Maane – 16

download (30)-a9a6727d

அத்தியாயம் – 16

அவர்கள் அனைவருக்கும் தங்குவதற்கான அறையைக் காட்டியவளிடம், “மித்ரா இவரை நான் எங்கயோ பார்த்து இருக்கேன்” என்றான்.

அவள் புருவம் சுருக்கி அவனை கேள்வியாக நோக்கிட, “நிஜம்தான் மித்ரா. இவங்க இருவரையும் நாங்க சென்னையில் பார்த்து இருக்கோம்” என்ற சம்யுக்தாவும் தன் பங்கிற்கு கூறினாள்.

“ஜித்துவும், விஷ்வாவும் சென்னை வந்ததே இல்ல. அப்புறம் எப்படி நீங்க இருவரும் அவங்களைப் பார்க்க முடியும்” என்று எதிர்கேள்வி கேட்டாள்.

அவளிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது என்ற யோசனையில், “ஐயோ மித்ரா நாங்க சொன்னதும் ஜித்துவையும், உன் வினோத் அண்ணாவையும்” என்றனர் சுரேஷ் மற்றும் சம்யுக்தா இருவரும்.

மற்றவர்கள் வேறு விஷயம் பேசியபடி அறைக்குள் சென்று மறைய, “நீங்க என்ன சொல்றீங்கன்னு சத்தியமா எனக்கு புரியல” என்றாள் மித்ரா.

அவர்கள் மாடியிலிருந்து கீழே பார்க்க அங்கே இந்தர்ஜித் மற்றும் வினோத் இருவரும் பிஸ்னஸ் விஷயமாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தான் அவர்களின் முகத்தை கூர்ந்து கவனித்தவன், “நீ சென்னையிலிருந்து இலங்கை வருவதற்கு முதல்நாள் ஒருத்தருக்கு விபத்து என்று நான்தான் இந்தரை ஹாஸ்பிட்டலில் சேர்த்தினேன்” என்றவன் சட்டென்று சம்யுக்தாவின் பக்கம் திரும்பினான்.

“அன்னைக்கு நம்ம இருவரும் ஷாப்பிங் போயிருந்தோம் இல்ல சம்மு. நீ கூட இவளுக்கு போன் செய்து பிளட் கொடுக்க சொல்லி சொன்னியே..” என்று தோழிக்கு ஞாபகப்படுத்தினான்.

அவளும் ஒப்புதலாக தலையசைக்க, “கடைசியாக நீ சென்னையில் இருந்து கிளம்பி வரும்போது பிளட் கொடுத்துட்டு வந்தது இவருக்குதான். நீ கூட அவர் தற்கொலைக்கு முயற்சி செய்தற்காக அவரின் நண்பரை திட்டியதாக சொன்னியே அது உன் வினோத் அண்ணாதான். எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு” என்றான் சுரேஷ் உறுதியாக.

தன் நண்பன் சொன்னது சட்டென்று நினைவு வரவே, ‘ஆமா அன்னைக்கு நான் வினோத் அண்ணாவைத் தான்  திட்டிட்டு வந்தேன். தற்கொலைக்கு முயற்சி செய்யும் அளவுக்கு ஜித்துவிற்கு என்ன பிரச்சனை?’ மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் படையெடுத்து நின்றது.

அதற்குள் மற்றவர்கள் சுரேஷ், சம்யுக்தாவை தேடிடவே இருவரும் அவரவர் அறைகளுக்கு சென்று மறைந்தனர். அவள் சிந்தனையோடு நின்றிருக்க வினோத் மேலே வருவதைக் கவனித்து, “அண்ணா” என்றாள் பாசத்துடன்.

“என்ன மித்து ஃப்ரெண்ட்ஸ் கூட பேசாமல் இங்கே ஏன் தனியாக நின்னுட்டு இருக்கிற? நீ போய் அவங்ககிட்ட பேசிட்டே மருதாணி வைச்சுக்கோ. நாளைக்கு காலையில் சீக்கிரம் எழுந்திரிக்கணும் அதனால் ரொம்ப நேரம் பேசிட்டு இருக்கக் கூடாது” கண்டிப்புடன் கூறியவனை முறைத்தாள் மித்ரா.

