Maane – 20

images (34)-4d6dead7

Maane – 20

அத்தியாயம் – 20

பகலவன் கிழக்கில் இருந்து தன் பயணத்தை தொடங்க ஜன்னலின் வழியாக சூரிய வெளிச்சம் பட்டு கண்விழித்தாள் சங்கமித்ரா. அவளை இறுக்கியணைத்து கொண்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த கணவனின் முகத்தை இமைக்க மறந்து பார்த்தாள்.

சிலநொடிகளுக்கு பிறகு அவனின் கைகளை விலகி எழுந்து குளித்துவிட்டு வாசலைக் கூட்டி தெளிக்க வெளியே வந்தபோது மரகதம், “நேற்று பெரிய மகன் வருவான்னு வாசலில் தவம் கிடந்தாள். அவன் வரல என்றதும் நைட் வந்ததும் சண்டை போட ஆரம்பிச்சிட்டா. சின்னவன் அண்ணனுக்கு சப்போர்ட் போட்டதும் இவளுக்கு கோபம் வந்துச்சு” என்று பக்கத்து வீட்டுக்காரியிடம் கதையளைந்து கொண்டிருந்தார்.

அவரோ, “ஏய் உன் மருமகள் உன்னைத்தான் மரகதம் பார்த்துட்டு இருக்கிற..” என்று சொல்லும்போது இடையே இருந்த மதில் சுவர் ஏறி அந்தபக்கம் குதித்தாள் சங்கமித்ரா.

இதை எதிர்பார்க்காத பக்கத்துவீட்டு பெண்மணி, “எனக்கு சமையலறையில் வேலை இருக்கு” என்று நழுவப் பார்த்தாள்.

உடனே சொடக்குப் அவரை அழைத்தவள், “இந்நேரம் வரை அவங்க சொல்லும்போது மட்டும் நின்று கதை கேட்டீங்க? என்னைப் பார்த்தும் ஓடினால் என்ன அர்த்தம்?” என்று பக்கத்து வீட்டு பெண்ணிடம் கேட்டபடி மரகதத்தை நெருங்கினாள்.

அவரோ சுட்டெரிக்கும் கனல் பார்வையை அவளை நோக்கி வீசிட, “உங்களுக்கு நான் என்ன உறவுன்னு மறந்து போயிடுச்சுன்னு நினைக்கிறேன். உன் பெரிய மகனைத்தான் நான் கல்யாணம் பண்ணிருக்கேன். அப்போ உனக்கு நான் மருமகள் இல்லங்களா அத்தை. நம்ம வீட்டு விஷயத்தை விடிந்தும் விடியாத நேரத்தில் பக்கத்து வீட்டுக்கு பார்சல் பண்றீங்களே.. போறது நம்ம வீட்டு மானம் என்ற சென்ஸ் கொஞ்சம்கூட வேலையே செய்யலையா?”  என்று இடையில் கையூன்றி எரிச்சலோடு கேட்டாள்.

அவளின் கேள்வியில் நியாயம் இருப்பது புரியவே, “உங்க அத்தைக்கு நீயே கிளாஸ் எடும்மா. எனக்கு வீட்டில் வேலை இருக்கும்மா” என்றவர் நகர்ந்துவிடவே, “ஏய் நீ எதுக்கு இங்கே வந்த?”மரகதம் கோபத்துடன் அவளை முறைத்தபடி கேட்டார்.

அவரின் கேள்விக்கு பதில் சொல்லாமல், “நல்ல இருக்கும் அவங்களையும் எதுக்கு அத்தை கெடுக்கிறீங்க. வீட்டில் வேலை செய்யாமல் இருந்தா இப்படித்தான் எக்குதப்பாக யோசிக்க தோணுமாம். இருங்க நான் உங்களுக்கு ஒரு நல்ல வேலை கொடுக்கிறேன்” என்று விறுவிறுவென்று வீட்டிற்குள் சென்றாள் மித்ரா.

அதுவரை ஏளனமாக அவளைப் பார்த்தபடி நின்றிருந்த மரகதம், “ஏய் அங்கே எதுக்குடி போற” என்று கத்திக்கொண்டு அவளின் பின்னோடு சென்றார்.

சமையலறையில் இருந்த எண்ணெயை எடுத்து வந்து வீடு முழுக்க ஊற்றிவிட்டு, “ஒரு மாதம் உட்கார்ந்து வேலை செய்தாலும் அவ்வளவு சீக்கிரம் போகாது எண்ணெய் பசை. சீக்கிரம் வீட்டை சுத்தபண்ணுங்க அத்தை. இல்லன்னா எண்ணெயில் கால்வைத்து கீழே விழுந்து கைகாலை உடச்சிக்க போறீங்க” என்று சொல்லிவிட்டு எதுவும் செய்யாதவள் போல  மறுபடியும் சுவரேறி ஜங்கேன்று குதித்தாள்.

