Maane – 25

images (48)-e42f8613

Maane – 25

அத்தியாயம் – 25

மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது. ரகுவரனுக்கு ஆப்ரேஷன் முடிந்து மயக்கத்தில் இருக்கவே வினோத் தந்தை மித்ராவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். இந்தர் இரவுவோடு இரவாக பயணித்து இலங்கை வந்து சேர்ந்தான்.

இரவு முழுவதும் தூங்காமல் இருந்த களைப்பில் மரகதம் அமர்ந்தபடி உறங்கிபோகவே, “அத்தை” என்று அவரை எழுப்பி, “நீங்க வீட்டுக்கு கிளம்புங்க அத்தை. ஜித்து நைட் கிளம்பி வருவதாக சொன்னாரு. இனி நான் அனைத்தையும் பார்த்துக்கறேன்” என்றாள்.

அவருக்கும் மருமகள் சொல்வதே சரியென்று தோன்றவே, “சரிடா கொஞ்சம் கவனமாக இருந்து அப்பாவைக் கவனிச்சுக்கோ” என்றவர் கிளம்பவே அவரின் அருகே வந்து கையைப் பிடித்தாள் மித்ரா.

அவர் கேள்வியாக அவளை ஏறிடவே, “நைட் வந்து கூப்பிட்டதும் சிரமம் பார்க்காமல் கிளம்பி வந்ததுக்கு தேங்க்ஸ் அத்தை. நான் ஏதாவது உங்க மனசு கஷ்டப்படும் படியாக நடந்திருந்தால் என்னை மன்னிச்சுகோங்க” என்றாள் புன்னகையுடன்.

அவளின் இந்த பெருந்தன்மை தன்னிடம் இல்லையே என்ற நினைவு ஒருப்பக்கம் வரவே, “இதெல்லாம் ஒரு விஷயம்னு சாரி கேட்கிற. உயிருக்கு ஆபத்து என்று சொன்னபிறகு எப்படியோ போன்னு விட முடியுமா?” என்றவர் சாமதானம் சொல்லிவிட்டு மருமகளின் கன்னத்தை பாசத்துடன் வருடினார்.

“உன்னிடம் இருக்கும் அந்த குழந்தைதனத்தை தொலைத்துவிடாதே. அப்புறம் வாழ்க்கையே நரகம் ஆகிடும். அடிக்கடி சுவர் ஏறிக் குதிக்கக் கூடாது சரியா?” என்று கேட்கவே அவளும் சரியென வேகமாக தலையசைத்தாள்.

அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களில் இந்தரிடம் இருந்து போன் வரவே, “ஹலோ ஜித்து வந்துட்டியா?” என்றாள் வேகமாக.

“ஆமாண்டா வீட்டுக்குப் போயிட்டு உனக்கு சாப்பிட ஏதாவது செய்து எடுத்துட்டு வரேன். அதுவரை நீ மாமா பக்கத்தில் இரு” என்று கூறியவன் வீட்டின் முன்னே காரை நிறுத்திவிட்டு பேசுவதை பாஸ்கர் கவனித்தார்.

நடுஜாமத்தில் வீட்டிற்கு வந்து பணம் எடுத்துகொண்டு வீட்டைப் பூட்டுவதைப் பார்த்தவரின் கண்களுக்கு அவளின் மீது சந்தேகம் வந்தது. ரகுவரனுக்கு உடல்நிலை சரியில்லாத விஷயம் அவருக்கு தெரியாது என்பதால் மகனை எச்சரிக்கும் நோக்கத்துடன் இந்தரை நோக்கி நடந்தார்.

அவன் மித்ராவிடம் பேசிவிட்டு போனை வைக்க, “இந்தர் உன்னிடம் பேசணும்” என்றவரை கேள்வியாக நோக்கியபடி காரிலிருந்து இறங்கினார்.

