MA – 6

MA – 6

அத்தியாயம் – 6

அந்த அறையில் அடைந்திருக்க பிடிக்காமல் கீழே இறங்கிச் சென்றவளின் அருகே வந்த அந்த வீட்டின் வேலைக்காரி கோமதி, “பாப்பா நான் சமையல் வேலையை முடிச்சிட்டேன்..” என்று சொல்ல சரியெனத் தலையசைத்து அவர்களை அனுப்பி வைத்தாள்.

அவர் சென்றபிறகு வீட்டில் எந்த வேலையும் இல்லாமல் அமர்ந்தவளின் காதுகளில் விழுந்தது அந்தக்குரல்!

மெதுவாக எழுந்து பின் வாசலுக்குச் சென்று பார்க்க அங்கே ஐந்து ஆறு பொடுசுகள் கபடி விளையாடுவதைக் கண்டவளின் உள்ளம் துள்ளியது.

சிறுவயதில் விளையாடிய விளையாட்டு என்றாலும் அவர்களைப் பார்க்கும்பொழுது மீண்டும் கடந்த காலத்தின் நினைவுகள் மனதில் தலை தூக்கினாலும் அவற்றை ஓரம்கட்டிவிட்டு, “ஏய் குட்டிபசங்களா..” என்று அவர்களை அருகே அழைத்தாள்.

“அந்த அக்கா எதுக்குடா கூப்பிடறாங்க..” என்று சிலர் பயத்துடன் பின் வாங்கியது.

“டேய் என்னையும் விளையாட்டில் சேர்த்துக் கோங்க..” என்று கூறியவளைப் பார்த்து,

“இப்போ என்னடா பண்றது..” என்று அவர்களுக்குள் கமிட்டி போட்டுப் பேசினர்.

“சரிக்கா. நீங்க வாங்க நம்ம கிரவுண்டில் விளையாடலாம்..” என்று வாண்டுகள் அவளை வெளியே அழைத்தது.

“நீங்க இங்கே வந்து விளையாடுங்க..” என்றவள் பின் கதவைத் திறந்துவிடவே மொத்தம் பத்து பொடுசுகள் பக்கம் வீட்டிற்குள் நுழைந்தது.

“அக்கா இங்கே எப்படி விளையாடுவது..” என்று தோட்டத்தில் யோசனையுடன் நின்ற குழந்தைகளின் அருகே சென்றவளோ, “ஏன் விளையாட முடியாது..” என்று கேட்டுகொண்டே அங்கே கபடி விளையாடக் கோடு போட்டுவிட்டு வந்தாள்.

“நம்ம இரண்டு அணியாகப் பிரிந்து விளையாடலாம்..” என்று சொல்லி இரண்டு அணியாகப் பிரிந்து ஆட்டத்தைத் துவங்கவே ஆட்டமும் சீக்கிரம் சூடுபிடித்தது.

அந்தநேரம் ஹாரன் சத்தம்கேட்டு கூர்க்கா ஓடிவந்து கதவைத் திறக்கப் போர்டிகோவில் கார் வந்து நின்றது.

கார்முகிலன் காரிலிருந்து கீழிறங்க, “டேய் நீ செய்கிற தப்புக்கு என்னால் பொறுப்பு ஏத்துக்க முடியாது..” என்று அவளின் குரல் அவனின் செவிகளை எட்டியது.

அந்தக்குரல் வந்த திசை நோக்கி நடந்த முகிலனின் அருகே ஓடிவந்த கூர்க்காவும், தோட்டக்காரனும்!

“சின்னம்மா குழந்தைகளைக் கூட்டிட்டு வந்து விளையாட்டிட்டு இருக்காங்க..” என்றதும் அவன் மெளனமாகத் தலையசைத்துவிட்டு அவளைப் பார்த்தான்.

சிறுவர்களின் இடையே நின்றிருந்த அவளோ குழந்தையாக அவனின் கண்களுக்குத் தெரிந்தவளைப் பார்த்ததும் நேற்று அவள் கேட்ட கேள்வி அவனின் கண்முன்னே விஸ்வரூபம் எடுத்து நின்றது.

“டேய் நீ ஆட்டத்தைத் தப்பாக ஆடுகிற..” என்று குட்டி வாண்டுகளிடம் சண்டை போடும் இந்த மேகா அவனுக்குப் புதியவள்.