அதுவரை அவளின் பார்வையை சரிவர கவனிக்காதவன், “என்னடா” என்றதும், “சென்னையில் ஜித்துவிற்கு ஆக்சிடெண்ட் ஆனது உண்மையா?” வரவழைக்கப்பட்ட சாதாரணக் குரலில் அவள் கேட்க அவன் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான்.

“அண்ணா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க” பொறுமை இழந்தவளாக அவள் கேட்கவே, “ஆமா மித்ரா. ஒரு வருஷத்திற்கு முன்னாடி கம்பெனி கிளை தொடங்க சென்ற இடத்தில்  இந்தர் அப்பா போன் பண்ணி பேசி அவன் சாகிறேன்னு சொல்லி கிளம்பிப்போய் என்னன்னவோ ஆகிடுச்சு” என்று வேறு திசையைப்  பார்த்தபடி சொன்னான்.

“அந்தளவுக்கு அவருக்கு என்ன பிரச்சனை?” என்று அவள் கோபத்துடன் கேட்க, “நீயும் என்ன அந்த பொண்ணு மாதிரியே கேட்கிற” எரிந்து விழுந்தான் வினோத்.

“அதே பொண்ணுதான் கேட்கிறேன். இப்போ நீங்க சொல்றீங்களா இல்ல நான் ஜித்துவிடம் கேட்கவா?” என்று அவள் கேட்கும்போது விஷ்வா கோபத்துடன் மண்டபத்திற்குள் நுழைவதைக் கண்டாள்.அவள் சொன்னதை அவன் புரிந்துகொள்ள சில நொடிகள் தேவைப்பட்டது.

‘அப்போ அன்னைக்கு ஹாஸ்பிட்டல் வந்தது மித்ராவா’ என்று அவன் வேகமாக சிந்தித்து பதில் சொல்லும் முன்னரே, ‘இவ்வளவு கோபமாக வந்திருக்கிறான் என்ன பிரச்சனை?’ என்ற எண்ணத்துடன் வேகமாகக் கீழிறங்கி சென்றுவிட்டாள்.

அவளைத் தொடர்ந்து வினோத் வேகமாக கீழே இறங்கிவரவே மணமகன் அறைக்குள் கோபத்துடன் நுழைந்த தம்பியிடம், “என்னாச்சுடா. ஏன் இவ்வளவு கோபமாக வந்திருக்கிற?” என்றபோது அந்த அறையின் வாசலை நெருங்கிவிட்டாள் சங்கமித்ரா.

அவள் வந்ததை அறியாத விஷ்வா, “அம்மா இன்னைக்குதான் ஊரிலிருந்து வந்தாங்க. மித்ரா ஊருக்கு வந்ததில் ஆரம்பிச்சு உன் திருமணம் வரைக்கும் பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் சொல்லி இருப்பாங்க போல அண்ணா.நான் அம்மாவிடம் சொல்லி கல்யாணத்திற்கு கூட்டிட்டு வரலாம்னு போனேன்” என்றவனின் நினைவுகள் பின்னோக்கி சென்றது.

விஷ்வா சந்தோசமாக தன் தமையனின் திருமணத்தைப் பற்றி தாயிடம் சொல்ல சென்றபோது, “என்னடா உன் அண்ணனுக்கு திருமணம்னு ஊருக்குள் பேசிக்கிறாங்க. ஆமா பொண்ணு யாரு” என்று ஏளனத்துடன் கேட்டார்.

“ஹப்பா உங்களுக்கு விஷயம் தெரிந்துவிட்டதா?” பெருமூச்சு ஒன்றை விட்டவன், “நம்ம கஸ்தூரி பாட்டியின் பேத்திதான் அம்மா” முகம் மலர கூறிய மகனை ஏறிட்ட மரகதத்தின் பார்வையில் வித்தியாசத்தை உணர்ந்தான் மைந்தன்.

அவன் என்னவென்று கேட்கும் முன்னரே, “ஒரு வாரம் உன்னோடு ஊரே பார்க்கும் அளவிற்கு சுற்றியவள், நாளைக்கு உங்க அண்ணனைக் கல்யாணம் பண்ணிக்க போகிறாளா? அவ எப்படி கடைசிவரை உங்க அண்ணனோடு வாழ்வாளா? இல்ல பிரச்சனை என்றவுடன் உன்னோடு வந்துவிடுவாளா?” நிறுத்தி நிதானமாக கேட்டார்.

