Lovely Lavi – Episode 20

Lovely Lavi – Episode 20

 

 

 

 

அத்தியாயம் – 20

சங்கரின் கேள்வியில் லவி நக்கலாகச் சிரித்தாள். “நிச்சயம் கல்யாணம் பெண்களின் வளர்ச்சிக்குத் தடை தான்.” என்று லவி உறுதியாகக் கூற, அவளை அடிபட்ட பார்வையோ டு பார்த்தான் சங்கர். லவி மேலும் தொடர்ந்தாள். “கல்யாணத்துக்கு அப்புறம் சாதனை புரிந்த பெண்கள் எண்ணிக்கையில் நிறைய இருக்கலாம். ஆனால், எண்ணிக்கையில் தான். அதாவது எண்ணும் அளவு தான்.” என்று கூறி சோபாவில் இருந்து எழுந்து சங்கரைக் கடந்து

சென்றபடி, “எல்லாருக்கும் உன்னைய  மாதிரி ஒரு  நல்ல புருஷன் அமையறதில்லையே!” என்று கூறி அவள் முகத்தில் தோன்றிய மெல்லிய புன்னகையை மறைத்துக் கொண்டு அவனைக் கடந்து செல்ல எத்தனித்தாள் லவி.

அரை நொடிக்கும் குறைவான அந்த பொழுதில், ஆயிரம் ரோஜாக்களை மேலே பொழிந்தார் போல் உணாராந்த சங்கர். ‘அட, முப்பதுகளில் காதல் இத்தனை இனிக்குமா?’ என்ற கேள்வியோடு நொடிக்குள் வேகமாகச் செயல்பட்டு லவியை கை பிடித்து நிறுத்தினான் சங்கர்.

இதை எதிர்பார்க்காத, லவி சற்று தடுமாற, அவளை ஆழமாகப் பார்த்தான் சங்கர்.

‘எனக்கு என்னவாகிற்று? நான் இவன் மேல் எவ்வுளவு கோபத்தோடு வந்தேன்? ஓரிரு நாளில், இவன் எல்லாரையும் நல்லவன் வேஷம் போட்டு  மயக்குற மாதிரி என்னையும் மயக்கிட்டானா?’ என்ற சந்தேகம் தோன்ற லவி தன் தலையைக் குனிந்துக் கொண்டாள்.

‘இல்லை இருக்காது. காலேஜ் படிக்கும் போதே இவன் கிட்ட மயங்களை. நாம யார் கிட்டயும் மயங்கினதில்லை. இப்ப என்ன பண்ண முடியும்.’ என்று கெத்தாக சங்கரை நிமிர்ந்து பார்த்தாள் லவி.

“இன்னொரு தடவை சொல்லேன்.” என்று ஆசையாக சங்கர் கேட்க, “எதை?” என்று தன் கைகளை சங்கரின் பிடியிலிருந்து உருவியபடி கேட்டாள் லவி.

“நீ இப்ப சொன்னியே… அது.” என்று சங்கர் கண்ணில் குறும்போடு கேட்க, “எது?” என்று கண்களில் அதே குறும்போடு கேட்டாள் லவி. இரெண்டு நாட்களாக தான் தேடிக் கொண்டிருந்த லவி மீண்டு விட்ட சந்தோஷத்தில், “உன்னைய மாதிரின்னு எதோ சொன்னியே… அது…” என்று சங்கர் விடாமல் கூற, “அது இந்த விஷயத்தில் மட்டும் தான்.” என்று தலை அசைத்து அழுத்தமாகக் கூறி லவி அறைக்குள் செல்ல, “கூடிய சீக்கிரத்தில் எல்லா விஷயத்துக்கும் மாத்திக்கிறேன்.” என்று வீடெங்கும் அதிரும் படி கூறினான் சங்கர்.

