images (74)-962c2ca2

அத்தியாயம் – 15

இந்தர்ஜித் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க அவனின் பக்கத்தில் விஷ்வாவும், எதிரே சங்கமித்ராவும் அமர்ந்திருந்தனர். வழக்கத்திற்கு மாறாக அவளின் முகத்தில் குறும்பு கூத்தாடியது. சின்ன வயதில் இருந்தே கவலைகளை அறியாதவளின் முகத்தில் சற்றுமுன் கண்ணீரிக் கண்டது அவனின் மனக்கண் முன்னே வந்து சென்றது.

“என்ன ஸார்! இங்கே உட்கார்ந்து மித்ராவை ரசித்து பார்த்துட்டு  இருந்தமாதிரி இருந்துச்சு” என்றான் விஷ்வா குறுஞ்சிரிப்புசிரிப்புடன்.

“பீம்பாய் நான் சொன்னேன் இல்ல நான் ஒரு பையனைக் காதலிக்கிறேன்னு அது இவன்தான். அவன் தலையில் இரண்டு போட்டு எனக்கு கட்டி வைடா” குழந்தை சாக்லேட்டிற்கு அடம்பிடிப்பதை போல அவள் சொல்லவே இந்தர்ஜித் பார்வை அவளின் மீது ரசனையோடு படிந்தது.

 “அவ்வளவுதானே ஸாருக்கு இரண்டு அடி பார்சல் பண்ணிவிடலாமா?” அவன் கேட்க அவளோ வேகமாக தலையாட்டினாள். தன் உள்ளங்கையை தேய்த்துக்கொண்டு இந்தர் எதிர்பார்க்காத நேரத்தில் பளார் என்று அடித்துவிட்டான் விஷ்வா.

இந்தர்ஜித் ஒரு நிமிடம் திகைக்க மித்ராவின் முகத்தை பார்க்க, “என்னை வேண்டான்னு சொன்ன இல்ல அதுக்குதான் இப்போ இவன் அடிச்சான்” அவள் குறும்புடன் கூறினாள்.

அவனின் முகம் சட்டென்று மாறிவிடவே, “அவ சொன்னா நீ என்னையே அடிப்பியா?” என்ற இந்தர்ஜித் அவனின் சட்டையை கொத்தாக பற்றியவன் விஷ்வாவின் கன்னத்தில் பளார் என்று அடித்துவிட்டான்.

இருவரின் செயலையும் கண்டு ஹோட்டலில் வந்த அனைவரும் அங்கே கூடிவிடவே மித்ராவோ கன்னத்தில் கைவைத்து அந்த கண்கொள்ள காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவர்களை தடுக்க வந்தவர்களிடம், “ஸ்டாப் என்ன பண்ண போறீங்க?” என்று கேட்க, “இவங்க இருவரும் அடிச்சிகிறாங்க. அதுதான் தடுக்க போறோம்” சீரியசான குரலில் சொன்னான்.

“அண்ணன், தம்பி சண்டையில் நீங்க தலையிடாதீங்க. அப்புறம் உங்க தலையும் சேர்ந்து உருளும்” இமைகொட்டு கதை சொன்னவளை பார்த்த மற்றவர்கள் பதில் பேசாமல் கலந்து சென்றனர்.

இந்தர்ஜித், விஷ்வா இருவரும் ஒரு நிமிடம் அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியுடன் அவளை இமைக்க மறந்து பார்த்தனர். இருவருக்கும் ஒருவரையொருவர் அடையாளமே தெரியவில்லை. சற்று கூர்ந்து கவனித்தபோது இருவரும் அடையாளம் கண்டுகொண்டனர்.

“விஷ்வா” என்று இந்தர் தன் தம்பியை கட்டியணைத்துக் கொள்ளவே, “அண்ணா” கண்கள் இரண்டும் சந்தோஷத்தில் கலங்கிட தமையனின் தோளில் சாய்ந்தான் சின்னவன்.

இருவரின் பாசப்பிணைப்பை மூன்றாம் மனுஷி போல பார்த்துக் கொண்டிருந்த மித்ராவின் முகம் மலர்ந்தது. தன்னை மையமாக வைத்துதான் அவர்களின் காலச்சக்கரம் சுழல்கிறது என்று புரிந்து கொண்டாள்.