ஏற்கனவே நேற்று இரவு தன் தோழியைத் திட்டிவிட்டு பிறகு தவறை உணர்ந்த விஷ்வா, ‘அண்ணன் சொன்னதால் தானே அவளும் கிளம்பினா. நான்தான் தேவையில்லாமல் அவளை திட்டிட்டேன்’ என்ற எண்ணத்துடன் காலை எழுந்ததும் கீழே வந்து பார்த்தான்.

அப்போதுதான் எழுந்து குளித்துவிட்டு அறையைவிட்டு வெளியே வந்த இந்தர், “மித்து காஃபி” என்று குரல்கொடுத்தான்.

அதற்கான பதில் வரவில்லை என்றதும், “நீ மித்ராவைப் பார்த்தியா விஷ்வா” என்று தம்பியிடம் கேட்டான்.

அவன் உதட்டைப் பிதுக்கவே, “ஒருவேளை வாசலில் இருக்கிறாளோ?” இந்தரும், விஷ்வாவும் வாசலுக்கு வரவே அவள் ஜங்கேன்று குதிக்கவும் சரியாக இருந்தது.

அண்ணனும், தம்பியும் அவளை முறைக்கவே, ‘பேய்கிட்ட தப்பிச்சு பிசாசுகிட்ட மாட்டிடேனே’ என்று கையை உதறியவள் அவர்களைப் பார்த்து அசடுவழிய சிரித்தாள்.

“சாரி.. நான் வாசல் தெளிக்கத்தான் வந்தேன். அங்கே அத்தை நம்ம வீட்டு விஷயத்தை பக்கத்து வீட்டுக்கார அம்மாவிடம் சொல்லிட்டு இருந்தாங்களா.. அதுதான் சுவர் ஏறிக் குதிக்க வேண்டியதாப் போச்சு” காதுகளை பிடித்துகொண்டு தோப்புக்கரணம் போடுவது போன்ற பாவனையோடு கண்ணில் குறும்பு மின்ன கூறினாள் சங்கமித்ரா.

அங்கே நடந்தது என்னவென்று அவள் முழுவதுமாக சொல்லும் முன்னரே அங்கே வந்த மரகதம், “ஏண்டி யாரு வீட்டுக்குள் புகுந்து சமையல் எண்ணெயை எடுத்து ஊத்திட்டு வந்திருக்கிற? ஐயோ இனி அதை சுத்தம் பண்றதுக்குள் உயிர் போய் உயிர் வருமே! ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு வரச்சொன்ன மரத்துக்கு மரம் தாவும் வானரத்தை திருமணம் செய்துட்டு வந்து உயிரை வாங்கறான்” அவள் செய்த காரியத்திற்கு இந்தருக்கும் சேர்த்து திட்டு விழுந்தது.

ஏற்கனவே தோழியின் குணம் தெரியும் என்றாலும் இன்று அவள் செய்த காரியத்தை தாயின் வாய் மூலமாக கேட்ட விஷ்வா, “மானு நிஜமாவா” என்று நம்பாமல் கேட்டான்.

“ஆமா விஷ்வா” அசராமல் சொன்னவளிடம், “சூப்பர் மானு. சும்மா இருந்தா இப்படித்தான் யோசிக்க தோணும்” என்று அவளை மனம் திறந்து பாராட்டிய மகனை கோபத்தில் முறைத்தார். தாயின் முகம் போன போக்கை பார்த்து இந்தரோ சிரிப்பைக் கட்டுபடுத்த பெரும்பாடுபட்டான்.

“நீங்க மட்டும் நல்ல பிள்ளைகளை பேத்தி ஒழுக்கமா வளர்த்திட்ட மாதிரி பேசறீங்க. இந்த இரண்டு ஜந்துகளையும் வைத்துகொண்டு நான் அனுபவிக்கும் கஷ்டம் எனக்குதான் தெரியும். தேவாங்கு இரண்டுக்கும் நல்லது சொல்லி கொடுத்தே நான் கிழவி ஆகிடுவேன் போல. பெத்த நீங்க ரொம்ப நிம்மதியா இருக்கீங்க. கட்டிகிட்ட பாவத்துக்கு நான்தான் படாதபாடு படுறேன்” அடுத்த நிமிடமே அண்ணன், தம்பி இருவரையும் காலை வாரினாள் சங்கமித்ரா.

