Lovely Lavi – Episode 16

Lovely Lavi – Episode 16

அத்தியாயம் – 16

சங்கர் தன் மனதில் தோன்றிய வருத்தம், குழப்பம் போன்ற அனைத்து உணர்ச்சிகளையும் ஒதுக்கி விட்டு அந்த நொடியைத் தனதாக்கிக் கொள்ள முடிவு செய்தான்.

சங்கர் லவியை ரசித்துப் பார்த்தான். தன் மனதில் எழுந்த ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, தன் உதட்டை வளைத்துச் சிரித்தான்.

‘குளிரைப் பத்தி உனக்குத் தெரியாமலா இருக்கும்? உனக்கு உன் மகன் கிட்ட படுக்கணும். அதுவும் அதை நான் சொல்லி செய்யணும்… நீயா செய்தா உன் கௌரவம் குறைஞ்சிரும்… கேடி… நீ மாறவே இல்லை…’ என்று சங்கர் லவியை பார்த்தபடி சிந்தித்தான்.

லவி சற்று திரும்பிப் படுக்க, அச்சம் கொண்டவனாய் போர்வைக்குள் நுழைந்து கொண்டான் சங்கர்.

‘கல்யாணமாகி ஆறு வருஷம் ஆகுது. பொண்டாட்டியைப் பார்க்கக் கூட பயப்படுற மோசமான வாழ்க்கை என் எதிரிக்குக் கூட வரக் கூடாது.’ என்றெண்ணியபடி நித்திரையில் ஆழ்ந்தான் சங்கர்.

அதிகாலையில் ராஜ் சற்று அசைந்து படுக்க, படக்கென்று எழுந்தமர்ந்தாள் லவி. லவியின் அசைவில் விழித்துக் கொண்டான் சங்கர்.  “எதுவும் வேணுமா?” என்று லவியை பார்த்தபடி அக்கறையோடு கேட்டான் சங்கர்.

“என்ன கேட்டாலும் தர முடியுமா?” என்று காலை நேரப் புத்துணர்ச்சியோடு  நக்கலாக லவி கேட்க, “என்னால் முடிஞ்சதை நிச்சயம் தர முடியும். அது உனக்கு நல்லதா இருந்தா… உன்னைக் கஷ்டப்படுத்தாமல் இருந்தா…” என்று சங்கர் புன்முறுவலோடு கூற, லவி அமைதியாக சங்கரை யோசனையாகப் பார்த்தாள்.

“நீ என் கிட்டக் கூட பேச தயங்குவியா?” என்று சங்கர் புருவம் உயர்த்தி லவியின் கண்களைப் பார்த்தபடி கேட்க, “நான் ஏன் தயங்க வேண்டும்.” என்று லவி படக்கென்று கேட்டாள். “ஓ… பயப்படுறியா?” என்று சங்கர் நக்கலாகக் கேட்க, வேகமாக அவன் அருகே சென்று, “நான் பயப்படுறேனா?” என்று தன் கண்களை உயர்த்தி, கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு லவி  கோபமாகக் கேட்டாள்.

‘இவள் பழைய லவி.’ என்ற எண்ணத்தோடு, உதட்டில் குறுநகையோடு அவளை ரசித்து, ‘ஆனால், நான் பழைய சங்கர் இல்லையே.’ என்று தன் மனதில் கூறிக்கொண்டு, “அப்ப நீ என்னைப் பத்தி நினைச்சதை சொல்லு.” என்று லவியிடம் சவால் விட்டான் சங்கர்.

“நான் உன்னைப் பற்றி எதுவும் யோசிக்கலை.” என்று கூறிக்கொண்டு தன் வேலைகளைச் செய்ய அவனிடமிருந்து ஒதுங்கி லவி சென்றுவிட, சங்கரும் தன் வேலைகளை முடித்துவிட்டு சிறிது நேரத்திற்குப் பின் சமையலறைக்குச் சென்று அவள் அருகே நின்று  லவிக்கு தேவையான உதவிகளைச் செய்து கொண்டிருந்தான்.

லவிக்கு சங்கர் உதவி செய்வது வசதியாக இருந்தாலும், அதை அவள் மனம் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை.

“இப்ப உனக்கு என்ன வேணும்?” என்று லவி அசட்டையாகக் கேட்க, “என்ன கேட்டாலும் தருவியா?” என்று கேட்பது சங்கரின் முறையாக மாறியது. ஆனால் லவி கேட்ட பொழுது இருந்த நக்கல் சங்கரின் குரலில் இல்லை. அவன் குரலில் சொல்ல முடியாத தாபம், ஏக்கம் இன்னும் பல உணர்ச்சிகள் இருக்க, லவி தன்னை சுதாரித்துக் கொண்டாள்.

