Maane – 5

images (79)

Maane – 5

அத்தியாயம் – 5

இந்தர்ஜித் அவர்களைவிட்டு பிரிந்து கிட்டதட்ட ஒரு மாதம் சென்றிருந்தது. தினமும் சந்தோஷமாக பேசி சிரிக்கும் மித்துவின் முகத்தில் பழைய கலகலப்பு இல்லை என்ற உண்மையை உணர்ந்தே இருந்தான் விஷ்வா. சின்ன விஷயத்திற்கு கூட அவள் ஜித்து பெயர் சொல்வதும் பிறகு தன்  தவறை நினைத்து கண்கலங்குவதுமாக நாட்கள் நகர்ந்தது.

அவளின் இந்த நிலையைக் கண்ட விஷ்வாவிற்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாக புரிந்தது. தன்னைவிட தன் தமையனின் மீது அதிக அன்பு வைத்திருக்கிறாள் என்று!

மித்ரா நாளுக்கு நாள் அதிகமாக வருத்தபடுவதை கண்டு, ‘இவளை எப்படி சரி பண்றது? அண்ணனை நினைச்சிட்டே தினமும் அழுகிறாளே’ என்று மனதளவில் சிந்திக்க தொடங்கிய சமயத்தில் மலையகம் வந்தார் ரகுவரன்.

காலையில் பனிபடர்ந்த சாலையை வேடிக்கை பார்த்தபடி ஜன்னலின் ஓரமாக நின்றிருந்த மித்துவின் மனமோ இந்தரையே சுற்றி வந்தது. மலையகத்தின் இயற்கை எழில் அழகை ரசிக்க காலை நேரமும், மாலை நேரமும் தான் சரியாக இருக்கும்.

வானில் வெளிச்சம் பரவிடும் வேளையில் சாலைகளின் வழியாக தவழ்ந்து செல்லும் பனியைக் காண கண்ணிரண்டும் போதாது. அங்கே இருக்கும் தேயிலை தோட்டங்களும் காலை சூரியக்கதிர் படும்போது பளபளப்பும் செடிகளின் பசுமை அழகு மனத்தைக் கவரும். ரோஜா செடிகளை அதிகம் வளர்க்கும் மிதமான வெப்பநிலை கொண்ட இடமென்பதால் அவள் வீட்டில் நிறைய செடிகளை வைத்திருந்தாள்.

காலை நேரத்தில் பாட்டியிடம் பால் வாங்குவதாக சொல்லிவிட்டு அங்கிருக்கும் பால் பண்ணைக்கு சென்று வரும்போது அவள் ரசிக்கும் இயற்கை அழகை வர்ணிக்க தமிழில் வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். அவள் பால்பண்ணை சென்று திரும்பும்போது காலையில் ஜாக்கிங் சென்றுவிட்டு வருவது இந்தரின் வழக்கம்.

அதெல்லாம் இப்போது நினைவு வரவே,‘எனக்கு என்னவோ ஆகிருச்சு. அதுதான் அவனை அதிகமாக நினைக்கிறேன் போல’ என்று தனக்குள் சொல்லி கொண்டாள். அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம்கேட்டு ஜன்னலின் வழியாக வெளியே பார்த்தாள்.

காரில் இருந்து இறங்கிய தன் தந்தையைப் பார்த்ததும் இந்தரின் நினைவுகள் பின்னுக்கு தள்ளபடவே, “அப்பா” என்ற அழைப்புடன் வேகமாக படியிறங்கி ஓடிச்சென்று தந்தையை அணைத்துக் கொண்டாள்.

தன் பிள்ளையைப் பார்த்தும், “என் செல்லம்.. அப்பா வந்துட்டேன்னு தெரிஞ்சதும் இப்படியா ஓடி வருவது?” என்று மகளை கடித்துக்கொண்டபோது கூட அவரின் முகத்தில் நிறைவான புன்னகை தவழ்ந்தது.

“நீங்க எப்போதும் வேலை இருக்குன்னு போனில் மட்டும் பேசறீங்க? திடீர்ன்னு உங்களைப் பார்த்த சந்தோஷத்தில் எனக்கு எல்லாமே மறந்து போச்சுப்பா” என்ற மகளின் நெற்றியில் முத்தம் பதித்தவர் வீட்டிற்குள் நுழைந்தார்.