தான் வந்ததைக் கூடக் கவனிக்காமல் குழந்தைகளோடு சண்டை போடுவதில் குறியாக இருந்தவளை சிறிதுநேரம் நின்று பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்குள் சென்று மறைய மற்ற இருவரும் பெருமூச்சுடன் தங்களின் வேலையில் கவனத்தைத் திருப்பினர்.

அவளின் கேள்விகள் அவனை விழிமூட முடியாமல் இரவு முழுவதும் காரை எடுத்துகொண்டு ஊரைச்சுற்றிவிட்டு இப்பொழுதுதான் வீட்டிற்குள் நுழைகிறான்.

‘அவளுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை..’ என்ற நிதர்சனம் உணர்ந்த முகிலனின் மனதை யாரோ கசக்குவது போல இருந்தது. காதலின் வலி இப்படித்தான் இருக்குமோ? மனதிற்குள் நினைத்துக் கொண்ட முகிலன், ;அவளுக்குப் பிடிக்காது எதுவும் செய்யக்கூடாது’ என்று முடிவெடுத்தான்.

அதன்பிறகு  இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் சத்தர்ப்பதை முற்றிலுமாகத் தவிர்க்க நினைத்த முகிலன் அவனின் கவனத்தை வேலையில் திருப்பவே, மேகா எப்பொழுதும் போல அந்த வீட்டில் இருந்தாள்.

அவர்கள் இருவரின் இடையே பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லாமல் போனது. தாமரை இலையில் தண்ணீரைப் போல அவர்களின் வாழ்க்கையும் பட்டும்படாமல் சென்று கொண்டிருந்தது.

அவளைப் பற்றிய சிந்தனையுடன் சுழன்ற முகிலன் குடிப்பழக்கத்தை மறந்திருக்க அன்று ஒரு முக்கியமான மீட்டிங் சென்ற இடத்தில் அவனின் நண்பர்கள் ஒன்றிணைந்து அவனுக்குச் சரக்கு ஊத்திக் கொடுத்துவிட அதைக் குடித்ததும் போதை தலைக்கு ஏறியது.

அவன் மெல்ல வீடு வந்து சேரும்பொழுது இரவு பத்து மணிக்கு மேல் ஆகவே தள்ளாடிய வண்ணம் வீட்டிற்குள் நுழைந்தவனை நிமிர்ந்து பார்த்தவள், “என்ன சாரே இன்னைக்கும் உங்களுக்கு ஆள் கிடைக்கல போல..” என்று நக்கலாகக் கேட்டவளின் அருகே வேகமாக வந்தான்.

“ஏய் இன்னொரு முறை நீ ரெட் என்ற வார்த்தை சொன்ன நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..” என்று அவளைப் பிடித்துச் சோபாவில் தள்ளிவிடத் தொப்பென்று போய் விழுந்தாள் மேகா.

அவளின் முகத்தை இரு கரங்களால் தாங்கிக் கொண்ட முகிலன், “ஏண்டி இப்படி பேசற. கணவன் மனைவிக்குள் நீயா நானா என்ற போட்டி வந்தா இருவரும் சேர்ந்து வாழ முடியாது. நீ பேசுவது உனக்கே தப்பென்று தோணல..” என்று முகிலனின் வார்த்தைகளில் வருத்தம் வெளிப்படையாகத் தெரிந்தது.

அவன் தள்ளாடியபடியே அவளின் அருகே அமர, “நான் பேசுவது தப்புதான். நான் இல்லன்னு சொல்லல. ஆனா என்னை யாரு இப்படி பேச வைக்கறா?” என்று அவனிடமே கேட்டாள்.

அவனும் கன்னத்தில் கைவைத்து யோசித்துவிட்டு, “ஆமா உன்னை யாரு இப்படி பேச வெச்சது..” என்று குறும்புடன் கண்சிமிட்டி அவளை வம்பிற்கு இழுத்தான்.

“நான் ஒருத்தனைக் காதலிச்சேன். அவன் என்னை வேண்டான்னு தூக்கி எறிஞ்சிட்டு போயிட்டான்..” உணர்ச்சிகள் துடைக்கபட்ட முகத்துடன் கூறியவளை இமைக்காமல் பார்த்த முகிலனோ,

“அவன்தானே உன்னைத் தூக்கி எறிஞ்சிட்டு போனான். நீ ஏன் அவனுக்காகக் கவலைப்படற. உண்மையைச் சொல்லப் போனா அவன் உன்னைப் பற்றி யோசிக்க கூட மாட்டான்..” என்று இயல்பாகக் கூறியவனைத் திரும்பிப் பார்த்துக் கசப்புடன் புன்னகைத்தாள்.

