Lovely Lavi – Episode 18
Lovely Lavi – Episode 18
அத்தியாயம் – 18
லவி சற்று காட்ட சாட்டமாகப் பேச, அவள் முகம் வலியை வெளிப்படுத்த சங்கர் அவசரமாக தன் சட்டை பையிலிருந்து மாத்திரைகளை நீட்ட லவி அவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.
அவள் அதிர்ச்சியைச் சிறிதும் சட்டை செய்யாதவன் போல், “நேத்து நீ மாத்திரை சாப்பிட்டப்ப பார்த்தேன். நீ இன்னைக்கி சாப்பிடலை. அது தான் எதுக்கும் இருக்கட்டுமுன்னு எடுத்து வச்சேன்.” என்று சங்கர் இயல்பாகச் சமாதானம் கூற, லவி மாத்திரையைக் கையில் வாங்கிக் கொள்ள, தண்ணீரை நீட்டினான் சங்கர்.
லவி மாத்திரையைப் போட்டுக் கொண்டு, அங்கிருந்த நாற்காலியில் சாய்வாக அமர்ந்தாள். அவள் குணத்திற்கு நேர்மாறாக, சங்கரைச் சற்று பதட்டமாகப் பார்த்தாள். “அது வெறும் சத்து மாத்திரை தான்.” என்று எங்கோ பார்த்தபடி லவி கூற, தலை அசைத்துக் கேட்டுக் கொண்டான் சங்கர்.
சில நொடிகள் அமைதிக்குப் பின், ” பழைய மாதிரி, நீ நீயா இரு. நான் உன்னை எதுவும் கேட்க மாட்டேன். நீ இங்க என் கூட இருந்தாலும், உன் பர்சனல் ஸ்பெஸசை நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். உனக்கா என் கிட்ட என்னைக்கி ஏதாவது சொல்லணுமுன்னு தோணுதோ அன்னைக்கி சொல்லு. நான் காத்திருப்பேன்.” என்று கூறி லவி பதில் கூறுமுன் அங்கிருந்து எழுந்து சற்று ஓரமாக அமர்ந்து கொண்டான்.
‘இவனிடம் நான் சொல்ல வேண்டுமா? எதற்கு?’ என்று லவி சிந்திக்க, சங்கர் லவியை அக்கறையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
லவியின் கண்கள் அவன் கண்களைச் சந்திக்க, அதில் சங்கரின் தவிப்பைக் கண்ட லவி திடுக்கிட்டாள்.
முதல் முறையாக லவியின் மனதில் அப்படியொரு கேள்வி தோன்றியது, ‘நான் ஏன் இவனை வெறுத்தேன்?’
‘நித்திலா சொல்வது போல் பொறாமை உணர்வு தானோ?’ என்ற எண்ணம் தோன்ற, லவியின் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது. லவியின் முகத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சங்கர், “இப்ப பரவாயில்லையா?” என்று சற்று ஆசுவாச மூச்சோடு கேட்டான் சங்கர்.
“என் மேல் உனக்கு என்ன அக்கறை?” என்று லவி முறுக்கிக் கொள்ள, “இங்க மருத்துவச் செலவு ரொம்ப ஜாஸ்தி. அது தான் அக்கறை.” என்று சங்கர் முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு, கண்களில் குறும்போடு கூற, லவி அவனைக் கோபமாக முறைத்தாள்.
சங்கரின் புன்னகை விரிய, “அப்படி எல்லாம் கஷ்டப்பட்டு என்னையும் என் மகனையும் இங்க வச்சிக்க வேண்டாம். என்னை இந்தியாவுக்கு அனுப்பிரு.” என்று லவி தலை அசைத்துக் கூற, “கூழோ, கஞ்சியோ, நடராஜா பஸ்ஸோ, சைக்கிள் ரிஃஷாவோ ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோதி.” என்று சங்கர் கூற, “சங்கர். நீ ரொம்ப பேசுற… இது நல்லதுக்கில்லை.” என்று லவி தன் ஆள் காட்டி விரலை உயர்த்தி சிரித்த முகமாக எச்சரித்தாள்.
“நீ எப்பவும் இப்படியே இருக்கனும்.” என்று சங்கர் ஆழமான குரலில் கூற, அவனை ஆழமாகப் பார்த்தாள் லவி.
அப்பொழுது ராஜ் வெளியே வர, லவி அவனை நோக்கி வேகமாக ஓடினாள்.
