Lovely Lavi – Episode 8

அத்தியாயம் – 8

            நித்திலா சுயநினைவின்றி இருந்ததால் அனைவரின் கவனமும் அவள் பக்கம் திரும்ப, ஹரி லவி பிரச்சனை தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. அவள் தலையில் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. நித்திலாவின் தோழிகள் லவி உட்பட, சற்று அச்சத்தோடு, நித்திலாவை கல்லூரி அருகே இருந்த மருத்துவமனைக்குத் அழைத்துச் சென்றனர்.

                லவி வீட்டிற்குத் தகவல் தெரிவிக்க, நித்திலாவின் பெற்றோர் அங்கு விரைந்து வந்தனர்.நித்திலாவின் தந்தை,  தாயிடம் லவி சித்தி, சித்தப்பா என்று பேசினாலும் அவர்கள் பொருளாதார நிலையில் சற்று தோய்ந்தவர்கள் என்றும், அவர்கள் யாதவ் குடும்பத்தின் தயவில் வாழ்கிறார்கள் என்றும் நமக்குத் தெரிகிறது.

         அங்கு, லவியும் அவள் தோழிகள் சிலரும் நித்திலாவின் நிலையை அறிந்து கொள்ளக் காத்துக் கொண்டிருந்தனர். மருத்துவர்கள், அதிர்ச்சி மயக்கம் தான் என்று கூற, அவள் தோழிகள் சற்று நிம்மதி அடைந்தனர். நித்திலாவிற்கு தலையில் தையலிட்டு, வலியை மறைக்க சில மாத்திரைகளும் கொடுக்கப்பட்டது.

       விஷயமறிந்து யாதவ் மற்றும் சங்கர்  இருவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

                          இருவரும் உள்ளே நுழைய, “இவங்க இரண்டு பேரும் செம்ம ஸ்மார்ட்டா இருக்காங்க… யாரு?” என்று நித்திலாவின் நிலை எந்த ஆபத்துமில்லை என்று அறிந்த பின் சுவீட்டி சுவியின் காதில் கிசுகிசுத்தாள்.

      “இது ஹாஸ்பிடல்…” என்று சுவி மெல்லிய குரலில் கடுகடுக்க, “சோ வாட்… அழகை ரசிப்பதில் என்ன தப்பு? பசங்க தான் சைட் அடிக்கணுமுன்னு எதாவது சட்டம் இருக்கா? இல்லை இடம், பொருள்ன்னு ஏதாவது இருக்கா?” என்று சுவிட்டி கேள்வியாக நிறுத்தினாள்.

     “இந்த பசங்க நம்ம காலேஜ் சீனியர். எம்.ஈ. போன வருஷம் பாஸ் அவுட்…” என்று வசு மெல்லமாக கூற, “கேடி… அமைதியா இருந்து எவ்வுளவு விஷயம் தெரிஞ்சி வச்சிருக்கான்னு பார்த்தேயில்லை.” என்று சுவிட்டி அனைவரின் காதையும் கடித்தாள்.

                ‘இந்த கேலி எல்லாம் பொறுப்படுத்துவேனா?’ என்று, “இங்க ஏன் வந்திருக்காங்க?” என்று யோசனையைக் கேள்வியாக்கினாள் வசு.

லவி நித்திலா அருகே நின்று கொண்டிருக்க, சங்கரும் யாதவும் வர லவி தன் தோழிகளை நோக்கி வந்தாள்.

       “லவி. யாரு இந்த ஸ்மார்ட் யூத்?” என்று சுவீட்டி லவியிடம் கேட்க, லவி சுவிட்டியை பார்த்தபடி, “நான் நித்திலா கூட இருக்கேன். நீங்க கிளம்புங்க?” என்று கூறி நித்திலாவை நோக்கித் திரும்பினாள்.

          “ஸ்மார்ட் யூத்…” என்று கடுப்பாக முணுமுணுத்துக் கொண்டு, அவர்கள் அருகே சென்றாள் லவி.

    “நித்திலா என்ன ஆச்சு?” என்று அக்கறையாகக் கேட்டான் சங்கர். “ஒண்ணுமில்லை… கால் தடுக்கி கீழ விழுந்துட்டேன்.” என்று வலியை மறைத்துக் கொண்டு கூறினாள் நித்திலா.

     “லவி மண்டையை உடைக்கிறதுக்குப் பதிலா, உன் மண்டையை உடைச்சிட்டாங்களா?” என்று யாதவ் நேரில் பார்த்தது போல் கேட்க, இரு பெண்களும் யாதவை பதட்டத்தோடு பார்த்தனர்.

