MA – 9

MA – 9

அத்தியாயம் – 9

இருவரும் இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்குச் சாட்சியாக தன் கையிலிருந்த தளிர்மலரை மெல்ல வருடியது அவளின் விரல்கள். அவளுக்கென்று யாருமில்லை என்று அவள் வருத்திய நாட்கள் எல்லாம் பொய்யாக அவளுக்கென்று ஒரு உறவு மகளாக வந்து இந்தப் பூமியில் பிறந்தை எண்ணி அவளின் மனம் எல்லை இல்லாத சந்தோஷம்.

‘உன்னை வெறுத்துட்டு வேண்டான்னு தூக்கி எறிஞ்சிட்டுப் போறேன்னு நினைக்காதே குட்டிம்மா. எந்த ஒருதாயும் தன்னுடைய குழந்தையை வேண்டான்னு உதற மாட்டா. ஆன நாங்க சேர்ந்து வாழ்ந்தா அது உன்னைக் காயப்படுத்தும்..’ என்றவளின் கைவிரல்கள் குழந்தையின் தளிர் விரல்களை மெல்ல வருடியது.

‘நாங்க சேர்ந்து வாழ்ந்து அடுத்த குழந்தைக் காதலுக்குப் பரிசாக பிறக்கும். உன்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் அன்று நான் அனுபவித்த அந்த வலி மனதிற்குள் வந்து வந்து போகும். அப்போ நான் வெறுப்புடன் சண்டை போடும்போது அது உன்னோட மனசை காயப்படுத்தும். என் மகள் அந்த வலியை அனுபவிக்க கூடாது..’ என்றவள் குழந்தையின் நெற்றியில் கண்ணீரோடு இதழ் பதித்துவிட்டு அறையைவிட்டு வெளியே வந்தாள்.

தன் கையில் பேப்பர் வடிவில் இருந்த டைவர்ஸ் பேப்பரைப் பார்த்து, “ஒரு நிமிஷம் கூட உன் மனதில் காதல் வரவே இல்லையா?” என்று வலியுடன் கேட்டான்.

“இல்ல..” என்றாள் அவளும் விரக்தியுடன்.

“நான் செய்த தவறை மன்னிக்கவே முடியாதா?” அவனின் பார்வை அவளின் பார்வையோடு கலக்கவிட்டபடி.

“முடியாது..” என்றாள் அவள் தெளிவாக..

“ஏன் மறக்க முடியாது?” அவனிடமிருந்து வேகமாக வந்து விழுந்தது வார்த்தைகள்.

“அதெல்லாம் மறந்துட்டேன்னு சொல்லி என்னையும் நான் ஏமாற்றிகிட்டு உங்களையும் ஏமாற்றி கடைசி வரைக்கும் பொய்யான ஒரு வாழ்க்கை வாழ நான் தயாராக இல்ல..” என்றாள் எங்கோ பார்த்தபடி.

“சரி மேகா உன்னோட விருப்பம் நான் உன்னைத் தடுக்கல..” என்று சொல்லிவிட்டு அந்த அறையைவிட்டு வெளியே சென்றான்.

அவன் சென்று சோபாவில் அமர்ந்து கரங்களில் முகம் புதைத்து அமர்ந்திருக்க, “முகில்..” என்று அழைக்க நிமிர்ந்து அவளின் முகம் பார்த்தான்.

அவளின் கையிலிருந்த குழந்தையை அவனின் கையில் கொடுத்துவிட்டு, “ஒவ்வொரு பெண்ணுக்கும் கல்யாணத்திற்கு முன்னும், பின்னும் ஆயிரம் கனவுகளும், ஆசைகளும் இருக்கும். அவளிடம் ஒரு முறையாவது அதையெல்லாம் கேளுங்க கதைக் கதையாக சொல்வா..” என்றவள் நிறுத்தி அவனின் முகம் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்.