இவள் ஓடிவரும் சத்தம்கேட்டு, “மித்து ஓடாதே” என்று சொன்னபடி சமையலறையில் இருந்து வெளியே வந்த கஸ்தூரி ரகுவரனை பார்த்தும், “வாப்பா” என்ற அழைப்புடன் அருகே சென்றார்.

“எப்படி இருக்கீங்க சின்னம்மா?” என்று விசாரித்த ரகுவரன் மகளோடு சோபாவில் அமர்ந்தார்.

“மித்துக்குட்டி வருவதற்கு முன்னாள் எந்த நேரமும் எதையோ இழந்த மாதிரி ஒரு எண்ணம் இருக்கும். இப்போ மித்து செல்லம் இருப்பதால் கவலை இல்லாமல் இருக்கிறேன்.. ஆமா என்ன திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் வந்து இருக்கிற?” என்று விசாரித்தார்.

“இரண்டு வருடம் கனடாவில் வேலை இருந்தது. இப்போது சென்னையில் இருக்கும் கம்பெனி ஹெட் ஆபிஸிற்கு வேலையை மாற்றி விட்டுட்டாங்க. அதுதான் மித்ராவையும் அங்கேயே கூட்டிட்டுப் போலாம்னு வந்தேன்” என்று விளக்கமாக சொல்லவே மித்து அதிர்ந்தபடி தந்தையைப் பார்த்தாள்.

ஏற்கனவே இந்தரை பிரிந்த வருத்தத்தில் இருப்பவளுக்கு இந்த விஷயம் பெரிய இடியை தலையில் இறக்கியது போல இருந்தது.

ரகுவரன் சொன்னதைகேட்டு முகம் மலர்ந்த கஸ்தூரி, “ஒருப்பக்கம் பொண்ணு உன்னோடு இருப்பது சந்தோசமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் அவள் இல்லாமல் என்ன பண்றதுன்னு நினைச்சா மனசுக்கு வருத்தமாக இருக்குதுப்பா” என்றார் மகனிடம்.

“நீங்களும் எங்களோடு சென்னை வந்திருங்க அம்மா. வீட்டில் உங்க பேத்தியுடன் இருங்க, நானும் கவலையில்லாமல் வேலைக்குப் போயிட்டு வருவேன்” என்று அதற்கும் ஒரு தீர்வு கண்டுபிடித்து கூறிய ரகுவரனைக் கண்டு சிறிதுநேரம் சிந்தனையில் ஆழ்ந்தார். இருவரும் யோசிப்பதை பார்த்த மித்ராவின் வயிற்றிற்குள் பயபந்து உருண்டது. 

“நான் அங்கே வந்துவிட்டால் இந்த வீட்டை யாருப்பா பார்த்துக்குவா?” என்று மெல்ல கேட்டார்.

“சின்னம்மா இப்போதைக்கு இந்த வீட்டை யாருக்காவது வாடகைக்கு விட்டுவிடலாம். பின்னாடி தேவை என்றால் அவங்களை காலி பண்ண சொல்லிவிட்டு நம்ம வந்து தங்கிக்கலாம்” என்று சொல்லவே அவருக்கும் அதுவே சரியென்று தோன்றியது.

“அப்போ சரிப்பா. நானும் உங்களோடு அங்கேயே வந்துவிடுகிறேன். எனக்கு மித்து இல்லாமல் நேரமே போகாது” என்றதும் தன் மகளின் தலையைப் பாசத்துடன் வருடிய ரகுவரனுக்கு சந்தோஷமாக இருந்தது.

ஆனால் சந்தோசப்பட வேண்டிய மித்ராவின் மனமோ, ‘ஜித்துவை இனிமேல் எப்போ பார்க்க போறேன் என்று தெரியல. இப்போ விஷ்வாவையும் பிரியணுமா?’ என்று கடுப்புடன் நினைத்தாள்.  அடுத்து மித்ராவின் பள்ளி சான்றிதழ் வாங்குவது மற்றும் பாஸ்போர்ட், வீசா வாங்குவது என்று நாட்கள் ரெக்கைகட்டிகொண்டு பறந்தது.

 விஷ்வா விடுமுறையில் தாய் வீட்டின் தூரத்து சொந்தமான மாமாவின் வீட்டிற்கு சென்றிருந்த சமயத்தில் இவை அனைத்தும் நடந்தது. அவன் மீண்டும் மலையகம் வந்ததும் மித்ராவைப் பார்க்க கஸ்தூரி பாட்டியின் வீட்டிற்கு சென்றபோது பொருட்கள் அனைத்தும் எடுத்து வைத்து கொண்டிருந்தனர்.