       “ஹே… பயப்படாதீங்க… ஜஸ்ட் ஜோக்… நித்திலாவின் வலியை மறக்கடிக்க.” என்று யாதவ் புன்னகைக்க, நித்திலா நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

  “ஆமா நாங்க ரொம்ப பயந்துட்டோம்.” என்று கூறி லவி முகத்தைச் சுழித்தாள்.

“நாங்களும் நம்பிட்டோம்.” என்று தலை சரித்துக் கூறினான் யாதவ்.

         “நாங்க சந்தோஷமா ஒரு விஷயம் சொல்ல வந்தோம். நீ இப்படி மண்டையை உடைச்சிட்டு நிக்குற?” என்று யாதவ் கூற, “அப்படி என்ன விஷயம்?” என்று லவி புருவம் உயர்த்தி கேட்டாள் லவி.

      “எங்க ஜாப் ட்ரைனிங் பீரியட் முடிஞ்சி உறுதியாகிருச்சு. மாமா கிட்டச் சொல்ல போய்கிட்டு இருந்தோம். அத்தை விஷயத்தை சொன்னவுடன் நேரா இங்க வந்தோம்.” என்று யாதவ் கூற, நித்திலா தலை அசைத்துக் கேட்டுக் கொண்டாள்.

              “உங்க ரெண்டு பேருக்கும் வேலை கொடுத்ததே பெரிய விஷயம். இது வேறயா?” என்று லவி நக்கலாகக் கூற, “இது மட்டுமா? இன்னும் இருக்கு…” என்று தன் காலரைத் தூக்கி பெருமை பேசினான் யாதவ்.

   ‘அப்படி என்ன?’ என்று இரண்டு பெண்களும் இவர்களைப் பார்க்க, “அடுத்த வாரம், உங்களுக்கு இருக்கிற ட்ரைனிங் ப்ரோக்ராமுக்கு ட்ரைனிங் கொடுக்க வர போறதே நாங்க தான்.” என்று யாதவ் கூற, லவி அவர்கள்  இருவரையும் மேலும் கீழும் பார்த்தாள். “சூப்பர்!” என்று சங்கர், யாதவ் இருவருக்கும் கை குலுக்கினாள் நித்திலா.

     “அதுக்குள்ள உன் உடைஞ்ச மண்டையைச் சரி பண்ணு.” என்று யாதவ் கேலியாகக் கூற, “டேக் கேர் நித்திலா.” என்று அக்கறையாகக் கூறி அங்கிருந்து சென்றான் சங்கர்.

       “நித்தி… இவனுகளை நம்பாத… நீ சாந்தமுன்னு அவனுக வாலை சுருட்டிட்டு போறாங்க. இல்லைன்னு வை, இரண்டும் கொழுப்பெடுத்த பசங்க. அந்த சங்கர் பேசக் கூட மாட்டான். அவனுக்கு பேசினா முத்து உதிந்திரும்ன்னு நினைப்பு. யாதவ் பேசியே கொல்லுவான்.” என்று நித்திலாவை எச்சரித்தாள் லவி.

        நித்திலா புன்னகைத்துக் கொண்டாள்.

         அனைவரும் வீட்டிற்குக் கிளம்ப, “நித்தி… ஹரியைப் பற்றி புகார் கொடுத்து, அவனை உண்டில்லைனு செய்யணும்.” என்று லவி கூற, நித்திலா லவியை கோபமாகப் பார்த்தாள்.

      “லவி. என் மேல் ஆணை. இனி நீ ஹரி  விஷயத்தில் தலை இடாத. இன்னைக்கி நீ கை நீட்டினதே பெரிய தப்பு. இதுவே உனக்குப்  பெரிய சிக்கலைக் கொண்டு வருமோன்னு எனக்குப் பயமா இருக்கு. நாம விஷயத்தைப் பெரிசு பண்ண வேண்டாம்.” என்று நித்திலா கூற, “நித்தி…” என்று லவி பேச ஆரம்பிக்க அவளை இடை மறித்தாள் நித்திலா.

                    “ப்ளீஸ் லவி. நான் சொல்றதை கேளு. எனக்காக. நாம ஒதுங்கி இருப்போம். மோசமானவங்க கிட்ட இருந்து நாம தான் ஒதுங்கி இருக்கனும்.” என்று நித்திலா மென்மையாகக் கூறினாள்.

    “நித்தி… எந்த காலத்தில் இருக்க? சேலை மேல  முள்ளு பட்டாலும்… முள்ளு மேல சேலை பட்டாலும் சேலைக்குத் தான் ஆபத்துன்னு சொல்லுவ போல?” என்று லவி கேலியாகக் கேட்க, “இல்லைன்னு சொல்றியா லவி. இழப்பு என்னைக்கும் நமக்கு தானே. படைப்பே அப்படி தான்.” என்று கூறி உதடு வளைய மெலிதாக புன்னகைத்தாள் நித்திலா.