“அதே நேரத்தில் ஆம்பளைங்க நீங்களா ஒரு முடிவை எடுத்துட்டு அதை அவளிடம் திணிக்காதீங்க. அதை அவளால் ஏற்றுக்க முடியாது..” என்ற மேகா அந்த அறையை நோக்கிச் சென்றாள்

அவன் அமைதியாகக் குழந்தையின் முகம் பார்க்க, “சரி முகில் நான் கிளம்பறேன்..” என்று கையில் பெட்டியுடன் வந்த மேகா வாசலை நோக்கிச் சென்றாள்.

தன் கையிலிருந்த குழந்தையைப் படுக்கையில் போட்டுவிட்டு ஓடி வந்தவன் அவள் வாசல்படியைத் தாண்டும் முன்னே, “ஒரு நிமிஷம் மேகா..” அவளின் கைபற்றித் தடுத்தான்.

அவள் கேள்வியாக அவனின் முகம் பார்க்க, “என்ன முகில்..” என்றாள். சிலநொடியில் அவனின் விழிகளை நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ள அவனின் பார்வையில் வலி வெளிப்படையாகத் தெரிந்தது.

“ஸாரிடி..” அவளை இழுத்து அணைத்தவன் தன் இதழ்கொண்டு அவளின் இதழை மூடினான்.  அவனின் காதல் பார்வைக்கு கட்டுப்பட்ட மேகா அவனின் கைவளைவிற்குள் முரண்டுபிடிக்காமல் நின்றாள்.

அந்த இதழ் முத்தம் எவ்வளவு நேரம் நீடித்ததோ குழந்தையின் சிணுங்கள் சத்தம்கேட்டு அவளைவிட்டு விலகிய முகில், “ம்ம் சரி மேகா நீ கிளம்புமா..” என்று அவளுக்குக் கையசைத்தவண்ணம் நின்றான்.

வீட்டின் உள்ளிருந்து, “வீர்..” என்று கத்திய குழந்தையின் அழுகைக் குரல்கேட்டு, “குட்டிம்மா இருடா அப்பா வந்துட்டேன்..” வீட்டிற்குள் சென்று மறைந்தான்.

மேகா அங்கிருந்து செல்ல அறைக்குள் நுழைந்து குழந்தையைத் தூக்கிய முகிலன், “பாப்பா பிடிக்காதுன்னு சொன்னபிறகு அவங்களைக் கட்டாயபடுத்துவதில் அர்த்தமே இல்ல. அப்பாக்கு நீங்க இருக்கீங்க.. இனிமே என்னோட உலகமே நீதான் குட்டிம்மா..” என்று குழந்தைத் தூக்கி மார்புடன் அணைத்துக்கொண்டான்.

அவள் சென்ற சிலநொடியில் வீட்டின் வாசலில் கார் சத்தம் கேட்கவே, “முகிலா.. முகிலா” என்ற அழைப்புடன் வீட்டிற்குள் நுழைந்தார் சீதா.

அவரின் குரல்கேட்டு அறையைவிட்டு வெளியே வந்த முகிலன், “பாப்பாவைக் கொஞ்சநேரம் வெச்சிருங்க நான் இதோ வரேன்..” என்றவன் காரணத்தைச் சொல்லாமல் காரை எடுத்துகொண்டு சென்றான்.

அவன் பதட்டத்துடன் செல்வதைக் கவனித்தவரின் உள்ளம் பதற, ‘அந்தப் பொண்ணு மேகா இப்போதானே ரோட்டில் போச்சு..’ என்று மனதிற்குள் நினைத்தவர், “டிரைவர் நீ வண்டியை எடுப்பா..” என்று அவரும் கையில் குழந்தையுடன் வண்டியில் ஏறினார்.

மேகா அங்கே இருக்கும் கோவிலின் உள்ளே நுழைவதைப் பார்த்துக் காரை ஓரம்கட்டி நிறுத்துவிட்டு கோவிலுக்குள் சென்றான்.

அந்த வீட்டைவிட்டு வெளியே வந்தவள் அங்கிருந்த ஒரு கோவிலில் சென்று அமர்ந்து யோசித்த மேகா, ‘ம்ம் எல்லாமே முடிஞ்சிது..’ என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்.