அந்த வார்த்தைகளில் பொதிந்திருந்த அர்த்தத்தை உணர்ந்தவன், “அம்மா” என்று கத்தினான்.

அவர் அசையாமல் நின்று மகனைப் பார்க்கவே, “நீங்களும் ஒரு பொண்ணுதானே? அவளைத் தவறாகப் பேச உங்களால் எப்படி முடியுது. அவளைப்பற்றி இப்படி கேவலமாகப் பேசும் உங்களை அப்படியே கொன்று புதைக்கலாம்னு தோணுது” என்று வெறியுடன் கூறிய மகனை கண்டு பயப்படாமல் நின்றிருந்தார்.

“நான் என்னப்பா ஊர் உலகத்தில் நடக்காத விஷயத்தையா சொல்லிட்டேன். அண்ணனோடு வாழ்ந்துவிட்டு விவாகரத்து வாங்கிட்டு தம்பியைக் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. சில நேரத்தில் இரட்டைவேடம் போட்டு நடித்து ஊரையே ஏமாத்துறாங்க. நண்பன் என்று சொல்றவனின் வாழ்க்கையை கேட்க ஆயிரம் சூழ்ச்சி செய்யறாங்க. இதெல்லாம் டி.வியில் பார்க்காமல் தான்  இருக்கோமா?” என்று தாடையை தோளில் இடித்துக்கொண்டு சாதாரணமாக கூறினார்.

“அப்போ அதெல்லாம் பார்த்துட்டுதான் மித்ராவை அப்படி பேசறீங்க இல்ல. அவளை தவறாக நினைக்கிற உங்களோட ஆசீர்வாதம் அவளுக்கு எப்போதுமே வேண்டாம். அப்போதான் அவ நல்லா இருப்பா. அதே நேரத்தில் இந்த டிவியைப் பார்த்துட்டுதானே மனசில் தவறான கற்பனை வளர்த்திட்டு எல்லோரையும் தவறாக நினைக்கிறீங்க. அப்படியொரு டிவியும் வேண்டாம்” என்றவன் கண்ணிமைக்கும் நொடியில் டிவியைத் தூக்கி கீழே போட்டு உடைத்தான்.

அவனின் கோபத்தை கண்டு வெடவெடத்துப் போன மரகதம், “அதை ஏன் உடச்ச? ஐயோ இனிமேல் நான் நாட்டு நடப்பை எல்லாம் எப்படி தெரிஞ்சிப்பேன்” என்று புலம்ப தொடங்கிவிட்டார்.

“இப்படி தவறே செய்யாத பெண்ணை வக்கிரமாக பேசிறீங்க இல்ல. இப்படியே உட்கார்ந்து நல்லா புலம்புங்க. நீங்க நாட்டு நடப்பை தெரிஞ்சிகிட்டு இல்லாத கற்பனையை வளர்த்துகிட்டு பேசுவதற்கு இது எவ்வளவோ பரவல்ல. ஆனால் இதுதான் கடைசி முறை. இன்னொரு தடவை நீங்க அவளைத் தவறாக பேசுவது காதில் விழுந்துச்சு கொலை பண்ணிடுவேன் ஜாக்கிரதை” என்று எரிந்து விழுந்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினான்.

அவன் நடந்ததை சொல்லி முடிக்க, “ச்சே இவங்களுக்கு எல்லாம் மனுஷ ஜென்மமே இல்ல” என்று கூறிய தமையனின் வார்த்தைகளை கூர்ந்து கவனித்த விஷ்வா, “இவங்களுக்கு என்றால் வேற யாரு அண்ணா அவளைத் தரைக்குறைவாக பேசியது” என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.

சிறிதுநேரம் அங்கே அமைதி நிலவியது.

“வேற யாரு பேசுவாங்கன்னு நினைக்கிற.. எல்லாம் அந்த ஆளுதான்” என்று ஏகத்திற்கும் வார்த்தைகள் தடிக்க கோபத்துடன் கூறினான் இந்தர்ஜித்.

