Madhumathi Bharath’s KNK – 16

அத்தியாயம் 16

நெருப்புக்குள் நிற்பது போல இருந்தது பொழிலரசிக்கு. ‘மினி வாய்ஸ் ரெக்கார்டர்  வைத்து இருக்கிறேன் என்று சொன்னானே… அது இந்த அறையில் மட்டும் தானா? அல்லது நான் தங்கி இருந்த அறையில் கூடவா?அப்படி என்றால் அவனுக்கு அன்று விஜயேந்திரன் வந்து பேசியதும் நிச்சயம் தெரிந்து இருக்கும்.அதைப் பற்றி மேலும் நான் சிந்திக்க கூடாது என்று தானோ என்னவோ நண்பனை பற்றிய பொய்யான  கதை எல்லாம் சொல்லி அன்று என்னை நெருங்கி இருக்கிறான்.

 

அதே போல அன்று மேனகா வந்து பேசிய அனைத்தும் அவனுக்கு தெரிந்து இருக்க வேண்டும்.அதனால் தான் அன்று இரவு உஷாராகி தப்பி விட்டான்.எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்து இருக்கிறான் இந்த பாவி…’ தனக்குள்ளேயே குமுறிக் கொண்டு இருந்தாள் பொழிலரசி.

 

‘இங்கே இல்லாவிட்டால் என்ன ஊருக்கு போய் மாமாவிடம் எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தவள் முகத்தை கஷ்டப்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வந்தாள்.

 

“நீங்க படுத்து ஓய்வெடுங்கள் மாமா…நான் சாயந்திரமா வர்றேன்.” என்று சொன்னவள் மெல்லிய தலை அசைப்பில் அங்கிருந்து வெளியேறி நேராக தன்னுடைய அறைக்குள் புகுந்து கொண்டாள்.அறைக்குள் நுழைந்து சில நிமிடங்களில் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் விக்ரமாதித்யன்.

 

“மாமா வந்து கொண்டே இருக்கிறார்.சரியாக இன்னும் முப்பது நிமிடத்தில் வந்து விடுவார்.அதற்குள் வேறு பட்டு புடவையை கட்டிக் கொண்டு அதற்கு தோதான நகையையும் போட்டுக் கொண்டு சீக்கிரம் கீழே வா”உத்தரவாக சொல்லிவிட்டு வெளியேற முயன்றவனை பார்த்து அவளின் கோபம் மேலும் பெருகியது.

 

“இனியும் உன் பேச்சு கேட்டு அதுக்கு அப்படியே ஆடுவேன்னு நினைப்பா உனக்கு?அதெல்லாம் இனி என்னிடம் நடக்காது.உன் வீட்டு மாப்பிள்ளை வந்தால் எனக்கென்ன?”

 

“நல்ல கேள்வி தான்… இப்போ உன்னோட மாமா என் வீட்டுக்கு வந்து இருக்கார்.அவரை இந்த நிமிஷம் வரை நான் நல்லா தானே கவனிச்சுக்கிட்டு இருக்கேன்.அதே மாதிரி இப்போ என் மாமாவை நீயும் கவனிக்கணும் இல்லையா?”

 

“ஹ… நானும் நீயும் ஒண்ணா?நீ துரோகி,நயவஞ்சகன்…இதெல்லாம் தேவை இல்லாத பேச்சு.நான் ஒத்துக்க மாட்டேன்னு தெரிஞ்சும் ஏன் கேட்கிற?எனக்கு உன்னோட சொந்தக்காரங்களை எல்லாம் கவனிக்க  நேரமும் இல்லை, விருப்பமும் இல்லை.நான் என் ஊருக்கு கிளம்பற மூடில் இருக்கேன்.”அமர்த்தலாக சொன்னாள் பொழிலரசி.

 

“நான் மனசு வச்சா மட்டும் தான் அதெல்லாம் நடக்கும்.நான் உன்னை போக விடலைனா என்ன செய்வ?”விட்டேற்றியாக கேட்பது போல கேட்டான் விக்ரமாதித்யன்

 

“அது எப்படி போகாம இருக்க முடியும்? இது கல்யாணம் ஆனதும் எல்லார் வீட்டிலயும் நடக்கிற சடங்கு.”நியாயம் பேசினாள் அவள்.