“ம்ஹும் உண்மைதான்..” என்றவள் அவனின் முகம் பார்த்தாள்.

முழு போதையில் சர்ட் காலரை தூக்கிவிட்டு சோபாவில் சாய்ந்து அமர்ந்தவனின் கம்பீரத்தை குறை சொல்ல முடியாது.

“ம்ம் மேல சொல்லு..” என்றான் அவன் உளறலாகவே.

“அடுத்து அண்ணியோட பேச்சு கேட்டு அண்ணா உங்களுக்கு என்னைக் கல்யாணம் பண்ணி கொடுத்திட்டான்..” என்றவள் ஏளனமாக உதட்டை வளைத்தாள்.

அவளின் உணர்வுகள் அவளுக்கே புரியாத புதிராக இருக்கும் பட்சத்தில் அவளைப் பற்றி எப்படி அவன் தெளிவாக உணர முடியும்? ஒருவரின் மனதில் தோன்றும் உணர்வுகள் மிகவும் விநோதமானது என்று அவளைப் பார்த்து புரிந்துப் கொண்டான்.

“என்னைக் கட்டிகிட்டு நீ என்ன பண்ணன..” என்று கேட்டவனுக்கே அந்த கேள்வியில் துளியும் நியாயம் இல்லை என்று தெரிந்தாலும்கூட அவனால் கேட்காமல் இருக்க முடியவில்லை. அவனின் கேள்வியில் அவளுக்கும் சிரிப்புதான் வந்தது போல.

“உங்களைக் கல்யாணம் பண்ணி நான் ஒண்ணும் சாதிக்கல. ஆனா நீங்க உங்களோட தேவைக்கு என்னை யூஸ் பண்ணிகிட்டீங்க..” என்றவள் கடைசியாகத் தொடங்கிய இடத்திலேயே வந்து நின்றாள்.

அவளின் பதிலில் அவளின் அருகே வந்தவன், “அதை ஏன் நீ இயல்பாக எடுத்துக்க முடியல..” என்று சாதாரணமாகத் தான் கேட்டான்.

“பிறந்த வீட்டில் எனக்கென்று பேச யாரும் இல்ல. புகுந்த வீடு நான் ஆசைபட்ட மாதிரி அமையல. எனக்கென்று யாருமில்ல என்ற எண்ணம். நான் யாரின் மீதும் ஆசைபடல. நான் இப்படித்தாங்கிற எண்ணமும் சேர்ந்து தான் என்னைத் தனிமை நிழலில் நிற்க வைக்குதோ..” என்று சிந்தனையுடன் புருவம் சுருக்கி யோசித்தாள்.

அவளின் இரண்டு புருவங்களையும் வருடிச் சரிசெய்த முகிலன், “நம்ம கேட்டது கிடைக்கல. நமக்குக் கிடைச்சதும் சரியில்லன்னு முடிவு பண்ணிட்ட. அதுதான் இப்படி தோணுது. சோ உன்னிடம் மிஸ்டேக் இல்ல. உன்னைப் புரிஞ்சிக்க முடியாமல் தவறு செய்த என்மேல்தான் மிஸ்டேக்..” என்று விலக நினைத்தவன் அவளின் உதட்டைப் பார்த்தான்.

“ஸாரி என்னால கன்ரோல் பண்ண முடியல..” என்று சொல்லி அவளின் இதழில் முத்தமிட்டான். அதே நேரத்தில் அவனிடமிருந்து வந்த சாராயவாசனை அவளின் நாசிக்குள் நுழைந்ததும் அடிவயிற்றிலிருந்து குமட்டியது.

அவனைத் தள்ளிவிட்டு விலகி வாஷ்பெசனை நோக்கி ஓடிய மேகா, “உவே..” என்று வாந்தி எடுக்க, ‘என்னை இந்தளவுக்கு வெறுக்கிற..’ என்ற கேள்வியுடன் நின்ற இடத்தில் சிலையானான் முகிலன்.

