broken-heart1-317ee9b5

அத்தியாயம் – 19

காலையில் இருந்து வேலை செய்துவிட்டு ஓய்வெடுக்க எண்ணி மேற்கு மலை முகட்டை நோக்கி சென்றான் கதிரவன். வானமே செவ்வானமாக காட்சியளிக்கும் அந்திமாலைப் பொழுது மிக ரம்மியமாக இருந்தது. சிலுசிலுவென வீசி தென்றல் காற்றில் கலந்திருந்த ஈரப்பதம் எங்கோ மழை பொழிவதை உணர்த்திவிட்டு சென்றது.

சங்கமித்ரா குளித்து முடித்து அழகான பிங்க் நிற காட்டன் சேலையில் தயாராகி கண்ணாடி முன்னே நின்று ஒப்பனைகளை சரிபார்த்தவள் கணவனின் வரவை எதிர்பார்த்தபடி வாசலில் வந்து அமர்ந்தாள். மாலை வந்து வெளியே அழைத்துச் செல்வதாக சொன்னதால் கிளம்பி தயாராக இருந்தாள் மித்ரா.

வீட்டின் முன்னாடி நட்டு வைக்கபட்டிருந்த பிரம்மகமலம் செடியின் மீது பார்வையைப் பதித்த சங்கமித்ராவின் மனம் திருமணம் முடிந்தபிறகு தன் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளை அசைபோட தொடங்கினாள்.

இந்தர்ஜித் – சங்கமித்ராவின் திருமண வாழ்க்கை எந்தவிதமான இடையூறின்றி தெளிந்த நீரோடை போல சென்றது. இந்தர்ஜித் தன் தம்பியை வெளி நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வது பிடிக்காமல் இருவரும் சேர்ந்து புதிதாக வேறொரு நிறுவத்தை தொடங்கும் முயற்சியில் இறங்கினர்.

அண்ணனும் – தம்பியும் ஓரிடத்தில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்த சங்கமித்ரா அவளால் ஆனா உதவிகளை அவர்களுக்கு செய்து கொடுக்க முன் வந்தாள். அத்தோடு நில்லாமல் சின்ன வயதில் இருந்தே தானே சமைத்து சாப்பிட்ட இருவருக்கும் ருசியாக சமைத்துப் போட்டாள். எவ்வளவு வேலை இருந்தாலும் மதியம் வீட்டில் வந்து சாப்பிட வேண்டும் என்பது எழுதபடாத சட்டமாகவே மாறிப் போனது.

சங்கமித்ராவின் வரவிற்கு பிறகு இந்தர்ஜித் – விஷ்வாவின் வாழ்க்கை தலைகீழாக மாறிப்போனது. சின்ன விசயங்களில் கூட அவர்கள் வருத்தப்படும் அளவிற்கு அவள் நடந்துகொள்ளவில்லை. வாரம் ஒருமுறை தந்தையின் வீட்டிற்கு சென்று வருவாள்.

காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு சமையலில் ஈடுபட்டு இருந்த சங்கமித்ராவின் பின்னோடு வந்தவனின் கரங்கள் அவளின் இடையோடு சேர்த்து வளைத்துகொண்டது.

“குட் மார்னிங் மித்து” என்று அவளின் கன்னத்தில் முத்தம் பதித்தான் இந்தர்ஜித்.

“என்ன ஸார் இன்னைக்கு நேரத்தில் எழுந்திட்டீங்க போல” என்றவள் காய்கறிகளை நறுக்கியபடி கேட்டாள்.

அவளின் கையைப்பிடித்து வேகமாக நறுக்கத் தொடங்கிய இந்தர், “தினமும் வேலை விஷயமாக வெளியே சுற்றுவதால் வீட்டில் நேரம் செலவிட முடியல. அது வருத்தமாகவே இருந்துச்சு. அதுதான் இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் எழுந்து உன்னோடு பேசிட்டே இருக்கலாம்னு” என்றவன் கன்னத்தில் முத்தமிட்டு தன் அன்பை வெளிபடுத்தினாள்.

