Maane – 13

Ajmal Ameer at Villain Audio Launch _5_-738a9993

Maane – 13

அத்தியாயம் – 13

மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது.

கிழக்கு வானம் செந்தூரம் பூசிக்கொள்ள பூமியில் இருந்த தேயிலை தோட்டங்கள் பச்சை ஆடையில் ஒளிக்கதிர்கள் ஊடுருவி செல்றது. சில்லேன்ற பனிக்காற்று பட்டு மேனி சிலிர்த்திட கையில் இருந்த தேநீரை ரசித்து சுவைத்தவள், ‘இந்நேரம் ஜித்து என்ன பண்ணிட்டு இருப்பான். அவனை நிம்மதியில்லாமல் செய்துவிட்டு இங்கே இவ்வளவு நிம்மதியாக இருக்கிறோமே’ என்ற எண்ணம் ஒரு பக்கம் ஓடி மறைந்தது.

சங்கமித்ரா சின்ன வயதில் இருந்தே விளையாட்டு குணம் உடையவள். எந்தவொரு விசயத்தையும் மனதிற்குள் போட்டு யோசித்து தன்னையும் வறுத்தி, மற்றவர்களையும் வருந்த வைக்க மாட்டாள். அனைத்து பிரச்சனைக்கும் சுமுகமாக ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க தன்னால் முடிந்தவரை யோசிப்பாள். எந்தவொரு விசயத்தையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்ய மாட்டாள்.

அந்த குணம்தான் அவளின் மனதை ஜித்துவின் பக்கமிருக்கும் நியாயத்தை உணர வைத்ததோ? அவனை உயிராக நேசித்தபோதும் தன் வார்த்தையும், விலகலும் இந்தரின் மனதை நிம்மதியிழக்க வைக்கும் என்ற உண்மை புரிந்துதான் வேண்டுமென்றே மஸ்கெலியா கிளம்பி வந்திருந்தாள்.

இந்த இடைப்பட்ட நாட்களில் அவனின் எண்ணங்களை மாற்றியமைக்கும் என்ற நம்பிக்கையுடன் வந்தவள், விஷ்வாவின் நிலையை எண்ணி கவலைக் கொண்டாள். அண்ணனின் மீது உயிரையே வைத்திருந்தும் தனியாக இருப்பவன் நாளை இப்படியே இருந்து விடுவேன் என்று சொல்லிவிடுவானோ என்ற கவலையுடன் நின்றவளின் செல்போன் சிணுங்கியது.

அவள் திரையில் தெரிந்த இலக்கத்தை கண்டவுடன், “சம்மு என்னடி பண்ணிட்டு இருக்கிற?” என்று உற்ச்சாகத்துடன் கேட்டாள்.

மறுப்பக்கம், “ஏண்டி இன்னைக்கு என்ன நாளென்று மறந்துவிட்டாயா?” என்று கோபத்துடன் கத்தினாள் சம்யுக்தா.

சிறிதுநேர சிந்தனைக்கு பிறகு, ‘ஐயோ இவளோட பிறந்தநாளை மறந்துவிட்டேனே.. நான் உண்மைச் சொன்னாலும் திட்டுவா. அதே நேரத்தில் தெரியாத மாதிரி காட்டிகொண்ட வருத்தபடுவாளே..’ என்று ஒருப்பக்கம் எண்ணம் ஓடி மறையவே,

“சாரி சம்மு! விஷ் யூ மேனி மோர் ஹாப்பி ரிட்டன்ஸ் ஆப் தி டே” மித்ரா வாழ்த்தவே, “இங்கிருந்து போனதும் என் பிறந்தநாளைக் கூட மறந்துட்ட இல்ல” என்று கேள்வியில் வருத்தம் வெளிப்படையாகவே தெரிந்தது.