“இப்படியா சத்தம் போடுவ? கொஞ்சம் மெதுவா பேசு.” என்று லவி சங்கரை மிரட்ட, ‘ஆ… நான் கத்தறேன். இவ என்னை மெதுவா பேச சொல்லுறா. இது தான் கலி காலமோ?’ என்று எண்ணியபடி சம்மதமாகத் தலை அசைத்தான் சங்கர். சங்கர் மேலும் பேச்சு வளர்க்க, இடம் கொடுக்காமல், அவனைத் தூர நிறுத்தினாள் லவி. சங்கரும், லவியை தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

சில மணித்துளிகளுக்குப் பிறகு, “ராஜை பிக் அப் பண்ணிட்டு வருவோம்.” என்று சங்கர் கூற, லவி வேகமாகக் கிளம்பினாள்.

பள்ளி பேருந்து வருமிடத்திற்கு, வழி கூறியபடியே சங்கர் நடக்க, லவி தலை அசைத்துக் கேட்டுக் கொண்டாள். சங்கர், ராஜ்… ராஜ்… என பல முறை கூறி அவனைப் பற்றி  பேசிக் கொண்டிருந்தான். ‘வந்ததிலிருந்து நம்ம பெயரை ஒரு தடவை கூட சொல்லலியே?’ என்ற கேள்வி லவியின் ஆழ் மனதில் எழுந்தது.

‘குழந்தைக்காக நம்மளை இங்க கூட்டிட்டு வந்திருக்கான்.’ என்ற எண்ணம் தோன்ற மேலும் சிந்திக்கத் தோன்றாமல், தன் கவனத்தை சங்கரின் பேச்சில் திசை திருப்பினாள் லவி.

“இங்க எல்லா நாட்டு மக்களும் இருப்பாங்க. இந்தியன்ஸ்… சைனீஸ்… பாகிஸ்தான் மக்கள், மெக்ஸிக்கன்ஸ்… இன்னும் நிறைய…” என்று சங்கர் கூற, “அதனால் தான் எல்லா இங்கிலிஷ் ஸ்லாங்கையும் கேட்க முடியுது.” என்று புன்முறுவலோடு கூறினாள் லவி.

“எல்லா ஊரு சாப்பாடும் கிடைக்கும். நாம எல்லாத்தையும் ட்ரை பண்ணிருவோம்.” என்று சங்கர் நட்போடு கூற, “பழைய இன்டெரெஸ்ட் எல்லாம் இப்ப இல்லை.” என்று லவி ஓட்டுதல் இல்லாமல் கூற, லவியின் விலகல் தன்மையைச் சிறிதும் சட்டை செய்யாமல், “வாஷிங்டன்  பக்கம் தான். அங்க ஒரு நாள்  நாம போவோம்.” என்று கூறினான் சங்கர்.

“அதெல்லாம் கேட்க  நல்லா தான் இருக்கு. குளுர் எப்ப சரியாகும்?” என்று லவி வெடவெடத்தபடி கேட்க, “சீக்கிரம் சரி ஆகிரும். யாதவ் நித்திலா வரும் பொழுது சரியாகிரும்.” என்று சங்கர் கூறுவதை லவி கேட்டுக் கொண்டிருக்கையில், ஒரு சிறு குழந்தை வேகமாக ஓட, “ஹரி…” என்று அந்த தாய் அழைக்க, லவியின் உடல் இறுகியது. அருகே சங்கரை அழுந்த பிடித்துக் கொண்டாள். ஆனால், பிடித்த வேகத்தை விட, அதீத வேகத்தோடு சங்கரை விட்டு விலகி நின்றாள் லவி.  அவளின் செய்கையில் சங்கரின் மனநிலை சட்டென்று மாறி கண்கள் கலங்கியது.

அவர்களுக்குள் மௌனமே நீடிக்க, ராஜின் வருகைக்காகக் காத்திருந்தனர்.

ராஜ் வீட்டிற்கு வந்தவுடன், லவி உணவைக் கொடுக்க, “ஊவா… இது எனக்கு வேண்டாம். நூடுல்ஸ்… பாஸ்தா தான் வேணும்.” என்று ராஜ் பிடிவாதமாகக் கூற, சங்கர் ராஜை ஆசையாகப் பார்த்தான்.

