Maane – 4
Maane – 4
அத்தியாயம் – 4
அன்றும் வழக்கம்போல பள்ளி சென்று வீடு திரும்பியபோது வழியில் ஓரிடத்தில் சைக்கிள் ரேஸ் வைப்பது தெரிந்து மூவரும் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
மூவரும் சைக்கிள் ரேஸில் இருப்பதை கண்ட வினோத், “சுத்தம் இன்னைக்கு என்ன நடக்கும்னு தெரியலையே?” என்று வாய்விட்டு புலம்பியவனும் அவர்களோடு போட்டியில் கலந்து கொண்டான்.
சரியான நேரத்தில் விசில் ஊதியதும் மூவரும் சைக்கிளில் மின்னல் வேகத்தில் பறந்தனர். சற்று தூரம் சென்றதும் இந்தர்ஜித் மித்ராவிற்காக விட்டுகொடுத்து அங்கேயே நின்றுவிட அவனை கடந்து விஷ்வா மற்றும் மித்ரா இருவரும் வேகத்தில் சென்றனர்.
அங்கிருந்து கொஞ்சதூரம் பயணித்ததும் மித்ராவிற்காக விஷ்வாவும் விட்டுகொடுத்துவிட எண்ணி பாதி தூரத்தில் தரையில் கால் ஊன்றி நின்றுவிட்டான். அதற்குள் அங்கே வந்த இந்தர் அவனை பார்த்து சிரிக்க இருவரும் சீரான வேகத்தில் சைக்கிளை ஓட்டினர்.
அவர்கள் சென்று பார்க்கும்போது மித்ரா தோல்வியை தழுவியபடி மூஞ்சியை உர்ரென்று வைத்திருப்பதை பார்த்து, “ஏன் நீ முதல் பரிசு வின் பண்ணவில்லையா?” என்று இருவரும் ஒருமித்த குரலில் கேட்டனர்.
“நீங்க ஜெய்க்கணும்னு நினைச்சு கொஞ்சம் லேட்டா வந்தேன். அதுக்கு வேற மூவர் வின் பண்ணிதாக அறிவுப்பு வந்துவிட்டது” என்று மெல்லிய குரலில் தவறு செய்த பிள்ளை போல முணுமுணுக்க அவர்களுக்கு சிரிப்புதான் வந்தது.
அப்போது வெற்றி கோப்பையுடன் அவர்களின் எதிரே வந்து நின்றவன், “உங்க மூவரில் ஒருத்தர் கூடவா போட்டியில் வின் பண்ணல?” என்று நக்கலாக கேட்கவே அவனை கொலைவெறியுடன் பார்த்தாள் மித்ரா.
அவன் அடுத்து ஏதாவது பேசும் முன்னர் இந்தரும், விஷ்வாவும் அவனை தடுக்க நினைக்க, “ஒரு போட்டியில் வின் பண்ணாமல் தலை நிமிர்ந்து நிற்பதை பாரு. உன்னால் தான் இவங்க இருவரும் போட்டியில் தோற்று போனாங்க” என்றவுடன் மித்ராவின் முகம் மாறியது.
“இனி காலம் முழுக்க இவனுங்க இப்படித்தான்” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னே அவனின் தலையில் நறுக்கென்று கொட்டினாள் மித்ரா.
அவன் ஆ என்று அலறியபடி, “எதுக்கு இப்போ அடிக்கிற” என்று காரணம் புரியாமல் கேட்டான்.
“நாங்க மூவரும் விட்டுகொடுக்கும் பெயரில் தோற்று போனாலும் அதில் ஒற்றுமை இருக்கு. ஆனால் வின் பண்ணிய நீ நாளைக்கே இந்த போட்டியில் மண்ணை கவ்வினால் முகத்தை எங்கே போய் வெச்சுக்க முடியும். சும்மா லாஜிக் தெரியாமல் பேசக்கூடாது கண்ணா. அது உனக்கு நல்லதில்லை” என்று அவனை மிரட்டிவிட்டு மற்ற இருவரோடு அங்கிருந்து கிளம்பினாள்.
