images (88)

அத்தியாயம் – 9

இந்தர்ஜித் அவளைத் தேட தொடங்கிய நாளிலிருந்து சங்கமித்ரா அவனின் கண்களில் சிக்கவில்லை என்றே சொல்லாம். ஒவ்வொரு நாளும் கடக்கும்போது, ‘இன்னைக்கு அவளை பார்த்துவிட மாட்டோமா?’ என்ற எண்ணம் தோன்றவே அதிலிருந்து தப்பிக்க நினைத்து வேலையில் தன்னை மூழ்கடித்து கொண்டான்.

என்னதான் அவன்  பகல் பொழுதுகளில் ஆயிரம் வேலைகள் செய்து மனதை மாற்றிய போதும் இரவு நேரங்களில் மித்ராவின் நினைவிலிருந்து அவனால் தப்பிக்க முடியவில்லை. கிட்டதட்ட எட்டு வருடங்கள் மனதில் நீங்கமற நிறைந்திருக்கும் மித்ராவின் இடத்தில் அந்த பெண் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறாள் என்ற உண்மையை உணர்ந்து கொண்டான்.

அவளை தவிர தன் மனதில் இடம்பிடிக்க வேறொரு பெண்ணால் முடியவே முடியாது என்ற எண்ணத்தோடு ஒவ்வொரு நாளையும் கடத்த தொடங்கினான்.

அன்றும் அதுபோலவே நிறுவனத்தில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த இந்தர் முகத்தை அலம்பிவிட்டு வந்து படுக்கையில் அமர்ந்தவனின் மனம் முழுவதும் அந்த பெண்ணையே சுற்றி வந்தது. தன்னிடம் இருந்த ஆல்பத்தை எடுத்து சிறிய வயது போட்டோகளை பார்க்க தொடங்கியவனின் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் வரிசைகட்டி நின்றது.

அந்த பெயர் தெரியாத பெண்ணின் எதிர்பாராத இரண்டு சந்திப்புகளுக்கும், தன்னுடைய மித்ராவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்ற சிந்தனையோடு அமர்ந்தவனின் கைகள் மட்டும் தன வேலையை சரிவர செய்ய அவனின் கவனம் முழுவதும் வேறு எங்கோ இருந்தது.

‘அப்பா, அம்மா இருவரும் பிரிஞ்சு வாழும் வாழ்க்கையைப்  பார்த்தே வளர்ந்த நான் என் மித்துவிற்கு சரியான துணையாக இருப்பேனா?’ என்ற கேள்வியை பலமுறை தனக்குள் கேட்டுக் கொண்டான்.

ஆனால் அந்த கேள்விக்கு, ‘இதை நீ முன்னாடியே யோசிச்சு காதலை வரவிடாமல் பண்ணிருக்கணும். இப்போ வந்து இப்படி கேட்டால் நான் என்ன செய்யறது?’ என்று அவனிடம் விளக்கம் கேட்டது மனது.

ஒவ்வொரு நாளின் முடிவிலும், ‘இந்த நிலை மாறவே மாறாதா? என் வாழ்க்கையில் வெறுப்பும், தனிமையும் தான் நிரந்தரமான துணையா?’ என்ற கேள்வி எழுந்து அவனை நிம்மதி இழக்க செய்துவிடும்.

சில நேரங்களில், ‘நான் ஏன் இப்படி இருக்கேன். நேரில் சென்று என் மித்துவிடம் காதலை சொல்லிட்டா என்ன?’ என்ற சிந்தனை ஒருப்பக்கம் நெரிஞ்சிமுட்களை போல குத்தும்.

தாய், தந்தையைப் பார்த்து அவன் நெஞ்சில் எழுந்த திருமணத்தின் மீதான கசப்பான உணர்வு மெல்ல மறைய தொடங்கிவிடவே, ‘மற்றவர்களைப்போல் நானும் வாழமாட்டேனா? எனக்காக என் மனைவி, குழந்தைங்க இருக்காங்க என்று நினைக்கும் ஒருநாள் என் வாழ்க்கையில் வரவே வராதா?’ என்ற ஏக்கம் வரத் தொடங்கியது.

