Lovely Lavi – Episode 21

Lovely Lavi – Episode 21

அத்தியாயம் – 21

சங்கர் அதிர்ந்து விழித்தது என்னவோ அரை நொடி தான். தன்னை சமாளித்துக் கொண்டு, “அப்படி எல்லாம் இல்லை. நீ ஏதாவது கற்பனை பண்ணிக்காத.” என்று கூறியபடி, அவள் அருகே அமர்ந்தான் சங்கர்.

“அப்பா… டர்ட்ல்…” என்று நீரைக் காட்டினான் ராஜ். குழந்தையைப் பார்த்து தலை அசைத்து, “உன் உடம்பு இருக்கிற நிலையில், நீ இப்படி குளிரில் உட்காரலாமா?” என்று சங்கர் அக்கறையாகக் கேட்க, லவி அவனைத் திடுக்கிட்டுப் பார்த்தாள்.

“இல்லை இந்த கிளைமேட் உனக்கு புதுசு… அதைத் தான்…” என்று சங்கர் தடுமாற, குளிர் காற்று வீச, லவி நடுங்கினாள்.

தன்னிடம் உள்ள ஜெர்கினை கழட்டி, லவியிடம் கொடுத்து அணிந்து கொள்ளும்படி சங்கர் கண்களால் செய்கை காட்ட, “நீ ஏன் என் பெயரை சொல்லலை?” என்று லவி அதை அணிந்து கொள்ளாமல்  கோபமாக  கேட்டாள்.

‘நான் உன் பெயரைச் சொல்லிப் பல வருஷம் ஆகுது. ஆனால், அது உனக்கு இப்ப தான் தெரியுதா? நீ என்ன எதிர்பார்க்கிற? நான் உன்னைப் பெயர் சொல்லி கூப்பிடணுமா? இல்லை உன் மனம் என்ன எதிர்பார்க்குதுன்னு உனக்கு தெரியுதா?’ போன்ற பல கேள்விகள் சங்கர் மனதில் எழ, லவியின் கேள்விகளுக்குப் பதில் கூறாமல், லவிக்கு ஜெர்கின் அணிவிக்க, லவி அவனிடமிருந்து விலகிக் கொண்டு ஜெர்கினை அணிய ஆரம்பித்தாள்.

“பேச மாட்ட… பதில் சொல்ல மாட்ட அது தானே?” என்று லவி சினத்தோடு  கேட்க, “சொல்ற அளவுக்கு ஒண்ணுமில்லை. ஏதோ தோணலை. அவ்வுளவு தான். இனி முயற்சி பண்றேன்.” என்று சங்கர் பணிவாகக் கூற, “தேவை இல்லை. இனி நீ என்னை ஒரு நாளும் பெயர் சொல்லிக் கூப்பிட வேண்டாம். உன் இஷ்டப்படி இரு.” என்று சங்கரிடம் கடுப்பாகக் கூறி, “முயற்சி பண்ணறானாம் முயற்சி…” என்று முணுமுணுத்துக் கொண்டே  விறுவிறுவென்று நடந்தாள் லவி.

“அப்பா… தூக்குங்க.” என்று ராஜ் கூற, அவனைத் தூக்கிக் கொண்டு லவியோடு நடந்தான் சங்கர். லவி மௌனமாக நடக்க, “கோபமா?” என்று சங்கர் நடந்தபடியே கேட்க, “கோபப்படுற இடத்தில் நான் இல்லை. அந்த தகுகியும் எனக்கில்லை போல! ” என்று லவி பதில் கூறியபடியே, அந்த ஏரி நீரைப் பார்த்தபடி நடந்தாள்.

லவியின் கைகளைப் பிடித்து, நிறுத்தினான் சங்கர். லவியின் முகத்தை தன் பக்கம் திருப்பி, “பெயர் விஷயத்தை விடு… மத்த விஷயத்தை யோசிச்சி பாரு… உனக்குக் கோபப்படும் உரிமை இங்கில்லை? நான் உன்னை நல்லா பார்த்துக்கலை? பெயர் கூட நான் முயற்சி பன்றேன்னு தானே சொல்றேன்.” என்று மனத்தாங்களோடு கேட்டான் சங்கர். லவி பதில் கூறாமல் மேலும் நடக்க, அவள் வழியை மரித்தபடி நின்றான் சங்கர்.

