maadiveedu – 16

மாடிவீடு – 16

அங்கும் இங்கும் உறுமலுடன் நடந்துக் கொண்டிருந்தார் ஆலமரம். பாண்டியின் இந்த எதிர்ப்பை அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

பாண்டி தன்னை இந்தளவு எதிர்ப்பான் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

‘ஏதாவது செய்யவேண்டும். இப்படி ஒரு முறைகேடான கல்யாணம் நான் இருக்கும் வரை இங்கு நடக்ககூடாது… நடக்க விடமாட்டேன்’ மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

ஏதோ தோன்றவும், ‘அழகு வந்திருக்கிறானா’ என பார்க்க அவனையும் காணவில்லை.

எதுவோ தவறாக நடப்பதுப் போல் தோன்றியது, ‘அழகுவும் அவனுடன் இணைந்துக் கொண்டானா? அதுதேன் இன்னைக்கு வரலியா?’ மனம் பலவாறாக சிந்தித்துக் கொண்டிருந்தது.

ஆனாலும், அழகு மேல் அத்தனை நம்பிக்கையிருந்தது ‘அவன் நான் வளர்த்தவன், என் எண்ணம் தான் அவன் மனதிலும் இருக்கும். என்னை மீறி எதுவும் அவன் செய்யமாட்டான்’ என்ற எண்ணம் வந்த அதே நேரம் அன்பு மனதில் வந்து தோன்றினாள்.

சின்ன நம்பிக்கை, ‘அழகு இருக்க என்ன பயம்’ பார்த்துக் கொள்ளலாம். ‘அன்பு சிறு பெண் அழகு சொன்னால் கேட்டுக் கொள்வாள்’ எண்ணியவர் முகம் கொஞ்சம் நிம்மதியானது.

தன் தந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் தமிழ்.

அவரின் முகம் பல யோசனைக்கு பின் தெளிந்ததைக் கண்டவள், அன்புவுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணினாள்.

திருமணம் பேச வந்ததற்க்கே தன் தந்தை அப்படி குதித்தார். தனக்கும், அழகுவுக்கும் திருமணம் நடந்ததை அறிந்தால் அவர் எவ்வாறு மாறுவார் என எண்ணாமல் போனாள் தமிழ்.

அவளின் எண்ணம் எல்லாம், முதலில் அன்புவை பார்போம், அதன் பிறகு மெதுவாக தன்னை பற்றி கூறலாம். தான் விடாபிடியாக இருந்தால் தன் பாசமுள்ள தந்தை தனக்காய் மாறுவார் என்ற எண்ணம் அவளுடையது.

‘அழகுவிடம், இங்கு நடந்ததை உடனே கூறவேண்டும்’ என எண்ணிய தமிழ் “அப்பா, கோவில் வரைக்கும் போயிட்டு வரவா?” என மெதுவாக கேட்டாள்.

எதையும் அவளிடம் காட்ட விரும்பாதவர் “இன்னைக்கு வேண்டாம் தமிழ்… நாளைக்கு அழகு கிட்ட கூட்டிட்டு போக சொல்லுதேன் சரியா” என்றவர் கூடவே “இன்னைக்கு அந்த பயலை வேற காணும் எங்க போனானோ?” என அவர்பாட்டுக்கு கூறி செல்ல,

“சரிப்பா” என்றபடி யோசனையாக நகர்ந்தாள் தமிழ்.

‘பாண்டி, ஏதாவது செய்யும் முன் நாம் ஏதாவது செய்யவேண்டும்’ எண்ணிய ஆலமரத்தான் அவரே மாட்டுவண்டியை கட்டிக் கொண்டு வெளியே சென்றுவிட்டார்.

தமிழ் மனம் தவித்துக் கொண்டிருந்தது. ‘அன்புவுக்கு ஏதாவது நல்லது பண்ணவேண்டும்’ என தோன்றியது.

அன்பு மேல் அழகு உயிராய் இருப்பான் என்பது ஊர் அறிந்த விஷயம். அவனுக்காகவேனும் அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கவேண்டும்.

அமுதன் மூலமாக அன்புவுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்றால், அதை அவளுக்கு செய்தே ஆகவேண்டும் என்ற வெறி கிளம்பியது. எப்படியாவது அன்பை இவனுடன் சேர்த்து வைக்கவேண்டும் மனம் பேராசைக் கொண்டது.

இனம், மொழி எதையும் இதுவரை தமிழ் பார்த்ததில்லை. இனியும் பார்க்கமாட்டாள். சிறுவயதில் தமிழ் கற்றுக் கொண்ட பாடம். அதை அப்படியே இன்றும் கடைப்பிடிக்கிறாள்.

