Maane – 23

download (32)-2b06e174

Maane – 23

அத்தியாயம் – 23

‘மித்ரா’ குரல் வந்த திசையை நோக்கி சட்டென்று நிமிர்ந்து பார்க்க, கதவின் மீது சாய்ந்து நின்று அவளைப் பார்த்து கண்சிமிட்டி சிரிப்பது போன்ற பிரம்மை உருவாகவே, “ஜித்து” கண்ணைக் கசக்கிக்கொண்டு பார்க்க அங்கே யாருமில்லை.

அவனைப் பற்றிய நினைவில் இருப்பதால் இப்படியெல்லாம் தோன்றுகிறது என்ற உண்மை உணர்ந்தவளின் மனம் பாரமானது. சின்ன சண்டைகளுக்காக கோர்ட், கேஸ் என்று போகும் இந்த காலத்தில் கணவனின் பிரிவை தன்னால் தாங்க முடியவில்லையே என்று நினைத்தாள்.

அந்த வீட்டிற்குள் இருந்தால் கண்டிப்பாக அவனின் நினைவுகளில் பித்து பிடித்துவிடுமோ என்று பயந்தவள் எழுந்து முகத்தைக் கழுவி உடையை மாற்றிக்கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு அப்பாவின் வீட்டிற்கு கிளம்பிவிட்டாள். இரண்டு தெரு தள்ளி இருக்கும் கஸ்தூரி பாட்டியின் வீட்டில் தான் இப்போது அவர் இருக்கிறார்.

“அப்பா”என்ற அழைப்புடன் வீட்டிற்குள் நுழையவே, “வாம்மா.. என்ன மாப்பிள்ளை ஊருக்கு கிளம்பிவிட்டாரா?” அவளை எதிர்கொண்டார் ரகுவரன்.

தந்தையிடம் தன் மன வருத்தத்தைக் காட்டக் கூடாதென்று, “ஆமாப்பா. போகவே மாட்டேன்னு விடபிடிக்காக இருந்தவரை அனுப்பி வைப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிடுச்சு. சரியான பிடிவாதம்” என்று கணவனைப் பற்றி பேசியவளை அழைத்துச் சென்று டைனிங் ஹாலில் அமர வைத்தார்.

“அப்பா நான் சாப்பிட்டுவிட்டேன்” அவள் மறுக்கவே,

“மாப்பிள்ளை நீ சாப்படாமல் இருப்பேன்னு என்னிடம் சொன்னாரு. அதனால் முதலில் சாப்பிடு. வருத்தப்பட தெம்பு வேண்டும் மகளே” என்று அவளை வேண்டுமென்றே கேலி செய்தார்.

“அப்பா” என்று சிணுங்கிய மகளைக் கண்டு அவருக்கு சிரிப்புதான் வந்தது. அதன்பிறகு இருவரும் சேர்ந்து கேரம் விளையாடவும், பின்னோடு இருக்கும் தோட்டத்தை சரி செய்ய என்று நேரம் கடந்தது.

அதே நேரத்தில் ப்ளைட்டில் அமர்ந்திருந்த இந்தரின் மனம் முழுவதும் அவளின் வசமே இருந்தது. இத்தனை நாட்களாக போக வேண்டாமென்று ஒரு வார்த்தை சொல்லாமல் தன் வருத்தத்தை மனதினுள் மறைத்துக்கொண்டு, “சீக்கிரம் வந்துடுங்க” என்று வழியனுப்பி வைத்தவளின் மனதை புரிந்து கொண்டான்.

சின்ன பிரிவுகள் அதிக நெருக்கத்தை கொடுக்கும் என்று யாரோ சொன்னபோது புரியாத விஷயம் இப்போது தெள்ள தெளிவாக புரியவே தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

திடீரென்று எதையோ நினைத்து சிரிக்கும் தமையனை நோக்கிய விஷ்வா, “என்னாச்சு அண்ணா” என்றான்.

“இத்தனை நாளாக இவளைவிட்டு எப்படி இருந்தேன்னு எனக்கே தெரியல. ஒரு வாரம் பிரியணும்னு நினைக்கும்போது நேரமே நகர மாட்டேங்குது. இதே முடிவை நான் கல்யாணத்திற்கு முன்னாடி எடுத்ததை நினைத்தால் சிரிப்புதான் வருது. சின்ன குழந்தையின் கையில் கொடுத்த பொம்மை மாதிரி என்னை மாற்றி வைத்திருக்கிறாள்” அவன் சொல்லவே விஷ்வாவின் மனதில் அந்த சந்தேகம் தோன்றியது.

