Lovely Lavi – Episode 17

Lovely Lavi – Episode 17

 

அத்தியாயம் – 17

நித்திலா சில நிமிடங்கள் யோசனைக்குப் பின், “ரொம்ப கவலைப் பட வேண்டாம். லவி முன்ன மாதிரி இல்லை ரொம்ப மாறிட்டா.” என்று நித்திலா யாதவின் முகம் பார்த்துக் கூறினாள்.  யாதவ் தன் நமட்டை கடித்தபடி புருவம் உயர்த்தி நித்திலாவை நக்கலாகப் பார்க்க, “உண்மை தான்… கொஞ்சம் பொறுமையா தான் இப்ப இருக்கா…” என்று நித்திலா கூற, யாதவ் தன் தோள்களைக் குலுக்கிக் கொண்டு அவர்கள் அறையிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

அவன் முன் நின்றுகொண்டு, “நீங்களே இப்படி நினைக்கலாமா? லவி வாழ்க்கை சரியாக வேண்டாமா?” என்று நித்திலா கவலை தோய்ந்த குரலில் கூற, “சங்கர் பார்த்துப்பான்.” என்று யாதவ் தன் நெற்றியைத் தடவியபடியே கூற, “சங்கருக்கு மட்டும்  லவி மேல  அக்கறை இருக்கா?” என்று சலிப்பாக கேட்டாள் நித்திலா.

“இல்லைன்னு நீ நினைக்கறியா?” என்று யாதவ் ஆழமான குரலில் கேட்க, “இருந்தா… லவி தப்பே பண்ணிருந்தாலும், இப்படி தான் வருஷ கணக்கா விட்டுட்டு  போறதா?” என்று நித்திலா சினத்தோடு கேட்க, “அவுங்களுக்குள்ள என்ன நடந்ததுன்னு நமக்குத் தெரியாது நித்திலா. தெரியாமல் நாம எதுவும் பேச கூடாது.” என்று யாதவ் கண்டிப்பாகக் கூறினான். “நீங்க உங்க நண்பரை வீட்டுக் கொடுக்க மாட்டீங்க.” என்று நித்திலா சற்று பொறுமையோடும், சற்று பெருமையாகவும் கூற, “நீ லவியை வீட்டுக் கொடுப்பியா?” என்று யாதவ் தன் ஒற்றை விரலால் புருவத்தை தடவியபடி கேட்க, நித்திலா மறுப்பாக தலை அசைத்தாள்.

யாதவ் இரவு உணவை நோக்கிச் செல்ல, நாம் யூ.எஸ் நோக்கிப் பயணிப்போம்.

சங்கர், லவி, ராஜ் காலை நேரப் பரபரப்போடு செயல் பட்டுக் கொண்டிருந்தனர்.

சங்கர் இடையிடையே லவியை பார்த்தபடி ராஜுக்கு உணவு கொடுக்க, லவி சங்கரைக் கண்டும் காணாதது போல் தன் வேலையைச் செய்து கொண்டிருந்தாள்.

‘இவனுக்கு எப்படி இத்தனை தைரியம் வந்தது?’ என்ற கேள்வி லவியை வண்டாக குடைந்தது. “இத்தனை வருட இடைவெளியை அவன் உணர்ந்தது போல் தெரியவில்லையே? எங்கோ எதுவோ சரியில்லை.’ என்றெண்ணியபடி சங்கருக்கு உணவு வைத்து தானும் உண்ண ஆரம்பித்தாள் லவி.

மூவரும் கிளம்ப, சங்கர் லவிக்கும், ராஜ்க்கும் தேவையான ஜெர்கின், சாக்ஸ், க்ளோவ்ஸ் அனைத்தையும் கொடுக்க… லவி அவளுக்கு அணிந்து கொள்ள, சங்கர் ராஜ்க்கு அணிவித்தான்.

லவி சங்கர் வாங்கி கொடுத்த இயர் மப்ஸ் (குளிருக்குக் காதில் அணிந்து கொள்வது) அது சற்று வித்தியாசமான தோற்றத்தில் இருக்க, அதைத் திறக்க தெரியாமல் லவி சற்று தடுமாறினாள்.

சங்கர், ராஜ் இருவரும் கிளம்பிவிட, சங்கரிடம் கேட்க அவள் தன்மானம் இடம் கொடுக்காமல், லவி வெளியே செல்ல, “நில்லு… தலையில் போடாமல் வெளிய போகாத… ரொம்ப குளிரும்… நீ தாங்க  மட்ட…” என்று சங்கர் லவியை எச்சரித்தான்.

“எனக்கு யாரும் அட்வைஸ் பண்ண வேண்டாம். அது தான் ஜெர்கின், க்ளோவ்ஸ், சாக்ஸ் எல்லாம் போட்ருக்கேன்ல. இந்த குளிரெல்லாம் என்னை ஒன்னும் செய்யாது.” என்று கூறிக்கொண்டு வீராப்பாகக் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றாள் லவி.

