Maane – 3

images (45)

Maane – 3

அத்தியாயம் – 3

அடுத்தடுத்து வந்த நாட்களில் சங்கமித்ரா தான் இந்தர்ஜித் மற்றும் விஷ்வாவின் உயிர் மூச்சாக மாறிப் போனாள். வீட்டின் பிரிவினை மறந்து மூவருமே பறவைகள் போல சுதந்திரமாக மலையகத்தைச் சுற்றி வர தொடங்கினர். நாட்கள் ரெக்கைக் கட்டிக்கொண்டு பறக்கவே தாய் – தந்தையின் மனக் கசப்பை இருவருமே மறந்தனர்.

அவர்கள் மூவருக்கும் வழமைப்போலவே பள்ளிக்கூடம் தொடங்கியது. மித்ரா உயர்நிலை கல்வி பயிலும், அதே நேரத்தில் அவளுக்கு பாதுகாப்பாக இடமாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தர்ஜித் மற்றும் விஷ்வா படிக்கும் அதே பள்ளியில் அவளை சேர்த்து விட்டார் கஸ்தூரி.

இந்த விஷயம் அறியாத இரண்டு பேரும் வழக்கம்போல பள்ளிக்குச் சென்றனர். இரண்டு ஹவர் முடிந்து பிரேக் டைமில் தன் நண்பனோடு கேண்டீன் செல்ல வெளியே வந்தவனின் முன்னே ஜங்கென்று போய் நின்று, “ஜித்து” என்றாள் புன்னகையுடன்.

அவள் திடீரென்று கண்முன்னே வந்து நிற்கவும், “ஏய் என்ன வாலு எங்க ஸ்கூலில் அதுவும் பிரேக் டைமில் வந்து ஷாக் கொடுக்கிற? ஒருவேளை ஸ்கூல் காம்பவுண்ட் சுவர் ஏறி குதிச்சிட்டியா?” என்று சிந்தனையோடு கேட்டான்.

“ஆமா ஸ்கூல் சுவர் ஏறிக் குதிப்பவளுக்கு தான் உங்க ஸ்கூல் யூனிபார்ம் கொடுப்பாங்களா?” அவள் நக்கலோடு கேட்கவே குழப்பத்துடன் அவளை நோக்கிய இந்தர்ஜித், “ஏய் நீ எங்க ஸ்கூலில் சேர்ந்துட்டியா?” அவன் யோசனையுடன் கேட்கவே அவளின் முகம் பளிச்சென்று மலர்ந்தது.

“ஐயோ என் ஜித்து கண்டுபிடிச்சிட்டியே” என்று வானத்திற்கும் பூமிக்கும் குதித்தவளை பார்த்து அவனின் மனமும் குத்தாட்டம் போட்டது. அதற்கான காரணம் என்னவென்று அவனுக்கே புரியவில்லை. ஆனால் அவள் தங்கள் பள்ளியில் படிக்க போகின்ற விசயமறிந்து அவனின் மனம் சந்தோசம் அடைந்தது.

“சரி இன்னிக்குதானே ஸ்கூல் வந்திருப்ப அதுக்குள் எப்படி என் கிளாஸ் ரூம் கண்டுபிடிச்ச?” என்று அவன் சந்தேகமாக அவளைப் பார்த்தான்.

சட்டென்று கலகலவென்று சிரித்த மித்ரா, “இந்த ஸ்கூலே நம்மளுது தான். இதுக்குள் உன்னோட இந்த தம்மாதுண்டு கிளாஸ் ரூமை கண்டு பிடிப்பது என்ன கஷ்டமா என்ன?” என்று கேட்டவுடன் பக்கென்று சிரித்துவிட்டான் இந்தர்ஜித்.

