Maane – 1

download (23)

Maane – 1

மலையோர மானே!

வவுனியாவின் மையப்பகுதியில் அமைந்திருந்த வீட்டில் வழக்கத்திற்கு மாறாக பலத்த அமைதி நிலவியது. நடுஹாலில் ரத்னாவின் புகைப்படம் மாலையோடு பெரிது செய்யபட்டு மாட்டப்பட்டிருக்க அதன் அருகே சோகத்துடன் அமர்ந்திருந்தார் ரகுவரன். அவரின் மார்பில் சாய்ந்து அழுதபடியே உறங்கிப் போயிருந்தாள் மகள் சங்கமித்ரா.

“என்னப்பா பொண்டாட்டிஇறந்து போயிட்டான்னு நீயே இப்படி இடிந்துப் போய் உட்கார்ந்திருந்தால் நாளைக்கு இந்த பிஞ்சு மனசு என்ன பாடுபடும்” என்று பக்கத்துவிட்டு திலகவதி கேள்வியெழுப்ப மகளின் பளிங்கு முகத்தை பார்த்தார்.

பத்து வயதில் தாயின் இழப்பை ஏற்க முடியாமல் அழுதபடியே உறங்கிபோயிருந்த மகளின் தலையைப் பாசத்துடன் வருடிய ரகுவரனின் கண்களில் கண்ணீர் பெருகியது.

“என் பொண்ணுக்கு இந்த வயதில் இப்படியொரு நிலை வருமென்று நான் நினைக்கவே இல்லையே” என்று வாய்விட்டுப் புலம்பினார் ரகுவரன். தன் உயிரில் ஒரு பாதியான மனைவியின் பிரிவு துயரை தாங்க முடியாவிட்டாலும், தன்னை நம்பியே இருக்கும் மகளுக்காக வாழவேண்டும் என்ற முடிவிற்கு வந்தவரின் முகத்தில் தெளிவு பிறந்தது.

மதியம் மகள் கண்விழித்து எழுந்து சாப்பாடு கேட்டதும், “மித்தும்மா இனிமேல் அம்மா வரமாட்டாள். அதனால் நீதான் உன்னைப் பத்திரமாக பார்த்துக்கணும். அப்பாவுக்கு வெளிநாட்டில் வேலை இருக்குடா. அந்த வேலை முடித்து நான் திரும்ப வரும்வரை நீ அப்பம்மாவோடு மலையகத்தில் போய் இருக்கிறாயா?” என்று மகளுக்கு புரியும்படி கூறவே  மித்ராவும் சரியென்று தலையசைத்தாள்.

அந்த கணம் முதல் மகள்தான் அவரின் உயிர் மூச்சாக மாறிப் போனாள். ரகுவரனும் – ரத்னாவும் வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்தவர்கள். ரகுவரன் யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவர் பல்கலைக்கழகத்தில் படிக்க கொழும்பு சென்றபோது அங்கேதான் ரத்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதனால் இருவரையும் வீட்டைவிட்டு ஒதுக்கி வைத்தனர். ரத்னா ஒரு சிங்களப்பெண் என்பதை தவிர அவரின் மீது குறை சொல்ல யாராலும் முடியாது.  இருவருக்கும் திருமணம் முடிந்தபிறகு ஒரு வருடம் மட்டுமே தன் மனைவியுடன் சந்தோசமாக இருந்தவர் அதன்பிறகு பணத்தைத் தேடி ஓடவேண்டிய கட்டாயம்.

தன் மனைவி,மகளை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்ற முடிவிற்கு வந்தவருக்கு கனடாவில் வேலை கிடைக்கவே உடனே அங்கு சென்றுவிட்டார். வருடத்திற்கு ஒரு முறை விடுமுறையில் வவுனியா வருவார்.

இந்நிலையில் தான் ரத்னாவின் உடல்நிலை மெல்ல கெடத் தொடங்கியது. சரியான தூக்கமின்மை, சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருந்து தன்னை கவனிக்காமல் விடுவிட்டார். இறுதியில் மஞ்சள்காமாலையில் படுக்கையில் விழுந்த ரத்னா கடைசி வரை எழுந்திருக்கவில்லை.

