Maane – 22

images (49)-9ffa56d7

Maane – 22

அத்தியாயம் – 23

மறுநாள் காலைப்பொழுது விடிந்து வெகுநேரம் சென்றபிறகும் மூவரும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர். திடீரென்று காலிங்பெல் அடிக்கும் சத்தம்கேட்டு கண்விழித்த விஷ்வா கடிகாரத்தைப் பார்த்தவுடன், “இவ்வளவு நேரம் தூங்கிட்டோமே” என்ற சிந்தனையுடன் எழுந்து சென்று கதவைத் திறந்தான்.

அங்கே வினோத் நின்றிருக்க, “வா அண்ணா” என்றவனை ஏறயிரங்க பார்த்தவன், “இப்போதான் எழுதிருக்கிறீயா?” அவன் கேட்கவே ஒப்புதலாக தலையசைத்துவிட்டு வழிவிட்டு விலகி நின்றான்.

வீட்டிற்குள் நுழைந்தவன், “மதியம் ஆகப்போகிறதே… இன்னும் ஆபீற்கு வரவில்லையே என்னவோ ஏதோவென்று பதறியடித்து ஓடிவந்தால் நீ என்னடா இப்போதான் எழுந்திருக்கிறேன்னு சொல்ற” என்றவனின் பார்வை சோபாவில் உறங்கி இருவரின் மீதும் படித்தது.

ஏற்கனவே மித்ராவை தாய் – தந்தை தவறாக பேசுவது அவனுக்கு நன்றாகவே தெரியும். இந்த நிலையில், “இவங்களுக்கு இன்னும் தூக்கம் கலையலையா? இவ என்ன சின்னகுழந்தை மாதிரி உங்க அண்ணா மடியில் படுத்துத் தூங்கிட்டு இருக்கிறா?” சுர்ரென்று வந்த கோபத்தில் இருவரையும் எழுப்பினான்.

விஷ்வா தன் படுக்கையை எடுக்கவே, “நீயும் நைட் இங்கேதான் தூங்கினாயா?” என்று கேட்க அவனும் ஒப்புதலாக தலையசைத்தான்.

‘இவளை என்னதான் பண்றது’ என்ற சிந்தனையோடு, “மித்ரா” என்று எழுப்பினான்..

அவனின் குரல்கேட்டு தூக்கம் கலைந்து கண்விழித்த இந்தர், “வாடா..” என்று வரவேற்றான்.

தன் நண்பனை முறைத்தவன் “இது என்னடா ரூமில் போய் படுக்காமல் நீங்க இருவரும் சோபாவில் படுத்து இருக்கீங்க. புருஷன் – பொண்டாட்டி என்றாலும் ஒரு வரைமுறை வேண்டாமா?” என்று கோபத்தில் எரிந்து விழுந்தான்.

அவன் பேசும் வரை பொறுமையாக கேட்டவன், “உனக்கு என்னடா பிரச்சனை?” என்றான் இந்தர் சாதாரணமாக.

“விஷ்வா முன்னாடி..” என்று அவன் தொடங்கும்போது, “அவன் முன்னாடி நாங்க ஒன்றும் தப்பாக நடந்துக்கல வினோத் அண்ணா. நைட் இருவரும் வேலை செய்துட்டு இருந்தாங்க. நான் காஃபி போட்டுக் கொடுத்துவிட்டு அப்படியே இவர் மடியில் படுத்து தூங்கிட்டேன்” என்றவள் கண்களை மூடிக்கொண்டு பதில் கொடுத்தாள்.

சட்டென்று நண்பனை முறைத்த வினோத், “அவ தூங்கினால் நீ தூக்கிட்டுப் போய் ரூமில் படுக்க வைக்க வேண்டியதுதானே? ஏற்கனவே உங்க அம்மாவும், அப்பாவும் இவள்மீது சுமத்தும் குற்றசாட்டு பத்தாதுன்னு இது வேறையா?” என்று எரிந்து விழுந்தான்.