“பாட்டி மித்ரா எங்கே?” என்ற கேள்வியோடு வீட்டிற்குள் நுழைந்த விஷ்வாவின் பார்வை சிந்தனையோடு சுருங்கியது.

“அடடே வாப்பா விஷ்வா. என்னடா பிள்ளையைப் பார்க்காமல் ஊருக்கு கிளம்பிடுவேனே என்று ரொம்பவே வருத்தபட்டேன். நல்ல வேளை நீயே வந்துட்ட” என்று சந்தோஷப்படவே விஷ்வாவின் முகம் மாறியது.

“திடீரென்று எங்கே கிளம்பிறீங்க பாட்டி” என்று அவன் மெல்லிய குரலில் கேட்டான்.

“மித்ராவோட அப்பாவிற்கு சென்னையில் வேலை. அதனால் மித்ராவை அங்கேயே கூட்டிட்டுப் போவதாக சொன்னாரு. என்னால் அவளைவிட்டு இருக்க முடியாதுப்பா. அதுதான் நானும் அவங்களோடு கிளம்பறேன்” அவர் தகவல் சொல்லவே அவனின் மனம் சோர்ந்து போனது.

ஏற்கனவே தமையனின் பிரிவில் வாடும் விஷ்வாவிற்கு தற்போது இருக்கும் ஒரே ஆறுதல் மித்ரா மட்டும்தான். இன்று அவளும் தன்னைவிட்டு பிரிந்து செல்வதை நினைத்து மனம் வருந்தினாலும், ‘இந்த பிரிவுகூட நல்லதுக்குதான்’ என்றவன் அவளை தேடிச் சென்றான்.

வீட்டின் பின்னோடு அவள் நட்டு வைத்திருந்த செடிகளை வேடிக்கைப் பார்த்தபடி சோகமாக நின்றிருந்தாள்.

அவளை பார்க்கும் வரையில் வருத்தத்துடன் இருந்த விஷ்வாவிற்கு அவளின் மனநிலை புரியவே, “ஏய் மித்து என்ன இவ்வளவு சோகமாக இருக்கிற? மேடம் சிங்கார சென்னைக்குப் போக போறீங்க! என்னை எல்லாம் ஞாபகம் இருக்குமா?” அவளை வேண்டும் என்றே வம்பிற்கு இழுத்தான்.

விஷ்வாவின் குரல்கேட்டு சட்டென்று திரும்பிய மித்ரா, “என்னடா நானே இங்கிருந்து போக போறேனே என்ற வருத்தத்தில் இருக்கேன். நீ என்னடான்னா வந்ததும் வம்பிற்கு இழுக்கிற” என்று அழுகையூடே பேசியவள் அங்கிருந்த குச்சியை எடுத்து அவனை அடிக்க துரத்தினாள்.

அவளிடம் இருந்து தப்பிக்க நினைத்து ஓடிய விஷ்வா, “ஏய் குட்டி பிசாசே நீ போனால் எனக்கு மட்டும் சந்தோசமாக இருக்குமாடி? என்னை முழுவதும் புரிஞ்சி வைத்திருக்கும் ஒரே உயிர்தோழி நீ மட்டும்தான்” என்றபடி வேகமாக ஓடியவனை துரத்திவிட்டு அழுகையுடன் ஓரிடத்தில் நின்றிவிட்டாள் மித்ரா.

தன் பின்னோடு ஓடி வந்த மித்ராவை காணாமல் திரும்பிய விஷ்வா அவள் அழுகையுடன் நின்றிருப்பதை கண்டு, “ஷ்.. என்ன மானு? இதுக்கு எல்லாம் வருத்தபட்டால் என்ன அர்த்தம்? என் மானு ரொம்ப தைரியமான பொண்ணு இல்ல” என்று அவளிடம் பேசியபடி மெல்ல அருகே சென்றான்.

அவளின் கண்களில் கண்ணீர் பெருகுவதை கண்டு, “மானுக்குட்டி இங்கிருந்து சென்னை போய் படிச்சிட்டு மறுபடியும் மலையகம் வந்து விடுவாளாம். அதற்குள் அண்ணனும் படிப்பை முடித்துவிட்டு வந்துவிடுவான். அப்புறம் நம்ம மூணு பேரும் வழக்கம்போல சந்தோசமாக இருப்போம்” என்ற விஷ்வா அவளின் கண்ணீரை துடைத்துவிட்டான். அவன் சொன்ன ஆறுதல் அனைத்தும் அவள் மரமண்டைக்கு ஏறவே இல்லை.

