Lovely Lavi – Episode 12

Lovely Lavi – Episode 12

அத்தியாயம் – 12

சங்கர் மருத்துவமனையில் நடராஜ் அறைக்கு வெளியே இருந்த நாற்காலியில் யோசனையாக அமர்ந்திருந்தான். அவனுக்குப் பேரதிர்ச்சி. ‘லவிக்கு என்னைப் பிடிக்காது. அங்கிள் இப்படி இருக்கும்போது இந்தத் திருமண பேச்சு அவசியமா? ஏதோ பதட்டத்தில் அங்கிள் இப்படி எல்லாம் பேசுறாங்க.’ என்று எண்ணியபடி அமர்ந்திருந்தான் சங்கர்.

அப்பொழுது அவன் அருகே வந்த லவி, “எதுவும் இல்லைன்னு எங்க வீட்டுக்கு வந்த? இப்ப எல்லாமா ஆகிட்ட?” என்று நக்கலாகக் கேட்டாள் லவி.

லவி பேசுவது புரியாமல் அவளைப் பரிதாபமாகப் பார்த்தான் சங்கர்.

“இதோ பார்… இப்படி அப்பாவி மாதிரி பாக்குற வேலையெல்லாம் என்கிட்டே வச்சிக்காத. உன் அப்பாவித்தனத்தை எங்க அப்பா நம்பலாம். நான் நம்ப மாட்டேன். எனக்கு உன்னைப் பிடிக்காதுன்னு தெரியுமில்ல. என்னைக் கல்யாணம் பண்ணிக்க சொன்னா அப்படியே தைரியமா நிக்குற? உனக்கு அவ்வுளவு தைரியமா?” என்று கோபமாக லவி கேட்க, ‘இவள் கேட்பது நியாயம் தானே? இவளைத் திருமணம் செய்து கொள்ளத் தனித் தைரியம் வேண்டும்.’ என்ற எண்ணத்தோடு சங்கர் அவளை மீண்டும் பரிதாபமாகப் பார்த்தான்.

“ஏய்… இந்த மாதிரி அப்பாவியா நடிக்காதன்னு சொல்றேன். வாயைத் திறந்து பேசு. பேசாம எப்ப பாரு இப்படி முழிக்க வேண்டியது…” என்று லவி கடுப்பாகத் தன் பற்களை நறநறக்க, ‘பேசவிட்டா தானே?’ என்ற எண்ணத்தோடு லவியை அப்பாவியாகப் பார்த்தான் சங்கர்.

“ச்ச…” என்று சலிப்பாகக் கூறிவிட்டு, திரும்பி நடந்தாள் லவி. மீண்டும் இவன் அருகே வந்து, “இந்தக் கல்யாணம் நடக்காது. ஆனால், உன்னைக் கட்டிக்க போறவ ரொம்ப பாவம். பேசாமலே கொல்லுவ.” என்று லவி கடுப்பாகக் கூற, ‘நீ பேசியே கொல்ற மாதிரியா?’ என்று கேட்கத் தோன்றினாலும் அதைக் கேட்கத் தைரியம் இல்லாமல் மௌனம் காத்தான் சங்கர்.

இந்தச் சூழ்நிலையிலும் லவியின் தைரியத்தைப் பார்த்து ஏற்படும் வியப்பை சங்கரால் தவிர்க்க முடியவில்லை.

“நீ பேச மாட்ட…” என்று முணுமுணுத்துக் கொண்டு, அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் படக்கென்று அமர்ந்தாள் லவி.

அதே நேரம், யாதவ் யோசனையாகச் சுவரோரமாக தனியாக அமர்ந்திருக்க, “நீங்க ஒரு சுயநலவாதி. கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திகிட்டீங்கள்ல?” என்று ஏளன நகையோடு கோபமாகக் கேட்டாள் நித்திலா.

“நித்திலா…” என்று யாதவ் அதிர்ச்சியாக நித்திலாவை அழைக்க, “உங்களைப் பத்தி நான் இப்படி நினைக்கலை…” என்று அவனைப் பார்த்து வெறுப்பாகக் கூறி, தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் நித்திலா. யாதவ் நித்திலாவை புரியாமல் பார்க்க, “அம்மாவும், பையனும் நீங்க நினைக்கிறதை முடிகிறதுக்கு என்னைப் பகடை காயாக்கிடீங்கள்ல?” என்று சலிப்பாகக் கேட்டு, நித்திலா கோபமாகத் திரும்பிச் செல்ல, அவளை கைப்பிடித்து நிறுத்தினான் யாதவ்.