அவன் சிரிப்புடன், “மித்து நீ முத்தம் கொடுத்தே என்னை ஏமாற்றிட்டு இருக்கிற.. என்னைக்குதான் மொத்தமாக கொடுப்பியோ தெரியல..” தாபத்துடன் அவன் கூற அவளின் முகம் நாணத்தில் சிவந்தது.

“நீதான் காதலிக்கலாம்னு சொல்லி நாளைக் கடத்திட்டு இருக்கிற? இப்போ என்னை காரணம் காட்டினால் என்ன அர்த்தம்” என்று அவனை சீண்டினாள்.

தன்னை வம்பிற்கு இழுப்பது புரிய, “அதுக்காக இப்படி புருஷனை சுத்தலில் விடுறீயே இது உனக்கே நியாயமா?” என்றவனின் மீசை முடிகள் அவளின் கன்னத்தில் குறுகுறுப்பு மூட்டினான்.

“ஜித்து..” என்றவள் சிணுங்கவே சட்டென்று அவளின் இடையைப் பற்றி தன்பக்கம் திருப்பி நிறுத்தியவன், “மித்து நான் கொஞ்சம்டெபாசிட் பண்ணிக்கட்டுமா” என்று குறும்பு மின்ன கேட்டவனின் குரலில் மாற்றத்தை உணர்ந்து அவனின் மார்பில் கைவைத்து தள்ளிவிட்டாள்.

அவன் தடுமாறி நிற்கவே, “விஷ்வா வந்துவிடுவான் ஜித்து. காலையில் தயவுசெய்து நீ சமையலறை பக்கம் வராதே. அவன் மட்டும் பார்த்தால் அவ்வளவுதான்” என்று எச்சரிக்கை உணர்வுடன் பேசியவளின் கண்கள் மட்டும் அவனிடம் காதலை யாசித்தன.

“ம்ஹூம் ஓகே. ஆனால் எனக்கு கொடுக்க வேண்டிய அனைத்தையும் கணக்கு வெச்சுக்கோ. அப்புறம் தரமாட்டேன்னு சொன்னால் அடிதான் வாங்குவ” என்று மிரட்டிவிட்டு வெளியே சென்றபோது காலை எட்டு மணியைத் தாண்டி இருந்தது.

மித்ரா சற்று நேரத்தில் சமையலை முடித்துவிட்டு, “விஷ்வா ரூமில் என்ன பண்றான்னு பாருங்க ஜித்து. எப்பவும் காலையில் சீக்கிரம் எழுந்துவிடுவான். இன்னைக்கு ஏன் இவ்வளவு நேரமாகியும் கீழே வரலன்னு தெரியல” என்று புலம்பினாள்.

அவனும் யோசனையோடு வேகமாக மாடியேறிச் சென்று அவனின் அறைக் கதவைத் தட்டி, “விஷ்வா” என்றான்.

அவனின் குரலிற்கு பதிலாக முனகல் சத்தம் மட்டும் கேட்கவே, ‘காய்ச்சலாக இருக்குமோ’ என்ற சந்தேகத்துடன் மீண்டும் கதவைத் தாட்டிட மெல்ல கண்விழித்த விஷ்வா அறை நிதானத்துடன் வந்து கதவைத் திறந்தான்.

விஷ்வாவின் முகம் சோர்ந்து போயிருக்க, “ஏன்டா உடம்பு சரியில்லையா?”  அவனின் கழுத்தில் கைவைத்து பார்க்க உடல் தீயாகக் கொதித்தது.

“இவ்வளவு காய்ச்சலோடு படுத்திருக்கிற வா முதலில் ஹாஸ்பிட்டல் போலாம்” என்றவன் மித்ராவிடம் விவரம் சொல்லிவிட்டு அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். அவர்கள் இருவரும் திரும்பி வரவே அவனுக்கு கஞ்சியை சாப்பிட கொடுத்து மாத்திரை முழுங்க வைத்தனர்.