“விஷ்வா ஏற்கனவே ஜித்துவை இங்கிருந்து  போனதில் இருந்து மனசே சரியில்ல. இப்போ என்னையும் சென்னை கூட்டிட்டுப்  போவதாக அப்பா வந்து நிற்கிறாரு. என்னால் ஒண்ணுமே பண்ண முடியல. நான் இங்கிருந்து போனபிறகு நீயும் வேற ஊருக்குப் போய்விட்டால் அடுத்து எப்போ எங்கே பார்ப்போம்னு நினைக்கும் போது தலையே வெடிப்பது போல இருக்குடா” என்று தன் மன பாரத்தை எல்லாம் அவனிடம் இறக்கி வைத்தாள்.

அதுவரை அவளைக் கேலி செய்து சிரிக்க வைக்க முயற்சித்த விஷ்வாவின் மனதிலும் அதே கவலை இருந்தது என்றபோதும், “நான் எங்கேயும் போகமாட்டேன். என் மானு வந்து பார்க்கும்போது இதே ஊரில் நல்ல நிலையில் இருப்பேன். என் உயிர்தோழி என்னை தேடி வருவாள் என்ற நம்பிக்கையுடன் இந்த விஷ்வா மலையகத்தில் காத்துட்டு இருப்பேன்” என்று அவளுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக பேசியவன் அவளறியாமல் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டான்.

அவனிடம் பேசிய பிறகு மனதில் இருந்த கவலை சற்றே குறைந்தது போல இருக்கவே, “நிஜமாவா விஷ்வா சொல்ற” என்று நம்பாமல் கேட்டதற்கு, “ம்ம் நான் இங்கேயேதான் இருப்பேன்” என்றவனின் குரல் கரகரத்தது.

அவள் அந்த வித்தியாசத்தை உணர்ந்து அவன் முகம் பார்க்கும்போது மழை சடசடவென்று பொழிய துவங்கிவிடவே அவனின் கண்ணீர் மழைத்துளியுடன் கலந்து மண்ணை சேர்ந்தது. மித்ரா வெகு நாட்களுக்கு பிறகு பொழியும் மழையில் தன்னை மறந்து நனைந்தாள்.

அங்கே மலர்ந்திருந்த செடியில் பூக்களை பறித்து அவளிடம் நீட்டிய விஷ்வா, “மானு இந்த பிரிவு நல்லதுக்கு நினைக்கணும். இந்த பயணம் உன் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. உனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் தட்டி கேட்கவும், தோள் கொடுக்கவும் இந்த நண்பன் இருக்கிறேன் என்பதை நீ என்னைக்கும் மறைக்காதே” என்று கூறவே புன்னகையுடன் பூக்களை வாங்கினாள் மித்ரா.

சட்டென்று தூறல் போடுவதை நிறுத்திய வானத்தை  அவள் ஏக்கத்துடன் பார்க்க, “உனக்கு ஒரு கிப்ட் கொண்டு வந்திருக்கிறேன்” என்று சொல்லி ஒரு பெரிய பார்சலை அவளிடம் கொடுத்தான்.

அவள் வியப்புடன் பார்த்தபடி, “என்ன விஷ்வா இது” என்று ரோஜா பூவை அவனிடம் கொடுத்துவிட்டு பார்சலை ஆர்வத்துடன் பிரித்தாள்.

அதில் இரண்டு புகைப்படங்கள் இருந்தது. ஒரு புகைப்படத்தில் மூன்று சைக்கிளின் முன்னே மித்ரா இந்தர்ஜித் தோளில் சாய்ந்து நின்றிருக்க மற்றொரு கரத்தில் விஷ்வாவின் கையை இறுக்கமாக பிடித்திருப்பது போல புகைப்படம் இருந்தது.

அந்த புகைப்படம் கொடுத்த செய்தியை புரிந்து கொள்ள முடியாமல், “ஏன் விஷ்வா இது என்ன ஜித்து தோளில் நான் சாய்ந்து இருப்பது போலவும், உன் கையை நட்புடன் பிடித்திருப்பது போல போட்டோவை எடுத்து பிரேம் போட்டு இருக்கிறாய்?” என்று புரியாமல் கேட்டாள்.