“என்ன விஷயம்?” என்றவன் வேண்டாவெறுப்பாக கேட்கவே, “மித்ராவை ரொம்ப நல்லவன்னு நம்பாதேன்னு உன்னிடம் எத்தனை முறை சொன்னேன். நேற்று நடுராத்திரி வந்து பணத்தை எடுத்துட்டு போவதைப் பார்த்தேன். நீ இருக்கும் வரை நல்லவ மாதிரி நடிக்கிற. நீ போய் வீட்டில் பாரு பணம் இருக்காது” என்றவர் பேச பேச இந்தரின் கோபம் எல்லைக் கடந்தது.

அவரைக் கைநீட்டி தடுத்தவன், “என் பொண்டாட்டியைப் பற்றி பேச நீங்க யாரு?” என்று கோபத்தில் முகம் சிவக்க ருத்திரமூர்த்தியாக நின்றிருந்தான்.

மகனிடம் இப்படியொரு கேள்வி எதிர்பார்க்காதவர், “நான் சொல்வதை நம்பாமல் போ. இன்னும் நீ அடிபடணும். அப்போதான் திருந்துவ” என்று அவர் சொல்லவே கைநீட்டி தடுத்தவன்,

“அவங்க அப்பாவுக்கு நைட் நெஞ்சுவலி. அவதான் ஹாஸ்பிட்டல் கொண்டுபோய் சேர்த்தாள். அவகிட்ட நான் தொழில் தொடங்க கொடுத்த பணத்தை கட்டி ஆப்ரேஷன் முடிந்தது. பணத்தை கட்டிய பிறகுதான் அவ எனக்கு போன் செய்து சொன்னாள், நடந்த விஷயம் தெரியாமல் தேவையில்லாமல் பேசுவதை முதலில் நிறுத்துங்க” என்று அவன் கோபத்தில் வார்த்தைகளை கடித்து துப்பினான்.

அவன் சொன்னதை முழுவதுமாக கேட்டவர், “நல்ல விசாரிடா இந்தர். இல்லன்னா இன்னைக்கு மாதிரியே இன்னொருநாள் வேற எவனுக்காவது பணத்தை தூக்கி கொடுத்துட்டு பொய் சொன்னாலும் சொல்வா” என்று இளக்காரமாக கூறியவரை அடிக்க கையோங்கிவிட்டான்.

அவர் அதிர்ச்சியில் சிலையென உறைந்து நிற்கவே, ‘ச்சே’ என்று கையை இறக்கியவன், “உன்னை மாதிரி பொண்டாட்டியை நம்பாதவன் நான் இல்ல. எனக்கும், அவளுக்கும் திருமணம் நடந்த நாளில் இருந்து இன்னைக்கு வரை எந்தவிதமாக ஒளிவுமறைவும் இல்லாமல்தான் வாழ்த்துட்டு இருக்கோம். அப்படியே பணத்தை எடுத்து கொடுத்தாலும் அவ அப்பா உயிரைக் காப்பாற்றதானே கொடுத்தா. அதனால எனக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்ல. உண்மையைச் சொல்லனும்னா நான் அவருக்கு செய்வது மருமகன் என்ற என்னோட கடமையைத் தான்” என்று அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் அவருக்கு சாட்டையடியாக மாறியது.

தான் பெற்ற மகன் தனக்கே புத்தி சொல்லும் நிலைக்கு வளர்ந்துவிட்டதை நினைத்து பெருமைப்படுவதா? இல்லை அவன் முன்னால் சிறுமைப்பட்டு போய்விட்டோமே என்று வருத்தபடுவதா என்று அவருக்கே புரியவில்லை.

அவர் திகைப்புடன் அவனை இமைக்காமல் பார்க்க, “இன்னொரு முறை என் மனைவியைத் தரக்குறைவாக பேசுவதை பார்த்தேன். அப்பா என்றெல்லாம் பார்க்க மாட்டேன். அதை ஞாபகத்தில் வச்சுகோங்க” என்று மிரட்டிவிட்டு வீட்டிற்குள் சென்று மறைந்தான்.

அவன் சென்று  குளித்து உடை மாறிவிட்டு வேகமாக சமையலை முடித்து எடுத்துகொண்டு வேகமாக மருத்துவமனைக்கு செல்வதை தன் வீட்டில் நின்றபடி கவனித்த மரகதம், ‘வாழ தெரியாமல் வாழ்ந்துவிடோமோ’ என்ற எண்ணத்துடன் இருந்தார்.