“நான் உன்னைப் பத்தி என்ன நினச்சேன்னு தெரியணும். அது தானே?” என்று லவி தீவிரமாகக் கேட்க, ‘ஆம்…’ என்பது போல் தலை அசைத்தான் சங்கர்.

“நீ இந்த ஆறு வருஷத்தில் மாறிட்ட. ரொம்ப பேசுற. வாய் ரொம்ப நீளுது.” என்று லவி தொடர்ந்து கூற, அவளை இடைமறித்து  “நீயும் மாறிருக்க. முன்ன மாதிரி பேச மாட்டேங்குற. ரொம்ப பொறுப்பாகிட்ட.” என்று சங்கர் ஆழமான குரலில் கூறினான்.

“சொல்ல போனா உன்கிட்ட தான் இவ்வளவு பேசுறேன். ராஜ் கிட்ட நிறையப் பேசுவேன். அவனுக்கு என்னை விட்டா யார் இருக்கா? மத்தபடி பேசி என்ன பயன்? நான் பேசி நாடு திருந்த போகுதா? இல்லை இந்த சமுதாயம் திருந்த போகுதா? இல்லை மிஞ்சிமிஞ்சி நம்மளை சுத்தி உள்ளவங்கலாவது  மாறுவாங்களா?” என்று சாதாரணமாகப் பேச ஆரம்பித்து, சலிப்பாக முடித்தாள் லவி.

‘அவள் பேசட்டும்…’ என்ற எண்ணத்தோடு, சங்கர் லவியை மௌனமாகப் பார்க்க, “அவ்வுளவு ஏன்? பேசிப்பேசி என்ன பயன்? என் வாழ்க்கையைக் கூட நான் விரும்பியபடி வாழ முடியலைல? என்ன நாடு? என்ன பெண் சுதந்திரம்? பெண் விடுதலை பாரதியார் பாட்டோட போச்சு. என் கனவுகள் காற்றோட போச்சு.” என்று விரக்தியாக ஆரம்பித்து வெறுப்போடு முடித்தாள் லவி.

‘எதைச் சொல்லி இவளுக்குப் புரிய வைப்பேன். எதுவும் காற்றோட போகவில்லை. கனவுகள் காலம் தாழ்ந்தும் செல்லவில்லை என்று!’ என்று சங்கர் லவியை இயலாமையோடுப் பார்க்க, “எங்க அப்பா… எங்க அப்பா கூட நான் பேசினதை கேட்கலையே? என்று கூறிக் கொண்டு லவி அடுப்பிலிருந்து சற்று விலக, சங்கர் அந்த வேலையைத் தொடர்ந்தான்.

“நீயாவது நான் சொன்னதை கேட்ருக்கலாம். என் வாழ்க்கை இப்படி திசை மாறியிருக்காது.” என்று லவி சங்கரிடம், ‘நீ கூட கேட்கவில்லை’ என்ற ஆதங்கத்தோடு  கூற, “அன்னைக்கி சூழ்நிலை…” என்று சங்கர் தடுமாற, “ம்..ச்…” என்று சலிப்பாக உச்சு கொட்டி, “என் விதி…” என்று கூறி லவி அவ்விடத்தில் சராசரி பெண்ணாக மாறிப்போனாள்.

“டீ சாப்பிடு.” என்று சங்கர் லவிக்கு டீ கொடுக்க, லவி அவனிடம் டீயை வாங்கி ரசித்துக் குடிக்க ஆரம்பித்தாள்.

ஏதோ நினைவு வந்தவளாக, “பொறுப்பெல்லாம் ஒன்னும் பெருசா வரலை. அது போல அமைதியால்லாம் இல்லை. பழைய மாதிரி பேசுவேன். அதனால் என் கிட்ட ஜாக்கிரதையா பேசு.ராஜ்க்காக என்னைக் கொஞ்சம் மாத்திக்கிட்டேன். அவ்வுளவு தான்.” என்று டீயின் ருசிக்கிடையில் யோசனையாகப் பேசினாள் லவி.