       லவி மேலே பேசுமுன், “மேல பேசாத லவி… எனக்கு தலை வலிக்குது. இனி நீ ஹரி விஷயத்தில் ஒதுங்கி இருக்கிற. அவ்வுளவு தான்.” என்று நித்திலா கண்டிப்போடு கூற, லவி வேறு வழியின்றி நித்திலாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு சம்மதமாகத் தலை அசைத்தாள்.

       நித்திலாவின் தலை காயம் சரியாகி ஒரு வாரத்திற்குப் பின் கல்லூரிக்குக் கிளம்பினாள். லவியின் இல்லத்தில், சங்கர், யாதவ் இருவரும் கிளம்ப, அவர்களை சொடக்கிட்டு அழைத்தாள் லவி.

    “காலேஜ் வாங்க… போங்க… அதைப் பத்தி எனக்கு ஒண்ணுமில்லை. நீங்க இரண்டு பேரும் அங்க வந்து என்னை, நித்திலாவை தெரிஞ்ச மாதிரி நடந்துக்க கூடாது புரியுதா?” என்று லவி கேள்வியாக நிறுத்தினாள்.

     சங்கர் சம்மதமாகத் தலை அசைக்க, “நிச்சயமா உன்னை தெரியுமுன்னு சொல்ல மாட்டோம். சொன்னால் எங்களுக்குத் தான் ஆபத்து. உன் மேல் காண்டில் இருக்கிறவங்க, எங்களை எதாவது செய்திட்டா?” என்று யாதவ் தன் பைக் சாவியைக் கையில் சுற்றியபடி நக்கலாகக் கேட்டான்.

                     சங்கர் தனக்குள் தோன்றிய புன்னகையை மறைக்க, லவி இவர்கள் இருவரையும் நக்கலாகப் பார்த்தபடி அவள் காரை நோக்கி நடந்து சென்றாள்

 “சங்கர்… நாம பைக்கில் போறோம். இவளுக்கு எதுக்கு கார். இவளை நடந்து போக சொல்லணும்.” என்று பெண்ணின் மீது உள்ள  இயல்பான பொறாமை உணர்வோடு கூறினான் யாதவ். “நமக்கு எதுக்கு தேவை இல்லாத விஷயம். வண்டியைக் கிளப்பு.” என்று கூறி கேம்பஸ் இன்டெர்வியூக்கு பயிற்சி கொடுக்க லவி, நித்திலா படிக்கும் கல்லூரியும், அவர்கள் படித்த கல்லூரியை நோக்கியும் இருவரும் பயணித்தனர்.

      

அனைவரும் செமினார் ஹாலில் குழுமியிருக்க, சங்கர், யாதவ் இருவரும் அவர்கள் குழுவினரோடு உள்ளே நுழைந்தனர்.

           பார்மல் ஷர்ட், பண்ட், டை என யாதவ், சங்கர் இருவரும் கம்பீரமாகக் காட்சியளிக்க, “நித்தி… இதுங்களுக்கு வந்த வாழ்வை பாரேன்!” என்று லவி நித்திலாவின் காதில் கிசுகிசுக்க, “அவுங்களுக்கு என்ன குறைச்சல்?” என்று நித்திலா புன்னகைத்தாள்.

             அப்பொழுது, சங்கர் அனைவருக்கும்  இன்டெர்வியூ பற்றிய விவரம் கூற, அனைவரும் சங்கரின் ஆளுமையான பேச்சில் கட்டுண்டு அவனை கவனித்துக் கொண்டிருந்தனர்.

       ‘இவன் இவ்வுளவு பேசுவானா? வீட்டில் தான் அப்படியே அமைதி மாதிரி நடிப்பு.’ என்று எண்ணியபடி சங்கரையும், யாதவையும் கவனித்துக் கொண்டிருந்தாள் லவி.

        “நாம இப்ப சில ஸ்டுடென்ட்ஸ் வைத்து இன்டெர்வியூ டெமோ பார்ப்போம். வி வாண்ட் சம் வாலண்டீயர்ஸ்..” என்று யாதவ் கூற, ஒரு மாணவன் முன்னே சென்றான்.

       சங்கர் சில கேள்விகள்  கேட்க, அந்த மாணவனின் பதிலில் சில ஆச்சரியங்களும், நகைச்சுவையும் கலந்திருக்க அங்க சிரிப்பலை பரவியது.