“நமக்குள்ள எல்லா சடங்கு சம்பிரதாயமும் ஒழுங்கா நடந்துச்சா என்ன?”துளைக்கும் பார்வையுடன் கேட்டான் ஆதித்யன்.

 

“…”

 

“என்னடி இவ்வளவு நேரம் வாய் கிழிய பேசின? இப்போ ஏன் வாயை மூடிக்கிட்ட…இந்த உலகத்திலேயே நம்மை மாதிரி முதலிரவு கொண்டாடினவங்க யாரும் கிடையாது.புருஷன் ஆசையா கிட்ட வந்தா கத்தி எடுத்து குத்துற…இந்த லட்சணத்தில் நீ எல்லாம் சடங்கு சம்பிரதாயத்தை பத்தி எல்லாம் பேசக் கூடாது சொல்லிட்டேன்.”

“ஆமா இது அப்படியே முறைப்படி நடந்த கல்யாணம்.நீங்களும் கட்டினா இவளைத் தான் கட்டுவேன்னு ஒத்தைக் காலில் நின்னு இல்ல என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க.அதுல இது ஒண்ணு தான் குறையா போச்சு…”

 

“ஆமா…எனக்கு அதுதான் குறையா போச்சு…”

 

“நாம இப்ப பேசிக்கிட்டு இருந்தது இதைப் பத்தி இல்லை.”

 

“இரண்டும் ஒண்ணு தான்…சடங்கு சம்பிரதாயம்னா எல்லாம் ஒண்ணு தானே.அதென்ன உனக்கு வசதியானதை பத்தி மட்டும் பேசற…முதலில் நேற்று நடக்காமல் விட்டுப் போச்சே அதை நடத்தலாம்.அப்புறம் கிளம்பி உன் ஊருக்கு போகலாம்.சரியா?” விடாக் கண்டனாக பேசினான்.

 

“அதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன்”

 

“அப்போ நீ உன்னுடைய ஊருக்கு போவதற்கு நானும் ஒத்துக் கொள்ளவே மாட்டேன்.”

 

“பிடிக்காத உன்னை எப்படி சகித்துக் கொள்வது?”

 

“உனக்கு என்னை பிடிக்காதா? எங்கே என் கண்ணைப் பார்த்து சொல்லு”சவால் விட்டான் ஆதித்யன்.

 

பொழிலரசிக்கு உள்ளுக்குள் திக்கென்று ஆனது.இவன் வேண்டுமென்றே பேச்சை திசை திருப்புகிறான்.இவன் இந்த விதத்தில் பேசிக் கொண்டே போனால் இவன் சொல்லும் எல்லாவற்றிக்கும் நான் சம்மதித்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.இவன் பேச்சில் கை தேர்ந்தவன்.இவனிடம் கவனமாக பேசித் தான் காரியத்தை சாதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவள் முயன்று முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள்.

 

‘ஓவர் ஆக்ட் பண்ணி காரியத்தை கெடுத்து விடாதே பொழிலரசி’அவளுடைய மனசாட்சியின் எச்சரிக்கையை மறுக்காமல் உள்வாங்கிக் கொண்டவள் முகத்தில் சோர்வை வரவழைத்துக் கொண்டு அவனிடம் பேச ஆரம்பித்தாள்.

 

“எனக்கு உங்களிடம் போராட தெம்பு இல்லை.எனக்குன்னு இப்ப உறவுன்னு யாருமே இல்லையே! நாம அநாதை ஆகிட்டோமேன்னு எப்படி எல்லாம் அழுதேன்.இன்னைக்கு என் மாமாவை பார்த்ததும் எனக்கு அவ்வளவு சந்தோசம்.எத்தனை வருடங்கள் கழித்து என் மாமாவை பார்க்கிறேன் தெரியுமா? அவரிடம் இயல்பாக ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை என்னால்.

ஏதோ ஜெயிலில் இருப்பது போல இருக்கிறது இந்த வீடு.இங்கிருந்து கிளம்பி சில நாட்கள் போய் எங்கள் கிராமத்தில் இருந்து விட்டு வரலாம் என்று நினைத்தால் அதையும் தடுக்கறீங்க…என் வாழ்க்கையில் இப்படி உங்க இஷ்டத்திற்கு எல்லாத்தையும் செய்றீங்களே! எனக்குனு ஒரு மனசு இருக்கே அது உங்களுக்கு தெரியலையா? இல்லை தெரிஞ்சுக்க விருப்பம் இல்லையா?”வராத கண்ணீரை அவனுக்கு முதுகு காட்டி நின்றவாறு துடைத்துக் கொண்டாள் பொழிலரசி.