புது மனித தாக்கமோ? இல்லை தந்தையின் ஏக்கமோ ராஜ் வேகமாக சங்கர் அருகே வந்து நடந்ததைக் கூற, லவி இருவரையும் ஏக்கமாகப் பார்த்தாள்.
நொடிப் பொழுதில் லவியின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட சங்கர், “ராஜ். அம்மா தானே எல்லாமே சொல்லி குடுத்தாங்க? என்கிட்டே சொல்ற?” என்று சங்கர் ராஜை லவியின் பக்கம் அனுப்பிவிட்டு ராஜ் சம்பந்தமான வேலைகளைக் கவனிக்க அங்கிருந்து சென்றான்.
‘இவன் யார் என் முகம் பார்த்து எனக்காக விட்டுக் கொடுக்க?’ என்ற கேள்வி மனதில் தோன்றினாலும், ராஜ் விஷயத்தில் லவி அவனை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க தயங்கவில்லை.
“ராஜ்… இப்பவே ஸ்கூலுக்கு போக சொல்லிட்டாங்க.” என்று சங்கர் ராஜைக் கொஞ்சியபடியே கூற, “அதுக்குல்லையா?” என்று லவி ஆச்சர்யாமாக கேட்டாள். லவியின் மனக்கீனம் எல்லாம் காற்றோடு போனது.
“ராஜ்… இன்னைக்கி அம்மா உனக்காக வச்சிருக்கிற பையோட ஸ்கூலுக்கு போ… நானும் அம்மாவும் இன்னைக்கி உனக்கு வேற புது பேக், வாட்டர் பாட்டில் எல்லாம் வாங்கறோம்.” என்று சங்கர் உற்சாகமாகக் கூற, ‘இவன் இத்தனை வருஷம் எப்படி ஒதுங்கி இருந்தான்? உண்மையில் குழந்தை விஷயம் இப்பொழுது தான் இவனுக்கு தெரியுமா?’ என்று சிந்தித்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள் லவி.
குழந்தையைப் பள்ளியில் இறக்கி விட்டு, தேவையான வேலைகளை முடித்துவிட்டு… இருவர் மட்டுமே காரில் அமர்ந்திருக்க… “நீ ஆபீஸ் போக வேண்டாமா?” என்று லவி சாலையைப் பார்த்தபடி கேட்டாள்.
“ஒரு வாரம் லீவு போட்டிருக்கேன். ஒரு வாரம் உன் கூடத் தான்.” என்று சங்கர் சீட்டியடித்தபடி கூற, “ஆ…” என்று லவி அதிர்ச்சியாகக் கேட்க, “உங்க கூட அப்படின்னு சொல்ல வந்தேன்.” என்று தன் உதட்டை மடித்து தன் சிரிப்பை அடக்கியபடியே சமாளித்தான் சங்கர்.
கார் நேராக வால்மார்ட் நோக்கிச் சென்றது. காரை நிறுத்திவிட்டு, சங்கர் கடையை நோக்கி நடக்க, லவி வேடிக்கை பார்த்தபடி நடந்தாள்.
“ஊர் நல்லாருக்கா?” என்று சங்கர் லவியின் முகத்தை பார்த்தபடி கேட்க, “நல்லா தான் இருக்கு. இந்த குளுரு இல்லைனா இன்னும் நல்லாருக்கும்.” என்று லவி குளிரில் நடுங்கியபடி கூற, “இன்னும் கொஞ்ச நாள் தான் சரியாகிரும்.” என்று கூறி அவளோடு நடந்தான் சங்கர்.
கடைக்குள் சென்றவுடன், ஹீட்டரின் பயனால் லவி நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.
முப்பரிமாண வடிவம் கொண்ட பொம்மைகளோடு இருந்த பைகளைப் பார்த்து, “ராஜ்க்கு இது ரொம்ப பிடிக்கும்.” என்று ஆர்வமாக லவி கண்மலர்த்தி கூற, ‘உனக்கு என்ன பிடிக்கும்?’ என்ற கேள்வியை மனதில் தேக்கியபடி லவியை பார்த்தான் சங்கர்.
லவி சங்கரைக் கவனிக்கவில்லை. ராஜுக்குத் தேவையான பொருட்களை ஆர்வமாக வாங்கிக் கொண்டிருந்தாள் லவி.
“ஹே… சங்கர் இங்க என்ன பண்ற? ஆபிஸ் போகலை.” என்று சங்கரின் கைகளைக் குலுக்கியபடி அவர்களின் கவனத்தை கலைத்தது ஓர் பெண் குரல்.