சங்கமித்ரா பேசும் முன்னர் சட்டென்று அவளின் கையிலிருந்து போனை பறித்த விஷ்வாவைப் பார்த்து, “ஏய் என்னடா பண்ற” என்று அவள் கத்தினாள்.

அதில் சம்யுக்தாவின் வருத்தம் பின்னுக்கு தள்ளபடவே, “மித்ரா என்னாச்சு” என்று இவள் இங்கே பதறினாள்.

தன் தோழியிடம் அமைதியாக இருக்கும்படி சைகை செய்தவன், “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்வீட் ஹார்ட். இந்த வருஷம் முழுக்க நீ எதிர்பார்க்காத அளவிற்கு சந்தோசமான வாழ்க்கை வாழணும்னு நான் மனதாரப் பிரேயர் பண்ணிக்கிறேன்” திடீரென்று கேட்ட ஆணின் குரலில் திகைப்பின் உச்சிக்கு சென்றவள், “தேங்க்ஸ்” என்ற வார்த்தையை உச்சரிக்கும்போது மித்ராவின் கரங்களுக்கு செல்போன் கைமாறியிருந்தது.

“விஷ்வா ஏன் போனை பிடுங்கின. ஏற்கனவே வாழ்த்து சொல்லலன்னு வருத்தத்தில் இருக்கிற? இப்போ நீ பேசியதைக் கேட்டு என்னிடம் சண்டைக்கு வரப்போறா பாரு” என்று எரிந்து விழுந்தாள் மித்ரா.

“ஏன் பிறந்தநாள் வாழ்த்து சொல்லலன்னு வருத்தமா? ஆமா இன்னைக்கு தேதி என்ன அக்டோம்பர் 1ஸ்ட் தானே? அப்போ சரி அவளோட நம்பர் கொடு. வருடம் தவறாமல் நான் அவளுக்கு மறக்காமல் விஷ் பண்ணிவிடுகிறேன்” என்று இலகுவான காரணத்தை சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அவனின் பதிலை வியப்புடன் பார்த்த மித்ரா, “ஹலோ சம்மு..” என்றாள் சிந்தனையோடு.

“ஏய் மித்து இப்போ எனக்கு விஷ் பண்ணியது விஷ்வாதானே?” என்றவளின் குரலில் மகிழ்ச்சி ஊற்றாக பாய்ந்தது.

அதே நேரத்தில் சோபாவில் அமர்ந்து பேப்பர் படித்தவனின் மீது பார்வையைச் செலுத்தி, “ஆமா சம்மு” என்றாள்.

“நிஜமாவே அவர் விஷ் பண்ணுவாருன்னு நினைக்கவே இல்ல மித்ரா. இந்த வருடம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். நான் தேங்க்ஸ் சொன்னேன்னு அவரிடம் சொல்லிரு மித்து. ஐ எம் வெரி ஹாப்பி” என்றவள் விஷ்வா பேசிய சந்தோஷத்தில் தன்னை மீறி அழுதுவிட்டாள் சம்யுக்தா.

“எதிர்பார்க்காத நேரத்தில் நடக்கும் விஷயங்கள்  மனசுக்கு எவ்வளவு சந்தோஷத்தை கொடுக்குது தெரியுமா மித்ரா. இன்னைக்கு நான் இவ்வளவு சந்தோசமாக இருக்க நீ மட்டும்தான் காரணம். தேங்க்ஸ்.. தேங்க்ஸ் எ லாட் மித்து” என்று அவள் பட்டென்று போனை  வைத்துவிட்டாள்.

சம்யுக்தாவின் எண்ணவோட்டத்தை ஓரளவு கணித்த மித்ராவின் கண்கள் லேசாக கலங்கிட, “விஷ்வா டெல் மீ ட்ரூத். இப்போ ஏன் நீ சம்முவிற்குப் பிறந்தநாள் வாழ்த்து சொன்னாய்?” என்று தீவிரமாக கேட்டபடி அவனுக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தாள்.

