Lovely Lavi – Episode 19

 

அத்தியாயம் – 19

சங்கர் லவியை பார்த்து கூர்மையாகக் கேட்க, “உன்னை நினைக்காமல் என்னால் இருக்க முடியுமா? ஒவ்வொரு நொடியும் நான் உன்னை நினைப்பேன். அன்னைக்கி அப்பா, கல்யாணம் பத்தி கேட்டப்ப, நான் ஒரு சூழ்நிலை கைதி. எல்லாரும் என்னைத் தப்பான கண்ணோட்டத்தில் பார்த்திட்டு இருந்தாங்க. நான் மறுத்தா பெரிய பிரச்சனை  ஆகியிருக்கும். ஆனால், நீ மறுத்திருக்கலாமே? லவிக்கு என்னை பிடிக்காதுன்னு சொல்லி மறுத்திருக்கலாமே? எல்லார் வாழ்க்கையும் நல்லார்ந்திருக்கும்.” என்று லவி சலிப்பாகக் கூற, சங்கர் சிறிதும் கோபப்படாமல், ‘அட… இவ நமக்காகவும் யோசிக்கிறாளே? இது எப்போ ஆரம்பித்தது?’ என்ற எண்ணத்தோடு சங்கர் லவியை ஆச்சர்யாமாக பார்க்க, லவி அவனைக் கோபமாக முறைத்தாள்.

“சரி… இப்ப எதுக்கு பழைய கதை.” என்று அசட்டையாகக் கூறினான் சங்கர். “நானா ஆரம்பிச்சேன். நீ தானே ஆரம்பிச்ச?” என்று லவி கடுப்பாகக் கேட்க, “நீ தானே டிவோர்ஸ் பத்தி பேசின?” என்று விடாமல் கேட்டான் சங்கர்.

“நான் டிவோஸ் தான் கேட்டேன் மிடியா கேட்டேன்.” என்று லவி முறுக்கிக் கொள்ள, அவளை சிறிதும் சட்டை செய்யாமல் லவிக்கு மிடி, டாப்ஸ், ஜீன்ஸ், என வரிசையாக வால்மார்ட், கோல்ஸ், டார்கெட் என எல்லா கடைகளிலும் லவிக்கும், ராஜ்க்கும் துணிமணிகளை வாங்கினான் சங்கர்.

சற்று அமைதியாக இருந்த லவி, “இதெல்லாம் நான் போட மாட்டேன்.” என்று தீர்க்கமாகக் கூறினாள். “நான் தான் உனக்கு வாங்கவே இல்லையே. அந்த அமெரிக்க பெண்ணுக்குத் தான் வாங்கினேன்.” என்று தொலைத் தூரத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணை சங்கர் கைகாட்ட, ‘இவன் அடங்க மாட்டேங்கறானே! என் வாய் கம்மியாகிருச்சா? இல்லை அவன் வாய் கூடிருச்சா?’ என்று தீவிர ஆலோசனையில் இறங்கினாள் லவி.

“சங்கர் காரை கிளப்ப, நாளைக்கி நீ ஆபீஸ் போ. அது தான் ராஜ் ஸ்கூலுக்கு போய்ட்டான். தேவையானதை  இப்ப எல்லாம் வாங்கிட்ட. இனி நீ எதுக்கு வீட்டில் இருக்கனும்?” என்று சாலையைப் பார்த்தபடி லவி கூற, “புது இடம். உனக்குத் தனியா இருக்கக் கஷ்டமா இருக்கும்.” என்று தன் கவனத்தைச் சாலையில் வைத்தபடியே கூறினான் சங்கர்.

“நான் இத்தனை வருஷம் தனியா தான் இருந்தேன். எனக்கு பயமும் கிடையாது. கஷ்டமும் கிடையாது ” என்று லவி அழுத்தமாகக் கூற, “சரி.. உனக்குப் பயமில்லை… கஷ்டமில்லை… எனக்கு உன்னை  ஒரு புது இடத்தில் தனியா விட்டுவிட்டுப் போகக் கஷ்டமா இருக்கு. பயமா இருக்கு.” என்று சங்கர் அழுத்தமாகக் கூறினான்.

“ஏன் இத்தனை வருஷம் இல்லையா?” என்று முள்ளாய் குத்தின லவியின் வார்த்தைகள் தான் செய்த தவறுகள் அனைத்தையும் வசதியாக மறந்து கொண்டு!