    “அடுத்ததா… ஒரு மாணவி வந்தா நல்லாருக்கும்.” என்று யாதவ் ஆங்கிலத்தில் கூற, மாணவிகள் அமைதியாக இருக்க, யாதவ் லவியை கை காட்டி முன்னே வரும்படி செய்கை காட்டினான்.

     “யாதவ்… என்னடா பண்ற?” என்று சங்கர் யாதவின் காதில் பதற, “இவ்வுளவு நேரம் உன்னை எத்தனை பொண்ணுங்க சைட் அடிச்சாங்க தெரியுமா? நீ அவ்வுளவு நல்ல பேசின.” என்று யாதவ் சங்கரின் காதில் கிசுகிசுத்தான்.

      “அதுக்கு எதுக்கு அவங்களை கூப்பிடற?” என்று சங்கர் கடுப்பாகக் கேட்க, “இதை விட, லவியை வச்சி செய்ய நமக்கு நல்ல சந்தர்ப்பம் கிடையாது.” என்று யாதவ் மெல்லிய புன்னகையோடு கூறினான்.

       “டேய்… அதுக்கு நானா கிடைச்சேன்?” என்று சங்கர் சலிப்பாகக் கேட்டான். “நம்மளை எப்படி எல்லாம் நக்கல் பண்ணுவா. இப்ப மரியாதை கொடுக்கனுமில்லை. கொடுக்க வைப்போமில்லை.” என்று மெலிதாக ஆடியபடி கூறினான் யாதவ்.

     “வீட்டுக்கு தான் போகணும். அவ முகத்தில் தான் முழிக்கணும். நம்மளை அவ வச்சி செய்வா.” என்று சங்கர் பதட்டத்தோடு கூற, “நண்பா! வாழ்க்கையை அப்பப்ப அனுபவிக்கனும். யானைக்கு ஒரு காலம் வந்தா, பூனைக்கு ஒரு காலம் வராமலா போய்டும்.” என்று யாதவ் கேட்க, சங்கர் மனதிற்குள் நொந்தபடி யாதவை பரிதாபமாகப் பார்த்தான்.

      அதே நேரம், “நித்தி… பார்த்தியா ரெண்டுக்கும் கொழுப்பை! நல்ல பசங்கன்னு சொல்லுவியே. திமிரு புடிச்சவங்க. இவங்க கூப்பிட்டா, நான் போகணுமா? வீட்டுக்கு வரட்டும், இவனுகளை இன்னைக்கி ஓட விட்டு அடிக்கிறேன்.” என்று லவி நித்திலா காதில் கிசுகிசுத்தாள்.

        ஹெச். ஓ. டீ. திரும்பி பார்த்து, “லவி…” என்று அழைக்க, லவி வேறு வழியின்றி முன்னே வந்தாள்.

        சங்கர் அமர்ந்திருக்க, சங்கரை கை காட்டி, “இவங்க தான் இப்ப உங்க இன்டெர்வியூயர். நீங்க அவங்களை பார்த்து  சிரித்த முகமா விஷ் பண்ணனும்.” என்று யாதவ் லவியை பார்த்தபடி கூற, “மவுன வீட்டுக்கு வா.., செத்தடா நீ.” என்று யாதவை அடிக்குரலில் மிரட்டினாள் லவி.

      யாதவ் சிரித்த முகமாக மாணவர்களைப் பார்த்து, “இப்ப லவி, நம்ம இன்டெர்வியூர் சங்கருக்கு, சிரித்த முகமா விஷ் பண்ணுவாங்க. அப்படியே ஒரு பிரிஸ்க் ஹாண்ட் ஷேக் பண்ணுவாங்க.” என்று கூற, லவி சங்கரை மேலும் கீழும் பார்த்தாள்.

        சங்கர் பரிதாபமாக லவியை பார்க்க, அனைவருக்கும் லவியின் சிரித்த முகம் மட்டுமே தெரிய, சங்கரின் கைகளை அவனுக்கு வலிக்கும் படியாக  அழுத்தமாக பிடித்தபடி, “உங்க ரெண்டு பேருக்கும் இன்னைக்கி நேரம் சரி இல்லை.” என்று இன்முகத்தோடு திட்டிக் கொண்டே கைகளைக் குலுக்கினாள் லவி.

         சங்கர் எந்தவித உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல், லவியை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சங்கர் உணர்ச்சி துடைத்த முகத்தோடு  கேள்விகளைத் தொடர, லவி தன் கவனத்தைக் கேள்விகளில் திருப்பி பிரமாதமாகப் பதில் அளித்துக் கொண்டிருந்தாள்.