பிறகு அவளின் தலையைச் செல்லமாக கலைத்துவிட்டு, “வாலு உன் அளவிற்கு பதில் சொல்ல யாரால் முடியும்? ஆமா இப்போ எதுக்கு என் கிளாஸ் ரூம் வந்திருக்கிற?” அவன் கேட்டபிறகே அவளுக்கு வந்த விசயமே ஞாபகம் வரவே தலை தலையாக அடித்துக் கொண்டாள்.

அவன் அவளை விநோதமாக பார்க்கவே, “விஷ்வா கிளாஸ் ரூம்மை என்னால் கண்டுபிடிக்க முடியல ஜித்து. அதுதான் உன்கிட்ட கேட்கலாம்னு வந்தேன். இப்போவே வா நம்ம போய் விஷ்வாவைப் பார்க்கலாம்” அவனைப் பேசவே விடாமல் தரதரவென்று இழுத்துச் சென்றாள்.

“ஏய் இந்தப்பக்கம் அவனோட கிளாஸ் ரூம் இல்ல” என்றவன் அவளின் கையை விலக்கிவிடவே, “அப்படியா.. அப்போ வா அந்தப்பக்கம் போலாம்” என்று அசராமல் சொன்னவள் அவனை இழுத்துச் செல்லும் வேகத்தைப் பார்த்த இந்தர்ஜித் வகுப்பு நண்பர்கள் வியப்பில் வாயைப் பிளந்தனர்.

அதை கவனித்த இந்தர்ஜித், “மித்து ஏண்டி என்னை இப்படி இழுத்துட்டு போற” என்று அவளின் கையை விலக்கி விடுவதிலேயே குறியாக இருந்தான்.

“பெல் அடிக்கும் முன்னாடி விஷ்வாவைப் பார்த்துட்டுப் போகணும்” என்று அவனை அவசரபடுத்தவே, “சரி வா” என்று அவளோடு வேகமாகச் சென்றான்.

இந்தர்ஜித் விஷ்வாவின் வகுப்பிற்கு அவளை அழைத்துச்செல்லவே, “அண்ணா இப்போ எதுக்கு வந்தாய்?” என்ற கேள்வியுடன் வெளியே வந்தவன் அவனின் பின்னோடு நின்றிருந்த மித்துவைப் பார்த்தும் அதிர்ந்தான்.

“மானு உனக்கு என்ன விசரா? எங்க ஸ்கூல் சுவர் ஏறிக் குதிக்கும் அளவுக்கு என்ன பிரச்சனை வந்துச்சு” என்று அவன் கோபத்துடன் கேட்கவும் இடையில் கையூன்றி அவனை முறைத்தவள், “விஷ்வா” என்று கத்தினாள்.

அங்கிருந்த சிலர் வேகமாக அவர்களைத் திரும்பிப்  பார்க்கவே, “அம்மா தாயே கத்தி ஊரைக் கூட்டிடாதே. ஆமா இப்போ எதுக்குடி இங்கே வந்தாய்?” என்று கோபத்துடன் கேட்டாள்.

“பாட்டி என்னை இதே ஸ்கூலில் சேர்ந்து விட்டு இருக்காங்கன்னு சொல்ல வந்தால் நீ என்னை கோபபடுத்தி பார்க்கிற?” என்று அவனை அடிக்கவும் அண்ணனை பரிதாபமாக பார்த்தபடி அவள் கொடுத்த அடியை வாங்கிக் கொண்டான்.

“இனிமேல் ஸ்கூலில் ஒன்றாய் சேர்ந்து வரப்போகிறோமா? ஐயோ செல்லக்குட்டி இது தெரியாமல் உன்னிடம் வாயைக் கொடுத்து வீணாக அடி வாங்கிட்டேனே..” என்று புலம்பவே பெல் அடிக்கும் சத்தம் கேட்டு மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“சரி மித்து நீ மதியம் டிப்பன் பாக்ஸ் எடுத்துட்டு என் கிளாஸ் ரூம் வந்துவிடு” என்று இந்தர்ஜித் சொல்லவே மித்ரா காதில் வாங்காமல் நின்றிருந்தாள்.

