Madiveedu 17 &18

ாடிவீடு – 17

அழகுவுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை அத்தனை சந்தோஷமாக இருந்தது.

‘என்னை போல் கும்பிடு போடும் வேலைக்காரனாய் இல்லாமல் சட்டை போட்டு வேலை செய்யும் ஒருவனை அழைத்து வந்திருக்கிறாரே?’ இதுவே அவனுக்கு பெரிய சந்தோஷமாய் இருந்தது.

அன்புவுக்கு பிடிக்குமா? பிடிக்காதா? எதையும் அவன் சிந்திக்கவில்லை. அவனின் ஐயா கொண்டு வந்த மாப்பிள்ளை ‘நிச்சயமாக தன் தங்கையை சம்மதிக்க வைக்க வேண்டும்?’ இது மட்டும் தான் அவனது எண்ணமாக இருந்தது, வேறு எந்த எண்ணமும் இல்லை.

இப்படியான சந்தோஷ மனநிலையுடன் சின்ன சின்ன வேலைகளை செய்துக் கொண்டிருந்தான் அழகு.

வேலை முடியவும், தங்கையை, செல்வி துணைக்கு இருக்க சொல்லியவன், எல்லாரிடமும் கூறிக் கொண்டு ஐயா வீட்டுக்கு வந்தான்.

“லிங்கம், அன்பு கிட்ட எதையும் சொல்ல வேண்டாம் நான் வந்து பேசிக்கிடுதேன்” என்றவன் ஐயா வீட்டை நோக்கி சென்றான்.

சந்தோசவிஷயத்தை தமிழிடம் கூற விரைந்து சென்றான். செல்வி வீட்டு உணவு அடங்கிய சிறிய தூக்குவாளியை கையில் சுமந்து சென்றான்.

வீட்டுக்கு வந்த ஆலமரத்தான், தமிழை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு கிளம்பவும், அவர்கள் முன்னே வந்து நின்றான் அழகு.

”அடடே வா அழகு… நல்லகாலம் நீயே வந்துப்போட்ட, எனக்கு செத்த வேலை இருக்கு. நீ தமிழை கோவில் வரைக்கும் அழைச்சுட்டு போ” கூறியவர் வாசலை விட்டு வெளியே நடந்தார்.

###################

தமிழை ஆச்சரியமாக பார்திருந்தான் அழகு. புடவை உடுத்தியிருந்தாள் அவள். இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் அவளது உடைகள் புடவையாயின.

அமுதாவின் கேள்விப் பார்வையைக் கண்டவள்,

“நிறைய புடவை இருக்குல்ல அதேன் உடுத்துதேன் நானும் தினமும் புடவை கட்ட பழகணும்ல” என தாயிடமே கேட்க,

அவருக்கும் அவள் கூறுவது சரியாகபடவே, அதன் பிறகு அவரும் கண்டுக் கொள்ளவில்லை.

இன்றுதான் அழகுவுடன், தனியாக புடவைக் கட்டி வருகிறாள். மனம் முழுக்க சந்தோஷம் நிறைந்திருந்தது அழகுவுக்கு.

தங்கைக்கு, அவனின் ஐயாவே நல்ல மாப்பிள்ளையை கொண்டு வந்திருக்க, அவனின் பார்வை இப்பொழுது அளவுக்கு அதிகமாகவே தமிழ் மேல் வீழ்ந்தது.

ஏதோ இனம் புரியாத உணர்வு அவள் மேல்!

மனம் முழுவதும் நிறைந்திருந்த சந்தோஷமும், அவள் கழுத்தில் இருந்த தாலியும் அவனுக்கு அத்தனை மகிழ்ச்சியை தந்திருந்தது.

கோவிலுக்கு வந்ததும், அவர்களை எதிர்நோக்கி காத்திருந்த சிலுக்குவிடம், தான் கொண்டுவந்த டிபன் கொடுத்தவள், அவளுக்கு முன்னே தாலியை வெளியே எடுத்து இறைவனை வேண்டி நின்றாள்.