அவன் தூங்கட்டும் என்று எழுந்த இந்தரின் கையை எட்டிப் பிடித்த விஷ்வாவை அவன் கேள்வியாக நோக்கிட, “அண்ணா உன் மடியில் படுத்துக்கவா” ஏக்கத்துடன் கேட்டான்.

சின்ன வயதில் இருந்தே காய்ச்சல் வந்தால் விஷ்வாவின் தந்தையின் மடியோ அல்லது தமையனின் மடியோ கட்டாயம் வேண்டும். பசங்க அம்மா பிள்ளை என்று சொல்வாங்க. ஆனால் இவன் அப்பா பிள்ளை.

இத்தனை வருடங்கள் பிரிவில் தன் தம்பி எவ்வளவு தூரம் ஏக்கம் அடைந்திருக்கிறான் என்று புரிந்துகொண்ட இந்தர் கட்டிலில் அமர்ந்து கால்நீட்டி கொள்ளவே, “தேங்க்ஸ் அண்ணா” தமையனின் மடியில் தலைவைத்து உறங்கிவிட்டான் விஷ்வா.

அவனின் தலையை வருடிவிட்டபடி அமர்ந்திருந்த இந்தர், “மித்து இவன் இன்னும் குழந்தையாகவே இருக்கிறான் இல்ல” என்றான். அடுத்தடுத்து வந்த நாட்களில் தமையனின் கவனிப்பில் சீக்கிரமே அவனின் காய்ச்சல் சரியாகிவிடவே விஷ்வா பழையபடி துருதுருவென்று வலம்வர தொடங்கினான்.

“அண்ணன் மடியில் தலைவைத்து தூங்கும் சின்ன பையன் தானே நீ” என்று அவள் கேலி செய்தாலும், “நான் அப்படித்தான் என் அண்ணா மடியில் படுத்து தூங்குவேன். நீ அண்ணியாக வந்துட்ட என்பதற்காக என் பழக்க வழக்கங்களை மாற்றிக்க முடியுமா?” என்று இலகுவாக கேட்டு நகர்ந்துவிடுவான்.

இது நடந்து முடிந்து இரண்டு வாரங்கள் சென்ற நிலையில் ஒருநாள் மதியம் களைப்புடன் வீடு வந்த இந்தர்ஜித், “மித்து” என்ற அழைப்புடன் படுக்கை அறைக்குள் நுழைந்தான்.

அங்கே அவள் கால்நீட்டி போட்டு அமர்ந்தவண்ணம் கதை புத்தகம் படித்துக்கொண்டிருந்தவள், “வா ஜித்து.. விஷ்வா மதியம் சாப்பிட வரமாட்டேன்னு சொல்லிட்டு போயிட்டான். உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?” என்றவளின் மடியில் சென்று படுத்துக் கொண்டான்.

மித்ரா திகைப்பும், அதிர்ச்சியுமாக கணவனை நோக்கி, “என்னாச்சுடா” என்று கேட்கவே, “என்னவோ தெரியல மித்து உன் மடியில் சற்றுநேரம் படுத்திருக்கணும் போல இருக்கு. உனக்கு இதனால் ஏதாவது சங்கடமா” என்றவனின் கண்களை வைத்தே மனதைப் படித்தவள் கணவனின் தலையை செல்லமாக கோதிவிட்டு மௌனமானாள்.

தாயின் அரவணைப்பில் வளராத இந்தருக்கு அவளின் இந்த செயல் மனதிற்கு நிறைவைக் கொடுத்தது. சில நொடிகளில் தன்னை மறந்து உறங்கிவிட்டான். இந்தர்ஜித் எந்தவொரு விசயத்தையும் வெளிப்படையாக சொல்ல மாட்டான் என்பதால் அவனின் மீது தனிகவனம் செலுத்தியபோதும், விஷ்வாவை தனித்து இருக்க விடாமல் பார்த்துக் கொண்டாள்.

