Maane – 11
Maane – 11
அத்தியாயம் – 11
இந்தரிடம் கோபமாக பேசிவிட்டு வீடு வந்து சேர்ந்த சங்கமித்ராவின் நினைவுகள் அவனையே சுற்றி வந்தது. அதுவரை அவனின் மீது வைத்திருந்த காதல் இன்று பன்மடங்காக பெருகியது. அவனின் தாய் – தந்தை இருவரும் காதல், திருமணம் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை தவறாக புரிந்துகொண்டு அறியாத வயதில் அவளின் மனதில் நஞ்சை விதித்துவிட்டனர்.
இன்று அது வேர் பிடித்து விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது என்ற உண்மை புரியவே உதட்டைக் கடித்துக்கொண்டு அமைதியாக இருந்தாள். அந்த நிலையிலும் தன்னை உயிராக காதலித்தவன், அவளைவிட்டு விலகி நிற்பதற்கான காரணம் அவன் அல்லவே!
அவனின் பெற்றோர்களின் வாழ்க்கையைக் கண்டு வளர்ந்தவனின் நெஞ்சில் காதலிக்கும் பெண் மீது ஆயிரம் மடங்கு நம்பிக்கை இருந்தபோதும், அவனின் மீது அவன் நம்பிக்கை இல்லாமல் இருப்பதை நினைத்து சிரிப்பதா? அழுவதா? என்று புரியாமல் அமர்ந்திருந்தாள்.
கல்யாணம் என்றவுடன், “வா இப்போவே போய் தாலிகட்டி குடும்பம் நடத்தலாம்” என்று சொல்லாமல், தன் காதலையும், திருமணத்திற்கு பிறகு எழும் பிரச்சனைகளை கணக்கிட்டு ஒதுங்கி செல்பவனை என்ன செய்வது?
ஆரம்பத்தில் இருந்து அவர்களின் குடும்பம் எப்படிப்பட்டது என்று தெரிந்தபிறகும் தன்னை உயிராக நேசிப்பவனை தண்டித்து பார்க்க அவளின் மனம் இடம் தரவில்லை. எட்டு வருடம் முடிந்த நிலையிலும் சொந்த ஊரான மஸ்கெலியா போகாமல் இருப்பவனின் காதலை எண்ணி, ‘எனக்காக இவ்வளவு யோசிக்கும் உன்னை எப்படியோ போன்னு விடமாட்டேன் ஜித்து’ மனதிற்குள் உறுதியேடுத்தாள்.
இந்தரின் பயம் புரியவே, ‘உன் காதலே இந்த பயத்தை போக்கிவிடும் ஜித்து. நான் உன்னைவிட்டு விலகி போறேன்னு சொன்னானே தவிர அதை செயல்படுத்த என்னால் முடியாது. உன்னை மனதளவில் நெருங்கத்தான் அப்படி சொல்லிட்டு வந்தேன். ம்ஹும் உனக்கே உண்மை புரியும்போது நீயே தேடி வருவாய் பாரு’ என்ற சிந்தனையோடு அமர்ந்திருந்தாள்.
‘என்னை நினைக்காதே, என் நினைவுகளை மறந்துவிடு’ என்ற அவளின் மனம் அவனை மட்டும் நினைத்தது. அவனை இப்படியே விட்டால் அவன் மனதிலிருக்கும் காயத்தை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். எந்தவிதமான வலியையும் இல்லாமல் எதையும் சரி செய்ய இயலாது என்ற முடிவிற்கு வந்தாள்.
மறுநாள் வழக்கம்போலவே அலுவலகத்தின் உள்ளே நுழைந்தவளிடம், “ஸார் உன்னை அவரோட கேபினுக்கு வர சொன்னார்” என்று உடன் வேலை செய்பவள் சொல்லிவிட்டு தன வேலையைத் தொடர்ந்தாள்.
சங்கமித்ரா சிந்தனையோடு அனுமதி கேட்டு அறைக்குள் நுழைந்து, “ஸார்” என்றாள்.