அவள் வாந்தி எடுத்துவிட்டு சுவரில் சாய்ந்து நிற்க, “என்னைப் பார்த்த அவ்வளவு அருவருப்பா இருக்கா..” என்று தவிப்புடன் பார்த்த முகிலனைப் பார்த்து மறுப்பாகத் தலையசைத்தவள்,

“எல்லாம் விதியின் விளையாட்டு..” கன்னத்தில் வழிந்த கண்ணீரோடு சொல்லிவிட்டுத் தள்ளாடியபடியே அவளின் அறைக்குள் சென்று மறைந்தாள். தன்னறைக்கு சென்ற மேகா மண்டியிட்டு அமர்ந்து ஒரே மூச்சாக அழுத்துவிட்டு நிமிர்ந்தவளின் மனதில் தெளிவு பிறந்தது.

அவளின் மனம் என்னவென்று புரிந்து கொள்ள முடியாமல் சோபாவில் அமர்ந்த முகிலன் எப்பொழுது தூங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை.

மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது.

காலையில் வழக்கத்திற்கு மாறாகச் சீக்கிரம் கிளம்பிய முகிலனின் செல்போன் சிணுங்கிட, “ஹலோ சுரேஷ் சொல்லு..” என்றான் கழுத்தில் டையைக் கட்டியபடி.

“சார் நான் அப்பாய்ன்மென்ட் வாங்கிட்டேன்..” என்று சொல்ல,

“சரி அப்போ அந்த அட்ரஸ் மட்டும் எனக்கு டெக்ஸ்ட் பண்ணிவிடு.. நான் போய்ப் பார்த்துகிறேன்..” என்றான்.

அடுத்த சிலநொடியில் அவனுக்கு முகவரி வந்துவிட, “வர்ஷா நான் கொஞ்சம் வெளியே போறேன்..” என்றவனின் குரல்கேட்டு அவனுக்கே அதிர்ச்சியாக இருந்தது.

அவள் அவனை நெருங்கி வராவிட்டாலும் இவனின் மனம் அவளை நெருங்குவதை மனதார உணர்ந்த முகிலனின் உதட்டில் பளிச்சென்று வந்து சென்றது ஒரு புன்னகை. அது அவனின் உள்ளத்தின் பிரதிபலிப்பு.

அவன் சென்றபிறகு அறையைவிட்டு வெளியே வந்த மேகாவின் பார்வை வீட்டைச்சுற்றி வந்தது. அவன் அங்கில்லை என்று உறுதி செய்துகொண்டு அங்கிருந்து கிளம்பிய மேகாநேராகச் சென்ற இடம் மருத்துவமனை!

ஒரு டாக்டரிடம் அப்பாயின்மென்ட் வாங்க வரிசையில் அமர்ந்திருந்த மேகாவைப் பார்த்த முகிலன், ‘இவ எதுக்கு வந்தா?’ புருவங்கள் கேள்வியாகச் சுருங்கி யோசனையுடன் அவளை நோக்கிச் சென்றான்.

அந்த வரிசையில் சில கன்சீவான பெண்கள் அமர்ந்திருப்பது கண்டவன் மனம் புரிந்து கொண்ட விஷயம் சரியா தவறா என்று உணர முடியாமல் மனதிற்குள் தவித்துப் போனான்.

அவனின் கணிப்பு சரியாக இருந்தால், ‘நான் அப்பா ஆகப்போறேனா..’ என்ற குழப்பத்துடன் அவளை நெருங்கினான். தனக்கென்று ஒரு சொந்தம் வரப்போவது நினைத்து அவனின் மனதில் மகிழ்ச்சி ஊர்றேடுத்தது.

‘அது உண்மையா என்று தெரியாமல் சந்தோசப்படாதே..’ என்று அவனின் மனம் எச்சரிக்கை செய்ய தன்னைச் சுதாரித்து அவளின் அருகே சென்றான்.

அவள் பதட்டத்துடன் அமர்ந்திருக்க, “வர்ஷா..” என்றவனின் குரலில் அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

‘இவன் எதுக்கு இங்க வந்தான்..’ என்ற கேள்வியுடன் நிமிர்ந்தவளின் எதிரே தன்னுடைய வழக்கமான கம்பீரத்துடன் நின்றிருந்தவனைப் பார்த்து அவளின் இதயத்துடிப்பு எகிறியது.

அவளின் நெற்றியில் முத்து முத்தாக வேர்ப்பது கண்டதுமே அவள் ஏதோ தவறுச் செய்ய போகிறாள் என்று உணர்ந்தவனின் பார்வையில் கூர்மை அதிகரிக்க, “இங்க உனக்கு என்ன வேலை?” என்று அழுத்தமாகக் கேட்டவனிடம் எப்படி உண்மையை மறைப்பது என்று தெரியாமல் திருதிருவென்று விழித்தாள்.