 

அவனிடம் இருந்து பதில் ஒன்றும் இல்லாமல் போகவும் ஒருவேளை கண்டுபிடித்து விட்டானோ என்ற எண்ணத்துடன் திரும்பி அவனைப் பார்க்க விக்ரமாதித்யனோ ஏதோ சிந்தனையில் மூழ்கி இருந்தான்.அவன் முகத்தில் ஒரே ஒரு நிமிடம் வேதனையின் சாயல் மின்னி மறைந்தது.

 

அவன் திரும்பி அவளிடம் பேசப் போவதை உணர்ந்து வேகமாக திரும்பி பழையபடியே நின்று கொண்டாள் பொழிலரசி.

 

“பொழில்…இப்போ இந்த பேச்சு வேண்டாம்.நீ சீக்கிரம் கிளம்பி தயாராகு.அவர் இன்று இரவே மறுபடியும் கிளம்பி விடுவார்.நாளை நீ உன் ஊருக்கு போகலாம்.” என்று சொன்னவன் அத்தோடு நில்லாமல் அவளின் கைபிடித்து அருகில் இருந்த பீரோவின் பக்கம் இழுத்து சென்றவன் அதிலிருந்து அவளுக்கு ஒரு புடவையையும்,அதற்கு தோதான நகைகளையும் தானே தேர்ந்தெடுத்து கொடுத்தான்.

 

“சீக்கிரம் கிளம்பி வா” என்று சொன்னவன் மேற்கொண்டு அவளிடம் வம்பிழுக்காமல் அங்கிருந்து சென்று விட்டான்.

 

“இந்த ஐடியா நல்லா இருக்கே…இவனிடம் கத்திப் பேசாமல் இப்படி இரண்டு சொட்டு கண்ணீர் விட்டால் போதும் போலவே இவன் ஏமாந்து விடுகிறான்’ என்று நினைத்தவள் உள்ளுர தன்னுடைய நடிப்புக்கு தனக்கு தானே தட்டிக் கொடுத்துப் பாராட்டிக் கொண்டாள்.

 

‘வரப் போவது யார் திலகவதியின் கணவர் தானே…கொஞ்ச நேரம் பேருக்கு அவர் முன்னே நின்று விட்டு வந்து விட வேண்டியது தான்.அப்பொழுது தான் அவனும் சொன்னபடி நாளை மாமாவுடன் ஊருக்கு அனுப்பி வைப்பான்.’

 

சொன்ன நேரத்திற்கு முன்பாகவே தயாராகி கீழே சென்றவள் ஆச்சரியம் மேலிடப் பார்க்க ஆரம்பித்தாள்.திலகவதியின் கணவரின் வருகையை முன்னிட்டு மொத்த வீடும் பம்பரமாக சுற்றிக் கொண்டு இருந்தது.பொருட்களை எல்லாம் இடம் மாற்றி வைத்து இருந்தார்கள்.வாசலில் அவருக்கு மாலை போடுவதற்கு யானை ஒன்று வரவழைக்கப் பட்டு இருந்தது.

முதலில் இதை எல்லாம் ஆச்சரியத்தோடு பார்த்தவளின் உதடுகள் பிறகு ஏளனமாக வளைந்தது. ‘இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தான் இருக்கு.காசு இருந்தா இப்படி எல்லாம் செய்யத் தோணுமா?’அவளும் கேள்விப்பட்டு இருக்கிறாள்.சில கல்யாணத்தின் போது மாப்பிள்ளைக்கு யானை வைத்து மாலை போட செய்து வரவேற்பார்கள்.

 

‘ஆனால் இவர் என்ன புது மாப்பிள்ளையா என்ன? இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்றாங்களே?’ என்று மனதில் நினைத்தவள் வாயை திறந்து எதையும் கேட்கவில்லை.