மித்ராவிற்கு கோபம் வரவே, “நான் என் புருஷனை கூட்டிட்டுப் போய் ரூமில் படுத்திருந்திருந்தால் தான் தவறாக நினைக்கத் தோன்றும். விஷ்வா என் நண்பன். அத்தோடு மட்டுமில்லாமல் அவன் என் கொழுந்தனார். அண்ணி என்பது இன்னொரு அம்மா ஸ்தானம். வேலை முடிஞ்சா களைப்பில் இங்கேயே தூங்கிட்டோம்” என்றபோது, ‘இன்னைக்கு வினோத் அண்ணா வசமாக மாட்டினான்’ என்ற எண்ணத்தில் அந்த இடத்தைவிட்டு காலி செய்ய நினைத்தான் விஷ்வா.

அதற்குள், “சரியோ தவறோ அது நம்ம பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் இருக்கு. ஜித்து எனக்கு புருஷன் என்றாலும் அவனிடம் நான் என் அம்மாவையும், அவங்களோட கண்டிப்பும், அரவணைப்பையும் தான் உணர்ந்து இருக்கேன். விஷ்வாவிடம் நண்பன் என்பதைத் தாண்டி நிறைய முறை என் அப்பாவின் சாயலைக் கண்டு இருக்கேன். உறவுகளும் அழைப்பு முறையும்தான் வேறு” என்றவள் நிமிர்ந்து வினோத்தை பார்த்தாள்.

“ஆனா கட்டப்படும் பாசம் கறந்த பாலைவிட தூய்மையாக இருக்கறதே! அவங்கதான் பாலுக்கும், கல்லுக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசறாங்க என்றால் நீங்களுமா அண்ணா” என்று அவள் கேட்டபோது செல்லமாக அவள் தலையைப் பிடித்து ஆட்டிவிட்டு சிரித்தான் வினோத்.

அவள் கொடுத்த விளக்கம் மற்ற இரண்டு ஆண்களின் மனதையும் நெகிழ வைத்தது. அன்பிற்கு இலக்கணம் அவள் கொடுத்தபோது, ‘இவளை வாழ்க்கையில் கொண்டு வருவதற்காகதான் கடவுள் எங்களை அந்த அளவிற்கு சொதித்தானா?’ என்ற எண்ணம் உருவாவதை அவர்களால் தடுக்க முடியவில்லை.

“மித்ரா உன்னிடம் ஒரு உண்மையைச் சொல்லட்டுமா?” என்று வினோத் கேட்க அவளோ புரியாமல் அவனைப் பார்த்தாள்.

“ஒரு காலத்தில் நானே சொல்லி இருக்கேன். உன் ஒருத்தியால் இவங்க இருவரும் எதிரும், புதிருமாக நிற்ப்பாங்கன்னு.. ஆனால் அன்னைக்கு நீ என்னை அர்த்தம் புரியாமல் அடிக்க வந்தாய்.. இன்னைக்கு உன்னை நினைக்கும்போது எவ்வளவு பெருமையாக இருக்கு தெரியுமா?” என்றதும் மற்ற மூவரின் முகத்திலும் மகிழ்ச்சி சுடர்விட தொடங்கியது.

“காதல் வேற, நட்பு வேறன்னு நீ புரிஞ்சி வைத்திருக்கும் விதம், உன் அப்பா மனசு கோணாமல் நீ அன்னைக்கு அந்த பிரச்சனைக்கு முற்றிபுள்ளி வைத்தது. இவங்க அப்பா, அம்மா பேசிய அனைத்து உண்மையும் தெரிஞ்சபிறகும் இந்தரைக் கல்யாணம் பண்ணிகிட்டு இன்னைக்கு வரைக்கும் நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லன்னு நிரூபிக்கும் உன் தைரியம் எல்லாமே ரொம்ப பிடிச்சிருக்கு” என்றவன் சொல்லவே மற்ற இருவருக்கும் தூக்கிவாரிப் போட்டது.