அவள் சரிக்கு சரி சண்டை போடுவதை நினைத்து சந்தோசப்படுவதா? இல்லை கிடைத்தது சான்ஸ் என்று சந்தடி சாக்கில் காலை வாருகிறாளே என்று வருத்தப்படுவதா என்று இருவருக்கும் புரியவில்லை. அவர் மூவரையும் முறைத்துவிட்டு நகர்ந்தார்.

கணவனின் பக்கம் திரும்பி, “நான் நல்லா பேசினேன் இல்ல” என்றவளை அவன் கொலைவெறியுடன் பார்க்க, “பீம்பாய்” என்று விஷ்வாவின் பக்கம் திரும்பிப் பார்க்க அவனோ அடிப்பதற்கு ஏதாவது கிடைக்கிறதா என்று சுற்றும் முற்றும் தீவிரமாக தேடிக் கொண்டிருந்தான்.

‘ஐயோ கோபத்தில் இருவரையும் எந்த மிருகத்தின் பேரு சொன்னேன்னு தெரியலையே.. என்னைக் காப்பாற்ற யாராவது வந்தால் பரவால்லையே ஆஞ்சிநேயா’ என்றவள் பார்வையைத் திருப்பிட வாசலுக்கு பேப்பர் எடுக்க வந்த பாஸ்கர் நின்று நடப்பதை வேடிக்கைப் பார்த்தார்.

பிறகு, “இவனுங்களுக்கு காலை பொழுது விடிந்தால் இதே வேலையாகப் போச்சு. பொண்ணு மாதிரியா பேசிட்டு இருக்கிற? விடிந்தும் விடியாத நேரத்தில் வாசலில் நின்று பேயாட்டம் போடுற? இவ்வளவு ஒழுக்கமாக வளர்த்தி இருக்கிறான் இவங்க அப்பன்” என்று தலையில் அடித்துக் கொண்டார்.

மரகதத்தை விட்டுவிட்டு பாஸ்கரின் பக்கம் திரும்பி சேலையை வரிஞ்சி கட்டிக்கொண்டு, “இன்னைக்கு இவருக்கும் நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்” என்று முணுமுணுப்பது இரண்டு ஆண்களின் காதிலும் தெளிவாக விழுந்தது.

விஷ்வா தமையனை நிமிர்ந்து பார்க்க, “அவ பேசட்டும் விடுடா” என்றதும் அவனும் சரியென்று தலையசைத்துவிட்டு வேடிக்கைப் பார்க்க தொடங்கிவிட்டான்.

“இந்த கருமத்துக்கு தான் நான் சொல்ற பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்க சொன்னேன் கேட்டியா நீ” என்றவர் வார்த்தைகளை விடவே கேட்டை திறந்துகொண்டு அவரை நோக்கி சென்றாள் மித்ரா.

அவர் அவளைப் பார்த்து அசராமல் நின்றிருக்க, “வீட்டுக்கு வந்த மருமகளை ரோட்டில் நின்னுட்டு என் ஒழுக்கத்தை பேசற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தா? எங்க அப்பா எல்லாம் என்னை நல்லாத்தான் வளர்த்தி இருக்காரு. நீங்கதான் வாழ தெரியாமல் வாழ்ந்துட்டு இருக்கீங்க. என் வீட்டுப் பிரச்சனையைப் பேச எனக்கு மட்டும்தான் தகுதி இருக்கு” என்றவரை வாயடைத்து நிற்க வைத்தாள்.

இந்தர்ஜித், “நீ என்ன சொன்னாலும் அவங்க மண்டையில் ஏறாது மித்து” என்ற தமையனை கேள்வியாக நோக்கினான். நேற்று இரவு வீடே அதிரும் அளவிற்கு மூவரும் சண்டை போட்டது உண்மைதான். விஷ்வா அவளின் பக்கம் இருக்கும் நியாயத்தை புரிந்து கொண்டது சரிதான் என்றபோதும் அண்ணன் சாதாரணமாக எடுத்துகொண்டது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

“பொண்டாட்டியை அடக்கி வைத்து ஒழுங்க குடும்பம் நடத்த தெரியாமல் இருக்கீங்க? நீங்க என் ஒழுக்கத்தை பேச வந்தீட்டிங்க..” என்றவள் சொல்லவே, “அட்ராசக்கே..” என்றான் இந்தர்ஜித் சுவாரசியமாக வேடிக்கைப் பார்த்தபடி.