இருவரும் தங்களை மறந்திருக்க, “அண்ணனும், தம்பியும் எட்டு வருஷம் என்னால் சந்திக்காமல் இருந்திருக்கீங்க இல்ல. அந்தளவுக்கு நான் உங்க இருவருக்கும் ரொம்ப முக்கியமானவாளா?” என்ற அவளின் கேள்வியில் சட்டென்று நிமிர்ந்து அவளைப் பார்த்தனர்.

“மித்ரா நான்..” என்று இந்தர் ஏதோ சொல்ல வரும் முன்னே, “நீ என்னை உயிராக நேசிக்கிற. நான் இல்லாமல் உன்னால் வாழ்வே முடியாது. அதெல்லாம் தெரிஞ்சபிறகும் இத்தனை வருஷம் மனசுக்குள் வைத்து மறுக்கும் அளவுக்கு உனக்கு அப்படி என்ன பிரச்சனை இந்தர்?” கவனமாக ஜித்து என்ற வார்த்தையைத் தவிர்த்தாள்.

அவனும் அதை புரிந்துகொண்ட மெளனமாக இருக்க விஷ்வாவின் பக்கம்  திரும்பி, “அவன் வரலன்னா உன்னால் போய் பார்க்க முடியாதா விஷ்வா. நான் கடைசிவரை வராமல் போயிருந்தால் இப்படித்தான் இருவரும் இரண்டு ஊரில் யாருமில்லாத அனாதைகள் போல வாழ்ந்துட்டு இருந்திருப்பீங்களா?” அவளின் கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை.

“அண்ணனையும், தம்பியையும் இணைக்க இந்த மித்ரா இந்தியாவில் இருந்து திரும்ப வரணும்னு தலையில் எழுதியிருக்கு. இனிமேல் இப்படியொரு தவறை நீங்க பண்ணாமல் இருக்கணும்..” என்றவள் இருவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் கோபத்தை காட்டினாள்.

மூவரின் இடையே அமைதி குடிகொள்ளவே, “அப்போ நீ என் அண்ணனைத் தான் லவ் பண்ணிருக்கிற இல்ல” இடது புருவம் உயர்த்தி அவளை இமைக்காமல் பார்த்தான்.

“உன்னிடம் உண்மையைச் சொல்ல எனக்கு இரண்டு செகேன்ட் போதும். ஆனால் அப்போவே நீ இந்தரை பார்க்கணும்னு நினைப்ப இல்ல அதுதான் உன்னிடம் உண்மையைச் சொல்லாமல் மறைத்தேன்” விஷ்வாவிடம் கூறியவள் இந்தரின் மீது பார்வையைத் திருப்பினாள்.

“உங்களால் என்னைவிட்டு இருக்க முடியாது, எப்படி இருந்தாலும் ஒரு வாரத்திற்குள் மனசு மாறி என்னைத் தேடி வருவீங்க என்றுதான் பிளான் பண்ணி இங்கே கிளம்பி வந்தேன். அப்போ நீயும் விஷ்வாவும் நேராக சந்திக்க வாய்ப்பு அமையும் இல்ல.. இதோ இப்போ அமைந்த மாதிரி..” என்றவள் பேச்சு முடிந்தது என்று எழுந்து செல்ல நினைத்தாள்.

சட்டென்று அவளின் கையை எட்டிப் பிடித்த இருவரும், “எங்கே போற மித்து” என்று கேட்டனர்.

அவள் மெளனமாக இருவரையும் பார்த்துவிட்டு, “நான் திரும்ப இந்தியா போகிறேன். எனக்கு சென்னையில் வேலை கிடைச்சிருக்கு. அங்கே சம்யுக்தாவோடு தங்கி வேலையைப் பார்க்க போறேன். லீவ் கிடைச்சா கண்டிப்பா இலங்கை வருவேன். அப்பா இங்கேயேதான்  இருப்பாரு. நீங்க இருவரும் டைம் கிடைக்கும்போது அவரைப் போய் பார்த்துகோங்க” கட்டாயப்படுத்தி வரவழைக்க சாதாரண குரலில் பேசியவள் இருவரின் கைகளையும் விளக்கிவிட்டு வேகமாக திரும்பி நடந்தாள்.