அவள் அவனுக்குப் பதில் சொல்லும் முன்னரே நர்ஸ் வெளியே வந்து, “மேகவர்ஷினி கார்முகிலன்..” என்று அழைக்க அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்தவண்ணம் நின்றிருந்தவளின் கரம்பிடித்தவன் அழைத்துச் சென்றான்.

அவர்கள் உள்ளே நுழைந்ததும் “வாங்க டேக் யுவர் சீட்..”அவளைப் பார்த்துப் புன்னகைத்த டாக்டர், “உங்களுக்கு என்ன பண்ணுது மேகா..” என்று கேட்க மேகாவோ கணவனைத் திரும்பிப் பார்த்தாள்.

அவளிடமிருந்து உண்மையை எளிதில் வாங்க முடியாது என்று அவனுக்கு தெரியும் அதனால் வேண்டுமென்றே, “ஒரு வாரமாக வாமிட் அதிகமாக எடுக்கிற டாக்டர். இவகிட்ட கேட்டா பதில் வரல. அதா கூட்டிட்டு வந்தேன். இவளைத் தரவா செக் பண்ணி சொல்லுங்க..” என்ற முகிலனின் பார்வை மனைவியின் பக்கம் திரும்பியது.

‘என்னிடம் நீ சொல்லல..’ என்ற குற்றச்சாட்டு அவனின் பார்வையில் உணர்ந்த மேகா தலையைக்குனிந்து கொண்டாள்.

“ம்ம் மனைவி மேல இவ்வளவு அக்கறை..” என்று சிரித்தபடி கூறிய டாக்டர் அவளை அழைத்துச்சென்று செக் பண்ண பதட்டத்துடன் வெளியே அமர்ந்திருந்தான் முகிலன்.

“முகிலன் கன்க்ராட்ஸ். நீங்க அப்பா ஆகப் போறீங்க..” என்றதும் அவனின் முகம் பிரகாசமாக மாறுவதைக் கண்டவளின் மனம் கொஞ்சம் இளகியது.

ஆனால் அது நல்லதல்ல என்று மறுநிமிடமே தன்னுடைய மனதை மாற்றிக்கொண்ட மேகா, “இந்தக் குழந்தை எனக்கு வேண்டாம் டாக்டர்..” என்றாள் தெளிவாக.

அவளின் குரல்கேட்டு நிமிர்ந்த முகிலன், “ஸாரி டாக்டர். எனக்கு என்னோட குழந்தை கண்டிப்பா வேணும். அதுக்கு என்ன கொடுக்கணுமோ அதை மட்டும் கொடுங்க. எனக்கு இந்தக் குழந்தைக் கண்டிப்பாக வேணும்..” என்றவனின் பார்வை அவளின் மீது அழுத்தத்துடன் படிந்து மீண்டது.

இருவரையும் பார்த்த டாக்டர், “இவங்க வேண்டான்னு சொல்றாங்க. நீங்க வேணும்ன்னு சொல்றீங்க. நீங்க இருவரும் பேசி ஒரு முடிவெடுத்துட்டு வாங்க..” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.

அவர்கள் இருவரும் மருத்துவமனை விட்டு வெளியே வந்ததும், “ம்ம் வண்டியில் ஏறு..” என்று உறுமிவிட்டு காரின் மறுப்பக்கம் சென்ற முகிலன் காரில் ஏறினான்.

அவள் அமைதியாக நின்றிருக்கவே அவனின் கோபம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிக்க, “வர்ஷா வண்டியில் ஏறுன்னு சொன்னேன். அது உன்னோட காதில் விழுந்துச்சா..” என்றவனின் குரலில் அடக்கபட்ட கோபம் தென்படவே வேகமாகக் காரில் ஏறினாள்.

அவள் ஏறியதும் காரை எடுத்த முகிலன் வேகத்தில்செல்ல வெளியே வேடிக்கைப் பார்த்துகொண்டு வந்தவள் வாய்திறந்து ஏதாவது பேசுவாளோ என்று அவன் எதிர்பார்க்க அது ஏமாற்றத்தில் போய்தான் முடிந்தது.

வீடு செல்லும் வரை பொறுமை இல்லாமல் காரை ஆள் ஆரவாரம் அற்ற ஓரிடத்தில் நிறுத்தினான்.

error: Content is protected !!