“மித்ரா நீங்க ஒரு வாரம் லீவ் கேட்டீங்க இல்ல” என்றவர் பைலைப் பார்த்தபடியே கேட்க, “ஆமா ஸார்” என்றாள் மித்ரா.
“அடுத்த ஒரு வாரம் உங்களுக்கு லீவ். அதற்குமேல் நீங்க லீவ் எடுக்கக்கூடாது” என்று அனுமதியளித்துவிட்டு அவர் வேலையைத் தொடரவே, ‘இது என் நல்ல நேரமா? இல்லை இந்தரின் கெட்ட நேரமா? என்று தெரியவில்லை. இந்த சிடுமூஞ்சி இவ்வளவு சீக்கிரம் லீவ் கொடுத்துவிட்டது’ என்று சலிப்புடன் நினைத்தாள்.
மாலை வீடு வந்த மகளின் முகம் கலக்கத்தில் இருப்பதை கண்டு, “என்னடா ஒரு மாதிரி இருக்கிற? உடம்புக்கு எதுவும் சரியில்லையா?” அக்கறையோடு விசாரித்தார்.
தந்தையின் குரல்கேட்டு சட்டென்று நிமிர்ந்து, “அதெல்லாம் இல்லப்பா.. நான் கேட்ட லீவ் இப்போ கிடைச்சிருக்கு. அதுதான் ஊருக்குப் போய்ட்டு வரலாமா என்ற யோசனையில் இருந்தேன்” என்றாள் மகள்.
“இதுக்கு இவ்வளவு யோசனை அவசியமா? நீ எப்போதும் விரும்பும் இடம்.. இயற்கையின் காதலியான உன்னையும், உன் ரசனையும் எனக்கு தெரியாதா? அதனால் நீ சந்தோஷமா போயிட்டு வாம்மா” என்றார் ரகுவரன் புன்னகையோடு.
“ரயிலில்தானே போகிறாய்?” சந்தேகமாகக் கேட்டார்.
“ஆமா அப்பா.. அப்போதான் அந்த ஊரின் அழகை ரசிக்க முடியும்..” என்று கண்சிமிட்டிய மகளின் தலையை வருடிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.
சங்கமித்ரா ஒரு வாரத்திற்கு தேவையான துணிமணிகளை எடுத்து வைத்தாள். அத்தோடு தன்னுடைய உயிர் நண்பனுக்கு அவள் வாங்கிய சில பரிசு பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்தவள் நேரத்தை பார்த்துவிட்டு வேகமாக கிளம்பினாள்.
அவள் தயாராகி கீழே வரவும் வாசலில் ரகுவரன் ஏற்பாடு செய்திருந்த கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. ரகுவரனும் அவளோடு சென்று மகளை பத்திரமாக ரயிலில் அனுப்பி வைத்துவிட்டு வீடு திரும்பினார்.
‘தடக்.. தடக்..’ என்ற ரயில் ஓசை மனதிற்கு இன்னிசை கீதமாக மாறியது. சின்ன வயதில் தன் தந்தையோடு ரயிலில் பயணித்த ஞாபகங்கள் தாலாட்டிட ஜன்னலின் வழியாக தெரிந்த வெளியுலகை ரசித்தாள் சங்கமித்ரா.
இயற்கையின் அழகிய சங்கமம் என்று சொல்லும் அளவிற்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமையாக காட்சியளித்தது தேயிலை தோட்டங்கள். பறந்து விரிந்த நீல வானில் பொதி சுமப்பது போல சென்ற மேகக்கூட்டம் கண்டு அவளின் இதழ்களில் மென்னகை அரும்பியது.
மலைகளுக்கு நடுவே இருந்த சுரங்க பாதைக்குள் ரயில் நுழைந்தபோது இருந்த இருள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய் கடைசியில் மீண்டும் வெளிச்சத்தை பார்த்தபோது இந்தரின் மனநிலையை துல்லியமாக கணித்தாள்.