இதற்கிடையே தான் பார்த்த பெண்ணை வேண்டாமென்று மறுத்துவிட்டு சங்கமித்ராவை திருமணம் செய்து கொண்ட காரணத்தினால், பாஸ்கரின் மொத்த கோபமும் அவளின் மீது திரும்பியது. தன் மனைவியின் முகத்தில் முழிக்கவே கூடாதென்ற எண்ணத்தில் இருந்தவர் வீட்டை திடீரென்று மஸ்கெலியாவிற்கு மாற்றிக் கொண்டார். அது இந்தர் தற்போது வாங்கி இருக்கும் வீட்டிற்கு எதிர் வீடாக அமைந்ததில் அவருக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.

அதே நேரத்தில் மரகதம்மாவின் வீடு அவர்களின் வீட்டிற்கு பக்கத்து வீடாக மாறிப் போனது. சங்கமித்ரா கல்யாணம் ஆகி வந்த மறுநாளே விஷ்வாவை ஒரே வீட்டில் தங்க செய்துவிட்டத்தை எண்ணி அவளின் மீது தேவையில்லாத கோபத்தை வளர்த்துக் கொண்டார். இத்தனை நாளாக தான் சொல்லி கேட்காத பிள்ளை அவள் சொன்னவுடன் கேட்டதில் வந்த ஆதங்கத்தின் விளைவாக மருமகளிடம் கோபத்தைக் காட்ட தொடங்கினார்.

வீட்டின் வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம்கேட்டு கடந்தகால நினைவுகளில் இருந்து தன்னை மீட்டுக்கொண்டு, “ஜித்து” என்ற அழைப்புடன் எழுந்து நின்றவள் அப்போதுதான் வானத்தை கவனித்தாள். பௌர்ணமி நிலவு நடுவானத்தை நோக்கி பயணித்தது.

“ஆமா மணி எத்தனை” என்றவள் சந்தேகமாக தன் எதிரே நின்றிருந்த விஷ்வாவிடம் கேட்க, “மணி பதினொன்னு ஆச்சு” என்று வீட்டிற்குள் சென்று மறைந்தான்.

தன் எதிரே நின்ற கணவனை கோபத்துடன் முறைத்தவள், “இதுதான் சாயங்காலம் வந்து வெளியே கூட்டிட்டு போவதா?” என்றாள் எரிச்சலோடு.

“மித்து ஸாரிம்மா! நானும் சீக்கிரமே கிளம்பிட்டேன். திடீர்னு ஒரு பிஸ்னஸ் மீட்டிங். அதை முடிச்சிட்டு வருவதற்குள்  நேரம் ஆகிடுச்சு” அவளிடம் அவன் நடந்ததை மறைக்காமல் சொன்னபிறகு அவளின் கோபம் அதிகரித்ததே தவிர குறையவில்லை.

“என்னைவிட அதுதான் முக்கியம் இல்ல. இதுக்கு நீங்க எதுவும் சொல்லாமல் இருந்திருந்தால் நான் நிம்மதியாக என் வேலையைப் பார்த்துட்டு இருந்திருப்பேன்” என்று கோபத்துடன் பேசிவிட்டு அறைக்குள் சென்று மறைந்தவள் அவனின் முகத்தில் அடித்தாற்போல கதவை சாத்தி தாழிட்டுக் கொண்டாள்.

வீட்டின் நடுக்கூடத்தில் அவள் போட்ட சத்தம்கேட்டு வேகமாக படியிறங்கி வந்த விஷ்வா, “அண்ணன் இந்நேரம் வரை கம்பெனியில் சும்மா உட்கார்ந்துட்டு வரல. அவனும் பாவம் காலையில் இருந்து எவ்வளவு வேலை செய்யறான் தெரியுமா? அவன் வந்து வெளியே கூட்டிட்டுப் போகலன்னு இப்படியெல்லாம் கோபத்தைக் காட்டாதே” என்று கத்திவிட்டு செல்ல திரும்பினான்.