“ராஜ்…” என்று செல்லமாக அழைத்தபடி, “உன்னை மாதிரியே சொல்றான் பாரேன்.” என்று சங்கர் லவியை பார்த்து மெச்சுதலாகக் கூற, “என்ன கிண்டலா? எல்லா குழந்தைகளும் கேக்கறது தான். இதுல எதுக்கு என் பெயரை இழுக்கறீங்க?” என்று சங்கரிடம் கோபமாகக் கூறிவிட்டு, “அதெல்லாம் ஹெல்த்தி இல்லை. சாப்பிடக் கூடாது.” என்று லவி சட்டம் பேச, சங்கர் விழுந்து விழுந்து சிரித்தான்.

லவி சங்கரை முறைக்க, ராஜ் சங்கரைப் புரியாமல் பார்க்க சங்கர் சூழ்நிலை கருதி தன்னை சரி செய்து கொண்டு, “ராஜ்… அம்மா சொல்றதை கேளு.” என்று கண்டிப்போடு கூறினான் சங்கர். ‘அது.’ என்று கண்டிப்போடு இருவரையும் பார்த்தாள் லவி.

இதற்கிடையில் லவி சங்கரை கூர்மையாக கவனிக்க ஆரம்பித்தாள்.

சங்கர் சம்மதமாகத் தலை அசைக்க, “பொண்ணுங்களை கூட செல்லம் கொடுத்து வளர்க்கலாம். பிரச்சனை வந்தா நம்ம வீட்டுக்கு மட்டும் தான் கஷ்டம். பசங்களை ஒழுங்கா வளர்க்கலைனா ஊரான் வீட்டுக்கெல்லாம்  கஷ்டம்.” என்று முணுமுணுத்துக் கொண்டே உளுந்த வடைக்கு மாவரைத்துக் கொண்டிருந்தாள் லவி.

லவி வடையை எண்ணையிலிட, சிறிது நேரத்தில் பையர் அலாரம், “பீம்… பீம்… பீம்…பீம்… பீம்… பீம்…பீம்… பீம்… பீம்…” என்று அலற, ராஜ் சற்று பயத்தோடு சத்தம் வந்த திசையை நோக்கிப் பார்த்தான்.

சங்கர் அவசரமாக அடுப்பை அணைத்து விட்டு, அந்த பையர் அலாரம் முன் துண்டை வேகமாக அசைக்க, அந்த காட்சி சங்கர் கையில் துண்டோடு நடனமாடுவது போல் காட்சி அளிக்க, “அப்பா நானும் நானும் டான்ஸ் ஆடுறேன்…” என்று கூறிக் கொண்டே, ராஜும் கையில் துண்டோடு தன் தந்தை அருகே நின்று கொண்டு நடனமாடினான்.

“டேய்… நீ வேற நேரங்காலம் தெரியாம காமெடி பண்ணிட்டு…” என்று தலையில் அடித்துக் கொண்டு அவர்கள் அருகே வந்தாள் லவி.

“அலாரம் சத்தம் வர அளவுக்குப் புகை வருதா என்ன? பேசாம அதை கழட்டிருவோம் சங்கர். அப்புறம் மாட்டிக்கலாம்.” என்று கூறி லவி நாற்காலி மேலே எற, பையர் அலாரம்மை கையோடு கழட்டிவிடுவாளோ என்ற பதட்டத்தோடு லவியை அலேக்காக தூக்கி கீழே நிறுத்தி, “இதெல்லாம் கழட்ட கூடாது. பெரிய கேஸ் ஆகிரும்.” என்று சங்கர் கண்டிப்போடு கூறினான். அதற்குள் அலாரம் சத்தம் நின்றுவிட, “அப்பா… செம ஸ்ட்ரென்த். அம்மாவை அப்படியே தூக்கிடீங்க.” என்று ராஜ் தந்தையைப் பார்த்துக் கைதட்டியபடியே கூற, அப்பொழுது தான் சற்று முன் நடந்தது நினைவுக்கு வர, லவி சங்கரை முறைத்தபடி சமையலறைக்குள் நுழைந்தாள்.