விஷ்வா புரியாமல் பார்க்கவே, “நம்ம அப்பாதான் அன்னைக்கு பேசினாங்க. அவளைக் காதலிக்கிறேன்னு சொன்னதும் உன்னைக் கல்யாணம் பண்ணியது பத்தாதுன்னு விஷ்வாவும் வேணும்னு பிடிவாதம் பிடிப்பாள். இப்படி இருக்கின்ற பொண்ணு எப்படி ஒழுக்கமான பெண்ணாக இருப்பாள்னு” என்று அவன் முடிக்கும்போது விஷ்வாவின் கோபம் தலைக்கு ஏறியது.

அவன் கை முஷ்டிகள் இறுகிட, “இத்தனை நாளாக நம்மளத்தான் பிரிச்சு வெச்சு வேடிக்கைப் பார்த்தாங்க. இப்போ காரணமே இல்லாமல் அவளையும்.. நீ இரு அண்ணா அந்த ஆளை போய் நாக்கைப் பிடுங்கிற மாதிரி நாலு வார்த்தைக் கேட்டுட்டு வரேன்” என்ற தம்பியின் கரம்பிடித்து தடுத்தான்.

அவன் கேள்வியாக நோக்கிட, “அந்த ஆளை நான் கல்யாணத்திற்கு கூப்பிடவில்லை. அவன் வந்து ஆசிர்வாதம் செய்ய வேண்டிய அவசியமும் இல்ல. அதுமட்டும் இல்லாமல் சங்கமித்ராவின் நடத்தையைத் தவறாக பேசிய அவங்களுக்கு சரியான பதிலடியை அவளே ஒருநாளைக்கு தருவாள். அதுதான் சரியும் கூட!” என்றபோது விஷ்வா அமைதியாக நின்றான்.

தம்பியின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தவன், “அவங்க பேசிய வார்த்தையை தவறென்று புரிய வைக்கணும் விஷ்வா. ஒரு பெண் ஆணோட பழகினால் அவளை தவறாகவே பார்க்கிறாங்க. நட்பும், காதலும் வேறு வேறு என்று அவங்களுக்கு நம்மதான் தெளிவாக புரிந்தால் தான் அவங்க தவறை உணர்வாங்க. அதனால் தான் என் காதல் எனக்கு வேண்டும் என்ற முடிவெடுத்து இப்போ இங்கே வந்து நிற்கிறேன்” என்று தன் நிலையைத் தெளிவாக புரிய வைத்தான்.

இவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டு அதிர்ச்சியில் சிலையாக உறைந்து நின்ற மகளைக்கண்டு ரகுவரன் வேகமாக அங்கே வரவே, “மித்து” என்று அதட்டி அவளை இயல்பிற்கு அழைத்து வந்தான் வினோத்.

அவனின் அதட்டல் குரல்கேட்டு அண்ணனும், தம்பியும் திரும்பி வாசலைப் பார்த்தனர். அங்கே நின்றிருந்த சங்கமித்ராவைக் கண்டவுடன் இருவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துகொண்டு வாசலுக்கு விரையவே, “என்னம்மா கல்யாணப்பொண்ணு இப்படித்தான் மணமகன் அறைக்கு வருவதா? நமக்கு தெரிஞ்சவங்க யாராவது பார்த்தால் உன்னை தரைக்குறைவாக பேசுவாங்க. நீ முதலில் உன் அறைக்குப் போ” என்று கோபத்துடன் பேசிய தந்தையைப் பார்த்து, ‘அது எல்லாம் பேசிட்டாங்க அப்பா. இனி பேச என்ன இருக்கு’ என்று விரக்தியுடன் எண்ணியவளின் உதட்டில் புன்னகை அரும்பியது.

அவள் விஷ்வா, இந்தர் இருவருக்கும் முகம் காட்டி நின்றிருந்தால் அவளின் எண்ணவோட்டத்தை கணிக்க முடியாமல் இருவருமே தடுமாறினார். தன் மகளின் முகம் களையிழந்து இருப்பதை கண்டு, “நீ வா போலாம்” என்றழைத்து சென்றார்.

அவர் அங்கிருந்து நகர்ந்ததும் வாசலிற்கு வந்த இருவரும், “வினோத் நீங்க இருவரும் எப்போது இங்கே வந்தீங்க. ஆமா மித்ரா நான் பேசியதைக் கேட்டுவிட்டாளா?” என்று வேகமாகக் கேட்டான் இந்தர்ஜித்.

