images - 2020-10-06T132026.382-61822f92

அத்தியாயம் – 21

இந்தர்ஜித் – சங்கமித்ராவின் வாழ்க்கையில் சின்ன சின்ன சண்டைகள் வந்தபோதும் அவர்கள் அதை அழகாக விட்டுகொடுத்து எடுத்து சென்ற விதம் புரியாமல் தடுமாறினான் விஷ்வா. பிடிக்காத நபருடன் வாழ்க்கையைப் பிணைக்கும் நிலை வந்தாலும் ஏதோவொரு புள்ளியில் அவர்களிடம் இருக்கும் நல்ல குணம் மனத்தைக் கவர்ந்துவிடும்.

அப்படி இருக்கும் நிலையில் பிடித்தவர்களுடனான திருமண வாழ்க்கையில் குட்டி சண்டைகள் கூட அதிக நெருக்கத்தை உருவாக்கும் என்று அவனிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது என்ற சிந்தனையில் இருந்தாள் சங்கமித்ரா.

இன்றுவரை பாஸ்கர் – மரகதம் வாழ்க்கையில் பிரிந்து செல்ல காரணம் என்னவென்று அவளுக்கு சுத்தமாக தெரியாது. ஆனால் காரணமே இல்லாமல் பிரிய அவர்கள் சின்னபிள்ளை இல்லையே. இருவருக்கும் இடையே ஏதோவொரு பிரச்சனை இருக்கிறது. அது என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இரவு உணவைத் தயார் செய்யும் வேலையில் இறங்கினாள்.

மாமனார் – மாமியாரை நினைத்தவுடன் அவளின் உதடுகளில் புன்னகை அரும்பியது. பாவம் அவள் செய்த வேலையால் ஒரு மாதம் முழுக்க எந்த வேலை செய்தாலும், “எண்ணெய் வாடை போகவே மாட்டேங்குது” என்று சொல்லி அவளைத் திட்டி தீர்த்தார் மரகதம்.

மற்றொரு பக்கம், ‘ஐயோ இவளிடம் வாயைக் கொடுத்தால் கண்டிப்பா நமக்குதான் ஆபத்து’ என்ற பாஸ்கர் அவளைவிட்டு பத்தடி நகர்ந்தே நின்றார். அவளின் எண்ணங்கள் கடைசியில் தன் கணவனிடம் வந்து நின்றது. அன்று காலையில் நடந்த சண்டை சட்டென்று அவளின் நினைவிற்கு வந்தது.

இந்தரும் – விஷ்வாவும் தொடங்க இருக்கும் புதிய கம்பெனி பற்றிய முக்கியமான ஃபைல் ஒன்றைக் காணவில்லை என்றதும், “நீதானே வீட்டில் இருக்கிற ஒழுங்க எடுத்து வைக்கத் தெரியாதா?” என்று அவளிடம் எரிந்து விழுந்தான்

“நான் அதை பார்க்கல” என்று அவள் சாதாரணமாக சொல்லவே, “அப்படி மேடம்க்கு வீட்டில் என்ன வெட்டி முறிக்கிற வேலை இருக்கு?” என்று அவளிடம் சரிக்குசரி சண்டைக்கு நின்றான்.

அவளுக்கும் கோபம் வந்துவிடவே, “ஆமா வீட்டில் சும்மா உட்கார்ந்து டீவி பார்க்கிறேன்னு நினைச்சிட்டு இருக்கிறாயா ஜித்து. வீட்டில் சமையல் வேலையை முடிச்சிட்டு துணி துவைக்கணும். அது முடிஞ்சபிறகு வீடெல்லாம் கிளின் பண்ணனும். ஒவ்வொரு வேலையும் செய்யும்போது கவனமா செய்யணும் இல்லன்னா அது இரண்டு மடங்காக சேர்த்து என்னை வேலை வாங்கிடும்” என்றபோது விஷ்வா இருவரின் சண்டையையும் வேடிக்கைப் பார்த்தபடி டைனிங் டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

“வீட்டில் பொண்ணுங்க எல்லாம் புருஷன் சம்பாரிச்சிட்டு வந்து போடுவதை சும்மா உட்கார்ந்து சாப்பிடுறாங்க என்ற எண்ணத்தில் இருக்காதே. நாங்க சாப்பிடு மூணு நேர சாப்பாட்டுக்கு காலை 5 மணியில் இருந்து நைட் 12 மணிவரை வேலை பார்க்கிறோம். இதற்கு பதிலாக படிச்ச படிப்பிற்கு வெளிவேலைக்கு போனால் நல்ல சம்பளம் வரும் ” என்று அவள் பெரிய சொற்பொழிவையே சொல்லி முடித்துவிட்டு கோபத்தில் மூச்சிரைக்க நின்றிருந்தாள்.