“நீ அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னதும், என் நண்பியின் உயிர் தோழி என்ற எண்ணத்தில் நானும் விஷ் பண்ணேன். இதில் என்னடி தவறு இருக்கு” என்று சாதாரணமாகவே கேட்டான்.

அவனின் விளக்கம் அவளுக்கு பொதுமானதாக இருந்தபோதும், “நீ செய்திருக்கும் விஷயத்தில் அவ எவ்வளவு தூரம் சந்தோசப்படுவா தெரியுமா?” என்று கேட்கவே சட்டென்று நிமிர்ந்து அவளை பார்த்தான்.

“பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் அப்படி என்ன இருக்குன்னு எனக்கு புரியல” என்று அவன் முடிக்கும்போது, “அவளுக்கென்று யாருமில்ல விஷ்வா. நாங்க காலேஜில் படிச்ச ப்ரெண்ட்ஸ் மட்டும்தான் அவளோட பிறந்தநாளை கொண்டாடுவோம். நான் அங்கிருந்த வரை அவளுக்கு யாருமில்ல என்ற எண்ணத்தை வரவிட்டதே இல்ல தெரியுமா?” என்றாள்.

அதைக்கேட்ட விஷ்வாவின் இதயத்தில் திடீரென்று சுருக்கென்று ஒரு வலி தைத்தது. யாரும் இல்லாத நிலையில் அவளின் வருத்தம் எப்படி இருக்குமென்று ஒவ்வொரு நாளும் அனுபவிக்கும் அவனுக்கு புரியவே, “யாருமில்லன்னு ஏன் மானு சொல்ற. அவளுக்கு நம்ம எல்லோரும் இருக்கோம். நம்ம இருக்கும்போது அவ ஏன் யாரும் இல்லாதவள் போல தவிக்கணும். எனக்கெல்லாம் அப்பா, அம்மா இருந்தும் அனாதையாக இருக்கேன்”என்றவனின் குரலில் வருத்தம் இழையோடியது.

ஆனால் அவன் சம்யுக்தாவிற்காக பேசியதை வியப்புடன் கவனித்தவள், ‘இவங்க இருவரும் சேர்ந்தால் நல்ல இருக்குமே! அவளுக்கு சொந்தங்கள் கிடக்கும். இவனும் அவளை உயிராக பார்த்துகொள்வான். ஜித்துவுடன் நானும் சந்தோசமாக வாழலாம்’ என்று நினைத்தவளின் கற்பனை குதிரை கடிவாளம் இல்லாமல் ஓடியது.

அதை தடுக்கும் விதமாக, “உனக்கு நான் துணை. எனக்கு நீ துணை என்ற எண்ணத்தோடு நண்பர்களாக பழகும் வரை எந்த பிரச்சனையும் வராது மானு. அந்த நிலையைக் கடந்து காதல் என்ற கூட்டுக்குள் மனசு அடைபட்டு போயிருச்சு என்றால் வாழ்க்கை முழுக்க நரகம்தான்” என்றவன் எழுந்து சென்று சமையலைக் கவனித்தான்.

‘நீ எப்படி என்னை வைத்து மனதில் கோட்டை கட்டலாம்’ என்று சம்பட்டியை எடுத்து நடு மண்டையில் நத்தேன்று அடித்தது போல இருந்தது மித்ராவிற்கு.

“என் காதலுக்கு ஹெல்ப் பண்ற நீயேன்டா இப்படியொரு எண்ணத்துடன் மனதில் வைச்சிருக்கிற?” என்று கேட்டபடி சமையலறைக்குள் நுழைந்தவள் அவனுக்கு உதவி செய்தாள்.

கவனமாக காய்களை நறுக்கிய விஷ்வா, “மானு உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவன் நிஜமாவே ரொம்ப கொடுத்து வைத்தவன். உன்னிடம் ஒரு மேஜிக் இருக்கு என்று சொன்னால் நம்புவியா?” என்றவனை அவள் விநோதமாக பார்த்தாள்.