சின்ன பயம் அவனின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட போவதை எண்ணி, ‘இல்ல என் ஜித்து வாழ்க்கையில் நான் இருக்கும் வரை அவன் கஷ்டங்களை அனுபவிக்க விடமாட்டேன். ஏற்கனவே திருமணத்தின் மீது அடிப்படை நம்பிக்கை இல்லாமல் இருந்தவனுக்கு தன்மீது காதல் வரக் காரணமே அன்புதானே! அது ஒன்று போதும்.. நாங்க இருவரும் சேர்ந்து ரொம்ப வருஷம் சந்தோஷமாக வாழ்வோம்’ என்று தன்னுள் உருப்போட்டு கொண்டாள்.
இத்தனை வருடங்களில் இந்தரின் மனம் இவ்வளவு காயப்பட்டு இருப்பது புரிந்தபோது, ‘இவனே இப்படியொரு மனநிலையில் இருக்கான் என்றால் விஷ்வா எப்படி இருப்பானோ?’ என்ற எண்ணம் அவளை ஒருப்பக்கம் வாட்டி வதைத்தது.
வழக்கம்போலவே இந்த பயணமும் நல்லவொரு மாற்றத்தை இந்தரின் மனதில் விதைக்கும் என்ற நம்பிக்கையோடு தன் உயிர் தோழனை நேரில் பார்க்க போகும் எண்ணத்துடன் வெளிப்புறம் தெரிந்த இயற்கை அழகை ரசிக்க தொடங்கினாள்.
ரயில் ஓசை தாலாட்டு பாடிட, இடது கையில் கதை புத்தகமும், காதில் ஹெட்செட்டில் இளையராஜாவின் இன்னிசை கீதம் மனதை உற்சாகபடுத்த, ஜன்னலின் வழியாக தெரிந்த இயற்கையின் பசுமை கண்ணுக்கு விருந்தானது.
அந்த அழகை வர்ணிப்பது போலவே காதோரம் கேட்டது பாடல்..
“உச்சி மலை மேகங்கள் தூறல்கள் போட..
சுற்றி வரும் பூங்காற்று தெம்மாங்கு பாட..
காவினில் பூவினில் தேனீக்கள்..
கவிதைகள் பாடிடும் நேரம்..
காவியம் ஆயிரம் நாள்தோறும்..
செந்தமிழ் சாலையின் ஓரம்..
அம்மம்மா சுகம் அம்மம்மா..
உச்சி மலை மேகங்கள் தூறல்கள் போட.. உச்சிமலை மேகம்..
தத்தி தத்தி பாய்ந்தோடும் தங்கநதி ஆட..
சின்ன சின்ன நாணல்கள் மெல்ல ஜதி போட..
வெள்ளிப்பனி மூட்டங்கள் வந்து வந்து ஓட..
பெற்றெடுத்த பெண்போல கையைத் தொட்டுக் கூட..
இந்த மகளை அள்ளியணைக்கும்..
அன்புத் தந்தையோ என்ன விந்தையோ..
எத்தனை எத்தனை கோலங்கள்..
இத்தரை மீதினில் நாளும்..
தத்தன தித்தன தானா தன தித்தன தத்தன தானா..
அம்மம்மா சுகம் அம்மம்மா..
வண்ணமுகில் இல்லாத வானம் அதைப் பார்த்தேன்..
வெண்ணிலவின் ஆடைகள் எங்கே என்று கேட்டேன்..
சித்திரையில் துவைத்தெடுத்து காயவைத்த ஆடை..
மார்கழியில் அணிவாளோ வானம் எனும் தோகை..
இந்த வனப்பு கண்டு ரசிக்கும்..
வஞ்சி மனம் தான் துள்ளி குதிக்கும்..
எத்தனை எத்தனை கோலங்கள்..
இத்தரை மீதினில் நாளும்..
தத்தன தித்தன தானா தன தித்தன தத்தன தானா..
அம்மம்மா சுகம் அம்மம்மா..” என்ற பாடலை கேட்டு ரசித்தவளின் மனம் லேசானது போல உணர்ந்தாள்.
