Lovely Lavi – Episode 14
Lovely Lavi – Episode 14
அத்தியாயம் – 14
சங்கரின் பேச்சில் கடுப்பான லவி, “ஏய்… இந்த பார். நீ இந்த ஆறு வருஷத்தில், பெரிய பெரிய கம்பெனியில் வேலை பார்த்திருக்கலாம். நீ இப்ப பெரிய ஆளா இருக்கலாம். ஆனால், எனக்கு நீ பழைய சங்கர் தான். நான் லவி தான். அதில் எந்த மாற்றமுமில்லை. இந்த நக்கல் பேச்சு, நையாண்டி இதெல்லாம் என்கிட்ட வேண்டாம்.” என்று லவி கோபமாகக் கூற, சங்கர் தன் தலையைக் குனிந்து கொண்டு உதட்டை மடித்துக் கொண்டு சிரித்தான்.
சங்கர் எதுவும் பதில் கூறாமல் அமர்ந்திருக்க, “போனவன்… அப்படியே போக வேண்டியது தானே? நானும், குழந்தையும் தனியா நிம்மதியா தானே இருந்தோம். இப்ப எதுக்கு திடீருன்னு எங்களை இங்க வர வச்ச?” என்று லவி அவன் எதிரே அமர்ந்து சங்கரின் முகத்தைப் பார்த்து கூர்மையாகக் கேட்டாள்.
‘இவளிடம் எதைச் சொல்வது? எதைச் சொன்னால் புரிந்து கொள்வாள்?’ என்ற எண்ணம் தோன்ற மௌனமாக அமர்ந்திருந்தான் சங்கர்.
“பதில் சொல்லு.” என்று லவி அவனுக்கு அழுத்தம் கொடுக்க, “எனக்கு இப்ப தான் குழந்தை விஷயம் தெரியும்.” என்று சுருக்கமாகக் கூறினான் சங்கர்.
தன் கண்களைச் சுருக்கி, “குழந்தை விஷயம் தெரிஞ்சா?” என்று லவி கேள்வியாக நிறுத்த, “நீ தான் குழந்தைக்கு அம்மா அப்படினா நான் தான் குழந்தைக்கு அப்பா.” என்று உறுதியாகக் கூறினான் சங்கர்.
“என் குழந்தைக்காக வந்தியா?” என்று லவி சங்கரிடம் சண்டையிடத் தயாராக, “அப்பா…” என்று சங்கரைப் பார்த்து எழுந்து அவன் அருகே அமர்ந்து கொண்டான் ராஜ்.
இருவரும் சண்டையை மறந்து, அவர்கள் கவனத்தைக் குழந்தை பக்கம் திருப்பினர்.
“அம்மா… ரொம்ப குளுருது…” என்று கூறி குழந்தை லவியை கட்டிக் கொள்ள, “ராஜ்… இந்த டிரஸ் இப்படி தான் குளிரும், நான் வாங்கி வச்சிருக்கிற டிரஸ் போடுறியா?” என்று குழந்தையிடம் செல்லம் கொஞ்சினான் சங்கர்.
குழந்தை சமத்தாகத் தலை அசைக்க, ராஜ்ஜை தூக்கிக் கொண்டு அவனுக்கு வாங்கி வைத்திருந்த ஸ்பைடர்மேன் படம் கொண்ட குளிருக்கு ஏதுவான உடையை சங்கர் குழந்தைக்கு அணிய, அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தான் ராஜ்.
“அம்மா… அப்பா சூப்பர்… எனக்கு அப்பாவை ரொம்ப பிடிச்சிருக்கு.” என்று கூறி, ராஜ் சங்கரின் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.
‘உங்க அப்பாவை எல்லாருக்கும் பிடிக்கும்… அது தான் பிரச்சனையே.’ என்று எண்ணியபடி லவி கடுப்பாக எண்ண, “ராஜ் என்ன சாப்பிடுறீங்க?” என்று குழந்தையை அங்கிருந்த மேஜையில் அமரவைத்துக் கேட்டான் சங்கர்.
