Lovely Lavi – episode 22

Lovely Lavi – episode 22

 

அத்தியாயம் – 22

சங்கர் பதிலுக்காகக் காத்திருக்க, யாதவ் நித்திலாவை குற்றம் சாட்டும் விதமாகப் பார்த்தான்.

“கொஞ்ச நாளாக எனக்கும் லவிக்கும் பிரச்சனை தான். நான் அவளை உன் கூடச் சேர்ந்து வாழச்  சொன்னேன். அப்படி இல்லைனா உன்னைப் பிடிக்கலைன்னா உன்னை டிவோர்ஸ் பண்ணிட்டு வேற கல்யாணம் பண்ண சொன்னேன். அது லவிக்கு என் மேல கோபம்.” என்று நித்திலா சங்கரைப் பார்த்தபடி கூற, “ஏன்… லவிக்கு சங்கரை அவ்வுளவு பிடிக்குமா?” என்று யாதவ் நக்கலாகக் கேட்க, நித்திலா தன் கணவனைக் கோபமாக முறைத்தாள்.

சங்கர் தோள் குலுங்க சிரித்து, “அவளுக்குக் கல்யாணமே பிடிக்காது. இதில் இன்னொரு கல்யாணம் பண்ண சொன்னா சும்மா விடுவாளா?” என்று சங்கர் கேலியாகக் கேட்க, “சங்கர்… இப்ப எங்களுக்கு அப்படி தோணலை.” என்று யாதவ் கண்சிமிட்ட, நித்திலா யதாவுக்கு ஹைபை செய்ய… சங்கர் வெட்கப்பட்டுப் புன்னகைத்தான்.

“சங்கர்! அவ இங்க வரும்போது கூட விருப்பப்பட்டு வரலை. எப்படிடா கரெக்ட் பண்ண?” என்று யாதவ் ஆச்சரியமாகக் கேட்க, “டேய். அவ என் பொண்டாட்டி டா…” என்று சங்கர் தோழமையுடன் கோபித்துக் கொள்ள, “ஆகான்… அருமை.” என்று யாதவ் சிலாகிக்க, சங்கர் நித்திலாவை பார்த்து, “நித்திலா நீ சொல்லு.” என்று தீவிரமாகக் கூறினான்.

“எங்களுக்குள்ள பிரச்சனை போய்கிட்டு இருந்தப்ப, லவி ரூமில் ரிபோர்ட்ஸை பார்த்தேன். பெரியம்மா கிட்ட பேச்சு கொடுத்தப்ப தான், அவங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு தெரிஞ்சிது. நானும் எதுவும் சொல்லலை. அந்த ரிப்போர்ட்ஸ் எல்லாத்தயும் மொபைலில் ஸ்கேன் பண்ணி எடுத்துக்கிட்டேன். யாதவ் கிட்ட சொல்லி டாக்டர்ஸ் கிட்ட காட்டினப்ப தான் எல்லாம் தெரிஞ்சிது. ஸ்ட்ரெஸ். லவி எல்லாத்தயும் மனசிலே வச்சிட்டது தான் காரணம். எந்த மன தைரியம் அவளுக்குத் துணை நின்னுச்சோ. அதுவே இப்ப மன அழுத்தமாகிருச்சு. லவி என் கிட்ட கூட அவ உடல் நிலையைச் சொல்லலைங்கற கோபத்தில் நான் பேசாம இருக்க, லவி நான் உன் கூட போக சொல்லித் தான் பேசாம இருக்கேன்னு நினைச்சிட்டா. எனக்கு அதுவும் நல்லதுன்னு தான் தோணுச்சு. நானும் அவ ஹெல்த் பத்தி தெரியாத மாதிரியே இருந்துட்டேன். ஆனால், இத்தனை வருஷம் இல்லாமல், அவளுக்கு உடம்பு சரி இல்லாதப்ப எப்படி நீங்கச் சரியா லவியை இங்க வர வச்சீங்க?” என்று நித்திலா கேள்வியாக நிறுத்தினாள்.

சங்கர், யாதவ் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, “நீங்கச் சொன்னீங்களா யாதவ்?” என்று நித்திலா கேட்க, யாதவ் ஆமோதிப்பாகத் தலை அசைத்தான்.

“அப்ப… நீங்கச் சங்கர் கிட்ட தொடர்பில் தான் இருந்தீங்களா? என் கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லலை?” என்று நித்திலா சற்று கோபத்தோடு கேட்க, “அது நான் தான் சொல்ல வேண்டாமுன்னு சொன்னேன்.” என்று சங்கர் பதிலோடு முந்திக் கொள்ள, “அப்ப லவிக்கு உடம்பு சரியில்லைன்னு இங்க கூட்டிட்டு  வந்திருக்கீங்க?” என்று நித்திலா சங்கரை கிடுக்கு பிடியாகப் பிடித்தாள்.