அவன் குறும்புடன் அவளை பார்த்து சிரித்தபடியே, “இப்போ இதுக்கான அர்த்தம் உனக்கு புரியாமல் போகலாம் மானு. ஆனால் இந்த புகைபடம் ஒருநாள் கண்டிப்பாக உண்மையாகும்னு மட்டும் மனசுக்கு தோணுது. அதுதான் இதை பிரேம் போட்டேன்” என்றவனை புரியாத பார்வை பார்த்த மித்து கேள்வி கேட்காமல் அடுத்த போட்டோவை பார்த்தாள்.

அந்த புகைப்படத்தில் விஷ்வா வலதுபுறம் சைக்கிளில் நின்றிருக்க, இடதுபுறம் மித்ரா சைக்கிளின் மீது சாய்ந்து நின்றிருந்தாள். இருவருக்கும் இடையே  இருந்த  பாதையில், “என் தோழியுடன் கைகோர்த்து பயணிக்கும் நாள் இனிதானோ..” என்ற வரிகளுக்கு கீழே விஷ்வா மித்ரா இரண்டு பெயர்களுக்கும் நடுவே ரோஜா பூ இருந்தது.

இரண்டு போட்டோவையும் பார்த்த மித்ரா, “தேங்க்ஸ் விஷ்வா” என்றவளிடம் ரோஜா பூவை நீட்டினான் விஷ்வா புன்னகையுடன்.

அவள் சிரித்த முகமாக பூக்களை வாங்கி கொள்ளவே, “இந்த புன்னகையுடன் நீ எப்போதும் இருக்கணும் மானு. நம்ம நட்பு இனி வரும் நாட்களில் நீடிக்கும். நீ உலகத்தின் எந்த எல்லைக்கு போனாலும் உன் விஷ்வாவின் நட்பு கரங்கள் உன்னை  தொடர்ந்த வண்ணம் இருக்கும்” என்று சொல்ல அவளும் நம்பிக்கையுடன் தலையசைத்தாள்.

விஷ்வாவின் நட்பு கரங்களை பற்றிகொண்டு வீட்டிற்குள் நுழையும்போது இலங்கை வானொலியில் பாடல் ஒலித்து  இருவரின் மனதையும் நிறைத்தது..

ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே
வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே

பூந்தூரலே சாமரங்கள் வீசிடுமே
நம் கண்ணிலே கவிதைகளும் பூத்திடுமே
ரங்கோலி கோலம் போல
வாழ்க்கை வண்ணம் ஆகுமே 

 

ரோஜாக்களேநம் நெஞ்சில் பூக்குமே
வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே

 

பறவைகளாய் பறவைகளாய் பறக்கும்
சின்ன வயதினிலே..
கவலைகளை கவலைகளை
காற்றில் பறக்க விடுவோமே..

பவள மல்லி பவள மல்லி பூக்கும்
அழகை ரசிப்போமே..
மணிக்கணக்கில் பூக்களிடம்
அரட்டை அடித்து சிரிப்போமே..

 

மனதில் மனதில் இசையின் சாரலே

இது தான் வாழ்வில் இனிய நாட்களே..

நினைத்து நினைத்து மகிழ்வதினால்

வாழ்க்கை இனிக்குமே..

 

ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே
வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே

 

மலர்களிடம் மலர்களிடம் தேனைக்
கொஞ்சம் கேட்போமே..
விழிகள் தரும் கனவுகளில்
தேனை அள்ளி தெளிப்போமே..

அனைவருமே விரும்பிடவே

பாசத்தோடு இருப்போமே..

புன்சிரிப்பை பரிசளித்து மனதை

கொள்ளை அடிப்போமே..

 

குழந்தை பருவம் சுகத்தின் எல்லையே

இதனை வாங்க விலைகள் இல்லையே
வாழ்வில் என்றும் மறுபடியும்
கிடைப்பதில்லையே

 

ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே
வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே

பூந்தூரலே சாமரங்கள் வீசிடுமே
நம் கண்ணிலே கவிதைகளும் பூத்திடுமே
ரங்கோலி கோலம் போல
வாழ்க்கை வண்ணம் ஆகுமே

 

இதே சந்தோசத்துடன் விஷ்வா மித்ராவின் பயணத்தை தொடக்கி வைத்தான். இனி வரும் நாட்களில் யார் எங்கே சந்திப்பார்களோ?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!