“ராஜ்க்காக  எதை வேணாலும் செய்வ போலியே?’ என்று சங்கர் இருபொருள் படப் பேச, “எது வேணாலும் மாறும்… ஆனால் உன் மேல் இருக்கிற கோபம், வெறுப்பு இதெல்லாம் என் உயிர் உள்ள வரை மாறாது.” என்று லவி உறுதியாகக் கூற, லவியின் பேச்சை கண்டுகொள்ளாமல் “நான் இன்னைக்கி ராஜ்க்கு  ஸ்கூல் இன்டெர்வியூக்கு  அப்பொய்ன்டெமண்ட் புக் பண்ணிருக்கேன். ராஜைக் கிளம்புவோம்.” என்று கூறி சங்கர் லவியின் பேச்சைத் திசை திருப்பினான்.

“இன்னைகேவா?” என்று லவி ஆச்சர்யாமாக கேட்க, ராஜை எழுப்பினான் சங்கர்.

ராஜ் எழுந்து கொண்டு, “பாட்டி…” என்று சிணுங்க, “டேய்… பாட்டி கொஞ்ச நாள் கழிச்சி வருவாங்க டா…” என்று லவி கூற, “பாட்டி…” என்று மீண்டும் அழுதான் ராஜ்.

“எதுக்கு ராஜ்… பாட்டியை தேடுற? சொல்லு அப்பா செய்றேன்.” என்று சங்கர் ராஜிடம் சாமாதானம் பேச, “பாட்டி, எனக்குத் தினமும் கன்னத்தில் முத்தம் கொடுத்துத் தான் எழுப்புவாங்க.” என்று ராஜ் கூற, லவி ராஜை பதட்டமாகப் பார்த்தாள். ‘இதுக்கு எதுக்கு இவ இவ்வளவு பதட்டமாகுறா?’ என்றெண்ணியபடி,  “இதுக்கு எதுக்கு டா அழற? அப்பா குடுக்கிறேன்.” என்று சங்கர் ராஜின் கன்னத்தில் முத்தமிட, “அம்மாவுக்கு?” என்று ராஜ் கேள்வியாக நிறுத்த, “டேய்… உங்க அம்மாவே பரவால்லை போல. நீ கதற விடுற டா…” என்று சங்கர் முணுமுணுக்க, லவி சுவரோடு ஒட்டிக்கொண்டு செய்வதறியாமல் கைகளைப் பிசைந்தாள்.

“ஆ…” என்று ராஜ் மீண்டும் குரல் உயர்த்த, “டேய்… உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்துட்டேன்.” என்று லவி குழந்தையைக் கண்டிக்க, “விடு… பேசிக்கலாம்…” என்று சங்கர் லவிக்கும், ராஜுக்கும் இடையில் சமாதான கொடியைப் பறக்கவைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

“பாட்டி… எனக்கு முத்தம் கொடுத்து, அம்மாவுக்கும் முத்தம் கொடுத்து… நீ என்னைக்குமே எனக்குக் குழந்தை தான்! அப்படின்னு பாட்டி சொல்லுவாங்க.” என்று ராஜ் அழுத்தமாகக் கூற, லவி தன் தாயின் நினைவுகளில் தன் கண்களை இறுக மூடினாள்.

சங்கர், லவி அருகே சென்று அவள் நெற்றியில் தன் இதழ்களைப் பதித்து, “உங்க அம்மா என்னைக்குமே எனக்குக் குழந்தை தான் டா…” என்று கூற, லவி சங்கரை ஆழமாகப் பார்த்தாள்.

லவியின் பார்வையை எதிர் கொள்ளும் சக்தி இல்லாமல், சங்கர் தலை குனிந்து கொணடான்.  சங்கர் கண்கலங்க அவன்  கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் லவியின் பாதம் தொட்டு மன்னிப்பை யாசித்தது.

அங்கு மேலும் நிற்க இயலாமல்,  ராஜை தன் தோளில் தூக்கிக் கொண்டு அவனைக் கிளப்புவதில் மும்முரமானான் சங்கர். சங்கரின் மனதில் வருத்தம் மட்டுமில்லாமல் அடுத்து லவியின் செயல்பாட்டை குறித்த அச்சமும் சூழுந்து கொள்ள அவளை பார்ப்பதை சங்கர்  தவிர்த்தான் என்றும் கூறலாம். லவி அந்த இடத்தை விட்டு அசையாமல் ஸ்தம்பித்து நின்றாள்.

சங்கர் லவியின் இல்லத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை சரிவர, சற்று அவகாசம்  கொடுத்து நாம் நித்திலா யாதவை நோக்கிப் பயணிப்போம்.

