Maane – 6

images (78)

Maane – 6

அத்தியாயம் – 6

யாரின் வாழ்க்கை எங்கே தொடக்கி எங்கே முடியும் என்று யாராலும் சொல்ல முடியாது. வாழ்க்கை ஒரு அழகான ஒருவழி பாதை.

அந்த பாதையில் பயணிக்கும் நாட்களில் மனதில் நடக்கும் போராட்டங்கள், நாம் சந்திக்கும் நபர்கள், அவர்களின் மூலம் நமக்கு கிடைக்கும் நல்ல மற்றும் கசப்பான அனுபவங்கள் அனைத்தையும் அனுபவித்து கடந்து சென்று ஒருநாள் திரும்பிப் பார்க்கும்போது, ‘இவ்வளவு தான் வாழ்க்கையா?’ என்ற கேள்வியும் உதட்டில் ஒரு சிரிப்பும் வருமே அதை உணராத மானிடர்கள் இவ்வுலகில் யாரும் கிடையாது.

அப்படித்தான் மித்ராவின் சென்னை பயணமும் அமைந்தது. ஏற்கனவே அவளின் படிப்பு, வீடு, வேலை என்ற அனைத்தையும் சரியான திட்டமிட்டு இருந்தார் ரகுவரன். அவர்களின் வீட்டிற்கு வெகு அருகில் பெரிய கார்மேண்டில் மித்ராவை சேர்த்துவிட்டார்.

பாட்டி வீட்டையும், மித்ராவையும் கவனித்துக் கொள்ள அவரும் வழக்கம் போலவே வேலைக்கு சென்று வந்தார். இத்தனை நாளும் மகளின் பிரிவில் வாடியவர் இப்போதெல்லாம் அவள் மட்டுமே உலகம் என்று சொல்லும் அளவிற்கு மாறிப் போனார். மித்ராவின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாத அளவிற்கு அவரை தன் அன்பால் அரவணைத்து கொண்டாள்.

நேரம் காலம் யாருக்கும் நிற்காமல் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது. மித்ரா தன் பள்ளி படிப்பை முடிக்கும்போது எதிர்பாராத விதமாக கஸ்தூரி இயற்கை எய்தினார். அதன்பிறகு வீட்டு பொறுப்புகள் ஏற்றுக்கொண்டு தந்தையுடன் வாழ தொடங்கினாள்.

கல்லூரியில் சேர்ந்தபிறகு அவளுக்கு இருக்கும் கலகலப்பான குணத்திற்காக பல நண்பர்கள் கிடைத்தனர். எந்த நேரமும் சந்தோசம் என்று இருந்த மித்ராவின் நினைவுகள் அடிக்கடி மலையகத்தில் நடந்த நிகழ்வுகளை சுவாரசியமாக எண்ணி பார்ப்பதுண்டு. இன்றுவரை அவளின் நினைவுகளை முழுவதுமாக ஆக்கரமித்திருந்தனர் இந்தர்ஜித் மற்றும் விஷ்வா.

மித்ரா விருப்பப்பட்டு தேர்வு செய்த கம்பியூட்டர் இஞ்சினியரிங் படிப்பின் இறுதியாண்டில் அடியெடுத்து வைத்திருந்தாள். அன்று வகுப்பில் எல்லோரும் அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை பகிரும்படி ஆசிரியர் சொல்லவே ஒவ்வொருத்தரும் தன் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களை சொல்லிக்கொண்டே வந்தார்.

அதையெல்லாம் வழக்கம்போலவே கன்னத்தில் கைவைத்துக்கொண்டு கதை கேட்டுக் கொண்டிருந்தாள் சங்கமித்ரா. இருபத்தி ஒரு வயதிற்கே உரிய அழகுடன், கலகலப்பான பேச்சு, எந்த நேரமும் பட்டாம்பூச்சி போல சுற்றி திரியும் மித்ராவிற்கு காலேஜில் பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது என்று சொன்னால் அது மிகையில்லை.