ஏற்கனவே இந்தர் தன் காதலை மறுத்ததும், தன் நண்பன் வாழ்ந்து பார்க்காத வாழ்க்கை தனக்கும் வேண்டாமென்று யோசித்து வேகமாக முடிவெடுத்து சென்னையில் இருக்கும் ப்ரெண்ட்ஸிடம் சொல்லி இரண்டே நாளில் தனக்கொரு வேலையைத் தேடிக் கொண்டாள்.

அதே நேரத்தில் இலங்கையில் அவள் செய்து கொண்டிருந்த வேலையையும் ரிசைன் பண்ணிவிட்டு கிளம்புவதற்கான  அனைத்து ஏற்பாடுகளையும் திட்டமிட்டு செய்து முடித்திருந்தாள் மித்ரா.

அவள் இப்படியொரு முடிவெடுத்தது இரண்டு ஆண்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அவளுக்காக ரகுவரனிடம் பேசி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தது நினைத்தபடி இந்தர் அமர்ந்திருந்தான்.

மற்றொரு பக்கம், ‘என் அண்ணனை எனக்காக தூக்கிப்போட்டு போகிறாளே.. இவளை என்னதான் செய்யறது?’ என்ற சிந்தனையோடு சட்டென்று நிமிர்ந்து வாசலைப் பார்த்தான்.

அவள் வாசலைக் கடந்து வெளியே செல்ல, ‘இதற்குமேல் தாமதிக்க முடியாது’ என்ற எண்ணத்துடன் எழுந்த இருவரும் வேகமாக வாசலை நோக்கி சென்றனர்.

மித்ரா கால் டாக்ஸியில் ஏறும் முன்னே, “ஒரு நிமிஷம் மித்ரா” என்று அவளை தடுப்பது போல ஒலித்தது இந்தரின் குரல்.

சட்டென்று அவள் திரும்பிப் பார்க்க, “என் கல்யாணத்தை முடிச்சு வைத்துவிட்டு போய்விடு” என்று அசராமல் ஒரு குண்டைத் தூக்கி போடவே, விஷ்வா அதிர்ச்சியுடன் தமையனை நோக்கினான்.

இலங்கையை விட்டு செல்லும் முடிவில் உறுதியாக இருந்த மித்ரா, “நீ யாரையோ கல்யாணம் பண்ணிக்கோ. எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்ல. அதுதான் ஒரே வாரத்தில் அனைத்து ஏற்பாடும் முடிச்சிட்டு வந்து நிற்கிற” என்று சொல்லும்போது அவளின் கண்களில் வலி அப்பட்டமாக  தெரிந்தது.

அவளின் மனவலியைப் புரிந்துகொண்டு, “நான் என்ன ஏற்பாடு செய்து என்ன பண்றது. கல்யாணப் பொண்ணுதான் இலங்கையே வேண்டாம். இந்தியாவிற்கே போறேன்னு ஒத்தை காலில் நிற்கிறாளே..” என்றவன் விஷ்வாவின் பக்கம் திரும்பி,

“டேய் தம்பி பக்கத்தில் நகைக்கடை இருந்தால் உடனே தாலி வாங்கிட்டு வா. இங்கிருந்து ரம்போடா ஆஞ்சிநேயர் கோவில் பக்கத்தில் தான் இருக்கு. மேடமை மிஸ் சங்கமித்ராவாக இந்தியா அனுப்புவதைவிட, மிசஸ். சங்கமித்ரா இந்தர்ஜித்தாக அனுப்பி வைக்கலாம்” என்று குறும்புடன் கண்சிமிட்டினான்.

முதலில் புரியாமல் குழம்பிய விஷ்வா, “அண்ணா” என்றான் ஆனந்தத்துடன்.