“நாற்பதுக்கு மேல ஆனால் நாய்குணம் என்பது சரியாத்தான் இருக்கு” என்று அவள் சொல்லவே விஷ்வாவிற்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

பாஸ்கர் பதில் பேச முடியாமல் நின்றிருக்கவே, “அன்னைக்கே சொன்னேன் கேட்கல. இன்னைக்கு ரோட்டில் வைத்து கேள்வி கேட்கிற? இனிமேலாவது இந்த மனுஷன்

அவள் பேசிய அனைத்தையும் கேட்ட விஷ்வா, “அண்ணா நேற்று கூட மானு இவ்வளவு கோபபடல. இன்னைக்கு இவளுக்கு என்னாச்சு?” என்று புரியாமல் கேட்டான்.

“அவகிட்ட அன்பா இருக்கிற யாரையும் காயப்படுத்த மாட்டா. அதே நேரத்தில் அவளைத் தவறாக பேசினால் கேட்டுட்டு கண்டும் காணாமல் போகும் பொண்ணு அவ இல்ல. கொட்ட கொட்ட குனிந்தால் முதுகெலும்பு இல்லாதவன்னு என்ன வேண்டும் என்றாலும் பேசுவாங்க. இனிமேல் வாயைத்திறந்தால் இருக்கு அவங்களுக்கு..” என்றான்.

நேற்று இருந்த மனநிலைக்கு முற்றிலும் மாறாக தன்முன்னே நின்ற அண்ணனைப் பார்த்தவன், “என்னண்ணா நீ இப்படி மாறிட்ட” என்றான் விஷ்வா.

“பொண்டாட்டி வந்தால் இப்படிதான் சில விஷயங்களை மாற்றிக்கணும்” என்று தோளை தட்டிவிட்டு நிமிரும்போது, “இன்னும் ஆபீஸ் கிளம்பாமல் இங்கே நின்னு என்ன பேச்சு” என்று அவர்களை கோபத்தில் மிரட்டினாள்.  

அப்போதுதான் அவள் சொன்னது ஞாபகம் வரவே, “நாங்க தேவாங்கா?” என்று தொடங்கிய நண்பனிடம், “கல்யாணம் பண்ணவே மாட்டேன்னு அகராதியில் எழுதி வெச்சிருக்கும் உனக்கு இந்த பேருதான் கண்ணா ரொம்ப அழகாக இருக்கு” என்று உதட்டை இழுத்து சிரித்துவிட்டு தப்பிக்க நினைத்து வீட்டிற்குள் ஓடினாள்.

“ஏய் ஜந்துன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆக பார்க்கிறீயா?” என்று இந்தர்ஜித் அவளின் பின்னோடு வீட்டிற்குள் செல்ல, விஷ்வா அவர்களைப் பின் தொடர்ந்தான்.

“ஆமா அப்படித்தான் சொல்வேன்” என்று சளைக்காமல் கணவனை வம்பிற்கு இழுத்த மித்ராவை துரத்தி பிடிக்க எண்ணி இந்தர் அவளின் பின்னோடு ஓடினான்.

அவளோ அவனின் கைகளில் இருந்து தப்பிக்க நினைத்து படுக்கையறைக்குள் செல்லவே, “ஜித்து விஷ்வா முன்னாடி விளையாட்டதே. அவன் என்னை கிண்டலடிப்பான்” என்று அவள் கெஞ்சிக் கொண்டிருந்தாள் மித்ரா.

விஷ்வா இருவரையும் வேடிக்கைப் பார்த்தபடி மாடி படிக்கட்டில் அமரவே அவனின் செல்போன் சிணுங்கியது. அந்த சத்தம்கேட்டு அவன் வேகமாக படியேறிச் சென்றான்.

அவன் மேலே சென்று விட்டதை கவனித்த இந்தர்ஜித், “ஏன் மித்து அவன் முன்னாடி விளையாட வேண்டான்னு சொல்ற. நான் உன்னை துரத்திட்டு தானே வந்தேன். வேற எதுவும் செய்யவில்லையே”என்று மெல்லிய குரலில் புரியாமல் கேட்டான்.

“இல்லங்க விஷ்வாவை நான் தவறா சொல்லல. நம்மள பார்க்கும்போது அவன் ரொம்பவே குழம்பிப் போறான். அது நல்லதுதான் என்றாலும் விஷ்வா முன்னாடி சந்தோசமாக இருப்பது எனக்கு உறுத்தலாக இருக்குங்க. அவன் திருமணமே வேண்டான்னு சொல்றான். அப்பா அம்மாவைப் பார்த்து வாழ்க்கையை தவறா புரிஞ்சி வச்சிருக்கான்” என்ற மித்ரா கடைசிவரை விஷ்வாவிற்கும், அவளுக்கும் இடையே நடக்கும் போட்டியை சொல்லவில்லை.