இன்றைய டாப்பிக்கில் மித்ராவின் பதில் என்னவாக இருக்குமென்ற யோசனையில் அமர்ந்திருந்த சம்யுக்தாவோ, “மித்து நீ என்ன நிகழ்வதை சொல்ல போறேன்னு சொல்லுடி. அதுக்கு பிறகுதான் நான் என் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று யோசிக்கணும்” என்று சொன்னவளை வேற்றுகிரக வாசியைப் போல பார்த்தாள் சங்கமித்ரா.

“ஏண்டி உன் வாழ்க்கையில் நடந்ததை சொல்லுன்னு கேட்டால் அதை சொல்லாமல் என் வாழ்க்கையில் நடந்ததை சொல்லு அதுக்கு பிறகு யோசிக்கிறேன்னு சொல்ற. பரிச்சையில் காபி அடித்தால் பரவல்ல பொழச்சுப் போன்னு விடலாம். இதில் கூட காபியடிக்கணுமா?” என்று தோழியின் தலையில் நறுக்கென்று கொட்டினாள்.

“ஆ.. ஏய் பிசாசே கேள்வி கேட்டால் பதில் சொல்லணும்.. அதை விட்டுட்டு இப்படியெல்லாம் குழந்தை பிள்ளையைக் கைநீட்டி அடிக்க கூடாது” என்றவளை முறைத்துவிட்டு மீண்டும் தன் கவனத்தை பேசுபவர்களின் பக்கம் திருப்பிவிட்டாள்.

ஒவ்வொருத்தரின் நிகழ்வை சொல்லும்போதும் மித்ரா வயிற்றை பிடித்துகொண்டு இருப்பதை பார்த்த சம்யுக்தா, “உலகத்தில் இருக்கிற மொத்த சந்தோஷத்தையும் குத்தகைக்கு எடுத்து மாதிரி எவ்வளவு சந்தோசமாக இருக்கிற.. நமக்கு சிரிப்பே வரமாட்டேங்குதே.. ஒருவேளை ப்ராடக்ட் தயாரிப்பில் ஏதாவது தவறு நடந்திருக்குமோ” என்று தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தாள்.

அப்போது மித்ராவின் டர்னிங் வரவே, “நான் இலங்கையில் இருந்து வந்த பொண்ணு உங்க எல்லோருக்கும் நன்றாக தெரியும். அங்கே மலையகம் என்ற இடத்தில் தான் நான் எட்டாம் வகுப்பு வரை படிச்சேன். அங்கே எனக்கு நெருங்கியவர்கள் இந்தர்ஜித்தும், விஷ்வாவும் தான். இவங்க இருவரும் எனக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வாங்க” என்றவளை தடுத்தது கொண்டிருக்கும் சுரேஷின் குரல்!

“அப்போ அவங்க இருவரும் உன் லவ்ரா மித்ரா. இந்த காலேஜில் உனக்கு லவ் லெட்டர் கொடுத்த பசங்க எல்லோரின் நிலைமையும் அந்தரத்தில் விட போறீயா? பாவம் நம்ம பசங்க தாடி வளர்த்துட்டு பொண்ணுங்களை நம்பி கெட்டு போவாங்க ரொம்ப அந்த வரிசையில் நானும் இப்போ கடைசியா நின்னேன்னு பாடி புலம்ப போறானுங்களா” என்று கேட்டதும் கிளாசில் விசில் சத்தம் பறந்தது.

“மச்சி சூப்பர்டா. மித்து முதலில் மச்சான் கேள்விக்கு பதில் சொல்லிட்டு அப்புறம் உன் கடந்த காலத்தை சொல்லிடி” என்று மித்ராவின் மற்றொரு தோழி குரல் கொடுத்தாள்.

“ஏய் இப்போ நான் நடந்ததை சொல்லணுமா? இல்ல இந்த சுரேஷ் கேள்விக்கு பதில் சொல்லணுமா? நான் ஒரு கேள்விக்கு மட்டும்தான் பதில் சொல்வேன். அது ஏதுன்னு தெளிவாக சொல்லுங்கப்பா” என்று கலகலவென்று சிரித்தாள் மித்ரா. அவளின் அதிரடியான பேச்சில் அதிர்ந்தது அவர்களின் வகுப்பறை.