எந்த உண்மையை தெரியாது என்று நினைத்தார்களோ அது தெரிந்துதான் தன்னை திருமணம் செய்திருக்கிறாள் என்ற விஷயம் புரிய இருவரின் பார்வையும் அவளின் மீது படிந்தது.

இந்தர் அவளைக் காதலோடு நோக்கிட,  “அதுவும் நீ இவங்க மீது காட்டும்  பாசத்தில் எள்ளளவும் விஷமில்லை என்று உணரும்போது மனசுக்கு நிறைவாக இருக்கு” என்றவன் சொல்லவே ஓரவிழியால் கணவனை ஏறிட்டாள்.

தன் தோழியை இமைக்க மறந்து பார்த்த விஷ்வா ‘அண்ணனோட நம்பிக்கையை அப்படியே காப்பாற்றும் மித்ராவைப் பார்க்கும்போது எனக்கும் இந்த வாழ்க்கையை வாழணும் ஆசையா இருக்கு. இப்படியொரு புரிதல் தான் உண்மையான காதல். நானும் இந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கணும். ஆனால் அந்த சின்ன சண்டைகள் எதுக்காக?’ மீண்டும் குழப்பத்தில் வந்து நின்றான்.

“என் தங்கச்சி என்னை வினோத் என்று கூப்பிட்ட சண்டைக்குப் போவேன். ஆனால் நீ கூப்பிடும்போது உன்னை என் உடன்பிறவாச் சகோதரியாக பார்க்கிறேன்” அவன் சொல்லும்போது அதில் உண்மையான அன்பை உணர்ந்து புன்னகைத்தாள்.

இந்தருக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. அவளின் மீது தந்தை வைத்த குற்றசாட்டு தவறு என்று அவன் முழுமனதாக நம்பியதால் தான் அவரை எதிர்த்து அவளின் கரம் பற்றினான். இன்றுவரை அதற்காக அவன் மனம் வருந்தியது கிடையாது. அந்த அளவிற்கு அவள் நடந்துக் கொண்டதும் கிடையாது. 

இன்று அவனின் மனதில் அவளின் மீதான காதல் பன்மடங்காகப் பெருகியது. தன்னுடைய நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக கல்யாணதிற்கு முன்னரே உண்மை தெரிந்தும் பொறுமையாக அதை எடுத்து சொல்லி தந்தைக்கு புரிய வைத்து தன்னைக் கரம்பிடித்த மித்ராவின் காதல் முன்னே அந்த காதல் கணவன் தோற்றுப் போனான். அந்த அன்பிற்கு அவனின் மனம் அடிமையானது..   

“என்னைப்பற்றி நான் யாருக்கும் நிருப்பிக்க வேண்டிய நிர்பந்தமில்ல அண்ணா. சங்கமித்ராகிட்ட தவறான எண்ணமில்ல என்ற விஷயத்தை அவங்களுக்கே புரியணும். என் ஜித்துவிற்கு என்மீது நம்பிக்கை இருக்கு என்ற உண்மை தெரிஞ்சபிறகு நான் ஏன் பின்வாங்கணும். அவன் காதல் முன்னாடி நான்தான் தோற்றுப் போயிட்டேன்” என்று சொல்லி கணவனின் தோள் சாய்ந்தாள் மனைவி.

ஆணும், பெண்ணும் ஒருவரிடம் மற்றொருவர் தோற்று நிற்கும் வேளையில் காதல் அழகாக மலரும். அதுபோலத்தான் இவர்களின் வாழ்க்கையிலும் நடந்தது. இதோ இன்று இந்தநொடி யாரின் காதல் பெரியது என்று அவர்களுக்கே புரியவில்லை.

விஷ்வா எதுவும் பேசாமல் மாடியேறிச் செல்லவே, “வினோத் அண்ணா காஃபி போட்டு தரீங்களா?” என்று கொஞ்சலாகக் கேட்டாள் மித்ரா.