தன் தாய், தந்தை போல் தமிழ் இல்லை. மற்றவர்களை மனிதர்களாய் மதிக்க கற்றவள்.

தன், தாய் – தந்தையருடன் பேசவேண்டும். அன்புக்கு நல்லது செய்யவேண்டும் இது மட்டும் தான் அவளது எண்ணமாக இருந்தது.

அவளின் எண்ணம் அவளை மட்டிலும் சரி, ஆனால் சமூகம் என்று வந்தால் அவளது எண்ணம் மிகவும் தவறானது. கலப்பு திருமணத்தை இன்னும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அங்கு யாருக்கும் வந்திருக்கவில்லை.

தமிழ் அதை பெரிதாக எண்ணவும் இல்லை. காதல் வந்துவிட்டது. ஒரு ஆண் மேல் அவ்வளவே அவளது எண்ணம். அதற்கு மேல் அவள் யோசிக்கவில்லை. அவன் நல்லவன். இவளை நன்கு பார்த்துக் கொள்வான். அதை விட அவள் மேல் உயிரையே வைத்திருக்கும் ஒருவன். இதற்கு மேல் எதுவும் அவளுக்கு தேவை இல்லை.

அதே தான் இப்பொழுதும் அன்பு விசயத்திலும் அவள் எண்ணம். அன்பை நேசிக்கும் ஒருவன் அவளை தேடி வந்திருக்கிறான். அவனிடம் அவளை ஒப்படைப்பது தானே முறை. அப்பாவும் இதை தானே செய்யவேண்டும்? பேசலாம். அப்பாவிடம் எடுத்து கூறலாம். தான் கூறினால் அப்பா ஏற்றுக் கொள்வார் கண்மூடிதனமான நம்பிக்கை.

முதலில் அம்மாவிடம் பேசவேண்டும் என எண்ணி அவரை நோக்கி சென்றாள்.

“ம்மா” என அமுதாவை அழைத்துக் கொண்டே சமையல் அறை நோக்கி சென்றாள்.

“என்ன தமிழ்?”

“அது வந்தும்மா, நான் கேக்கதை தப்பா எடுக்கமாட்டால்ல?”

“சொல்லுடி?”

“அமுதன் ரொம்ப நல்லவர் அப்படிதானேம்மா?”

“ஆமாடி… அதேன் அப்பா உனக்கு முடிச்சிப்போடலாம்னு நினைச்சாக? ஆனா அந்த தம்பி மனசுல வேறல்ல இருக்கு?” சிறு சலிப்பு அவரிடம்.

“ஏன்மா, அமுதன் சார் நம்ம அன்புக்கு ரொம்ப ஏத்தவரும்மா? அப்பாரு ஏன் இப்படி பேசிப்புட்டாக?”

“இதெல்லாம் நீ ஏன் பேசுற? அவக சரியாத்தேன் பேசிருக்காக…  அமுதன் ஆசைப்பட்டதுத்தேன் தப்பு”

“ஏன்மா நீயும் இப்படிக்கா பேசுத?”

“வேற எப்படிக்கா பேச சொல்லுத? நம்ம ஜாதியை வீட்டுக்குடுக்க சொல்லுதியா?”

“ம்மா… நா எங்கம்மா அப்படி சொன்னேன்? நம்ம ஜாதிய காப்பாத்த சொல்லுதேன்… அவகள சேத்து வச்சி உன் ஜாதிய காப்பாத்து… பாண்டி மாமா பேசுனதை கேட்டல்ல… என்ன பண்ண போறாகளோ?”

“அத நாங்க பாத்துகிடுதோம் நீ உன் சோலிய பாரு போ”

“நீங்க அசிங்கப்படணும்னு எழுதிருக்கு அத யாரால மாத்த முடியும்” சொன்னவள் அப்படியே நகர்ந்துவிட்டாள்.

செல்லும் அவளை யோசனையாக பார்த்துக் கொண்டிருந்தார் அமுதா.

**********

ஆலமரத்தானின் எதிர்ப்பை பாண்டி ஊகித்து இருந்தார். அப்படியே யோசனைக்கு சென்றார் பாண்டி.

‘ஆலமரத்தான் ஏதாவது செய்யும் முன் அன்பை, அமுதனுக்கு கல்யாணம் செய்து வைக்கவேண்டும்’ எண்ணியவர் அழகு வீட்டை நோக்கி சென்றார்.

செல்லும் வழியில் அழகு வேகமாய் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்தான்.

அவன் எங்கோ வேகமாய் செல்வதை கண்டவர், பிறகு பேசிக் கொள்ளலாம் என எண்ணி வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டார்.