மாலை நேர ரயிலுக்கு தன் தூரத்து சொந்தமான உறவினர் வீட்டு திருமணத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்த மரகதம், ‘இத்தனை வயசாகியும் இன்னும் அறிவு என்பது சுத்தமா வளராமல் இருக்கு. நான் ரயிலுக்குப் போகணும் சீக்கிரம் வந்து கூட்டிட்டுப் போன்னு சொல்லி எவ்வளவு நேரமாச்சு. இன்னும் வந்திருக்கிறானா பாரு’ என்று மனதிற்குள் தன் மகனை வருத்தேடுத்தார்.
அதே நேரத்தில் வாசலில் கார் வந்து நிற்க சத்தமாக இரண்டு முறை ஹாரன் அடித்தவன், “அம்மா கிளம்பிட்டீங்களா?” என்று கத்தினான்.
“நான் எல்லாம் தயாராகத்தான் இருக்கேன். நீதான் நேரம் கடந்து வந்து நிற்கிற? ஏன்டா அந்தாள் மாதிரியே இருக்கிற? ஒருநாளாவது என்னை மாதிரி இருக்கிறாயா?” கோபத்துடன் கணவனோடு ஒப்பிட்டு திட்டிய தாயை முறைத்தான்.
அவனின் முகம் பார்த்தவர், “இதற்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. நான் சொன்னா வந்துவிடுமே கோபம்! படிப்பு, வேலை என்று மகன் வாழ்க்கை நல்ல இருக்கணும்னு கஷ்டப்பட்டவ நான். அந்தாள் இங்கிருந்து போய் எட்டு வருஷத்துக்கும் மேலாச்சு. இன்னும் உன்னைப் பற்றி ஒரு முறை கூட யோசிக்கல. அவனோடு சேர்ந்து கூட்டிட்டுப் போன இந்தர் இன்னைக்கு வரைக்கும் இந்தப்பக்கம் எட்டி பார்க்கல. அப்புறம் எதுக்கு நீ இப்படி என்னை முறைக்கிற. அவனுக்கு நான் கொடுத்த மரியாதை போதும்” என்று படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டார்.
அதெல்லாம் சகிப்பு தன்மையோடு கேட்டு முடித்த விஷ்வா, “அம்மா இப்படி ஒருத்தங்களை குத்தம் சொல்லிட்டே இருந்தா அவங்ககிட்ட இருக்கிற கெட்ட விஷயம் மட்டும்தான் பூதம் மாதிரி கண்ணுக்கு தெரியும். எத்தனையோ நல்ல விஷயங்களை விட்டுட்டு எதுக்கு இப்போ தேவையே இல்லாமல் என் அண்ணனையும் குறை சொல்றீங்க? ஏன் அவன் உங்களை வந்து பார்க்கணும்” என்று எடுத்த எடுப்பில் அதட்டல் போட்டு தாயின் வாயை அடைக்க முயற்சித்தான்.
“நான் அவனோட அம்மாதானே? என்னை வந்து அவன் பார்க்கணும் இல்ல” என்றவர் பெட்டிகளை எடுத்து காரில் வைத்துவிட்டு முன்பக்கம் அமர்ந்தார்.
அவன் பதில் சொல்லாமல் காரை எடுக்கவே, “என்னடா அமைதியாகிட்ட? கேள்விக்கு விடை தெரியலையா? இல்ல கேள்வியே தப்புன்னு சொல்றீயா?” என்று அவனின் கோபத்திற்கு தூபமிட்டார்.
“அம்மாவா அந்த எண்ணமெல்லாம் உங்களுக்கு இருந்து என்ன பண்றது? இன்னைக்கு வரைக்கும் தனக்கு ஒரு பெரிய மகன் இருக்கான்னு நீங்க நினைத்திருந்தால் நானும் உங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசியிருப்பேன். ஆனால் உங்களுக்குத்தான் அந்த எண்ணமே இல்லையே?” என்றவனின் கவனம் முழுவதும் சாலையின் மீதே இருந்தது.
சட்டென்று திரும்பி அவனை முறைத்தவர், “என்னடா உன் அண்ணனுக்கு சப்போர்ட் போடுற?” என்று அவர் அவனை அதட்டினார்.