ஏனோ சங்கருக்கு லவியிடம் வாதிட மனமில்லை.  ஒரு நொடி யோசித்தவன், “தப்பு தான். என்னை மன்னிச்சிறு.  இல்லனா எனக்கு என்ன தண்டனை கொடுக்கணும் சொல்லு.” என்று குரலில் சற்றும் இளக்கம் இல்லாமல், தன் கவனத்தை எங்கோ வைத்தபடி கூறினான் சங்கர்.

‘சண்டை போட்டால் திரும்பவும் சண்டை போடலாம். இப்படி மன்னிப்பு கேட்டால், நான் இவனிடம் இறங்கி போகணுமா?’ என்ற இறுமாப்பு லவியிடம் ஏறிக்கொள்ள, “என்ன நீ இப்படி எல்லாம் பேசுற?” என்று மெதுவாகக் கேட்டு தன் வாயை இறுக மூடிக்கொள்ள, சங்கர் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியது.

சங்கர் மீண்டும் காரை எதோ ஒரு கடையில் நிறுத்த, “இத பார்… நீ ஏற்கனவே வாங்கினது எதுவும் எனக்குச் சரி இருக்காது. எல்லாம் வேஸ்ட் ஆகப் போகுது.” என்று லவி பேசிக் கொண்டே செல்ல, அவள் கன்னத்தை தன் ஆள்காட்டி விரலால் தொட்டு, “ஒன்னு தப்பா இருந்தா கூட சொல்லு மொத்தத்தையும் மாத்திருவேன்.” என்று சங்கர் லவியை ரசித்தபடி கூற, “டேய்… சங்கர்… வேணாம் உனக்கு என்னை பத்தி தெரியும்… நீ ரொம்ப ஓவரா போற. இது உனக்கு நல்லதில்லை.” என்று சங்கரை எச்சரித்தாள் லவி.

சங்கர் ஸ்டார்பக்ஸ்க்குள் நுழைய, “எனக்குக் காபி வேண்டாம்.” என்று லவி மறுப்பு தெரிவிக்க, “காபி வேணாம் … உனக்கு வேற வாங்கி தரேன். உனக்கு பிடிக்கும். குடிச்சி பாரேன்.” என்று இலகுவாகக் கூறினான் சங்கர்.

“எனக்கு பிடிக்கும்ன்னு உனக்குத் தெரியுமா?” என்று லவி பிடிவாதமாகக் கேட்க, “உனக்கு பிடிச்சது எது? பிடிக்காதது எதுன்னு எனக்குத் தெரியாத?” என்று சங்கர் ஆழமான குரலில் கேட்க, ‘அம்மா, அப்பாக்கு தெரியாத ரகசியம் கூட உண்டு. ஆனால், இவன் அறியா ரகசியம் உண்டா?’ என்ற எண்ணத்தோடு, லவி மேலும் எதுவும் பேசாமல் மௌனமாக அமர்ந்திருக்க, சங்கர் அவளிடம் சில நிமிடங்களுக்குப் பின் ஒரு கோப்பையை நீட்டினான்.

லவி சங்கர் முறைத்தபடி அதை வாங்கி கொண்டு பருக ஆரம்பித்தாள். மெஜந்தா நிறத்திலிருந்த அந்த பானம் சில்லென்று இருக்க, “யாரவது இந்த குளிரில் இதை குடிப்பாங்கள்ளா?” என்று கோபமாக லவி கேட்க, “நீ சூடா  தான் இருக்க. குடிக்கலாம்.” என்று இன்முகத்தோடு பதில் கூறினான் சங்கர்.

சில மிடறுகள் குடித்த பின், “நல்லாருக்கு. இதுக்கு பெயர் என்ன?” என்று லவி கேட்க, “பெர்ரி பிஸ்கஸ் டீ. உனக்கு பிடிச்சிருக்கா.” என்று சங்கர் ஆனந்தமாகப் புன்முறுவலோடு கேட்க, ‘இவனை நான் ஏன் காயப்படுத்துகிறேன்? இதனால் என்ன லாபம்? எது மாறப்போகுது? எனக்கு பிடித்திருந்தால் இவனுக்கு ஏன் இத்தனை ஆனந்தம்?’ என்ற எண்ணத்தோடு சங்கரின் கேள்வியை ஆமோதிப்பது போல் தலை அசைத்தாள் லவி.

