Maane – 14

images (49)-06b5bfaf

Maane – 14

அத்தியாயம் – 14

அடுத்த இரண்டு நாட்களும், சீதையம்மன் கோவில் மற்றும் ஆஞ்சிநேயர் கோவில் என்று சின்ன வயதில் சுற்றி வந்த இடங்களை மீண்டும் ரசித்தனர். இன்னும் இரண்டு நாளில் மீண்டும் கொழும்பு செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் வலம் வந்தவள் அன்று விஷ்வாவை அழைத்துக்கொண்டு ஷாப்பிங் சென்றாள்.

அங்கே அவனுக்கும், ஜித்துவிற்கும் துணியைத் தேர்வு செய்து பில் போட அனுப்பியவள், ‘நான் இங்கே வந்தது ஜித்துவிற்கு தெரிந்திருந்தால் கண்டிப்பாக என்னைத் தேடி வந்திருப்பான்’ என்று நினைக்கும்போது அவளின் எண்ணத்தின் நாயகனே அங்கே உதயமானான்.

வழக்கத்திற்கு மாறாக பெண்களுக்கான உடை தேர்வு செய்யும் இடத்தில் தன்னவனைக் கண்டவள், ‘ஜித்து யாருக்கு துணியெடுக்க இங்கே வந்திருக்கிறான்’ என்று நினைக்கும்போது ஏனோ மனம் லேசாக தடுமாறியது.

அவன் பட்டுப்புடவையை அதுவும் ஆரஞ்சு நிறத்தில் அடர் பச்சை நிற கற்கள் பாதிக்கப்பட்டு நேர்த்தியாக இருந்த புடவையைத் தேர்வு செய்து அனுப்பிவிட்டு தனக்கான உடையைத் தேர்வு செய்ய ஆண்கள் செக்சன் நோக்கி நடந்தான்.

சட்டென்று தன் நினைவலைகளை மீட்டுக்கொண்ட மித்ரா, “விஷ்வா நீ பில் வந்ததும் வாங்கிட்டு வா.. நான் வெளியே வெயிட் பண்றேன்” என்று சொல்லிவிட்டு நில்லாமல் நடந்தவளை தடுப்பது போல ஒலித்தது இந்தரின் குரல்!

“வினோத் இந்த ஒரு வாரம் கம்பெனியை நீயே பார்த்துக்கோ. அடுத்த வாரம் மேரேஜ் முடிந்தபிறகு நானே ஆபீஸ் வருகிறேன். அதுவரை முக்கியமான விஷயம் என்றால் மட்டும் போன் பண்ணு” என்று சொல்லிவிட்டு வைக்க அது இவளின் காதுகளில் தெளிவாக விழுந்தது.

‘தான் விலகியது வசதியென்று எண்ணி வேறு பெண்ணைத் திருமணம் செய்ய போகிறானா?’ என்ற எண்ணத்தில் அவளின் முகம் கனலாக மாறியது. இதயத்தின் அருகே திடீரென்று வலி பரவுவதை உணர்ந்தவளின் விழிகள் லேசாக கலங்கியது.

ஆனாலும் தன் வைராக்கியத்தை விடாமல், ‘நான் வைத்த காதல் உண்மையாக இருந்தால் அவனால் என்னைத் தவிர வேறொரு பெண்ணை மணக்க முடியாது. நான் ஏன் தவறாக நினைத்து வருத்தப்படணும்? என் ஜித்து எனக்கு மட்டும்தான்’ என்ற நம்பிக்கையோடு கடையைவிட்டு வெளியேறினாள்.

சிறிது நேரத்தில் விஷ்வாவும் அவளைத்தேடி வரவே இருவரும் இணைந்து ஒரு ஹோட்டலுக்குள் நுழைவதை ஒரு ஜோடி கண்கள் கவனித்தது.