அவள் சொல்லி முடிக்கும் வரை அமைதியாக இருந்த இந்தர்ஜித், “அப்போ வேலைக்கு ஆள் வெச்சிடலாம்” என்று தீர்வை கண்டுபிடித்துவிட்ட சந்தோஷத்தில் அவன் சொல்லவே, “எதுக்கு உங்க அம்மா மாதிரி என்னை நிரந்தர நோயாளியாக மாற்றவா?” எரிச்சலோடு மீண்டும் தொடங்கினாள்.

“ஏண்டி வேலை செய்யாமல் சும்மா இருப்பதில் உனக்கு அப்படியென்ன கஷ்டம்?  இப்படி சொன்னா அதுக்கு ஒரு  காரணம் சொல்ற.. சரின்னு தீர்வு சொன்னால் அதுக்கும் சண்டைக்கு வந்து நிற்கிற.. ஆமா உனக்கு என்னதான் பிரச்சனை?” என்று கோபத்துடன் கத்தினான் இந்தர்.

அவனுக்கு விம் போட்டு விளக்கினால் புரியுமோ என்ற நிலையில், “ஏய் சும்மா உட்கார்ந்து யோசிச்சிட்டே இருக்கிறதால் தான் உங்க அம்மா பார்வையே சந்தேகக் கண்ணோட்டமாக மாறிபோச்சு. சும்மா இருக்கும் மனம் சாத்தானின் உலைக்களம். தேவையில்லாத விஷயத்தை யோசிச்சு தான் கெடுவது பத்தாதுன்னு கூட இருக்கிறவங்க நிம்மதியையும் கெடுக்க சொல்றீயா?” என்று அவளும் கடுப்புடன் கேட்டாள்.

இருவரின் வாக்குவாதத்தையும் உன்னிப்பாக கவனித்த விஷ்வாவிற்கு, ‘இந்த கருமத்துக்கு தான் திருமணமே வேண்டான்னு இருக்கேன். எனக்கு இப்படியொரு பொண்ணு எதிர்த்து பேசினால் அடுத்த நிமிஷம் வர கோபத்துக்கு அடிச்சு பல்லை உடைச்சிடுவேன். எதுக்கு இந்த வீண் பிரச்சனை..’ என்ற எண்ணத்துடன் சாப்பிட்டு எழுந்தவன் கை கழுவிவிட்டு அந்த ஃபைல் எங்கே இருக்கிறதென்று தேடினான்.

அதுவரை கணவனோடு சண்டைப் போட்டுக் கொண்டிருந்த சங்கமித்ரா, “விஷ்வா உன் ரூமில் தான் ஃபைல் இருக்கும். முந்தாநாள் நீதானே மிட் நைட் வரை உட்கார்ந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துட்டு இருந்தாய்” அவள் ஞாபகபடுத்தவே அவனும் பதில் பேசாமல் வேகமாக மாடியேறிச் சென்றான்.

அவனின் அறையில் தான் அந்த ஃபைல் இருக்கவே, “மானு இங்கேதான் இருக்கு” என்று அவன் அறையிலிருந்து குரல் கொடுத்தபடி கீழிறங்கி வந்தான்.

“சாரி மித்து கோபத்தில் பேசிட்டேன்” என்று இந்தர்ஜித் காதை பிடித்துகொண்டு தொப்புகாரணம் போடவே சிரிப்புடன், “பத்து மட்டும் போடு. நான் உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று அங்கிருந்து நகர்ந்தாள் மித்ரா.

மழையடித்து ஓய்ந்தது போல அமைதியாகிவிட்ட வீட்டைப் பார்த்த விஷ்வா, “அண்ணா என்னடா இந்நேரம் வரை மானுகிட்ட சண்டைபோட்ட. இப்போ என்னடான்னா தொப்புகாரணம் போட்டுட்டு இருக்கிற. உன்னை புரிஞ்சிக்கவே முடியல..” சலிப்புடன் சோபாவில் அமர்ந்தான்.