“என்னை அந்தளோடு பேசி பேசியே உயிரை வாங்கிட்டு இருக்கீங்க.. உங்களுக்கு பயந்துதான் வீட்டுக்கு வராமல் நிறுவனத்திற்கு பக்கத்தில் தனியாக வீடெடுத்து தங்கி இருக்கேன். என் நிலை இங்கே இப்படின்னா அங்கே உன் புருஷன் பேசும் பேச்சில் என் அண்ணன் தற்கொலைக்கு முயற்ச்சிக்காமல் இருந்தா அதுதான் அதிசயம்” என்று நிறுத்தி நிதானமாக நிதர்சனத்தை கூறிய மகனை எதுவும் செய்ய முடியாமல் அமைதியானார் மரகதம்.
அவரின் மௌனத்தை கண்டு நக்கலாக சிரித்தவன், “நீங்க இருவரும் வாழ்ந்தது ஒரு வாழ்க்கை. அந்த வாழ்க்கைக்கு சாபக்கேடாக பிறந்தது எங்க தலைவிதி. அறியாத வயதில் நீங்க பிரிந்தபோது இருந்ததைவிட ஒருத்தரை ஒருத்தர் தவறை மற்றவங்க மேல சொல்லிட்டு வாழ்றீங்களே உங்களை எல்லாம் பார்த்தா காதல், கல்யாணம் என்ற வார்த்தையே வெறுத்துப்போச்சு. நீங்களே நல்ல யோசிங்க அம்மா.. இந்த லட்சணத்தில் அண்ணனைப் பேச வந்துட்டீங்க” என்று கூறியவன் ரயில் நிலையத்தின் முன்னே வண்டியை நிறுத்தினான்.
வார்த்தைக்கு வார்த்தை பதிலடி கொடுத்த மகனின் மீது கட்டுகடங்காத அளவிற்கு கோபம் வந்தபோதும், “நான் போயிட்டு வந்து உன்னை கவனிச்சிக்கிறேன்” என்றார்.
“ஓ சீக்கிரம் போயிட்டு வந்திடுங்க. அப்புறம் வந்து நம்ம வாக்குவாதத்தை வச்சுக்கலாம்” என்றவன் காரின் கதவை லாக் செய்துவிட்டு தாயுடன் இணைந்து நடந்தான்.
“நீயெல்லாம் இப்படி பேசுவ என்று முன்னாடியே தெரிஞ்சிருந்தா பெத்துக்காமல் மலடியாவே இருந்திருப்பேன்” என்று சொல்ல, “அதை அப்பவே செய்திருக்கணும். இப்போ யோசிச்சு என்ன பண்றது” என்றான் வெறுப்புடன்.
அவரை ரயிலில் அவரின் இடத்தில் அமர சொல்லிவிட்டு, “ஊருக்குப் போனோமா? வந்தோமா என்பதோடு நிறுத்திக்கணும். அங்கே போய் அந்த பெண்ணைப் பார்த்தேன் என்று யாரோவோட போட்டோ எல்லாம் வாங்கிட்டு வராதீங்க. நீங்க இருவரும் வாழும் இலட்சணத்தை சொல்லி பொண்ணு கேட்டு கல்யாணம் செய்கின்ற நிலையில் நம்ம வீடு இல்லன்னு புரிஞ்சிகோங்க. அதுமட்டும் இல்லாமல் நான் மட்டும் உங்க மகனில்லை. இன்னொருத்தன் கொழும்புவில் இருக்கான் அவனைப் பற்றியும் கொஞ்சம் யோசிங்க” என்றவன் ரயிலைவிட்டு இறங்கினான்.
அவரின் முகம் கோபத்தில் சிவப்பதை கண்டு ரசித்தவனின் மனமோ வெறுப்பு என்ற தீயில் வெந்து கொண்டிருந்தது. வாழ்க்கையே வாழத்தான் என்று யாரோ சொல்ல, ‘இப்படியொரு வாழ்க்கை வாழ தூக்குப்போட்டுசாகலாம்’ என்ற மனநிலையில் இருந்தான் விஷ்வா.