“நான் உனக்கு பிடிக்காததை செய்ய மாட்டேன். உன்னை வருத்தப்படுத்தணுமுன்னு ஒரு நொடி கூட யோசிக்க மாட்டேன். ” என்று சங்கர் மெதுவாகக் கூற, லவி அவனைப் புருவம் உயர்த்தி பார்த்தாள்.

“நீ பழசை யோசிக்காத. ராஜ்க்காக…” என்று கூறி, சற்று இடைவெளிவிட்டு, “உனக்காகவும் தான்.” என்று கூறி  அவர்கள் குடித்து முடித்ததைத் தூக்கி எறிய, குப்பைத் தொட்டி நோக்கிப் போனான் சங்கர்.

‘இது இவன் புது யுக்தி போலும்! நான் இடக்கு மடக்காக பேசுவேன்னு, பேசிட்டு ஓடி போயிட வேண்டியது. சங்கர் சொல்வதும் நியாயம் தானே. ராஜ் இவனை விட யாரிடம் பாதுகாப்பாக இருக்க முடியும். என் காலத்திற்குப் பின்னும் சங்கர் தான் ராஜ்க்கு சிறந்த பாதுகாப்பு.’ என்று சிந்தித்தாள் லவி.

இருவரும் காரில் ஏற, அதே நேரத்தில் யாதவ் நித்திலாவிடம், “நாம யூ.எஸ். போறோம்.” என்று கூற, நித்திலா படக்கென்று எழுந்தமர்ந்தாள்.

“எங்க?” என்று நித்திலா கேட்க, “லவி, சங்கர் இருக்கும் அதே இடத்துக்குத் தான். நீ வேற ராஜ் ஞாபகமா இருக்குனு சொல்ற… எனக்கு ஆஃபீஸ்ல் ஒரு  ஆபேர்டூனிட்டி வந்துது. அதனால் போறோம்.” என்று யாதவ் படுத்துக் கொண்டே கூற, “இது சம்பந்தமான வேலையைத் தான் இத்தனை நேரம் தூங்காம செஞ்சிட்டு இருந்தீங்களா?” என்று கோபமாகக் கேட்டாள் நித்திலா.

“ஆமா. அதுக்கு நீ ஏன் இவ்வளவு கோபப்படுற?” என்று யாதவ் கடுப்பாக கேட்க, “நாம அங்க போக வேண்டாம்.” என்று அழுத்தமாகக் கூறினாள் நித்திலா.

நித்திலாவின் முகத்தை தன் பக்கம் திருப்பி, “ஏன்?” என்று அவளைக் கூர்மையாகப் பார்த்தபடி கேட்டான் யாதவ்.

“வேண்டாம் யாதவ். இப்ப தான் அவங்க ரெண்டு பெரும் ரொம்ப நாள் கழிச்சி ஒன்னு சேர்ந்திருக்காங்க. நாம ஏன் பூஜை வேளை கரடியா? திரும்பவும் அவங்க வாழ்க்கை நம்மளாலே பாழாக வேண்டாம்.” என்று நித்திலா கண்கலங்கக் கூறினாள்.

“லூசா நீ. அவங்க ரெண்டு பெரும் ஒன்னு சேர்ந்திருக்காங்க. நீ பார்த்த?” என்று யாதவ் கடுப்பாகக் கேட்க,  நித்திலா மௌனித்தாள்.

“ரெண்டும் எலியும், புனையுமா சண்டை போட்டுட்டு இருக்கும். நாம அங்க போனா என்ன நடக்குதுன்னு தெரியும். லவிக்கும் உன் துணை இருக்கும். லவிக்கு இந்நேரத்தில்  உன் துணை தேவை. உனக்கும்  அவ துணை இருக்கும்.” என்று யாதவ் கூற, யோசனையோடு தலை அசைத்தாள் நித்திலா.

அதே நேரம், சங்கர் கார் ஒட்டிக் கொண்டிருக்க, லவி மௌனம் காக்க அந்த மௌனத்தைக் கலைக்கும் விதமாகப் பேச ஆரம்பித்தான் சங்கர்.

“யாதவும்… நித்திலாவும் இங்க வாரங்க.” என்று சங்கர் கூற, “அப்படியா?” என்று ஆனந்தமாக ஆச்சரியமாகக் கேட்டாள் லவி.

இவர்கள் பேச்சு சுவரசியாயத்தில், அவர்கள் அபார்ட்மெண்ட் முனை வீட்டில், இரண்டாம் தளத்து பால்கனியில் அமர்ந்திருந்த உருவத்தை இவர்கள் கவனிக்கவில்லை.