“ராஜ்… நல்லா பண்ற டா நீ…” என்று ராஜை மேலும் பேச விடாமல், அவனை உண்ணும் படி செய்கை காட்டினான் சங்கர்.

“நீ வடை போட வேண்டாம். நான் போடுறேன்.” என்று சங்கர் கூற, “ஏன் எனக்குப் போடத் தெரியாதா?” என்று லவி கோபமாகக் கேட்க, “கொஞ்சம் பொறுமையா வெந்தெடுக்கணும்.” என்று கண் சிமிட்டி கூறிக்கொண்டே சங்கர் வேலையில் இறங்க, “அப்ப, எனக்குப் பொறுமை இல்லைன்னு சொல்றியா?” என்று லவி கையை இடுப்பில் வைத்துக் கொண்டு சண்டைக்குத் தயாரானாள்.

“அப்படிச் சொல்ல முடியுமா? உன் வேகத்தை பையர் அலாரம் தாங்கலை.” என்று சங்கர் சமாதான கொடியைப் பறக்கவிட, “உனக்கு ஓட்டை போட்டு எல்லாம் வடை போடத் தெரியாது. நான் போடுறேன். நீ வெந்தெடு.” என்று கூறிக்கொண்டே  லவி வடையை எண்ணையிலிட சங்கர் வடையை வெந்துடுக்க ஆரம்பித்தான்.

‘குழந்தை பெயரை ஆயிரம் மட்டம் சொல்ல தெரியுது. நம்ம பெயரைச் சொல்லக் கூட பிடிக்கலை. நம்ம என்ன இவன் அன்பை எதிர்பார்த்தா வந்தோம்? குழந்தைக்காகத் தானே வந்தோம்.” என்று ஏளன புன்னகையோடு தன் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள் லவி.

எந்த அலாரம் சத்தமும் வராமல், வடை தயாராக, ‘எனக்குப் பொறுமை கம்மி தானோ?’ என்று சிந்தித்தாள் லவி. ராஜ் பேச, சங்கர் பதில் கூற, என்று நேரம் செல்ல, “ராஜ். உன்னை மாதிரி நல்ல பேசறான்ல?” என்று சங்கர் லவியை பார்த்துக் கேட்க, “இப்ப நீ கூட தான் நல்ல பேசுற?” என்று லவி பிடி கொடுக்காமல் பேசினாள்.

“ஐயோ… நான் இப்படிப் பேச ஆறு வருஷம் ஆகியிருக்கு.” என்று சங்கர் தன் தோள்களைக் குலுக்கி கூற, “என்னை மாதிரி யாரும் பேச வேண்டாம். அப்புறம் சீரழியவும் வேணாம்.” என்று நறுக்கு தரித்தார் போல் கூறினாள் லவி. ‘இவளை மெல்ல மெல்ல மாற்ற வேண்டும்.’ என்றெண்ணியபடி சங்கர் லவியை பார்த்தான்.

நாட்கள் சின்ன சின்ன சண்டைகளோடும், நல்ல நல்ல புரிதல்களோடு சங்கரின் விருப்பப்படி அழகாக நகர்ந்தன.

லவி ஜி.ஆர்.ஈ. எழுதி கல்லூரிச் சேர்க்கைக்காகக் கல்லூரியில் காத்திருக்க, சங்கர் அவளருகே நின்று கொண்டிருந்தான்.

அப்பொழுது அவர்கள் கேட்டுக் கொண்டிருந்த, பல கேள்விகளுக்கு சங்கர் பதில் கூறிக் கொண்டிருக்க,  மாணவியின் பெயரைக் கேட்க, சங்கர் லவியை பதில் கூறும்படி கூறினான்.  ‘இவன் என் பெயரை சொல்ல மாட்டானே…’ என்று கடுப்போடு லவி அவர்களுக்கு பதில் கூறினாள், அதன் பின் அவர்கள் இருவரும், வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினர்.