“அம்மா தாயே நீ உன் கடந்த காலத்தின் நிகழ்வையே சொல்லும்மா. அப்புறம் மத்த கதையெல்லாம் கேட்டுக்கறோம்” என்று சுரேஷ் கையெடுத்து கும்பிட்டான்.

அவள் வாய்விட்டு சிரித்தபடி, “ஆடின கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்ணாக இருக்கிறாயே சுரேஷ். அது எப்படின்னு எனக்கும் கொஞ்சம் சொல்லிகொடுடா” என்று அவனை வம்பிற்கு இழுத்தாள் மித்ரா.

“மித்ரா உன் விளையாட்டை ஓரம் கட்டிட்டு பதிலை சொல்லிரு. இல்ல உன்னை ரவுண்டு கட்டி அடித்தாலும் அடிப்போம். அப்புறம் எங்களை எல்லாம் தப்பு சொல்லக்கூடாது” என்று சம்யுக்தா வேகமாக சவுண்ட் கொடுக்கவே மற்றவர்களும் அவளை பின் தொடர்ந்தனர்.

“சரி சரி சொல்றேன். அந்த ஸ்கூலில் என்னை  சேர்த்துவிட்ட முதல் நாளே மூவரும் ஒன்றாக சாப்பிட அமர்ந்தபோது வினோத் அண்ணா வேணும்னு உன்னை மாதிரிதான் அவங்க இருவரும் லவ்வர்னு சொல்லி என்னை வம்பிற்கு இழுக்க கல்லை எடுத்து வீசிட்டேன்” என்றாள் குறும்புடன் கண்சிமிட்டி.

“அப்புறம் என்னாச்சு” என்றான் சுரேஷ் ஆர்வமாக!

“ம்ம் நான் வீசிய கல்லு எங்க டீச்சர் மண்டையை பதம் பாத்துவிட்டது. அவங்க என்னை வந்து அதட்டி கேள்வி கேட்டாங்க. நான் வினோத் அண்ணாவை மாட்டிவிட்டு விட்டேன். ஜித்து, விஷ்வா இருவரும் எனக்காக பொய் சாட்சி சொல்லவே அந்த அண்ணாவுக்கு அன்னைக்கு முழுக்க கிளாஸ் ரூமிற்கு வெளியே நிற்க வெச்சிட்டாங்க” அன்றைய நாளின் நினைவில் தன்னை மீறி கலகலவென்று சிரித்தாள் மித்ரா.

“அடிப்பாவி நீ செய்த தவறுக்கு அந்த அண்ணாவுக்கு பனிஸ்மென்ட் வாங்கி கொடுத்தியா? அதுக்கு உன் பிரெண்ட்ஸ் இருவரும் பொய் சாட்சி சொன்னாங்களா? இதெல்லாம் பண்ணிட்டு வந்துதான் இங்கே இவ்வளவு பவ்வியமாக இருக்கிறாயா?” என்று வாயைப் பிளந்தாள் சம்யுக்தா.

மித்ரா அதற்கு பதில் சொல்லாமல் சிரிக்கவே, “ஏன் மித்து அதுக்கு பிறகு அவங்க இருவரையும் நீ பார்க்கவே இல்லையா?” என்று அவளிடம் அக்கறையுடன் விசாரித்தான் சுரேஷ்.

சட்டென்று அவளின் முகம் மாறிவிடவே, “மலையகத்தில் இருந்து நான் வந்து எட்டு வருடங்கள் ஆச்சு. இன்னும் அவங்களைப் பார்க்கல.  இருவரும் எங்கே எப்படி இருக்காங்கன்னு தெரியாது. இந்த வருடம் படிப்பை முடிச்சிட்டு ஊருக்கு போகலாம்னு இருக்கேன்” என்றாள்.