“எந்த நேரமும் அவளுடன் சரிக்கு சரி சண்டை போடுற. இப்போ ஒருவாரம் பிரிவிற்கு இப்படி சொல்ற?” சலிப்புடன் ஒலித்தது விஷ்வாவின் குரல்.

சட்டடென்று திரும்பி தம்பியைப் பார்த்தவன், “சண்டை போட்டுக்கொண்டே இருப்பது மட்டும் வாழ்க்கை இல்லடா. அது பார்ட் ஆப் லைப். மழையில் கலந்த கண்ணீர் துளியை தேடி கண்டுபிடிக்க முடியுமா?” எனவும் சிந்தனை படர்ந்த முகத்துடன் மறுப்பாக தலையசைத்தான் விஷ்வா.

அவனுக்கு புரிய வைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு, “அவளிடம் சண்டைபோட்டு சமாதானம் செய்யும்போது நெருக்கம் அதிகமாகும். அவளின் எதிர்பார்ப்பு, என்னை எந்தளவு புரிஞ்சி வைத்திருக்கிறான்னு தெரிந்து கொள்ள சண்டை ஒரு சாக்கு. சண்டை முடிந்ததும் கண்ணீரோடு சேர்த்து அவள் சிரிக்கும்போது மனசுக்குள் ஒரு நிறைவு வருமே அதை வடிக்க வார்த்தையே இல்லடா.” என்று விழிமூடி அனுபவித்து கூறினான்.

விஷ்வா வியப்புடன் தமையனை நோக்கிட, “சின்ன சண்டைக்குள், அன்பு, பாசம், காதல், எதிர்பார்ப்பு, தேடல் என்று எத்தனையோ விஷயம் இருக்கு” என்றவன் விழி திறந்து அவனைப் பார்த்தான்.

“நம்ம அப்பா, அம்மா மாதிரி ஈகோவை மனதில் வைத்துகொண்டு நீயா.. நானான்னு.. சண்டை போட்டு பிரிஞ்சிருக்கக்கூடாது. வாழ்க்கையில் யாராவது ஒருத்தர் விட்டுகொடுக்கணும். நீ சொல்வ இல்ல அவளை வம்பிழுக்கும் போது மனசுக்கு ரிலாக்ஸாக இருக்குன்னு அதைதான் நான் இப்போ பண்றேன். அவளுக்காக நிறைய விட்டுகொடுக்கிறேன், அவளும் அதையே திரும்ப செய்யற..” என்றவன் சொல்லும்போது விஷ்வாவிற்கு புரிய தொடங்கியது.

இத்தனை நாளாக தாயைத் திட்டுவதற்காக வளர்த்தி வைத்திருந்த கோபம் தன் இயல்பையே மாற்றி இருப்பதை புரிந்து கொண்டான். எந்த நேரமும் துருதுருவென்று பேசி சிரிக்கும் இயல்பு தொலைந்து போய் வார்த்தைகளுக்கு பஞ்சமானத்தை உணர்ந்தான். யாரிடமும் இயல்பாக பேசி சிரிக்க முடியாமல் தனக்குதானேபோட்டுக்கொண்ட போய் முகமூடி காதலை உணர தடையாக இருக்கிறது என்ற கருத்தை ஏற்றுக் கொண்டான்.

அதே நேரத்தில் இந்தர் யாரிடமும் அதிகம் பேச மாட்டான். ஆனால் இப்போது மித்ராவுடன் சரிக்கு சரி சண்டை போடுகிறான். எந்த நேரமும் கலகலப்புடன் பேசி சிரிக்கிறான். அவனின் இயல்பே முற்றிலுமாக மாறிப் போனதால் தான் முகத்தில் இறுக்கம் இல்லாமல் எந்தவொரு வேலையையும் சீக்கிரம் செய்யும் நிலைக்கு வந்திருக்கிறான். இவையெல்லாம் மித்ரா வந்தபிறகு நடந்த மாற்றங்கள். நெகட்டிவ்வாக யோசிக்காமல் பட்டென்று விஷயத்தை பாசிட்டிவாக திங் பண்ண தொடங்கிவிட்டான்.

அப்போ தன் இயல்பு எங்கே தொலைந்து போனது என்று தேட துவங்கியவனிடம், “புரிதல் இல்லாத காதலால் நம்ம அப்பா, அம்மா பிரிஞ்சி இருக்காங்க. அதே புரிதல் எனக்கு இருப்பதால் நான் மித்ராவுடன் சந்தோசமாக இருக்கேன்” என்றவன் புன்னகைக்கவே வினோத் தன் நண்பனை இமைக்க மறந்து பார்த்தான்.