இவர்கள் மூவரும் வீட்டிற்கு சென்றபோது இந்தரின் வீட்டு வாசலில் பாஸ்கர் கோபத்துடன் நின்றிருப்பதை கண்டு, “என்னப்பா” என்று மட்டுமே கேட்டான்.
அடுத்த கணமே கையில் இருந்த பிரம்பை கொண்டு அவனை அடி வெளுத்தவர், “போட்டியில் கலந்துகிட்ட யாருக்கும் விட்டுகொடுக்க கூடாதுன்னு தெரியாது. உன் அம்மாவுக்கு விட்டுக் கொடுத்துதான் இப்போ வாழ்க்கையில் தோல்வியை தழுவி தனி மரமாக நிற்கிறேன். நீயாவது உருப்படியாக செய்வாய் என்று நினைத்தால் நீயும் இப்போதே அந்த மித்ராவிற்கு விட்டு கொடுக்கிறீயா? இந்த வயசிலேயே காதல் கேட்குது” என்று சொல்லி அவனை அடித்துவிட்டார்.
இந்தர் வலியில் துடித்தபோதும் வாய்விட்டு அழுக்காமல் மரம் போல நின்றிருப்பதை பார்த்து, “ஐயோ ஜித்து” என்று கதறி அழுது அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். இங்கே நடந்த அனைத்தையும் பார்த்தபடி தன் வீடு நோக்கி சென்றான் விஷ்வா.
அங்கேயும் போட்டியில் தோற்ற விஷயம் தெரிந்து போகவே, “உன் அப்பனுக்கு விட்டுகொடுத்து தோற்று நான் என்ன கண்டேன். இன்னைக்கு அனாதை மாதிரி நடுத்தெருவில் நிற்கிறேன். நீ என்னடான்னா போட்டியில் கலந்துகிட்டு தோத்துட்டு வந்து நிற்கிற. என்னைக்கும் போட்டியில் வின் பண்ணனுமே பரிதாபமாக விட்டுகொடுக்கக் கூடாது. அப்படி விட்டுகொடுத்தா உன்னை இளக்காரமா தான் நினைப்பாங்க” என்று சொல்லி விஷ்வாவை அடி வெளுத்துவிட்டார் மரகதம்.
இந்த விஷயம் வினோத் மூலமாக மித்ராவிற்கு தெரிந்துவிட அவள் பாட்டியிடம் சொல்லிவிட்டு விஷ்வாவின் வீட்டிற்கு வந்தாள். வீட்டின் வாசலில் நின்றிருந்தவனை இழுத்துக்கொண்டு தன் வீட்டிற்கு சென்றாள்.
அங்கே தமையன் இருக்கும் நிலையைக்கண்டு, “அண்ணா நம்ம என்னண்ணா பாவம் பண்ணினோம். எதுக்காக இவங்க இருவரும் நம்மள அடிச்சு வெறியைத் தீர்த்துக்கிறாங்க. அவங்கள நினைக்க நினைக்க மனசில் வெறுப்புதான் அதிகம் ஆகுது” என்று அழுதான்.
அதற்குள் பாட்டியிடம் சொல்லி பிரம்பு அடிக்கேன்று மருந்து வாங்கி வந்த மித்ரா, “அவங்க எப்படி இருந்தா உங்களுக்கு என்னடா. நீங்க எப்போதும் போல ஒற்றுமையாக இருங்க அது போதும்” என்று இருவரிடமும் மருந்தை கொடுத்தாள்.