லவி அந்த பெண்ணை மேலும் கீழும் பார்த்தாள். ‘ஊரில் என்னைப் பார்த்தா எட்டுத் திக்கு ஓடுவான். இங்க பாரேன் ஸ்டைலா கை குலுக்குறான்.’ என்று எண்ணியபடி அவர்கள் இருவரையும் பார்த்தாள் லவி.
“சுமி… மீட் மை பெட்டெர் ஹஃப்…” என்று சங்கர் லவியை அறிமுகப்படுத்த, லவியை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் சுமி என்றழைக்கப்பட்ட சுமித்ரா.
“டேய்… இத்தனை வருஷமா உன்னை கரெக்ட் பண்ண நான் ட்ரை பண்றனே… ஒரு வார்த்தை சொன்னியாடா நீ மெரிட்ன்னு. கல்லூனி மங்கன் மாதிரி மறைச்சிட்ட?” என்று கேள்வியாக சுமித்ரா நிறுத்த, ‘உண்மை தான்… இவன் கல்லூனி மங்கன் தான்.’ என்று மனதிற்குள் எண்ணியபடி அமைதியாக நின்றாள் லவி. ‘தேவதை மாதிரி மனைவி இருக்கிறதைச் சொல்லவே இல்லை. ரொம்ப அழகா இருக்காங்க. அது தான் நீ வேற யாரையும் திரும்பி கூட பாக்கறதில்லையோ?” என்று சுமித்ரா சங்கரிடம் குறை பட்டாள்.
சுமித்ரா லவியிடம் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, “லவி, உங்க ஹஸ்பண்ட்க்கு ஆஃபீசிலே நிறைய லேடீஸ் பான்ஸ்.” என்று சுமித்ரா லவியிடம் கண்களை உருட்டிக் கூற, லவி எந்தவித சலனமுமின்றி புன்னகைத்தாள்.
“அட… உங்களுக்கு சங்கரைப் பத்தி நல்லா தெரிஞ்சிருக்கே? ஹி இஸ் எ ஜெம் ஆப் எ பெர்சன். அது தான் அவரை இங்க தனியா விட்டுருக்கீங்க.” என்று சுமித்ரா பேசிக்கொண்டே செல்ல, “நீ இன்னைக்கி ஆபீஸ் போகலையா?” என்று சுமித்ராவின் பேச்சை இடைமறித்து தோரணையாகக் கேட்டான் சங்கர்.
“சங்கர் உன் மனைவி ரொம்ப அமைதியா? இல்லை நீ மிரட்டி வச்சிருக்கியா?” என்று சுமித்ரா கேட்க, ‘நான் இவளை மிரட்ட… என் கதை தெரியாம இவை வேற லொடலொடக்குறாளே?’ என்ற யோசனையோடு சங்கர் மௌனமாக நின்றான்.
“லவி நீங்க சொல்லுங்க. சங்கர் ஏன் உங்களை இங்க இத்தனை வருஷம் கூட்டிட்டு வரலை?” என்று நேரடியாக லவியிடம் கேட்டாள் சுமித்ரா.
“பையனுக்கு இப்ப தான் அஞ்சு வயசு ஆகுது. கொஞ்சம் வளர்ந்த பிறகு கூட்டிட்டு வரலாமுன்னு தான். ஊருல எல்லாரும் கூட இருப்பாங்க. இங்க நான் தானே குழந்தையை தனியா பார்க்கணும்.” என்று லவி சரளாமாக கூற, ‘பாவி. இன்னமும் பொய் சொல்லும் கலை இவளிடம் தாராளாமாக இருக்கு.’ என்று சிந்தித்தபடி லவியை பார்த்தான் சங்கர்.
“அஞ்சு வயசு பையனா?” என்று சுமித்ரா மீண்டும் வாயைப் பிளந்து சில பல கேள்விகளோடு, பேச்சை முடித்துக் கொண்டு கிளம்பினாள் சுமித்ரா.
ராஜ்க்கு தேவையானதை வாங்கிக் கொண்டு, லவி கிளம்ப, “முதமுதலா கடைக்கு வந்திருக்கோம் உனக்கு எதாவது வேணுமா?” என்று சங்கர் லவியிடம் தன் உணர்ச்சிகளை மறைத்து கேட்க, “என்ன மௌன ராகம், மோகன் மாதிரி கேட்கற? நான் மௌன ராகம் ரேவதி மாதிரி டைவர்ஸ் கேட்கட்டுமா? முதல்முதலா கேட்டதுன்னு குடுத்திருவியா?” என்று லவி புருவம் உயர்த்தி கேலியாகக் கேட்க, “நான் அவ்வுளவு நல்லவன் இல்லை…” என்று கண் சிமிட்டி சிரித்த முகமாகக் கூறினான் சங்கர்.