அவளே வந்து காதலை சொல்லியபோது நானும் எங்க அப்பா மாதிரி மாறிவிடுவேனோ என்ற பயத்தில் அவளின் காதலை மறுத்தவனா இவன் என்ற சந்தேகம் அவனின் மனதில் தோன்றி மறந்தது.

ஒவ்வொரு நிமிடமும் அவளின் நினைவுகளில் தன்னை தொலைத்தபடி வந்த இந்தரின் மாற்றம் விஷ்வாவிற்கு தெளிவாக புரிந்தது.

இரு மனங்கள் இணையும்(க்கும்) விஷயம்தான் திருமணம். அதில் இதயங்கள் இடமாறினால் மட்டும்தான் வாழ்க்கை என்ற பாதை அழகான சோலையாக மாறும். அது நடக்காத பட்சத்தில் காதல் கானல் நீராக மாறுவிடும்.

விஷ்வா தீவிரமாக யோசிப்பதைக் கவனித்த இந்தர் மனதிற்குள் புன்னகைத்தபடி மௌனமாகிவிட்டான். சென்னையில் வந்து இறங்கிய மூவரையும் அழைத்துச் செல்ல வந்திருந்தான் சுரேஷ்.

“நீங்க வரும் விஷயத்தை இப்போதான் மித்ரா போன் பண்ணி சொன்னாள். அதுதான் உடனே கிளம்பி வந்தேன்” என்றவன் மூவரையும் அழைத்துக்கொண்டு அவர்கள் தங்கப்போகும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான்.

“இன்னைக்கு நீங்க ரெஸ்ட் எடுத்துகோங்க. நாளைக்கு நம்ம போய் இடத்தைப் பார்க்கலாம்” என்று சுரேஷ் விடைபெறவே மூவரும் களைப்பு தீர குளித்துவிட்டு அறைக்குள் அமர்ந்து இரவு உணவை முடித்தனர்.

விஷ்வா சிந்தனையோடு படுக்கையில் தலையை சாய்த்து விழி மூட, ‘இவ்வளவு தூரம் வந்துட்டு என்னைப் பார்க்காமல் கிளம்பி போன மகனே கொன்னுடுவேன் ஜாக்கிரதை’ என்று மிரட்டிய சம்யுக்தாவின் பிம்பம் கண்டு அவனுக்கு சிரிப்புதான் வந்தது.

‘நான் வந்திருக்கும் விசயத்தை உனக்கு யாருடி சொன்னாங்க’ என்று அவன் கேட்க, ‘நாங்க அதுக்கெல்லாம் ஆள் செட் பண்ணிருக்கோம். சோ நீ ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது. ஐ ஆம் வாட்சிங் யூ’ என்று கமல் ஸார் போலவே கூறினாள் சம்யுக்தா.

தன் வேலைகளை முடித்துவிட்டு தூங்குவதற்கு படுக்கைக்கு வந்த வினோத் அப்போதுதான் விஷ்வா சிரித்தபடி யாரிடமோ அரை தூக்கத்தில் உளறுவதைக் கண்டு “உங்க அண்ணன் உன்னையும் சேர்த்து கெடுத்துட்டானா?” என்று தலையில் அடித்துக் கொண்டான்.

“இவனோடு தூங்கினால் நைட் என் கற்பு பறிபோனாலும் ஆச்சரியப்பட ஒண்ணுமில்ல” என்றவன் வாய்விட்டுப் புலம்புவதைக் கேட்டபடி அறைக்குள் நுழைந்தான் இந்தர்.

“என்னடா தனியா நின்று பேசிட்டிருக்கிற” என்று கேட்டவனிடம்,

“எனக்கு வேற ரூம் புக் பண்ணுடா. இவனோடு நான் தூங்க மாட்டேன்” என பிடிவாதமாக நின்ற வினோத்தை விநோதமாக பார்த்தான் இந்தர்.

“ஏன்” அவன் புரியாமல் கேட்கவே விஷ்வாவைக் கைகாட்டினான்.

விஷ்வா ஆழ்ந்த உறக்கத்தில் சிரித்துக் கொண்டிருப்பதை கவனித்தவன், ‘சுத்தம்!’ என்று நினைத்தபடி, “விடுடா சின்னப்பையன் இப்போதான் யோசிக்க ஆரம்பிச்சிருக்கான். சீக்கிரம் சரியாகிவிடுவான்” என்று சமாதானம் சொன்னான்.