சென்னையில்  நித்திலா அவர்கள் அறையில் யாதவின் வரவுக்காகக் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். யாதவ் உள்ளே நுழைந்தவுடன், “லவி பத்திரமா போய்ட்டாளா? சங்கர் கிட்ட பேசினீங்களா?” என்று நித்திலா பதட்டத்தோடும், அக்கறையோடும் கேட்க, “ஏன் அதை நீ கேட்க வேண்டியது தானே?” என்று யாதவ் தன் முகத்தைக் கழுவியபடியே கேட்க, “நான் லவி கிட்டப் பேசமாட்டேன். பெரியம்மா கிட்ட பேசினா ஆயிரம் கேள்வி வரும். இதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா?” என்று நித்திலா பரிதாபமாகக் கேட்டாள்.

“நீங்க இரண்டு பெரும் சின்ன புள்ளையா? பேசமாட்டேன்னு சண்டை போடுறதுக்கு?” என்று யாதவ் கேள்வியாக நிறுத்த, “எங்களுக்குள் சண்டை எல்லாம் இல்லை. நான் தான் அவ கிட்ட பேச மாட்டேன்.” என்று நித்திலா பிடிவாதமாகக் கூற, யாதவ் நித்திலாவை மேலும் கீழும் பார்த்தான்.

“ப்ளீஸ். இப்ப எதுக்கு தேவை இல்லாத பேச்சு? லவி பத்திரமா போய்ட்டாளா? ஹரி வாஷிங்டன் பக்கத்தில் தான் இருக்கான்னு நான் கேள்விப்பட்டேன்.” என்று நித்திலா கூற, சடாரென்று நித்திலா அருகே வந்தான் யாதவ். “லூசா நீ… அதை இப்ப சொல்ற? இத்தனை வருஷமா கேட்டத்துக்கு, அன்னைக்கி ராத்திரிக்கு அப்புறம் அவனைப் பற்றிய தகவலே இல்லைன்னு நீயும், லவியும் சொன்னீங்க?” என்று காட்டமாகக் கேட்டான் யாதவ்.

“இல்லை… இவ்வுளவு நாள் இல்லை, லவி கிளம்பரதுக்கு ரெண்டு நாள் முன்னாடி தான் தெரியும். லவியே இத்தனை வருசத்துக்கு அப்புறம் இப்ப தான் சங்கர் கிட்ட போறா? இதைச் சொல்லி அதை நிறுத்த வேண்டாமுன்னு தான் அமைதியா இருந்தேன்.” என்று நித்திலா தன் கண்களை சிமிட்டியபடி, “இரண்டு பேரும் சேர்ந்து என் உயிரையும், சங்கர் உயிரையும் நல்லா  எடுக்கறீங்க.” என்று யாதவ் கடுப்பாகக் கூற, அவர்கள் பேச்சு சத்தத்தைக் கேட்டு யாதவின் தயார் உள்ளே நுழைந்தார்.

“யாதவ். ஏண்டா அப்பாவி பொண்ணை திட்டுற?” என்று யாதவின் தாயார் கேட்க, “அத்தை… என் மேல தான் தப்பு.” என்று நித்திலா யாதவுக்கு சாதகமாகப் பேச, “நீ அவனை வீட்டுக் கொடுத்திராத…” என்று முனங்கியபடி அறையை விட்டு வெளியே சென்றார் யாதவின் தாயார்.

தன் மனைவியின் முகம் பார்த்து, “லவி பத்திரமா போய்ட்டா. எல்லாம் கூடிய சீக்கிரம் சரியாகிருமுன்னு நினைக்கிறேன்.” என்று யாதவ் இறங்கிய குரலில் கூற, “உங்களுக்கு இருக்கிற அக்கறை எனக்கு இருக்காதா?” என்று நித்திலா முறுக்கிக் கொண்டாள்.

நித்திலாவின் தலை கோதி, “எனக்கு இருக்கிறதை விட உனக்கு நிறைய அக்கறை இருக்குமுன்னு எனக்கு தெரியும். என் மனைவியை பத்தி எனக்கு தெரியாதா?” என்று இன்முகமாகக் கூற நித்திலா மெலிதாக புன்னகைத்தாள்.

“ஆனால், ஹரி ஏன் அமைதியானான்? அவன் என்ன ஆனான்? எங்கயோ இடிக்குதே…” என்று யோசனையோடு யாதவ் முணுமுணுக்க,  நித்திலா யாதவின் கேள்விகளில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து தலை அசைத்தாள்.

லவ்லி லவி வருவாள்…

 

error: Content is protected !!