“என்ன கஷ்டம் மனதில் இருந்தாலும் அடுத்த நிமிசமே ஏதாவது பேசி சட்டென்று சிரிக்க வைத்துவிடுவாய். அந்த மேஜிக் இருப்பதால் தான் நீ மானுவாக இருக்கிற. அது தெரியாததால் தான் விஷ்வாவாக இருக்கேன். காதல், கல்யாணம் என்ற வார்த்தைகளின் மீது வெறுப்பை வர வரவழைத்தது என் அப்பா, அம்மாதான். அதுக்காக காதலிச்சு கல்யாணம் பண்றவங்களுக்கு ஹெல்ப் பண்ணக்கூடாது என்ற கொள்கையெல்லாம் எனக்கு இல்ல” என்று சிரித்தவன் மற்ற வேலைகளில் தன் கவனத்தை செலுத்தினான்.

 அவன் தன் வீட்டில் வந்து சமையல் செய்வதைக் கவனித்தவள், “நீ வீட்டிலேயே சாப்பாடு செய்து எடுத்துட்டு வருவதாக சொன்ன இல்ல” என்று அவள் சந்தேகமாக இழுக்கவே, “அதெல்லாம் செஞ்சி எடுத்துட்டு வந்துட்டேன். இது மதியம் சமையலுக்கு..” என்றான் நிதானமாக.

“பொண்ணுங்க சமையல் டிப்பார்ட்மெண்ட்டை மட்டும்தான் ஆக்குபை பண்ணி வச்சிருந்தாங்க. இப்போ அதையும் பிடுங்க நினைக்கிறீயே இது உனக்கே நியாயமா?” என்று இடையில் கையூன்றி அவனை வேண்டுமென்று வம்பிற்கு இழுத்தாள் மித்ரா.

அவனோ உதட்டில் அரும்பிய புன்னகையோடு, “அது தெரிஞ்சதால் தானே தயிரில் சீனியை கலந்து கொடுப்பது, பாயசத்தில் உப்பு அள்ளி போடுவது என்று விதவிதமாக தொல்லை கொடுக்கிறீங்க” அவன் போகின்ற போக்கில் சொல்லவே அவளின் விழிகள் வியப்பில் விரிந்தது.

“என்னடா அனுபவம் பேசுது போல..” அவனைப் பார்த்து அவள் குறும்புடன் கண்சிமிட்டி சிரிக்கவே, “ஏய் மானு! இதெல்லாம் நான் ஸ்டோரி புக்கில் படிச்சேன். சொந்த அனுபவம் எதுவும் இல்ல தாயே” என்று அலறினான்.

மித்ரா வந்திருந்த காரணத்தினால் ஆபீசிற்கு லீவ் எடுத்திருந்தான். இப்படி பேச்சும் சிரிப்புமாக காலை உணவை முடித்துக்கொண்டு இருவரும் சைக்கிளை எடுத்த இருவரும் ஊரை போட்டி போட்டுக்கொண்டு சுற்றி  வந்தனர்.

இதற்கிடையே மித்ரா அவளின் பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு, அங்கே அவள் அடித்த லூட்டிகள், அங்கே காதலை சொன்னவர்களை சுத்தலில் விட்டது என்று இத்தனை வருட நிகழ்வுகளை நண்பனிடம் சுவாரசியமாக பகிர்ந்தாள்.

சில நேரத்தில் அவள் சொல்வதைக் கேட்டு சிரித்த விஷ்வா, “ஐயோ பாவம் தமிழ்நாட்டு பசங்க.. ஏற்கனவே இந்தியாவில் காதல் தோல்வி என்றால் பசங்க தாடி வளர்ப்பாங்க. இப்போ நீ சொல்வதைக் கேட்டாள் உன்னால் முக்கால்வாசி பேர் தாடியோடு தான் சுத்தறாங்க என்று தோணுது” என்று சிரித்தான்.