இந்தருக்கும், விஷ்வாவிற்கு ஒரு வேற்றுமை என்னவென்றால் பெரியவன் தன் மனதில் இருக்கும் காயங்களை வெளியே சொல்ல மாட்டான். அவன் மனதிற்குள் போட்டு புதைத்துகொண்டு இறுக்கத்துடன் வலம் வருவான். ஆனால் சின்னவன் சாட்டையைப் போல அப்போதே பதிலடி கொடுத்துவிடுவான்.
இந்த இரண்டு பேருக்கும் நடுவே சங்கமித்ராவின் மென்மையான மனம் எவ்வளவு தூரம் புண்பட போகிறது என்பது அவளைப் படைத்த அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும். சின்னத்தில் இருந்து இருவரும் வேண்டும் என்று இழுத்துப் பிடித்த மித்ரா விலகிச் சென்ற காலத்தில் ஆண்கள் இருவரும் மனதளவில் பாதிக்கபட்டு ஒருவன் பைத்தியமாகும் நிலையிலும், மற்றொருவன் அதிகம் கோபம் கொண்டவனாகவும் மாறிப் போயிருந்தனர்.
இவர்கள் இருவரையும் மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர மித்ரா என்னவெல்லாம் செய்ய வேண்டி வருமோ?
இது எதையும் அறியாமல் பாடலை ரசித்து கேட்டு கொண்டே மலையகத்தின் அழகை ரசித்தபடி, மாலை அந்தி சாயும் நேரத்தில் மஸ்கெலியா நகரில் காலடி எடுத்து வைத்தாள். இத்தனை ஆண்டுகளில் ஏற்ப்பட்டிருந்த மாற்றங்களை ரசித்தபடி திரும்பியவளின் விழிகளில் விழுந்தான் அவன்.
மித்ரா வழக்கம்போலவே சிந்தனையோடு அவனை நெருங்கவே ரயிலில் மரகதத்தை கண்டவுடன், ‘இவங்க விஷ்வாவின் அம்மாதானே’ என்று நினைக்கும்போது அந்த ரயில் கிளம்பியது.
அதே நேரத்தில் எரிச்சலோடு திரும்பிய விஷ்வாவைப் பார்த்ததும், “ஸார் ஒரு நிமிஷம் நில்லுங்க” என்றாள்.
அவன் சட்டென்று நிமிர்ந்து அவளை கேள்வியாக நோக்கி, “உங்களுக்கு இப்போ என்ன பிரச்சனை மேடம்?” என்றான்.
அவனை கோபத்துடன் முறைத்தவள், “என்னை அடையாளம் தெரியுதா ஸார்” என்றாள் மரியாதையுடன்.
அவளை உச்சி முதல் பாதம் வரை பார்த்தவன், “உன்னை முன்னபின்ன பார்த்த ஞாபகமே இல்ல. அதனால் கொஞ்சம் வழியைவிட்டு விலகி நிற்க்கிறீயா?” என்றவன் அவளை கடந்து சென்றுவிட நினைத்தான்.
“அப்போ நீ சொன்னதும் ரீல்தான் இல்ல. காலம் முழுக்க உன் தோழனாக வருவேன்னு சொன்னே.. இப்போ யாருன்னே ஞாபகம் இல்லன்னு சொல்ற?” என்றவள் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு அவனைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டினாள்.
அவன் புருவம் சுருக்கி யோசிக்க, “ஏன் விஷ்வா என்னை நினைவு வரவே இல்லையா? நான் உன் மானுடா” என்றது அவனின் முகம் பளிச்சென்று ஒளிவீசிடவே, “மானு நீயா? ஏய் நிஜமாவே நீதானா?” நம்பமுடியாமல் கேட்கவே உதட்டைப் பிதுங்கி தொலைக் குலுக்கினாள்.
அவளை பார்த்த சந்தோஷத்தில், “ஹுரே” என்று கத்திய விஷ்வாவை சிலபேர் விநோதமாக பார்த்துவிட்டு சென்றனர். அவனின் சந்தோஷ கூச்சலை கேட்டு அவளின் முகம் மலர்ந்தது.
[மலையகம் என்பது பொது பெயராம். அதனால் ஊரின் பெயரை குறிப்பிட்டு இருக்கேன். யாரும் குழப்பிக்கொள்ள வேண்டாம்]