 

பொழிலரசி அங்கே நிற்பதை பார்த்ததும் நிதானமாக அவளின் அருகில் வந்து நின்றான் ஆதித்யன்.அவளை கண்டதும் அவன் கண்ணில் ஒரு நொடியில் தோன்றிய அந்த மலர்ச்சி அடுத்த நொடி காணாமல் போய் இருந்தது. இயல்பாக பேசுவது போல குனிந்தவன் மனைவியின் காதருகில் நெருங்கி நின்று ரகசியம் பேசத் தொடங்கினான்.

 

“பொழில் வரப் போறது என் அக்காவோட கணவரும்,,பிள்ளைகளும்…எங்க வீட்டின் மருமகன் .அவருக்கு வரவேற்ப்பில் ஒரு சின்னக் குறை கூட இருக்கக் கூடாது.அதனால் எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்வோம்.மாமாவுக்கு இந்த சகுனம் பார்ப்பது,நல்ல நேரம் இந்த மாதிரி பழக்கங்களில் எல்லாம் நம்பிக்கை ஜாஸ்தி.அதனால் கொஞ்சம் பார்த்து நடந்து கொள்” என்று தெளிவாக  சொன்னான்.

 

‘நீ சொன்னா கேட்டுடுவேனா நான்…அந்த ஆள் வரட்டும்.வேணும்னே தும்மி வைக்கணும்.கெட்ட சகுனம்னு நினைச்சு அப்படியே திரும்பி போய்டுவார்….என் அப்பாவை கொன்னுட்டு நீ இங்கே உன் வீட்டு மாப்பிள்ளைக்கு விருந்தா வைக்கிற’ என்று மனதுக்குள் கருவியவள் திலகவதியின் கணவர் அபசகுனம் என்று எண்ணும் படி எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று மனதுக்குள் ஒரு அவசரப் பட்டியலை தயார் செய்தாள்.

 

சற்று நேரம் பொறுத்து வாசலில் ஒரே பரபரப்பு…எல்லாரும் அடித்து பிடித்து எழுந்து வாசலுக்கு ஓட பொழிலரசி அமர்ந்து இருந்த இடத்தை விட்டு கொஞ்சமும் அசையவில்லை.போர்டிகோவில் புதிதாக ஒரு கார் வந்து நின்றதும் யானையின் மூலம் அவருக்கு மாலை போட்டு விட்டு அவர்கள் உள்ளே வரும் வரை பொழிலரசி அந்த இடத்தை விட்டு அசையவில்லை.

 

அவர்கள் அனைவரும் வீட்டின் வாசலுக்கு வந்து விட்டதை அறிந்த பின் விருப்பமே இல்லாமல் எழுந்தவள் அன்ன நடை போட்டு வாசலுக்கு வந்து சேர்ந்தாள்.

கணவரை வரவேற்க ஏற்கனவே திலகவதி அங்கே போய் இருந்ததால் ஒட்டு மொத்த குடும்பமும் சேர்ந்து அந்த வீட்டு மருமகனை அழைத்துக் கொண்டு வந்தார்கள்.திலகவதியின் கண்களில் கணவனை பார்த்ததில் ஏற்பட்ட மகிழ்ச்சியும்,பிள்ளைகளை பார்த்ததில் ஏற்பட்ட பாசமும் தெரிய ஒரு நிமிடம் தயங்கியவள் மறுநிமிடம் விறைப்பானாள்.

 

‘இப்படித் தானே என் குடும்பமும் இருந்தது. ஒருவர் மீது ஒருவர் எவ்வளவு பாசமாக இருந்தோம் .அதை கலைத்து விட்டு நீ மட்டும் சந்தோசமாக இருக்கிறாயா?’ என்று நினைத்தவள் அவர்களின் முன் சென்று பவ்யமாக நின்றாள்.

 

திலகவதி அவளைப் பார்த்ததும் முகமெல்லாம் மலர அவளிடம் தன்னுடைய கணவரை அறிமுகப்படுத்தி வைத்தாள்.

 

“அரசி இவர் தான் என்னுடைய கணவர்.பேர் ஜெகன்நாதன்.இவங்க இரண்டு பேரும் என் பசங்க…மூத்தவன் சர்வேஷ்,இளையவன் விஷ்வேஷ்.உங்க கல்யாணத்தப்போ இவங்க எல்லாரும் வெளிநாட்டில் டூர் போய் இருந்தாங்க.”என்று அவளுக்கு அறிமுகம் செய்தவள் அப்படியே திரும்பி தன்னுடைய கணவரிடமும் பொழிலரசி அறிமுகம் செய்து வைக்க ஆரம்பித்தாள்.