அவனை சிரிக்க வைத்து மகிழ்ந்த மித்ராவோ, “ஏன் விஷ்வா உன்னிடம் ஒரு விஷயம் கேட்கட்டுமா?” என்று கேட்டாள்.

“கேளு” என்றான் சிரிப்புடன்.

“இந்த இடைபட்ட காலத்தில் யாரையாவது காதலிச்சியா?” என்ற கேள்விக்கு அவன் உதட்டை பிதுக்கிகொண்டே தலையை மறுப்பாக அசைத்தான்.

“அப்போ கல்யாணம்..” என்று அவள் கேட்க, “மித்ரா இரண்டும் வேண்டான்னு இருக்கிறவனிடம் ஏன் இந்த கேள்வி கேட்கிறன்னு  சத்தியமா புரியல. எனக்கு காதல், கல்யாணம் இரண்டிலும் நம்பிக்கை இல்ல” என்றான் தெளிவாக.

அவனின் பதிலைக் கேட்ட மித்ரா, “நீ இரண்டு வார்த்தைக்கான அர்த்தத்தையும் தவறா புரிஞ்சிட்டு இருக்கிற. காதல் என்பது இரண்டு மனமும் இடமாறும் அற்புதமான நிகழ்வு. திருமணத்திற்கு முன்னால் ஒருத்தியை உயிராக நேசிப்பதும், கல்யாணத்திற்கு பிறகு ஒருத்தியை தன்னில் பாதியாக நினைப்பதும் சமம்தான்” என்றவளை சைக்கிளை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்.

அவளும் அவனை கேள்வியாக நோக்கிட, “இந்த இரண்டுக்கும் இடையே எவ்வளவு வேறுபாடு இருக்குன்னு உனக்கு புரியலையா மானு. தி.மு. முன்னே உயிராக இருந்தவள், தி.பி. பின்னே தன்னில் சரிபாதியாக மாறிப் போகிறாள். அப்போதே உயிர் என்ற நேசம் காணாமல் போய்விட்டதே. அதை நீ கவனிக்கவே இல்லையா?” என்றவன் கேட்க மித்ரா சிந்தனையில் ஆழ்ந்தாள்.

“என்னைப் பொறுத்தவரை காதல் என்ற ஒன்று காயத்தைப் பரிசளிக்காததாக இருக்கணும். அவனோட காயங்களுக்கு அவளே மருந்தாகணும். கடைசிவரை ஈருடல் ஓர் உயிராக வாழ்றாங்க பாரு அதுதான் உண்மையான ஆத்மார்த்தமான காதல். அவள் இல்லாத உலகில் நான் இருக்க மாட்டேன். அவனின் சுவாசக்காற்று இல்லாத இடத்தில் என் உயிர் மூச்சு தங்காது என்று நிரூபிக்கும் அந்த உண்மையான துடிப்பும், தவிப்பும்தான் காதல். அதை இதுவரை நான் யாரிடமும் பார்க்கவே இல்ல. அதனால் எனக்கு அதன்மீது நம்பிக்கை வரவும் இல்ல” என்றவன் சொல்லவே அவளின் மனதில் அந்த எண்ணம் உதயமானது.

அவனின் மனதை ஓரளவு யூகித்த மித்ரா, “நீ சொன்ன மாதிரியே ஒரு காதலையும், அவங்க ஈருடல் ஓர் உயிருமாக வாழ்வதை நீ உணர்ந்துவிட்டால் கல்யாணம் செய்து கொள்வாயா விஷ்வா” என்று திட்டம்போட்டு அவனை சரியாக சிக்க வைத்தாள்.