யாதவ் நித்திலாவுக்கும் முறைப்பையன் தான். ஆனால், அந்த உரிமையை யாதவ் இதுவரை நித்திலாவிடம் காட்டியதில்லை. இன்று யாதவ் காட்டிய உரிமையில் நித்திலா சற்று பதட்டமானாள்.

நித்திலாவின் கண்கள் பதட்டத்தை வெளிக்காட்ட, அதைக் கண்டுகொண்ட யாதவின் மனது ஓர் புன்முறுவல் பூத்தது. அதை வெளிக்காட்டாமல், நித்திலாவின் கைகளை அழுத்தமாகப் பிடித்து, “இன்னைக்கி நடந்த கல்யாண பேச்சில் என்மேல் தப்பு இருக்கா?” என்று அவள் அருகே நின்று அழுத்தமாகக் கேட்டான் யாதவ்.

யாதவின் அருகாமை நித்திலாவுக்கு பதட்டத்தைக் கொடுக்க, தன் தலையை ‘ஆம்…’ என்பது போல் மேலும் கீழும் அசைத்தாள் நித்திலா.

“இவ்வளவு நேரம் பேசின? இப்ப பேசு… என் கண்களைப் பார்த்துச் சொல்லு.” என்று யாதவ் நித்திலாவை மிரட்ட, “என்ன? மிரட்ட மாதிரி இருக்கு? நான் அப்படி எல்லாம் பயப்படமாட்டேன். ஆமா உங்க மேலயும் தப்பு இருக்கு…” என்று தன் நடுக்கத்தையும் மறைத்துக் கொண்டு நித்திலா அழுத்தமாகக் கூற, “என்ன தப்பு?” என்று இறங்கிய குரலில் கேட்டு நித்திலாவின் கைகளை விடுவித்தான் யாதவ்.

“லவிக்கு சங்கரைப் பிடிக்காது. நீங்க நினைச்சிருந்தா அந்தக் கல்யாண பேச்சை நிறுத்தியிருக்கலாம்.” என்று நித்திலா குற்றம் சாட்ட, “லவிக்கு என்னை ரொம்ப பிடிக்குமோ?” என்று குதர்க்கமாக யாதவ் கேட்க, யாதவின் கேள்வியில் நியாயம் இருப்பது புரிந்தாலும், அதை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் நித்திலா அவனைக் கோபமாகப் பார்த்தாள்.

அவன் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல், நித்திலா அங்கிருந்த நாற்காலியில் அமர, யாதவ் சிந்தனையில் ஆழ்ந்தான்.

‘லவிக்கு சங்கரைப் பிடிக்காது. உண்மை தான். சங்கருக்கு? சங்கர் லவியை பார்த்தாலே மின்னல் வேகத்தில் ஓடுவான். ஆனால் சங்கரை விட, லவியை அழகாக யாரால் புரிந்து கொள்ள முடியும். அன்பில்லாமல் புரிதல் வருமா?’ என்று சிந்தித்தான் யாதவ்.

‘வாழ்வின் அடிப்படை காதலா? இல்லை புரிதலா?’ என்ற பட்டிமன்றமே யாதவின் மனதில் நடைபெற, அவன் பட்டிமன்றத்திற்குத் தீர்ப்பைக் காலம் மட்டுமே கூற முடியும்.

நடராஜ் உடல் நிலை தேறி வீட்டிற்குத் திரும்பினார். இன்றைய சூழ்நிலையை மனதில் கொண்டு யாதவ், சங்கர் இருவரும் லவி, நித்திலா அறியாமல் அவர்களுக்குப் பாதுகாப்பாய் நின்றனர்.

லவி, நித்திலா இருவரும் வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்றனர். இருவரும் நெருக்கமாக இருந்தாலும், அவர்கள் இருவருக்கிடையில் ஒரு மெல்லிய சுவர் எழுந்திருந்து.

ஆம்! குற்றவுணர்வு என்ற மெல்லிய சுவர்.