அவள் சொல்லும் வரை அப்படியொரு கோணத்தில் யோசிக்காத இந்தர், “ஆமா அவனை இப்படியே விட்டால் தனிமரமாக நின்றாலும் நின்றுவிடுவான் மித்ரா. நீ சொல்வது போல அவனுக்கு புரிய வைத்தால் கண்டிப்பா மாறுவான்” என்றவனை இமைக்க மறந்து பார்த்தாள் சங்கமித்ரா.

‘என் நண்பனுக்காக அவனோட வாழ்க்கைக்காக உன்னையே தூக்கிபோடும் நிலை வரப்போகிறது என்று சொன்னால் இவன் நம்புவானா? அப்படியொரு நிலை வந்தால் என் இந்தர் மனம் அந்த ஏமாற்றத்தை தாங்குமா?’ என்று அவளின் மனம் பரிதவித்தது.

ஆனால் சில நேரங்களில் இவற்றைக் கடந்து எடுக்கப்படும் முடிவுகள் வெற்றியடைய வாய்ப்புகள் அதிகம் என்றே அவளின் மனம் எண்ணியது.

இன்னும் கொஞ்சநாளில் இந்தரைவிட்டு நிரந்தரமாக புரிய வேண்டும் என்ற எண்ணம் அவளின் மனதின் நிம்மதியைக் கெடுத்தாலும், ‘அதுக்காக விஷ்வாவை அப்படியே விட முடியாதே?! அவனோடு தான் வாழ வேண்டும் என்ற முடிவில் இருக்கும் சம்யுக்தாவின் வாழ்க்கையும் அல்லவா கேள்வி குறியாக மாறிப்போகுது’ என்று நினைக்கும்போது மனம் வலிக்கவே செய்தது.

என்ன நடந்தாலும், ‘இந்தர்ஜித், விஷ்வா இருவரின் வாழ்க்கையும் நன்றாக இருக்கணும். அதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்’ என்றவள் எடுத்த முடிவில் உறுதியாக நின்றாள்.

அவளின் சிந்தனையைக் கலைக்கும் விதமாக, “மித்து ஆபீஸ் போக நேரமாகுது. நீ போய் வேலையைக் கவனிடா” என்றான் இந்தர்.

அவள் புன்னகையோடு விலகி செல்ல எண்ணி நகரவே சட்டென்று அவளை இழுத்தணைத்து இதழில் முத்தமிட்டவன், “சூப்பரா பேசின செல்லம்” என்றான். மித்ரா எதிர்பாராத தாக்குதலில் திகைத்து நின்றபோது தன்னை சமாளித்துக்கொண்டு சமையலறை நோக்கி நடந்தாள்.

வேகமாக அறைக்குள் சென்றவன் போனை எடுத்து, “ஹலோ” என்றான்.

அவனின் குரல்கேட்ட சந்தோஷத்தில் பெயரைச் சொல்லாமல், “எப்படி இருக்கீங்க?” என்று கரகரத்த குரலில் கேட்டாள்.

சட்டென்று அவளின் குரலைக் கண்டுபிடிக்க முடியாமல், “நான் நல்ல இருக்கேன். நீங்க யார் பேசறது?” அவன் கேட்டவுடன் கால் கட்டாகிவிடவே செல்லின் திரையைப் பார்த்தான். புது எண்ணாக இருக்கவே சிந்தனையோடு படுக்கையில் அமர்ந்தவனின் நினைவுகள் அவளை மட்டுமே சுற்றி வந்தது.

இந்தர்ஜித் – சங்கமித்ராவின் வாழ்க்கையை தாய் – தந்தையின் வாழ்க்கையோடு அடிக்கடி ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டான் விஷ்வா. அவளிடம் ஆயிரம் சண்டை போட்டாலும் அவன் விட்டுகொடுக்காமல் பேசுவதும், என்னதான் கோபம் இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு மித்ரா வந்து சிறுபிள்ளை போல மன்னிப்பு கேட்பது அவனுக்குள் ஒரு மாற்றத்தை உருவாக்கி இருந்தது.

திருமணம் ஆன கொஞ்சநாளில் இருவருக்கும் இடையே இருக்கும் புரிதலை கண்கூட பார்த்து உணர்ந்த விஷ்வாவிற்கு அடிக்கடி அவர்கள் சண்டை போடுவது மனதிற்குள் குழப்பத்தையே கொடுத்தது. அடுத்தடுத்து வந்த நாட்கள் ரெக்கைகட்டி கொண்டு பறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!