அவள் இதுவரை தன்னிடம் எதுவும் கேட்டதில்லை என்ற காரணத்தினால், “அவ்வளவுதானே இரு நான் போய் போட்டு எடுத்துட்டு வரேன்” என்றவன் எழுந்து செல்லவே இந்தரின் பார்வை அவளின் மீது படிந்தது.

சட்டென்று அவளை இழுத்து அவசரமாக கன்னத்தில் இதழ் பதித்தவன் அவளின் கலைந்த கூந்தலை காதோரம் ஒதிக்கிவிட்டு, “உன்னோடு இப்படி வாழ வேண்டும் என்றுதான் சாவின் விளிம்பிற்கு போய் மீண்டு வந்தேன்” என்று அவன் சொல்லும்போது சங்கமித்ரா விழியை உயர்த்தி அவனை நேருக்கு நேர் பார்த்தாள்.

அவனின் கண்களில் தன் பார்வை கலக்கவிட்டு, “நீ தற்கொலைக்கு முயற்சி பண்ணியது தவறு. அவங்க எப்படி இருந்தா உனக்கு என்ன? நீ உன் விருப்பபடி வாழ பழகு. அவங்களையும் தாண்டி இந்த உலகில் உனக்கு நிறைய உறவுகள் இருகிறது. இன்னைக்கு உன் வாழ்க்கையில் கஷ்டம் மட்டுமே இருக்கு என்பதற்காக கவலைபடாதே. சீக்கிரமே இந்த நிலையெல்லாம் மாறும்” தலையைச் சரித்து குறுஞ்சிரிப்புடன் கூறினாள்.

அதுவரை அவள் பேசுவதை பொறுமையாகக் கேட்டவன், “மித்து எனக்கு பிளட் கொடுக்க வந்த பொண்ணு நீதானா?” நம்பமுடியாமல் கேட்கவே அவள் தலையசைத்து ஒப்புக்கொண்டாள்.

இத்தனை நாளாக மனதில் இருந்த கேள்விக்கு விடை கிடைத்தது போல இருக்கவே, “மித்து உன்னை அன்னைக்கே உணர்ந்தேன். நீமட்டும் மறுநாள் என்னைத் தேடி வந்திருந்தால், இந்நேரம் நமக்கு கல்யாணம் ஆகி குழந்தையே பிறந்திருக்கும்” என்றவன் அவளின் நெற்றியில் பாசத்துடன் இதழ் பதித்து நிமிர்ந்தான்.

அதற்குள் விஷ்வா தயாராகி கீழிறங்கி வரவும், வினோத் கையில் காஃபியுடன் ஹாலுக்கு வரவும் சரியாக இருந்தது.

“என்னடா இவ்வளவு சந்தோசமாக இருக்கிற?” என்று வினோத் கேட்டான்.

“வினோத் அன்னைக்கு மருத்துவமனைக்கு பிளட் கொடுக்க வந்த பொண்ணு சங்கமித்ரான்னு சொன்னேன் நீதான் நம்பல” என்றவன் தொடங்கவே,

“இந்தர் அன்னைக்கு இவளை அடையாளம் தெரியலடா. உன் திருமணத்திற்கு முதல்நாள் எனக்கு உண்மை தெரிஞ்சிடுச்சு. பாவம் உன்னை முதலிரவில் பந்தாட போறான்னு நினைச்சேன். பட் எதுவுமே நடக்கல” என்று அவன் நக்கலாக கூறினான்.

விஷ்வா புரியாமல் மூவரையும் பார்த்தபடி, “ஹாஸ்பிட்டலா” என்று இழுத்தான்.

“ஆமா விஷ்வா உன் அண்ணன் தற்கொலைக்கு முயற்சி பண்ணிய கதை உனக்கு தெரியாதா?” என்று கிண்டலோடு ஆரம்பித்து நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்கவே அவன் தமையனை கோபத்துடன் ஏறிட்டான்.