ஆலமரத்தான் வீட்டுக்கு வந்த அழகு, செல்வி பெரியபெண் ஆகிய விசயத்தைக் கூறி, வயலில் நின்றிருந்த அன்பை அழைத்து சென்றான்.

லிங்கம் தான் அத்தனை சந்தோஷத்தில் சுற்றிக் கொண்டிருந்தான். ஏதோ ஒரு வகையில் அவனும் வருத்தத்தை சுமந்திருந்தான் இன்று எல்லாம் அவனை விட்டு விலகிய உணர்வு!

வீட்டுக்கு வந்த பாண்டி, அமுதனை அழைத்துக் கொண்டு டவுணுக்கு சென்றார்.

நாளைக்கே அன்பை, அமுதனுக்கு பேசி முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் டவுணுக்கு சென்றார்.

அன்பு, அமுதனுக்கு தான் என்று ஊரார் மத்தியில் உறுதி படுத்திக்கொண்டால் போதும் என்ற எண்ணம் அவருக்கு.

################

செல்வி வீடே கொண்டாட்டமாய் இருந்தது. முத்தாரின் பல வருட ஏக்கம் தன் மகள் இன்னும் பருவமெய்தவில்லையே என்று வருந்தாத நாள் இல்லை.

இன்று அத்தனை சந்தோஷம் அவளுக்கு. அவர்கள் இனத்தில் இப்படி விருந்து வைக்கமாட்டார்கள்.

ஆனால் புதிதாக இன்று லிங்கம் ஆரம்பித்தான். அவனின் செல்விக்காக.

“கேட்டியாடி சேதிய? முத்தார் இன்னைக்கு கறிவிருந்து போடுறாகளாம்?” ஊரில் முழுக்க செல்வி வீட்டு கதை தான் ஓடியது.

“பின்ன… அவ புள்ள வருஷம் கழிச்சி வயசுக்கு வந்திருக்குல்ல, ஊருக்கு சொல்லாண்டாமா?”

“அதும் சரித்தேன்… அதுக்கெதுக்கு இம்புட்டு செய்யோணும்? ஊருல புள்ளைங்க யாரும் வரலியாக்கும்?”

“அவ வீட்டுலையும் கல்யாண வயசுல பொண்ணு இருக்குன்னு எல்லாருக்கும் தெரியத்தேன்?”

“அதேன் வீட்டுக்குள்ளாரையே லிங்கம் இருக்கானே?”

“ஒத்தைக்கொருப் புள்ளைய வச்சிருக்கா? பண்ணிட்டுப் போறா?” அவர்களுக்குள் பேசியபடியே முத்தார் வீட்டுக்கு சென்றனர்.

சிறிது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார் ஆலமரத்தான். அவர் வரவுமே வீடு பரப்பரப்பானது.

“உக்காருங்க ஐயா” முத்தார் தான் அவரிடம் ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து அமரக் கூறினார்.

“அழகு எங்கே முத்தார்?”

“அவன் பந்த வாசலில நிக்குரானுங்க”

“நல்லது… நல்லது”

“செல்வி புள்ள எங்கிருக்கு?”

“பின்கட்டுல இருக்குதுங்கய்யா”

“அன்பு எங்க ஆளையே காணும்?” கண்களை எங்கும் சுழல விட்டபடி கேள்வியாக வினவினார் அவர்.

“செல்வி கூடாக்க இருக்காங்க?”

“இருக்கட்டும்… இருக்கட்டும்… அப்படியே கொஞ்சம் அழகுவையும், லிங்கத்தையும் கூப்டீன்னா பேச வேண்டியதை சுழுவா பேசிப்புடுவேன்” புதிருடன் கூறினார் அவர்.

முத்தாரும், அன்பு பக்கத்து வீட்டு மதனியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“அட என்ன பாக்குறீக? எல்லாம் நல்ல விஷயந்தேன்” அட்டகாசமான புன்னகையுடன் கூறினார் அவர்.

அவரது சிரிப்பினைக் கண்டு கொஞ்சமாய் நிம்மதி மூச்சு விட்ட முத்தார் வெளியே சென்று இருவரையும் அழைத்து வந்தார்.

“என்ன அழகு சாப்பாடு எல்லாம் ரெடியா?”

அவரின் கேள்வி எல்லாரையும் திகைக்க வைத்தது.

எந்த விசேஷ வீட்டிலும் கை நனைத்தது இல்லை ஆலமரத்தான். அதிலும் அழகு இனத்தில் இப்படி வீடு வரை வந்து வீட்டின் உள்ளே அமர்ந்தது கூட இல்லை.