அவள் தூணின் மீது சாய்ந்து அமர்ந்து அழுவதைக் கவனித்தவன், “என்ன தைரியம் இருந்தா கட்டின புருஷன் வேண்டாம், பெத்த பிள்ளையும் வேண்டான்னு தூக்கி எறிஞ்சிட்டு இங்க வந்து உட்கார்ந்திருப்ப..” என்று கேட்டவனின் குரலில் நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தாள் மேகா.

அவள் அழுதிருக்கிறாள் என்று புரியவே, “ஏண்டி உனக்கு என்மேலும், குழந்தை மேலும் அவ்வளவு வெறுப்பா..” என்று கேட்க மறுப்பாகத் தலையசைத்தவள்,

“எனக்கு உங்க மேலயோ இல்ல உங்க குழந்தை மேலயோ வெறுப்பு இல்ல. பத்து மாசம் சுமந்து வலியோடு பெற்றெடுத்த குழந்தையை யாராவது வேண்டான்னு சொல்வாங்களா. அதே நான் செய்யக் காரணம் நீங்கதான். அன்னைக்கு ஒரு நாள் நான் வாழ்ந்த கசந்த வாழ்க்கையில் என்னோட மனசு  காயம்பட்டுப் போச்சு. என்னோட மனசில் ஏற்பட்ட புண்ணுதான் ஆறியிருக்கும். வடு மறையவே மறையாதுங்க..” என்றவளின் கண்ணீர் பெருகியது..

“இப்போ உன்னோட ஆசைதான் என்ன?” என்று அவன் அவளின் அருகே அமர்ந்து பொறுமையுடன் கேட்டான்.

“இதை நீங்க முன்னாடியே கேட்கல. உங்களைக் கல்யாணம் பண்ணிட்டு வந்த அன்னைக்கு ஒரு வார்த்தைக் கேட்டிருக்கலாம் இல்ல. அதுக்கு பிறகு எத்தனையோ நாள் இருந்தது அப்போ கேட்டிருக்கலாம். இப்போ வந்து கேட்கிறீங்க..” என்று கசந்த புன்னகையுடன் கேட்டாள்.

“சரி அப்போ எனக்குக் கேட்கணும்னு தோணல இப்போ சொல்லு..” என்றான் அவன் புன்னகையுடன்.

“சின்ன வயதிலிருந்து ஏமாற்றத்தைப் பார்த்து பார்த்து மனசு இறுகிப்போச்சுங்க. காதலிச்சவன் உதறிட்டுப் போனதுக்கு கூட இன்னைக்கு வரைக்கும் நான் வருத்தப்படல. ஆனா நீங்கச் செய்ததை என்னால மறக்க முடியல..” என்றாள் தெளிவாகவே.

“அதை நான் மறக்க வைக்கிறேன்.. உன்னோட ஆசையெல்லாம் நான் நிறைவேற்றி வைக்கிறேன்..” என்றான் முகிலனின் வார்த்தைகளுக்கு அவள் செவி சாய்க்காமல் இருக்கவே,

“எனக்கு ஆசை இருக்கு வர்ஷா. நீ நான் நம்ம குழந்தை மூவரும் ஒன்றாக இருக்கணும்னு ரொம்ப ஆசையாக இருக்கு..” என்றான் அவளிடம் ஒரு குழந்தைப் போல.

“நான் கேட்டப்போ எனக்கு என்னோட ஆசைகள் நிறைவேறல.. இன்னைக்கு நீங்கக் கேட்கும் போது அதை நிறைவேற்ற வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்ல..” என்று எழுந்து வாசல்வரை சென்றவள் மீண்டும் திரும்பி வந்து அவனின் முன்னே நின்றாள்.