இருவருக்கும் பிரியாணி ஆர்டர் கொடுத்துவிட்டு உடையைப் பிரித்து பார்த்த விஷ்வா, “எங்க அண்ணாதான் எனக்கு உடையேடுத்து தருவான் மானு. அவன் இங்கிருந்து போனபிறகு அதெல்லாம் யாருமே செய்யல தெரியுமா? அதுக்குபிறகு இன்னைக்குதான் நீ செலக்ட் பண்ணியிருக்கிற.. உன் செலக்ஷன் சூப்பர்” என்றவன் இந்தருக்கு எடுத்த சர்ட், பேண்டை எடுத்து பார்த்தான்.

“உன் ஆளுக்கா மானு. பரவல்ல சூப்பரா செலக்ட் பண்ணியிருக்கிற” என்று சொல்லி கொண்டிருக்கும்போது இந்தர் அந்த கடைக்குள் நுழைவதை கவனித்தாள் மித்ரா.

அவள் அமைதியாக இருப்பதை கவனித்த விஷ்வா, “ஏய் என்ன இவ்வளவு அமைதியாக இருக்கிற?” என்று கேட்கும்போது பேரர் உணவைக் கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றார்.

கமகம வாசனை மூக்கைத் துளைக்கவே, “மானு வாசனையே சும்மா தூக்குது இல்ல” என்றவன் அவளை நோக்கி சாப்பாட்டை நகர்த்தினான்.

ஆனால் மித்ரா தூரத்தில் ஒரு டேபிளில் தனியாக அமர்ந்த இந்தர்ஜித்தை பார்த்தபடி, “எனக்கு வேண்டாம்.. வா நம்ம போலாம்” என்றாள் கரகரப்பான குரலில்.

சற்றுமுன் பசிக்கிறது என்று சொல்லி உயிரை வாங்கியவள், இப்போது வேண்டாம் என்று சொல்லவும், “மானு நீதானே பசிக்கிறது என்று சொன்ன.. இங்கே வந்தபிறகு வேண்டான்னு சொன்னால் என்னடா அர்த்தம்” என்றவன் அப்போதுதான் அவளின் முகத்தைக் கூர்ந்து கவனித்தான்.

அவளின் முகம் வாடியிருப்பதைக் கவனித்தவன் அவளின் பார்வை சென்ற திக்கை திரும்பிப் பார்த்தான். அங்கே தன் வயதைவிட சில வருடங்கள் பிரியவன் என்று சொல்லும் தோற்றத்தில் ஒருவன் அமர்ந்து அவளையே பார்த்து கொண்டிருப்பதை கவனித்தவன், ‘மித்ராவின் லவ்வரா இருக்குமோ?’ என்ற சிந்தனையோடு மீண்டும் அவளின் மீது கவனத்தை திருப்பினான்.

“மித்ரா இங்கே பாரு.. யார்மேல் கோபம் இருந்தாலும் அதை சாப்பாட்டின் மீது காட்டுவது ரொம்ப தவறு” என்றவன் அவளின் முகத்தின் முன்னே சொடக்குப் போட்டான்.

சட்டென்று தன் நினைவிலிருந்து மீண்டவள், “விஷ்வா சாப்பிட்டு முடிச்சிட்டியா போலாமா?” என்றாள் வேகமாக.

அப்போதுதான் அவன் இன்னும் சாப்பிடாமல் இருப்பதை கண்டவுடன், “என்னால் இங்கே ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது” என்றவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான்.

அதில் இருந்த கோபத்தை உணர்ந்து அவள் மௌனமாகிவிடவே, “மித்ரா வாயைத் திற” என்று கட்டளையிட்டான். அவன் பேச்சிற்கு மறுப்பு சொல்லாமல் கலங்கிய கண்களோடு வாயைத்திறந்தாள் மித்ரா.

அவளுக்கு ஊட்டிவிட்டு கன்னத்தில் விழுந்த கண்ணீரை இடது கரத்தினால் துடைத்தவன், “நீதான் பீம்பாய்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிட்ட இல்ல. அப்புறம் எதுக்கு இப்படி தேவையில்லாமல் கலங்கற. நான் இருக்கும்போது என் தோழியின் கண்ணீர் வந்தால் அது எனக்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா?” ஏற்ற இறக்கங்களுடன் அவன் சொல்லவும் சட்டென்று சிரித்தாள் மித்ரா.