“இல்ல அண்ணா உன் கிளாஸ் ரூம் ரொம்ப தூரம் அவள் என் கிளாஸ் ரூமிற்கு வரட்டும்” என்று விஷ்வா சொல்லவே அவனை கோபத்துடன் முறைத்தாள்.

இரண்டு பேரும் பேசுவதைக் கண்டு, “நான் நீங்க சொல்வதை கேட்க மாட்டேன் என்று தெரிஞ்சும் இருவரும் முடிவேடுக்கிறீங்க?” என்று கேட்டு அவர்களைத் திகைக்க வைத்தாள்.   

“இப்போ நீ என்ன சொல்ல வருகிறாய்?” என்று இருவரும் ஒருமித்தக் குரலில் கேட்கவே குறும்புடன் கண்சிமிட்டி சிரித்து, “நீங்க இருவரும் சேர்ந்து என் கிளாஸ் ரூம் வாங்க அங்கே சேர்ந்து சாப்பிடலாம். அதைச் சொல்லத்தான் இப்போ வந்தேன்.. பாய் ஜித்து அண்ட் விஷ்வா” என்று கத்தியவள் வேகமாக ஓடிவிட்டாள்.

அவளின் இந்த குறும்பைக் கண்டு அண்ணனும், தம்பியும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். மதியம் இருவரும் சாப்பிட மித்ராவின் வகுப்பறைக்கு சென்றனர். அங்கிருந்த மரத்தின் நிழலில் இவர்களுக்காக காத்திருந்தவளின் முகம் பூவாக மலர்ந்தது.

“எங்க  இருவரையும் தொல்லை செய்யவே இந்த ஸ்கூல் சேர்ந்தியா?” என்று இந்தர்ஜித் கோபத்துடன் கேட்டான்.

“அதை ஏன் அண்ணா அவளிடம் கேட்கிற? அவளுக்கு அதுதானே வேலையே” என்று அவளை வாரிவிட்டு வாய்விட்டு  சிரித்தான் விஷ்வா.

மூவரும் ஒரே நேரத்தில் டிப்பன் பாக்ஸை திறக்க, “அண்ணா இன்னைக்கு அம்மா உனக்கு பிடிச்ச சாப்பாடு செய்து கொடுத்திருக்காங்க” என்று சொல்லவே இந்தர்ஜித் நிமிர்ந்து தம்பியைப் பார்த்தான்.

“அப்பா எதுவும் செய்யல விஷ்வா. இன்னைக்கு ஹோட்டலில் பார்சல் வாங்கி கொடுத்தாரு” என்று  வருத்தத்துடன் கூறினான். அவனின் குரலில் இருந்த ஏதோவொன்று மித்ராவின் மனதைப் பாதித்தது.

தாய் – தந்தை இருந்தும் அனாதையாக இருப்பது எவ்வளவு கொடுமையான விஷயம் என்பதை இவர்களைப் பார்த்து புரிந்து கொண்டவள், “இதை இருவரும் சாப்பிட போறீங்களா?” என்றவளை  மற்ற இருவரும் கேள்வியாக நோக்கினர்.

“அன்பு, பாசம் எதுவும் இல்லாத அந்த சாப்பாடு செரிமானம் ஆகாத விஷம். இந்தாங்க இதை இருவரும் சாப்பிடுங்க” என்ற மித்ரா அவர்களின் கையிலிருந்த டிப்பனை பிடுங்கிவிட்டு அவர்களிடம் வேறு டிப்பனை கொடுத்தாள். இரண்டு பேரும் ஒரே நேரத்தில் டிப்பனை திறந்து பார்க்க புளியோதரையின் வாசனை  இருவரின் நாசியைத் துளைத்தது.