“என்னங்க இவ தான் என் தம்பி பொண்டாட்டி…பேரு பொழிலரசி” அவர் சொல்லி வாய் மூடும் முன் வலுகட்டாயமாக தும்மல் ஒன்றை போட்டே ஆக வேண்டும் என்று நினைத்து வாயை திறந்தவளின் வாய் அப்படியே நின்று போனது விக்ரமாதித்யனால்.

 

இயல்பாக மனைவியின் அருகில் வந்து நிற்பதை போல நின்றவனின் கை அவளின் இடையை பற்றி இருக்க,அதில் தெரிந்த அழுத்தமும்,கணவனின் கைகள் அலைபாய்ந்த விதமும் பொழிலரசியை ஆட்டிப் படைத்தது.

 

“எங்கள் ஜோடிப் பொருத்தம் எப்படி இருக்கிறது மாமா?” என்று கேள்வியை அவர் புறம் கேட்டு விட்டு நக்கலான பார்வை ஒன்றை அரசியின் புறம் திருப்பினான்.

 

“பேசு பொழில்…ஏன் மௌனமா இருக்க?” மெல்லிய சீறலாய் அவள் காதருகே அவன் குரல்.

 

‘பேச வேண்டுமா? எதை பேச வேண்டும்? என்ன பேச வேண்டும்? யாரிடம் பேச வேண்டும்?’ வழி மறந்த குழந்தையாய் அவள் முழித்துக் கொண்டு நின்றாள்.

 

“எதையோ பேச வாய் திறந்தாயே அதை பேசு பொழில்…”கேலி இன்னமும் மிச்சமிருந்தது அவன் குரலில்.

“நீ முதலில் கையை எடு” நடுக்கத்தோடு வெளிவந்தது அவள் குரல்.

 

“முடியாது” என்று சொன்னவனின் கைகள் மேலும் அழுத்தமாக அவளின் வெற்று இடையில் பதிய இத்தனை பேர் முன்னிலையில் வேறு எதுவும் பேச முடியாமல் வாயை இறுக மூடிக் கொண்டாள் பொழிலரசி.

 

பேசிக் கொண்டே மற்றவரின் கண்களை கவராத வண்ணம் அவளை அருகில் இருந்த அறைக்குள் இழுத்துப் போனவன் உள்ளே அவளை தள்ளி கதவை சாத்திய பிறகு தான் அவளை விடுவித்தான்.கோபமாக அவனை திட்ட எண்ணி வாயை திறந்தவள்,அவனின் ஆங்காரமான பார்வையில் மிரண்டு போய் சுவற்றின் ஓரம் ஒண்டிக் கொண்டாள்.

 

“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி செய்வ? நானும் கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி பொறுமையா ஒவ்வொரு விஷயமும் சொல்றேன்.நீ என்னடான்னா இப்படி ஒரு வேலை பார்க்கிற…கொஞ்சம் கூட என் வார்த்தைக்கு மதிப்பு இல்லை…என்னிடம் உனக்கு துளியளவு கூட பயமும் இல்லை.அப்படித்தானே?”

 

‘கண்டுபிடிச்சுட்டானே… என்ன செய்வானோ தெரியலையே?’ என்று அவள் பயந்து கொண்டு இருக்கும் போதே நிதானமாக அவளை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான்.

‘என்ன செய்கிறான் இவன்?’ என்று கேள்வியாக நிமிர்ந்து அவனை கேள்வியாக பார்த்தவள் முன்னிலும் அரண்டு தான் போனாள்.அவனுடைய கோபப்பார்வையை விட இது மோசம் என்று உள்ளுர அவளது மனம் அவளுக்கு எச்சரிக்கை செய்தது.

 

அவனின் பார்வை அவளை அங்குலம் அங்குலமாக அளந்து மொய்த்துக் கொண்டு இருந்தது.சில இடங்களில் வேண்டுமென்றே சோம்பலாக அதிக நேரம் பார்வையை செலுத்திக் கொண்டு இருந்தான்.

 

‘என்ன செய்வது? இப்பொழுது எப்படி தப்பிப்பது?’ உள்ளுக்குள் கலவரம் மூண்டது அவளுக்குள்.

 

காதலாகும்…