அந்த உருவமும், சோகமே உருவாக வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க இவர்களைக் கவனிக்கவில்லை. ஆனால், ஹரி நம் கண்களுக்குத் தப்பவில்லை.

விதி என்ன செய்யக் காத்திருக்கிறது?

சங்கர் வீட்டுக்குள் செல்ல, “நீ கார் ஓட்ட கத்துக்கணுமுனா இங்க  எக்ஸாம் எழுதணும்.” என்று சங்கர் கூற, “நான் ஏற்கனவே ஆன்லைன் பார்த்து எல்லாம் படிச்சிட்டு வந்துட்டேன். நீ கூட்டிட்டு போனா நான் எக்ஸாம் எழுத ரெடி.” என்று லவி படக்கென்று கூற, ‘இவள் வேகம் என்றும் அசாத்தியம் தான்.’ என்று பெருமையாக யோசித்தான் சங்கர்.

“நீ எக்ஸாம் எழுதி முடிச்ச உடன், ஒரு டாக்குமெண்ட் வரும் அதை வைத்ததே நீ கார் ஓட்ட கத்துக்க ஆரம்பிக்கலாம். சீக்கிரம் டிரைவிங் லைசென்ஸ் வந்திரும்.நான் உனக்கு ஓட்ட சொல்லி தரேன்,” என்று சங்கர் ஆர்வமாகக் கூற, “உலகம் உருண்டை தான்.” என்று லவி கூற, சங்கர் லவியை புரியாமல் பார்த்தான்.

“உனக்கு கார் ஓட்ட தெரியாதுன்னு நான் கிண்டல் பண்ணுவேன். இப்ப விதியை பார்த்தியா. நான் உன்கிட்ட கத்துக்க வேண்டிய நிலைமை.” என்று லவி கேலியாக கூறி பெருமூச்சு விட, “நான் உன்னை எதாவது டிரைவிங் ஸ்கூல்ல சேர்த்து விடறேன்.” என்று சங்கர் விலகல் தன்மையோடு  மெதுவான குரலில் கூறி அங்கிருந்த விலகிச் செல்ல, சங்கரை வழிமறித்து நின்றாள் லவி.

‘பார்றா… இவனுக்கு இப்ப பொசுக்குன்னு கோபம் எல்லாம் வருது.’ என்றெண்ணி,  “அதெல்லாம் முடியாது. நீயே சொல்லிக்குடு. என்னால யார் கிட்டயோ எல்லாம் படிக்க முடியாது.” என்று லவி உறுதியாக கூற, ‘இவளுக்கு நான் யார்?’ என்ற கேள்வியோடு சங்கர் லவியை மெளனமாக பார்த்தான்.

லவி தன் பேச்சை முடித்துக் கொண்டு, சோபாவில் அமர, சங்கர் அவளிடம் சில கோப்புகளை நீட்டினான். அதைப் பார்த்த லவிக்கு அவள் என்றோ நித்திலாவிடம் கூறியது நினைவு வந்தது.

‘எந்த ஆணாவது, ஒரு பெண்ணைச் சந்தோஷமா வசிக்கிறதுக்காகத் திருமணம் செய்றேன்னு சொல்லிருக்கானா? இல்லை அவ கனவை நிறைவேத்தறேன்னு அவளைக் கல்யாணம் செய்றேன்னு சொல்லிருக்காங்களா? ‘ என்று லவி என்றோ கூறியது இன்று அவள் காதில் மீண்டும் மீண்டும் ஒலிக்க… லவி சங்கரை ஆராய்ச்சி செய்யும் விதமாக பார்த்தாள்.

“நீ மேல படிக்கனுமுனு விருப்பப்பட்ட தானே? அது தான்…” என்று சங்கர் புருவம் உயர்த்தி கூற, “ஆனால்…” என்று லவி சங்கரைப் பார்த்துப் பேச ஆரம்பிக்க அவளை இடைமறித்தான் சங்கர்.

“கல்யாணம் ஒரு பொண்ணோட வளர்ச்சிக்குத் தடையா இருக்குமுன்னு நீ நினைக்கிறாயா?” என்று சோபாவில் அவள் அருகே அமர்ந்தபடி கேட்டான் சங்கர் லவியின் பதிலை எதிர்பார்த்து.

லவ்லி லவி வருவாள்…

Next update on wednesday friends…

 

error: Content is protected !!