அவனின் அருகே அமர்ந்த இந்தர், “கோபம் வந்தால் சண்டை போட்டுவிடணும்டா. மனசுக்குள் வச்சிட்டு யோசிச்சு சந்தேகப்பட்டு இதெல்லாம் எனக்கு சரிவராது” என்றவன் சமையலறையை ஒரு பார்வை பார்த்துவிட்டு தம்பியின் அருகே குனிந்து,

“அவளைக் கோபபடுத்திப் பார்க்க அவ்வளவு சந்தோசமாக இருக்குடா. முகம் சிவந்து பெரிய வசனம் மூச்சுவிடாமல் பேசிட்டு முறைக்கும் போது சோ க்யூட்” என்று தம்பியைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டினான்.

அவன் சொல்லி முடிக்கும்போது, “இந்தர் சாப்பிட வா” என்றழைத்த மித்ராவின் முகத்தில் மருந்துக்கு கூட கோபமில்லை. அவன் சாப்பிடும் போது அருகே இருந்து பாசத்துடன் பரிமாறினாள். சற்றுமுன் அவனிடம் சரிக்கு சரி சண்டைக்கு நின்றவளா? என்ற சந்தேகமே வந்துவிட்டது விஷ்வாவிற்கு.

இந்தர் சாப்பிட்டு எழுந்ததும் இருவரும் சேர்ந்து, “மித்து நான் கிளம்பறேன்டா” என்றனர்.

“இன்றைய நாள் நல்ல நாளாகவே அமையட்டும்” என்று கண்சிமிட்டி சிரித்த முகத்துடன் அவர்களை வழியனுப்பி வைத்தாள். அடுத்தடுத்து வேலைகளில் அவள் தன்னை மூழ்கடித்து கொள்ள நேரம் சென்று மறைந்தே தெரியவில்லை.

அந்த சிந்தனையில் இருந்து விடுபட்ட மித்ரா, “மணி ஒன்பது ஆகுது. இன்னும் என்ன வேலையோ?” அவள் சலிப்புடன் வாய்விட்டுப் புலம்பிட, காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.

அவள் போய் கதவைத் திறக்க சோர்வுடன் வீட்டிற்குள் நுழைவதைக் கண்டு, “இரண்டு பேரும் போய் ரெப்ரெஷ் ஆகிட்டு சீக்கிரம் வாங்க” என்று அனுப்பிவிட்டு வேகமாக சமையலை முடிக்கும்போது இருவரும் அங்கு வந்தனர்.

“இதெல்லாம் கொண்டுபோய் டைனிங் டேபிளில் வைங்க” என்றதும் இருவரும் மறுப்பு சொல்லாமல் எடுத்து வைக்க, மூவரும் சேர்ந்து சாப்பிட்டு எழுந்தார்.

“மித்ரா நீ போய் தூங்கு எங்களுக்கு கொஞ்சம் வேலையிருக்கு” என்று இந்தர் சொல்லவே அவள் சரியென்று தலையாட்டிவிட்டு அறைக்குச் சென்றாள்.  காலையில் இருந்து வேலை செய்ததால் உடல் ரொம்பவே களைத்துப்போய் இருந்ததால் படுத்ததும் உறங்கிவிட்டாள்.

இரவு வெகுநேரம் வரை இந்தரும், விஷ்வாவும் ஆபீஸ் வேலைகளை கண்முழித்து பார்த்துக் கொண்டிருந்தனர். புதிய நிறுவனத்தின் வேலைகள் ஒருப்பக்கமும், இந்தரின் ஆபீஸ் வேலைகள் ஒருப்பக்கம் என்று ஏகப்பட்ட வேலைகள்.

இரவு தூங்காமல் இருவரும் வேலை செய்து கொண்டிருக்கவே விஷ்வாவிற்கு தலைவலி வின் வின் என்றது. யாராவது தனக்கு காஃபி போட்டு கொடுத்தால் குடிக்கலாமே என்று உள்ளம் ஒருப்பக்கம் ஏங்கியது.

இந்தருக்கு கண்ணெல்லாம் எரிந்தபோது சோபாவில் சாய்ந்து விழி மூடினான். அவனுக்கோ, ‘காலையில் இருந்து வேலை செய்துட்டு இப்போதான் தூங்கிட்டு இருக்கிற.. அவளை எழுப்பி காஃபி போட சொல்லணுமா?’ என்ற சிந்தனையில் இருந்தான்.

காஃபியின் கமகம வாசனையில் ஆண்கள் இருவரும் கண்விழித்து பார்க்க அரைகுறை தூக்கத்தை விரட்டும் விதமாக முகத்தைக் கழுவிவிட்டு, மொத்த முடியையும் லப்பர் பேண்டில் அடக்கிக்கொண்டு கையில் காஃபி டிரேவுடன் அங்கு வந்தாள் சங்கமித்ரா.