“எனக்கு பதில் தெரியணும்.” என்று சங்கர் பிடிவாதமாகக் கூற, “உனக்கு இப்ப ரொம்ப கோபம் வருது. ரொம்ப பிடிவாதம் பண்ற. இதெல்லாம்  நல்லதுக்கில்லை.” என்று லவி எச்சரிக்க, சங்கர் அவளைப் பிடிவாதமாகப் பார்த்தான்.

‘இது என்ன நான் பண்ண வேண்டிய வேலையை இவன் பண்ணுறான். ஏன் பெயரை சொல்லலைன்னு நான் பிடிவாதமா நிக்கணும். ஆனால், இவன் நிக்கறானே?’ என்று யோசனையோடு லவி சங்கரைப் பார்த்தாள்.

மேலும் குளிர, “ஜெர்கின் என்கிட்டே கொடுத்துட்ட… உனக்கு குளிரும். வா வீட்டுக்கு போகலாம்.” என்று லவி கூற, “நான் கேட்ட கேள்விக்குப் பதில்.” என்று சங்கர் கேள்வியோடு நிற்க, “எனக்கு குளிருது. கொஞ்சம் டயர்டா இருக்கு.” என்று லவி முணங்கலாகக் கூற, சங்கர் தன் பிடிவாதத்தை விடுத்து, “போலாம் வா…” என்று கூறினான்.

லவி சற்று தடுமாற, அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டு நடந்தான் சங்கர்.

‘சங்கரின் கோபம், பிடிவாதம் எல்லாம் இவ்வுளவு தானா? என் ஒரு வார்த்தைக்கு முன் எல்லாம் சூரியனைக் கண்ட பனி போல் விலகிடுமா?’ என்ற கேள்வியோடு லவி நடக்க, அவளுக்கு சுருக் சுருக்கென்ற வலி அதிகமாக சங்கரை இறுகப் பிடித்துக் கொண்டாள் லவி.

வீட்டிற்குள் நுழைய, “ராஜ் நீ விளையாடு.” என்று கூறி சங்கர் குளியலறைக்குள் நுழைந்து கொண்டான். சில நிமிடங்களுக்குப் பின், சங்கர் லவியை தேட, அவள் சோபாவில் சாய்வாகப் படுத்திருந்தாள்.

“மாத்திரை சாப்பிட்டியா?” என்று சங்கர், “இல்லை…” என்று லவி தலை அசைக்க, அவளுக்கு மாத்திரையும், தண்ணீரும் கொடுத்தான் சங்கர்.

‘முன்னாடி என்னைப் பிடிக்காது… இப்ப தான் அப்படி இல்லையே… இப்ப கூட இவ, என் கிட்ட அவளுக்கு என்ன பிரச்சனைன்னு அவளா என்கிட்டே  சொல்லக் கூடாதா?’ என்ற கேள்வியோடு லவியை பார்த்தான் சங்கர்.

சில நொடிகளின் அமைதிக்குப் பின், “நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேனோ?” என்று லவி எங்கோ பார்த்தபடி கேட்க, லவியை ஆழமாக பார்த்தான் சங்கர்.

“நான் வேணா இந்தியா போயிறட்டுமா?” என்று லவி சங்கரின் முகம் பார்த்து கேட்க, “நீ அங்க சந்தோஷமா இருப்ப அப்படினா கிளம்பிரு.” என்று சங்கர் கடுப்பாக  கூற, அவனை அதிர்ச்சியாக பார்த்தாள் லவி.

“அப்ப ராஜ்?” என்று லவி தன் கண்களைச் சுருக்கி கேட்க, “அவன் இங்கு என் கூட இருக்கட்டும்.” என்று சங்கர் முடிவாகக் கூற, “உனக்கு குழந்தை வேணும்… நான் போய்டணும் அப்படி தானே?” என்று லவி கேட்க, “அப்படி நான் சொல்லலை… நீ தான் கேட்கற.” என்று சங்கர் பிடிகொடுக்காமல்  கூற, லவி படுக்கையறைக்குச் சென்று தன் முகத்தைத் தலையணையில் புதைத்துக்  கொண்டு படுத்துவிட்டாள் லவி.

‘இவனுக்கு நான் வேண்டாம். என்னை மதிக்க மாட்டான். ஆனால், என் பிள்ளை வேண்டும். திமிர் பிடிச்சவன். அழுத்தக்காரன்.’ என்று சங்கரை  மனதில் சபித்தபடி லவி உறங்கினாள்.