இந்த எண்ணங்களுக்கு இடையே அவன் சிக்கி தவிக்கும் சமயத்தில் தான் பாஸ்கரனின் பேச்சு அவனின் மனநிலையை முற்றிலும் மாற்றியமைத்தது. இப்போது அவனின் மனம் சொல்லும் ஒரே விஷயம், ‘நீ அவளை விரும்புவது உண்மை என்றபோதும், அவள் உன்னை காதலிப்பாள் என்று உறுதியாக சொல்ல முடியுமா?’ என்ற எண்ணம் எழுந்தது.

அவன் மனம் இதற்கும், அதற்கும் ஊஞ்சலாடவே ஆல்பத்தை மூடிவைத்துவிட்டு, “ஐயோ மித்து எனக்கு பைத்தியமே பிடிக்கிறதே? நான் ஏன் உன்னை உயிராக நேசித்தேன். எனக்கு காரணமே புரியலடி.. ப்ளீஸ் மித்து என் கேள்விக்கு பதில் சொல்லுடி” என்று வலியோடு கூறிய இந்தர் தன் போனில் பாடலை ஒலிக்க விட்டான்.      

“காதல் கேட்டுக்கொண்டு வருமா? தோட்டத்துக்குள் பறவை வந்தால் வேலி என்ன தடுத்திடுமா?

காதல் காட்டுச்செடி போலே கட்டளைகள் போடும்போதும் பூக்கள் பூக்க மறுத்திடுமா?” என்ற வரிகளை கேட்டபிறகு அவனின் உதடுகளில் புன்னகை அரும்பியது.

வாழ்க்கையின் நிதர்சனமே இதுதானோ? வேண்டாம் என்பவருக்கு வரங்கள் கிடைப்பதும், வேண்டும் என்பவர்களுக்கு சாபமே பரிசாக வழங்கபடுவதும் தான் விதியின் விளையாட்டா? விடையறியாத கேள்விகளை மனதில் தேக்கியபடி விழி மூடிய இந்தரின் கண்ணிமைக்குள் வந்து நின்றாள் மித்ரா.

மறுநாள் காலை விடியல் அழகாக விடிந்தது…

இந்தர்ஜித் வழக்கம்போல கிளம்பிச் செல்வதைக் கண்ட பாஸ்கர் எதுவும் பேசவில்லை. தன்  மகனுக்கு பிறந்தநாள் என்று தெரிந்தபோதும், ‘என்னிடம்  பேசாதவனிடம் நானே வழிய சென்று வாழ்த்து சொல்ல வேண்டுமா?’ என்ற எண்ணத்துடன் தன் வேலையைக் கவனிக்க சென்றார்.

இந்தர்ஜித் சாலையில் கவனத்தைப் பதித்தபடி தன் போக்கில் காரை செலுத்தியவனின் கண்களில் விழுந்தாள். அவள் ஒரு கேக் ஷாப் உள்ளே நுழைவதைக் கண்டவன், ‘இன்னைக்கு இவளிடம் பேசணுமே..’ என்றவன் வேகமாக காரை பார்க் செய்துவிட்டு அந்த கடைக்குள் நுழைந்தான்.

அவள் பெரிய டைரி மில்க் சாக்லேட் வாங்கி கை பைக்குள் பத்திரப்படுத்துவதை கண்டவனின் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது. அவளின் அருகே சென்று, “ஸார் ஹார்ட் சாக்லேட் கொடுங்க” என்று கேட்டான்.

இவனின் குரல்கேட்டு திரும்பியவளின் விழிகள் வியப்பில் விரியவே, “ஹலோ ஸார்.. எப்படி இருக்கீங்க.. உங்களைப் பார்த்தே பலநாள் ஆச்சு.. என்ன சார் குழந்தைக்கு சாக்லேட் வாங்க வந்தீங்களா? அந்த குட்டிஸ் உங்களோட வந்திருக்கிறாளா?” கேள்விகளை அடுக்கிவிட்டு அவனின் பின்னோடு குழந்தையை தேடினாள்.