அதே நேரத்தில் மகனின் பேச்சை அலாசி ஆராய்ந்தபடி வாசலில் அமர்ந்திருந்த பாஸ்கர், ‘அன்னைக்கு அவளை அடிக்காமல் சொல்ல வரும் விஷயத்தை காதுகொடுத்து கேட்டிருக்க வேண்டுமோ.. அதை செய்யாமல் அவளை சந்தேகப்பட்டு பேசிட்டேனோ..’ என்ற எண்ணம் அவரின் யோசனையைத் தூண்டியது.

இருவரின் நினைவுகளும் கடந்த காலத்தை நோக்கி பயணித்தது. பாஸ்கர் – மரகதம் இருவருமே காதல் திருமணம் செய்தவர்கள். ஆரம்பத்தில் பாஸ்கர் ரொம்பவே கஷ்டப்பட்டு வேலை செய்தார். முத்து முத்தாக இரண்டு பிள்ளைகள் பிறக்கவே பாஸ்கரின் பொறுப்பு அதிகரித்தது. நாட்கள் தெளிந்த நீரோடை போலவே சென்றது.

இந்தருக்கு ஏழு வயதும், விஷ்வாவிற்கு ஐந்து வயது நடந்து கொண்டிருந்தது. பாஸ்கர் தட்டுத் தடுமாறி புதிதாக ஒரு பிஸ்னஸ் தொடங்கும் முயற்சியில் இறங்கிருந்தார்.

அன்று இரவு களைப்புடன் வீடு திரும்பிய கணவனை புன்னகையோடு வரவேற்றாள் மரகதம்.

“எங்க இந்தர், விஷ்வா இருவரின் சத்தத்தையே காணோம்” என்றவர் கேட்டு முடிக்கும் முன்பே, “அப்பா” என்ற அழைப்புடன் ஓடி வந்த மகனைத் தூக்கி சுற்றிவிட்டு கீழே இறக்கிவிட்டார்.

“என் செல்லம் இன்னைக்கு என்னவெல்லாம் பண்ணினீங்க”என்றவர் அக்கறையோடு விசாரிக்க மரகதம் நடந்ததை கணவனிடம் விசாரித்தார்.

“அந்த கதையை ஏங்க கேட்கிறீங்க. இன்னைக்கு இந்தர் ஹோம் வோர்க் நோட்டில் எல்லாம் கிறுக்கி வைத்துவிட்டான். பாவம் பெரியவன் சொன்ன இவன் சங்கபடுவான்னு வாயே திருக்காமல் வீட்டுக்குப் பின்னாடி உட்கார்ந்து இருக்கான்” என்று சொல்லிவிட்டு சின்னவனை அழைத்துச் சென்றார்.

சின்னவன் அங்கிருந்து நகர்ந்ததும், “நீ சாப்பாடு எடுத்து வை மரகதம். நான் இந்தரை பார்த்துட்டு வரேன்” என்று பின்னோடு சென்றவர் மகனை தேடினார். அங்கிருந்த தூணின் மீது சாய்ந்து அமர்ந்தபடி படிப்பில் ஆழ்ந்திருந்த மகனைக் கண்டவுடன், “இந்தர்” என்ற அழைப்புடன் அவரின் அருகே சென்றார்.

“அப்பா” என்றவன் நிமிர்ந்து பார்க்க, “தம்பி உன் நோட்டில் கிறுக்கி வைத்துவிட்டதாக அம்மா சொன்னா.. உண்மையா?” என்று கேட்க அவன் பதில் பேசாமல் நோட்டை எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு எழுத தொடங்கிவிட்டான்.

மகனின் முகம் வாடி இருப்பதை கண்டவருக்கு மனம் தாளவில்லை. என்னதான் இருந்தாலும் முதல் மகவின் மீது பாசமில்லாமல் இருக்குமா?