இருவரும் அவளின் பாசத்தைக் கண்டு வாயடைத்துப்போய் அமர்ந்திருக்க, “என்னடா சொந்த கையில் சாப்பிட கூட மாட்டீங்களா? அதையும் நான்தான் ஊட்டிவிடணுமா?” என்று கேள்வியாக புருவம் உயர்த்தி குறும்புடன் சிரித்தவனைப்  பார்த்து இருவருமே சிரித்துவிட்டனர்.

அதன்பிறகு மூவரும் சிரித்தபடி சாப்பிடுவதை பார்த்தபடியே அங்கே வந்த வினோத், “என்னடா இந்த குட்டிப் பாப்பாவுடன் வந்து உட்கார்ந்து சாப்பிடுறீங்க? இவ என்ன உங்க தங்கச்சியா?” என்று புரியாமல் கேட்க ஆண்கள் இருவரும் மித்ராவைத் திரும்பி பார்த்தனர்.

அவளோ விளக்கெண்ணையை குடித்தவள் போல, “ஐயோ இவனுங்களுக்கு நான்  தங்கச்சியா வியக்” என்று வாந்தி எடுக்க அதைகண்டு சிரிப்பை அடக்க முயற்சித்து முடியாமல் போகவே வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க தொடங்கினர் இந்தரும், விஷ்வாவும்.

“ஏன் நான் ஏதாவது தப்பா சொல்லிடேனா?” என்று வினோத் புரியாமல் கேட்கவே சிரிப்பை நிறுத்திவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தனர்.

“மித்து எங்களுக்கு தங்கச்சி இல்லடா” – இந்தர் சிரிப்புடன்

“அப்போ வேற யாரு?” – வினோத் அதே கேள்வியில் நின்றான்.

“நாங்க மூவரும் பிரெண்ட்ஸ்” – விஷ்வா பட்டென்று பதில் கொடுத்தான்.

அவர்கள் மூவரையும் பார்த்த வினோத், “டேய் இப்போவே சொல்றேன் இவளோட நட்பு வைக்காதீங்க. அப்புறம் வருங்காலத்தில் அண்ணன் தம்பி இருவரும் இரு வேறு துருவமாக உங்க அப்பா, அம்மா மாதிரி பிரிஞ்சிதான் நிற்ப்பீங்க” என்றவனை கொலைவெறியுடன் பார்த்தாள் மித்ரா.

அவளின் கனல் வீசும் முகத்தை கவனிக்காத மற்ற இருவரும், “ஏய் வார்த்தை தடிக்குது. மித்ரா எங்களை இணைக்கும்  பாலமாக இருப்பாளே தவிர ஒருநாளும் எங்க பிரிவை எதிர்பார்க்கும் பெண்ணாக இருக்க மாட்டாள்” என்று கத்தினர்.

அவர்கள் இருவரையும் இகழ்ச்சியாக பார்த்த வினோத், “அதையும் பார்க்கலாமே. இதேமாதிரி சொன்ன எத்தனையோ பேரு காதல் என்ற வலையில் விழுந்து நட்பு வீணாகப் போனதை நான் பார்த்து இருக்கேன். உங்களை மட்டும் அந்த பாழாப்போன காதல் சும்மா விடுமா?” என்று கேட்டான்.

அதற்கு பதில் பேச நினைத்த விஷ்வா, இந்தர் இருவரின் கையைப் பிடித்து தடுத்த மித்ரா வினோத்தை இமைக்க மறந்து பார்த்தாள்.

“உங்க இருவரில் யாரோ ஒருத்தருக்கு அவமேல் காதல் வரும். அப்போ உரிமை போர் தொடங்கும். ஒருத்தர் அவளிடம் காதலை சொன்னால் மற்றொருவர் தன் உறவை இழக்கும் நிலை வரும்” என்று வினோத் நிதர்சனம் என்ற பெயரில் மூவரின் மனதிலிருந்த சந்தோஷத்தை குலைக்கும் வண்ணம் பேசிக்கொண்டு இருந்தான்.