மித்ரா அப்போதும் அசையாமல் நின்றிருக்கவே, “ஏன் மானு இப்படி அடம்பிடிக்கிற. அண்ணன் உங்க கல்யாணத்திற்கு தான் ஏற்பாடு செய்திருக்கிறான். அதை ஏன் நீ புரிஞ்சிக்க மாட்டேன்ற” என்று விஷ்வா அவளை பார்த்தான்.

அவள் தீர்க்கமாக பார்க்கவே, “எனக்கு நம்பிக்கை வர என்னவோ செய்வேன்னு சொன்னியே.. அதெல்லாம் மறந்துவிட்டதா மித்ரா?” என்று முடிவாகக் கேட்டான்.

இருவரும் எதைப்பற்றி பேசுகிறார்கள் என்று புரியாமல் இந்தர்ஜித் குழப்பத்துடன் நின்றிருக்க, “உனக்கு விஷயம் புரிஞ்சா கண்டிப்பா கல்யாணம் செய்து கொள்வாயா?” என்றாள்.

அவன் ஒப்புதலாக தலையசைக்கவே, “அப்போ சரி நானும் கல்யாணத்திற்கு சம்மதம்” என்ற மித்ரா இறுகிய முகத்துடன் இந்தரை நிமிர்ந்து பார்க்காமல் சென்றாள்.

இந்தர் மீண்டும் அவளின் கரங்களைப் பிடிக்க, “இந்தர் கையை விடு. எனக்கு வருகின்ற கோபத்திற்கு ரோடு என்றுகூட பார்க்க மாட்டேன்” என்று எச்சரித்தவளின் குரலில் கோபம் வெளிப்படவே சட்டென்று அவளின் கரத்தை விட்டான்.

“விஷ்வா நான் வீட்டிற்குப் போறேன்” என்று சொல்லிவிட்டு கால் டாக்ஸியில் ஏறிச் செல்லவே, அவள் சென்றபிறகு விஷ்வா தமையனை கேள்வியாக நோக்கினான்.

இந்தார்ஜித் நடந்த விஷயத்தை தம்பியிடம் பகிர, “உங்க இருவருக்குள்ளும் இப்படியொரு பிரச்சனை இருக்குன்னு தெரியாமல் அவளை கோபபடுத்திட்டேன். அண்ணா நீங்க செய்ததும் தவறுதான். அவ எப்போதும் நம்ம நல்லதை மட்டுமே யோசிக்கிறா. அவளைக் காயப்படுத்தி பார்க்க நமக்கு என்ன உரிமை இருக்கு சொல்லுங்க” என்றான்.

அதன்பிறகு விஷ்வா வேலை விசயமாக ஆபீஸில் இறங்கிக் கொள்ளவே, “அவ பாட்டி வீட்டில்தான் தங்கி இருக்கிறா. நீ போய் அவளை சமாதானம் பண்ணு அண்ணா. நான் மதியம் சாப்பிட வீட்டிற்கு வரேன்” என்று சொல்லி இந்தரை அனுப்பிவிட்டு ஆபீஸிற்குள் சென்று மறைந்தான்.

அவனை இறக்கி விட்டுவிட்டு வீட்டிற்கு வந்த இந்தர்ஜித், “மித்ரா” என்ற அழைப்புடன் வீட்டிற்குள் நுழைந்தான்.

அவளோ ஜன்னலின் கம்பிகளைப் பற்றியபடி அசைவில்லாமல் நின்றிருப்பதை கண்டு, “என்மேல் கோபம் வந்தால் இரண்டு அடிகூட அடிச்சுக்கோ மித்து. முகத்தை இப்படி வைத்துக்கொண்டு மெளனமாக இருக்காதே. அதைப் பார்க்கும்போது எல்லாம்  மனசு வலிக்குது” என்று பேசியபடி அவளை நெருங்கினான்.

அவள் அப்போதும் திரும்பாமல் இருக்க, “மித்து” என்று அவளை வலுக்கட்டாயமாக தன் பக்கம் திருப்பி அவளின் தாடையை ஒரு விரல்கொண்டு நிமிர்த்தி அவளின் முகம் பார்த்தான்.