அவளின் செயலை அப்படியே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தாள் சிலுக்கு. பழைய நினைவுகள் அவள் கண்முன்னே வலம் வர, உடனே டிபனை எடுத்து உண்ண ஆரம்பித்தாள்.

குளத்தின் அருகில் என்று இருவரையும் கண்டாளோ? அன்றே போட்ட திட்டம் தான் இருவரையும் இணைக்கும் திட்டம். இப்பொழுதோ இருவரையும் நல்லபடியாக இணைத்து விட்டாள்.

அவரவர் வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை அவரவர்க்கே! இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. பெற்ற தாய்க்கே இல்லை என்று வரும்பொழுது மாற்றானாகிய ஆலமரத்தானின் செயல் மிகவும் கொடூரமானது.

அவன் கௌரவம் காக்க அவன் சாகவேண்டும் எதற்காக என் ராஜாவை கொல்லவேண்டும்? எங்களை அப்படியே விட்டிருந்தால் எங்காவது சென்று பிழைத்திருப்போமே? அவளால் தாங்கமுடியவில்லை.

கண்களை மறைத்து கண்ணீர் கட்ட, உணவை விழுங்குவது போல் கண்ணீரையும் சேர்த்து விழுங்கினாள். ஒரு சொட்டு கண்ணீரையும் அவள் வீணாக்க விரும்பவில்லை. அதிலும் இந்த ஆலமரத்தானின் செயலை எண்ணி ஒற்றை துளி கண்ணீர் கூட வீணாக்க விரும்பவில்லை.

‘ஆலமரத்தானின் சாவை கண்டு தான் கண்ணீர் ஆனந்தமாக என் கண்ணில் இருந்து வழிய வேண்டும்’ வேகமாக கண்ணீரை உள்ளிழுத்தாள்.

தன் மகளின் செயலை எண்ணி அவன் புழுங்கி சாகவேண்டும், இல்லை என்றால் அவனே அவன் முடிவை எழுதி கொள்ளட்டும்… ஒரு ராஜா போனது போல் இந்த அழகுவை நான் விடமாட்டேன்.

இனி ஆலமரத்தானை நேருக்கு நேராக காணும் நாளுக்காய் காத்திருக்க ஆரம்பித்தாள்.

எப்பொழுதும் அமரும், சிறிய பாறையில் அழகுவும், தமிழும் அமர்ந்திருப்பதை ஆசையாகப் பார்த்தாள் சிலுக்கு.

தான் கொண்டுவந்த சிறியத் தூக்குவாளியை அவளை நோக்கி நீட்டினான் அழகு.

“என்னதிது?”

“சாப்பாடுதேன்”

“அன்பு பண்ணினதா?” ஆசையாக கேட்டாள்.

“இல்ல செல்வி வீட்டுல உள்ளது, ஐயா இன்னைக்கு எங்க ஜாதில கை நனைச்சாக தமிழு… எல்லாருக்கும் அவ்ளோ சந்தோஷம் அதேன் உனக்கும் கொண்டு வந்தேன்… நம்ம ஐயா ரொம்ப மாறிட்டாக” சந்தோஷமாகக் கூறினான் அழகு.

சிரித்தபடியே அவனை நோக்கினாள். ‘அப்பா ஒருவேளை பாண்டி அங்கிளிடம் கோபத்துடன் பேசிவிட்டு, பிறகு யோசித்திருக்கலாம், அது தான் செல்வி வீட்டில் சாப்ட்டிருக்காங்க? அமுதனைப் பற்றி அப்பாவிடம் கொஞ்சம் எடுத்துப் பேசலாம்? அப்பா எப்படியும் சம்மதித்துவிடுவார், அதன் பிறகு அமுதனைப் பற்றி அழகுவிடம் கூறலாம்’ என்ற எண்ணத்துடன் அவனைப் பார்த்து நிம்மதியாகச் சிரித்தாள்.