சங்கர் மௌனிக்க, “அப்ப ராஜ் பிறந்தது இப்ப தான் தெரியும்னு சொன்னது பொய்? அப்படி தானே?” என்று நித்திலா மேலும் கேள்வி கணைகளை வீச, சங்கர், யாதவ் மீண்டும் மௌன காத்தனர்.

“கூட்டு களவாணி பசங்க இரெண்டு பேரும்…” என்று நித்திலா சங்கர், யாதவ் இருவரையும் நிந்திக்க, “நித்திம்மா. நிலைமை அப்படி…” என்று யாதவ் சமாதானம் செய்ய, “அப்படி என்ன நிலைமை. கட்டின மனைவியை வருஷக்கணக்கா பாக்காம இருக்கிற சூழ்நிலை.” என்று நித்திலா கோபமாகக் கேட்டாள்.

ராஜ் சாமான் இல்லாத வீட்டில், குறுக்கும் நெடுக்குமாக ஓட, “இந்தக் குழந்தை பிறந்தப்ப அவ எவ்வுளவு கஷ்டப்பட்டா தெரியுமா? ஊர் உலகம் என்னலாம் பேசுச்சு தெரியுமா?” என்று நித்திலா தன் தோழிக்காகக் கோபமாக வாதிட்டுக் கொண்டிருந்தாள்.

“சங்கர்… உங்களுக்குத் தெரியாதது ஒண்ணுமில்லை. லவி தப்பு பண்ணிருக்கலாம். ஆனால் லவி தப்பானவ இல்லை. இன்னும் சொல்லப் போனா லவி எந்தத் தப்பும் பண்ணமாட்டா. அவ செய்ற விதம் எல்லாருக்கும் தப்பா தெரியுது. அவ்வுளவு தான்.” என்று நித்திலா மேலும் எடுத்துரைக்க, “நித்திலா… எனக்கு அவளைப் பத்தி தெரியாதா? நீ சொல்லனுமா?” என்று சங்கர் பரிதவிப்போடு கேட்க, “எல்லாம் தெரிஞ்சும் ஏன் லவியை இத்தனை வருஷம் தனியா விட்டுப் போனீங்க? அவ சின்ன வயசில் துடுக்கு தனமா உங்களை அவமானப்படுத்தினத்துக்கு பழி வாங்கிட்டிங்கள்ல?” என்று நித்திலா குரலில் வருத்தத்தோடும், வேதனையோடும் கேட்க, சங்கர் நித்திலாவை கண்களில் வலியோடு அடிபட்ட பார்வை பார்த்தான்.

“நித்திலா…” என்று கர்ஜனையாக ஒலித்தது யாதவின் குரல். “என்னை மன்னிச்சிருங்க…” என்று இருவரிடமும் பொதுவாகக் கூறி, “இத்தனை வருஷம் லவி கூட இருந்து, அவ தனியா பட்ட கஷ்டத்தையும், இந்த உலகமும் சொந்தக்காரங்களும் அவளைப் பேசிய பேச்சுக்களை கூடருந்து கேட்ட என்னால் இந்த கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியலை…” என்று கூறி கண்ணீர் வழியும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் நித்திலா.

யாதவ் நித்திலாவை கோபமாக முறைக்க, சங்கர் நித்திலாவை பார்த்து, “நித்திலா… தப்பு தான்… எல்லா தப்பும் என்மேல் தான். எல்லாத்தயும் சரி செய்றேன்.” என்று சங்கர் உறுதியளிக்க, “நான் உங்களைக்  காயப்படுத்தணும்ன்னு பேசலை…” என்று நித்திலா தயங்கினாள்.

“என் மனைவிக்காகப் பேசின…” என்று சங்கர் இன்முகமாகக் கூற, “லவி… அதிர்ஷடசாலி.” என்று நித்திலா சிரித்த முகமாகக் கூற, “டேய்… சங்கர் நம்பாத டா… திட்ட வேண்டியதெல்லாம் திட்டிருவா… அப்புறம் ஐஸ் வைப்பா…” என்று யாதவ் எச்சரிக்கை செய்தான்.             “அனுபவம் பேசுது.” என்று கூற சங்கர் கேலி பேச, நித்திலா வெட்கப்பட்டு புன்னகைத்து, “நான் லவியை பார்க்கப் போறேன்.” என்று கூறி ராஜை அழைத்துக் கொண்டு, நித்திலா சங்கர் வீட்டை நோக்கிச் சென்றாள்.