சங்கர் தோளைக் குலுக்கிக் கொண்டு, ராஜ் பள்ளிக்குத் தேவையான கோப்புகளைச் சரி பார்த்துக் கொண்டான்.

வெளியே சென்ற லவி, குளிரில் வெடவெடத்து நின்றாள்.

‘அட பாவிகளா! குளிரும்ன்னு சொன்னாய்ங்க… குளிரில் செத்துருவோமுன்னு சொல்லவே இல்லியே. கொலைகார பாவிகள்.’ என்று அனைவரையும் நிந்தித்தபடி வேகமாக வீட்டிற்குள் நுழைந்தாள் லவி.

அவள் நிறத்திற்குக் கன்னங்கள் இன்னும் சிவந்து, மூக்கு நுனி மேலும் சிவந்து, கண்களை வேகமாக சிம்மிட்டியடி வீட்டிற்குள் உள்ளே நுழைந்தாள் லவி.

லவியின் உதடுகள் குளிரில் தடதட தடதட தடதட எனத் துடிக்க, அவள் அதரங்கள் எழுப்பிய சத்தத்தில் அவளைப் பார்த்தான் சங்கர்.

லவி குளிரில் வெடவெடக்க சிவந்த அவள் முகம் அவளுக்கு அழகைக் கூட்ட, சங்கர் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.

“அம்மா… நீங்க அழகா இருக்கீங்க…” என்று லவியின் கோலத்தைப் பார்த்து ராஜ் கூற, சங்கர் பக்கென்று சிரித்து விட்டான்.

“நான் குளிரில் நடுங்கிகிட்டு இருக்கேன். அப்பாவுக்கும், பையனுக்கும் என் நிலைமையைப் பார்த்துச் சிரிப்பா இருக்கா?” என்று லவி உதடுகளின் தடதடக்கும் சத்தத்துக்கு இடையிலும் அவர்களிடம் கோபமாகக் கேட்டாள் லவி.

“இல்லை மா…” என்று ராஜ் ஏதோ ஆரம்பிக்க, “நான் செத்தா… உங்க எல்லாருக்கும் இன்னும் நிம்மதி போல?” என்று லவி இன்னும் காட்டமாக அவளைப் பார்த்து சங்கர் சிரித்ததில் லவி கடுப்பாகக் கூற, அவள் உதடுகளை தன் கைகளால் மூடி மறுப்பாகத் தலை அசைத்தான் சங்கர்.

லவி சங்கரை பார்க்க, “போகக்கூடாதுன்னு சொல்லியும் போனது நீ… குளிரில் முகம் சிவந்து நீ அழகா இருந்தது நிஜம். குழந்தைக்கு பொய் சொல்லத் தெரியாது. உண்மையை சொல்லிட்டான். இனி இப்படி பேசாத.” என்று கண்டிப்பாகக் கூறி லவியை ஆழமாகப் பார்த்தான் சங்கர்.

“வெட்கத்தில் உன் முகம் சிவந்து நான் பார்த்ததில்லை. குளிரில் சிவந்து பார்த்ததும் நான்…” என்று தன் பேச்சு  லவிக்கு மட்டும் கேட்கும் படி அவள் காதில் கிசுகிசுத்து வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்தினான் சங்கர்.

‘சங்கரின் கண்களில் தெரிவது என்ன? கண்டிப்பா? இல்லை கெஞ்சலா?’ இதற்கு மேல் யோசிக்கத் தெரியாமல் லவி தன் தலையைக் குலுக்கிக் கொண்டாள்.

அங்கிருந்த இயர் மப்ஸ் யை எடுத்து, அதைத் திறந்து லவிக்கு அணிவித்தான் சங்கர்.

லவி முகத்தைச் சுழிக்க, “கொஞ்சம் டைட்டா இருக்கும். அப்ப தான் குளிருக்குச் சரியா இருக்கும். நேரம் செல்ல செல்ல சரியாகிரும்.” என்று கூற, லவி வேறு வழியின்றி தலை அசைத்தாள்.

ராஜ் காரில் பின்னே அமர, லவி அவனருகில் செல்ல… “ராஜ். நீ பிக் பாய் தானே தனியா உட்கார்ந்துப்ப  தானே?” என்று சங்கர் கேட்க. “ஆமா அப்பா.” என்று சமத்தாகக் கூறினான் ராஜ்.

லவி சங்கரைக் கோபமாக முறைக்க, “குழந்தையை ரொம்ப பொத்தி பொத்தி வைக்கக் கூடாது.” என்று சங்கர் தீவிரமாகக் கூற, “ம்.. ச்..” என்று குரல் எழுப்பி, லவி முன்னே வந்தமர்ந்தாள்.