மற்ற இருவரும் என்ன செய்வதென்று யோசிக்க்கும் முன்னே சாப்பாட்டை வைத்துவிட்டு எழுந்த மித்ரா, “எனக்கு இந்தர், விஷ்வா இருவரின் ஒற்றுமை மட்டும்தான் முக்கியம். வருங்காலத்தில் இதெல்லாம் நடக்கும்னு சொல்றீயே அடுத்த நிமிஷமும் எதிர்காலம் என்பதை மறந்துட்டு பேசற நீ..” என்றவள் கண்ணிமைக்கும் நொடியில் கையில் கருங்கல்லை தூக்கி வீசி விட்டாள்.

அவளிடம் இப்படியொரு தாக்குதலை எதிர்பார்க்காத வினோத், “அம்மா” என்று அலறியபடி கீழே அமர்ந்துவிட  அவனை கடந்து சென்ற டீச்சரின் மண்டையைப் பதம் பார்த்தது மித்ரா வீசிய கல்!

“ஐயோ” என்ற அலறிய டீச்சரைப் பார்த்தும், “மித்து என்னடி வந்த முதல்நாளே இப்படி பண்ணிட்ட.ஐயோ இந்த டீச்சர் தோளை உரித்து உப்பை தடவிவிட்டுதானே மற்ற வேலை பார்ப்பாங்க” என்றான் விஷ்வா பயத்துடன்.

“மித்து இது என்ன சின்னபிள்ளை போல இப்படியொரு காரியம் பண்ணிட்ட, அவன் வாயில் பேசினால் நீயும் பதிலுக்கு பேசி இருக்கலாம் இல்ல. இதென்ன புதுபழக்கம் மற்றவர்களின் தலையை உடைப்பது” என்று கண்டித்தான் இந்தர்ஜித்.

அதற்குள் அவர்களின் அருகே வந்த டீச்சர், “ஏய் என்ன வேலை பண்ற நீ? உன்னைவிட வயதில் பெரியவனை கல்லால் அடிப்பது தான் முறையா?” என்று கோபத்துடன் கேட்டபடி அவளை நெருங்கினார்.

ஆனால் அதற்கு எல்லாம் பயப்படாமல், “டீச்சர் அவன்தான் என்னை காதலிக்கிறேன்னு சொன்னான். அது மட்டும் பெரிய பையன் செய்யும் காரியமா? நான் அவரை கல்லால் அடித்தது தப்புன்னா அவர் என்னிடம் சொன்ன வார்த்தையும் தப்புதான். அவன் காதலிக்கிறேன்னு பேசும்போது விஷ்வா, இந்தர்ஜித் இருவரும் இங்கேதான் இருந்தாங்க. நான் சொல்றது உண்மையா பொய்யான்னு அவங்ககிட்டயே கேளுங்க” என்று  சரளமாக  அடுக்கியவளை இமைக்க மறந்து பார்த்தனர்.

அவள் சொல்வது உண்மையா என்று  ஆசிரியர் இருவரிடமும் கேட்க அவளை மாட்டிவிட மனமில்லாமல், “உண்மைதான் மிஸ்” என்றனர் இந்தரும், விஷ்வாவும்.

“அடப்பாவிகளா?” என்று வினோத் தலையில் கைவைத்து அதிர்ச்சியில் சிலையென உறைந்து நின்றான்,

அடுத்த நிமிடமே அவனுக்கு பனிஸ்மென்ட் கொடுத்துவிட்டு ஆசிரியர் செல்வதை கண்ட மித்ரா, “ஏற்கனவே மனதளவில் காயப்பட்டு இருக்கும் இருவரின் மனதையும் வார்த்தை என்ற கல்லால் அடிக்கும் உரிமையை உனக்கு யாரு கொடுத்தாங்க. ஒருத்தரின் காயத்திற்கு மருந்தாக இருக்க முயற்சி பண்றேன் நான். நீ என்னடான்னா நிதர்சனம் என்ற பெயரில் விஷத்தை கொடுக்கிற. இன்னொரு முறை என்னிடம் மோதிபார்க்க நினைத்தால் அவ்வளவுதான்” என்று விரல்நீட்டி எச்சரித்துவிட்டு கோபமாக நின்றாள்.