அவள் இவ்வளவு இயல்பாக பேசுவதை மனதிற்குள் குறித்துக்கொண்டு, “அவ அவங்க அம்மாவுடன் ஸ்கூலுக்குப் போயிருப்பாள். சாயங்காலம் வந்ததும் வந்து சாக்லேட் கேட்பா. அதுதான் இப்போவே வாங்கி வைக்கிறேன்” என்றதும் சரியென்று தலையசைத்தவளிடம், “மேடம் நீங்க கேட்ட கேக்” என்று சொல்லி பார்சலை நீட்டினார்.

மித்ரா புன்னகையோடு வாங்கிகொண்டு பில்லுக்கு பணத்தை செலுத்திவிட்டு, “சரிங்க ஸார் நான் கிளம்பறேன்” என்றவளின் வழியை மறித்து நின்றான் இந்தர்.

அவள் அவனைக் கேள்வியாக நோக்கிட, “இன்னைக்கு எனக்கு பிறந்தநாள் இந்தா நீயும் சாக்லேட் எடுத்துக்கோ” என்று அவளிடம் நீட்டினான்.

அவள் மறுப்பு சொல்லாமல் அவனின் கையிலிருந்த சாக்லேட்டை எடுத்துகொண்டு, “பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார். இந்த வருடம் போலவே இனிவரும் அனைத்து வருடங்களிலும் நீங்க சந்தோசமாக இருக்கணும்னு கடவுளை வேண்டிக் கொள்கிறேன்” என்றாள் புன்னகையுடன்.

“தேங்க்ஸ்” என்றவன் அவளின் வழியை விட்டு விலகி, சாக்லேட்டிற்கு பணத்தை எடுத்து கடைகாரரிடம் கொடுத்துவிட்டு நின்றிருந்தான்.

ஏனென்றே அறியாமல் அவனைப் பார்த்தவுடன் அவளின் வழக்கமான குறும்புத்தனம் தலைதூக்கியது. தன் கையிலிருந்த ஹார்ட் சாக்லேட்டில் ஒன்றை பிரித்து வாயில் போட்டுவிட்டு, “ஐயோ என் இதயத்தை காணமே” என்று சத்தமாக அலறினாள். அங்கிருந்த அனைவரும் அவளைத் திரும்பிப் பார்க்க இந்தருக்கு தூக்கிவாரிப் போட்டது.

“ஏய் என்னாச்சு” என்று அவன் பதட்டத்துடன் அவளின் அருகே வரவே, “இங்கே பாருங்க நீங்க என்னிடம் கொடுத்த இதயத்தை காணோம். ஏன் இப்படி இதயத்தை கொடுத்துட்டு எனக்கே தெரியாமல் அதை திருடி வைத்துகொண்டு என்னை ஏமாத்துறீங்களே இது உங்களுக்கே நியாயமா?” என்று சிணுங்கியவள் ஹார்ட் சாக்லேட் கவரை அவனின் முன்னாடி நீட்டினாள்.

அவனுக்கு அவள் சொன்ன விஷயம் புரியாமல் போகவே, “என்னங்க கவரை மட்டும் காட்டுறீங்க? இதிலிருந்த சாக்லேட் எங்கேங்க?” என்றான் குழப்பத்துடன்.

“அதையேதான் நானும் கேட்கிறேன் என்னிடம் கொடுத்த உங்க இதயம் எங்கே?” என்று அவனை மேலும் குழப்பியவளின் கண்களில் மின்னி மறைந்த குறும்பைக் கண்டு அவளின் விளையாட்டைப் புரிந்துகொண்டான் இந்தர். தன்னையும் மீறி அவளின் மீது பார்வையை படரவிட்டவனின் மனம் சிறகில்லாமல் வானில் பறந்தது.