அவர் உயிர் உடலைவிட்டு பிரியும் நிலையில் தன் மனைவியைக் காண வந்தார் ரகுவரன். அவர் என்ன முயன்றும் அவரால் ரத்னாவைக் காப்பாற்ற முடியவில்லை. இப்போது அவர் இறந்தபிறகு மீண்டும் வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயத்தில் தன் தாயின் தங்கையான கஸ்தூரியின் பொறுப்பில் மகளை விட்டுவிட்டு செல்ல முடிவெடுத்தார்.

அதன்பிறகு வந்த நாட்கள் தெளிந்த நீரோடை போல செல்லவே தன் மகளோடு மலையகம் நோக்கி சென்றார் ரகுவரன். தடக் தடக் என்ற ரயில் ஓசை அவளின் மனதை மயிலிறகுபோல இதமாக வருடிச் சென்றது.

காற்றில் கலைந்த கூந்தலை வருடி சரிசெய்துகொண்டு, “அப்பா அப்பம்மா வீட்டில் எனக்கு நிறைய நண்பிகள் கிடைப்பாங்களா?” என்று ஆர்வத்துடன் வினாவினாள் சின்னவள்.

தன் மகளை மார்புடன் சேர்த்து அணைத்துக்கொண்ட ரகுவரன், “உனக்கு அங்கே நிறைய நண்பிகள் கிடைப்பாங்க. என் மித்து குட்டியை அங்கே இருக்கும் பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்க்கப் போறேன். அங்கே என் செல்லம் நல்லா படிச்சிட்டு இருப்பாங்களாம். அதுக்குள் அப்பா வேலையை முடிச்சிட்டு என் செல்லத்தை தேடி ஓடி வந்துவிடுவேணாம்” மகளுக்குச் சொல்லும் சாக்கில் தனக்கும் ஒரு முறை சொல்லிக் கொண்டார்.

தகப்பனும், மகளும் காலை நேரத்தில் மலையகத்தின் மண்ணில் கால் பதித்தனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் வானத்தை தொடும் மலைகளும், அதை சுற்றியிருந்த தேயிலை தோட்டங்களும் பார்க்கவே ரம்மியமாக காட்சியளித்தது. தந்தையின் தளிர் விரல்களைப் பிடித்துக்கொண்டு சுற்றிலும் பார்வையைச் சுழற்றியபடியே நடந்தாள் சங்கமித்ரா.

அவர்களுக்கு நேர் எதிரே இரண்டு பொடியன்கள் வேகமாக ஓடி வருவதைக் கண்ட சங்கமித்ராவின் விழிகள் இரண்டும் வியப்பில் விரிந்தது. ஓரிடத்தில் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் நிலை வரவே, “அண்ணா அவையா நம்மள தேடி வருவாங்களா?” என்று கேட்டான் சின்னவன்.

சங்கமித்ரா இருவரையும் குழப்பத்துடன் பார்த்தபடி, ‘இவங்க ஏன் ஓடி வரோணும்” என்று தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டு அவர்களின் மீது கவனத்தை திருப்பினாள்.

“அப்பாவோ, அம்மாவோ இப்போதைக்கு நம்மள தேட மாட்டாங்க எண்டே நினைக்கிறன். அவையா தேடுற மாதிரி இருந்தால் இக்கணமே நம்ம இருக்கின்ற இடத்திற்கு வந்திருப்பாங்க இல்லே” என்றான் பெரியவன்.

இருவரையும் குழப்பத்துடன் ஏறிட்ட சின்னவளின் மனதிலோ ஆயிரம் கேள்விகள் படையெடுத்து நின்றது.  தன் வாழ்க்கைப் பாதை இங்குதான் திசை மாற போகிறது என்ற விஷயம் அப்போது அவளுக்கு தெரியாது.

தன் தந்தையின் கரங்களை பிடித்தபடி சென்றவளை பார்த்த இருவரின் பார்வையிலும் ஏதோவொரு ஏக்கம் தெரிந்தது. இதுபோல ஒரு பாதுக்காப்பு எதிர்பார்த்ததோ அந்த சிறியவர்களின் மனம். விதியின் கைகளில் விளையாட்டு பொம்மைகளாக இருக்கும் நமக்கு நாளை என்ன நடக்குமென்ற நிதர்சனம் புரிவதில்லையே.