“இவனுக்கும் காதல் பேய் அடிச்சிடுச்சு. இனி எந்த கோவிலுக்கு கூட்டிட்டு போனாலும் சரியாகாது. இவனோடு படுத்தால் என் கற்புக்கு பங்கம் வந்துடும் மச்சான். அதனால் சொன்னால் கேளு. எனக்கு வேற ரூம் வேணும்” அவன் சொல்லவே இந்தர் சிரிப்புடன் அவனின் முதுகில் ஒரு அடி போட்டான்.

“ஏன்டா என் உயிரை வாங்கற. நீ இவனோட தங்கு உன் கற்புக்கு நான் கேரண்டி” சிரிப்புடன் கூறியவன் தம்பியை பார்த்துவிட்டு போனை எடுத்துகொண்டு பால்கனிக்கு சென்றான்.

அவனைத் தொடர்ந்து விஷ்வாவை நோக்கியவன், “நீயும் கல்யாணம் செய்து சந்தோசமாக இருக்கணும்டா” என்றவன் படுக்கையில் படுத்து உறங்கிவிட இந்தர் மித்ராவிற்கு அழைத்தான்.

இரவு உணவை முடித்துக்கொண்டு படுக்கை அறைக்கு வந்தவளின் செல்போன் சிணுங்கியது.

அவள் முதல் ரிங்கில் எடுத்துவிட, “மித்து பேபி என்ன பண்ணிட்டு இருக்கீங்க” என்று கேட்டபடி பால்கனியில் அமர்ந்தான் இந்தர்.

“இப்போதான் ஜித்து சாப்பிட்டுவிட்டு அறைக்கு வந்தேன். நீ என்ன செஞ்சிட்டு இருக்கிற? பயணம் எல்லாம் எப்படி இருந்தது.. சுரேஷ் வந்து பிக்கப்  பண்ணினானா?” என்று கேள்விகளை அடுக்கினாள்.

அவளின் குரலில் இருந்த மாற்றம் புரியவே, “எல்லாமே நல்லாத்தான் போச்சு” என்றவன் சிறிதுநேரம் மெளனமாக இருந்தான். அதற்குள் மித்ரா ஆயிரம் முறை அவனின் பெயரைச்சொல்லி அழைத்திருப்பாள்.

அவனிடம் பதில் இல்லாமல் போக, “ஜித்து என்னாச்சுடா.. நான் ஏதாவது தவறு பண்ணிடேனா? ஏன் பேசாமல் மெளனமாக இருக்கிற..” விசும்பலோடு கேட்டாள்.

மித்ராவின் அழுகை சத்தம்கேட்டு, “மித்து ஐ லவ் யூடா. என்னை எதுக்கு சென்னை அனுப்பி வைச்சியோ அந்த வேலை செய்ய மனசே வரலடி. இப்போவே உன்னைப் பார்க்க சப்ரைஸா வந்து நிற்கணும்னு தோணுது. என்னை ஆச்சர்யத்துடன் பார்க்கும்போது உன் விழி இமைகள் திறந்து விரியுமே அதை பார்க்கணும் போல இருக்கு. இப்போவே கிளம்பி வரவா..” என்று ஏக்கத்துடன் ஒலித்தது அவனின் குரல்.  

 திடீரென்று காதலை சொன்னவன் ஏக்கத்தை வார்த்தைகளில் வடிக்க, “இல்ல நீ வேலையை முடிச்சிட்டு வா. இன்னொரு முறை உன்னை அனுப்பி வச்சிட்டு இங்கே உட்கார்ந்து அழுக என்னால் முடியாது” என்றவள் அவசரமாக கூறினாள்.

அவளின் பதிலில் இந்தரின் முகம் மலரவே, “சீக்கிரம் வந்தால் மேடம் என்ன தருவீங்க?” என்று சமரசமாக வினாவியவனின் குரலில் தாபம் வழிந்தோடியது.

இந்தரின் குரலில் அவனின் மனம் புரியவே, “இப்போ என்னிடம் எதுவும் இல்ல. நாளைக்கு கடைக்குப் போய் ஏதாவது கிப்ட் வாங்கிட்டு வந்து வைக்கிறேன்” என்றவள் குறும்பாக சிரித்தாள்.