அதற்குள் பாட்டி கஸ்தூரி கையில் காபியுடன் வரவே, “பாட்டி போட்டியில் வின் பண்ணணும்னு விட்டுக் கொடுத்தது தப்பின்னா நீங்களும் பிரம்பு எடுத்து அடிங்க” என்றாள்
தன் செல்ல பேத்தியை அருகே அமர வைத்த கஸ்தூரி, “அவங்க இருவரும் வாழ்க்கையை போட்டியாக பார்க்கிறாங்க மித்ரா. அதுதான் விட்டுகொடுக்க கூடாதுன்னு ஈகோவில் ஒருவரின் வாழ்க்கையை மற்றொருவர் அழிச்சிட்டு நிம்மதியை இழந்து நிற்கிறாங்க. என்னைக்கும் விட்டுகொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை. அதை மட்டும் நல்ல புரிஞ்சிக்கோ. விட்டுகொடுப்பது ஒரு அழகான புரிதலுக்கு அஸ்திவாரம். அதுவே அவங்களுக்குள் இல்லாததால் தான் இப்படி இருக்காங்க” என்று அவர் விளக்கம் கொடுத்த பிறகுதான் மூவரின் முகமும் தெளிவடைந்தது.
அப்போது தான் தன் தாய் – தந்தை இருவரும் எங்கே தவறு செய்கிறார்கள் என்று உணர்ந்து கொண்ட அண்ணனும், தம்பியும் மித்ராவை இமைக்க மறந்து பார்த்தனர். தங்களுக்கு ஒரு வலி என்றவுடன் துடித்துப்போன மித்ராவின் மீது இனிமேல் அன்பை மட்டுமே பொழிய நினைத்தான் இந்தர்ஜித்.
மற்றொரு புறம் தந்தை முன் நின்று வழிநடத்துவது போல மித்ரா செய்வதை உணர்ந்த விஷ்வாவின் மனதில் நட்பு என்ற ஆலவிதை வேர் விட தொடங்கியது. தனக்கு கிடைக்காத பாசத்தை அவளுக்கு பரிசாக கொடுக்க நினைத்தது அவனின் உள்ளம்.
அடுத்தடுத்து வந்த நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது. மித்ராவே தங்களின் உலகம் என்று சொல்லும் அளவிற்கு அண்ணன், தம்பி இருவரையும் இணைக்கும் பலமாக இருந்தாள். யார் பற்றிய கவலையும் இல்லாமல் மூன்று குருவிகளும், படிப்பு, விளையாட்டு என்று ஊரையே சுற்றி வந்தனர்.
வழக்கம்போல பள்ளி கூடத்திற்குள் நுழைந்த மூவரும் வகுப்பிற்கு செல்ல நேரம் இருந்ததால் அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்து எழுத தொடங்கினர்.
அப்போது மித்ரா தான் வாங்கி வந்த புது பேனாவை விஷ்வாவிடம் காட்டி, “நானும் வாங்கிட்டேனே” என்றாள் குஷியாக.
பட்டென்று அவளின் கையிலிருந்து பேனாவை பறித்த விஷ்வா, “இந்தா இந்த பேனாவில் எழுது” என்று சொல்லி அவளிடம் தன் பேனாவை நீட்டியதும் அவளின் முகம் கோபத்தில் சிவந்தது.
“எனக்கு என்னோட பேனா வேணும்” என்று அவள் பிடிவாதத்துடன் கூறவே, “என்னால் அதை கொடுக்க முடியாது. நீ இந்த பேனாவில் தான் எழுதணும்” என்று அவளோடு வேண்டும் என்றே வம்பு வளர்த்தான் விஷ்வா.
சற்று நேரத்தில் இருவரின் சண்டையும் பெரிதாகிவிடவே, “ஒரு பேனாவிற்கு இவ்வளவு சண்டை தேவையா? விஷ்வா அவளோட பேனாவை கொடு” என்றான் மிரட்டலாக.
மித்ராவை பார்த்த உதட்டை சுளித்தவன், “நான் தரமாட்டேன் அண்ணா” என்றான் பிடிவாதமாக.
“அப்போ அவனோட பேனாவில் நீ எழுது மித்ரா” என்றாள் இந்தர்ஜித்.