“அவன் தெரியாமல் பண்ணிட்டான் இந்தர். அவன் உன் தம்பிதானே.. அதுக்காக இவ்வளவு கோபபட்டு பேசாமல் இருந்தா என்ன அர்த்தம்” என்று மகனை அணைத்துக்கொண்டு செல்லம் கொஞ்சினார்.

“தம்பி மீது கோபம் இல்லப்பா. ஆனால் நாளைக்கு ஹோம் வொர்க் எழுதாமல் போனால் மிஸ் திட்டுவாங்க” என்று பயத்துடன் கூறிய மகனைக் கண்டவுடன், “நம்ம போய் நோட் வாங்கிட்டு வரலாம்” என்று இந்தரை அழைத்துக்கொண்டு கிளம்பினார்.

“நானும் வருவேன்” என்று அடம்பிடித்த சின்ன மகனை தூக்கி முன்னாடி உட்கார வைத்தவர், “இந்தர் நீ பின்னாடி ஏறிக்கோ” என்றவர் கடைக்கு சென்று இருவருக்கும் பாகுபாடு பார்க்காமல் நோட் வாங்கிக் கொடுத்தார்.

சின்னவன் தனக்கு வேண்டாமென்று மறுக்கவே, “இங்கே பாரு விஷ்வா. அண்ணா நோட்டில் நீ கிறுக்கி வைத்தால் அவன் மீண்டும் எழுதணும். அவன் பாவமில்ல” என்று கேட்கவே, “ஆமா பாவம்” என்றான் விஷ்வா.

“அதுதான் அப்பா உனக்கு தனியாக நோட் வாங்கி கொடுத்து இருக்கேன். நீ இதில் எழுதிப் பழகு. அண்ணா உனக்கு நல்ல சொல்லி தருவான்” என்று சமாதானம் செய்து பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து வந்தார்.

இரவு உணவை முடித்தபிறகு பரிதாபமாக முகத்தை வைத்துகொண்டு எழுத அமர்ந்த இந்தரை பார்த்தும் பாவமாக இருக்கவே, “நீ எதை எழுதனும்னு சொல்லிட்டு தூக்குடா கண்ணா. அப்பா உனக்கு எழுதி தரேன்” என்றதும் அவன் முகம் மலர்ந்தது.

அவன் குஷியாக குறித்து வைத்துவிட்டு படுத்து உறங்கிவிட கணவனும், மனைவியும் பேசியபடி அவனின் நோட்டை எழுத தொடங்கினர். மரகதம் அந்த மாதம் சேமிப்பில் போட வேண்டிய பணத்தை கணவனிடம் கொடுத்து, “பேங்கில் போடுங்க” என்றாள்.

சரியென்று வாங்கி வைத்தவர் மற்றொரு பார்சலை எடுத்து மனைவியிடம் கொடுத்தார். அவர் அதைப் பிரித்துப் பார்க்க பணக்கட்டுகள் இருக்கவே கணவனை கேள்வியாக ஏறிட்டார்.

 “மரகதம் நான் தொழில் தொடங்க வட்டிக்கு வாங்கிய பணம் நீ பத்திரமாக வைச்சிரு. நான் ஒரு ஆபீஸ் விஷயமாக வெளியூர் போகிறேன். அந்த வேலை நல்லவிதமாக முடிந்துவிட்டு வந்தால் கண்டிப்பா தொழில் தொடங்கிவிடலாம்” என்றவன் நம்பிக்கையோடு சொல்லவே மனைவியாக கணவனின் மகிழ்ச்சி பங்கெடுத்து கொண்டாள்.

பாஸ்கர் மகனின் ஹோம் வொர்க் நோட்டை எழுத, “நீங்க சீக்கிரமே மேலே வந்துவிடுவீங்க பாருங்க. நம்ம பசங்க இருவரும் பெருசாகும்போது நம்ம இன்னும் நல்ல நிலையில் இருப்போம்” என்று கணவனின் தோள் சாய்ந்தபடி கனவு கண்டார்.