அவள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கேட்டுவிட்டதை எப்படி சொல்வதென்று அவன் யோசிக்கும்போது, “வினோத் அண்ணா உங்களை சுரேஷ் மேலே கூப்பிட்டான். அவனுக்கு கிப்ட் ஷாப் வரைப் போகணும்னு சொன்னாரு. கொஞ்சம் சீக்கிரம் வரீங்களா?” என்றாள் சம்யுக்தா.

சட்டென்று சொல்ல வந்ததை மறந்துவிட்டு, “ம்ம் வாம்மா போயிட்டு வரலாம்” என்று முன்னே நடந்தான் வினோத்.

சட்டென்று மேலே நிமிர்ந்து பார்த்த சம்யுக்தா அங்கே நின்றிருந்த தோழியைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டிட, “தேங்க்ஸ் சம்மு” என்று புன்னகைத்தாள் மித்ரா.

சம்யுக்தாவின் செயலைக் கண்டுகொண்ட விஷ்வா, ‘வினோத்தை கூப்பிட இவ எப்படி இவ்வளவு சரியான நேரத்திற்கு வந்தாள்?’ என்ற கேள்வியுடன் தோழியை நோக்கினான்.

அதே நேரத்தில் தன் காதலியின் மலர்ந்த முகத்தை ரசித்தபடி நின்றிருந்த இந்தர்ஜித், ‘இவளுக்கு உண்மை தெரிய வந்தால் கண்டிப்பாக இப்படி சிரிப்பாளோ என்னவோ’ என்று நினைத்தான்.

சுரேஷ் அறையை நோக்கி சென்ற வினோத், ‘திடீர்னு விபத்து பற்றி விசாரித்தாள். அப்புறம் இந்தரின் அறைக்குப்போய் அவங்க பேசியதை எல்லாம் கேட்டுவிட்டாள். இனி என்ன நடக்குமோ? ஆனால் அவமேல் எந்த தவறும் இல்ல என்றபோது கண்டிப்பா அவங்க இருவருக்கும் சரியான பதிலடி கொடுப்பா’ என்ற எண்ணம் அவனின் மனதில் ஆழமாக வேரூன்றியது.

அவள் நடந்த அனைத்தையும் தந்தையிடம் சொல்லவே, “இப்படியொரு கல்யாணம் உனக்கு தேவையே இல்லம்மா. உன் நடத்தையை கேள்விகுறியாக மாற்றிய அவர்களின் வீட்டிற்கு நீ மருமகளாகப் போகவே வேண்டாம். அதற்கு பதிலாக என்னோடு கடைசிவரை என் மகளாகவே இருந்துவிடும்மா” என்றார் ரகுவரன் ஆதங்கத்துடன்.

“இல்லப்பா இந்தரும், விஷ்வாவும் அவங்க சைடு சரியாக இருக்காங்க. இப்போ வேண்டான்னு நான் விலகினால் கண்டிப்பா அவங்க சொன்னது உண்மைன்னு ஆகிடும். அவங்களுக்காக என் காதல், நட்பு என்ற இரண்டையும் இழக்க முடியாது. எனக்கு அவங்க இருவரும் வேணும். அதனால் விருப்பு, வெறுப்பை கடந்து நீங்கதான் முன்னே நின்று இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கணும்” என்று அவள் முடிவாக சொல்லிவிடவே ரகுவரன் கண்ணில் வலியுடன் மகளை பார்த்தார்.

ஒரு மகளைப் பெற்று பாராட்டி சீராட்டி வளர்த்து, அவள் கேட்ட அனைத்தையும் வாங்கிகொடுத்து தன் மகளின் சந்தோசமே பிரதானமாக வாழ்ந்தவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவும் பாஸ்கர், மரகதம் பேசிய வார்த்தைகள் சாதாரண வார்த்தைகளா? உடனே மன்னித்து மறப்பதற்கு?

அவர் மகளின் முகத்தை பாசத்துடன் வருடி, “சீதை ஒரு முறைதான் தீக்குளிச்சா.. ஆனால் இனி நீ தினம் தினம் தீக்குளிக்கணும்னு தெரிஞ்சும் இந்த விசப்பரிச்சை தேவையா மித்ரா” என்று மகளை அணைத்துக் கொண்டவரின் கண்களில் பாசம் கண்ணீராக பெருகியது.