“அது முடியாது ஜித்து. அது என்னோட புது பேனா. எனக்கு என் பேனாதான் வேணும் இவன் பேனா வேண்டாம்” என்று ஜித்துவிடம் பேனாவை கொடுத்தாள்.
விஷ்வா வேண்டும் என்றே வம்பு வளர்ப்பதை புரிந்துகொண்டு, “சரி நான் புது பேனா தருகிறேன் எழுதுகிறாயா?” என்று கேட்டதும் சரியென்று தலையசைத்தாள்.
தான் நேற்று வாங்கிய புதிய பேனாவை அவளிடம் இந்தர்ஜித் கொடுக்கவே, “இதுதான் என் ஜித்து. நீயும் தான் இருக்கிறாயே… விஷ்வா கடன்காரா” என்று சொல்லி அவனின் தலையில் நறுக்கென்று கொட்டிவிட்டு எழுந்து சென்றாள்.
அவள் தன்னை திட்டிவிட்டு சென்றபிறகு அவளின் புது பேனாவை பார்த்த விஷ்வா, “இந்த அண்ணா நீ இந்த பேனாவில் எழுதிக்கோ. எனக்கு அவகூட சண்டை போடணும்னு தோணுச்சு அதன் வேணும்னு அவ பேனாவை பிடிங்கி வைத்துக்கொண்டேன். நீ அவளுக்கு பேனா கொடுத்தால் அவளோட பேனாவில் நீயே எழுது” என்றவன் எழுந்து வகுப்பறைக்கு சென்றான்.
அந்த பேனாவை கையில் வாங்கிய இந்தர் அதை பொக்கிஷம் போல பாதுகாத்தான். இப்படி சின்ன சின்ன சண்டைகளில் விஷ்வா நண்பனாக அவளை நெருங்கிட, இந்தர்ஜித் தன் மனநிலை புரியாதபோதும் அவளுக்காக செய்யும் கடமையை சரியாக செய்தான்.
படிப்பு, தேர்வு என்று நாட்கள் பறந்தது. மித்ரா எட்டாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும்போது, இந்தர் பள்ளி படிப்பின் இறுதியாண்டில் இருக்க, விஷ்வா உயர்நிலை வகுப்பில் அடியெடுத்து வைத்திருந்தான்.
மூவரும் இனி வாழ்நாளில் பிரியவே போவதில்லை என்று நினைக்கும்போது பாஸ்கர் ரூபத்தில் வந்து அவர்களின் வாழ்க்கையில் வந்து தன் விளையாட்டை தொடங்கியது விதி.
அடுத்து பல்கலைக்கழகத்தில் மகனை சேர்க்க நினைத்த பாஸ்கர் தன் தொழில் முழுவதையும் கொழும்புவிற்கு இடம் மாற்றம் செய்தார். மரகதம் மீதிருந்த கோபத்தில் இனிமேல் மரகதத்தை பார்க்கவே கூடாது என்ற எண்ணம் அவரின் மனதில் ஆழமாக வேரூன்றியது.
வழமைபோலவே மதியம் வீடு திரும்பிய மகனிடம், “இந்தர் எக்ஸாம் எல்லாம் எப்படி எழுதி இருக்கிறாய்?” என்று அக்கறையுடன் விசாரித்தார்.
“ம்ம் நல்ல மார்க் வரும் அப்பா. ஏன் திடீரென்று இதெல்லாம் கேட்கிறீங்க” என்று புரியாமல் கேட்டான் இந்தர்ஜித்.
“நம்ம தொழில் அனைத்தையும் கொழும்புவிற்கு மாற்றிவிட்டேன் இந்தர். அதனால் உன் ஸ்கூல் டிசியை வாங்கியதும் மலையகத்தில் இருந்து நிரந்தரமாக கொழும்புவில் குடியேற முடிவெடுத்து இருக்கிறேன். உனக்கு அங்கே பல்கலைக்கழகம் பக்கத்திலேயே இருப்பதால் எந்தவிதமான பிரச்சனையும் வராது இல்ல” என்று மகனிடம் விஷயத்தை விளக்கினார்.