‘தன்னால் தான் யாதவ் லவியின் திருமணத்தில் குழப்பம்…’ என்று நித்திலாவின் மனம் குற்ற உணர்வில் தவிக்க, ‘தன்னால் தான் நித்திலா இத்தனை விரைவாகத் திருமணப் பந்தத்தில் சிக்கிக் கொண்டாள்.’ என்று எண்ணம் லவியின் மனதை அரித்துக் கொண்டிருந்தது.

ஏனோ, இருவராலும் அதை வெளிப்படையாகப் பேச முடியவில்லை.

யாதவ், நித்திலாவின் திருமணம் அவர்கள் படிப்பு முடியுமுன்னரே சிறப்பாக நடைபெற்றது. எத்தனை நெருக்கமான தோழியாக இருந்தாலும், நித்திலா தன் வாழ்வின் போக்கைப் பற்றி லவியிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.

லவியின் மறுப்பு, எதிர்ப்பு இவை அனைத்தையும் தாண்டிப் பல போராட்டங்களுக்குப் பின் அவர்கள் படிப்பு முடிந்த பின் லவி சங்கரின் திருமணம் நடைபெற்றது. தன் தந்தையின் உடல்நிலை, லவியை விதியின் போக்கில் நடக்க செய்தது.

அன்றிரவு லவி தன் அறையில் அடிபட்ட புலியாய் குறுக்கும் நடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.

சங்கர் கெஸ்ட் ஹவுசில் அவன் அறையில்  யோசனையாக அமர்ந்திருந்தான். நடராஜ், கல்யாணி இருவரின் பார்வையும் சங்கரைக் கண்காணிக்க, சங்கர் படியேறி வேறுவழின்றி லவியின் அறையை நோக்கி நடந்தான். வீட்டில் உறவினர்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தது.

சங்கர் லவியின் அறைக்குள் நுழைய, அவனைக் கோபமாகப் பார்த்தாள் லவி. “எங்க வந்த?” என்று மெத்தையில் அமர்ந்து அவனைப் பார்த்துத் தன் ஒற்றை புருவத்தைத் தூக்கி நக்கலாகக் கேட்டாள் லவி.

சங்கர் லவியை மெளனமாகப் பார்க்க, “நான் நம்ம சின்ன வயசிலேயே சொல்லிருக்கேன்ல. நீ என் வீட்டுக்குள் இருக்கிறது கூட எனக்குப் பிடிக்காதுன்னு… அதனால் தானே நீ கெஸ்ட் ஹோஸில் தங்க ஆரம்பிச்ச… இப்ப நீ எந்தத் தைரியத்தில் என் அறைக்குள் வந்த?” என்று காட்டமாகக் கேட்டாள் லவி.

வெளியில் இருக்கும் உறவினர்கள், நடராஜின் உடல்நிலை இவை அனைத்தையும் மனதில் கொண்டு திறந்திருந்த கதவைச் சங்கர் பரிதாபமாகப் பார்க்க, லவி வேகமாகச் சென்று கதவைப் பாடாரென்று மூடி அதைத் தாழிட்டாள்.

“இப்ப மட்டும் நீ வாயைத் திறந்து பேசிருவியா?” என்று லவி ஏளனமாகக் கேட்க, சங்கர் பதில் கூறாமல் அவளைப் பார்த்தான்.

‘இவளிடம் என்ன பேசுவது?’ என்ற எண்ணத்தோடு சங்கர் லவியை யோசனையாகப் பார்க்க, அங்கிருந்த மெத்தையில் சட்டமாகச் சம்மணமிட்டு அமர்ந்தாள் லவி.

அவள் இரவு உடை தொளதொளவென்று தொங்கிக் கொண்டிருந்தது. அந்த உடைக்கு என்ன பெயர் என்று கூடச் சங்கரால் கணிக்க முடியவில்லை. அது பண்ட் போன்றுமில்லாமால் ஸ்கிர்ட் போன்றும் இல்லாமல் வித்தியாச தோற்றம் அளித்தது. ‘இந்த மாதிரி உடை எங்கு விற்பார்களோ?’ என்ற சந்தேகமே அந்த நொடி லவியை பார்க்கும்பொழுது சங்கரின் மனதில் எழுந்தது.