ராஜிற்கு உணவு கொடுத்து, அவனை உறங்க வைத்த சங்கர் லவியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். ‘இவள் முன் போல் இல்லை. இவளுக்கு என்னை பிடிக்கும். என் மேல் அன்பிற்கு. என் மேல் அக்கறை இருக்கு. அதை சொன்னால் தான் என்ன? சொல்ல மாட்டா… திமிர் பிடிச்சவ… அழுத்தக்காரி..’ என்று லவியை  அன்பாக திட்டிக் கொண்டே பார்த்தான் சங்கர்.

‘விதவிதமாக அன்பை தெரிவிப்பதும்…  பரிசுகளால் நனைவதுமா காதல்?               அக்கறையும்… நம்பிக்கையும்… புரிதலும் தானே காதல்…  எனக்கு இவள் மேல் காதல் தான்…’ என்ற எண்ணம் மேலோங்க லவியை காதலோடு பார்த்தான் சங்கர்.

நாட்கள் அதன் போக்கில் நகர, குளிரும் சற்று குறைந்து நித்திலா, யாதவும் வரும் நாளும் வந்தது.

சங்கர் அவர்களை அழைத்துக் கொண்டு வர, நித்திலா உள்ளே நுழைய, “சித்தி…” என்று நித்திலாவை கட்டிக் கொண்டான் ராஜ்.

“ராஜ்.” என்று நித்திலா அவனை கொஞ்ச, “வா… யாதவ்… ட்ரிப் எப்படி இருந்தது?” என்று லவி கேட்க, “நல்லாருந்தது லவி. நீ எப்படி இருக்க?” என்று யாதவ் கேட்க, “எனக்கென்ன… நான் நல்லாருக்கேன். உன் பிரென்ட் தான் என் கூட இருக்கான். அவன் எப்படி இருக்கான்னு நீ தான் கேட்கணும்.” என்று லவி கூற, “இது வாஸ்த்தவமான பேச்சு..” என்று கூறி யாதவ் சிரிக்க, ‘இவ  பழைய மாதிரி பேசுறாளோ?’ என்ற எண்ணத்தோடு நித்திலா லவியை பார்த்தபடி மௌனமாக அமர்ந்திருந்தாள்.

சங்கர், யாதவிடம் கண்களால் வினவ, “ரெண்டு பெரும் பேசிக்க மாட்டாங்க.” என்று யாதவ் சங்கரிடம் ரகசியமாகக் காதில் கிசுகிசுக்க, “ஏன்?” என்று சங்கர் வினவ, “ம்.. ச்…” என்று பதில் தெரியாததை தன் தோள்களை குலுக்கி வெளிப்படுத்தினான் யாதவ்.

‘நித்தி சொல்லுக்கு கட்டுப்பட்டுத் தானே நான் இங்கு வந்தேன். என்கிட்டே பேசினா என்ன?’ என்ற எண்ணத்தோடு நித்திலாவிடம் பேசாமல், லவி அவளுக்கு தண்ணீர் கொடுக்க, நித்திலா எதுவும் பேசாமல் மௌனமாக தண்ணீர் குடித்தாள்.

“எங்க வீடு எங்க இருக்கு?” என்று நித்திலா சங்கரிடம்  கேட்க, “பக்கத்து வீடு தான்.” என்று சங்கர் கூற, “போலாமா?” என்று நித்திலா கேட்டாள்.

“சங்கர்… சாப்பிட்டுட்டு  தான் போக முடியுமுன்னு சொல்லு.” என்று சங்கரிடம் லவி கூற, யாதவ் விழுந்து விழுந்து சிரித்தான்.

“இது அவ்வுளவு பெரிய ஜோக் இல்லை.” என்று நித்திலா கடுப்பாக கூற, “இது பெரிய ஜோக் இல்லை தான்… ஆனால்…” என்று யாதவ் மீண்டும் விழுந்து விழுந்து சிரித்தான்.

“உன்கிட்ட பேச சங்கரை தூது விட்டா பாரு… விதி வலியது.” என்று யாதவ் மீண்டும் சிரிக்க, இருபெண்களும் யாதவை கடுப்பாக பார்த்தனர்.

ஏனோ பழைய நாட்கள்  லவி, நித்திலா இருவரின் நினைவிலும் மின்னலாய் தோன்றியது.