ஓரளவு சித்தியின் வீட்டை அடையாளம் கண்டு மகளோடு வீட்டிற்குள் நுழைந்த ரகுவரனைப் பார்த்த கஸ்தூரி, “ரகு” என்ற அழைப்புடன் வாசலுக்கு வந்தார். அவரின் தோற்றமே சொன்னது அவரின் வயதைப் பற்றி!

கிட்டதட்ட அறுபதை தாண்டிவிட்ட நிலையில் இப்போதோ அப்போதோ என்ற நிலையில் இருந்தவருக்கு தான் தூக்கி வளர்த்த பையன் வீட்டின் வாசலில் நிற்பதை கண்டவுடன் ஆனந்தத்தில் அவருக்கு தலைகால் புரியவில்லை.

“எப்படிப்பா இருக்கிற? ரத்னா எங்கே?” என்ற கேள்வியோடு அவரின் கையைப் பிடித்துகொண்டு நின்றிருந்த பேத்தியைத் தூக்கி இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டு இருவரையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

ரகுவரன் எதுவும் பேசாமல் அங்கிருந்த கதிரையை இழுத்துப்போட்டு அமரவே சிந்தனையோடு மகனைப் பார்த்தவர், “என்னப்பா நான் கேட்டுட்டே இருக்கிறன் நீ பதிலே சொல்லாமல் இருந்தால் என்ன அர்த்தம்?” என்று கேட்டார்.

“சின்னம்மா ரத்னா என்னை தனியா விட்டுட்டுப் போயிட்டா. இப்போ பிள்ளையும், நானும் தான் இருக்கோம்” என்று குண்டைத்தூக்கி போடவே சங்கமித்ராவை கீழே இறக்கிவிட்டவர் அதிர்ச்சியுடன் அமர்ந்துவிட்டார் கஸ்தூரி.

எங்கோ ஒரு மூலையில் இருவரும் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று எண்ணி இருந்த கஸ்தூரியால் ரத்னாவின் இறப்பை ஜீரணிக்க முடியவில்லை. ரகுவிற்கு வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணி வைத்தவரே அவர்தான்.

அதனால் தான் வீட்டிலிருந்த மற்றவர்கள் அவரையும் விலக்கி வைத்தனர். ஆனால் அதற்காக பயப்பட்டு கூனிக்குறுகி அமரும் பெண்மணி அவர் அல்லவே!

தன்னை வீட்டிற்கு வரவேண்டாம் என்று சொன்னதும் ரகுவரனை வவுனியாவில் தங்க வைத்துவிட்டு மலையகம் வந்தவர் அடிக்கடி சென்று இவர்களைப் பார்த்துவிட்டு வருவார். இப்போது உடல்நலம் முற்றிலும் குன்றிப் போனதால் மலையகம் விட்டு வேறு எங்கும் அவர் செல்வதில்லை.

ஆனால் இன்று ரத்னா இல்லையென்ற உண்மையை ஏற்க முடியாமல், “யாருக்குமே கெடுதல் நினைக்காத பொண்ணுக்கு ஏன் இப்படியெல்லாம் நடந்தது?” வாய்விட்டுப் புலம்பியவர் தன் அருகே நின்றிருந்த சங்கமித்ராவை தூக்கி அணைத்துக்கொண்டு கண்கள் கலக்கிவிட்டார்.

அவர் ஓரளவு தன்னை சமாளித்துக்கொண்டு நிமிரும்போது, “சின்னம்மா நான் இப்போ அக்ரிமெண்ட் போட்டு கனடாவில் வேலை செய்யறேன். எப்படியும் இன்னும் ஐந்து வருடம் காண்ட்ராக்ட் முடியாமல் என்னை விட மாட்டாங்க. மித்ராவை என்னோடு அழைச்சிட்டுப் போனால் அவளை பார்த்துக்கொள்ள அங்கே யாரும் இல்ல சித்தி. இந்த காண்ட்ராக்ட் முடிந்து திரும்ப வரும்வரை இவளை கொஞ்சம் பார்த்துகிறீங்களா?” என்று தயங்கி தயங்கி கேட்டார்.