அவளின் கண்களில் வழக்கத்திற்கு மாறாக இருந்த வலி அவனின் மனத்தைக் கசக்கி பிழியவே குனிந்து அவளின் இரண்டு கண்களும் இதழ் ஒற்றி எடுத்தான். அடுத்து அவளின் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டான்.

கடைசியாக இதழை நெருங்கிய இந்தரின் பார்வை அவளின் பார்வையோடு கலக்கவே, “ஸாரிடி” என்றான் குரலில் கொஞ்சலோடு.

அவள் மெல்ல விழி உயர்த்தி அவனை பார்க்கவே, “உன் கோபம் நியாயம் தான். உன் அளவிற்கு நான் உன்னைக்  காதலிக்கல. அதுனால தான் என்னையும் அறியாமல் உன்னை காயப்படுத்துறேன் போல. ஐ லவ் யூ மித்ரா. பிளீஸ் என்னைவிட்டு விலகி போகின்ற முடிவை மட்டும் மறந்துவிடுடி. இதற்குமேல் உன்னைவிட்டு விலகி என்னால் இருக்க முடியாது” என்று கெஞ்சினான்.

“என்னை வேற கல்யாணம் பண்ணிக்க சொன்னவன்தானே நீ” என்று அவனைப் பிடித்து தள்ளிவிடவே தடுமாறி சமாளித்து நின்றவன், “இல்லையே உன் இஷ்டம் என்றுதானே சொன்னேன்” என்றவனின் கரங்கள் அவளின் இடையோடு கோர்த்து வளைத்துக் கொண்டது.

“நீ வேண்டும் என்றவுடன் நெருங்கி வரணும். வேண்டான்னு சொன்னால் விலகி போய்விடணுமா? அது என்னால் முடியாது” என்றவள் கோபத்துடன் அவனின் நெஞ்சில் குத்தினாள்.

அவளின் அடிகளை தாங்கிக்கொண்டு சிரித்தவன், “வேண்டும் என்றாலும் நெருங்கி வா. வேண்டாம் என்றாலும் நெருங்கி வா.. இனிமேல் விலகி போகணும் என்ற எண்ணம் வரலாம் நான் பார்த்துக்கறேன்” என்று அவளின் மூக்கைப் பிடித்து ஆட்டியவனின் குரலில் விஷமம் வழிந்தோடியது.

அதில் அவள் கோபம் குறைந்துவிட அவனின் நெஞ்சில் உரிமையோடு முகம் புதைத்தவளை இறுக்கியணைத்து கொண்டான். அவள் கைக்குள் இருக்கும் வேலையில் உலகத்தையே வென்றுவிட்ட உணர்வு அவனின் நெஞ்சில் எழுந்தது.

மதியம் விஷ்வா வீட்டிற்கு வரும்போது இருவரும் பேசி சிரித்தபடி இருப்பதைக் கண்டு அவனின் அகமும், முகமும் ஒருங்கே மலர்ந்தது. ரகுவரன் அழைத்து மகளுக்கு திருமண விஷயத்தை சொல்லி ஏற்பாடுகளை கவனித்தனர்.

இந்தரின் கல்யாண பொறுப்பை விஷ்வா ஏற்றுகொண்டான். திருமணம் சீதை எலியா கோவிலில் என்று முடிவேடுக்கபடவே நாட்கள் ரெக்கைகட்டிகொண்டு பறந்தது.

மித்ரா தன் பங்கிற்கு இந்தியாவில் இருக்கும் நண்பர்களுக்கு தகவல் சொல்லவே, “போன வாரம் வேலை வேணும்னு சொன்னவள் இந்த வாரம் கல்யாணத்திற்கு வர சொல்லி போன் பண்ற.. இரு மகளே அங்கே வந்து உன்னை கவனிச்சுக்கிறேன்” என்று செல்லமாக மிரட்டினான் சுரேஷ்.

மற்றொரு புறம் சம்யுக்தா, “என்னிடம் சொல்லாமல் திருமண ஏற்பாடு செய்கிறாயா? உன்னை போனில் திட்டினால் நீ காதில் வாங்காமல் உட்கார்ந்து இருப்ப. நேரில் வந்து மொத்தினால் தான் என் மனசு ஆறும்” என்றவள் திருமணத்திற்கு இலங்கை வருவதற்கு டிக்கெட் போட்டாள்.