“இன்னைக்கு ஏப்ரல் 1. அதனால் என்னை ஏமாற்றலாம் என்று முயற்சி பண்ணாதீங்க. பிறந்தநாள் அதுவுமாக ஏமாறுவது வருஷம் முழுக்க ஏமாறுவதற்கு சமம். சோ உங்க விளையாட்டை இதில் வைச்சுக்காதீங்க” என்றான்.

‘என் எண்ணவோட்டத்தை கணித்துவிட்டானே’ என்ற நினைவுடன், “பரவல்ல ரொம்ப அலர்ட்டா இருக்கீங்க. சரி பொழச்சு போங்க” என்று சொல்லிவிட்டு, “இந்த வருடம் நீங்க நினைச்சது எல்லாமே நடக்கும். யாரிடமும் எதார்க்காகவும் ஏமார்ந்து நிற்கும் நிலை வரக்கூடாதுன்னு என் இஷ்டதெய்வம் ஆஞ்சிநேயரிடம் வேண்டிக்கிறேன்..” என்றவல் கடையைவிட்டு வெளியே சென்றாள்.

அப்போதுதான் அவளிடம் பெயர் கேட்காமல் பேசியது நினைவு வரவே, “ஏங்க உங்க பெயர்” என்றான்.

அவனின் குரல்கேட்டு சட்டென்று திரும்பிப் பார்த்தவள், “மித்ரா..” என்றாள் புன்னகையோடு.

அவள் அவனை கேள்வியாக நோக்கிட, “என் பெயர் இந்தர்” என்று அவளின் பார்வை புரிந்து பதில் கொடுத்தான்.

“சூப்பர் பெயர்.. சரி இந்தர் நம்ம இன்னொரு நாள் மீட் பண்ணலாம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள். இந்த சந்திப்பில் இருவருமே சொல்லி வைத்தார் போல ஒரு தவறை செய்தனர். அவன் தன் பெயரின் முன்பகுதியையும், இவள் தன் பெயரின் பின்பகுதியையும் கூறினார். அதை இருவரும் கவனிக்க மறந்தனர்.

அதன்பிறகு அடிக்கடி இருவரும் சந்தித்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. இருவரின் எண்ணவோட்டமும் ஒன்று போலவே இருந்தது. சில நேரங்களில் ரசனைகளும் ஒரே மாதிரி இருக்கவே நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்க தொடங்கியது.

மித்ராவின் மனமோ, ‘இங்கே வந்து ஒரு வருடம் ஆனபிறகும் இன்னும் ஜித்துவை பார்க்க முடியலையே.. ஒரு வேலை நான் பழகும் இந்தர்தான் ஜித்துவாக இருப்பானோ? இல்லன்னா அவன் இந்த ஊரிலேயே இல்லையா? படிப்பை முடித்ததும் என்னையும், விஷ்வாவையும் தேடி மலையகம் போயிட்டானோ.. நான்தான் அவங்க இருவரையும் பொய் பார்க்காமல் இருக்கிறனா?’ என்ற குழப்பத்துடன் இருந்தாள்.

ஒவ்வொரு நாளின் முடிவிலும் அவளின் தேடல் மட்டும் முடிவிற்கு வராமல் இருப்பதை நினைத்து மனதிற்குள் வருந்தப்பட தொடங்கினாள். இன்னொருபுறம் அலுவலகத்தில் விடுப்பு கேட்டு அவளுக்கு சலித்துப் போனது.

இதற்கிடையே ஒருமுறை சம்யுக்தா அழைத்து, “என்னடி உங்க ஊருக்குப் போனதும் என்னை மறந்துவிட்டாயா?” என்று அவளிடம் சண்டைப் போட்டாள்.

“ஸாரிடி வீட்டிலும், ஆபீசிலும் வேலை சரியாக இருக்கு. உங்களை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா?”  என்றாள் சாதாரணமாகவே.