சட்டென்று புடவையை மாற்றிவிட்டு வெளியே வந்தவள், “சும்மா உன் அண்ணனுக்கே சப்போர்ட் போடாதே விஷ்வா” என்று எரிந்து விழுந்தாள். அடுத்து இருவரும் பேச்சை விடாமல் பேசிக்கொண்டே செல்ல வார்த்தைகள் தடிக்க வாக்குவாதம் அதிகமானது.

அதுவரை பொறுமையை இழுத்துபிடித்து வைத்திருந்த இந்தர்ஜித், “இரண்டு பேரும் நிறுத்திறீங்களா?” என்று கத்தியவுடன் அவர்கள் இருவரும் அமைதியாகிவிட்டனர்.

தன் மனைவியின் பக்கம் பார்வையைத் திருப்பியவன், “மித்ரா நீ இன்னும் சின்னப்பொண்ணு கிடையாது. என்னால் வர முடியலன்னு சொன்னால் நீதான் புரிஞ்சி நடந்துக்கணும். அதைவிட்டுட்டு இப்படி கத்தினால் எல்லாம் நடந்துவிடும் என்று நினைப்பா” என்று திட்டினான்.

அவன் கணவனை கோபத்துடன் முறைக்க, “விஷ்வா அவ ஏதோ கோபத்தில் பேசினால் நீ எனக்காக பரிந்து அவகிட்ட பேசாதே. அதனால் அவளோட கோபம் அதிகமாகுமே தவிர குறையாது. அவளுக்கு எப்போ எடுத்து சொல்லி புரிய வைக்கனும்னு எனக்கு நல்லாவே தெரியும். அதனால் நீ உன் ரூமிற்கு போ” என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு எழுந்து சென்றுவிட்டான்.

“நான்தான் புரிஞ்சிக்கிட்டு பொறுமையாக போகணும்மாம். நடந்த விஷயம் தெரிஞ்சபிறகும் யாருக்காக இவனைக் கல்யாணம் பண்ணிட்டேன்?” என்று அவள் புலம்புவது விஷ்வாவின் காதுகளில் தெளிவாக விழுந்தது.

மரகதம் அடிக்கடி சண்டைப் போட்டுவிட்டு புலம்புவது போலவே மித்ராவும் புலம்புவதை கண்டு, “ச்சே!” என்றபடி எழுந்து சென்றுவிடவே அவளோ சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

இருவரையும் சாப்பிட அழைக்க, “நாங்க அங்கேயே சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டோம்” என்று சொல்லவே கோபத்துடன் அவற்றை எல்லாம் எடுத்து வைத்து சுத்தம் செய்தவள் கோபத்துடன் அறைக்குள் சென்றாள்.

அங்கே இந்தர்ஜித் லேப்டாப்பில் வேலையில் முழ்கி இருப்பதை கண்டு எதுவும் பேசாமல் படுக்கையில் படுத்து போர்வையை தலைவரை போர்த்திக்கொண்டாள்.

அவள் அறைக்குள் நுழைந்ததில் இருந்து நடந்ததை கவனித்த இந்தர், ‘நான் அவ்வளவு தூரம் காரணத்தை சொன்னபிறகும் கோபத்தை காட்டுற. கொஞ்சமாவது புரிதல் இருக்கா?’ அவளை சமாதானம் செய்யாமல் தன் வேலையில் கவனமாக இருந்தான்.

அவன் வேலையை முடித்துவிட்டு நிமிர்ந்து கடிகாரம் பார்க்கும்போது மணி இரவு இரண்டு என்றது. தூக்கம் வருவதைப்போல இருக்கவே படுக்கையில் படுத்தபடி யோசனையில் ஆழ்ந்தான். திருமணம் ஆன நாளில் இருந்து அவள் எங்கேயும் அழைத்துச் செல்ல சொல்லி அடம்பிடிக்கவில்லை.