“புருஷனுக்கு தருவதை கடையிலா வாங்குவாங்க. நீ இன்னும் சின்ன பிள்ளையாகவே இருக்கிறீயே.. உனக்கு பாடம் எடுத்து அது உனக்கு புரிவதற்குள் நான் கிழவன் ஆகிடுவேன்” என்றவன் கிண்டலாக கூறவே அவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

மித்ரா சிரிப்பதைக் கண்டு, “என்னோட அவஸ்தை உனக்கு அவ்வளவு சந்தோசமாக இருக்குதா? இரு நான் இலங்கை வந்தபிறகு உன்னை கவனிச்சுக்கிறேன்” என்றவனுக்கு திடீரென்று இரண்டு விஷயங்கள் ஞாபகம் வந்தது.

“மித்ரா நம்ம வீட்டில் நீ வைத்திருக்கும் பிரம்மகமலம் பூ பூத்துவிட்டதா?” என்று கேட்டான்.

“இன்னும் பூக்கவே இல்லடா. இரவில் மட்டுமே பூத்து வாடும் பூ என்று சொன்னாங்க. ‘இரவின் இளவரசி’ என்று ஸ்பெசல் நேம் எல்லாம் தெரிஞ்சு இலையைப் பறிச்சிட்டு வந்து நட்டு வைத்தேன். ஆனால் ஒரு வருஷம் ஆகப்போகுது இன்னும் பூக்கவே இல்ல” என்றாள் ஏக்கத்துடன்.

அவளின் கவனம் முழுவதும் பூவின் பக்கம் திரும்பிவிடவே, ‘அந்த பூக்கும் முன் நான் இலங்கை திரும்பிவிட வேண்டும்’ என்ற எண்ணம் அவனின் மனதில் ஓடி மறைந்தது.

“விஷ்வாவிடம் ஏதாவது மாற்றம் தெரிகிறதா இந்தர்” என்று அவள் பேச்சை திசை திருப்பினாள்.

“ம்ஹும் நானே சொல்லனும்னு தான் போன் பண்ணேன். அவன் முகத்தில் இப்போதான் காதல் கலையே வந்து இருக்கு. யாரையோ மனதார விரும்பறான். ஆனால் எனக்கு அது யாருன்னு தெரியல. சென்னை வந்து இறங்கியதில் இருந்து அவனோட மாற்றத்தை பார்த்து வினோத் கூட புலம்ப ஆரம்பிச்சிட்டான்” அன்று நடந்த அனைத்தையும் மனைவியிடம் சுவாரசியமாக கூறினான்.

கணவன் சொல்வதைக் கவனமாக கேட்டவள், ‘ஓ கதை இப்படி போகுதா? எப்படியோ சம்முவிடம் உண்மையைச் சொன்னால் சரிதான்’ என்று நினைத்தவள், “உன் வேலையை முடிஞ்சபிறகு விஷ்வா சென்னையில் இரண்டுநாள் தங்கறேன்னு சொன்னால் என்ன ஏதுன்னு கேட்காமல் சரின்னு சொல்லிரு ஜித்து” என்றாள்.

இருவரும் தூக்கத்தை மறந்து பேசிக்கொண்டு இருக்க, “மித்ரா இங்கே கொஞ்சம் சீக்கிரம் வாம்மா..” என்ற ரகுவரனின் குரல் பதட்டத்துடன் ஒலித்தது.

“ஜித்து லைனில் இருடா. அப்பா கூப்பிடுறார்” என்று சொன்னவள் வேகமாக அவரின் அறையை நோக்கி சென்றாள். அங்கே ரகுவரன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருப்பதை கண்டு, “அப்பா என்னாச்சுப்பா” என்று அவரின் அருகே சென்றாள்.

“என்னன்னு தெரியலம்மா திடீர்ன்னு நெஞ்சு வலிக்குது” என்றவர் சொல்லி முடிக்கவே அதை போன் மூலமாக கேட்டுக் கொண்டிருந்த இந்தருக்கும் தூக்கிவாரிப் போட்டது.

உடனே கடிகாரத்தை பார்த்தவன், ‘இந்த நேரத்தில் அவருக்கு இப்படியாகிவிட்டதே.. மித்ராவிற்கு ஹெல்ப் பண்ண யாருமே இல்ல.. நம்ம அங்கே இருந்திருக்கலாமோ..’ என்ற எண்ணம் ஓடவே அவள் சிலையாகி நிற்கிறாள் என்று யூகித்தான்.

“மித்ரா நீ முதலில் மாமாவை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போ” என்று அவளை துரிதபடுத்திவிட்டு போனை கட் பண்ணிவிட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!