அவன் திட்டுவதற்கு முன்னே,  “பரவல்ல என் மீது இருப்பது காதல் என்று புரிந்ததால் கோழைத்தனத்தை விட்டுட்டு அப்பாவையே எதிர்த்து கல்யாணம் பண்ணிதால் சாரை அடிக்காமல் பொழச்சு போன்னு விட்டேன். இல்லன்னா வினோத் அண்ணா சொன்ன மாதிரி நடந்திருக்கும்” என்றவள் வேண்டுமென்றே கணவனை வம்பிற்கு இழுத்தாள்.

“இதுக்குன்னு தற்கொலை செய்வது நல்ல முடிவுன்னு சொல்றீயா அண்ணா?” என்று கோபத்துடன் கேட்டவனை நிதானமாக ஏறிட்டான் இந்தர்.

“அன்னைக்கு என்ன நடந்ததுன்னு தெரியாமல் தற்கொலைக்கு முயற்சி பண்ணேன்னு தவறா நினைக்காதீங்க” என்றபோது வினோத், விஷ்வா சங்கமித்ரா மூவரும் அவனைக் கேள்வியாக நோக்கினர்.

ஓரளவு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, “நம்ம அப்பா பேசிய வார்த்தைகளில் காயப்பட்டு நான் சாகப்போறேன்னு இவனிடம் சொல்லிட்டு கிளம்பியது உண்மைதான். அங்கிருந்து கிளம்பிய கொஞ்சநேரத்தில் நான் என் முடிவை மாற்றிக்கொண்டேன்” என்று சொல்லவே அவர்களின் முகத்தில் தெளிவு பிறந்தது.

“ஒரு பொண்ணு சாக வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்திருப்பா போல சரியாக நான் நிதானத்திற்கு வரும் சமயத்தில் அவள் ரோட்டைக் கிராஸ் செய்ய இரண்டு நிமிடத்தில் அவள் மீது மோதியிருப்பேன். அதற்குள் சுதாரித்த நான் ஒன்வே என்று கவனிக்காமல் வண்டியைத் திருப்பினேன். எதிர்பார்க்காத விதமாக அந்த ரோட்டில் எந்த வாகனமும் வரல என்றாலும் மரத்தில் கார் மோதிடுச்சு” என்றவன் நிமிர்ந்து மூவரையும் பார்த்தான்.

சட்டென்று நிமிர்ந்த மித்ரா, “அந்த பொண்ணு உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையே..?” என்று கேட்டாள்.

“அவளுக்கு எதுவும் ஆகல. தன் குழந்தை ஆப்ரேஷன் பணத்தை தவறவிட்ட அதிர்ச்சியில் அப்படி நடந்து வந்திருக்கிற என்ற விஷயம் அதுக்குப்பிறகு தான் எனக்கு தெரிஞ்சிது. என்னிடம் இருந்த பணத்தைக் கொடுத்து குழந்தையைக் காப்பாற்றிவிட்டோம்” என்று சொல்ல மற்ற மூவருக்குமே அவனை நினைத்து பெருமையாக இருந்தது.

அவன் பணத்தை கொடுத்து கட்ட சொன்னபோது புரியாத விஷயம் இப்போது புரியவே, “கொஞ்சம் மிஸ் ஆகிருந்தால் உன் உயிரே போயிருக்கும். அது தெரிந்தும் நீ அவங்களோட குடும்பத்திற்கு உதவி செய்ததை நினைக்கவே மனசுக்கு நிறைவாக இருக்குடா. நான்கூட நீ தற்கொலைக்கு முயற்சி பண்ணியதாக நினைச்சிட்டேன்” என்று சொல்ல விஷ்வாவிற்கு நிம்மதியாக இருந்தது.