அவன் கண்கள் ஆசையாக, அவள் மீது பதிந்தன.

“என்ன அப்படி பாக்குறீக?”

“நீ சிரிக்கும் போது ரொம்ப அழகு தமிழ்”

“ஊஹும்”

“அட! நிசமாத்தேன்?”

“சரித்தேன்” என்றபடி வாளியை திறந்து, ஒரு பிடி எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.

“ம்‌ம் பிரமாதம்” மூன்று விரல்களையும் காட்டி சப்புக்கொட்டினாள்.

“அச்சோ! உனக்குச்‌ சாப்டவேத் தெரியலை தமிழ்” என்றவன் அவளின் கையைப் பிடித்து, விரல்களில் மீதமிருந்த சாதத்தை தான் சுவைக்க,

கண்கள் விரிய முழித்துப் பார்த்தவள், தன் கையை அவனின் இருந்து பறித்து, மீண்டும் ஒரு பிடி எடுத்து வாயில் வைத்துக் கொண்டாள்.

“அச்சோ! தமிழ் உனக்கு நிஜமாவே சாப்டவே தெரியலை?” என்றவன் மீண்டும் அவளின் கையை பிடிக்க வர,

வேகமாக கையை பின்னால் மறைத்துக் கொண்டவள் “வேற எப்படி சாப்டுவதாம்?” என்றாள்.

“இங்கொண்டா” என்றபடி அவளிடம் இருந்து வாளியை வாங்கியவன்,

தன் வாயை “ஆஆ” என காட்ட,

‘என்ன செய்கிறான் இவன்?’ என்றபடி அவனையே பார்த்திருந்தாள்.

அவளின் பார்வையைக் கண்டவன், “எடுத்து ஊட்டு தமிழ்” என,

அவனை முறைத்தபடியே அவனுக்கு ஊட்டி விட, இப்பொழுது அவளின் கையை பிடித்து, கையில் இருந்த சாதத்தை அவன் சுவைக்க,

முறைத்தபடியே, கையை பறித்தவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவளைப் பார்த்து வேகமாக சிரித்தவன், அவளின் முகத்தை தன் பக்கமாய் திருப்பி அவளுக்கு ஊட்டி விட்டான். இரண்டாவது பிடி அவளுக்கு ஊட்டி விட, அவன் கையை இவள் கடித்தாள்.

“ஆஆ” இவன் கையை உதற,

“இப்படி தான் சாப்பிடவேணும்” இவள் சிரித்தாள்.

அவன் செல்லமாய் முறைக்க,

“எனக்கு தினமும் நீயே சாப்பாடுக் கொண்டு வா அழகு”

“நான் கொண்டுவரது இருக்கட்டும், அம்மா கேட்டா என்ன சொல்வீக?”

“அதெல்லாம் நான் சொல்லிக்கிடுத்தேன்… பொஞ்சாதி புருஷன் வீட்டுலத்தேன் சாப்டனுமாம்” இவள் கூற,

“சரிங்க அம்மணி” என்றபடியே இருவரும் கையை கழுவிக் கொண்டனர்.

மாலை நேரம் கொஞ்சமாய் சூரியன் தன் வீட்டை நோக்கி பயணிக்க, காதலர்கள் இருவரும் வீட்டுக்கு செல்லும் மனம் இன்றி இருந்தனர்.

இருவரின் அழகிய காதலையும் கண்களில் நிறைத்தப்படி தூரத்தில் அமர்ந்திருந்தாள் சிலுக்கு.

ஒருவேளை இவர்களுக்கு அவள் காவலோ?

என்னமோ மனம் நிறைந்து இருந்தது தமிழுக்கு… அப்பாவின் மாற்றம் அவள் நினைத்து பார்த்திராதது… எல்லாம் நல்லபடியாக நடந்தால் சரிதான் என்றபடியே, இவன் மடியில் இவள் படுத்திருந்தாள்.