“மின்மினியில் ஆசைகள் சிலநொடியில் மனசில் மின்னி மறைவது. அது இறந்து போச்சு. இப்போ அதுக்கு உயிர்கொடுக்க உங்களால் முடியாது. அது மண்ணில் விழுந்த விதையாக இருந்தா மீண்டும் முளைக்கும். என்னோட ஆசைகளுக்கு உங்களால் உயிர்கொடுக்க முடியாது..” என்றாள் முடிவாகவே சொல்லிவிட்டு கோயிலை விட்டு வெளியேறினாள்.

அவள் கடைசிவரை மருத்துமனையில் தான் தெரிந்து கொண்ட உண்மையை அவனிடம் சொல்லவே இல்லை. அது அவனுக்கு தெரிய வரும்போது என்ன நிகழுமோ?

அவள் பேசியதை எல்லாம் கேட்ட சீதாவோ, “அட என்ன பொண்ணு இவ. இத்தனை பணம், காரு, சொத்துசுகம் எல்லாமே இருக்கு.. அதை எல்லாம் வெச்சு வாழாமல் வேண்டான்னு உதறிட்டு போறாளே..” என்ற ஆதங்கத்தில் அவர் சொல்லவே,

“அவள் போகட்டும் சித்தி.. இதெல்லாம் விட அவளோட விருப்பத்தை ஒரு நிமிடம் நான் கேட்பேனா என்று எதிர்பார்த்து ஏமாந்து போயிருக்கா. அவளை நோகடிக்க மனசு வரல. அவ வழியில் அவ போகட்டும்..” என்று அவரின் கையிலிருந்த குழந்தையை வாங்கிக் கொண்டான்.

அதன்பிறகு ரயிலில் பூனே வந்தவள் தன்னுடைய கையில் இருந்த பணத்தை வைத்து ஹாஸ்டலில் சேர்ந்தாள். தன்னால் முடிந்தளவு முயற்சி செய்து வேலையில் சேர்ந்தாள்.

இந்த இடைபட்ட மாதங்களில் முகிலனின் வாழ்க்கையில் பல மாற்றங்கள்.

மனைவி இல்லாமல் மகளை வளர்ப்பதோடு சேர்த்து கம்பெனியின் நிர்வாகத்தையும் அவன் திறமையுடன் செய்தான். சிலநேரங்களில் மேகா பற்றிய நினைவு வரும். அவள் ஏன் தன்னைவிட்டு போனாள் என்று மனம் கேட்கும் கேள்விக்கு அவனிடம் விடையில்லை.

அந்த மாதிரி நேரத்தில் தான் ஒருநாள் மேகாவின் தோழி என்று கீதாவிடம் இருந்து கம்பெனியின் முகவரிக்கு ஒரு போஸ்ட் வந்தது. சுரேஷ் வழக்கம்போல முகிலனின் பார்வைக்காக அவனின் டேபிளில் அதை கொண்டுவந்து வைத்தான்.

அன்று கம்பெனி ஃபைல்ஸ் எல்லாம் வரிசையாக பார்த்துக்கொண்டே வந்தவனின் கைகளுக்கு அந்த பிரவுன்கலர் ஃபைலை எடுத்தான்.

அதில் மேகவர்ஷினி என்ற பெயரைக் கண்டதும் அவன் வேகமாக பிரித்துப் படித்தது மட்டும் இல்லாமல் கீதாவின் கடிதத்தையும் படித்தான். அவள் ஏன் தன்னை விலகிப் போனால் என்ற உண்மை புரிய, “மேகா உனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பது தெரிந்துதான் என்னைவிட்டு விலகி போனீயா?” என்று கதறினான்.

அந்தநேரம் சுரேஷ் அவனின் கேபினுக்குள் நுழைய பாஸ் இருந்த நிலையைக் கண்டு, “என்ன சார் ஆச்சு” என்று கேட்க அவன் அந்த பைலை அவனிடம் கொடுத்தான்.

அவன் அதைப் படித்து முடித்துவிட்டு, “மேகா மேடம் எங்கிருந்தாலும் கூட்டிட்டு வந்துருங்க சார்” என்றான். அதற்கு பிறகு முகிலன் பேசிய வார்த்தைகள் சுரேஷ் மனதில் மறையாத கல்வேட்டாகவே மாறிப்போனது.