சிறிதுநேர சிந்தனைக்கு பிறகு, “இந்த ஒரு வருடத்தில் அந்த மாதிரி ஒரு ஜோடியை நான் பார்த்துவிட்டால் நிஜமா சொல்றேன். என்னோட கொள்கை கோட்பாடுகளை ஓரம்கட்டிவிட்டு நீ சொல்கின்ற மாதிரி கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனால் அது நடக்கவிட்டால்..?” என்று அவன் கேள்வியாக புருவம் உயர்த்தினான்.

அவன் இப்படி சிக்க வைப்பான் என்று உணர்ந்தே, “ எப்போதும் பாசிட்டிவ் சைடு மட்டும்தான் யோசிப்பா. சோ நெகட்டிவ் பற்றிய எண்ணம் எனக்கு இல்ல. அதனால் நான்தான் ஜெய்ப்பேன்” என்று உறுதியாக பதிலைக் கூறினாள்.

“நீ சொல்றது ஓகே மானு. உன்னோட எண்ணவோட்டம் சரியாக இருக்கு. அதில் இருந்தே அந்த இரண்டு வார்த்தைகள் மீது எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கன்னு புரியுது. ஒரு வேலை அது நடக்காமல் போயிட்ட என்ன செய்வாய்?” என்று அவன் காரியத்தில் கண்ணாக கேட்டான்.

அவளும் அவனுக்கு சளைத்தவள் இல்லை என்பதால், “நீ வேண்டான்னு சொல்ற இரண்டும் எனக்கு  வேண்டான்னு சொல்லிட்டு விலகி போயிடுவேன். என்ன நான்  சொல்வது புரிகின்றதா விஷ்வா? நீ அனுபவிக்காத காதல், கல்யாணம் இந்த இரண்டும் வேண்டாம்னு ஒரேயடியாக உதறிட்டு போய்விடுவேன்” என்றவளின் குரலில் மாறுதலை அவன் கவனித்தபோதும் அவன் அதை பெரிதாக நினைக்கவில்லை.

தன்னுடைய நண்பனின் வாழ்க்கைக்காக அவள் தன் வாழ்க்கையை பணயம் வைப்பதை அப்போது அவன் உணராமல் போனான். இதனால் ஏற்படபோகும் பின் விளைவால் தன் தமையனின் வாழ்க்கை ஒருநாள் ஸ்தம்பிக்க போவது அவனுக்கு தெரியாது.

“அந்த இரண்டு வார்த்தைக்கான அர்த்ததை மட்டும் தெரிஞ்சி வைச்சுகிட்டு என்னை வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்று நினைக்காதே மானு. காதலோ அல்லது கல்யாணமோ இரண்டுமே ரசித்து அனுபவிக்கணும்” என்றவனின் பதிலில் எச்சரிக்கை இருப்பதை உணர்ந்தாள்.

அவனை தீர்க்கமாக பார்த்த மித்ரா, “நீ சொன்ன மாதிரியே அந்த இரண்டையும் அனுபவித்து உணர்ந்தபிறகு உனக்கு அது புரியாமல் போகும் பட்சத்தில் என்னோட முடிவு எல்லாத்தையும் தூக்கிப்போடுவது தான். ஆனா அதுக்குபிறகு என் லவ் நிஜம், என் திருமண வாழ்க்கையில் ஆத்மார்த்தமாக நாங்க வாழ்த்து இருக்கும் உண்மை உனக்கு புரிந்தால் மட்டும்தான் நீ மறுபடியும் என்னை பார்க்க முடியும். இல்லையென்றால் கடைசி வரை உன் கண்ணெதிரே வரமாட்டேன்” என்றவள் சைக்கிளை எடுத்துகொண்டு முன்னே சென்றாள்.

அவளின் பேச்சில் இருந்த தீர்மானத்தை அப்போது அவன் உணரவில்லை. தான் சொன்னதை ஒருநாள் அவள் செய்ய போவதற்கு இந்த நாள் அடித்தளமாக அமையும் என்று தெரியாமல், “இரு மானு நானும் வரேன்” என்று அவளை பின் தொடர்ந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!