அவனின் கண்கள் முழுவதும் அவள் மேலேயே இருந்தது. இத்தனை நாளும் வேறு எந்த பார்வையும் அவள் மேல் வீசவில்லை அவன்.

இப்பொழுது அவன் கண்ணில் காட்சிப்படும், அவன் அணுவித்த தாலியும், ஐயாவின் மாற்றமும் அவனையும் மாற்றியிருந்தது.

கயல்விழி போல் அங்கும், இங்கும் நீந்திக் கொண்டிருந்த அந்த கண்கள், ரோஜா கன்னம் அதில் தவழும் கருங்கூந்தல் இப்படியாக அவன் கண்கள் சுற்றிக் கொண்டிருந்தது.

ரோஜா கன்னங்களை ஆசையுடன் வருடினான் அவன். அவனின் ஸ்பரிசம் கன்னத்தை ஸ்பரிஷிக்க, தன் கயல் விழிகளை அவனை நோக்கி உயர்த்தினாள்.

அவன் மடியில் இவள் படுத்திருந்ததால், வஞ்சகமே இல்லாமல் அவளை ரசித்திருந்தான்.

“என்ன இப்படி பாக்குறீக?”

“நான் பாக்காம வேற யார் பாப்பாங்களாம்? நீ என் பெஞ்சாதி” தாலியை எடுத்து அவள் கண்முன் காட்டினான் அழகு.

“சீக்கிரமே ஊருக்கு முன்ன உன்கூட்டுக்கு என்னை கூட்டிட்டு போ அழகு?”

“அதுக்குத்தேன் இப்போ வந்திருக்கேன் தமிழ்” என்றவன் இடுப்பில் சொருகி வைத்திருந்த போட்டோவை எடுத்து அவளிடம் நீட்டினான்.

“இங்காரு தமிழ், ஐயா அன்புக்கு பாத்திருக்க மாப்பிள்ளை… எப்படி சொக்கா போட்டு சோக்கா இருக்காரு” போட்டோவை அவளிடம் காட்டியடியே கூறினான்.

டக்கென்று அவன் மடியில் இருந்து எழுந்த தமிழ் “என்ன சொல்லுறீக!” அதிர்ச்சியாக கேட்டாள்.

“இதுக்கெதுக்கு இத்தனை அதிர்ச்சி அம்மணி… அன்பு மாப்பிள்ளை நல்லா இல்லையா?”

“அ… அன்பு இதை பார்த்தாளா?”

“இல்லையே? இனித்தேன் அதுக்கிட்ட சொல்லோணும், சொக்கா போட்டு சோக்கா இருக்காரு அவளுக்கு பிடிக்கும்”

“இந்த போட்டோ ஆரு தந்தா? அப்பாரு கொண்டு வந்ததா?”

“ஆமா, ஐயாதேன் கொண்டாந்தாக… அவகதேன் அன்புக்கு சரியா இருப்பாகன்னு சொன்னாக? இன்னும் ஒருவாரத்துல கல்யாணம், அவக பட்டணதில வேலைக்கு போக போறாகளாம்”

“இதெல்லாம் ஆரு சொன்னா? எப்படி ஒருவாராத்துல கல்யாணம் வைக்கமுடியும் அழகு”

“எல்லாம் ஐயா பாத்துப்பாக… அவக எது சொன்னாலும் சரியாத்தேன் இருக்கும் அம்மணி”

“அன்பு மனசுல எதுனா ஆசை இருக்கும்ல அழகு… அவகிட்ட கேட்டியா?”

“அவ மனசுல என்ன ஆசை இருந்தாலும் நான் நிறைவேத்திப்போடுவேன் தமிழு… அப்படி ஆசை இருந்தாலும் அது என்கிட்ட சொல்லும்… என்னால முடியாததை அன்பு ஆசைப்படாது… நான் எது சொன்னாலும் அது கேக்கும்”

“எதுக்கும் ஒரு வார்த்தை அதுக்கிட்டையும் கேட்டுக்கோ அழகு”

“சரிங்க அம்மணி… நீங்க இம்புட்டு தூரம் சொல்லுறீக நான் அதுக்கிட்ட கேட்டுகிறேன்” யோசனையாக கூறினான்.