“இப்படித்தான் சிரிச்சிட்டே இருக்கணும்” என்றவன் அவளுக்கு உணவை ஊட்டி விட தொடங்கினான். அதுவரை ஏதேதோ நினைத்து தன்னையே வருத்திக்கொண்டு இருந்த மித்ராவும் கவலை மறந்தவளாக தோழனுக்கு ஊட்டிவிட தொடங்கினாள்.

இருவரின் பாசப்பிணைப்பை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த இந்தர்ஜித் மனமோ, ‘எந்த கள்ளம் கபடம் இல்லாமல் அவளை இவ்வளவு அக்கறையோடு கவனித்துக் கொள்கிறானே.. இருவரின் இடையே இருக்கும் உறவை கண்டிப்பாக தவறாக நினைக்க என்னால் முடியாது. மித்ராவின் மனதில் என்னைத் தவிர இன்னொரு ஆணுக்கு இடமில்லை’ என்று உறுதியாக நம்பினான்.

ஆனாலும் தன் கண்முன்னே நடப்பதை கண்டு, ‘என் காதலிக்கு ஊட்டிவிட இவன் யாரு?’ என்று பொறமை ஒருப்பக்கம் கோபமாக மாறியது.

மித்ராவின் பார்வையில் இருந்த வித்தியாசம் அவனை யோசிக்க வைக்கவே, ‘இவ ஏன் என்னையும், அவனையும் மாறி மாறி பார்க்கிறாள்?’ என்று சிந்தனையோடு இருவரின் மீதும் பார்வையைப் படரவிட்டான்.

அவளுக்கு ஊட்டிவிட்ட விஷ்வாவை கவனித்த இந்தர்ஜித், ‘ஒரு குழந்தைக்கு தன் தகப்பன் எவ்வளவு அன்புடனும், பாசத்துடனும் சாப்பாட்டை ஊட்டிவிடுவானோ அதே மாதிரி மித்ராவை குழந்தையாக பாவிக்கும் இவனை தவறாக நினைத்தால் எனக்கு புத்தி பேதலிச்சு போயிருச்சுன்னு தான் அர்த்தம்..’ என்ற எண்ணம் ஒருப்பக்கம் ஓடியது.

மித்ரா சிரிப்புடன் அவன் கையில் சாப்பிடுவதைக் கவனித்த இந்தர்ஜித், ‘ஒரு வாரம் என்னை அங்கே தனியாக தவிக்க விட்டுட்டு இங்கே வந்து எவ்வளவு சந்தோசமாக இருக்கிற பாரு. இதில் மேடம்க்கு ஊட்டிவிட ஒரு ஆள் வேற. என்னை நினைக்காதே நான் உன்னைவிட்டு விலகி போறேன்னு சொல்லி என்னை பாடாப்படுத்தி அவங்க அப்பாவிடமே என்னை நேரடியாகப் போய் பொண்ணை கேட்க வைத்துவிட்டாளே’ என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டான்.

அவனின் நினைவுகள் கடந்த காலத்தை நோக்கி பயணித்தது.  

மித்ரா அப்படி பேசிவிட்டு சென்றபிறகு இந்தர்ஜித் இரண்டுநாளும் பித்துபிடித்தவன் போல இருந்தான். ஒருபக்கம் தன் மீது நம்பிக்கையில்லாமல் பேசி அவளை காயப்படுத்திவிட்டதை நினைத்து மனம் வருந்தினான். மற்றொரு பக்கம் தந்தை அவளை அவதூறாக பேசியது மனக்கண் முன்னே வந்து சென்றது.

எவ்வளவு இழிவான சொற்களைப் பிரயோகித்தார் என்று நினைக்கும்போது அவளை உயிராக நினைப்பவனுக்கு வலித்தது. அதற்கு பயந்து அவளை தானும் காயபடுத்தியத்தை நினைக்க நினைக்க எரிச்சல் மண்டியது.