“நானும் ஒரு நிமிஷத்தில் அண்ணா இப்படியான்னு பயந்துட்டேன். ஆனால் இல்லன்னு புரிஞ்சிடுச்சு” என்று விஷ்வா புன்னகைக்க மித்ரா இந்தரின் தோளில் சாய்ந்தாள். சந்தோசமோ துக்கமோ இப்போதெல்லாம் அவனிடம் மட்டுமே பகிரும் அவளின் மெல்லிய காதலை உணர்ந்த விஷ்வாவிற்கு ஏனோ சம்யுக்தாவைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழுந்தது.

அடுத்தடுத்து நாட்கள் ரெக்கைகட்டி கொண்டு பறக்கவே அவர்களின் நிறுவனம் தொடங்க சென்னையில் நல்ல இடம் கிடைத்ததாக சுரேஷ் சொல்லவே நேரில் வந்து பார்த்து முடிவெடுப்பதாக கூறினான் இந்தர்ஜித்.

“மித்து அடுத்த வாரம் நாங்க சென்னை போகிறோம்” என்று சொன்னவுடன் ஒருப்பக்கம் மித்ராவிற்கு அவன் வளர்ச்சி கண்டு சந்தோசமாக இருந்தபோதும் அவனை அனுப்பிவைக்க மனமில்லாமல் மெளனமாக இருந்தாள்.

இந்தர் கிளம்புவதற்கான ஏற்பாடுகளை கவனிக்க அவளோ குட்டிப்போட்ட பூனை போல அவனின் பின்னோடு சுற்றி வர தொடங்கினாள். ஒவ்வொரு வேலை செய்யும்போதும் இந்தரின் நினைவுகளில் அவளின் கவனம் சிதற தொடங்கியது.

அனைத்து துணிகளையும் துவைக்கிறேன் என்று எடுத்து சென்றவள் அவற்றை துவைக்காமல் அயன் செய்து மடித்து வைப்பத்தை கவனித்த விஷ்வா, “மித்ரா உனக்கு என்னாச்சு?” என்றான் சிரிப்புடன்.

அதன்பிறகே தன் தவறை உணர்ந்து நாக்கை கடித்துக்கொண்டு, “இந்தர் ஊருக்குப் போறேன்னு சொன்னதில் இருந்து இப்படித்தான் இருக்கேன். எந்த வேலையும் ஒழுங்க செய்ய முடியல” என்று கூறியவளை பார்க்கவே பாவமாக இருந்தது.

“அப்புறம் எப்படி எட்டு வருடங்களுக்கு மேல் அண்ணணைப் பார்க்காமல் இருந்தே” என்றவன் கிராஸ் கேள்வி கேட்கவே அவளின் உதட்டில் புன்னகை அரும்பியது.

அவன் புருவம் உயர்த்தி அவளை கேள்வியாக நோக்கிட, “எனக்கும் அதுதான் புரியல விஷ்வா. நமக்கு பிடிச்சவங்களை பிரிவது எவ்வளவு கஷ்டமாக இருக்குமென்று இப்போதுதான் புரிகிறது..” என்று சொல்லிவிட்டு தன் கவனத்தை வேலையில் திருப்பிவிட்டாள்.

ஒரு வாரம் மின்னல் வேகத்தில் சென்று மறைய அவர்கள் சென்னை கிளம்ப வேண்டிய நாளும் வந்தது. இந்தரோ காலையில் இருந்து அவளை சீண்டிவிட்டு சிரித்துக்கொண்டே இருக்க அவனுக்கு சரிக்கு சரி சண்டையிட்ட இருவரையும் பார்த்தான் விஷ்வா.

மூவரும் கிளம்பிச்செல்லவே அவள் வழக்கம்போல புன்னகையோடு வழியனுப்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தவளின் கண்களில் கண்ணீர் அருவியாக பெருகியது. எவ்வளவு நேரம் அப்படியே அழுதபடி இருந்தாளோ தெரியவில்லை.

திடீரென்று, “மித்ரா” என்ற அழைப்பில் சட்டென்று நிமிர்ந்து பார்க்க  அவளின் எதிரே புன்னகையுடன் நின்றிருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!