அவரின் தலையில் செல்லமாக முட்டிய பாஸ்கர், “இதில் உனக்கென்ன சந்தேகம் மரகதம்..” என்று சிரித்தார். மறுநாள் அவர் அலுவலக வேலையாக கிளம்பிச் செல்லவே மரகத்தின் தாயார் ஹாஸ்பிட்டலில் சீரியசாக இருக்கும் விஷயமறிந்து கையில் கணவன் கொடுத்து சென்ற பணத்தை எடுத்துகொண்டு தாயை சந்திக்க சென்றார் மரகதம்.

அங்கே தாயின் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்து கையில் இருக்கும் பணத்தை கட்டி ஆப்ரேஷன் செய்து காப்பாற்றினர். ஆனால் மரகதத்தை பார்த்தும், “எவனோடோ ஓடிப்போனவளின் காசிலா உயிர் பிழைத்தேன்” என்று கத்தி கூச்சலிடவே கவலையோடு வீடு திரும்பினாள் மரகதம்.

வெளியூர் சென்ற கணவன் வீடு திரும்பிவிடவே, “மரகதம் அந்த பணத்தைக் கொடு” என்று கேட்கவும், ‘ஏற்கனவே கடன் வாங்கிய பணத்தை தாயின் வைத்திய செலவுக்கு கொடுத்துட்டேன். இவரிடம் உண்மையைச் சொன்னால் என்னைத் திட்டுவாரே. தாயைப் பற்றி யோசித்து இவரின் கோபத்தை கண்டுக்காமல் விட்டுட்டேனே’ என்று நினைத்தபடி அசையாமல் நின்றிருந்தார் மரகதம்.

மனைவி பணத்தை எடுத்து வராமல் நிற்பதை கண்டு, “மரகதம்” என்றழைக்கவே, “என்னங்க பணத்தை காணோம். அன்னைக்கு நீங்க கொடுத்த பணத்தை பத்திரமாகத்தான் வைத்தேன். ஆனால் எப்படி காணாமல் போச்சு என்று தெரியல” என்று கணவனின் கோபத்தை மனதில் கொண்டு பொய் சொன்னார்.

அவரும் பதட்டத்துடன் சென்று தேடிப்பார்க்கவே காணாமல் போன பணத்தைவிட மனைவியின் தன்னிடம் பொய் சொல்ல மாட்டாள் என்று நம்பியவர், “விடும்மா ஏதோ பெருசாக வர வேண்டியது இத்தோடு போச்சு என்று நினைச்சுக்கலாம். நீ கவலைப்படாதே” என்று மரகதத்தை தேற்றினார்.

வருடங்கள் மின்னல் வேகத்தில் ஓடி மறந்தது. அதன்பிறகு அவர் அந்த பணத்தைப் பற்றி ஒருநாள்கூட மனைவியிடம் பேசவில்லை. இருவரின் வாழ்க்கையும் நன்றாக சென்ற நேரத்தில் மறுபடியும் தொழில் தொடங்க எண்ணி பணத்தைக் கடன் வாங்கினார்.

 அதை மனைவியிடம் கொடுத்து, “மரகதம் கொஞ்சம் பத்திரமாக வைம்மா. வட்டிக்கு கடன் வாங்கிய பணம். இதுவும் தொலைந்து போனால் அவ்வளவுதான்” என்றவர் எச்சரிக்கையோடு மனைவிக்கு ஞாபகப்படுத்தினார்.

மரகதமும் பணத்தை பத்திரமாக வைத்துவிடவே இம்முறை மீண்டும் தாயின் மூலமாக அவருக்கு சோதனை வரவே, “நான் ஓடிப்போனவள் தானே? என்னிடம் வந்து பணம் கேட்டால் நான் எங்கே போவது?” என்று கேட்டாள்.

“அப்படியெல்லாம் பேசாதே மரகதம் உன்னைவிட்டால் உங்க அம்மாவிற்கு வேற யார் இருக்காங்க” என்று தூரத்து சொந்தமான அத்தை பேசவே இம்முறை பணத்தை எடுத்து கொடுக்க ரொம்பவே யோசித்தார். ஆனால் தாயின் உயிர் முக்கியம் என்ற முடிவிற்கு வந்த மரகதம் பணத்தை ஹாஸ்பிட்டலில் கட்டி தாயைப் பிழைக்க வைத்தார்.