நாட்கள் செல்ல, செல்ல…  சமீபகாலமாக அவள் மனதில் ஓடும் சிந்தனை தான். ‘பிடிக்காத கல்யாணம். சங்கருக்கு என்னை பிடிக்காது. பெயரை கூட சொல்ல பிடிக்காத என்னை, ஏன் இங்க கூட்டிட்டு வரணும்?’ என்று எண்ணியபடி காரில் மௌனமாக அமர்ந்திருந்தாள் லவி. லவியை வீட்டில் விட்டுவிட்டு, சங்கர் மீண்டும் அலுவலகத்திற்குச் சென்றான்.

மாலை சங்கர் வீட்டிற்குத் திரும்ப, வீடு பூட்டியிருந்தது. சங்கர் லவியை அலைப்பேசிக்கு அழைக்க, அதில் பதில் வராமல் போக, சங்கர் பதற்றமடைந்தான். ‘குழந்தையை வச்சிக்கிட்டு எங்க போயிருப்பா?’ என்ற கேள்வியோடு காரை நிறுத்திவிட்டு அபார்ட்மெண்ட் முழுக்க தேடினான்.

சற்று குளிர் காற்று வீச, ” ரொம்ப குளுருதே…” என்று எண்ணியபடி அபார்ட்மெண்ட் முழுக்க அவர்களைத்  தேடினான் சங்கர். அப்பார்ட்மெண்டுக்குள் எங்கும் இல்லாததால்,  அப்பார்மெண்ட்டில் இருந்த ஏரியைச் சுற்றி இருக்கும் நடை பாதையில் அவர்களைத் தேடி நடக்க, லவி தண்ணீரை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். ராஜ் அவளருகே ஜெர்கின் அணிந்து கொண்டு அங்கிருந்த பறவைகளை பார்த்தபடி விளையாடி கொண்டிருந்தான்.

லவி ஜெர்கின் எதுவும் அணியாமல் குளிரில் வெடவெடத்தபடி அமர்ந்திருக்க, “ஏய்… லூசா நீ? இந்த குளிரில் ஜெர்கின் கூட போடாமல்… என் கிட்டக் கூடச் சொல்லாமல்… இங்க வந்து உக்காந்திருக்க?” என்று கோபமாக கேட்டான் சங்கர்.

“ஏன் சொல்லணும்?” என்று லவி தண்ணீரைப் பார்த்தபடி கேட்க, சங்கர் அவளைப் புரியாமல் பார்த்தான்.

“இப்படி பார்க்காத… நான் ஏன் சொல்லணும்? நான் எதுக்கு உன் கிட்ட சொல்லணும். உனக்கு என்னைப் பிடிக்காது. என் பெயரைச் சொல்லக் கூட பிடிக்காது. நான் இங்க வந்ததிலிருந்து நீ என்னை ஒரு தடவை கூட பெயரைச் சொல்லிக் கூப்பிட்டதில்லை. பரவால்லை விடு… அது உன் இஷ்டம்… இன்னைக்கி காலேஜ்ல்ல யாரோ கேட்டப்பவாது என் பெயரை சொல்லிருக்கலாம்! என் மேல அவ்வுளவு வெறுப்பு? நான் மட்டும் ஏன் உன்னை மதிக்கணும்? சொல்லு பிடிக்காத எனக்காக எதுக்கு இதெல்லாம் பண்ற?” என்று லவி ஆங்காரமாகக் கேட்டாள்.

சங்கர் மௌனிக்க,  “நீ  என்னைப் பெயர் சொல்லிக்  கூட கூப்பிடக் கூடாத அளவுக்குத் தகுதி இல்லாதவளா நான் ஆகிட்டேனா? நான் அப்படி என்ன பெரிய தப்பு பண்ணிட்டேன்? எனக்கு தெரிஞ்சாகணும்.” என்று அந்த குளிரில் அமர்ந்தபடி பிடிவாதமாகக் கேட்டாள் லவி.

சங்கர் அகப்பட்டுக் கொண்டவனாய் திருதிருவென்று முழித்தான்.

லவ்லி லவி வருவாள்…

error: Content is protected !!