அவள் நினைத்தது போலவே, ‘என் காதல் என்னை மாற்றிவிடும். என் மித்ரா என்னை மாறிவிடுவாள். அதுமட்டும் இல்லாமல் அவளைத் தவிர வேறோரு பெண்ணைத் திருமணம் செய்தால் அப்பாவிற்கு நானே வெற்றியைத் தூக்கி கொடுத்த மாதிரி ஆகிவிடும். இல்ல அந்த வார்த்தைகள் பேசியது தவறுன்னு அவருக்குப் புரிய வைக்கணும்’ என்றவனின் மனதில் தெளிவு பிறந்தது.

அதுவரை அவனின் மனதில் போட்டு வைத்திருந்த கட்டுப்பாடுகளை மீறி அவனின் காதல் வெளி வந்தது. மறுநாளே அவன் மித்ராவின் தந்தையிடம் திருமணத்தைப் பற்றி பேசுவதற்காக சீக்கிரமே கிளம்பினான்.

“இந்நேரத்திற்கு எங்கேடா கிளம்பிட்ட” என்று வினோத் கேட்டான்.

அவனின் எதிரே அமர்ந்திருந்த தந்தையை மெளனமாக ஒரு பார்வை பார்த்தவன், “மித்ராவின் அப்பாவைப் பார்த்து கல்யாணத்தைப் பற்றி பேச போறேன்” என்றான் சாதாரணமாகவே.

“வினோத் அந்த பொண்ணு என் வீட்டிற்கு மருமகளாக வரக்கூடாதுன்னு அவனிடம் தெளிவாக சொல்லி வை” என்று பாஸ்கர் வினோத்திடம் உறுதியாக கூறினார்.

அவரின் பேச்சை இந்த காதில் வாங்கி அந்த காது வழியாக வெளியே விட்டவன், “நீ வருகிறாயா வினோத்” என்றான்

தன் நண்பனையும் அவனின் முகத்தில் இருந்த தெளிவையும் கண்டு, “ஒரு பத்து நிமிஷம் இருடா” என்றவன் வேகமாக மாடியேறிச் சென்றான்.

“ஏன்டா நான் சொன்னதை நீ கேட்காவிட்டால் இந்த வீட்டுக்குள் வரக்கூடாது” என்றவரை நிமிர்ந்து பார்த்த இந்தர்ஜித் முகம் கோபத்தில் சிவந்தது.

தன்னை இன்னும் விவரம் தெரியாத குழந்தை என்று எண்ணிக் கொண்டிருக்கும் தந்தைக்கு, ‘நான் வளர்ந்துவிட்டேன்’ என்று புரிய வைக்க வேண்டிய கடமை தனக்கு இருப்பதை உணர்ந்தவன், “அப்பா நீங்க அதட்டுவதற்கு எல்லாம் அமைதியாக போறேன் என்றால் அதுக்கு ஒரே காரணம் அப்பா என்ற மரியாதை மட்டும்தான். அதுவும் கடைசியாக நீங்க மித்ராவைப் பற்றி  பேசிய அன்னைக்கே உங்கமேல் வைத்திருந்த மரியாதை எல்லாமே சுக்குநூறாக உடைந்துவிட்டது” என்றவனை அவர் கோபத்துடன் முறைத்தார்.

“இப்போ உங்க முன்னாடி இருப்பது மித்ராவின் உயிர் காதலன். அவனுக்கு தடை விதிக்க உங்களால் முடியாது. யாரை நீங்க தவறாக பேசினீங்களோ அவளைத்தான் எட்டு வருடங்களுக்கு மேலாக காதலிச்சிட்டு இருக்கேன். அவளை யாருக்காகவும் விட்டுகொடுக்க என்னால் முடியாது. அவளை கல்யாணம் பண்ணினால் இந்த வீட்டிற்கு வரக்கூடாதுன்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி. பாசம், அன்பு இல்லாத இந்த கட்டத்தில் பொம்மையாக வாழ்வதைவிட அவளோட சந்தோசமாக வாழ்வேன்” என்றவன் பேசும்போது வினோத் கீழே இறங்கி வந்தான்.