ஆலமரத்தானின் நரிதனத்தை கேட்டு உறைந்து அமர்ந்திருந்தாள் தமிழ்.

தமிழின் உறைந்த நிலையை கண்ட அழகு, யோசனையானான்…

மாடிவீடு – 18

ஐயா வீட்டு சமையல்காரன் வந்து சொல்லிவிட்டு போனதில் இருந்து அமைதியாக அன்புவின் நடவடிக்கையை பார்த்துக் கொண்டிருந்தான் அழகு.

தமிழை வீட்டில் விட்டவன், செல்வி வீட்டுக்கு சென்று அன்புவை அழைக்க சென்றான் அழகு.

‘இன்னைக்கு அன்பு இங்க இருக்கட்டும் அழகு’ என முத்தார் கூறவும், அவளை அங்கு விட்டு வீட்டுக்கு வந்தவன் அப்படியே படுத்திருந்தான்.

மனதில் தமிழ் முகம் வந்துக் கொண்டிருந்தது. ‘அன்பு திருமணவிஷயத்தை கூறியதும் ஏன் அவள் அதிர்ச்சியடைய வேண்டும்’ சில பல குழப்பம் மனதை அழுத்திக் கொண்டிருந்தது.

படலை திறக்கும் சத்தம் கேட்கவும் ‘அன்பு வருகிறாளோ?’ யோசனையாக எழுதான் அவன்.

அவள் இல்லாமல் போகவே யாரா இருக்கும் என்ற எண்ணத்துடன், எழுந்து வெளியே வந்தான்.

“அண்ணே வாங்கண்ணே… என்ன இந்த நேரத்துல வந்திருக்கீக?” அதிசயமாய் வீட்டை நோக்கி வந்த சமையல்காரரை வரவேற்றான்.

அவரை வீட்டின் திண்ணையில் அமரக்கூறியவன், அவருடன் தானும் அமர்ந்துக் கொண்டான்.

“இந்த நேரத்தில் இவ்ளோ தூரம் வந்திருக்கீகண்ணே? சொல்லியனுப்பிருந்தா நானே வந்திருபேனே?” சாதாரணமாக வினவினான்.

“ஒரு விஷயம் அழகு உன் காதில கொஞ்சம் போட்டுட்டு போகலாம்னு வந்தேன்”

அதை கேட்டு அழகு முகம் ஒரு நொடி சுருங்கி விரிந்தது,

“என்ன விசயம்ணே சொல்லுங்க?”

புகைந்துக் கொண்டிருந்த நெருப்பை ஊதிவிட்டது போல் இருந்தது அவர் அடுதடுத்துக் கூறியது.

“எல்லாம் நம்ம அன்பு விசயந்தேன் அழகு?”

“அன்புவுக்கு என்ன? ஏதாவது தப்பு பண்ணிட்டாளா?” அமைதியாகவே கேட்டான்.

“எதுவும் தப்பு நடந்திடக்கூடாதேன்னுதேன் முன்னுக்கவே வந்திருக்கேன்?”

“கொஞ்சம் விளங்கும்படியா சொல்லுண்ணே?”

“அது வந்து அழகு, நம்ம வாத்தியார் இருக்காரில்லா?”

“ஆமா, அவருக்கென்ன?” விஷயம் கொஞ்சமாய் புரிவதுப் போல் இருந்தது.

அழகுவும் பார்திருக்கிறான் தான் இருவரும் பேசுவதை, ஆனால்? சரியாக தெரியவில்லை… அவனை பொறுத்தவரை அன்பு சிறுபெண்.