“நீ ஏன் மானு எழுந்து வந்த? எங்களுக்கு தேவை என்றால் நாங்க போட்டு குடிக்க மாட்டோமா?” விஷ்வா தன் தோழியைக் கடிந்து கொண்டான்.

“இருவரும் தூங்காமல் வேலை பார்த்துட்டு இருக்கீங்க.. அதுதான் காஃபி போட்டு தந்துட்டு போலாம்னு எழுந்து வந்தேன். இந்தாங்க இருவரும் குடிச்சிட்டு கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுங்க” என்றாள்.

இரவு நேர குளிருக்கும், வேலை செய்த களைப்பிற்கும் காபி தேவாமிர்ந்தம் போல இருக்கவே, “தேங்க்ஸ்” என்று  இருவரும் எடுத்து குடிக்க தொடங்கினர்.

“என்ன கம்பெனி ஸ்டார்ட் பண்ண போறீங்க?” என்று அவள் கேட்கவே, “சாப்ட்வேர் கம்பெனி தொடங்க தான் அனைத்து வேலையும் செய்துட்டு இருக்கோம் மானு” என்றான் விஷ்வா.

“வாவ் சூப்பர்.. அப்போ அனைத்து வேலையும் முடிஞ்சிதா?” என்றபடி அங்கிருந்த கம்பெனி கட்டிட வடிவமைப்பு, கம்பெனி விவரங்களை அனைத்தையும் எடுத்து பார்வையிட்ட  மித்ராவின் புருவங்கள் சிந்தனையோடு சுருங்கியது.

அவள் உடனே எழுந்துசென்று லேப்டாப் மற்றும் செல்லுடன் வந்து அமர்ந்தவள் வேகமாக எதையோ சர்ச் செய்து விவரங்களை தேடி எடுத்தாள். சற்று நேரத்தில் நண்பர்கள் சிலருக்கு அழைத்து விவரம் சேகரித்து முடித்து நிமிரும்போது, “மித்ரா ஏதாவது பிரச்சனையா?” என்றனர்.

அவளும் ஒப்புதலாக தலையசைத்து, “அந்த இடத்தில் பல வருடங்களுக்கு முன்னாடி ஆறு ஓடிட்டு இருந்த இடம். சென்னையில் புது நிறுவனம் தொடங்க நீங்க செய்த ஏற்பாடுகள் எல்லாம் சரிதான். மழை பெய்து வெள்ளம் வந்தால் நம்ம கட்டும் கம்பெனியின் இரண்டு தளங்கள் நீரில் முழுவதும் மூழ்கிவிடும். அதுமட்டும் இல்லாமல் நீங்க வாங்க இருக்கும் இடத்தின் மீது கோர்ட்டில் கேஸ் இருக்கு. அரசாங்கத்தின் பக்கம் முடிவு வந்தால் நஷ்டம் நமக்குதான்” அவள் இடத்தைப் பற்றி விவரங்களை அனைத்தையும் சொல்லவே இருவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

அவள் அதற்கு காட்டிய ஆதாரங்கள் அனைத்தையும் பார்த்த இந்தர்ஜித், “மித்து நீ எப்படி இவ்வளவு விவரங்கள் சேகரிச்சு வச்சிருக்கிற?” என்று கேட்டான்.

“நம்ம ஒரு முடிவெடுக்கும் முன்னாடி பலரிடம் விசாரிப்பதில் தவறு இல்லை. நீங்க இங்கே இலங்கையில் இருப்பதால் உங்களுக்கு அங்கே என்ன நடக்குதுன்னு தெரியுமா? அந்த இடத்தை சுற்றி என்னவென்று விசாரித்தாலும் இடத்தை விற்க இருக்கும் பார்ட்டிகள் உண்மையைச் சொல்ல விடாமல் செய்வாங்க” என்று அவள் சொல்லவே அது சரியென்று தோன்றியது.

“தேங்க்ஸ் டா. நீ மட்டும் இதைக் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் நமக்குதான் நஷ்டம்” என்று சொல்லவே, “நான் சுரேஷிடம் விஷயத்தை சொல்லி இருக்கேன். அவன் விசாரித்து விவரம் சொன்னதும் நீங்க நேரில் கிளம்பிப் போக வேண்டிய நிலை வரலாம். அதனால் இதை கேன்சல் பண்ணிடுங்க” என்றவள் சொல்லவே அவர்களும் சரியென்று தலையசைத்தனர்.   