“அவனை தூக்கிட்டே இருக்காதீங்க. அவன் பெரிய பையன். அவனே எல்லாம் செய்துப்பான்.” என்று லவி கூற, ராஜ் சங்கரை தன் விரல்களால் அருகே அழைத்தான்.
சங்கர், ‘என்ன?’ என்று தன் புருவம் உயர்த்தி, ராஜிடம் ரகசியம் பேச, “அம்மாவால் என்னைத் தூக்க முடியாது. பாட்டிக்கும் தூக்க முடியாது.” என்று தனக்குத் தெரிந்த ரகசியத்தை ராஜ் கூற, “ஹா… ஹா…” என்று பெருங்குரல் எடுத்துச் சிரித்தான் சங்கர்.
‘எத்தனை கம்பீரமான சிரிப்பு. இவன் சங்கர் தானா?’ என்று சங்கரை ஆச்சரியமாகப் பார்த்தாள் லவி.
“அப்பா… நீங்க சூப்பரா சிரிக்கிறீங்க. அம்மா எப்பயாவது தான் சிரிப்பாங்க.” என்று ராஜ் இயல்பாக கூற சங்கர் அடிபட்ட வலியோடு லவியை பார்த்தான்.
‘அவள் இருக்கும் இடத்தில் சிரிப்புக்குப் பஞ்சம் இருக்குமா?’ என்று சங்கர் லவியை நம்பாமல் பார்க்க, லவி இங்கு வந்ததிலிருந்து ஒரு முறை கூட சிரிக்கவில்லை என்று தாமதமாகவே சங்கருக்குப் புரிந்தது.
“ராஜ்… எதுக்கு இப்ப தேவை இல்லாத பேச்சு. நீ எதுவும் சாப்பிடலை. உனக்கு அம்மா இட்லி தரேன்.” என்று கூற, ராஜ் சம்மதமாகத் தலை அசைத்தான்.
லவி சமையலறைக்குச் சென்று குழந்தைக்கு உணவு கொடுத்தாள்.
ராஜ் பசியால் எதுவும் தொந்தரவு செய்யாமல் வேகமாக தன் உணவை முடித்துக் கொண்டான்.
“ராஜுக்கு ஐந்து வயசாகிருச்சு. இங்க பப்ளிக் ஸ்கூலில் போட்டுருவோம். நான் எல்லாம் விசாரிச்சு வச்சிட்டேன்.” என்று சங்கர் கூற, அவனை யோசனையாகப் பார்த்தாள் லவி.
லவி எதோ கூறுவது புரிய, “ராஜ்… அந்த ரூம் தான் டாய்ஸ் ரூம்… உனக்கு நிறைய பொம்மை வாங்கி வச்சிருக்கேன். போய் விளையாடு.” என்று சங்கர் கூற, பொம்மை என்றதும் குழந்தை ஆர்வமாக அந்த அறையை நோக்கி ஓடியது.
“எங்க அம்மா, அப்பா ரெண்டு பேரையும் என்னை வெறுக்க வச்சிட்ட. இப்ப குழந்தையையும் என்கிட்டே இருந்து பிரிச்சிருவியா?” என்று சங்கரை பார்த்து கூர்மையாகக் கேட்டாள் லவி.
சங்கர் லவியை அதிர்ச்சியாகப் பார்க்க, “நான் உனக்கு என்ன கெடுதல் பண்ணேன்? உண்மையா எனக்குத் தெரியலை.” என்று லவி சங்கரின் முகம் பார்த்து குற்றம் சாட்டும் விதமாகக் கேட்டாள் லவி.
“நான் அப்படி ஒரு நாள் கூட நினைச்சதில்லை.” என்று சங்கர் பரிதாபமாகக் கூற, “நடிக்காத. இப்படி அப்பாவி மாதிரி நடிக்காத.” என்று தன் பற்களைக் கடித்தாள் லவி.