அன்று வயலில் அழகுவிடம், பக்கத்து வீட்டு அக்கா இருவரையும் பற்றி கூறியதை தவறாக எடுக்கவில்லை அவன், ஆனால் ஏதாவது நடக்கும் முன் நாம் ஜாக்கிரதையாய் இருப்பது தானே முறை, அதை எண்ணித்தான் ஐயா மாப்பிள்ளை கொண்டு வந்ததும் சரி என்றான்.

அன்பு வந்ததும் மெதுவாய்க் கூறிக்கொள்ளலாம் என்று எண்ணிதான் லிங்கத்திடம் எதுவும் கூறவேண்டாம் என்று கூறிவந்தான்.

ஏற்கனவே குழம்பிக் கொண்டிருந்த இதயத்தில் சமையல்காரர் அசால்ட்டாக எருமை மாட்டை ஓட்ட ஆரம்பித்தார்.

“அவருக்கு ஒண்ணுமில்லப்பா, நம்ம அன்புவையும், அந்த வாத்தியாரையும் குளத்தில் ஒன்னாப்  பாத்தேன்?”

“உண்மையாகவா?” தெரிந்த செய்திதான் ஆனாலும் அதிர்ச்சியடைந்ததுப் போல் கேட்டான்.

“அதெல்லாம் பயப்படாத அழகு, விஷயம் ஒன்னும் பெருசா போகல… போகும் முன்ன உங்காதுல விசயத்தை போட்டா நாளைக்கு நம்ம புள்ள நல்லாயிருக்கும்… நம்ம புள்ள மேல தப்பு சொல்ல கூடாது அது சின்ன புள்ள… ஆனா இந்த பணக்கார பயலுகளையும் நாம நம்பக்கூடாது அழகு.

அழகான குட்டியை பார்த்தா மனசு தடுமாறுந்தேன், நாமதேன் சூதனமா இருக்கோணும், நம்ம புள்ளைக்கு சூதுவாது தெரியாது… விவரம் தெரியாம நாளபின்ன எதுனா ஆகிபோச்‌சின்னா ஜாதி ஜனம் சும்மா இருக்காது,

இதே இது நம்ம ஜாதிக்கார பயன்னா நாலுபேரை கூட்டி பேசி கட்டிவச்சிப்புடலாம்… இது ஐயா இடம் பக்கத்துல கூட போகமுடியாது.

ஐயாவும் ரெண்டு மூனு தரம் பாத்திருக்காக? சூதனமான இருந்துக்கோ அழகு. நம்ம ஜாதிஜனம் இன்னும் இங்க இருக்குது அன்புகிட்ட கொஞ்சம் பேசி புரியவை… எல்லாம் ஆரம்ப கட்டந்தேன் சொன்ன கேட்டுக்கும் புள்ள.”

ஐயா, ஒரு நல்ல சேதி உங்கிட்ட சொல்லிருக்காகளாம், நல்ல பதிலா சொல்ல சொன்னாக?”

“அண்ணே அன்பு விஷயம் ஐயா உங்கிட்ட பேச சொன்னாகளா?”

“இல்ல அழகு… ஐயா என்கிட்ட ஏதும் சொல்லல, வீட்டுக்கு கிளம்பச்ச, அன்புக்கு பையன் பாத்திருக்க விசயத்தை லேசா சொன்னாக… அதேன் வாத்தியாரை எண்ணி அன்பு நல்ல வாழ்க்கையை இழக்க கூடாதில்ல, அதேன் உங்காதுல விசயத்தை சொல்லிபோடலாம்னு ஓடி வந்தேன்”

“சரிண்ணே, நான் பாத்துகிடுத்தேன், அன்பு நான் வளத்த புள்ள சொன்னா கேட்டுக்கும். அன்பால நம்ம ஜாதிஜனதுக்கு எதுவும் வராது”

“அப்ப நான் வரட்டுமா அழகு”

“சரிங்கண்ணே” என்றபடி கைகூப்பி விடைகொடுத்தான் அவன்.