இப்படியே நாட்கள் வாரங்களாக மாறி மாசங்களாகக் கடந்து வருடமாக உருண்டோடியது.

அவள் தனியாகவே வேலை செய்து அந்தப் பணத்தில் செலவு போக மீதியை சேர்த்து வைத்து மீண்டும் தன்னுடைய படிப்பைத் தொடர்ந்தாள். அப்பொழுது முகிலனின் நினைவு வரும்போது அவனை சென்று பார்ப்பாள்.

அவன் அறியாதபடி தூரத்தில் நின்று பார்த்துவிட்டு உடனே வந்துவிடுவாள். அவள் படிப்பை முடித்துவிட்டு திரும்பிப் பார்க்கும்போது எட்டு வருடம் சென்று மறைந்தது.

இதற்கிடையே எதர்ச்சியாக என்றபோதும் பலமுறை முகிலன் மேகாவைப் பார்த்தான். அவள் தூரத்தில் இருந்தாலும் அவள் அறியாத வண்ணம் விழிகளால் அவளை நிரப்பிவிட்டு அங்கிருந்து அகன்றுவிடுவான்.

மீண்டும் பூனேவிலிருந்து சென்னை வந்த மேகா அங்கிருந்த ஸ்கூல் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து நாட்கள் தெளிந்த நீரோடைப் போல சென்றது. வீட்டிற்கும், ஸ்கூலிற்கும் ரொம்ப தூரம் என்பதால் மீண்டும் பஸில் சென்றுவர அப்பொழுதுதான் சித்தார்த்தை சந்தித்தாள்.

காலையில் வழக்கம்போல பஸில் ஏறியவள் அந்தப் பையனின் அருகே சென்று, “சார் நான் உங்க பக்கத்தில் உட்காரலாமா?” என்று குறும்புடன் கேட்க நிமிர்ந்து அவளைப் பார்த்தவன்,

“ம்ம் உட்காருங்க..” என்று சொல்லிவிட்டு ஜன்னலோரம் வேடிக்கைப் பார்க்க அவனுடைய ஸ்கூல் ட்ரஸ் ஸ்கூல் பேக் இரண்டையும் பார்த்துச் சிரித்துக்கொண்டே அவனின் அருகே அமர்ந்தாள்.

“சித்து என்மேல் கோபமா..” என்று அவனிடம் பேச்சு கொடுத்தாள் மேகா.

அவனிடம் அசைவு இல்லாமல் இருக்க, “எனக்கு உடம்பு சரியில்லடா..” என்றவள் மெல்லிய குரலில் சொல்ல வெடுக்கென்று அவளின் பக்கம் திரும்பினான்.

“இப்போ பரவல்ல தானே..” அக்கறையுடன் கேட்டவனின் கன்னத்தை வருடியவள். “ம்ம் இப்போ நல்ல இருக்கேன்..” என்றாள் சிரிப்புடன்.

“நீ ஸ்கூலுக்கு வரல என்றதும் பதறிட்டேன்..” என்றவனின் முகத்தில் தோன்றி மறைந்த பதட்டம் கண்டு புன்னகைத்தவளின் கையைப் பிடித்துக் கிள்ளி வைத்தான்.

“நான் உன்னோட ஸ்கூல் டீச்சர்டா..” என்று அவனுக்கு நினைவுபடுத்தவே, “அதுக்காக உன்னைக் கண்டிக்க கூடாதுன்னு சொல்றீயா?” என்று அவளிடம் சண்டைக்கு வந்தான்.

“நான் யாருக்கும் பயப்பட்டது இல்லடா. ஆனா உனக்குத் தினமும் பயப்பட வேண்டியதாக இருக்கு..” என்று சொல்லிவிட்டு, “சாப்பிட்டியாடா?” என்று கேட்டாள்.

“இல்ல இன்னைக்கு அந்தக் குண்டு எனக்குச் சாப்பாடு போடல..” என்றான் அவன் வருத்ததுடன்.