ஒரு நிமிடம் இந்தருக்கு உலகமே தட்டாமாலையாக சுற்றியது. இத்தனை நாளும் இருவரும் பிரிந்திருந்த போது ஓரிடத்தில் இருந்ததால் தன் தம்பியுடன் நிம்மதியாக நாட்கள் நகர்ந்தது. ஆனால் இனி வரும் நாட்களில் அந்த நிம்மதியும் தன்னிடமிருந்து பறிக்கபடுவதை உணர்ந்தான்.
“ஏன் அப்பா இந்த திடீர் முடிவு” என்றான் மைந்தன் யோசனையோடு.
“அதெல்லாம் உங்கம்மா வீட்டிவிட்டு வெளியேறிய போதே எடுத்த முடிவுதான். ஆனால் என் முடிவு உன் படிப்பை கெடுக்கும்னு தான் இத்தனை நாளாக அமைதியாக இருந்தேன்” என்றவர் அங்கிருந்து புறப்பட வேண்டிய நாளை சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்று மறைந்தாள்.
அடுத்த இரண்டு வாரத்தில் தேர்வுகளை முடித்த பிறகு வீட்டிற்கு போக பிடிக்காமல் நுவரெலியா செல்லும் வழியில் அமைந்திருக்கும் ஆஞ்சிநேயர் கோவிலில் சென்று அமர்ந்துவிட்டான் இந்தர். அந்த கோவில் இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்.
இலங்கையில் அனுமன் முதன் முதலில் தன் காலடித் தடத்தை பதித்த இடமாக, இலங்கையில் உள்ள ரம்போடா மலைமுகடு பகுதி நம்பப்படுகிறது. இந்த இடத்தில் இலங்கை சின்மயா மிஷனால் உருவாக்கப்பட்ட ஆலயமே, ‘ரம்போடா அனுமன் ஆலயம்’ ஆகும். இங்கு அமைக்கப்பட்ட தனிக் கோவிலாக, இந்தக் கோவில் இருக்கிறது.
ராவணன் சீதையை சிறை வைத்த இடமான அசோகவனம் இப்போது ‘சீதை எலியா’ என்று வழங்கப்படுகிறது.
மாதம் ஒரு முறையேனும் மூவரும் இந்த கோவிலுக்கு செல்வது வழக்கம். அதுவும் இந்தர் தன் மனகஷ்டங்களை கொட்டி தீர்க்கும் இடத்தில் இந்த ஆஞ்சிநேயர் கோவிலும் ஒன்று.
சனிகிழமை அன்று கோவிலில் தனியாக அமர்ந்திருந்த இந்தரை பார்த்த விஷ்வா, “என்ன அதிசயம் அண்ணா இன்னைக்கு கோவிலுக்கு நமக்கு முன்னாடி வந்திருக்கிறான்” என்று மித்ராவிடம் கேட்டான்.
அப்போதுதான் அவன் அங்கிருப்பதை கவனித்த மித்ரா, “ஹே ஜித்து என்னடா இங்கே வந்து உட்கார்ந்திருக்கிற” என்ற கேள்வியுடன் அவனின் நெற்றியில் செந்தூரம் வைத்துவிட்டு அவனின் பக்கத்தில் அமர்ந்தாள்.
அவன் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருப்பதை கவனித்த விஷ்வா, “அண்ணா என்னாச்சு” என்று விசாரித்தான்.
சட்டென்று நிமிர்ந்து இருவரையும் பார்த்த இந்தர், “நாளை கொழும்பு போக போறோம் விஷ்வா. அதுவும் நிரந்தரமாகவே. இனிமேல் மலையகம் வரவே போவதில்லைன்னு அப்பா சொல்லிட்டார். என் மேல் படிப்பு எல்லாம் கொழும்புவில் என்று முடிவெடுத்து எல்லாமே செய்துவிட்டார்” என்று தன் மனதிலிருந்த பாரத்தை இருவரின் தரையிலும் இறக்கினார்.
