் பிதற்றுவதை போல் உறுதியாகக் கூற, “தப்பு உன் மேல இல்லைம்மா… உன் மேல் இல்லை… என் மேல தான்… என் மேல தான்…” என்று கூறி தன் மௌனத்தை கலைத்தார்  நடராஜ்.

“உன்னை வீரமாய் வளர்த்தப்ப, எனக்கு ரத்தம் வீரமாய்  துடிக்கும் வயசு. நம் சமுதாயம் மாறுமுன்னு நான் நம்பிய வயசு. ஆனால், நம் சமுதாயம் மாறலை. மாறியது நான் தான். வீடு போபோன்னு சொல்லுது… காடு வாவான்னு சொல்லுது. என் ரத்தம் இப்ப துடிக்கலை. பயப்படுது… என் முன்னாடி என் சமுதாயம் இல்லை… இவை மாறுமுன்னு நம்பிக்கையும் இல்லை. எனக்கு அதை பத்தி அக்கறையுமில்லை.  என் பொண்ணு நீ மட்டும் தான் டா இருக்க… இப்ப  நீ வீரமா இருக்குமுன்னு நான் நினைக்கலை. நீ பாதுகாப்பா, சந்தோஷமா இருக்கனுமுன்னு மட்டும் தான் நினைக்கிறேன்.” என்று நெஞ்சை பிடித்து கொண்டு நடராஜ் கதற, அனைவரும் பதறினர்.

அச்சம் லவியை தொற்றிக்கொள்ள,  “அப்பா நீங்க என்ன சொன்னாலும் கேட்கறேன். நீங்க என்னைக்கும் என் கூட இருக்கனும்.” என்று லவி பதட்டமாக கூற, நடராஜ் தன் மகளை வாஞ்சையோடு பார்த்தார்.

“இங்கு என்ன கூட்டம்?” என்று வினவிக் கொண்டே மருத்துவர் நுழைய, கல்யாணி மட்டும் அறைக்குள் இருக்க அனைவரும் வெளியே சென்றனர்.

சங்கர் தனியாக அமர்ந்திருக்க, லவி அவனைப் பார்த்துக் கேட்ட கேள்வியில் சங்கர் லவியை பரிதாபமாக பார்க்க, நித்திலா யாதவை பார்த்துக் கேட்ட கேள்வியில் யாதவ் நித்திலாவை அதிர்ச்சியாகப் பார்த்தான்.

லவ்லி லவி வருவாள்…

 

error: Content is protected !!