நித்திலா வீட்டுக்குள் நுழைய, “என்ன நித்தி… கோபமெல்லாம் போயிருச்சா?” என்று லவி சமையலைக் கவனித்தபடி கேட்க, “எனக்கென்ன கோபம்?” என்று நித்திலா எதுவும் அறியாதவள் போல் கேட்டாள்.

“என்ன நக்கலா? எல்லாம் இந்த யாதவ் கிட்டருந்து வந்திருக்கும். அவனோட சேராத. அவன் உன்னை கெடுத்துருவான்.” என்று லவி தன் வேலையைத் தொடர்ந்த படி கண்சிமிட்டி  கூற, ‘லவி முன் போல் மாறி இருக்கிறாள்.’ என்ற எண்ணத்தோடு லவியை நித்திலா  அளவிடும் விதமாகப் பார்த்தாள்.

அப்பொழுது உள்ளே நுழைந்த யாதவ், “லவி… படுபாவி வந்ததும் வராததுமா புருஷன் பொண்டாட்டியைப் பிரிக்கத் திட்டம் போடுறியா?” என்று கேட்டுக் கொண்டே சோபாவில் அமர, சங்கர் யாதவை பார்த்துப் புன்னகைத்தான்.

கேலியும் கிண்டலுமாகவும் லவியின் சில ஏக்கங்களோடு அவர்கள் நாட்கள் மெல்ல நகர்ந்தது.

குளிரும் சற்று குறைந்து, சூர்யா பகவான் அவர் வேலையைச் சற்று செவ்வனே செய்து கொண்டிருக்க…      யாதவும், நித்திலாவும் அவர்கள் அபார்ட்மெண்ட்க்குள் நடைப்பயிற்சி சென்றனர்.   ஹரியின் அபார்ட்மெண்டை இருவரும் கடந்து செல்ல, அந்த அபார்ட்மெண்ட் பால்கனியில் இருந்து நித்திலாவை கண்ட ஹரி, “நித்திலா…” என்று ஆச்சரியத்தோடு அழைத்தான்.

அந்த குரலில், நித்திலாவுக்கு உலகமே தட்டாமாலை சுற்றியது. யாதவ் புரியாமல் பார்க்க, நித்திலா குரல் வந்த திசையை நோக்கி அண்ணாந்து பார்த்தாள்.

ஹரி அங்கிருந்து அசைய எத்தனிக்க, “அங்கேயே இரு.” அதிகாரமாக ஒலித்தது நித்திலாவின் குரல்.

யாதவ் ஏதோ பேச எத்தனிக்க, அவன் கைகளை இறுகப் பிடித்து அமைதி காக்கும் படி செய்கை காட்டினாள் நித்திலா. ஹரி நித்திலாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, அங்கே இருக்க, “எதுக்கு என்னைக் கூப்பிட்ட?” என்று நித்திலா அதிகாரமாகக் கேட்டாள்.

‘பருவத்தில் அமைதியாக இருக்கும் பெண்களுக்குக் கூட, திருமணம் முடிந்த பின் ஓர் கம்பீரம் வந்துவிடுகிறது. நல்ல கணவன் அமைந்தால் திருமணம் இளவரசிகள் அரசிகள் ஆகும் தருணம் போலும்!’ என்று எண்ணியவனாக, “லவி எப்படி இருக்கா?” என்று ஆர்வத்தோடு கேட்டான் ஹரி.

“ஏன் நல்லா இருந்தா நாசமாக்கலாமுன்னு எண்ணமா?” என்று நித்திலா கடுப்பாகக் கேட்க, “இல்லை. நித்திலா நான் மாறிட்டேன். முன்மாதிரி இல்லை. நீ சொன்ன சொல்லுக்குக் கட்டுப்பட்டு இங்கிருந்து அசையலை பார்.” என்று ஹரி இறங்கிய குரலில் கூற, ” நீ இது வரைக்கும் பண்ணதே போதும். இதே மாதிரி என் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, லவி பத்தி பேசாதா.” என்று கூறி அங்கிருந்து செல்ல எத்தனித்து மீண்டும் திரும்பி ஹரியைப் பார்த்தாள் நித்திலா.

“நீ என்ன தான் அவ வாழ்க்கையை அழிக்கணும்னு நினைச்சாலும், அவ நல்லாருக்கா.” என்று கோபமாகக் கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக நடந்தாள் நித்திலா.

ஹரியின் மனநிலையை அறியும் வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லை. நாம் யாதவ், நித்திலாவை பின் தொடர்வோம்.