அங்கிருந்த அனைவருமே அவளுக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர். யாருக்காகவும் நிற்காமல் நாட்கள் ரெக்கைகட்டி கொண்டு பறந்தது. அவள் கல்லூரி இறுதி தேர்வை முடித்துவிட்டு வீடு வரும்போது ரகுவரன் சிந்தனையோடு ஹாலில் அமர்ந்திருந்தார்.

“என்னப்பா இன்னைக்கு வேலைக்குப் போகவில்லையா?” என்ற கேள்வியுடன் வீட்டிற்குள் நுழைந்த மகளை நிமிர்ந்து பார்த்தார்.

“இல்லம்மா..” என்றவரின் குரலில் இருந்த மாறுதலை உணர்ந்து அவரின் அருகே சென்று அமர்ந்தாள்.

“என்னாச்சுப்பா ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க” தந்தையின் முகத்திலிருந்த சிந்தனையை கவனித்துவிட்டு கேட்டாள்.

“நாம மறுபடியும் இலங்கையே போய்விடலாமா பாப்பா. எனக்கு என்னவோ அங்கே போகணும் போல இருக்கு. கடைசி காலத்தில் என் மனைவியுடன் நான் வாழ்ந்த நினைவுகளை அசைபோட அதுதான் சரியான இடம்னு மனசு சொல்லுது” என்றவரின் பார்வையோ சுவற்றில் மாட்டப்படிருந்த மனைவியின் புகைப்படத்தில் நிலைத்தது.

சங்கமித்ரா ஏற்கனவே இலங்கை செல்ல வேண்டும் என்ற முடிவில் இருந்ததால், “சரிங்கப்பா. நீங்க அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் கவனிங்க” என்று சொல்லிவிட்டு எழுந்து அறைக்குள் சென்று மறைந்தாள்.

ரகுவரனும் மகள் சம்மதம் சொல்லிவிட்ட சந்தோசத்தில் தன் வேலைகளில் ஈடுபட்டார். அன்று ஊருக்கு செல்ல தேவையானவற்றை எல்லாம் மித்ரா பேக் செய்து கொண்டிருந்தாள். திடீரென்று அவளின் செல்போன் சிணுங்கவே  திரையில் தெரிந்த இலக்கத்தை பார்த்துவிட்டு போனை எடுத்தாள்.

“ஹலோ சம்மு சொல்லுடி” என்றாள் சாதாரணமாகவே.

“மித்து ரோட்டில் பெரிய ஆக்சிடெண்டில் ஒருத்தருக்கு நிறைய பிளட் லாஸ் ஆகிருச்சு. அந்த பிளட் பிளட் பேங்க்ல ஸ்டாக் இல்ல. நீ கொஞ்சம் போய் பிளட் கொடுத்துட்டு வருகிறாயா?” என்று வேகமாக போன் செய்த விவரத்தைக் கூறினாள்.

தன் அறையில் இருந்த கடிகாரத்தை பார்த்த மித்ரா, ‘அப்பா வீட்டிற்கு வருவதற்குள் போய்விட்டு வந்து விடலாம்’ என்ற எண்ணத்தில், “சரி நீ அட்ரஸ் அனுப்பு. நான் போயிட்டு வரேன்” என்றவள் போனை துண்டித்துவிட்டு தயாரானாள். அதற்குள் சம்யுக்தா ஹாஸ்பிட்டல் முகவரியை அனுப்பி வைக்கவே மித்ரா அந்த இடத்திற்கு சென்றடைந்தாள்.

அவள் சென்றவுடன் ரிசப்ஷனில் தன் பெயரைச் சொல்லி பிளட் டொனேட் பண்ணிட்டு வெளியே வரும்போது, “தேங்க்ஸ் சிஸ்டர். நீங்க செய்த இந்த உதவியை கடைசி வரையில் மறக்க மாட்டேன்” என்று அவளை கையெடுத்து கும்பிட்டான்.

சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ஏன் சார் ரோட்டில் வரும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக வருவதில்லையா? இப்போ அவர் உயிருக்கு ஏதாவது ஆகிருந்தால் அவங்க வீட்டில் யார் பதில் சொல்லுவாங்க” என்று கோபத்துடன் கேட்டாள்.

ஏற்கனவே பெசண்ட் நிலையைப் பற்றி நர்ஸிடம் விசாரித்ததில் வழக்கத்திற்கும் அதிகமான வேகத்தில் வாகனத்தை ஓட்டியதால் விபத்து நடந்திருப்பதாக சொன்னவுடன் அவளுக்கு கோபம் வரவே அதை அந்த பெசண்ட்டின் நண்பரிடம் காட்டிவிட்டாள்.

அவளை திகைப்புடன் பார்த்தவன் என்ன நினைத்தானோ, “மேடம் அது விபத்து இல்ல. அவன் தற்கொலைக்கு முயற்சி பண்ணிருக்கான். எங்களால் அதை தடுக்க முடியல” என்று தயங்கியபடி உண்மையைச் சொன்னான்.

“வாட் தற்கொலை முயற்சியா? ஏங்க அவருக்கு என்ன லூசா? இந்த வயதில் சாகும் அளவிற்கு அவருக்கு என்ன பிரச்சனை?” எரிந்து விழுந்தாள் மித்ரா.

அவளிடமிருந்து இப்படியொரு கேள்வியை எதிர்பார்க்காததால், “அவன் அப்பா, அம்மாதான் அவனோட மெயின் பிரச்சனை. அதனால் ரொம்ப நாளாகவே மன அழுத்தில் இருந்தான். இன்னைக்கு அவங்க அப்பா போன் செய்து என்ன பேசினாரோ தெரியல. கொஞ்சநேரம் கோபத்தில் இருந்தவன், ‘எனக்கு சாகணும் போல இருக்குடா’ என்று சொல்லிட்டு கிளம்பி வந்துட்டான்” நடந்ததை ஒப்பித்துவிட்டு அவளை நிமிர்ந்து பார்த்தான்.  

அதற்குள் அடிப்பட்ட நபருக்கு சிகிச்சை முடித்துவிட்டு வெளியே வந்த டாக்டர், “தம்பி உங்க நண்பரை காப்பாத்திட்டோம். ஆனால் காலில் முறிவுக்கு ஆப்ரேசன் பண்ணிருகோம். அதனால் இனிமேல் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க சொல்லுங்க” என்றவுடன் அவரும் சரியென்று தலையசைத்தான்.

அப்போது தான் மித்ரா அங்கே நிற்பதை கவனித்த டாக்டர், “என்னம்மா பெசண்ட் நிலையை விசாரிச்ச பிறகு போலாம்னு அப்படியே நின்னுட்டு இருக்கிற போல” என்று கேட்கவே அவளும் ஒப்புதலாக தலையசைத்தாள்.

“இன்னும் கொஞ்ச நேரத்தில் நார்மல் வார்டுக்கு மாத்திடுவாங்க மித்ரா நீ போய் பார்த்துட்டுப் போ” என்றார்.

ஏற்கனவே அந்த மருத்துவமனையில் எல்லோருக்கும் மித்ராவைப் பற்றி நல்லாவே தெரியும். அவள் யாருக்கு ரத்தம் தேவை என்றாலும் உடனே கிளம்பி வந்துவிடுவாள். அதே நேரத்தில் அவர்களின் உயிருக்கு ஆபத்தில்லை என்று தெரிந்தபிறகு அவர்களை நேரில் பார்த்துவிட்டு வீட்டிற்கு செல்வது அவளின் வழக்கம். அதனால் தான் டாக்டர் அவளுக்கு தகவல் கொடுத்துவிட்டு சென்றார்.