“அப்பா ப்ளீஸ்ப்பா எனக்கு நீங்க எவ்வளவு முக்கியமோ.. அந்த அளவிற்கு அவங்க இருவரும் முக்கியப்பா” என்ற மகளின் கண்ணீர் அவரின் மார்பை நனைக்க அப்போதும் அவளின் விருப்பத்தை மட்டும் மனதில் நிறுத்தி சம்மதம் சொன்னார்.

மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது..

இந்தர்ஜித் மணமகனாக மேடையில் அமர்ந்திருக்க, தோழிகளின் கைவண்ணத்தில் தேவதையாக ஜொலித்த சங்கமித்ரா அவளின் அருகே சென்று அமர்ந்தாள். ரகுவரனுக்கு மனம் கனத்தபோதும் தன் மகளின் மகிழ்ச்சியை மனதில்கொண்டு புன்னகைக்க முயன்றார்.

அதே நேரத்தில் தன் தோழியை மணக்கோலத்தில் பார்த்த விஷ்வாவின் மனம் நிறைந்துவிட லேசாக கண்கள் கலங்கியது. அவனின் மனம் தாயின் வார்த்தைகளால் புண்பட்டுப் போயிருந்தபோதும், ‘இவ இன்னைக்கு மாதிரியே சந்தோசமாக இருக்கணும்’ என்று நினைத்தான்.

‘சின்னகுழந்தைன்னு நினைச்சிட்டு இருந்த மித்ராவா இவள்? இவ்வளவு பக்குவமாக நடந்த அனைத்து உண்மையும் தெரிந்தும் முகத்தில் அதற்காக சாயலே இல்லாத அளவிற்கு சிரித்த முகத்துடன் இருக்கிறாளே?’ என்று வியந்தான் வினோத்.

இந்தர்ஜித் தன் காதல் கைகூடிவிட்ட சந்தோஷத்தில் அவளைப் பார்க்க அவளும் சாந்தமான முகத்துடன் காதலாக அவனைப் பார்த்தாள். ஐயர் மந்திரங்கள் ஓதி திருமாங்கல்யத்தை அவனின் கையில் கொடுக்கவே எல்லையற்ற ஆனந்தத்துடன் அவளின் கழுத்தில் அதைக் கட்டி மூன்று முடிச்சு போட்டான்.

ஆயிரம் சலனங்களை ஒதிக்குவிட்டு தன்னவனை மட்டுமே மனதில் நினைத்து அவன் கட்டிய தாலியை மனதார ஏற்றுக் கொண்டாள் சங்கமித்ரா. அவனும் அவளைப்போலவே காதலை மட்டும் மனதில் வைத்து அவளின் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்தான். 

திருமணம் நல்லபடியாக நடந்து முடியவே இந்தரும், மித்ராவும் ரகுவரனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர். அங்கேயே வந்தவர்கள் பரிசு பொருட்களை தரவே நேரம் சந்தோசமாக கடந்து சென்றது.

மணமக்களோடு நின்று அனைவரும் போட்டோ எடுத்துக்கொள்ள கடைசியாக இந்தரின் தோளில் மித்ரா சாய்ந்திருக்க அந்தபக்கமாக சென்ற விலகி செல்ல நினைத்த விஷ்வாவின் கரங்களை வலுக்கட்டாயமாக பற்றி தடுத்த மித்ரா அவனை தன்னோடு போட்டோவில் நிற்க வைக்க எங்கிருந்தோ ஓடிவந்த சம்யுக்தா, “நானும் நிற்பேன்” என்று சொல்லி விஷ்வாவின் கரங்களோடு கோர்த்து அவனின் தோள் சாய்ந்து புன்னகைக்க கண்ணிமைக்கும் நொடியில் போட்டோ எடுக்கபட்டது.

அதை எதிர்பார்க்காத விஷ்வா சட்டென்று அவளை உதறி தள்ளிவிட்டு மேடையைவிட்டு கீழிறங்கிச் செல்ல சட்டென்று தோழியைத் திரும்பிப் பார்த்த மித்ராவின் கண்களுக்கு சம்யுக்தாவின் முகவாட்டம் புரிந்தது. ஆனால் அதை கேட்கும் முன்னரே அனைவரையும் வீட்டிற்கு கிளம்ப சொன்னார் ரகுவரன்.

மணமக்களோடு அனைவரும் வீடு நோக்கி பயணித்தனர்.