அவள் சிறுபெண் என்று நினைத்திருந்த இந்தரும், விஷ்வாவும் வியப்புடன் அவளைப் பார்க்க, “இனிமேல் மித்ரா வாழ்க்கையில் நீ குறுக்க வருவாய்..” என்று கோபத்துடன் வினோத்திடம் கேட்டாள்.

அவன் மறுப்பாக தலையசைக்கவே, “ம்ம் அப்படியொரு எண்ணம் உன் மனசில் வந்துச்சு. இன்னைக்கு கிளாஸ் ரூமிற்கு வெளியே நிற்க வைத்தேன். இனிமேலும் நீ இப்படி பேசிட்டு இருந்தேன்னு கேள்விபட்டேன் மகனே உனக்கு டீசி கொடுக்க வைத்துவிடுவேன்” என்று மிரட்டிவிட்டு வகுப்பறை நோக்கி சென்றாள்.

“ஏண்டா இவளாடா சின்ன பொண்ணு” என்று பரிதாபமாக கேட்ட வினோத்தை பார்த்து சிரித்தனர்.

“அவள் சொன்னது பொய்னு சொல்லி என்னை டீச்சரிடமிருந்து காப்பாற்று இந்தர். இனிமேல் மித்துவைப் பற்றி நான் தப்பாக பேசவே மாட்டேன்” என்று கெஞ்சினான்.

அவனின் நிலை கண்டு மனம் இறங்கியபோதும், “இல்லடா டீச்சரிடம் உண்மையைச் சொன்னால் பாவம் மித்து அடிவாங்குவா. அவளால் வலிகூட தாங்க முடியாது” என்று இந்தர் சிந்தனையோடு கூறினான்.

“அதுக்கு நான் என்ன பண்றது” என்று புரியாமல் கேட்டான் வினோத்.

“இன்னைக்கு பனிஸ்மென்ட்டை என்ஜாய் பண்ணிடுங்க வினோத் அண்ணா” என்று சர்வசாதாரணமாக கூறிய விஷ்வா வகுப்பறை நோக்கி சென்றான்.

இந்தர் சிரிப்புடன் வினோத்தின் தோளில் கைபோடவே, “ஒருத்தி சொல்றது பொய்னு தெரிஞ்சும் அவளை காப்பாற்ற நினைக்கிறீங்களே நீங்க எல்லாம் நல்ல இருப்பீங்களா.. இதைத்தான் எங்க அம்மா கலிகாலம்னு சொல்லுது” என்று புலம்பியபடி வகுப்பறை நோக்கி நடந்தான்.

மாலை அவன் வகுப்பறைவிட்டு வெளியே நிற்பதை கண்டு வாய்விட்டு சிரித்தவள், “சங்கமித்ராவை யாருன்னு நினைச்ச.. இனிமேல் நீ என்னிடம் வாய் பேசுவ.. எதிர்காலத்தை சொல்ல வந்துட்டான் கரடி..” என்று திட்டி தீர்த்தாள்.

அன்றிலிருந்து மித்து அவர்களின் உயிராகிப் போனாள். இந்தர், விஷ்வா இருவருக்கும் ஏதாவது என்றால் அவள்தான் முன்னாடி நிற்ப்பாள். இவர்களுக்குள்  சண்டை ஆயிரம் வந்தாலும் மற்றவர்கள் முன்னாடி ஒருவரையொருவர் விட்டுகொடுக்காமல் இருந்தனர்.

நாட்கள் ரெக்கைகட்டிகொண்டு பறக்கவே ஒரு வருடம் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தது.

  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!