*********************

“அண்ணே என்ன இன்னும் கிளம்பாம இருக்கீக, ஐயா வயலுல வேலை இல்லையா?”

அமைதியாக அவளையே பார்த்துக்கொண்டிருந்த அழகை பார்த்துக் கேட்டாள் அன்பு.

“வேலை இருக்குதேன்… செத்த நேரம் பொறுத்து போனா போதும்” என்றவன் அமைதியாக படுத்திருந்தான்.

“சரித்தேன் நான் கிளம்புதேன்” என்றவள் கிளம்ப,

“உனக்கு திருமணம் நிச்சயம் செய்திருக்கேன் அன்பு, இனி வீட்டை விட்டு வெளியில் போகாண்டாம்” என்றான் தெளிவாய், ஆனால் நிதானமாய்.

அழகு சொன்னதை கேட்டதும் தீயை மிதித்ததுப் போல் திடுக்கிட்டவள் “என்னண்ணே சொல்லுறீக?”

“பக்கத்து ஊர்ல ஐயாத்தேன் பார்த்துட்டு வந்தாக, நல்லபையன் படித்த பையன், பட்டணத்தில் வேலைப்பாக்குறான், இன்னும் ஏழு நாளில் கல்யாணம்” என்றான் அவள் முகம் பாராது,

“அண்ணே!”

“என்ன அன்பு… இந்த அண்ணன் உனக்கு எப்பவும் நல்லதுத்தேன் செய்வேன், இது தான் பையன், உனக்கு பிடிச்சிருக்கானுப் பார்த்துச் சொல்லு” அவள் முகத்தை பார்த்து கொண்டே தன் கையில் இருந்த போட்டோவை நீட்டினான்.

“அண்ணே எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்” உறுதியாக சொன்னாள்.

அவளை ஆச்சரியமாகப் பார்த்தான். தான் அவளை சரியாக கவனிக்கவில்லையோ என்ற எண்ணம் மனதில் உதித்தது?

அன்பு கோழை அல்ல… தீவிரம் நிறைந்தவள்… காதலில் அதிதீவிரமானவள்!

“ஏன்?”

“எனக்கு பிடிக்கலை?”

“அதென்னம்மா, மாப்பிள்ளை முகத்தைப் பார்க்காமலே பிடிக்கலை சொல்லுறவ?”

“முடிவே பண்ணிட்டியாண்ணே?”

“ஆமா”

“என்கிட்ட கேட்கணும்னு உனக்கு தோணவேயில்லையாண்ணே?”

“எதுக்கு அன்பு கேட்கோணும், இதுக்கு முன்ன உன்கிட்ட கேட்டுட்டுதேன் நான் செய்தனா? உனக்கு அப்பன், ஆத்தாவா இருந்து எல்லாம் செய்யுற எனக்கு இதுக்கு உரிமை இல்லையா அன்பு?”

“அண்ணே நா… நான்?”

அவள் என்ன சொல்ல வருகிறாள் என அழகுவுக்கு புரிந்தது! தொண்டை அடைத்தது! நா உலர்ந்தது!

ஊரில் ஆயிரம் பேர் சொன்னாலும், தன் தங்கை வாயால் கேட்கும் பொழுது வலித்தது, மிகவும் வலித்தது!

எதை பற்றியும் குறிப்பிடாமல், நேரே பேசத் தொடங்கினாள்.

“எட்டாக்கனிக்குக் கொட்டாவி விடக்கூடாது அன்பு”

“எட்டாக்கனி என் கையில் இருக்கும் பொழுது, அதை தட்டி விட நினைக்காதே”

“அவர் ஐயா வீட்டு வாரிசு, நீ அவர் வீட்டு மாட்டுக்கொட்டகையில் இருக்கும் செருப்பு. என் அன்பு கிடைக்காத பொருள் மேல் ஆசைப்பட்டு ஏமாந்து போவதை என்னால் பார்க்கமுடியாது, இப்பொழுது பாத்திருக்கும் பையன் நமக்கு ஏற்றவன் அன்பு?”