மற்ற வேலைகளை அவர்கள் கவனிக்க தன் அறைக்கு சென்றவள் போர்வையைத் தலையோடு போட்டுக்கொண்டு பூனைக்குட்டி போல வந்து நின்றவளைப் பார்த்து விஷ்வாவிற்கு சிரிப்பு வந்தது.

“மானு என்ன இது?” என்றவள் நின்ற கோலத்தை கண்டு கிண்டலடிக்க, “எனக்கு தூக்கம் வருது விஷ்வா. அதுதான் இந்தர்ஜித் மடியில் பார்த்து தூங்கலாம்னு போர்வையுடன் வந்தேன்” என்ற மித்ரா இந்தர்ஜித் அருகே அமர்ந்தாள்.

அதன் விளிம்பின் அருகே அமர்ந்த இந்தர், “நீ தூங்கு மித்து” மனைவியிடம் கூறியவன் வேலையைத் தொடரவே அவனின் மடியில் படுத்து நித்திரையில் ஆழ்ந்தாள் சங்கமித்ரா.

சற்றுமுன் தனக்கு ஐடியா கொடுத்தவள் இப்போது குழந்தைபோல தூங்குவதை கண்ட இந்தர், “இங்கே உட்கார்ந்துட்டு என்ன விவரமெல்லாம் சொல்ற சரியான அறிவுடி உனக்கு..” செல்லம் கொஞ்சியவன் அவளின் தலையை வருடிவிட்டு நெற்றியில் இதழ்பதித்து நிமிர்ந்தான்.

விஷ்வா அண்ணனின் பாசத்தை கண்கூட உணர்ந்து, “நீ தூங்கலையா அண்ணா..” என்றான்.

“நான் இப்படியே சோபாவில் உட்கார்ந்துட்டே தூங்க போறேன்” என்றவன் ஃபைலை ஒதுக்கி வைத்துவிட்டு சோபாவில் சாய்ந்தபடி தூங்கவே விஷ்வா மாடிக்குச் சென்று போர்வை எடுத்துகொண்டு கீழே வந்தான். அவன் ஹாலில் பாயை விரித்து படுப்பதை கவனித்தான் இந்தர்ஜித்.

“ஏன்டா ரூமில் தூங்காமல் இது என்னடா புதுபழக்கம்” என்றான்.

“இல்ல அண்ணா நீயும், மானுவும் இங்கேதானே தூங்குறீங்க. அதுதான் நானும் இங்கேயே படுக்கப் போகிறேன்” என்றவன் சொல்லவே அவனும் சரியென்று தலையசைத்துவிட்டு விழிமூடி நித்திரையில் ஆழ்ந்தான்.

கணவனின் மடியில் குழந்தை போல தூங்கும் தன் தோழியின் மீது பார்வை பதித்தபடி அமைதியாக இருந்தான். இந்தரின் கரங்கள் அவள் கீழே விழுந்து விடுவாளோ என்ற எச்சரிக்கை உணர்வுடன் வளைத்து பிடித்து இருந்தான்.

ஒரு பெண்ணிற்குள் ஆயிரம் பரிமாணங்கள் இருப்பதை ஆண்கள் யாரும் புரிந்து கொள்வதில்லை. அதே மாதிரிதான் ஒரு ஆணுக்குள் இருக்கும் நல்ல உள்ளத்தை யாரும் அறிவதில்லை. சின்ன வயதில் இருந்தே தந்தையோடு வளர்ந்தப்பெண்ணுக்கு தந்தைதான் முதல் ஹீரோ. அதற்கு அடுத்து அவள் வாழ்க்கையில் நுழையும் கணவன்தான் அவளுக்கு அனைத்து உறவுகளாகவும் மாறிப் போகிறான் என்பதை இன்று புரிந்து கொண்டான்.

விஷ்வாவின் பார்வை தமையனின் பக்கம் திரும்பியது. எந்த நேரமும் ஒருவிதமான இறுக்கத்துடன் இருக்கும் அவனின் முகம் இன்று தெளிந்திருந்தது. அந்த மலர்ச்சிக்கு காரணம் மித்ராதான் என்பதை அவன் ஒத்துகொள்ளத்தான் வேண்டும்.  வெகுநேரம் யோசனையோடு அமர்ந்திருந்தவன் எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை. மறுநாள் வினோத் வந்துதான் அவர்களைத் துயில் எழுப்பினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!