‘இவ ஒருத்தன் எப்ப பாரு அட்வைஸ் பண்ணிட்டு.’ என்று கடுப்பாக எண்ணியபடி, லவி அமரந்திக்க, “கார் சீட் போட தெரியுமா? இல்லை போட்டு விடணுமா?” என்று சங்கர் கேலியாக கேட்க, லவி தன் பற்களைக் கடித்தபடி படக்கென்று கார் சீட் பெல்டை போட்டுக் கொண்டாள்.

“ஜாக்கிரதை ஏற்கனவே குளிர் ஜாஸ்த்தி. ரொம்ப பல்லைக் கடிக்காத பல் கீழ விழுந்திரும்.” என்று சங்கர் அக்கறை போல் நகைச்சுவையாகக் கூற, “நான் பின்னாடியே உக்காந்துக்குறேன்.” என்று லவி கூற, “நான் டிரைவர் இல்லை. நீ உன் இஷ்டப்படி பின்னாடி உட்கார! நீ என் பக்கத்தில் தான் உட்காரனும்.” என்று சங்கர் லவிக்கு மட்டும் கேட்கும்படி கண்டிப்போடு கூற, “நான் உன் தயவில் வாழறேன்னு நினைப்பா. நான் வேற வழி இல்லாமலோ… வாழ வழி இல்லாமலோ இங்க வரலை. ஆறு வருஷமா தனியா வாழ தெரிஞ்ச எனக்கு… அஞ்சு வருஷமா பிள்ளையைத் தனியா பிள்ளையை வளர்க்க தெரிஞ்ச எனக்கு இப்ப வாழ தெரியாதா? இல்லை முடியாதா?” என்று சங்கருக்கு மட்டும் கேட்கும் படி சண்டைக்குத் தயாரானாள் லவி.

“குழந்தை அப்பா இல்லாமல் வளர நான் விட மாட்டேன்.” என்று உறுதியாக ஒலித்தது சங்கரின் குரல். “குழந்தை மேல் எனக்கில்லாத உரிமையா?” என்று லவி உரிமையோடுக் கேட்க, “எனக்கும் அதே உரிமை இருக்கு.” என்று சங்கர் அழுத்தமாகக் கூற, கண்களில் வலியோடும், ஏமாற்றத்தோடும் சங்கரை மௌனமாகப் பார்த்தாள் லவி.

லவி எதுவும் பேசாமல் மௌனம் காக்க, சங்கர் தன் கவனத்தைச் சாலையிலிருந்து திருப்பி லவியை பார்த்தான்.

லவியின் கண்கள் பல உணர்ச்சிகளைப் பிரதிபலிக்க, “நாம் ராஜுக்காகச் சண்டை போடாம இருக்கலாமே. ராஜ் உன்னை மாதிரி அம்மா, அப்பாவோட வளரட்டும்.” என்று சங்கர் கெஞ்சுதலாகக் கேட்க, லவி மௌனமாக அமர்ந்து கொண்டு தன் கவனத்தைச் சாலையின் பக்கம் திருப்பினாள்.

இவர்கள் உரையாடல் எதுவுமறியாமல் ராஜ் சாலையைப் பார்த்தபடி பயணித்துக் கொண்டிருந்தான்.

இருவரின் மனதிலும் அலையடிக்க, காரில் மௌனம் நிலவியது.

பள்ளி இன்டெர்வியூக்கு செல்ல,  அவர்கள் ராஜை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

லவி பதட்டமாகக் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். சங்கர் லவிக்கு தண்ணீர் கொடுக்க, அவளுக்கு அந்த தண்ணீர் தேவையாக இருக்க, அதைக் குடித்துவிட்டு, “சாதரணமா இவ்வளவு பதட்டம் இருக்காது. ஆனால், ராஜ்க்கு இங்க பேசுற இங்கிலிஷ் புரியாது. என்ன பண்ணுவான்?” என்று லவி கேட்க, “அதெல்லாம் அவங்க பார்த்துப்பாங்க.” என்று சங்கர் சமாதானமாகக் கூறினான்.

“ஒருவேளை இந்த ஸ்கூலில் சீட் கிடைக்கலைன்னா. வேற ஸ்கூலில் சீட் குடுப்பாங்களா?” என்று லவி பதட்டமாக கேட்க, “இங்க அந்த பிரச்சனை எல்லாம் கிடையாது. அவங்க தேவையான எக்ஸ்ட்ரா கிளாஸ் எல்லாம் குடுப்பாங்க.  கண்டிப்பா சேர்த்துப்பாங்க. அவன் எப்படி இருக்கானு பாக்கறதுக்கு தான் இந்த இன்டெர்வியூ. அப்படி இங்க சரி பட்டு வரலைனாலும், அவங்களே வேற எந்த ஸ்கூலுனு சொல்லிருவாங்க.” என்று சங்கர் உறுதியாகக் கூற, “இல்லை…” என்று லவி மேலும் பேச ஆரம்பித்தாள்.