‘இப்படி யாதவ்  பேசினா லவி முன்னாடி இப்படியா அமைதியா இருப்பா? காலம் என்னென்ன மாற்றத்தை கொண்டு வந்துவிட்டது?’ என்று நித்திலா பெருமூச்சு விட, “நித்திலா, உங்க வீடு செட் பண்ற வரைக்கும் நீங்க இங்க தான் சாப்பிடணும். ரெஸ்ட் எடுக்க வேணா உங்க வீட்டை யூஸ் பண்ணிக்கோங்க.” என்று யாதவை பார்த்து கூறியபடி, “நான் ரெண்டு பேருக்கும் அவங்க வீட்டை காட்டிட்டு வரேன்.” என்று லவியை பார்த்தபடி சங்கர் கூற, லவி சம்மதமாக தலை அசைத்தாள்.

“அப்பா… தூக்குங்க…” என்று ராஜ் சங்கரை நெருங்க, “ராஜ்… அப்பா பாவம்… எப்ப பாரு தூக்க சொல்லுற. நடந்து போடா…” என்று லவி ராஜை மிரட்ட, யாதவ், நித்திலா இருவரும் ஒருவரை ஒருவர் அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டனர்.

அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடன், “சங்கர்… நீங்க எங்களை எல்லாம் மறந்துட்டிங்கள்ல?” என்று குறையோடு கேட்டாள் நித்திலா.

யாதவ் சங்கரை தர்மசங்கடமாக பார்க்க, “உங்களை எல்லாம் நான் மறப்பேனா? அனாதையான எனக்கு நீங்க தானே சொந்தபந்தம். சூழ்நிலை நித்திலா. அது தான் உங்க யார் கிட்டயும் இத்தனை வருஷம் பேச முடியலை. ஆனால், எல்லாரையும் தினமும் நினைப்பேன்.” என்று சங்கர் ஆழமான குரலில் வருத்தத்தோடு கூறினான்.

“லவி எப்படி இருக்கா?” என்று நித்திலா கலங்கிய கண்களோடு கேட்க, “அதை அவ கிட்டயே கேட்க வேண்டியது தானே?” என்று யாதவ் நித்திலாவை பார்த்துக் கேட்டான்.

“சங்கர்… உங்களுக்குத்  தெரியுமா? லவி உடல் நிலை பத்தி? அவளுக்கு… அவளுக்கு ஹார்ட்ல… ஹார்ட்ல… எனக்குச் சரியா சொல்லத் தெரியலை… ஆனால், அவளால் அதீத துக்கத்தையும் தாங்க முடியாது… சந்தோஷத்தையும் தாங்க முடியாது. இது லவிக்கு தெரியும். ஆனால், அவ யார்கிட்டயும் சொல்லலை. என் கிட்ட கூட லவி சொல்லலை. நான் யாரோவா? நான் லவிக்கு துணை நிற்க மாட்டேனா? தனியா சமாளிக்குறா… உங்களுக்கு  இதெல்லாம் தெரியுமா சங்கர்?” என்று நித்திலா விசும்பிக் கொண்டே கேட்க, “தெரியும்.” என்று சங்கர் மெதுவாக தன் துக்கத்தைத் தொண்டைக்குள் விழுங்கியபடி கூறினான்.

“உங்களுக்கு தெரியும்ன்னு லவிக்கு தெரியுமா?” என்று நித்திலா சங்கரைக் கேட்க, “தெரியாது.” என்று கூறினான் சங்கர்.

“அப்படினா?” என்று நித்திலா மேலும் தொடங்க, நித்திலாவின் பேச்சை இடைமறித்தான் சங்கர்.  “அவ உடல் நிலை இப்படி இருக்கும் பொழுது… அவ பண்ணது தப்பாவே இருந்தாலும், நீ இப்படி பேசாம இருக்கலாமா நித்திலா? அவ அதைத் தாங்குவாளா?” என்று சங்கர் நித்திலாவிடம் பரிதாபமாகக் கேட்க, யாதவ் நித்திலாவை கூர்மையாகப் பார்த்தான்.

‘யாதவ் கேட்கும் அதே கேள்வி. தன் பக்க நியாயத்தை இவர்கள் புரிந்து கொள்வார்களா?’ என்ற ஏக்கத்தோடு நித்திலா இவர்களைப் பார்த்தாள்.

லவ்லி லவி வருவாள்…

error: Content is protected !!