இந்தமுறை மகளின் உதவியைக் கண்டு அவரால் பேச முடியாமல் போகவே மரகத்தின் செயலை மன்னித்து ஏற்றுக் கொண்டார். பேரப்பிள்ளைகளை பற்றி கேள்விபட்டவர், “உன் புருஷனுக்கு தெரியாமல் ஒருநாள் பிள்ளைகளோடு வீட்டுக்கு வாம்மா” என்றார்.

மரகதமும் சரியென்று சொல்லிவிட்டு மீண்டும் வீடு வந்து சேர்ந்தார். அதே நேரத்தில் மரகத்துடன் வேலை செய்த பிரகாஷ் என்பவன் ஊர் முழுவதும் கடனை வாங்கிகொண்டு விடிவதற்குள் ஓடிவிட்ட விஷயம் பாஸ்கருக்கு தெரிந்தது.

அவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்தவர், “பாஸ்கர் உன் பொண்டாட்டியுடன் வேலை செய்பவன் ஊரு முழுக்க கடனை வாங்கிட்டு ஓடிட்டான். நீ எதுக்கும் உன் மனைவியிடம் நன்றாக விசாரிப்பா. போன வாரம்தான் என்னிடம் பணம் வாங்கிட்டு வந்தாய்” என்று சொல்லவே அவர் வீடு நோக்கி கிளம்பினார்.

வழக்கம்போலவே மனைவியிடம் பணத்தைக் கேட்கவே அவரும் அதே பதிலை சொல்லவே, “நீ உண்மையை இப்போ சொல்றீயா இல்லையா? நான் வட்டிக்கு வாங்கிய பணத்தை அந்த பிரகாஷிற்குதானே கொடுத்த?” என்று வாயைவிட்டார்.

“இல்லங்க நான் யாரிடமும் கொடுக்கல..” என்று மரகதம் உண்மையைச் சொல்ல மறுக்கவே அன்றிலிருந்து வீட்டில் சண்டை ஆரம்பமானது. தன் மனைவியின் மீது இருக்கும் நம்பிக்கை படிப்படியாக குறையவே இருவருக்கும் இடையே விரிசல் அதிகமானது.

ஆனால் மரகதம் உண்மையைச் சொல்லாமல் மறைத்து படிப்படியாக பொய் சொல்லவே ஒருநாள் வாக்குவாதம் பெரிதாகிவிடவே, “உன் கள்ளக்காதலனுக்கு பணத்தை தூக்கி கொடுத்ததும் இல்லாமல் அதை மறைக்கிறீயா?” என்று பேச அங்கே மரகத்தின் ஒழுக்கம் கேள்விக்குறியானது.

இதற்குமேல் மறைக்க முடியாதென்று, “என்னங்க நான் அப்படிப்பட்ட பெண் இல்லை. நான் சொல்ல வருவதை ஒரு நிமிடம் கேளுங்க” என்று மரகதம் சொல்லவே, “இதுக்குமேல் உன்னிடம் எதுவும் பேச முடியாது. இப்ப மட்டும் நீ உண்மையைப் பேச போகிறாயா? உன்னை நம்பிய பாஸ்கர் என்னைக்கோ இறந்துட்டான்” என்றவர் மீண்டும் பேசினார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிவிட கடைசியில் அவர் சொல்ல வருவதைக் கேட்காமல் கட்டை எடுத்து அடித்து மண்டைப் பிளந்துவிட்டார் பாஸ்கர். அதன்பிறகு இருவருமே இருவேறு பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டனர்.

கடந்த காலத்தின் பிடியிலிருந்து வெளியே வந்த இருவருக்கும் ஒருவரின் தவறு மற்றவருக்கு புரிந்தது. ஆத்திரத்தில் அறிவிழந்து செய்யாதே என்று பெரியவர்கள் சொன்னதை காலம் கடந்து உணர்ந்தார் பாஸ்கர். மரகதமும் தன் தவறை உணர்ந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!