சங்கர் ஒரு பெருமூச்சோடு சமையலறைக்குச் செல்ல, “ஏன்? எங்க அம்மா… நீ தான் ஒழுங்கு! எல்லா வேலையும் செய்றன்னு சொல்ற மாதிரி என் பையனும் சொல்லனுமா? நான் எல்லா வேலையும் செய்றேன் நீ ஹாலுக்கு போ.” என்று அதிகாரமாகக் கூறினாள் லவி.
‘நான் வேலை செய்கிறேன், என்பதை கூட இவ்வளவு அதிகாரமாக இவளால் மட்டும் தான் கூற முடியும்.’ என்று ரசனையோடு லவியை பார்த்தபடி, “உனக்கு இந்த அடுப்பு எப்படி ஆன் பண்ணணுமுன்னு தெரியாது. நான் சொல்லி தரேன்.” என்று சங்கர் அவள் அருகே சென்று கூற, அருகே இருந்த கரண்டியைக் கையில் எடுத்துக் கொண்டு, “எனக்குச் சமையல் பத்தி தெரியாது. உனக்குத் தெரியுமோ?” என்று கோபமாக லவி கேட்க, மறுப்பாகத் தலை அசைத்து, “உனக்கு எல்லாம் தெரியும்.” என்று சங்கர் பரிதாபமாகக் கூறுவது போல் கேலி புன்னகையோடு கூறினான்.
‘இவன் சரியில்லை.’ என்றெண்ணி , “நாங்க எப்ப இந்தியா போகலாம்?” என்று சமயலறை சாமானைப் பார்த்தபடி கேட்டாள்.
“என் ப்ராஜெக்ட் முடிஞ்சி நான் திரும்பும் போது.” என்று சங்கர் அவளைப் பார்த்தபடி உறுதியாகக் கூற, லவி அவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.
“எத்தனை நாள் வயசானவங்களை கஷ்டப்படுத்துவ?” என்று ஆழமான குரலில் கேட்டான் சங்கர்.
‘அவங்களுக்காக தானே இங்க வந்தேன்.’ என்று எண்ணியபடி லவி மௌனமாக நிற்க, “உனக்கு என்னைத் தானே பிடிக்காது. நீ என்னை எவ்வளவு வேணுமுனாலும் கஷ்டப்படுத்து. நான் தாங்கிக்கிறேன். ஆனால் நீயும், ராஜும் இனி என் கூடத் தான் இருப்பீங்க.” என்று அழுத்தமான குரலில் கூறி ராஜ் இருக்கும் அறையை நோக்கிச் சென்றான் சங்கர்.
‘இவன் என்ன சொல்லுகிறான்? நான் எல்லாரையும் கஷ்டப்படுத்துறேனா?’ என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டு, “எவ்விளவு திமிர். அவனை எவ்வுளவு கஷ்டப்படுத்தினாலும் தாங்குவானாமே. அப்படி நல்லவன் வேஷம் போட வேண்டியது. எத்தனை வருஷமானாலும், இவனெல்லாம் திருந்தவே மாட்டான்.” என்று தனியாக முணுமுணுத்துக் கொண்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள் லவி.
“ராஜ். அம்மா தனியா இருப்பாங்க. நாம ஹாலில் போய் விளையாடுவோமா?” என்று கேட்டுக் கொண்டே, அவனுக்காக வாங்கி வைத்திருந்த, ரிமோட் கார், ஸ்பைடர் மேன் அனைத்தையும் எடுத்துக் கொண்டு லவி இருக்கும் அறையில் வந்தமர்ந்தார் ராஜ் மற்றும் சங்கர்.
ராஜ் மிகவும் ஆனந்தமாக விளையாட, ‘நான் இப்படி எல்லாம் இவன் கூட விளையாடியதில்லையே. குழந்தை அப்பாவுக்காக ஏங்கி இருக்குமோ?’ என்று எண்ணியபடி லவி அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அப்பா… உங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்குமா?” என்று குழந்தை திடீரென்று கேட்க, “இதுல என்ன டா சந்தேகம்? எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.” என்று சங்கர் குழந்தையை தன் மீது சாய்த்துக் கொண்டு கூற, ராஜ் யோசனையாகத் தலை அசைத்தான்.