இதுவரை உதவி என்று வீட்டைத் தேடிவராதவன் இன்று கேட்பதை நினைத்து மனதிற்குள் வருந்திய கஸ்தூரி, “இவ என் பேத்தி. நான் பார்த்துக் கொள்கிறேன் நீ போயிட்டு வாப்பா..” என்றார்.

அந்த ஒரு சொல்லில் மனநிறைவு அடைந்த ரகுவரன் தன் மகளை அங்கிருந்த பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு சேர்த்து, அவளுக்கு தேவையான அனைத்ததையும் வாங்கிகொடுத்துவிட்டு கனடா கிளம்பிச் சென்றார்.

சின்னவளுக்கு மலையகத்தின் எழிலும், கஸ்தூரியின் அரவணைப்பும் பிடித்துப் போனது. அவள் வைத்தது தான் சட்டம் என்பது போல காலையில் பள்ளிக்கூடம் செல்பவள் மாலை வந்து தேயிலை தோட்டத்தை சுற்றி சைக்கிள் ஓடிக்கொண்டு சுற்ற தொடங்கினாள். தாயின் நினைவுகளில் இருந்து மெல்ல விடுபட்டு வெளியே வர தொடங்கினாள்.

மாலை சூரியன் மேற்கே மறையும் வேளையில் அந்த இடமே ரம்மியமாக காட்சியளித்தது. தேயிலை தோட்டங்கள் சூரிய ஒளிக்கதிர் பட்டு பளபளத்தது. மலையகப் பெண்கள் அனைவரும் மாலை பணியை முடித்துக்கொண்டு வீடு நோக்கி செல்ல தொடங்கிய சமையத்தில் வழக்கமான பாதையில் சைக்கிளில் பயணித்தாள் சங்கமித்ரா.

திடீரென்று எதிர்பாராத விதமாக எதிரே வந்தவனின் சைக்கிள் மோதி கீழே விழுந்த சங்கமித்ராவின் கையில் பலமாக அடிபடவே, “அம்மா” என்று அலறினாள்.

சட்டென்று சைக்கிளைவிட்டு இறங்கியவன், “ஐயோ அடி பலமா?” என்றபடி அவளின் அருகே வந்தவன் சங்கமித்ராவின் சைக்கிளை ஸ்டேண்ட் போட்டு நிறுத்திவிட்டு அவளை நோக்கி வலதுகரம் நீட்டினான்.

“தேங்க்ஸ்” என்றபடி எழுந்து நின்றவளின் பார்வை கைகளை ஆராய்வதை கண்டு, “என்னாச்சு கையில் ரத்தம் வருகின்ற மாதிரி இருக்கிறதல்லே. இங்கே கையைக் காட்டு” என்று அவளின் இடது கையையின் மீது தன் பார்வையைச் செலுத்தியவன் தன் கையில் வைத்திருந்த கர்சீப்பை நீரில் நனைத்து அவளின் கையைத் துடைத்துவிட்டு கட்டினான்.

அவளின் பளிங்கு முகம் வலியில் துடிப்பதை கண்டு, “ஸாரி நான் வேண்டும் என்றே செய்யல. உனக்கு கோபம் வந்தா என்னை இரண்டு அடிகோட அடிச்சுக்கோ” என்று சொன்னவனை சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.

அவனை முதல்நாள் ரோட்டில் ஓடி வரும்போது பார்த்த ஞாபகம் வரவே, “பரவல்ல நீங்க என்ன வேணும்னு செஞ்சீங்களா? நான்தான் கவனிக்காமல் வந்துட்டேன். என்னை மன்னிச்சிடுங்க” என்று தலையசைச் சரித்து கூறியவளின் குழந்தைத்தனம் அவனின் மனத்தைக் கவர்ந்தது.

அப்போது அவர்களின் அருகே வந்து சைக்கிளை நிறுத்தியவன், “அண்ணா நம்ம வீடுக்கு எதிர்வீட்டில் இருக்கும் கஸ்தூரி பாட்டி வீட்டிற்கு ஒரு மலையோர மான் வந்திருக்குன்னு சொன்னேன் இல்ல அது இவதான்” என்றான் சின்னவன்.