‘இவனை நல்லவன் இல்லை என்று கூற முடியுமா? ஆனால் இவனை என்னால் என்றாவது மன்னிக்க முடியுமா?’ என்ற யோசனையோடு ட்ராலியை தள்ளியபடி நடந்தாள் லவி.
“இங்க வாயேன்.” என்று சங்கர் லவியை அழைக்க, லவி அவனருகே சென்றாள்.
“இந்த மிடி நல்லாருக்கா?” என்று சங்கர் ஆர்வமாகக் கேட்க, “யாருக்கு?” என்று விட்டெறியாக கேட்டாள் லவி.
“அங்க போற அந்த வெள்ளைக்கார பொண்ணுக்கு. அந்த பொண்ணுக்கு செட் ஆகுமா? நீ என்ன நினைக்குற?” என்று சங்கர் தீவிரமாகக் கேட்க, “இப்படி தான் ஆறு வருசமா ஜாலியா சைட் அடிச்சிட்டு இருந்தியா? அது தான் உனக்கு கல்யாணம் ஆனதை யார்கிட்டயும் சொல்லலையா?” என்று லவி கடையை நோட்டம் விட்டபடி கேட்க, ‘இவள் மனதில் என்ன நினைக்கிறாள்?’ என்று சிந்தித்தபடி சங்கர் அவளை மௌனமாக பார்த்தான்.
“உன்கிட்ட தான் கேட்கறேன்… நீ ஏன் உனக்குக் கல்யாணமானதை இங்க யார்கிட்டயும் சொல்லலை?” என்று சங்கரின் முகம் பார்த்துக் கேட்டாள் லவி.
“சொல்லணும்னு அவசியம் வரலை.” என்று சங்கர் லவியின் முகம் பார்க்காமல் கூற, “சொல்லணுமுன்னு அவசியம் வரலைனா?” என்று லவி அழுத்தமாக கேட்க, அங்கிருந்து நகர்ந்து சென்றான் சங்கர்.
அந்த நேரத்தில், அத்தனை கூட்டம் இல்லாத கடையில் இவர்களைக் கவனிக்க யாருமில்லை.
அவனைக் கைபிடித்து நிறுத்தினாள் லவி, “அப்படினா?” என்று லவி அவன் முன் பிடிவாதமாக நின்றாள். சிறு வயது முதல், அவன் முன் பிடிவாதமாக நிற்கும் லவி இன்றும் அப்படியே இருப்பது போன்ற எண்ணமே சங்கருக்குத் தோன்றியது.
லவி பதிலுக்காகக் காத்திருக்க, “இந்த சமுதாயத்தில் கணவன் இல்லாம மனைவி வாழறது எவ்வளவு கஷ்டமோ. அதே கஷ்டம் மனைவி இல்லாமல் வாழற கணவன்மார்களுக்கும் இந்த சமுதாயத்தில் உண்டு. பெண்கள் மேல இரக்கப்படுற இந்த சமுதாயம் ஆண்களை பார்த்து இரக்கப்படுறதில்லை. கல்யாணம் ஆகிருச்சுன்னு சொன்னா, நீ எப்ப வருவ? அப்படி இப்படின்னு ஆயிரம் கேள்வி வரும். என் கிட்ட பல கேள்விகளுக்கு பதிலில்லை. அதனால் தான் சொல்லலை.” என்று அழுத்தமாக கூறினான் சங்கர்.
“நான் தான் உன்னை டிவோர்ஸ் பண்றேன்னு கையெழுத்துப் போட்டு கொடுத்தேன்ல்ல? பேசாம வேற கல்யாணம் பண்ண வேண்டியது தானே?” என்று காட்டமாகக் கேட்டாள் லவி.
“இந்த ஆறு வருஷத்தில் நீ என்னை ஒரு தடவை கூட நினைக்கலைன்னு சொல்லு. நான் இப்ப பண்றேன் உன்னை டிவோர்ஸ்.” என்று சங்கர் உணர்ச்சி பெருக்கோடு கூற, லவி அவனை மௌனமாக பார்த்தாள்.
“சொல்லு ஆறு வருஷத்தில் என்னை நீ நினைச்சியா நினைக்கலையா?” என்று லவியை கூர்மையாகப் பார்த்தபடி கேட்டான் சங்கர்.
லவ்லி லவி வருவாள்…