“அப்ப… அம்மாவை?” என்று ராஜ் கேள்வியாக நிறுத்த, லவி மற்றும் சங்கர் இருவரும் அதிர்ச்சியடைய, சங்கர் முதலில் சுதாரித்துக் கொண்டான்.
“உங்க அம்மாவை யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா? பிடிக்கும் தான்.” என்று பொத்தாம்பொதுவாக கூறினான் சங்கர்.
“அம்மாவை ரொம்ப பிடிக்குமா? என்னை ரொம்ப பிடிக்குமா?” என்று ராஜ் விடாப்பிடியாகக் கேட்க, “நீ உங்க அம்மா மாதிரியே பேசுற டா… அம்மாவும், பிள்ளையும் என்னைத் தலையால் தண்ணி குடிக்க வைப்பீங்க போல!” என்று சங்கர் அசடு வழிய, லவியின் அதரங்கள் மெலிதாக புன்னகையில் வளைந்தது.
“அப்பா… யாரை ரொம்ப பிடிக்கும்?” என்று ராஜ் விடாப்பிடியாகக் கேட்க, “உங்க அம்மாவைத் தான்டா ரொம்ப பிடிக்கும்.” என்று கூற லவி சங்கரை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.
‘இவன் மனசில் என்ன நினைச்சுகிட்டு இருக்கான்?’ என்று எண்ணிக் கடுப்பாக லவி சங்கரைப் பார்க்க, குழந்தையும் ஏமாற்றமாக பார்க்க… “நீ குட்டி பையன். அப்ப எனக்கு உன்னை அவ்வுளவு பிடிக்கும். உங்க அம்மா உன்னை விட பெருசா இருக்காங்க… உங்க அம்மாவை அவ்வுளவு பிடிக்கனுமில்லை?” என்று சங்கர் நியாயம் பேச, குழந்தை சங்கர் சொல்வது சரி என்பது போல் தலை அசைக்க, ‘இப்படி ஒரு கேவலமான விளக்கம்?’ என்றெண்ணி சங்கரை மேலும் கீழும் பார்த்தாள் லவி.
“ராஜ்… இப்ப நீ சொல்லு. உனக்கு அம்மாவை ரொம்ப பிடிக்குமா? அப்பாவை ரொம்ப பிடிக்குமா?” என்று சங்கர் கேட்க, “அம்மாவை விட நீங்க தான் பெரிசா இருக்கீங்க… அப்ப உங்களை அவ்வுளவு பிடிக்கனுமில்லை… உங்களைத் தான் ரொம்ப பிடிக்கும். அப்புறம் அம்மாவைப் பிடிக்கும்.” என்று ராஜ் சங்கர் கற்றுக் கொடுத்த பாடத்தை கற்றுக் கொண்டு கூற, சங்கர் குலுங்கிக் குலுங்கி சிரித்தான்.
ஏனோ சங்கருக்கு தன் மனதில் இருக்கும் பயத்தைத் தாண்டியும், அப்படியொரு விபரீத ஆசை வந்தது.
“ராஜ்… உங்க அம்மாவுக்கு யாரை ரொம்ப பிடிக்கும்? உன்னையா? என்னையா? நான் தானே உயரமா இருக்கேன்?” என்று தன் ஒற்றை புருவம் உயர்த்தி நக்கலாகக் கேட்டான் சங்கர்.
குழந்தையையும் ஏமாற்றாமல், சங்கருக்கு பதில் கொடுக்க வேண்டும் என்றெண்ணி லவி அவர்களை யோசனையாக பார்த்தாள்.
லவியின் பதிலுக்காக ராஜ் ஆர்வமாகக் காத்திருக்க, சங்கரும் அவள் என்ன சொல்லுவாள் என்றறிய ஆவலாகக் காத்திருந்தான்.
லவ்லி லவி வருவாள்…