பாஸ்கர் இருவரையும் எதுவும் செய்ய முடியாமல் கை முஷ்டி இறுக மகனை நோக்கிட, “நான் மறுபடியும் மஸ்கெலியா போகப் போறேன். வீடு வாங்கி போட்டு இருக்கேன். நானும் மித்ராவும் இனிமேல் அங்கேதான் வாழப்போகிறோம். இத்தனை வருடம் என் தம்பியை பிரிந்து  இருந்தது போதும். இனிமேல் அவனையும் என்னால் பிரிந்திருக்க முடியாது. நாங்க மூவரும் உங்க முன்னாடி ரொம்ப நல்லாவே இருப்போம்” என்று சொன்ன மகனை கொன்றுவிடும் கொலை வெறியுடன் நின்றிருந்தார்.

“அன்னைக்கு என்ன சொன்னீங்க மித்ரா உன்னைக் கல்யாணம் பண்ணிட்டு, எனக்கு விஷ்வாவும் வேணும். அவனை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாதுன்னு சொல்வா. இரண்டு ஆணுடன் வாழ்பவள் ஒழுக்கமான பொண்ணான்னு கேட்டீங்க இல்ல” என்றவன் வார்த்தையை  வெளியிட அதிர்ந்து போய் பாஸ்கரை பார்த்தான் வினோத்.

தன் மகன் உயிராக நேசிக்கும் ஒரு பெண்ணை எந்தவொரு தகப்பனும் இவ்வளவு இழிவாக பேச மாட்டேன் என்ற எண்ணம் வினோத் மனதில் ஓடி மறைந்தது.

“ஆமா அவளுக்கு நானும் முக்கியம். என் தம்பியும் முக்கியம். ஒரு தாய்க்கு தன் ஒரு பிள்ளையின் கண்ணில் வெண்ணையும், மற்றொரு பிள்ளையின் கண்ணில் சுண்ணாம்பை வைக்க தெரியாது. அந்த தாய் பாசத்தை எங்க இருவரின் மீதும் காட்டியவள். எனக்கு மனைவி என்றால் என் தம்பிக்கு அவள் அண்ணி ஸ்தானம். அண்ணி என்பவள் இன்னொரு தாய்க்கு சமம். என் மித்ராவிற்கு நட்பு, காதல் இரண்டு வார்த்தைக்கு அர்த்தம் நல்லாவே தெரியும். உங்களுக்கு தெரியலன்னா அவளிடம் விளக்கம் கேளுங்க நல்ல சொல்லிக் கொடுப்பா பாடம்” என்ற நண்பனை மனதிற்குள் மெச்சிக்கொண்டான் வினோத்.

“வா வினோத் போலாம்” என்று முன்னே நடந்தவனுக்கு சட்டென்று நினைவு வரவே, “இந்த விஷயம் அவளுக்கு தெரிய வரும்போது உங்களுக்கு தனி கச்சேரி இருக்கும். உங்களை எந்த இடத்தில் பார்த்தாலும் அவ கேள்வி கேட்பா. நீங்க சிதறவிட்ட வார்த்தைக்கு என்றாவது ஒருநாள் பதில் சொல்லியே ஆகணும். அதை  ஞாபகத்தில் வச்சுகோங்க” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்து வெளியே சென்றுவிட்டான்.

இருவரும் காரில் ஏறவே, “ஏய் அப்பா இப்படியா பேசினாரு” என்று நம்பாமல் கேட்டான் வினோத்.

இந்தர் ஒப்புதலாக தலையசைக்க, “நீ மித்ராவை லவ் பண்றது தெரிஞ்சும் இப்படி பேச அவருக்கு எப்படிடா மனசு வந்துச்சு” என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் காரை எடுத்தான்.