“ஏண்டா ஆசரமத்தில் சாப்பாடு போடுவாங்களே..” என்று சந்தேகமாகக் கேட்டாள் மேகா.

“ஆமா காலையில் யாரோ வந்து சாப்பாடு போடும் வரை அமைதியா இருன்னு சொன்னா நான் கேட்கல. அதுதான் பட்டினியா அனுப்பிட்டா..” என்றான்

“சரி விடுடா. நான் உனக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்துட்டு வந்திருக்கேன்..” என்றாள் மேகா புன்னகையுடன். அதற்குள் பஸ் நிற்க இருவரும் இறங்கி பள்ளிக்குள் நுழைந்தனர்.

சித்தார்த்திற்கு தாய், தந்தை இல்லை. ஆசரமத்தில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறான். வயது பதினான்கு. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தச் சிறுவனின் புன்னகையிலும், கோபத்திலும் தான் தன்னை பழைய மேகாவாக உணர்கிறாள்

அன்று மாலை கோவிலுக்கு அழைத்துச் சென்ற மேகா சாமி கும்பிட்டுவிட்டு பிரகாரத்தில் வந்து அமர, “உனக்கு ஆசையே இல்லையா மேகா..” என்று கேட்டவனைப் புரியாத பார்வை பார்த்தாள் மேகா.

“ஏண்டா இப்படி கேட்கிற..” பொங்கலை சாப்பிட்டுக் கொண்டே கேட்க, “இல்ல சொல்லு தெரிஞ்சிக்கலாம்..” என்றான் அவன்.

“நான் ஆசைப்படும் எதுவுமே கிடைக்காது சித்து. அதனால் இதுவரை நான் எதையுமே ஆசைபடல..” என்று விரக்தியுடன் புன்னகைத்தாள்.

அவளை யோசனையோடு பார்த்த சித்து, “உனக்கு யாருமே இல்லையா? ஏன் நீ தனியாக இருக்கிற..” என்று தன்னுடைய மனதின் சந்தேகத்தைக் கேட்டான்.

“எனக்கு எல்லோரும் இருந்தாங்கடா..” என்று சிறுபையனிடம் அனைத்தையும் பகிர்ந்தவளின் கண்கள் லேசாகக் கலங்கியது..

“நீ பாப்பாவைத் தூக்கிட்டு வந்திருந்தா நம்ம பாப்பாவை வளர்த்திருக்கலாம் இல்ல. அவரு மறுபடியும் தப்புச் செய்ய மாட்டாரா?” என்று சந்தேகமாக இழுத்தவனின் முகத்தைப் பார்த்துப் பளிச்சென்று புன்னகைத்தாள் மேகா.

“ஒருத்தங்க திருந்தியபிறகு மீண்டும் அவங்களை சந்தேகமாகப் பார்க்க கூடாதுடா. அவரு பாப்பாவை குழந்தையை நல்லா வளர்ப்பார்..” என்றவள் தன்னையும் மறந்து தொடர்ந்தாள்..

“நான் அங்க இருந்தா வெறுப்பில் அவரைத் திட்டுவேன். அது குழந்தையோட மனசைப் பாதிக்கும். அவளுக்காக வாழ்கிறோம் என்ற திரையில் எங்களை நாங்களே ஏமாற்றிக்கொண்டு வாழ எனக்கு மனசு வரலடா..” என்றவளின் மனத்திரையில் அவனின் முகம் வந்து போனது.

இருவரும் பொடிநடையாக ஆசரமம் நோக்கி நடக்க கொஞ்சம் புதர்போல இருந்த இடத்தைக் கண்ட சித்தார்த், “ஒரு நிமிஷம் நில்லு மேகா..” என்றவன் குதிக்க, “ஏண்டா..” என்றாள்

“நீ இங்கேயே நில்லு..” என்று சொல்லிவிட்டு அந்தப் புதரை நோக்கி ஓடியவனைக் கண்டு பயத்துடன், “டேய் இந்த நேரத்தில் பூச்சி போட்டு ஏதாவது கடிச்சிட போகுது சித்து நில்லு..” என்று அவனின் பின்னோடு சென்றாள்.