“ம்ம் நீ எங்களை மறக்கவே இல்லன்னு முழுசா நம்பிட்டேன்” என்று பொய்யாக கூறியவளின் முகத்தில் குறும்பு கூத்தாடியது.

“நான் என்ன சொன்னாலும் நீ நம்ப மாட்டேன்னு நல்லாவே தெரியுது.. ஆமா என்ன  விஷயம் திடீர்னு போன் பண்ணிருக்கிற?” என்று அக்கறையுடன் கேட்டாள்.

அவளின் கேள்வியில் கடுப்பான சம்மு, “ஏண்டி நீ இப்படி மாறிட்ட.. ஒரு உயிர் தோழியிடம் பேசக்கூட காரணம் வேணுமா? ஏன் நாங்க எல்லாம் சும்மா போன் பண்ணக் கூடாதா? இந்தர்ஜித், விஷ்வாவையும் பார்த்தும் எங்களை எல்லாம்  மறந்துட்ட இல்ல நீ” என்று அவளை கேலி செய்துவிட்டு கலகலவென்று சிரித்தாள் சம்யுக்தா.

“ஏண்டி நீயும் என் வயிற்றெரிச்சலை வாங்கிக் கொட்டிக்கிற?” – சங்கமித்ரா.

“என்னாச்சு மித்ரா?” என்று புரியாமல் குழப்பத்துடன் கேட்டவளிடம் மனதில் இருந்ததை கொட்டி தீர்த்தாள் மித்ரா.

சம்யுக்தா அமைதியாக இருக்கவே,“ஒருப்பக்கம் சின்ன வயதிலிருந்து ஜித்து மீது வைத்த அன்பு படிப்படியாக வளர்ந்து காதலாக மாறிடுச்சு. இப்போ இந்தர் பக்கம் மனசு சாய்வதை நினைச்சாளே ரொம்ப பயமாக இருக்குடி” என்றாள்  கவலையோடு.

அவள் சொல்வதை பொறுமையாக கேட்டு முடித்தவள், “அவனோட பேச்சு வார்த்தையை கட் பண்ணி பாரு மித்ரா. அதையும் தாண்டி அவன்தான் ஜித்துன்னு உன் மனசு சொல்லுச்சு என்றால் நேரடியாக அவனிடம் கேளு. சில கேள்விக்கான விடை கேள்விக்குள் தான் மறைந்திருக்கும் நம்மதான் அதை கவனிக்காமல் இருக்கோம்” என்று சொல்லவே மித்ராவிற்கும் அதுதான் சரியென்று தோன்றியது.

இந்தருடனான சந்திப்புகளை படிப்படியாக குறைத்துக் கொண்டாள். ஆனால் அவள் திடீரென்று விலகுவதற்கான காரணம் புரியாமல் குழம்பினான் இந்தர்ஜித்.

இந்நிலையில் ஒருநாள் மித்ரா தன் அலுவலகத் தோழியின் திருமணத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று கிளம்பி வெளியே வந்தவளைத் தடுப்பது போலவே ஒலித்தது இந்தரின் குரல்!

அவள் சடாரென்று திரும்பிப் பார்க்க அவளின் எதிரே வந்து நின்றவன், “என்ன மேடம் எங்க வீடு வரை வந்துட்டு இப்படி கண்டுக்காமல் போறீங்க” என்று அவளை வம்பிற்கு இழுத்தான்.எதிர்பார்க்காத நேரத்தில் தன முன்னே வந்து நின்றவனைக் கண்டு அவளின் முகம் பூவாக மலர்ந்தது.

“இந்தர் உங்க வீடு இங்கேதானா?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

“ம்ம்.. ஒவ்வொரு முறை நான் வீட்டுக்கு கூப்பிடும்போதும் ஏதோவொரு காரணம் சொல்லி தப்பிச்சிகிறீங்க.. ஆனால் இன்னைக்கு என்னிடம் வசமாக மாட்டிகிட்டீங்க பார்த்தீங்களா?” என்று சாதாரணமாக அவளிடம் பேசியவனை நினைத்து மனதிற்குள் வருந்தினாள்.