‘லவி நல்லாருக்காளா? இந்த கேள்வி நித்திலாவின் மனதை குடைந்தது. நல்லாருக்கா தான். ஆனால், அவ வாழ நினைத்த வாழ்க்கை. இப்பயும் படிக்கிறா தான். ஆனால்? ச்ச… ஒரு கம்பீரமான தைரியமான  பெண்ணை ஏற்றுக் கொள்ளும்  சமுதாயம் இன்னுமா வரலை. அடுத்த தலை முறையிலாவது வருமா?’ என்ற எண்ணத்தோடு நித்திலா நடக்க, “ஹரியை சந்திக்கவே இல்லைனா லவி வாழ்க்கை மாறிருக்கும் இல்லை?” என்று யாதவ் கேள்வியோடு நிறுத்த நித்திலா ஆமோதிப்பது போல் தலை அசைத்தாள்.

“லவி கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம். அட்லீஸ்ட் மாமாவாது, அவசர கல்யாணம் பண்ணி வைக்காமல் இருந்திருக்கலாம்.” என்று யாதவ் கூற, “இப்ப பழசை பேசி என்னவாகப்போகுது?” என்று நித்திலா சலிப்பாகக் கூற, ஆமோதிப்பாகத் தலை அசைத்தான் யாதவ்.

“நித்திலா! அத்தை உன்னை நினைத்து வருத்தப்படுறாங்க… அப்படி இப்படி சமாதானம் செய்து நாம லவியை சங்கர் கிட்ட அனுப்பினாலும், அவங்களுக்குள்ள எல்லாம் சரியாகலைல்ல?” என்று யாதவ் கேட்க, “லவி மனசில் ஏதோ வச்சிக்கிட்டு தான் இங்க வந்திருக்கா. ஆனால், அது என்னன்னு எனக்கு தெரியலை. ஒருவேளை சங்கருக்கு தெரியுமோ? என்னமோ?” என்று நித்திலா யோசனையாகக் கூற, “கண்டுபிடிப்போம்…” என்று கூறி யாதவ் தன் தாடையைத் தடவினான்.

வளைந்து நெளிந்து சென்ற பாதை, அந்த அபார்ட்மெண்ட் ஏரியை சுற்றி இருக்க, செல்லும் வழியெல்லாம் ரோஜாக்களும், பெயர் தெரியா பல வண்ண பூக்களும் யாதவ் நித்திலாவை மயக்க, அவர்கள் அதை ரசித்தபடியும், பேசியபடியும் நடந்து சென்றனர்.

லவி, சங்கரின் வாழ்க்கை எந்த தொய்வுமின்றியும், எந்த முன்னேற்றமின்றியும் நகர்ந்து கொண்டிருக்க, லவி சங்கரிடம் எதுவும்  பிடி கொடுக்காமல் நழுவிக் கொண்டிருந்தாள்.

ராஜ் ஹாலில் அமர்ந்தபடி பஸில் செய்து கொண்டிருக்க, யாதவ், நித்திலா இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

சற்று நேரம் பேசிக் கொண்டிருக்க, “நாம இந்த சம்மர்க்கு நயாகரா போவோமா?” என்று யாதவ் கேட்க, “நாங்க வரலை… நீங்க போயிட்டு வாங்க.” என்று லவி கூற, “ஏன்… நீங்க நாலு தடவை பார்த்துட்டிங்களோ?” என்று நக்கலாகக் கேட்டான் யாதவ்.

‘சங்கர், ராஜ்காக என்னை இங்க வச்சிருக்கான். இதில் இவனோடு நான் ஜோடி போட்டு வேற சுத்தணுமா?’ என்ற எண்ணத்தோடு, “நாங்க வரலை… அவ்வுளவு தான்…” என்று லவி சலிப்பாகக் கூற, “ராஜ் என்ஜாய் பண்ணுவான்ல்ல?” என்று நித்திலா ஆசையாக கேட்டாள். “அப்ப ராஜை கூட்டிட்டு போங்க.” என்று லவி விட்டெறியாக கூற, யாதவ் லவியை பார்த்து எழுந்து நின்று கோபமாக பேசினான்.

“யாதவ்.” என்று சங்கர் யாதவை கட்டுப்படுத்த, யாதவ் சங்கருக்குச் செவி சாய்க்காமல் மேலும் மேலும் பேச, யாதவ் கூறிய சொல்லில் சங்கர் வெகுண்டு, யாதவின்  கன்னத்தில் பளாரென்று அறைந்தான் சங்கர்.

இதை எதிர்பார்க்காத நித்திலா, லவி இருவரும் ஸ்தம்பித்து நின்றனர்.

லவ்லி லவி வருவாள்…

error: Content is protected !!