அடுத்து அவன் காரை நிறுத்திய இடம் மித்ராவின் வீடுதான். தன் மகளை ரயில் நிலையம் அனுப்பிவிட்டு வீடு வந்தவரிடம், “அங்கிள் நான் இந்தர்ஜித். மஸ்கெலியாவில் கஸ்தூரி பாட்டி வீட்டுக்கு எதிரே இருந்தோமே” என்றவன் தன்னை அறிமுகபடுத்தவே புருவம் சுருக்கி யோசித்தார்.

சட்டென்று முகம் ஞாபகம் வரவே, “பாஸ்கரின் மகன்தானே தம்பி நீங்க. வாங்க உள்ளே போய் பேசலாம்” என்று இருவரையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

“அப்பா – அம்மா இன்னும் அப்படியேதான் இருக்காங்களா? ஆமா இவர் உன் தம்பியா? என்ன விஷமாக பேச வந்திருக்கீங்க.. மித்ரா உங்க இருவரையும் பார்க்கத்தான் மஸ்கெலியா கிளம்பி போனாள். இப்போதுதான் அனுப்பிட்டு வந்தேன்” படபடவென்று பேசியவர் இருவரையும் சோபாவில் அமர சொன்னார்.

வினோத்தை தம்பி என்றதும், “ஐயோ ஸார் நான் இவனோட ஃப்ரெண்ட்” என்று பதறினான்.

“ஓ சாரிப்பா” என்றவர் இந்தர்ஜித் முகத்தில் இருந்த தீவிரத்தை கண்டு அமைதியானார்.

சிறிதுநேர சிந்தனைக்குப் பிறகு, “அங்கிள் நான் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். எனக்கு சங்கமித்ராவை கல்யாணம் பண்ணி தரீங்களா?” என்று நேரடியாக கேட்டான்.

அவர் அதிர்ச்சியுடன் அவனை பார்த்து, “அப்பா – அம்மா இருவரும் இல்லாமல் இப்படி வந்து பெண் கேட்கிற? என் மகளை ஒரு நல்லக் குடும்பத்தில் கல்யாணம் பண்ணி கொடுக்க நினைக்கிறேன்ப்பா. உங்க வீட்டில் அப்படியொரு சூழல் இல்லையே.. பெரியவங்களே சரியில்லாதப்போ அவங்க பெத்த பையன் நீ எப்படி இருப்பாய்?” என்று யோசிக்காமல் கேட்டுவிட்டார்.

அவரிடம் இந்த கேள்வியை எதிர்பார்த்தவன் போலவே, “நல்ல குடும்ப சூழல் இருந்தால் மட்டும் உங்க மகள் சந்தோசமாக இருப்பான்னு உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா அங்கிள். எங்க வீடு சரியில்லைதான். ஆனால் நான் தப்பானவன் இல்ல. இங்கே கொழும்புவில் எட்டு வருசமாக இருக்கேன். இது என் கம்பெனி அட்ரஸ் எல்லாப்பக்கமும் என்னைப் பற்றி விசாரிங்க. உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் பெண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி  கொடுங்க” என்று சொல்லிவிட்டு பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு கிளம்பிவிட்டான்.

“என்னடா இப்படி பேசிவிட்டு வந்துட்ட” என்று வினோத் கேட்க, “மித்ரா அப்பா கண்டிப்பா போன் பண்ணுவார். நீ வா போலாம்” என்றான் இந்தர்ஜித்

அவனின் பேச்சில்  இருந்த உறுதியைக் கண்ட ரகுவரன் இரண்டு நாட்கள் அங்கிருந்தவர்களிடம் சொல்லி  விசாரிக்க சொல்லவே அவனின் மீது எந்தவிதமான குற்றசாட்டும் வராததால் அவனுக்கு அழைத்து திருமண ஏற்பாட்டை கவனிக்க சொல்லிவிட்டார்.

தன்னருகே யாரோ அமரும் ஆரவாரம் கேட்டு சட்டென்று சிந்தனை கலைந்து நிமிர்ந்தான் இந்தர்ஜித்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!