அதுவரை குழந்தைபோல இருந்த பெண்ணின் முகம் கோபத்தில் சிவந்துவிட, “நான் மலையோர மானா? அப்போ நீ யாரு மலையோர எருமையா?” என்று அவனிடம் சரிக்கு சரி சண்டைக்கு நின்றவளைப் பார்த்து இருவருக்குமே சிரிப்பு வந்தது.

அவள் கோபத்துடன் சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கோபமாக நகரவே, “இது என் சைக்கிள் அதனால் நீ எடுத்துட்டுப் போக விடமாட்டேன். நீ போய் உங்க கஸ்தூரி மானை வீட்டுக்கு வர சொல்லு” என்று சின்னவன் அவளிடம் வேண்டுமென்றே வம்பிற்கு இழுக்க பொத்தென்று சைக்கிளை கீழே போட்டாள் மித்ரா.

“என் அப்பம்மாவை பேரு சொல்றீயலா? நீர் சைக்கிளை வீட்டில் வந்து கொடுங்கோ” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்து சென்றுவிடவே தம்பியின் முதுகில் பட்டென்று ஒரு அடிபோட்டான் பெரியவன் இந்தர்ஜித்.

தமையனிடம் அடியை எதிர்பார்க்காத விஷ்வா, “ஏன் இப்போ என்னை அடிச்ச அண்ணா?” என்று கேட்டான்.

“சின்ன பிள்ளையிடம் கதைக்க சொன்னால் இது என்ன விளையாட்டு. இப்போ சைக்கிளை  எப்படி எடுத்துட்டுப் போவது?” என்றான்.

“என்னவோ அவளிடம் சண்டைபோட்டதும் மனசுக்கு ரிலாக்ஸ்டாக இருக்கு அண்ணா. அவளிடம் நொடிக்கு நூறு சண்டை போடோணும். நம்மன்ர அப்பா, அம்மா மாதிரி.. ஆனால் அடுத்த நிமிடமே சேர்ந்து விடணும் உன்னை மாதிரி” என்று கலங்கம் இல்லாமல் சிரித்தவனோடு  வீடு நோக்கி சென்றான் இந்தர்ஜித்.

அவர்கள் இருவரும் வீட்டிற்கு செல்லும்போது மித்ரா அழுகையோடு நின்றிருப்பதைக் கண்ட விஷ்வா, “இப்போதானே நல்ல கதைச்சிட்டு வந்தாள்.. அதற்குள் இந்த அழுகையும், ஆர்ப்பட்டமும் ஏன் என்ற காரணம் புரியவில்லையே?” என்று பட்டென்று சைக்கிளை நிறுத்திவிட்டு வேகமாக அவளின் அருகே சென்றான்.

அதே நேரத்தில் ரத்தம் சொட்ட சொட்ட காரில் ஏறிய தாயைப் பார்த்துவிட்ட விஷ்வா, “அம்மா” என்று கத்திட, மற்றொரு புறம் தந்தை கையில் கட்டையோடு நிற்பதை கண்ட இந்தர்ஜித், “அப்பா” என்றான் வேகமாக.

இருவருக்கும் இடையே நின்ற சங்கமித்ரா பெருங்குரல் எடுத்து அழுகவே மற்றதை மறந்து, “ஏய் மானு அதெல்லாம் ஒன்னும் இல்லடா. நீயேன் இப்போ இப்படி அழுகிற” என்று இரண்டு புறமும் அவளை அணைத்துக்கொண்டு ஆறுதலாக வருடிக் கொடுக்கவே அவளின் அழுகை மெல்ல குறைந்தது. திடீரென்று எதிர்பாராத விதமாக அவர்களின் கரங்களில் மயங்கி சரிந்தவளை அண்ணன், தம்பி  இருவருமே தாங்கிப் பிடித்தனர்.

அவர்கள் இருவரையும் சேர்க்கும் மையப்புள்ளியாக சங்கமித்ரா மாறிப் போக போகிறாள் என்ற உண்மை அப்போது இந்தர்ஜித், விஷ்வா இருவருக்கும் தெரியாமல் போனது. தாய் – தந்தையின் இடையே நடந்த கைகலப்பை மறந்தவர்களாக மித்ராவை தூக்கிக்கொண்டு அண்ணனும், தம்பியும் கஸ்தூரி அம்மாவின் வீடு நோக்கிச் சென்றனர்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!