மித்ராவின் தலைமையில் பெரிய நண்பர்கள் பட்டாளம் இந்தியாவில் இருந்து கிளம்பி வருவதாக தகவல் வரவே, “அவங்களை எல்லாம் நான் பார்த்துக்கறேன். நீங்க இருவரும் சந்தோசமாக இருங்க”என்று வினோத் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே மித்ராவின் நண்பர்கள் அனைவரும் இலங்கை வந்து சேர்ந்தனர். அவர்களை பார்த்தும் புதுப்பெண் என்பதை மறந்து, “சம்மு” என்று அழைப்புடன் தோழியை ஓடிச்சென்று தாவியணைத்து கொண்டாள்.

“உங்களை எல்லாம் ரொம்பவே மிஸ் பண்ணேன். இவ்வளவு பேரும் என் கல்யாணத்திற்கு வந்தது அவ்வளவு சந்தோசமாக இருக்கு” என்றாள்.

அவளின் மலர்ந்த முகம் கண்டு, “எங்கே உன் உட்பி. சீக்கிரம் கூப்பிடு நாங்க பார்க்கணும்” என்று கூச்சல் போட்டான் சுரேஷ்.

ரகுவரனை கண்டவுடன் அவர்கள் எல்லோரும் அன்புடன் விசாரிக்க, “நான் நல்ல இருக்கேன்ப்பா. உங்களுக்கு பயணம் எல்லாம் எப்படி இருந்துச்சு” என்று பாசத்துடன் விசாரித்தார்.

அதற்குள் இந்தர்ஜித், விஷ்வா, வினோத் மூவரும் அங்கே வரவே மித்ரா அவர்களை தன் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

“இதில் யாரு உன் கல்லடிக்கு பலியான அந்த பாவமான ஜீவன்” என்று சுரேஷ் ஆர்வமாக கேட்க, “இதோ வினோத் அண்ணா தான்” என்றாள் மித்ரா சிரிப்புடன்.

“என் மானத்தை இந்தியாவிற்கு கப்பல் ஏற்றி அனுப்பிட்டாடா உன் காதலி” என்று வருத்தபட்ட வினோத்தை கண்டு அனைவரும் சிரித்தனர்.

சம்யுக்தாவிற்கு விஷ்வாவைப் பார்த்தும் பிடித்துப் போகவே “உங்க இவரைப்பற்றியும் கிளாசில் நிறைய பேசுவா மித்ரா. அவ வாயத் திறந்தால் ஜித்து, விஷ்வா என்ற வார்த்தைகள் தான் அதிகம் வரும்” என்றவளை சிந்தனையோடு ஏறிட்டான் விஷ்வா.

“மித்ரா உங்க புகழ் பாடியே எங்களை உங்க இருவருக்கும் தீவிர விசிறியாக மாற்றிட்டா ஸார். ஆனால் ஒரு விஷயத்தில் அவ எப்போதும் தெளிவாக இருந்தாள்” என்ற சுரேசை மற்றவர்கள் கேள்வியாக நோக்கினர்.

“எவ்வளவு பெரிய எதிர்ப்பு வந்தாலும் நான் இந்தரை மட்டும் தான் கல்யாணம் பண்ணுவேன். அதே நேரத்தில் விஷ்வாவின் நட்பு கரங்களை என்றென்றைக்கும் விடமாட்டேன்னு சொன்னாள். அவ சொன்னதை இன்னைக்கு செய்துவிட்டாள். அன்னப்பறவை போல பாலும், தண்ணீரும் பிரித்து அறியும் குணத்தை அவளிடமிருந்து நாங்க எல்லோரும் கத்துகிட்டோம்” என்று சொல்லும்போது அனைவருக்கும் பெருமையாக இருந்தது.

மித்ரா அவர்களை அழைத்துக்கொண்டு அறைக்கு செல்ல வினோத் கம்பெனியைப் பற்றி இந்தரிடம் ஏதோ சொல்வதை கவனித்த சுரேஷ் புருவம் சுருக்கி யோசித்தான்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!