அவன் மெல்ல சென்று அங்கிருந்த ஒரு செடியைத் தட்டிட, “சித்து என்னடா சொன்ன பேச்சு கேட்காமல் பண்ற..” என்று அவனின் அருகே செல்லச் செடியிலிருந்து வெளிச்சத்துடன் பறந்து சென்ற பூச்சியைப் பார்த்து வியப்பில் விழிவிரிந்தது.

“மின்மினிப்பூச்சி..” என்று அதை எட்டிபிடித்த சித்துவின் கைகளில் ஒரு பூச்சி மட்டும் ஒளிவீச அது அவனின் முகத்தில் பிரதிபலிக்கும்போது அவனின் முகம் தங்கநிறமாக மினுமினுத்தது.

“இந்த மின்மினிபூச்சிக்குப் பின்னாடி எவ்வளவு ஆசைகள் இருக்கும் அக்கா. அது சாகும் வரை அதனிடம் யாருமே கேட்பதில்லை. அப்புறம் அவங்க கேட்கும்போது பதில் சொல்ல அது உயிரோட இருக்காது. அதோட ஆசைகள் வெளிச்சத்திற்கு வர வழியே இல்லாமல் பண்ணுவதுதான் இந்தச் சமூகமா அக்கா..” என்றவனின் வார்த்தைகளில் இருந்த வலியை உணர்ந்து அவனைத் திரும்பிப் பார்த்தாள் மேகா.

“என்னை மாதிரியே ஒளி வீசும் மின்மினிப்பூச்சி. என்னோட ஆசைகளைக் கேட்டு அதை நிறைவேற்றி வைக்க இங்கே யாருமே தயாராக இல்லல்ல..” என்று அவன் தன்போக்கில் பேசியபோது அவனின் உருவத்தில் முதல் முதலாகத் தன்னுடைய தோற்றத்தைக் கண்டாள்.

மெல்ல அவனின் அருகே மண்டியிட்ட மேகா, “நான் உனக்கு இருக்கேன் சித்து. நீ என்னிடம் உன்னோட ஆசையைச் சொல்லிடா. நான் நிறைவேற்றி வைக்கிறேன்..” என்றவள் அவனை இழுத்து மார்போடு அணைத்துக்கொண்டாள்.

“அம்மா..” என்றழைத்த சித்துவின் குரலில் அவளின் கண்களில் கண்ணீர் பெருகியது. அவளாக அவனை அப்படி கூப்பிட சொல்லவில்லை. அவன் அப்படி அழைக்கும்போது இவளும் அதை மற்ற முயற்சிக்கவில்லை.

“நான் இருக்கேண்டா..” என்றவளின் மனதில் மகிழ்ச்சி பொங்கியது.

இதுநாள் வரை தாய் தந்தை இல்லாத சித்துவிற்கு தாயாக மேகா கிடைக்க அவனும் அந்தச் சந்தோசத்தை அனுபவித்தான்.

யாரும் இல்லாமல் தனிமை என்ற நிழல் வாழ வந்தவளின் கையைப்பிடித்த ஒரு மின்மினியின் ஆசையில் அவளின் பாதை மீண்டும் திசை மாறியது அவளின் விருப்பபடி!

அன்று இரவு இலங்கையில் இருக்கும் தன் தோழி கீதாவிற்கு ஒரு கடிதம் எழுதினாள் மேகா. மறுநாள் அதை தோழிக்கு அனுப்பிவிட்டு நிம்மதியாக வாழ்க்கையில் ஈடுபட தொடங்கினாள்.

அதன்பிறகு அவளின் வாழ்க்கைச் சக்கரம் அவனுக்காகச் சுழல நாட்கள் வேகமெடுத்து வருடங்களாக ஓடி மறைந்தது.

error: Content is protected !!