அவள் வேண்டாம் என்று விலகி செல்வது புரிந்தும் தன்னோடு பேசுபவனிடம் ஏனோ கோபத்தை காட்ட விருப்பம் இல்லாமல், “எனக்கு நேரமில்லாததால் தான் வரல இந்தர். அதனால் என்ன இன்னைக்கு உங்க வீட்டுக்கு வரேன். எனக்கு ஒரு கப் காஃபி கிடைக்குமா?” என்று தலையைச் சரித்து குறும்புடன் கேட்டாள் மித்ரா.

“உனக்கு இல்லாததா வா நானே ஸ்பெஷலாக போட்டு தரேன்” என்று சொல்லி வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

வீட்டின் வாசலில் நிழலாட கண்டு நிமிர்ந்த வினோத், “டேய் இவளை ஏண்டா இங்கே கூட்டிட்டு வந்த?” என்ற கேள்வியுடன் இரண்டு கன்னத்தையும் அவசரமாக கைவைத்து மறைத்தபடி பயத்துடன் கேட்டான்.

அவனை அங்கே எதிர்பார்க்காத மித்ரா, “இவர் இங்கே எப்படி?” என்று அவள் குழப்பத்துடன் இந்தரைப பார்த்தாள்.

“என் நண்பன்தான். அவங்க குடும்பம் எல்லாமே மலையகத்தில் இருக்காங்க. இவனும் நானும் இங்கே தொழில் செய்வதால் ஊருக்குப் போய்விட்டு வருவது கஷ்டம் என்பதால் என்னோடு தங்கி இருக்கிறான்” என்று பதில் கொடுத்துவிட்டு, “நீ இவனோடு பேசிட்டு இரு..” என்று சொல்லி சமையலறையை நோக்கி சென்றான் இந்தர்.

அவன் சென்ற திசையை நோக்கிய வினோத், ‘இவளிடம் என்னை கொர்த்துவிட்டுட்டு போறானே.. இவளுக்கு கை நீளமாச்சே.. முதலில் அடிச்சிட்டுத்தான் பேசுவா.. எதுக்கு வம்பு நான் போய் காஃபி போடுறேன்’ என்ற எண்ணத்துடன், “டேய் இந்தர் இவங்களுக்கு வீட்டை சுற்றி காட்டு நான் காஃபி போடுறேன்” என்றான்.

“இல்லடா” என்று அவன் தொடங்கும்போது, “டேய் நான் சொல்றேன் இல்ல ஒழுங்கா கேளுடா” என்று அதட்டிவிட்டு சமையலறைக்கு சென்றவனை விநோதமாக பார்த்தபடி, “வா மித்ரா” என்று சொல்லி வீட்டை சுற்றி காட்டிட அழைத்துச் சென்றான்.

“பாவம் ரொம்ப பயந்துட்டார் போல” என்று அவள் சிரிக்க அவனும் சேர்ந்து சிரித்தான். அவன் வீட்டைச் சுற்றி காட்டிவிட்டு கடைசியாக தன் அறையின் கதவைத் திறந்து, “இது என் ரூம்” என்று சொல்லவே வெளியே நின்றபடி அறைக்குள் பார்வையைச் செலுத்தினாள்.

அவளின் கண்களில் தெரிந்த ஆர்வத்தை கண்டு, “நீ போய் உள்ளே பார்த்துட்டு வா.. நான் வினோத் என்ன பண்றான்னு பார்த்துட்டு வரேன்” என்று மாடியிலிருந்து வேகமாக கீழிறங்கிச் சென்றான்.

அவள் சிந்தனையோடு அவனின் அறைக்குள் நுழைய அவனின் படுக்கைக்கு நேர் எதிரே மாட்டபட்டிருந்த பெரிய சைஸ் லேமிநேசன் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் சிலையென உறைந்தாள் மித்ரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!