விஷ்வா அமைதியாகிவிட, “புலி வருதுன்னு சொல்லிட்டு இருந்தீங்களே இப்போ நிஜத்திலேயே வந்துவிட்டதா?” என்று விளையாட்டாக கேட்டவளை இரண்டு பேருமே முறைத்தனர்.
“என்ன முறைக்கிறீங்க? அவன் இங்கே இருக்கிற கொலும்பிவிற்கு தானே படிக்க போறான். என்னவோ அமெரிக்கா, லண்டன், கனடா போகின்ற மாதிரி ரொம்ப பில்டப் கொடுக்கிறீங்க?” என்று இருவரையும் தன் போக்கில் கேலி செய்தவள் ஜன்கேன்று குதித்து இருவரின் எதிரே நின்றாள்.
அவர்கள் கேள்வியாக நோக்கிட, “உலகத்தின் எந்த மூலைக்கு போனாலும் உனக்கு இவன் அண்ணன், அவனுக்கு நீ தம்பி என்பதை யாராலும் மாற்ற முடியாது. இந்த பிரிவு கூட இருவரின் வாழ்க்கைக்கும் நல்லது என்று நினைங்க. எங்கே சுற்றினாலும் ஒருதாய் வயிற்று பிள்ளைகள் என்பதை யாராலும் மாற்ற முடியாது. அதனால் சோகத்தை மறந்துட்டு நிம்மதியா படிக்கின்ற வழியைப் பாருங்க” என்றவள் அவர்களை திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்.
விஷ்வா சந்தேகமாக தமையனைப் பார்க்க அவனோ இத்தனையும் பேசிவிட்டு திரும்பாமல் நடந்து செல்லும் மித்ராவை கேள்வியாக நோக்கினான். இரண்டு பேருக்குமே அவள் அழுகிறாளோ என்ற சந்தேகம் வரவே இருவரும் அவளின் அருகே சென்று கையைப்பிடித்து நிற்க வைத்தனர்.
மித்ரா தலை குனிந்து நின்றிருக்கவே இந்தர்ஜித் ஒரு விரலால் அவள் தாடையைப் பற்றி நிமிர்த்திட அவளின் கலங்கிய கண்கள் அவனுக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
“மித்து” என்றவன் அழைக்க அந்த குரலில் இருந்த ஏதோவொன்று தன் மனதை பாதிப்பதை உணர்ந்து நிமிர்ந்தாள்.
“எங்களை அழுக வேண்டான்னு சொல்லிட்டு இப்போ நீ என்ன பண்ற” அவன் கேள்வியுடன் அவளின் கண்ணீரை துடைத்துவிடவே, “நீங்க இருவரும் ஒரு இடத்தில் இருந்தாதான் எனக்கு சந்தோசம்” என்று உதடுகள் பிதுங்கிட கூறிய மித்ரா விஷ்வாவின் தோள் சாய்ந்து கதறியழுதாள்.
நட்பிற்கே உண்டான இலக்கணத்துடன், “மானு அவன் சீக்கிரமே படிப்பை முடிச்சிட்டு மலையகம் வந்துவிடுவான். நீ இப்படி கண்ணை கசக்கினால் அவனால் தாங்க முடியாதுன்னு உனக்கு தெரியாதா?” என்று சொல்லி அவளை தேற்றினான்.
அடுத்தநாள் இருவரையும் பிரிந்து தனியாக தன் பயணத்தை தொடங்கினான் இந்தர்ஜித். அவனை வழியனுப்பி வைத்த இருவரின் மனதிலும், ‘இவனை இனிமேல் பார்க்கவே முடியாதா?’ என்ற கேள்வி எழுந்தது.