‘ஒருவேளை தன் வாழ்வில் எல்லாம் சுமுகமானால், இந்த உடை பெயர் கூடத் தெரியாதா?’ என்று கேள்வி கேட்பாளோ என்று சங்கரின் மனம் சிந்திக்க, அங்கிருந்த தலையணையை சங்கரின் முகத்தில் எறிந்தாள் லவி.

“ஏய்! உன்கிட்ட தானே பேசிட்டு இருக்கேன். அப்படி என்ன யோசனை உனக்கு?” என்று லவி கடுப்பாகக் கேட்டாள்.

‘நல்ல வேலை பக்கத்தில் உள்ள வாட்டர் பாட்டில் அவள் கையில் கிடைக்கவில்லை. தலையணை தான் கிடைத்திருக்கிறது.’ என்று நிம்மதி பெருமூச்சோடு அவளைப் பார்த்தான் சங்கர்.

அங்கிருந்த போர்வையை சங்கரின் மீது எரிந்து விட்டு மெத்தையில் படுக்க, சங்கர் எதுவும் பேசாமல் மௌனமாகப் படுத்துக் கொண்டான்.

‘எதாவது பேசினா சண்டை இழுக்கலாம். கல்லூனி மங்கன் வாயைத் திறக்காமல் என் உயிரை எடுக்கிறான்.’ என்று சிந்தித்தபடி லவி யோசனையாக மெத்தையில் புரள, திடீரென்று எழுந்து அமர்ந்தாள் லவி.

“ஏய்!” என்று லவி அழைக்க, சங்கர் தன் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

“ஏய்!” என்று லவி மீண்டும் சத்தமாக  அழைக்க, சங்கர் தன் உடலில் எந்த அசைவையும் காட்டாமல் அமைதியாகப் படுத்திருந்தான்.

“சங்கர்…” என்று லவி கடுமையாக அழைக்க, சங்கர் சாவதானமாக எழுத்து, “கூப்பிட்டியா?” என்று மெதுவாகக் கேட்டான்.

‘அவன் முகத்தில் மெல்லிய வெற்றி  புன்னகை அரும்பியதோ!’ என்று சந்தேகத்தோடு அவனை ஆராயும் விதமாகப் பார்த்தாள் லவி. சங்கரின் முகத்தில் எந்த உணர்ச்சியுமில்லை.

சங்கரை ஆராயும்  தன் எண்ணப்போக்கை நிறுத்திவிட்டு, “நீ இனி இங்க இருக்கக் கூடாது. எதாவது வேலை பார்த்துகிட்டு, அதைக் காரணம் காட்டி இங்கிருந்து வெளிய போய்டு.” என்று லவி சங்கருக்காகத் திட்டமிட, சங்கர் லவியை அதிர்ச்சியாகப் பார்த்தான்.

“எங்க அப்பாவை நான் பாத்துகிறேன். நீ போய்டு.” என்று லவி கூற, சங்கர் மறுப்பாகத் தலை அசைத்துப் பேச எத்தனித்தான்.

“எனக்கு முதலில் அப்பா… அப்புறம் தான் உனக்கு அங்கிள்…” என்று தன் உரிமையை நிலைநாட்டி, “நாளைக்கி இந்நேரம் நீ இங்க இருக்கக் கூடாது.” என்று அவனை மிரட்டினாள் லவி.

சங்கர் ஏதும் பேசாமலிருக்க, “இதை ஏன் கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லைன்னு பாக்கறியா? என்னைக் கல்யாணம் செய்யப் பயந்துகிட்டு நீயே ஓடிருவன்னு நினச்சேன். உனக்கு இவ்வுளவு தைரியம் இருக்குமுன்னு நான் எதிர்பாரக்கலை.” என்று ஏமாற்றமான குரலில் லவி கூற, சங்கர் அவளைக் கூர்மையாகப் பார்த்தான்.

லவியின் பேச்சு நீண்டு கொண்டே போனது. லவி தன் வாழ்வில் தனக்காகக் காத்திருக்கும் கருப்பு பக்கங்களை அறியாமல் துணிவாகப்  பேசிக்கொண்டிருக்க விதி அவளைப் பரிதாபமாகப் பார்த்தது.

லவ்லி லவி வருவாள்…

error: Content is protected !!