அவர் அங்கிருந்து நகர்ந்தவுடன் பெசண்ட்டின் நண்பரை முறைத்தவள், “இப்படியொரு நண்பன் இருப்பதற்கு இல்லாமல் இருப்பது எவ்வளவோ பெட்டர். நான் சாகப்போறேன்னு சொல்லிட்டு கிளம்பியவரை தடுக்காமல்  இருந்திருக்கீங்க என்றால் நீங்க எவ்வளவு நல்லவராக இருக்கணும்” என்று தன் கோபத்தை காட்டிவிட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

அவளிடம் அத்தனை பேச்சு வாங்கிய பிறகும் பொறுமையை இழுத்து பிடித்து நின்றிருந்தவனின் மனதில், ‘இந்த பெண்ணை எங்கோ பார்த்து அதிகநாள் பழகிய மாதிரியே இருக்கிறதே’ என்ற சிந்தனையில் ஆழ்ந்தான்.

சிறிதுநேரத்தில் பேசண்டை நார்மல் வார்டிற்கு மாற்றிவிட்டதாக தகவல் வரவே, “நீங்க போய் பார்க்கிறீங்களா? இல்ல நான் முதலில் பார்த்துவிட்டு கிளம்பட்டுமா?” என்று கேட்கவே அவளை போக்கும்படி சொல்லி கைகாட்டியவன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து யோசித்தான்.

அந்த அறையின் கதவை திறந்து உள்ளே நுழைந்த மித்ரா படுக்கையில் உடல் முழுவதும் காட்டுடன் கிடந்தவனின் அருகே சென்றாள். 

தலையில் அடிப்பட்ட காரணத்தினால் பெரிய கட்டு போடபட்டிருக்கவே, “இவ்வளவு சீக்கிரம் சாக நினைக்கின்ற அளவிற்கு உனக்கு என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது. ஆனால் உன் அப்பா, அம்மா பிரச்சனையை மட்டும் மையமாக வைத்துக்கொண்டு நீ தற்கொலைக்கு முயற்சி பண்ணியது தவறு. அவங்க எப்படி இருந்தா உனக்கு என்ன? நீ உன் விருப்பபடி வாழ பழகு. அவங்களையும் தாண்டி இந்த உலகில் உனக்கு நிறைய உறவுகள் இருகிறது. இன்னைக்கு உன் வாழ்க்கையில் கஷ்டம் மட்டுமே இருக்கு என்பதற்காக கவலைபடாதே. சீக்கிரமே இந்த நிலையெல்லாம் மாறும். இன்னொரு முறை இந்த தவறை செய்யாதே..” என்று அவனின் கரங்களை பிடித்துக்கொண்டு தைரியம் கொடுக்கும் வண்ணம் பேசினாள்.

அவன் மயக்கத்தில் இருந்தபோதும் அவள் பேசுவது அனைத்தும் அவனின் செவிவழியாக சென்று இதயத்தின் ஆழத்தில் புதைந்திருந்த மித்ராவின் பளிங்கு முகத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியபோது, “நான் சங்கமித்ரா. இன்னொரு முறை உங்களை நான் வேறொரு நல்ல சூழ்நிலையில் சந்திக்க விருப்பப்படுகிறேன். அப்போது நீங்க குணமாகி இருக்கணும் அது மட்டும் தான் என் வேண்டுதல்” என்று அவனின் கரத்தை விட்டுவிட்டு விலகி சென்றாள்.

அந்த அரை மயக்கத்தின் நடுவே அவனின் உதடுகள் “மி..த்..து..” என்று அவளின் பெயரை அழகாக உச்சரித்தது. அந்த அறையைவிட்டு வெளியே வந்தவள் அவனின் நண்பனிடம் பெசண்ட் பெயரை கேட்டதற்கு, “இந்தர்” என்றான் அவன்.

“ஓகே அவரை பத்திரமாக பார்த்துகோங்க” என்றவள் மற்றொரு கையில் சம்யுக்தாவிற்கு அழைத்தபடி வெளியே சென்றாள். பல வருடங்கள் பார்க்காமல் இருந்ததால் அடிப்பட்டு படித்திருப்பவன் இந்தர்ஜித் என்றும், தன்னிடம் பேசிய அவனின் நண்பன் வினோத் என்ற உண்மையும் அவளுக்கு தெரியாமல் போனது.

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!