      அவள் பதிலில், மாணவர்கள் கரகோஷம் எழுப்ப, லவி முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது.

          அவர்கள் அந்த இன்டெர்வியூ பகுதி முடிந்து, மதிய உணவுக்காகச் சென்றனர். யாதவ், சங்கர் இருவரும் உணவருந்தச் செல்ல, நித்திலா,லவி இருவரும் பேசியபடியே அங்கிருந்து கிளம்ப, ஹரி அவர்கள் வழியை மறைத்தபடி நின்றான்.

        நித்திலாவின் பார்வைக்குக் கட்டுப்பட்டு, லவி அமைதியாக நின்றாள்.

   ஹரி லவியை பார்த்து சினேகமாகப் புன்னகைத்தான். லவி ஹரியைச் சந்தேகமாகப் பார்க்க, ஹரி அவன் அலைப்பேசியை லவி முன் நீட்டினான்.

     லவி அவன் அலைப்பேசியை அதிர்ச்சியாகப் பார்க்க, லவியின் முகத்தில் முதல் முறையாக அதிர்ச்சியைப் பார்த்த நித்திலா ஹரியின் அலைப்பேசியைப் பார்த்தாள்.

நித்திலாவின் மூச்சு வேகமாக வெளிவந்தது. அவளால் தன் கண்களை நம்ப முடியவில்லை.  லவியின் புகைப்படங்கள், அவள் வீடியோ அனைத்தும் அருவருக்கும் விதமாக மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

           ஹரி புருவம் உயர்த்தி லவியை ரசித்து பார்த்தான்.                “லவி…” அவள் காதில் மென்மையாக அழைத்தான் ஹரி. “இது பொய்ன்னு எனக்கு மட்டும் தானே தெரியும். இதை நான் இன்டர்நெட்ல அப்லோட் பண்ணேன்னு வை… உன் மானம் கப்பல் ஏறிரும். நீ என்ன பண்ண போறன்னா…” என்று லவியின் காதில் கிசுகிசுத்தான் ஹரி.

            ‘லவி பிரென்ட் லிஸ்ட்ல ஹரி இல்லை. இவள் பிரென்ட் லிஸ்டில் இருக்கிற யாரோ  இவனுக்கு உதவி செய்திருக்கணும்… இல்லைனா லவி சோசியல் மீடியாவில் போட்ட எல்லா போடோஸும், விடியோவும் இவன் கைக்கு எப்படி கிடைச்சிருக்கும்? ஐயோ எல்லாரும் லவி போட்டோ போட்டது தான் பிரச்சனைன்னு சொல்லுவாங்க.’ என்று தன்  தோழிக்காக வருந்தியபடி லவி, ஹரி இருவரையும் நித்திலா பரிதாபமாகப் பார்த்தாள்.

              

அன்பான வாசகர்களே,

   என் மனதில் ஒரு வினா.

     ஓர் ஆண் இப்படியெல்லாம் இருக்கலாம்… ஒரு பெண் இப்படி இருக்கக் கூடாது… என்று விதிமுறையை அமைத்தது யாரோ?

                  இந்த கேள்வியால் உருவானவளே லவி.  

             லவி! மொக்கை கவிதையும், வாழ்வில் ஒரு பெண்ணை உயர்த்த படிப்பே வித்து என்று நம்பும் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் வாழும்  ஒரு சராசரி பெண். இயல்பாய், யாருக்கும் தீங்கு விளைவிக்காமல்… தன் வழியில் யாரும் குறுக்கே வராதவரை தானுண்டு, தன் வேலை உண்டு என்று வாழ்க்கையை ரசிக்கும் பெண். தவற்றைக் கண்டால் பொங்குவதும், அன்பைக் கண்டால் உருகுவதும் அவள் இயல்பு. தன் அன்பைத் தட்டிப்பறித்தவர் மீது பொறாமை உணர்வும், தைரியமும், முற்போக்கு சிந்தனையும் சில பிடிவாதங்களும் கொண்டவள். மனிதனாய் பிறந்தவர்கள் நல்ல குணங்களும், தீய குணங்களும் கொண்டவர்கள் தானே. லவி மட்டும் அதற்கு விதி விலக்கா!

      லவியின் செயல்கள் தவறா? லவி என்ன செய்யப் போகிறாள். இந்த சமுதாயம் இனி அவளை எப்படிப் பார்க்கும்? உங்களின் எண்ணவோட்டம் என்ன?

              உங்கள் ஆதரவை எதிர்பார்த்து லவி பயணிப்பாள்.

   லவ்லி லவி வருவாள்…

error: Content is protected !!