சீதை எலியா மற்றும் ரம்போடா ஆஞ்சிநேயர் கோவில் இரண்டுக்கும் சென்று வருவதோடு நிறுத்தி கொள்வாள். தொழில் விசயமாக வெளியே அலைந்து களைப்புடன் வீடு திரும்புபவர்களுக்கு சிரித்த முகமாக வரவேற்பாள்.

அன்று மதியம் வீட்டிற்கு வந்த இருவருக்கும் புன்னகை முகமாக சாப்பாடு பரிமாறிவிட்டு மித்ராவும் அமரவே, “இன்னைக்கு மாலை வெளியே போலாம் மித்து. நீ தயாராகி இரும்மா” என்று சொன்னது அவன்தான்.

மாலை நேரமானபோது அவளிடம் சொல்லாமல் மீட்டிங் முடித்துவிட்டு வந்திருந்தவனுக்கு அவளின் ஏமாற்றம் புரியவே இல்லை. திருமணம் ஆகி முதல் முறை இப்படி நடந்ததும், அவன் பேசிய வார்த்தைகளும் அவளை காயப்படுத்தவே வெகுநேரம் சத்தம் இல்லாமல் தலையணையை கண்ணீரால் நனைத்தவள் சாப்பிடாமல் உறங்கிப் போயிருந்தாள்.

அவன் போர்வையை விளக்கி அவள் முகம் பார்க்க கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீர் தடத்தை கண்டு, “தேவை இல்லாமல் இவளை காயப்படுத்திட்டேனே” என்று மனம் வருந்தியவன் மெல்ல அவளின் தோள் தொட்டு எழுப்பினான்.

மித்ரா கண்களைத் திறந்து அவனை கேள்வியாக நோக்கிட, “சாப்டியா”அக்கறையோடு கேட்டான்.

அவள் உதட்டைக் கடித்துக்கொண்டு மெளனமாக இருக்கவே, “உன் கோபத்தை எதுக்குடி சாப்பாடு மேல் காமிக்கிற?” எழுந்து சென்றவன் வரும்போது கையில் தோசை மற்றும் இட்லி பொடியுடன் திரும்பி வந்தான்.

“எனக்கு வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அவள் படுக்க நினைக்கவே, “நீ சாப்பிடாமல் படுத்தா நாளையிலிருந்து உன் கையில் செய்த எதையும் தொடக்கூட மாட்டேன் மித்ரா” என்ற மிரட்டல் அவளிடம் வேலை செய்தது.

சங்கமித்ரா எரிச்சலோடு சாப்பிட திடீரென்று புரையேறவே, “மித்து தண்ணி குடி” என்று அவளுக்கு புகட்டியவன் அவளின் கையிலிருந்து தட்டை பிடுங்கி  அவனே ஊட்டிவிட தொடங்கினான்.

சிறிதுநேரம் அங்கே அமைதி நிலவிட, “சாரி மித்து” என்றவன் எழுந்து சென்று ஜிங்கில் தட்டைப் போட்டுவிட்டு கைகழுவிவிட்டு மீண்டும் அறைக்குள் சென்றான்.

அவளின் அருகே சென்று அமர்ந்தவன், “நான் செய்தது தவறுதான். கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கும்டா. ஆனால் நான் வேண்டுமென்று செய்யல” என்று அவளின் கைகளை தன் கரங்களுக்குள் அடக்கியபடி அவன் கூறவே அவளோ அமைதியாக படுக்கையில் படுத்து விழிமூடிக் கொண்டாள்.

அவன் அவளின் புறமாக சரிந்து படுத்து, “சாரி சொல்லியும் உன் கோபம் போகலையா?” என்றவன் கேட்கவே, “நானும் சட்டென்று யோசிக்காமல் கோபபட்டு பேசிட்டேங்க. என்னை மன்னிச்சிடுங்க” என்ற மித்ரா அவனின் மார்பில் தஞ்சம் புகுந்தாள்.

அன்றைய சண்டை அன்றோடு முடிந்தது என்றபோது விஷ்வா தன் முடிவில் உறுதியாக இருக்க இந்த சம்பவம் முக்கிய காரணமாக மாறிப் போனது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!