“அஞ்சு வயசு பையன் ஸ்கூலுக்கு நீ இப்படிப் பதறலாம்? ஆனால்   இருபத்தி ஒரு வயசு பொண்ணோட அப்பா பதட்டபட்டா தப்பா?” என்று சங்கர் ஆழமான குரலில் கேட்க, சங்கரை சரேலென்று திரும்பிப் பார்த்தாள் லவி.

லவியின் கண்களில் கோபம் கொப்பளிக்க… லவியின் கோபக்கனலை அணைக்கும் தன்மையோடு லவியை பொறுமையாகப் பார்த்தான் சங்கர்.

“என்னைக் குத்தி காட்டுறியா?” என்று லவி கேட்க, “இல்லை… நான் நடப்பைச் சொன்னேன்… இயல்பைச் சொன்னேன்.” என்று சங்கர் மெதுவாக கூற, “லூசா நீ. சின்ன பையன் பேசுறது கூட புரியாத இடதுக்கு போறதும். நானும் ஒண்னா?” என்று லவி கடுப்பாகக் கேட்க, ‘இல்லை… உனக்கு அதீத பாதுகாப்பு வேண்டும்.’ என்று எப்படிச் சொல்வது என்று புரியாமல், சங்கர் அவளைப் பரிதாபமாகப் பார்த்தான்.

சங்கர் கூற வருவதைப் புரிந்தவள் போல் லவி பேச ஆரம்பித்தாள்.

“பதட்டமா இருந்தா பாதுகாப்பு கொடுத்திருக்கணும். பொத்தி வைக்கக் கூடாது.” என்று ஏளன சிரிப்போடு கூறினாள் லவி.

“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்

றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்

யாரும் மாயவில்லை…அந்த ஏட்டுக்குப் பதிலா அது சோசியல் மீடியாவா மாறி இருக்கு அவ்வுளவு தான். ” என்று லவி வலியோடுக் கூற, அவள் கூறுவதில் இருக்கும் உண்மையைச் சிந்தித்தான் சங்கர்.

‘ஆண்களுக்கு இல்லாத கட்டுப்பாடு பெண்களுக்கு இருப்பது ஏனோ?’ என்ற லவியின் ஆதங்கத்தை சங்கரால் புரிந்து கொள்ள முடிந்தது.

“வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ மென்ற

விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்… ” இதைக் கூறி லவி நக்கலாகச் சிரித்தாள்.

‘இவள் இதற்கு என்ன விளக்கம் கூறுவாளோ?’ என்றஞ்சி சங்கர் லவியை பரிதாபமாகப் பார்க்க, “எந்த விந்தை மனிதரும் தலை கவிழலை. பெண்கள் தான் தலை கவிழுந்து நிக்கறாங்க. ஒரு சின்ன பிரச்சனை ஒரு பொண்ணுக்கு வந்திருச்சுனா, அவளுக்கு உடனே கல்யாணம் பண்ணி வச்சி வீட்டில் அடைச்சு வச்சராங்க. அவளுக்கு பிடிச்சிருக்கா? இல்லை அவனுக்கு பிடிச்சிருக்கா? இதெல்லாம் கேட்கறதே இல்லை. கல்யாணம் பண்ணி வச்சி, அவ படிப்பு, அவ கனவு எல்லாத்தையும் அழிச்சி… அவளை வீட்டில் புட்டி வைக்கும் விந்தை மனிதர்கள் தான் இருக்கிறாங்க.” என்று தன் வாழ்வின் இழப்பை ஏமாற்றமாகப் புலம்பினாள் லவி.

“ஆனால், நான் என் பையனுக்குக் கொடுக்க நினைக்கிறது ஒரு பாதுகாப்பு. அவ்வுளவு தான். எனக்குப் பிறந்தது பொண்ணா இருந்தா, தப்பு நடந்தா… அட ச்சீ… தப்பு பண்ணவன் தலை நிமிர்ந்து நிக்கறான். நீ ஏன் டீ தலை குனிந்து உள்ள நிக்கறன்னு கேட்டு தலை நிமிர வச்சிருப்பேன். நிச்சயம் அவசர கல்யாணம் செஞ்சு அவ வாழ்க்கையை அவ கனவைப் பாழாக்கமாட்டேன்.” என்று லவி பேசிக்கொண்டிருக்கையில் அவள் மறைக்க நினைத்த வலியை அவள் முகம் வெளிப்படுத்த, சங்கர் தன் சட்டைப் பையிலிருந்து கைகளை நீட்ட லவி அவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.

லவ்லி லவி வருவாள்…

 

error: Content is protected !!