இன்று எல்லாமே அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

“என்ன அப்படி பார்த்திட்டு இருக்கீக? இலை போடுற எண்ணம் இல்லையா?”

முத்தார் வாயெல்லாம் பல்லாக, “இதோ இதோ எடுத்து வாரேன் ஐயா? ஏல அழகு என்ன மசமசன்னு பாத்துட்டு நிக்கவ? சாப்பாடு எடுத்துட்டு வா ஓடு” சந்தோஷ முகமாக அவனை விரட்டினார்.

“வா அழகு” மகிழ்ச்சியில் திக்குமுக்காடி நின்ற அழகை இழுத்துக் கொண்டு சமையல் பக்கம் ஓடினான் லிங்கம்.

அத்தனை மகிழ்ச்சியில் இருந்தான் அழகு. அவனின் ஐயா தகுதி பார்க்காமல் அவர்கள் வீட்டில் சாப்பிடுகிறாரே!

இனி எல்லாம் சுகமே! அவனே அவனுக்கு கூறிக் கொண்டான். ‘சீக்கிரமே எங்கள் விஷயத்தை ஐயாவிடம் கூற வேண்டும்’ எண்ணிக் கொண்டான்.

இலை நிறைய பட்ச்ஷணங்கள் இருக்க ரசித்து உண்டார் அவர். பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டனர்.

அதற்குள் செல்விக்கு தண்ணீர் ஊற்ற லிங்கத்தை அழைக்க, அவர்களுடன் இணைந்துக் கொண்டார் ஆலமரத்தான்.

எல்லாம் நல்லபடியாக முடிய வீட்டுக்குள் வந்தவர், நிமிர்ந்து கடிகாரத்தை பார்த்தவர்.

“நல்ல நேரம் முடியுறதுக்குள்ள உங்ககிட்ட ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லோணும்?” பீடிகையுடன் ஆரம்பித்தார்.

மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,

சட்டைபையில் வைத்திருந்த போட்டோவை எடுத்து “இது தான் அன்புக்கு நான் பார்த்திருக்கும் மாப்பிள்ளை” அழகுவிடம் படத்தை நீட்டினார் அவர்.

அழகு ஆசையுடன் கையில் வாங்கிப் பார்த்தான்.

அருகில் நின்றிருந்த லிங்கமும், முத்தாரும் எட்டிப் பார்த்திருந்தனர்.

“பையன் பி.ஏ படிச்சிருக்கான்… நல்ல அழகு… பக்கத்து ஊருலத்தேன் வேலை பாக்குறான்” அவர் அடுக்கிக் கொண்டே போக,

அழகு எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. அந்த படத்தையே பார்திருந்தான்.

கட்டம் போட்ட சட்டையும், கருப்பு நிற பாண்ட் அணிந்திருந்தான். கையில் ஒரு கருப்பு கையிறு கட்டியிருந்தான்.

சட்டை, பாண்ட் மட்டும் தான் அழகு கண்களுக்கு தெரிந்தது. வேறு ஒன்றும் தெரியவில்லை.

பெரிய மனிதர்களை பார்த்து குனிந்து வணங்கி கூன் விழுந்த மக்கள் மத்தியில் முதல் முறையாக சட்டை போட்டு கம்பீரமாக நின்ற ஒருவன் அவன் தங்கையின் மணாளன். அந்த எண்ணமே இனித்தது!

‘யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு வாழ்க்கை? ஐயா எங்களை அவர்கள் பிள்ளைகள் போலவே பார்த்து பார்த்து செய்கிறார்’ மனம் பூரித்தது.

“என்ன அழகு பையனை பிடிக்கலையா? வேற பார்ப்போமா?” யோசனையாக வினவினார்.

“இல்லீங்க ஐயா… இவர்தேன் அன்புக்கு ஏத்தவரா இருப்பாருங்க ஐயா” சந்தோஷமாகக் கூறினான்.

அவன் எண்ணம் தான் எல்லாருக்கும் இருந்தது.

“ஒரு வாரத்துல கல்யாணத்தை வைக்கணுமாம்… பையனுக்கு பட்டணத்துல பெரிய வேலை கிடைச்சிருக்காம்” சந்தோசத்துடன் கூறினார்.

அவர் கூறியது எல்லாருக்கும் அத்தனை சந்தோஷமாக இருந்தது.

தான் வந்த வேலை முடிந்ததுப் போல் விடை பெற்று கிளம்பினார் ஆலமரத்தான்.

அழகுவிடம் கூறிவிட்டோம்  இனி எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் அவருக்கு.

error: Content is protected !!