“அவர் அப்படிப்பட்டவர் இல்லை அண்ணா, அவருடன் வாழபோகும் ராணி நான்”

“அன்பு புரியாமல் பேசாதே? பெரிய இடத்து பையன்களை பற்றி உனக்கு தெரியாது, தேன் குடிக்கும் நரிகள், தேன்கூட்டை நாசப்படுத்தி விடுவான்க,

நம்ம ஐயா பற்றி உனக்கு நல்லாவே தெரியும், நம்மை சுற்றி இருக்கும் நம் ஜனங்களைப் பாரு அன்பு. அவர் படித்த பையன் சொன்னால் புரிந்துக் கொள்வார். நீ அடம் பண்ணாதே அன்பு”

“அண்ணே நான் ஒன்னும் தேன் இல்லை நெருப்பு… இந்த நெருப்பை யாராலும் சீண்ட முடியாது?”

“நீ நெருப்புத்தேன்… ஆனா ஊரே உன்னை செருப்பாய் பார்க்கிறதே அன்பு”

“பேசிக்கொள்ளட்டுமே அண்ணா, அவர் காலுக்குதேன் செருப்பா மாறப்போறேன், இருக்கட்டுமே” தலை நிமிர்ந்துக் கூறினாள்.

“அந்த செருப்புத்தேன் தேஞ்சுப் போனா, வீதில வீசிட்டு போவாக அன்பு”

“வீதில வீசுறவங்களும் உண்டுத்தேன், அதே செருப்பை பாதுகாப்பாய் வைப்பவனும் உண்டும். அமுதன் ரெண்டாவது வகை. அவர் என்னை பொத்தி பாதுகாப்பார் ண்ணா?” பெருமையாகக் கூறினாள்.

“அவக வீட்டுல உன்னை ஏத்துப்பாகன்னு நினைக்கிறியா அன்பு?”

“அண்ணே, நீங்க அவங்களைப் பற்றி தப்பா நினைக்கிறீக? அவக அப்படி இல்லண்ணே? அமுதன் அப்பா வந்திருக்காக, என்னை பொண்ணுக்கேட்டு வாரேன்னு சொல்லிருக்காக”

“பகல் கனவு காணாதே அன்பு?”

“கனவல்ல, என் வாழ்வில் நடக்க இருக்கும் நிஜம்”

“அன்பு”

“அவர் என்னை திருமணம் செய்தால் உனக்கு எந்த கருத்துவேறுபாடும் இல்லைதானே?”

“என்னம்மா சொல்லுற?”

“அவர் என்னை திருமணம் செய்தால் உனக்கு எந்த கருத்துவேறுபாடும் இல்லைதானே?”

“அப்படி ஒன்று நடந்தால், உன்னை விட அதிக சந்தோஷபடுவது நாந்தேன், ஆனா, ஐயாவை மீறி நடக்குமா?”

“நடக்கும்… என் மாமா நடத்திக் காட்டுவார்” உறுதியாகக் கூறினாள்.

“நடக்காவிட்டால்?”

“உங்க இஷ்டப்படியே, இதோ இந்த மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டுகிறேன்”

“உனக்காக ஐயாவிடம் பேசுகிறேன்… உனக்கு ஒரு வாரம் டைம்… அதற்கு மேல் ஐயாவிடம் சமாளிக்க முடியாது”

“ஒரு வாரம் அதிகம் அண்ணா” அடித்துக் கூறினாள்.

அழகு அவளையே பார்த்திருந்தான். அன்புவா இது? காதல் செய்த மாயமா?

நானும்தேன் இவளைப் போலவே மாறிட்டேன். தமிழை தீவிரமாய் காதலிப்பதில்!

இரண்டு நாட்களுக்கு மேலாகியும், கண்களை திறக்காமல் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தனர் அமுதனும், பாண்டியும்.

“காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே

கண்கள் பேசும் வார்தையிலே பேதமில்லையே”